உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 12/22 பக். 7-11
  • நல்ல கல்விக்குத் திறவுகோல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நல்ல கல்விக்குத் திறவுகோல்கள்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பெற்றோர் ஆதரவு, ஒரு முக்கியமான திறவுகோல்
  • ஆசிரியர்களுடன் ஒத்துழைப்பு
  • உங்கள் பிள்ளை வீட்டிற்கு வருகையில்
  • படிப்பையும் பொறுப்பையும் முன்னேற்றுவியுங்கள்
  • மாணவ உறுதிப்பாடு, ஓர் இன்றியமையாத திறவுகோல்
  • பெற்றோரே—உங்கள் பிள்ளையின் ஆலோசகராயிருங்கள்
    விழித்தெழு!—1994
  • தங்கள் வீட்டுப்பாடத்தைச் செய்திருக்கும் பெற்றோர்கள்
    விழித்தெழு!—1989
  • சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
  • பள்ளியில் பிரச்சினைகளை சமாளிக்க உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள்
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 12/22 பக். 7-11

நல்ல கல்விக்குத் திறவுகோல்கள்

சமீபத்திய தி நியூ யார்க் டைம்ஸ், அதன் முதல் பக்கத்தில் சுமார் 16 வயதுடைய மேல்நிலைப் பள்ளி மாணவி லட்டோயாவைப் பற்றிய கதையை வெளியிட்டது. அவளுடைய தந்தை அவளை அடித்து, பாலின துர்ப்பிரயோகம் செய்யத் தொடங்கியபோது அவளுக்கு வயது 11 என்று அவள் சொல்கிறாள். போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் அவள் தாய், குடும்பத்தை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். “வீடு என்பது, கழிப்பறை இல்லாத கைவிடப்பட்ட அப்பார்ட்மன்ட்டாக அல்லது அவள் படுத்துத் தூங்குவதற்கு மிகவும் பயந்த ஒரு அறையாக இருந்தது,” என்று அந்தச் செய்தித்தாள் அறிக்கைசெய்தது. என்றபோதிலும், லாடோயா விதிவிலக்கானவளாக இருந்தாள். இதெல்லாவற்றின் மத்தியிலும், இந்த வருட தொடக்கத்தில், லாடோயா தனது மேல்நிலைப் பள்ளியின் தேசிய மேதகைமை சங்கத்தின் தலைவியாக இருந்து, மேதகைமை வகுப்புகளில் சராசரியாக B-தர மதிப்பெண்களைப் பெற்றுவந்தாள்.

மோசமான சூழலிலிருந்து வரும் ஒரு பிள்ளைகூட பள்ளியில் நன்றாகத் திகழும்படி எது உதவலாம்? பெரும்பாலும், நல்ல கல்விக்கான ஒரு திறவுகோல், கவனிக்கக்கூடிய வயதுவந்த ஒருவரைக் கொண்டிருப்பதாகும்; ஆதரவளிப்பவராகவும் பிள்ளையின் கல்வியில் ஆழ்ந்த ஈடுபாடுள்ளவராகவும் இருக்கும் அந்தப் பிள்ளையின் பெற்றோரில் ஒருவராகவோ இருவருமாகவோ இருப்பது நல்லது. மேல்நிலை வகுப்பில் இருக்கும் ஒரு மாணவி இதை அவ்வளவு முக்கியமானதாகக் கருதியதால் பின்வருமாறு சொல்லும்படி தூண்டப்பட்டாள்: “பெற்றோரின் ஆதரவால் மட்டுமே பிள்ளைகள் பள்ளியில் நிலைத்திருக்க முடியும்.”

பெரும்பாலான ஆசிரியர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். நியூ யார்க் நகர ஆசிரியர் ஒருவர் இவ்வாறு வலியுறுத்தினார்: “கல்வி அமைப்புமுறையில் நன்றாகப் படித்து வெற்றி அடையும் ஒவ்வொரு மாணவனுக்கும்—அவ்வாறிருக்கும் அநேகருக்கும்—அந்தப் பாதையின் ஒவ்வொரு அடியெடுப்பிலும் பெற்றோர் ஒருவர் இருந்திருக்கிறார்.”

பெற்றோர் ஆதரவு, ஒரு முக்கியமான திறவுகோல்

“ஏன் சில மாணவர்கள் மற்றவர்களைவிட சிறந்து விளங்குகிறார்கள்?” என்ற கேள்வியைக் கடந்த வருட ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆராய்ந்தது. “உறுதி வாய்ந்த குடும்பங்களைக் கொண்டிருப்பது குழந்தைகளுக்குப் பள்ளியில் நன்மை பயப்பதாய் இருக்கிறது” என்பது அதன் முடிவுகளில் ஒன்றாகும். அப்படிப்பட்ட குடும்பங்களிலுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பான கவனிப்பை அளிப்பதுடன், சரியான தராதரங்களையும் இலக்குகளையும் தெரியப்படுத்துகிறார்கள். ஆனால் பெற்றோர் ஒருவர் குறிப்பிட்டார்: “பள்ளியில் என்ன நடக்கிறதென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் சரியான வழிநடத்துதலை உங்களால் கொடுக்கமுடியாது.”

