பள்ளியில் பிரச்சினைகளை சமாளிக்க உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள்
மோசமாகிக்கொண்டு போகும் உலக நிலைமைகள் நம்முடைய பிள்ளைகள் உட்பட, நம் எல்லாரையும் பாதிக்கின்றன. நம்முடைய நாளில் ‘கொடிய காலங்கள் வருமென்றும்’ ‘பொல்லாதவர்களும் எத்தர்களும் மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்’ என்றும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் திருத்தமாக முன்னுரைத்தது. (2 தீமோத்தேயு 3:1-5, 13) இதன் காரணமாக, மாணவர்கள் தங்கள் பெற்றோர் அனுபவித்திராத நிலைமைகளுடன் போராடுகையில், பள்ளிப்படிப்பு இன்றைய நாட்களில் கஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது. தங்களுடைய பிள்ளைகள் சமாளிக்கும்படி உதவ பெற்றோர் என்ன செய்யலாம்?
சகாக்களின் அழுத்தம்
பெரும்பாலான பிள்ளைகள் சிலசமயங்களில் சகாக்களின் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். வாலிப பிரெஞ்சு மாணவன் ஒருவன் இவ்வாறு புலம்புகிறான்: “பெற்றோரும் சமுதாயத்தினரும் தங்களால் முடிந்ததையெல்லாம் செய்கின்றனர்; ஆனால் அது போதாது. இளங்குற்றவாளிகள் மற்ற இளைஞரை தங்களோடு கூட்டுச்சேர்ந்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்றனர். . . . தங்களுடைய பிள்ளைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்காத பெற்றோர் பெற்றோரே அல்லர்.”
பொறுப்புள்ள பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் ஆவிக்குரிய பண்புகளை வளர்த்துக்கொள்ள உதவ முயற்சிக்கின்றனர். இவை கேடுவிளைவிக்கும் சகாக்களின் அழுத்தங்களைச் சமாளிக்க அவர்களுக்குத் தேவையான உள்ளுரத்தைக் கொடுக்கின்றன. “எங்களுடைய பிள்ளைகள் தன்-மதிப்பை வளர்த்துக்கொள்ள உதவ நாங்கள் மனமார முயற்சிக்கிறோம். ஆகவே தங்களுடைய சகாக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்ற தேவையைக் குறித்த உணர்வு அவர்களுக்கு எழுவதில்லை,” என்று விவரிக்கிறார் ஒரு தந்தை. “மற்ற பிள்ளைகளைப் போல இருப்பது அவர்களுக்கு முக்கியமானதாகத் தோன்றவில்லையானால், அவர்கள் மாட்டேன் என்று சொல்லவேண்டிய சந்தர்ப்பங்களில் மாட்டேன் என்று சொல்வதை எளிதானதாகக் காண்பர்.” சிக்கலான சந்தர்ப்பங்களை எவ்வாறு கையாளுவது என்று தன்னுடைய பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க, இந்தத் தந்தை, தன் குடும்பம் நடித்துப் பார்ப்பதற்கென சமயத்தை ஒதுக்குகிறார். ஏற்படக்கூடிய சிக்கலான சந்தர்ப்பங்களையும் அவற்றை சமாளிப்பதற்கான வழிகளையும் நிஜமாகவே நடித்துப் பார்ப்பார்கள். ஆதரவளிக்கும் பெற்றோராக இருந்து, உங்களுடைய பிள்ளை தளராத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உதவுங்கள்.
கெட்ட வார்த்தைகள்
உலகமுழுவதும் ஒழுக்க தராதரங்கள் சீரழிந்துகொண்டு போகையில், கெட்ட வார்த்தைகள் பேசுவது சர்வ சாதாரணமாகிறது. அநேக நாடுகளிலும் இது ப்ரைம் டைம் டிவி நிகழ்ச்சியில் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஆகவே, பள்ளி விளையாட்டு மைதானங்களிலும் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் கீழ்த்தரமான பேச்சுக்கள் எதிரொலிக்கின்றன.
