வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஆகஸ்ட் 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 17-18
“நன்றியோடு இருங்கள்”
லூ 17:12, 14-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
தொழுநோயாளிகள் பத்துப் பேர்: பைபிள் காலங்களில், தொழுநோயாளிகள் அநேகமாகத் தொகுதி தொகுதியாக வாழ்ந்தார்கள் அல்லது ஒன்றுகூடி வந்தார்கள்; இதனால், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய அவர்களால் முடிந்தது. (2ரா 7:3-5) கடவுளுடைய சட்டத்தின்படி, அவர்கள் ஒதுக்குப்புறத்தில் வாழ வேண்டியிருந்தது. அதோடு, யாரும் தங்கள் பக்கத்தில் வராமல் இருப்பதற்காக, “தீட்டு, தீட்டு!” என்று கத்தி எச்சரிக்க வேண்டியிருந்தது. (லேவி 13:45, 46) திருச்சட்டத்துக்கு இசைவாக, அந்தத் தொழுநோயாளிகள் இயேசுவின் பக்கத்தில் வராமல் ‘தூரத்திலிருந்தார்கள்.’—சொல் பட்டியலில் “தொழுநோய்; தொழுநோயாளி” என்ற தலைப்பைப் பாருங்கள்.
குருமார்களிடம் உங்களைக் காட்டுங்கள்: இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் இருந்தபோது திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தார். ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த குருமார்கள் ஆலயத்தில் சேவை செய்த விஷயம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், குருமாரிடம் போய்த் தங்களைக் காட்டும்படி தான் குணப்படுத்திய தொழுநோயாளிகளிடம் சொன்னார். (மத் 8:4; மாற் 1:44) திருச்சட்டத்தின்படி, ஒரு தொழுநோயாளி குணமாகிவிட்டதை குருவானவர் உறுதிசெய்ய வேண்டியிருந்தது. குணமான தொழுநோயாளி ஆலயத்துக்குப் போய், சுத்தமான இரண்டு பறவைகளையும் தேவதாரு மரக்கட்டையையும் கருஞ்சிவப்பு துணியையும் மருவுக்கொத்தையும் காணிக்கையாகச் செலுத்த வேண்டியிருந்தது.—லேவி 14:2-32.
w08 8/1 14-15 ¶8-9
ஏன் நன்றி சொல்ல வேண்டும்?
அந்த ஒன்பது பேர் நன்றி தெரிவிக்காமல் போனபோது இயேசு கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டாரா? பதிவு தொடர்கிறது: “அப்பொழுது இயேசு: “சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக் காணோமே” என்றார்.—லூக்கா 17:17, 18.
மற்ற ஒன்பது தொழுநோயாளிகளும் பொல்லாதவர்கள் அல்ல. இயேசுமீது தாங்கள் வைத்திருந்த விசுவாசத்தை அவர்கள் வெளிப்படையாகக் காட்டினார்கள், அவருடைய அறிவுரைக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்தார்கள்; ஏன், தாங்கள் குணமானதை ஆசாரியர்களிடம் காட்டுவதற்காக எருசலேமுக்கும் போனார்களே. இயேசு இரக்கப்பட்டு செய்த உதவியைக் குறித்து அவர்களுக்கு நன்றியுணர்வு இருந்தது, ஆனால் அதை வாய்திறந்து சொல்ல தவறிவிட்டார்கள். அவர்களுடைய செயல் இயேசுவுக்கு ஏமாற்றத்தை அளித்தது. நம்மைப் பற்றியென்ன? யாராவது நமக்கு நல்லது செய்தால், அவர்களுக்கு உடனடியாக நன்றி சொல்கிறோமா? பொருத்தமான சந்தர்ப்பங்களில், ‘தேங்க்யூ கார்டு’ அனுப்புகிறோமா?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
லூ 17:10-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
ஒன்றுக்கும் உதவாத: வே.வா., “பிரயோஜனம் இல்லாத; வீணான.” இயேசு இந்த உவமையில், ‘அடிமைகளாகிய’ தன் சீஷர்கள் தங்களைத் தாங்களே வீணானவர்களாகக் கருத வேண்டுமென்று சொல்லவில்லை. இந்த வசனத்தின் சூழமைவைப் பார்க்கும்போது, அடிமைகள் தன்னடக்கத்தோடு இருப்பார்கள் என்பதைத்தான் சுட்டிக்காட்டினார். அவர்கள் தங்களுக்கு விசேஷ மதிப்போ பாராட்டோ கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்க மாட்டார்கள். இந்த வார்த்தைகள் இங்கே உயர்வு நவிற்சி அணியில் இருப்பதாகவும், “நாங்கள் எந்த விசேஷ கவனிப்பும் பெறுவதற்குத் தகுதி இல்லாத வெறும் அடிமைகள்” என்ற அர்த்தத்தைக் கொடுப்பதாகவும் சில அறிஞர்கள் சொல்கிறார்கள்.