விஜயம் செய்வது அதைக் கண்டுபிடிப்பதற்கான நல்ல வழியாகும். விஜயங்கள் செய்யும் ஒரு தாய் எழுதினார்: “என் மகளுடைய பள்ளியின் நடைபாதைகளில் நடந்துசெல்கையில், மோசமான, அருவருப்பான பேச்சை நான் கேட்கிறேன். எங்கு பார்த்தாலும் பிள்ளைகள் கட்டித்தழுவி முத்தமிட்டுக்கொண்டிருந்தனர்—அது ஒரு திரைப்படமாக இருந்தால், அது X-தரமிடப்பட்டதாக இருக்கும்.” இன்று பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெறுவதும், அதோடு ஓர் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதும் எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை மதித்துணர அப்படிப்பட்ட விஜயங்கள் உதவக்கூடும்.

குறிப்பிடத்தக்கதாய், தி அமெரிக்கன் டீச்சர் 1994 என்ற பிரசுரம் குறிப்பிட்டது: “ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருடனுள்ள தனிப்பட்ட கூட்டங்கள் அல்லது தொகுதி கூட்டங்கள் அல்லது பள்ளிக்கு விஜயங்களைச் செய்தல் போன்ற விதங்களில் பள்ளியுடன் தொடர்புகொள்ளுதலை தங்கள் பெற்றோர் அடிக்கடி செய்யவில்லை என்று வன்முறைக்கு ஆளாகியிருக்கும் மாணவர்கள் பெரும்பாலும் சொல்வார்கள்.”

பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அக்கறையுள்ள தாயார் ஒருவர் தெரியப்படுத்தினார். “பள்ளியை விஜயம் செய்யுங்கள்!” என்று அவர் சொன்னார். “உங்கள் பிள்ளை என்ன கற்றுக்கொள்கிறது என்பதில் நீங்கள் அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்று அந்தப் பள்ளி நிர்வாகம் அறிந்துகொள்ளட்டும். நான் அடிக்கடி பள்ளியை விஜயம் செய்து, வகுப்புகளில் உட்கார்ந்து பார்க்கிறேன்.” ஒரு பிள்ளையின் வக்கீலாக இருப்பதன் முக்கியத்துவத்தை மற்றொரு தாயார் அழுத்திக்கூறினார். அவர் விவரித்தார்: “என் பிள்ளைகள் ஒரு ஆலோசகரிடம் பேசும்படி அலுவலகத்திற்குச் சென்றபோது அவர்கள் வெளிப்படையாகவே அசட்டை செய்யப்பட்டிருந்தனர். அடுத்த நாள் என் பிள்ளை என்னைக் கூட்டிக்கொண்டு வந்தபோது, அவர்கள் எனக்கும்—என் பிள்ளைக்கும்—உதவும்படி ஆவலாக முன்வந்தார்கள்.”

உங்கள் பிள்ளையின் கல்வியை நேரடியாகப் பாதிக்கிற பள்ளி நடவடிக்கைகளில் அக்கறை எடுப்பதன் முக்கியத்துவத்தைக் குறித்தும், நான்கு பையன்களுக்குத் தாயாகிய இவர் அழுத்திக் கூறினார். “பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நாள், அறிவியல் கண்காட்சி ஆகியவற்றிற்கு—உங்கள் பிள்ளைகள் செய்யக்கூடிய எதுவாக இருந்தாலும் சரி, பெற்றோர் அழைக்கப்படுகிறவையாக இருப்பவற்றிற்கு—செல்லுங்கள்,” என்று அவர் சொன்னார். “உங்கள் பிள்ளையின் ஆசிரியர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை இது உங்களுக்கு அளிக்கிறது. உங்கள் பிள்ளையின் கல்வியை அவனுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு பாகமாக நீங்கள் கருதுகிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் இதை அறிந்திருக்கும்போது, உங்கள் பிள்ளைக்காக அதிக நேரத்தையும் கூடுதலான முயற்சியையும் அளிக்கும் மனச்சாய்வை அவர்கள் கொண்டிருப்பார்கள்.”

ஆசிரியர்களுடன் ஒத்துழைப்பு

ஆசிரியர்களுடன் பெற்றோர் தொடர்பு கொள்ளும்படியாக பள்ளிகள் விசேஷ ஏற்பாடுகளைத் திட்டமிடும் மாலைவேளைகளில், செய்வதற்கு அதிக முக்கியமான காரியங்கள் இருப்பதாகச் சில பெற்றோர் உணரக்கூடும். இருந்தாலும், உண்மையில், உங்கள் பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெற உதவுகிறவர்களைச் சந்திக்கச் செல்வதைவிட அதிக முக்கியமாக என்ன இருக்கிறது? நல்ல பெற்றோர்-ஆசிரியர் ஒத்துழைப்பு இன்றியமையாதது!

