வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
நவம்பர் 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆமோஸ் 1-9
“யெகோவாவைத் தேடுங்கள், என்றென்றும் வாழுங்கள்”
(ஆமோஸ் 5:14, 15) நீங்கள் என்றென்றும் வாழ வேண்டுமென்றால், கெட்டதைத் தேடாமல் நல்லதைத் தேடுங்கள். அப்போது, நீங்கள் சொல்வது போலவே பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா உங்களோடு இருப்பார். கெட்டதை வெறுத்துவிடுங்கள், நல்லதை நேசியுங்கள். நகரவாசலில் நீதி வழங்குங்கள். அப்போது யோசேப்பின் வம்சத்தாரில் மீதியாக இருப்பவர்கள் இரக்கம் பெறுவார்கள். பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்.
jd-E பக். 90-91 பாரா. 16-17
யெகோவாவின் உயர்ந்த தராதரங்களின்படி அவருக்குச் சேவை செய்யுங்கள்
16 எது சரி, எது தவறு என்பதைப் பற்றிய தராதரங்கள் சம்பந்தமாக, முதல் மனிதனான ஆதாம் முட்டாள்தனமான ஒரு தீர்மானத்தை எடுத்தான். ஆனால், நாம் எப்படி ஞானமான தீர்மானங்களை எடுக்கலாம்? “கெட்டதை வெறுத்துவிடுங்கள், நல்லதை நேசியுங்கள்” என்று ஆமோஸ் வலியுறுத்துகிறார். (ஆமோஸ் 5:15) சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, செமிட்டிக் மொழிகள் மற்றும் இலக்கியங்களின் பேராசிரியரான வில்லியம் ரயினே ஹார்ப்பர் (மறைந்துபோன) இந்த வசனத்தைப் பற்றி இப்படிச் சொன்னார்: “எது சரி, எது தவறு என்பதைப் பற்றி ஆமோஸின் மனதில் இருப்பது, கடவுளுடைய விருப்பத்தோடு ஒத்துப்போகிறது.” இந்த முக்கிய பொருளைப் பற்றி 12 தீர்க்கதரிசிகளிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம். எது சரி, எது தவறு என்பதற்கான யெகோவாவுடைய தராதரங்களை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா? இந்த உயர்ந்த தராதரங்களைப் பற்றி பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றை, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக” இருக்கும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.—மத்தேயு 24:45-47.
17 கெட்டதை வெறுக்கும்போது, கடவுளுக்குப் பிடிக்காததை நாம் செய்யாமல் இருப்போம். உதாரணத்துக்கு, இன்டர்நெட்டில் ஆபாசத்தைப் பார்ப்பதால் வரும் ஆபத்துகளைப் பற்றி ஒருவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கலாம், அதை அவர் பார்க்காமல் இருக்க முயற்சி செய்யலாம். ஆனால், அதைப் பற்றி அவர் உண்மையிலேயே தன் மனதிற்குள் எப்படி உணருகிறார்? (எபேசியர் 3:16) ஆமோஸ் 5:15-ல் கடவுள் கொடுத்திருக்கிற அறிவுரையை அவர் கடைப்பிடிக்கும்போது, கெட்டதை வெறுப்பது அவருக்குச் சுலபமாகிவிடும். அதனால், ஆன்மீக போராட்டத்திலும் அவரால் வெற்றிபெற முடியும்.
நவம்பர் 13-19
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(ஒபதியா 12) உன் சகோதரனுக்குக் கஷ்டம் வந்தபோது நீ ஏன் கைகொட்டிச் சிரித்தாய்? யூதா ஜனங்களுக்கு அழிவு வந்தபோது நீ ஏன் சந்தோஷத்தில் துள்ளினாய்? அவர்கள் வேதனையில் அவதிப்பட்டபோது நீ ஏன் அகம்பாவமாகப் பேசினாய்?