லூ 18:8-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
இப்படிப்பட்ட விசுவாசத்தை: நே.மொ., “இந்த விசுவாசத்தை.” கிரேக்கில் ‘விசுவாசம்’ என்ற வார்த்தைக்கு முன்பு “இந்த” என்ற சுட்டிடைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால், இயேசு பொதுப்படையான அர்த்தத்தில் விசுவாசத்தைப் பற்றிச் சொல்லாமல், குறிப்பிட்ட விதமான ஒரு விசுவாசத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அதாவது, தன்னுடைய உவமையில் வரும் விதவை காட்டியதைப் போன்ற விசுவாசத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். (லூ 18:1-8) ஜெபத்துக்கு வல்லமை இருக்கிறது என்பதையும், கடவுள் தன் மக்களுக்கு நீதி செய்வார் என்பதையும் நம்புவது இந்த விசுவாசத்தில் அடங்கும். இயேசு விசுவாசத்தைப் பற்றிக் கேள்வி கேட்ட பிறகு அதற்குப் பதில் தராமல் விட்டுவிட்டார்; ஏனென்றால், தன் சீஷர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய விசுவாசத்தின் தரத்தைப் பற்றி யோசிக்க வேண்டுமென்று நினைத்தார். இயேசு தன் சீஷர்களுக்கு வரவிருந்த சோதனைகளைப் பற்றி அப்போதுதான் விளக்கியிருந்தார்; அதனால், ஜெபத்தையும் விசுவாசத்தையும் பற்றிய இந்த உவமை மிகப் பொருத்தமாக இருந்தது.—லூ 17:22-37.
ஆகஸ்ட் 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 19-20
“பத்து மினாக்கள் பற்றிய உவமையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்”
பத்து மினாவைப் பற்றிய உவமை
“அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ராஜ அதிகாரத்தைப் பெற்றுவர தூர தேசத்துக்குப் புறப்பட்டார்” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 19:12) அப்படிப்பட்ட பயணம் ரொம்பக் காலம் எடுக்கும். “அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்” என்று இயேசு தன்னைப் பற்றித்தான் குறிப்பிட்டார். அவர் ‘தூர தேசமாகிய’ பரலோகத்துக்குப் பயணம் செய்வார். அங்கே, அவருடைய தகப்பன் அவருக்கு ராஜ அதிகாரத்தைக் கொடுப்பார்.
“அரச குடும்பத்தைச் சேர்ந்த” அந்த மனிதர் புறப்படுவதற்கு முன் தன்னுடைய பத்து அடிமைகளைக் கூப்பிட்டு, ஆளுக்கு ஒரு வெள்ளி மினாவைக் கொடுத்து, “நான் வரும்வரை இவற்றை வைத்து வியாபாரம் செய்யுங்கள்” என்று சொல்கிறார். (லூக்கா 19:13) வெள்ளி மினா விலைமதிப்புள்ள பணம். ஒரு மினாவைச் சம்பாதிக்க ஒரு விவசாய கூலியாள் மூன்று மாதங்களுக்குமேல் உழைக்க வேண்டும்.
இந்த உவமையில் சொல்லப்பட்ட அடிமைகள் தாங்கள்தான் என்பதை சீஷர்கள் ஒருவேளை புரிந்துகொண்டிருக்கலாம். ஏனென்றால், இயேசு ஏற்கெனவே அவர்களை அறுவடை செய்கிறவர்களோடு ஒப்பிட்டுப் பேசியிருந்தார். (மத்தேயு 9:35-38) தானியத்தை அறுவடை செய்து சேகரிக்கும்படி இயேசு அவர்களிடம் சொல்லவில்லை. கடவுளுடைய அரசாங்கத்தில் ஆட்சி செய்வதற்குத் தகுதியுள்ள மற்ற சீஷர்களை அவர்கள் சேகரிக்க, அதாவது கூட்டிச்சேர்க்க, வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தார். அதற்காக, அவர்கள் தங்களுடைய நேரம், சக்தி, பொருள் எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும்.