ரஷ்யாவில் பெற்றோர்-ஆசிரியர் ஒத்துழைப்பைப் பெருக்குவதற்காக நல்ல ஏற்பாடு இருக்கிறது. பள்ளி வேலைகள் அனைத்தும், டனைவனிக் என்று அழைக்கப்பட்டதில்—நாட்காட்டியுடன் சேர்ந்து அமைந்துள்ள தினசரி நடவடிக்கை பதிவில்—பதிவு செய்து வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு மாணவன் தன் டனைவனிக்கைக் கொண்டுவர வேண்டும்; மேலும் ஆசிரியர் கேட்கையில் அதை எடுத்துக் காண்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் பெற்றோரிடமும் டனைவனிக்கைக் காண்பிக்க வேண்டும்; அவர்கள் ஒவ்வொரு வாரமும் அதில் கையொப்பமிடும்படி கேட்கப்படுகிறார்கள். “தங்கள் பிள்ளைகளின் பயிற்சி வேலைகள் மற்றும் படிக்கும் தரங்களைக் குறித்து அறிந்தவர்களாக இருக்க இந்தத் தகவல் பெற்றோருக்கு உதவுகிறது” என்று பள்ளிப் பருவ பிள்ளைகளை உடைய மாஸ்கோவைச் சேர்ந்த தந்தை ஒருவராகிய வியிக்டர் லாபாசாஃப் குறிப்பிட்டார்.

என்றபோதிலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடைய கல்வியில் அக்கறை எடுக்கத் தவறுகிறார்கள் என்பதாக இன்று ஆசிரியர்கள் அடிக்கடி குறைகூறுகிறார்கள். பிள்ளைகள், படிப்பில் மோசமாக இருப்பதைத் தெரியப்படுத்தி, அவர்களுடைய பெற்றோருக்கு ஒருமுறை 63 கடிதங்கள் அனுப்பியதாக ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொன்னார். மூன்று பெற்றோர் மட்டுமே அதற்கு பிரதிபலித்து அவருடன் தொடர்புகொண்டனர்!

உண்மையிலேயே, அது வருந்தத்தக்க காரியம்! பெற்றோர் தங்கள் பிள்ளையின் கல்வியில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்க வேண்டும்; அது அவர்களுடைய முக்கியமான பொறுப்பு. பின்வருமாறு சொன்னபோது ஒரு ஆசிரியர் அதைக் குறித்துச் சரியாகவே சொன்னார்: “பொறுப்புள்ள இளம் ஆட்களை உருவாக்குவதில் பெற்றோருக்கு ஆதரவளிப்பதே முறைசார்ந்த கல்வியின் அடிப்படை நோக்கமாகும்.”

இதன் காரணமாக, தங்கள் பிள்ளையின் ஆசிரியர்களை அறிந்துகொள்வதில் பெற்றோர் முன்முயற்சி எடுக்க வேண்டும். பெற்றோர் ஒருவர் சொன்னபடி, “உங்களை எந்த நேரத்திலும் தொலைபேசியில் அழைத்து பேசுவதற்கு ஆசிரியர்கள் எளிதாக உணர வேண்டும்.” மேலும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளையைப் பற்றி வெளிப்படையாக பேசுவதைப் பெற்றோர் வரவேற்கவேண்டும்—அவ்வாறு செய்யும்படி உற்சாகப்படுத்தவும்கூட வேண்டும். பின்வருபவற்றை போன்ற திட்டவட்டமான கேள்விகளையும் பெற்றோர் கேட்க வேண்டும்: என்னுடைய பிள்ளையுடன் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? அவன் மரியாதையுடன் நடந்துகொள்கிறானா? எல்லா வகுப்புகளுக்கும் ஆஜராகிறானா? நேரந் தவறாமல் வருகிறானா?

உங்கள் பிள்ளையைப் பற்றி சாதகமற்ற எதையாவது அந்த ஆசிரியர் சொன்னால் என்ன செய்வீர்கள்? அது உண்மையற்றது என்பதாக ஊகித்துக்கொள்ளாதீர்கள். கவலைக்குரியவிதத்தில், வீட்டில் அல்லது தங்கள் வழிபாட்டுக்குரிய இடத்தில் மதிக்கத்தக்க வாழ்க்கையை வாழ்கிறதாகத் தோன்றுகிற அநேக இளைஞர் உண்மையில் இரட்டை வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே ஆசிரியர் சொல்வதை மரியாதையுடன் செவிகொடுத்து கேட்டு, அவர் அல்லது அவர்கள் சொல்வதை சரிதானா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பிள்ளை வீட்டிற்கு வருகையில்