jd-E பக். 112 பாரா. 4-5
கடவுள் விரும்புகிறபடி மற்றவர்களை நடத்துங்கள்
4 இஸ்ரவேலுக்குப் பக்கத்தில் இருந்த ஏதோமுக்குக் கடவுள் கொடுத்த தண்டனைத் தீர்ப்பிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். “உன் சகோதரனுக்குக் கஷ்டம் வந்தபோது நீ ஏன் கைகொட்டிச் சிரித்தாய்? யூதா ஜனங்களுக்கு அழிவு வந்தபோது நீ ஏன் சந்தோஷத்தில் துள்ளினாய்?” (ஒபதியா 12) இஸ்ரவேல் தேசத்துக்கும் தீரு நகரத்துக்கும் வர்த்தக தொடர்பு இருந்ததால், தீரு ஜனங்கள் இஸ்ரவேலர்களுக்குச் ‘சகோதரர்களாக’ இருந்திருக்கலாம். ஆனால் உண்மையில், ஏதோமியர்கள்தான் இஸ்ரவேலர்களுக்குச் ‘சகோதரர்களாக’ இருந்தார்கள். ஏனென்றால், இவர்கள் யாக்கோபின் சகோதரனான ஏசாவுடைய வம்சத்தில் வந்தவர்கள். யெகோவாவும் ஏதோமியர்களை இஸ்ரவேலர்களுடைய ‘சகோதரர்கள்’ என்று சொல்லியிருக்கிறார். (உபாகமம் 2:1-4) அதனால், யூதர்கள் பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டதைப் பார்த்து, ஏதோமியர்கள் சந்தோஷப்பட்டது தவறான விஷயம்!—எசேக்கியேல் 25:12-14.
5 ஏதோமியர்கள் தங்கள் யூத சகோதரர்களை நடத்திய விதம் யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை. நாமும் நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் சகோதரர்கள நடத்துற விதத்த பார்த்து, கடவுள் என்னை பத்தி என்ன நினைப்பாரு?’ நமக்கும் ஒரு சகோதரருக்கும் பிரச்சினை வரும்போது, அவரைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம், அவரிடம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு, ஒரு கிறிஸ்தவர் உங்கள் மனதைக் காயப்படுத்திவிட்டதாக வைத்துக்கொள்ளுங்கள் அல்லது அவருக்கும் உங்கள் சொந்தக்காரருக்கும் ஒரு பிரச்சினை வந்துவிட்டதாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அவர்மேல் “ஏதாவது மனக்குறை” இருந்தால், அவர் செய்ததை மறப்பதற்குப் பதிலாக அல்லது அந்தப் பிரச்சினையைச் சரிசெய்வதற்குப் பதிலாக, அவரிடம் கோபப்படுவீர்களா? (கொலோசெயர் 3:13; யோசுவா 22:9-30; மத்தேயு 5:23, 24) அப்படிக் கோபப்பட்டால், அந்தச் சகோதரரை நீங்கள் தவறாக நடத்த வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, நீங்கள் அவரை அசட்டை செய்துவிடலாம், அவரைப் பார்க்காமலோ அவரிடம் பேசாமலோ இருந்துவிடலாம், அவரைப் பற்றி தவறாகவும் பேசிவிடலாம். பிறகு ஒருசமயம், அந்தச் சகோதரர் தவறு செய்துவிடுகிறார்; அதனால், மூப்பர்கள் அவருக்கு ஆலோசனை கொடுக்கிறார்கள் அல்லது அவரைத் திருத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். (கலாத்தியர் 6:1) அப்போது, ஏதோமியர்களைப் போல, அந்தச் சகோதரருடைய சூழ்நிலையைப் பார்த்து நீங்கள் சந்தோஷப்படுவீர்களா? நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கடவுள் விரும்புவார்?
நவம்பர் 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் | மீகா 1-7
“யெகோவா நம்மிடம் என்ன கேட்கிறார்?”
(மீகா 6:8) மனுஷனே, நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார். யெகோவா உன்னிடம் என்ன கேட்கிறார்? நியாயத்தைக் கடைப்பிடித்து, உண்மைத்தன்மையை [மாறாத அன்பை, அடிக்குறிப்பு] நெஞ்சார நேசித்து, அடக்கத்தோடு உன் கடவுளுடைய வழியில் நடக்க வேண்டும் என்றுதானே கேட்கிறார்!
w12-E 11/1 பக். 22 பாரா. 4-7
“யெகோவா உன்னிடம் என்ன கேட்கிறார்?”