பத்து மினாவைப் பற்றிய உவமை
இந்த உவமையில் சொல்லப்பட்ட அடிமைகளைப் போல, சீஷர்களும் தங்களுடைய நேரம், சக்தி, பொருள் எல்லாவற்றையும் முழுமையாகப் பயன்படுத்தி, இன்னும் அதிகமான சீஷர்களை உருவாக்கினால் இயேசு நிச்சயம் சந்தோஷப்படுவார். அப்படிச் சுறுசுறுப்பாக உழைத்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்று சீஷர்கள் நம்பிக்கையோடு இருக்கலாம். ஆனால், எல்லாருடைய சூழ்நிலையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கின்றன. ஆனால், சீஷர்களை உருவாக்குவதற்கு அவர்கள் உண்மையோடு எடுக்கிற முயற்சிகளை “ராஜ அதிகாரத்தை” பெற்றுக்கொள்ளும் இயேசு பார்ப்பார், அதற்குப் பலன் கொடுப்பார்.—மத்தேயு 28:19, 20.
பத்து மினாவைப் பற்றிய உவமை
தன் எஜமானுடைய அரசாங்கத்தின் செல்வங்களை இன்னும் அதிகமாக்க இந்த அடிமை உழைக்கவில்லை. அதனால், இந்த அடிமைக்கு நஷ்டம்தான் மிஞ்சியது. கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு ஆட்சி செய்வார் என்று அப்போஸ்தலர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்தக் கடைசி அடிமையைப் பற்றி இயேசு சொன்னதைக் கேட்ட பிறகு, தாங்களும் ஊக்கமாக உழைக்காவிட்டால் கடவுளுடைய அரசாங்கத்தில் இடம் கிடைக்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
லூ 19:43-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
கூர்முனை கொண்ட கம்பங்களால் அரண்: காராக்ஸ் என்ற கிரேக்க வார்த்தை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இங்கு மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வார்த்தையின் அர்த்தம், “ஒரு இடத்துக்கு வேலி போடுவதற்காகப் பயன்படுத்தப்படும் கூர்மையான குச்சி அல்லது கம்பம்; மரக்கம்பம்” அல்லது “கம்பங்களால் எழுப்பப்பட்ட முற்றுகைச் சுவர்.” கி.பி. 70-ல் இயேசுவின் வார்த்தைகள் நிறைவேறின. அந்த வருஷத்தில்தான், டைட்டஸின் தலைமையில் ரோமர்கள் வந்து, எருசலேமைச் சுற்றி ஒரு முற்றுகைச் சுவரை எழுப்பினார்கள். மூன்று காரணங்களுக்காக டைட்டஸ் அப்படிச் செய்தார். அதாவது, தப்பித்து ஓடாதபடி யூதர்களைத் தடுப்பதற்காகவும், அவர்களைச் சரணடைய வைப்பதற்காகவும், பட்டினி போட்டு அடிபணிய வைப்பதற்காகவும் அப்படிச் செய்தார். ரோமப் படைவீரர்கள் எருசலேமின் சுற்றுவட்டாரங்களில் இருந்த மரங்களை வெட்டி இந்த அரணை எழுப்பினார்கள்.
லூ 20:38-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
கடவுளைப் பொறுத்தவரை, இவர்கள் எல்லாரும் உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள்: பைபிள் காட்டுகிறபடி, கடவுளைவிட்டு விலகியிருக்கும் ஆட்கள் உயிரோடு இருந்தாலும், கடவுளைப் பொறுத்தவரை இறந்தவர்களாகவே இருக்கிறார்கள். (எபே 2:1; 1தீ 5:6) அதேபோல், கடவுளுக்குப் பிரியமான ஊழியர்கள் இறந்துவிட்டாலும், அவரைப் பொறுத்தவரை உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களை அவர் உயிரோடு எழுப்பப்போவது உறுதி!—ரோ 4:16, 17.