ஒரு பெற்றோராக நீங்கள் வேலையிலிருந்து வீடு திரும்புகையில், எப்படி உணருகிறீர்கள்? அழுத்தம் நிறைந்தவர்களாக? சோர்வுற்றவர்களாக? உங்கள் பிள்ளையாகிய அவன் அல்லது அவள் பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில் அதைவிடவும்கூட மோசமாக உணரக்கூடும். ஆகவே ஒரு தந்தை இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “வீடு திரும்புவது ஒரு இன்பமான காரியமாக இருக்கும்படிச் செய்யுங்கள். அவர்கள் ஒருவேளை மிகக் கடினமான ஒரு நாளை அனுபவித்திருந்திருக்கலாம்.”

சாத்தியமாக இருந்தபோதெல்லாம், பிள்ளை வீடு திரும்பும்போது பெற்றோர் ஒருவர் வீட்டில் இருப்பது நிச்சயமாகவே விரும்பத்தக்கது. ஒரு தாய் குறிப்பிட்டபடி, “பிள்ளைகளுடன் பேசும்படி நீங்கள் அங்கு இல்லாவிட்டால் என்ன நடக்கிறது என்று அவர்கள் உங்களிடம் சொல்ல முடியாது. ஆகவே பிள்ளைகள் வீடு திரும்பும்போது கட்டாயமாக அங்கு நான் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்.” தன்னுடைய ஒவ்வொரு பிள்ளையும் என்ன செய்கிறது என்பதை மட்டுமல்லாமல் அந்தப் பிள்ளை என்ன நினைக்கிறது, உணருகிறது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இதைக் கண்டறிவது அதிகப்படியான நேரம், முயற்சி, மற்றும் மெதுவாக விசாரித்தல் ஆகியவற்றை உட்படுத்துகிறது. (நீதிமொழிகள் 20:5) தினசரி பேச்சுத்தொடர்பு முக்கியம்.

நியூ யார்க் நகரிலுள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர் குறிப்பிட்டார்: “குறிப்பிட்ட ஏதாவது ஒரு நாளில், நெருக்கடியில் இருக்கும் பள்ளி அமைப்புமுறையின் ஒழுக்க தராதரங்கள் உங்கள் பிள்ளைக்கு அளிக்கப்பட்டிருக்கக்கூடும்.” ஆகவே அவர் இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “உங்கள் பிள்ளையின் இருதயத்தில் என்ன வளர்க்கப்பட்டு வருகிறது என்பதைக் குறித்துக் கவனமாய் இருங்கள். நீங்கள் எவ்வளவு களைப்புற்றிருந்தாலும் சரி, அவனுக்குள் இருப்பதை வெளிக்கொணர்ந்து தவறான மதிப்பீடுகளை சரியானவற்றால் மாற்றீடு செய்வதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.”—நீதிமொழிகள் 1:5.

அதேவிதமாக, நீண்டகால அனுபவமுள்ள மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் இவ்வாறு ஆலோசனை கூறினார்: “பள்ளியில் என்ன நடந்தது என்று வெறுமனே கேட்பதற்கு மாறாக அந்த நாளையும் அதன் நடவடிக்கைகளையும் குறித்து, குறிப்பானதும் திட்டவட்டமானதுமான கேள்விகளைக் கேட்பது பயனுள்ளதாக இருக்கும். இது ஒரு கடுமையான அல்லது துருவிக்கேட்கும் முறையில் கேட்கப்படவேண்டியதில்லை; ஆனால் பிள்ளையுடன் தற்செயலான உரையாடலின்போது கேட்கப்படலாம்.”

ஐ.மா. கல்வி செயலராகிய ரிச்சர்ட் டபிள்யூ. ரைலி பின்வருமாறு உந்துவித்தார்: “உங்கள் பிள்ளைகளுடன் நேரடியாகப் பேசுங்கள், குறிப்பாக உங்கள் பருவவயது பிள்ளைகளிடம், போதைப்பொருட்கள், மதுபானம், உங்கள் பிள்ளைகள் கொண்டிருக்கும்படியாக நீங்கள் விரும்பும் மதிப்பீடுகள் ஆகியவற்றைக் குறித்துப் பேசுங்கள். அப்படிப்பட்ட தனிப்பட்ட பேச்சுகள், எந்தளவுக்கு உங்களை அசௌகரியமாக உணர வைத்தாலும், அவர்களுடைய வாழ்க்கையைப் பாதுகாக்கக்கூடும்.”