சில ஆசிரியர்கள் தாங்களே கெட்ட வார்த்தைகளால் திட்டுவதை நியாயப்படுத்திக் காண்பிக்கின்றனர். இவ்வாறு தங்களுடைய மாணவர்கள் அத்தகைய வார்த்தைகளைக் குறித்து அவர்களுடைய சொந்த மனப்பான்மையை உருவாக்கிக்கொள்ள முடியும் என்று வாதாடுகின்றனர். ஆனால் அத்தகைய கொள்கையானது, மாணவர்கள் இந்தக் கீழ்த்தரமான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளப்படும் அனுதின பேச்சின் பாகமாக ஆக்கிக்கொள்ளும்படியே செய்கிறது.
இத்தகைய வார்த்தைகள் குடும்பத்தினர் மத்தியில் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என்று ஞானமான பெற்றோர் ஒருவர் கனிவுடன் விளக்குகிறார். தன்னுடைய பிள்ளை படிக்கப்போகும் புத்தகங்கள் என்னென்ன என்று பள்ளிப் பாடத்திட்டத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்வதன் மூலம் பள்ளிப் பாடத்தில் கெட்ட வார்த்தைகள் பேசும் பிரச்சினையையும் அவர் தவிர்க்கலாம். தெரிந்தெடுத்துக்கொண்ட எந்தப் பாடப் புத்தகமாவது கெட்ட வார்த்தைகளைக் கொண்டிருந்தாலோ ஒழுக்கக்கேட்டை சிறப்பித்துக் காட்டினாலோ, அவர் பிள்ளையின் ஆசிரியரிடம் ஏற்றுக்கொள்ளத்தக்க வார்த்தைகள் அடங்கிய வேறொரு புத்தகத்தைத் தெரிந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்கும்படி கேட்கலாம். சமநிலையான அணுகுமுறை நியாயமானத் தன்மையை வெளிப்படுத்துகிறது.—பிலிப்பியர் 4:5, NW.
ஒழுக்கக்கேடும் போதைப்பொருட்களும்
அநேக பெற்றோருக்கு “வீட்டில் [பாலினத்தைப் பற்றிய பாடத்தை] விஷயத்தைக் கையாளுவது தர்மசங்கடமானதாகவோ வெட்கப்படுத்துவதாகவோ” இருந்ததாக சுற்றாய்வுகள் காண்பிக்கின்றன. மாறாக தங்களுடைய பிள்ளைகளுக்கு அதைப்பற்றிய திருத்தமான அறிவைக் கொடுப்பதற்கு பள்ளியின்மீது சார்ந்திருக்கின்றனர். ஆனால், அனுபவமுள்ள ஒரு ஆசிரியர் சொல்லுகிறபடி, இன்றைய பேரளவான பருவவயது கருத்தரித்தல்கள், “கருத்தடை முறைகளைவிட ஒழுக்க தராதரத்தையே சார்ந்து” இருக்கின்றன என்று லண்டனின் தி சன்டே டைம்ஸ் அறிவிக்கிறது. தங்களுடைய பிள்ளைகள் என்னென்ன தராதரங்களை நடத்தையில் பின்பற்றவேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனரோ அவற்றை நிர்ணயிக்கும் மிகச் சிறந்த நிலையில் இருப்பவர்கள் பெற்றோரே.
போதைப்பொருள் துர்ப்பிரயோகத்தைக் குறித்ததிலும் இது அவ்வாறே இருக்கிறது. பெற்றோரின் வழிநடத்துதல் இல்லாதிருப்பது பிரச்சினையை மோசமாக்குகிறது. “குடும்ப வாழ்க்கை பிள்ளைக்கு எந்தளவு கவர்ச்சியற்றதாய் இருக்கிறதோ அந்தளவு அவன் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடிக்கும் மனப்போக்கை உடையவனாக இருக்கிறான். பெரும்பாலும் போதைப்பொருட்களை [உட்கொள்வது] அவற்றில் ஒரு வழியாக இருக்கிறது,” என்று குறிப்பிடுகிறது ஃப்ராங்காஸ்காபீ 1993. “ஒரு பெற்றோராய் இருப்பது கடினமானதாகும்,” என்று ஒப்புக்கொள்கிறார் டாக்ஸிகாமானீ ஏ ப்ரேவான்ஸியான் ஸ்யூனெஸ் (போதைப்பொருள் உபயோகம் மற்றும் இளைஞர் பாதுகாப்பு) ஸ்தாபனத்தின் தலைவர், மிஷ்லின் ச்சபன்-டெல்மஸ். “தொடர்ந்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்; போதைப்பொருட்கள், ஏதோ கோளாறு இருக்கிறது என்று அடிக்கடி பெற்றோரை எச்சரிக்கும் ஒரு வழியாக இருக்கின்றன. தன்னுடைய தாயோ தந்தையோ தன்னைக் கவனிப்பதில்லை என்று ஒரு வளரிளமைப் பருவத்தினன் உணருவானேயாகில், போதைப்பொருட்கள் அவனிடத்தில் கொடுக்கப்படும்போது, அவை அவனுடைய பிரச்சினைகளுக்கு ஒரு மாயத் தீர்வைப்போலத் தோன்றலாம்.”
