உங்கள் பிள்ளைகள் தயாரா?
1. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் எதற்காகத் தயாராக இருக்க வேண்டும்?
1 விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கிற சமயம் நெருங்கிவிட்டது. கண்டிப்பாக, உங்கள் பிள்ளைகள் புதிய பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்ப்படுவார்கள். ஆனால், ‘சத்தியத்திற்குச் சாட்சி கொடுப்பதற்கான’ புதிய வாய்ப்புகளையும் அவர்கள் பெறுவார்கள். (யோவா. 18:37) அதற்கெல்லாம் அவர்கள் தயாரா?
2. தயாராக இருப்பதற்கு உங்கள் பிள்ளைகள் எதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்?
2 தேசிய நிகழ்ச்சிகளிலும், பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறதென உங்கள் பிள்ளைகளுக்குத் தெரியுமா? அவற்றில் கலந்துகொள்வது தவறென நன்றாகத் தெரியுமா? மேற்படிப்பு படிக்கும்படி, காதலிக்கும்படி, மதுபானங்களையோ போதை மருந்துகளையோ எடுத்துக்கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டால், அதை மறுப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா? ‘இதெல்லாம் எங்கள் மதத்திற்கு விரோதமானது’ என்று மட்டுமே சொல்வார்களா, அல்லது தங்கள் நம்பிக்கைகளைக் குறித்து எப்படி விளக்க வேண்டுமென்று தெரிந்து வைத்திருக்கிறார்களா?—1 பே. 3:15.
3. பெற்றோர்கள் குடும்ப வழிபாட்டு சமயத்தைத் தங்கள் பிள்ளைகளைத் தயார்ப்படுத்த எப்படிப் பயன்படுத்தலாம்?
3 குடும்ப வழிபாட்டு சமயத்தைப் பயன்படுத்துங்கள்: உண்மைதான், பள்ளியில் உங்கள் பிள்ளைகள் வருடம் முழுக்க புதுப்புது பிரச்சினைகளை எதிர்ப்பட்டு வந்தபோது, அவற்றைக் குறித்துப் பேசியிருப்பீர்கள். ஆனால், இப்போது பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர்கள் எதிர்ப்படப்போகும் பிரச்சினைகளைப் பற்றி பேச விசேஷ முயற்சி எடுத்தீர்களென்றால், அவற்றைச் சமாளிக்க அவர்களுக்குத் தன்னம்பிக்கை கிடைக்கும். எனவே, அவ்வப்போது குடும்ப வழிபாட்டு சமயத்தில் அவற்றைக் குறித்து நீங்கள் பேசலாம், அல்லவா? விடுமுறைக்குப் பின் பள்ளிக்குப் போகும்போது எந்தப் பிரச்சினை நினைத்து அவர்கள் ரொம்பவும் பயப்படுகிறார்கள் என நீங்கள் கேட்கலாம். அவர்கள் இப்போது கொஞ்சம் பெரியவர்களாகிவிட்டதால், புரிந்துகொள்ளும் பக்குவம் வந்துவிட்டதால், முந்தைய வருடங்களில் நீங்கள் அவர்களிடம் பேசிய விஷயங்களை மீண்டும் சிந்திக்கலாம். (சங். 119:95) அதை அவர்கள் எப்படிக் கையாள வேண்டுமென்று ஒத்திகை பார்க்கலாம். அப்போது நீங்கள் ஒரு ஆசிரியராகவோ, கவுன்சலராகவோ, சக மாணவராகவோ நடிக்கலாம். பைபிளிலிருந்து எப்படிப் பதில் அளிப்பதென்றும், நியாயங்காட்டிப் பேசுதல், இளைஞர் கேட்கும் கேள்விகள் போன்ற புத்தகங்களை எப்படிப் பயன்படுத்துவதென்றும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம். ஒரு தாய் தன் பிள்ளைகளைத் தயார்ப்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் பள்ளி துவங்கும்போது, புதிய ஆசிரியர்களை அணுகி, தாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதை எப்படித் தெரிவிப்பதென ஒத்திகை பார்த்தார்.—காவற்கோபுரம், டிசம்பர் 15, 2010, பக்கங்கள் 3-5-ஐக் காண்க.
4. ஞானமுள்ள பெற்றோர்கள் என்ன செய்வார்கள்?
4 “சமாளிப்பதற்குக் கடினமான” இந்தக் கடைசி நாட்களில் கிறிஸ்தவ இளைஞர்கள் நிறையப் பிரச்சினைகளை எதிர்ப்பட வேண்டியிருக்கிறது. (2 தீ. 3:1) ஞானமுள்ள பெற்றோர்கள் அதையெல்லாம் எதிர்பார்த்து, தங்கள் பிள்ளைகளை முன்கூட்டியே தயார்ப்படுத்த முயற்சி செய்வார்கள். (நீதி. 22:3) இந்த வருடம் பள்ளி மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னரே, உங்கள் பிள்ளைகளைத் தயாராக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.