பெற்றோர் ஒருவர், விசேஷமாக ஒரு கிறிஸ்தவ சபையில் பொறுப்புகளை வகிப்பவர், தன் பிள்ளைகள் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்க நேரமில்லாத அளவுக்கு அதிக வேலையாக இருக்கிறார் என்ற கருத்தை ஒருபோதும் கொடுத்துவிடக் கூடாது. அவர்கள் சொல்வதைக் கேட்பது கவலைதருவதாய் இருக்கக்கூடுமென்றாலும்கூட, அவர்கள் உங்களிடம் வெளிப்படையாகப் பேசுவது உங்களைச் சந்தோஷப்படுத்துகிறது என்பதை உங்கள் முகபாவனைகள் மற்றும் தோற்றத்தின் மூலமாக அவர்கள் அறிந்துகொள்ள செய்யுங்கள். ஒரு மாணவி இவ்வாறு தெரிவித்தாள்: “பள்ளியில் போதைப்பொருட்கள் அல்லது பாலினத்தைப் பற்றி பேசுகையில் அதிர்ச்சி அடையாதீர்கள்.”

குடும்ப வாழ்க்கையில் ஏற்படுகிற முறிவின் காரணமாக, “தகப்பனில்லாத பையன்கள்” (NW) என்று குறிப்பிடப்படக்கூடிய அநேகர் இன்று உள்ளனர். (யோபு 24:3; 29:12; சங்கீதம் 146:9) ஒரு கிறிஸ்தவ சபைக்குள், உதவி தேவைப்படுகிற ஒரு இளைஞனுக்கு உதவக்கூடிய யாராவது ஒருவர் வழக்கமாக இருப்பார். நீங்கள் அவ்வாறு உதவக்கூடிய ஒருவரா?

படிப்பையும் பொறுப்பையும் முன்னேற்றுவியுங்கள்

இன்று பெரும்பாலான இளைஞர், அறிமுகத்தில் குறிப்பிடப்பட்ட லாடோயா இருந்த அளவில், தங்கள் பள்ளிப்படிப்புக்குக் கட்டுப்பட்டவர்களாக இல்லை. பெரும்பான்மையானவர்களுக்கு, படிப்பதற்காக அதிகப்படியான உற்சாகப்படுத்துதல் தேவைப்படுகிறது. தன்னுடைய சொந்த பிள்ளைகளைக் குறித்து நியூ யார்க் நகர பள்ளியின் முன்னாள் வேந்தர் ஜோஸஃப் ஃபெர்னான்டஸ் சொன்னார்: “எங்கள் வீட்டில் நாங்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய நேரங்களைக் கொண்டிருந்தோம். பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் கிடைக்கும்படியும், நூலகங்களுக்கு உற்சாகமூட்டும் பயணங்களைக் கொண்டிருக்கும்படியும், பள்ளியில் ஆஜராகி, அங்கு ஈடுபாடு கொண்டிருப்பதற்கு முன்கவனம் செலுத்தும்படியும் செய்தோம்.”

மற்றொரு பள்ளி நிர்வாகி சொன்னார்: “தொலைக்காட்சி, திரைப்படங்கள், வீடியோக்கள், அங்காடிகள் ஆகியவை தற்போது பிள்ளைகளை எந்த அளவுக்கு சூழ்ந்திருக்கச் செய்கிறோமோ அந்த அளவுக்குப் புத்தகங்களும் கதைகளும் அவர்களைச் சூழ்ந்திருக்கச் செய்யவேண்டும்.” பிள்ளைகள் வீட்டுப்பாடங்களைச் செய்துகொண்டிருக்கையில், பெற்றோர் அருகிலிருந்து ஏதாவது தனிப்பட்ட படிப்பையோ வாசிப்பையோ செய்யும்படி ஏற்பாடு செய்யக்கூடும். நீங்கள் கல்வியை மதிக்கிறீர்கள் என்று அதன்மூலமாக உங்கள் பிள்ளைகள் காண முடியும்.

அநேக வீடுகளில், தொலைக்காட்சியானது படிப்பதற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. “18 வயதிற்குள், இளைஞர் 11,000 மணிநேரங்களை வகுப்பறையிலும் 22,000 மணிநேரங்களை தொலைக்காட்சி பார்ப்பதிலும் செலவிட்டிருக்கின்றனர்,” என்று ஒரு ஆசிரியர் சொன்னார். பெற்றோர்கள் தாமேயும் அவ்வப்போது மட்டுமே ஒருவேளை டிவி பார்ப்பதன்மூலம் பிள்ளைகள் அதைப் பார்ப்பதைக் கட்டுப்படுத்த வேண்டியதாய் இருக்கக்கூடும். மேலுமாக, உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து எதையாவது கற்றுக்கொள்ளும்படி உறுதிப்பாடு செய்துகொள்ளுங்கள். சேர்ந்து வாசியுங்கள். தினமும் வீட்டுப் பாடத்தை எடுத்துப் பார்க்கும்படி திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