தங்களுடைய பருவவயது மகளின் பள்ளிப்படிப்பில் தானும் தன்னுடைய மனைவியும் எப்படி உண்மையான அக்கறை காட்டுகின்றனர் என்பதை கனடாவைச் சேர்ந்த ஒரு பெற்றோர் விவரிக்கிறார்: “நேடினை நாங்கள் பள்ளிக்குக் காரில் கொண்டுவிட்டு திரும்ப கூட்டிக்கொண்டு வருகிறோம். அடிக்கடி, அவளைக் கூட்டிக்கொண்டு வந்த பிறகு, அன்று பள்ளியில் என்னென்னெல்லாம் நடந்தது என்பதை வெளிக்காட்டக்கூடிய உரையாடல் தொடர்கிறது. விபரீதமான ஏதோவொன்று நடந்ததாக நாங்கள் கண்டுபிடித்தால், அதைப்பற்றி பிறகு நாங்கள் அவளிடம் பேசுவோம் அல்லது இரவு சாப்பாட்டு சமயத்திலோ குடும்ப கலந்துரையாடலின்போதோ அந்த விஷயத்தைப்பற்றி மீண்டும் பேசுவோம்.” அதைப்போலவே, பேச்சுத்தொடர்பு வழிகளைத் திறந்திருக்கச் செய்வதன் மூலம் உங்களுடைய பிள்ளையின் மீதுள்ள உண்மையான கரிசனையையும் நேசத்தையும் நீங்கள் வெளிக்காட்டலாம்.
கொடுமைப்படுத்துதலும் வன்முறையும்
கொடுமைப்படுத்துதல் “பள்ளிப் பிரச்சினைகளில் மறைமுகமாக அதிக கேடுவிளைவிக்கும் ஒன்றாக இருக்கிறது,” என்று பள்ளியில் உங்கள் பிள்ளைக்கு எவ்வாறு உதவுவது (How to Help Your Child Through School) என்ற புத்தகத்தில் மாரின் ஒக்கானர் சொல்கிறார். “அது பலியானவர்களுக்கு எவ்வளவுதான் துயரத்தைத் தந்தாலும், அதைப் பெரியோரிடம் சொல்ல மனமில்லாமல் இருக்கின்றனர்; காரணம் ‘கோழை’ என்று பட்டம்கட்டிவிடுவார்களோ என்ற பயம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
வருந்தத்தக்கவகையில், ஆசிரியர்கள் சிலர் கொடுமைப்படுத்துதலை சாதாரண நடத்தையாகவே கருதுகின்றனர். ஆனால் மற்ற அநேகர், கொடுமைப்படுத்துதல் ஒரு “துர்ப்பிரயோகத்தின் வகை” என்று கருதி, “அதைத் தொடர்ந்திருக்க அனுமதிப்பது கொடுமைக்காரர்களுக்கு நல்லதல்ல” என்று அடித்துக்கூறும் கல்வி நிபுணர் பிட் ஸ்டீஃபென்ஸனோடு எண்ணத்தில் ஒத்திருக்கிறார்கள்.
அப்படியானால், உங்களுடைய பிள்ளை கொடுமைக்கு ஆளானால் நீங்கள் என்ன செய்யலாம்? “முக்கிய பாதுகாப்பானது [கொடுமைக்கு ஆளானவர்கள்] வாழும் சமுதாயத்திலிருக்கும் வளர்ந்தவர்களாகவே இருக்கவேண்டும்,” என்று ஒக்கானர் எழுதுகிறார். அனுதாபமுள்ள ஒரு ஆசிரியரிடம் விஷயங்களைப்பற்றி பேசுங்கள். அத்தகைய வம்புச் சண்டையிடும் நடத்தை ஏற்றுக்கொள்ளப்படாதது என்றுதான் நீங்கள் இருவருமே கருதுகிறீர்கள் என்ற ஒரு நம்பிக்கையை உங்களுடைய பிள்ளைக்கு இது அளிக்கும். கொடுமைப்படுத்துதலுக்கு எதிராக அநேக பள்ளிகள் தெளிவான ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்தி, அதைப்பற்றி ஆசிரியர்கள் வகுப்பில் வெளிப்படையாக கலந்துபேசுகின்றனர்.