“நியாயத்தைக் கடைப்பிடி.” “நியாயம்” என்பதற்கான எபிரெய வார்த்தை, “சமுதாயத்தில் இருக்கிறவர்களோடு நீதியாகவும் நியாயமாகவும் நடந்துகொள்வதை உட்படுத்துகிறது” என்று ஒரு ஆராய்ச்சி புத்தகம் சொல்கிறது. நீதி, நியாயம் சம்பந்தமான தன்னுடைய தராதரங்களின்படி மற்றவர்களை நடத்த வேண்டும் என்று கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். மற்றவர்களிடம் பாரபட்சமில்லாமலும், நேர்மையாகவும் நடந்துகொள்வதன் மூலம் நாம் நியாயத்தைக் கடைப்பிடிக்கிறோம். (லேவியராகமம் 19:15; ஏசாயா 1:17; எபிரெயர் 13:18) நாம் மற்றவர்களிடம் நியாயமாக நடந்துகொள்ளும்போது, அவர்களும் நம்மிடம் நியாயமாக நடந்துகொள்ள தூண்டப்படலாம்.—மத்தேயு 7:12.
“மாறாத அன்பை நெஞ்சார நேசி.” மீகா 6:8-லுள்ள அடிக்குறிப்பின்படி, மாறாத அன்பைக் காட்ட வேண்டும் என்று மட்டுமே கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை, அதை நேசிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். கிசெத் என்பதுதான் மாறாத அன்பு என்பதற்கான எபிரெய வார்த்தை. ஒரு பைபிள் அறிஞர் இப்படிச் சொல்கிறார்: “கிசெத் என்ற எபிரெய வார்த்தையை அன்பு, இரக்கம், கருணை என்ற வார்த்தைகளை வைத்து முழுமையாக மொழிபெயர்க்க முடியாது; அன்போ, இரக்கமோ, கருணையோ மாறாத அன்பைக் குறிக்க முடியாது, இந்த எல்லா குணங்களும் சேர்ந்ததுதான் மாறாத அன்பு.” நாம் மாறாத அன்பை நேசித்தால், அதை மனப்பூர்வமாக காட்டுவோம்; மற்றவர்களுக்கு உதவுவதில் சந்தோஷப்படுவோம். இதனால், கொடுப்பதால் வரும் சந்தோஷத்தையும் நாம் அனுபவிப்போம்.—அப்போஸ்தலர் 20:35.
“அடக்கத்தோடு உன் கடவுளுடைய வழியில் நட.” பைபிளில், “நட” என்ற வார்த்தை “ஒரு குறிப்பிட்ட வழியைப் பின்பற்றுவதை” அர்த்தப்படுத்துகிறது. பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற வாழ்க்கை பாதையில் நடக்கும்போது, நாம் கடவுளோடு நடக்கிறோம். அந்த வாழ்க்கை பாதையில் நடப்பதற்கு, நமக்கு “அடக்கம்” தேவை. ஏன்? நாம் கடவுளுக்கு முன் அடக்கமாக இருக்கும்போது, அவருக்கு முன் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும், நம் வரம்புகள் என்ன என்பதையும் நம்மால் யதார்த்தமாக எடைபோட்டு பார்க்க முடியும். அப்படியென்றால், “அடக்கத்தோடு” நடப்பது எதைக் குறிக்கிறது? கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார், நம்மால் அவருக்கு என்ன கொடுக்க முடியும் என்பதைப் பற்றிய யதார்த்தமான கண்ணோட்டம் இருப்பதை இது குறிக்கிறது.
நம்மால் கொடுக்க முடியாததை யெகோவா ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை என்பது நமக்கு ஆறுதலைத் தருகிறது. அவருடைய சேவையில், நம்முடைய மிகச் சிறந்ததைக் கொடுக்கும்போது அவர் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். (கொலோசெயர் 3:23) அவர் நம்முடைய வரம்புகளை நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார். (சங்கீதம் 103:14) இவற்றை நாம் அடக்கத்தோடு ஒத்துக்கொண்டால், அவரோடு நம்மால் சந்தோஷமாக நடக்க முடியும். கடவுளோடு நடக்க ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள கூடாது? அப்படிக் கடவுளோடு நடக்கும்போது, நீங்கள் நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பீர்கள்.—நீதிமொழிகள் 10:22.