பள்ளியில் உங்கள் பிள்ளைகள் தயாரிப்பதற்காக அநேக பயிற்சி வேலைகளைப் பெறுவார்கள். இவை அனைத்தையும் நிறைவேற்றுவார்களா? வீட்டில் பொறுப்புகளைச் செய்துமுடிப்பதற்கு நீங்கள் கற்றுக்கொடுத்திருந்தீர்கள் என்றால் அவர்கள் இதை ஒருவேளை செய்து முடித்துவிடுவார்கள். தினசரி வீட்டு வேலைகள் சிலவற்றை செய்யும்படி அவர்களுக்கு நியமிப்பது இதைச் செய்வதற்கான ஒரு முக்கியமான வழியாகும். பின்னர் இவற்றை ஒரு திட்டவட்டமான திட்டத்தின்படி அதை நிறைவேற்றுவதைத் தேவைப்படுத்துங்கள். அப்படிப்பட்ட பயிற்றுவிப்பு உங்களுடைய பாகத்தில் அதிக முயற்சியைத் தேவைப்படுத்தும் என்பது உண்மைதான்; ஆனால் பள்ளியிலும் பின்னர் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதற்குத் தேவையான பொறுப்புணர்ச்சியை அது உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும்.

மாணவ உறுதிப்பாடு, ஓர் இன்றியமையாத திறவுகோல்

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட லாடோயாவைப் பற்றிச் சொல்லுகையில், வழிகாட்டு ஆலோசகர் ஆர்தர் கர்ஸன், நல்ல கல்விக்கு மற்றுமொரு திறவுகோலைக் கண்டறிந்தார்: “வீட்டில் நடந்த மிகப் பெரிய சம்பவங்களில் ஒன்றிற்குப் பின்னர்தான் நான் அவளை முதல் முறையாகச் சந்தித்தேன். [தன் தந்தையின் துர்ப்பிரயோகத்தால் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட] பிறாண்டப்பட்ட கீறல்களுள்ள முகத்துடன் இந்தப் பிள்ளை உட்கார்ந்திருக்கிறாள். அவள் கவலைப்படுவதாக நான் பார்த்த ஒரே காரியம் அவளுடைய பள்ளி பாடத்தைக் குறித்துதான்.”

ஆம், நல்ல கல்விக்கு ஓர் இன்றியமையாத திறவுகோல், ஒரு பிள்ளை கற்றுக்கொள்வதிடமாகக் கொண்டிருக்கும் ஆழ்ந்த உறுதிப்பாடு ஆகும். நியூ யார்க் நகர இளைஞன் ஒருவன் குறிப்பிட்டான்: “தற்காலத்தில் மாணவர்கள் பள்ளிகளிலிருந்து எவ்வளவு பயனடைகிறார்கள் என்பது முழுமையாக அவர்களுடைய சுய தூண்டுவிப்பையும் கட்டுப்பாட்டையும் வளர்த்துக்கொள்வதைப் பொறுத்தே இருக்கிறது.”

உதாரணமாக, தன் பிள்ளையின் கல்வியைக் குறித்து அக்கறை கொண்டிருந்த ஒரு தாயிடம் ஒரு ஆசிரியர் இவ்வாறு சொன்னார்: “கவலைப்படாதீர்கள், திருமதி ஸ்மித். ஜஸ்டின் மிகக் கெட்டிக்காரன், அவனுக்கு எழுத்துக்கூட்டத் தெரியாவிட்டால் பரவாயில்லை. அவனுக்காக அதைச் செய்வதற்கு ஒரு செயலரை வைத்துக்கொள்வான்.” ஒரு பிள்ளை எவ்வளவு கெட்டிக்காரத்தனமுள்ளதாக இருந்தாலும் சரி, வாசிக்கும் எழுதும் திறமைகள்—புரிந்துகொள்ளத்தக்க கட்டுரைகளை எழுதுவது, வாசிக்கத்தக்கவிதத்தில் எழுதுவது, திருத்தமாக எழுத்துக்கூட்டுவது ஆகியவை உட்பட—அனைத்தையும் கற்றுக்கொள்வது முக்கியம்.

அதிர்ச்சியூட்டும்வண்ணமாக, பிரபல உளவியலாளர் கார்ல் ராஜர்ஸ் பின்வருமாறு வலியுறுத்தியபோது, சில ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தவறினார்கள்: “எந்த சம்பந்தமும் இல்லாததாகத் தோன்றும் ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு எக்காலத்திலும் எவரும் முயலக்கூடாது.” அவருடைய கூற்றில் என்ன தவறு இருக்கிறது? ஒரு பிள்ளை எவற்றை கற்றுக்கொள்ளும்படி கேட்கப்படுகிறானோ அவற்றின் எதிர்கால மதிப்பை அடிக்கடி முன்னறிய முடியாது என்பது தெளிவாகவே இருக்கிறது. அநேக சமயங்களில், அதன் மதிப்பு வாழ்க்கையில் பிந்திய காலம் வரையாக உணரப்படுவதில்லை. தெளிவாக, நல்ல கல்வியைப் பெறுவதற்கு இன்று ஒரு பிள்ளை தனிப்பட்ட உறுதிப்பாட்டைக் கொண்டிருப்பது அவசியம்!