நேட்டலி தன்னுடைய மதத்தின் காரணமாக கொடுமைக்கு ஆளானாள். “ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்ததன் காரணமாக நான் கேவலப்படுத்தப்பட்டேன், என்னுடைய பொருட்கள் சிலசமயங்களில் கிழித்தெறியப்பட்டிருந்தன,” என்று அவள் சொல்கிறாள். பிரச்சினையைத் தீர்க்க அவள் தன்னுடைய பெற்றோருடன் பேசினாள். அவர்கள் அவளைத் தன்னுடைய ஆசிரியர்களிடம் பேசும்படி ஆலோசனை கூறினர். அவளும் பேசினாள். “என்னைக் கொடுமைப்படுத்திவந்த என்னுடைய வகுப்பு மாணவர்களில் இருவருடைய பெற்றோரோடு தொலைபேசியில் பேசவும் நான் சொந்தமாக முயற்சி எடுத்தேன். அவர்களிடம் பிரச்சினையை என்னால் விவரமாக சொல்ல முடிந்ததால், இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. இதன் காரணமாக நான் என்னுடைய ஆசிரியர்களுடைய நம்பிக்கைக்கும் பெரும்பாலான என் வகுப்பு மாணவமாணவியருடைய நம்பிக்கைக்கும் பாத்திரமானவளானேன்” என்று அவள் மேலும் கூறுகிறாள்.
சிலசமயங்களில் பெற்றோர் தங்களுடைய பிள்ளை கொடுமைக்கு ஆளானவனாக அல்ல, ஆனால் கொடுமைக்காரனாக இருப்பதாக கண்டுபிடிக்கின்றனர். அப்படியானால், வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டும். “வம்புச் சண்டையிடுவது தெளிவாக இருக்கும் நடத்தையையுடைய பிள்ளைகள், சச்சரவை பெற்றோர் நன்கு திருப்திகரமாக தீர்க்காத குடும்பங்களிலிருந்து வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வன்முறையான நடத்தை கற்றுக்கொண்ட ஒன்றாக இருக்கிறது,” என்று அறிவிக்கிறது லண்டனின் தி டைம்ஸ்.
சில இடங்களில் வன்முறை கொள்ளைநோய் பரவுவதைப்போல் பரவுகிறது. அரசியல் பதட்டநிலை பள்ளிப்படிப்பு மேற்கொள்வதை கிட்டத்தட்ட முடியாத காரியமாக ஆக்கியிருக்கும்போது, நடுநிலைமையை மதிக்கும் பிள்ளைகள், சில சந்தர்ப்பங்களில் வீட்டில் தங்கிவிடுவதையே ஞானமாகக் கண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் பள்ளியில் இருக்கும்போது கலவரம் ஏற்படுமானால், விவேகத்தோடு அவர்கள் எவரும் காணாதவகையில் வீட்டுக்குப்போய் அமைதிநிலை திரும்பும்வரை தங்கிவிடுகின்றனர்.
தரம்குறைந்த போதனை
தரம்குறைந்த போதனையானது பிரச்சினைகளை உண்டுபண்ணும்போது, உங்களுடைய பிள்ளையோடும் உங்கள் பிள்ளையின் ஆசிரியர்களோடும் நல்ல பேச்சுத்தொடர்பைக் கொண்டிருப்பது உதவலாம். “தன் பாடங்களைக் குறித்து ஒரு நம்பிக்கையான மனப்பான்மையைக் கொண்டிருக்கும்படி எங்கள் மகளை நாங்கள் எப்போதுமே உற்சாகப்படுத்துகிறோம்,” என்று சொல்கிறார்கள் ஒரு தம்பதியினர். ஆனால் ஆசிரியர்கள் பாடத்தை ஆர்வமூட்டும் வகையில் கற்றுக்கொடுக்காவிடில், விரைவில் பிள்ளைகள் ஆர்வமிழக்கின்றனர். உங்கள் பிள்ளை இவ்வாறு ஆர்வமிழந்திருக்கிறான் என்றால், ஆசிரியரைத் தனிமையில் அணுகிப் பேசும்படி நீங்கள் ஏன் அவனை உற்சாகப்படுத்தக்கூடாது?