அப்படிப்பட்ட உறுதிப்பாட்டை வெளிக்காட்டும் ஓர் இளம் பெண்ணுக்கு நல்ல உதாரணம், ஒன்பதாம் வகுப்பிலிருக்கும் 14 வயது ஸின்டி. அவள் இவ்வாறு விளக்கினாள்: “நான் பள்ளி நேரத்திற்குப் பின் இருந்து, ஆசிரியர்களிடம் பேசி அவர்களை அறிந்துகொள்கிறேன். மற்ற மாணவர்களிடமிருந்து அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க முயலுகிறேன்.” வகுப்பிலும் அவள் நன்றாகக் கவனம் செலுத்தி, வீட்டுப் பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறாள். வகுப்பில் கவனிக்கும்போது அல்லது வாசிக்கும்போது, நல்ல குறிப்புகளை எடுப்பதற்காக வெற்றிகரமான மாணவர்கள் ஒரு பென்ஸிலையும் பேப்பரையும் அருகில் வைத்துக்கொள்வதைப் பழக்கமாக்கிக் கொள்கிறார்கள்.

நல்ல கல்வியைப் பெறுவதற்கு, கெட்ட கூட்டாளிகளைத் தவிர்ப்பதற்கான உறுதிப்பாடும் இன்றியமையாததாக இருக்கிறது. ஸின்டி இவ்வாறு குறிப்பிட்டாள்: “நல்ல ஒழுக்கங்களை உடைய ஒருவரையே நான் எப்போதும் தேடுகிறேன். உதாரணமாக, இன்னார் இன்னார் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது பற்றி அல்லது முறைதகாத பாலுறவு கொள்வது பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பள்ளி சகாக்களிடம் கேட்பேன். ‘அதில் என்ன தவறு இருக்கிறது?’ என்பது போன்ற எதையாவது அவர்கள் சொன்னால், அவர்கள் நல்ல கூட்டாளிகள் அல்ல என்பதை நான் உணர்ந்துகொள்வேன். ஆனால் அப்படிப்பட்ட நடத்தையைக் குறித்து உண்மையான வெறுப்புணர்ச்சியை யாராவது வெளிக்காட்டி, தான் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று அவள் சொன்னால், சாப்பாட்டு இடைவேளையில் நான் அவளருகில் உட்காருவதைத் தெரிந்துகொள்வேன்.”

தெளிவாகவே இன்று நல்ல கல்வியைப் பெறுவதற்கு அநேக சவால்கள் இருக்கின்றன. ஆனால் மாணவர்களும் பெற்றோரும் ஆகிய இரு சாராரும் அந்தத் திறவுகோல்களைப் பயன்படுத்தினால் அப்படிப்பட்ட ஒரு கல்வி சாத்தியமாக இருக்கிறது. நல்ல கல்வியைப் பெறுவதில் பெரிதளவில் உங்களுக்கு உதவத்தக்க ஒரு ஏற்பாட்டை அடுத்ததாகக் கவனிப்போம்.

[பக்கம் 7-ன் பெட்டி]

அதிக செல்லம் கொடுத்தலா அன்பான சிட்சையா?

இளைஞருக்கு அதிக செல்லம் கொடுப்பது கெடுதலுக்கு வழிநடத்தும் என்று பைபிள் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 29:21, NW) அமெரிக்க ஆசிரியர் கூட்டுக்கழகத் தலைவராகிய ஆல்பர்ட் ஷங்கர், இதற்கிசைவாக இவ்வாறு சொன்னார்: “தாங்கள் செய்யவேண்டுமென்று தங்கள் பிள்ளைகள் கேட்கிறவற்றையெல்லாம் அவ்வாறே அவர்களுக்குச் செய்துவிட்டால் தங்கள் பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் சரியாகச் செய்வதாக நினைக்கிற பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால் அது தவறு என்று எங்களுக்குத் தெரியும்.”

அப்படிப்பட்ட அதிக செல்லம் கொடுத்தல் தவறு என்று அநேக இளைஞருக்கும்கூட தெரியும். இந்த வருட தொடக்கத்தில், மாஸசூஸட்ஸ் செய்தித்தாள் இவ்வாறு அறிக்கையிட்டது: “மேற்கு ஸ்பிரிங்ஃபீல்ட்டில் ஆறிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பிலிருந்த 1572 மாணவர்களின் சுற்றாய்வு ஒன்று, இந்த வயது தொகுதியிலிருக்கும் பிள்ளைகளின் மத்தியில் போதைப்பொருள் மற்றும் மதுபான பயன்பாட்டுக்கு வழிநடத்துவதில் மிக முக்கியமாக செல்வாக்கு செலுத்துவது சகாக்களின் அழுத்தம் அல்ல, ஆனால் ‘பெற்றோரின் அனுமதியளிப்பே’ என்று கண்டறிந்தது.”

இளைஞருக்கு அப்படிப்பட்ட செல்லம் கொடுத்தல், வரம்புமுறையற்ற பாலுறவு அதிகரிப்பதற்கும் வழிநடத்தியிருக்கிறது. உண்மையில், பைபிள் சொல்வதுபோல், சிட்சை கொடுக்கத் தவறுவது குடும்பத்தின் வெட்கத்திற்கு வழிநடத்துகிறது.—நீதிமொழிகள் 29:15.

[பக்கம் 10-ன் பெட்டி]

பெற்றோர் என்ன செய்யலாம்

✔ உங்கள் பிள்ளையின் பள்ளி, அதன் நோக்கங்கள், நீங்கள் வைத்திருக்கும் மதிப்பீடுகள் மற்றும் நம்பிக்கைகளிடமாக அதன் மனப்பான்மை ஆகியவற்றை அறிந்துகொள்ளுங்கள்.

✔ உங்கள் பிள்ளையின் ஆசிரியர்களுடன் பழகி, அவர்களோடு சேர்ந்து செயல்படும் ஒரு நல்ல உறவை வளர்த்துக்கொள்ள முயலுங்கள்.

✔ உங்கள் பிள்ளையின் வீட்டுப்பாடத்தில் ஆழ்ந்த அக்கறை எடுங்கள். அவனுடன் சேர்ந்து அடிக்கடி வாசியுங்கள்.

✔ உங்கள் பிள்ளை டிவியில் என்ன பார்க்கிறான் என்பதையும் எவ்வளவு பார்க்கிறான் என்பதையும் கட்டுப்படுத்துங்கள்.

✔ உங்கள் பிள்ளையின் உணவு பழக்கங்களைக் கவனியுங்கள். சத்தில்லா நொறுக்குத் தீனி, அவனுடைய கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறமையின்மீது மோசமான பாதிப்பைக் கொண்டிருக்கலாம்.

✔ உங்கள் பிள்ளைக்குப் போதுமான அளவு உறக்கம் கிடைப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். களைப்புடன் இருக்கும் பிள்ளைகள் நன்றாகப் படிப்பதில்லை.

✔ ஆரோக்கியகரமான நண்பர்களைத் தெரிந்துகொள்ள உங்கள் பிள்ளைக்கு உதவ முயலுங்கள்.

✔ உங்கள் பிள்ளையின் மிகச் சிறந்த நண்பராக இருங்கள். அவனுக்குக் கிடைக்கக்கூடிய முதிர்ச்சிவாய்ந்த நண்பர்கள் அனைவரும் அவனுக்குத் தேவை.

[பக்கம் 10-ன் பெட்டி]

பிள்ளைகள் என்ன செய்யலாம்

✔ உங்கள் பெற்றோரின் உதவியுடன், அறிவுப்பூர்வமான இலக்குகளையும் அவற்றை அடைவதற்கான வழிகளையும் திட்டமிடுங்கள். இந்த இலக்குகளை உங்கள் ஆசிரியர்களுடன் கலந்து பேசுங்கள்.

✔ உங்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் உதவியுடன் உங்கள் படிப்புத் துறைகளைக் கவனமாகத் தெரிந்தெடுங்கள். எளிதாக இருக்கும் விருப்பப்பாடங்கள் பொதுவாக மிகச் சிறந்தைவையாக இருப்பதில்லை.

✔ உங்கள் ஆசிரியர்களுடன் ஒரு நல்ல உறவை வளர்த்துக்கொள்ள முயலுங்கள். அவர்கள் உங்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கண்டறியுங்கள். உங்கள் முன்னேற்றங்களையும் பிரச்சினைகளையும் அவர்களுடன் கலந்துபேசுங்கள்.

✔ வகுப்பில் நன்கு கவனம் செலுத்துங்கள். ஒழுங்கற்ற நடத்தையில் ஈடுபடும்படி ஈர்க்கப்படாதீர்கள்.

✔ உங்கள் நண்பர்களை ஞானமாகத் தெரிந்தெடுங்கள். அவர்கள் பள்ளியில் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவ அல்லது தடங்கலாக முடியும்.

✔ உங்கள் வீட்டுப்பாடங்களையும் பயிற்சி வேலைகளையும் முடிந்தளவு நன்றாகச் செய்யுங்கள். அவற்றிற்காகத் தரமான நேரத்தை அளியுங்கள். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்கள் பெற்றோரையோ வேறொரு முதிர்ச்சிவாயந்த பெரியவரையோ கேளுங்கள்.

[பக்கம் 8-ன் படம்]

உங்கள் பிள்ளையைப் பற்றி ஒரு ஆசிரியர் குறைகளைச் சொன்னால், மரியாதையுடன் கவனியுங்கள்

[பக்கம் 9-ன் படம்]

ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளையிடம் பள்ளியைப் பற்றி கேளுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்