பதிலளிக்கப்படும்போது, பாடத்தின் முக்கியக் கருத்து என்ன என்பதை எளிதில் விளங்கிக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கப்பட்டதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ளவும் உதவும் கேள்விகளைத் தயாரிக்க உங்கள் இளைஞருக்கு உதவுங்கள். இருப்பினும், இது மட்டும்தானே பாடத்தின்மேல் ஒரு உண்மையான நீடித்த ஆர்வத்தை உண்டாக்குவதில்லை. பெற்றோராக நீங்கள் வைக்கும் சொந்த முன்மாதிரியின்மேல் அதிகம் சார்ந்திருக்கிறது. உங்களுடைய பிள்ளையோடு சேர்ந்து பாடங்களைக் கலந்துபேசுவதன் மூலம் நீங்கள் கரிசனைகொள்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்; ஆசிரியர் கொடுக்கும் ஆராய்ச்சித் திட்டங்களில் உதவியளியுங்கள்.
பள்ளியில், பிளவுபட்ட குடும்பங்களிலிருந்தோ அல்லது துர்ப்பிரயோகிக்கப்பட்ட நிலைமையிலிருந்தோ, கைவிடப்பட்ட சூழ்நிலைகளிலிருந்தோ வருகிற பிள்ளைகள் இருக்கின்றனர். ஆகவே அவர்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையின்றி இருக்கின்றனர். அவர்கள் நல்ல சூழ்நிலைகளிலிருந்து வருகிற பிள்ளைகளோடு உறவாடுகின்றனர். தங்களுடைய பிள்ளைகளுக்குப் பள்ளியில் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க தாங்கள் விடாமுயற்சியுடன் உதவவேண்டும் என்ற தேவையை பெரும்பாலான பெற்றோர் உணருகின்றனர். ஆனால் பெற்றோருக்கு ஆசிரியர்களோடு உள்ள தொடர்பைப்பற்றி என்ன? என்ன வகையான உறவுமுறையை அவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும், எவ்வாறு?
[பக்கம் 7-ன் பெட்டி]
உங்கள் பிள்ளை கொடுமைக்கு ஆளாகியிருக்கிறதா?
பெற்றோர் தங்கள் பிள்ளையிடம் வெளிப்படையாக காணக்கூடிய அடையாளங்களைக் கவனிக்கும்படி நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர். அவனோ அவளோ பள்ளிக்குப் போவதற்குத் தயக்கத்தைக் காட்டுகிறானா(ளா), பள்ளி சகாக்களிலிருந்து விலகியிருக்க முயலுகிறானா(ளா), காயத்துடனோ கிழிந்த உடைகளுடனோ வீட்டுக்கு வருகிறானா(ளா)?
உண்மையில் நடந்தது என்ன என்று அப்படியே உங்களிடம் சொல்லும்படி பிள்ளையை உற்சாகப்படுத்துங்கள். கொடுமைப்படுத்துதல்தான் உண்மையான பிரச்சினையா என்று அறிந்துகொள்ள இது உங்களுக்கு உதவும். அது உண்மையான பிரச்சினையாக இருக்குமானால், அனுதாபமுள்ள ஒரு ஆசிரியரோடு பேசுங்கள்.
நம்பகமான வகுப்பு மாணவர்களோடு நெருங்கிப் பழகவும் திரும்பத் திரும்ப கொடுமைப்படுத்துதல் நடக்கிற இடங்களையும் சந்தர்ப்பங்களையும் தவிர்க்கும்படி ஆலோசனை கொடுப்பதன்மூலம் உங்கள் பிள்ளைக்கு சமாளிக்க உதவுங்கள். நல்ல நகைச்சுவையுணர்வோடும், சிக்கலான சந்தர்ப்பங்களில் எவ்வாறு சாதுரியமாக பேசித் தப்பித்துக்கொள்வது என்று அறிந்தும் இருக்கிற பிள்ளை பெரும்பாலும் நன்கு சமாளிக்கிறது.
அதிக கவலைப்படுவதைத் தவிருங்கள், பழிக்குப்பழி வாங்கும்படி உற்சாகப்படுத்தாதீர்கள்.