ஆகஸ்ட் 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 21-22
“உங்கள் விடுதலை நெருங்கிவருகிறது”
கடவுளுடைய அரசாங்கம் எதிரிகளை ஒழித்துக்கட்டுகிறது
9 வானத்தில் நடக்கும் அற்புதமான நிகழ்வுகள். “சூரியன் இருண்டுவிடும், சந்திரன் ஒளி கொடுக்காது, வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழும்” என்று இயேசு முன்னறிவித்தார். இதன் அர்த்தம் என்ன? மக்கள் ஆன்மீக ஒளியைத் தேடி, அதாவது வழிநடத்துதலைத் தேடி, மதத் தலைவர்களிடம் போக மாட்டார்கள். ஏனென்றால், மதங்களின் அழிவுக்குப் பிறகு யாரும் அவர்களை மதத் தலைவர்களாகக் கருத மாட்டார்கள். உண்மையிலேயே வானத்தில் அற்புதமான நிகழ்வுகள் நடக்கும் என்று இயேசு குறிப்பிட்டாரா? ஒருவேளை அவர் அதையும் அர்த்தப்படுத்தியிருக்கலாம். (ஏசா. 13:9-11; யோவே. 2:1, 30, 31) அந்த அற்புதமான நிகழ்வுகளைப் பார்த்து மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள், “என்ன செய்வதென்று தெரியாமல் . . . தத்தளிப்பார்கள்.” (லூக். 21:25; செப். 1:17) “என்ன நடக்குமோ என்ற பயத்தில்” கடவுளுடைய அரசாங்கத்தின் எதிரிகளுக்கு “தலைசுற்றும்.” அவர்கள் ‘ராஜாக்களாக’ இருந்தாலும் சரி, ‘அடிமைகளாக’ இருந்தாலும் சரி, பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடுவார்கள். ஆனாலும், மறைந்துகொள்ள பாதுகாப்பான எந்த இடமும் அவர்களுக்குக் கிடைக்காது. நம் ராஜாவின் கோபத்திலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது.—லூக். 21:26; 23:30; வெளி. 6:15-17.
சகோதர அன்பைக் காட்ட தீர்மானமாக இருங்கள்
17 “மிகுந்த தைரியத்துடன்” இருங்கள். (எபிரெயர் 13:6-ஐ வாசியுங்கள்.) யெகோவாமீது முழு நம்பிக்கை வைக்கும்போது நமக்கு எப்படிப்பட்ட சோதனை வந்தாலும் சோர்ந்துபோக மாட்டோம், தைரியமாக இருப்போம். இப்படி தைரியமாக இருந்தால் நம் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்த முடியும், அவர்களுக்கு ஆறுதலாக இருக்க முடியும். இந்த விதத்திலும் நம்மால் சகோதர அன்பைக் காட்ட முடியும். (1 தெ. 5:14, 15) மிகுந்த உபத்திரவம் சமயத்திலும் நம்மால் தைரியமாக இருக்க முடியும். ஏனென்றால், விடுதலை நெருங்கிவிட்டது என்று நமக்குத் தெரியும்.—லூக். 21:25-28.
உங்களுடைய மீட்பு நெருங்கிவிட்டது!
13 வெள்ளாடு போன்ற மக்கள் தாங்கள் அழியப்போவதைத் தெரிந்துகொள்ளும்போது என்ன செய்வார்கள்? அவர்கள் “மாரடித்துப் புலம்புவார்கள்.” (மத். 24:30) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் என்ன செய்வார்கள்? “இவையெல்லாம் நடக்க ஆரம்பிக்கும்போது நீங்கள் நேராக நிமிர்ந்து நின்று, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; ஏனென்றால், உங்கள் விடுதலை நெருங்கிவருகிறது” என்று இயேசு சொன்னது போல் செய்வார்கள்.—லூக். 21:28.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
லூ 21:33-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
வானமும் பூமியும் ஒழிந்துபோகும்: வானமும் பூமியும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று மற்ற வசனங்கள் காட்டுகின்றன. (ஆதி 9:16; சங் 104:5; பிர 1:4) அதனால், இயேசு இங்கே உயர்வு நவிற்சி அணியைப் பயன்படுத்தியதாகப் புரிந்துகொள்ளலாம். நடக்கவே முடியாத ஒன்று நடந்தாலும், அதாவது வானமும் பூமியும் ஒழிந்தேபோனாலும், இயேசுவின் வார்த்தைகள் கண்டிப்பாக நிறைவேறும். (மத் 5:18-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) அதேசமயத்தில், இங்கே வானமும் பூமியும் அடையாள அர்த்தமுடைய வானத்தையும் பூமியையும்கூட குறிக்கலாம். அவற்றை, “முந்தின வானமும் முந்தின பூமியும்” என்று வெளி 21:1 சொல்கிறது.
என் வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்துபோகாது: வே.வா., “என் வார்த்தைகள் கண்டிப்பாக ஒழிந்துபோகாது.” கிரேக்கில், ‘நடக்காது’ என்ற அர்த்தத்தைத் தரும் இரண்டு வார்த்தைகள் வினைச்சொல்லோடு பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை, ஒரு விஷயம் நிச்சயமாகவே நடக்காது என்பதை வலியுறுத்துகின்றன. அதாவது, இயேசுவின் வார்த்தைகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை ஆணித்தரமாகக் காட்டுகின்றன.
‘ராஜாக்களாகவும் குருமார்களாகவும்’ இருப்பீர்கள்
15 இயேசு புதிய ஒப்பந்தத்தைப் பற்றிச் சொன்ன பிறகு, அப்போஸ்தலர்களோடு அவர் வேறொரு ஒப்பந்தம் செய்தார். அதுதான் அரசாங்கத்திற்கான ஒப்பந்தம். (லூக்கா 22:28-30-ஐ வாசியுங்கள்.) இதுவரை நாம் பார்த்த ஒப்பந்தங்களை யெகோவா செய்தார். ஆனால், இந்த ஒப்பந்தத்தை இயேசு தம்மோடு ஆட்சி செய்யப் போகிறவர்களோடு செய்தார். “என் தகப்பன் என்னோடு ஒப்பந்தம் செய்திருப்பது போலவே நானும் உங்களோடு ஓர் ஒப்பந்தம் செய்கிறேன்” என்று அவர்களிடம் இயேசு சொன்னார். “மெல்கிசேதேக்கைப் போலவே நீ என்றென்றும் தலைமைக் குருவாக இருக்கிறாய்” என்று யெகோவா இயேசுவோடு செய்த ஒப்பந்தத்தைதான் ‘தகப்பன் என்னோடு செய்த ஒப்பந்தம்’ என்று இயேசு குறிப்பிட்டார்.—எபி. 5:5, 6.
16 இயேசுவின் 11 அப்போஸ்தலர்களும் ‘சோதனைகளில் அவரோடு நிலைத்திருந்தார்கள்.’ இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருப்பார்கள் என்று அரசாங்கத்திற்கான ஒப்பந்தம் அவர்களுக்கு உறுதிப்படுத்தியது. ஆனால், இந்த அருமையான வாய்ப்பு அந்த 11 பேருக்கு மட்டுமல்ல இன்னும் நிறைய பேருக்கும் கிடைத்தது. இயேசு பரலோகத்திற்குப் போன பிறகு அப்போஸ்தலன் யோவானிடம் இப்படிச் சொன்னார்: “நான் ஜெயித்து என் தகப்பனின் சிம்மாசனத்தில் அவரோடு அமர்ந்ததுபோல், ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு என் சிம்மாசனத்தில் என்னோடு அமரும்படி அருள்செய்வேன்.” (வெளி. 3:21) அப்படியென்றால், அரசாங்கத்திற்கான ஒப்பந்தம் பரலோக நம்பிக்கையுடைய 1,44,000 பேரோடு செய்யப்பட்டது. (வெளி. 5:9, 10; 7:4) இந்த ஒப்பந்தத்தின் மூலம், இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்வதற்கு அவர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை கிடைக்கும். அரச குடும்பத்தில் வந்த பெண் ஒரு நாட்டின் ராஜாவைத் திருமணம் செய்த பிறகு, அவரோடு சேர்ந்து அந்த நாட்டை ஆளும் உரிமை பெறுவதைப் போல் இவர்களும் உரிமை பெறுகிறார்கள். அதனால்தான், பரலோக நம்பிக்கையுடையவர்களை ‘மணமகள்’ என்றும் “கற்புள்ள கன்னிகை” என்றும் பைபிள் சொல்கிறது. அவர்களுக்கும் கிறிஸ்துவுக்கும் அடையாள அர்த்தத்தில் திருமணம் நடக்கப்போவதாகவும் சொல்கிறது.—வெளி. 19:7, 8; 21:9; 2 கொ. 11:2.
ஆகஸ்ட் 27–செப்டம்பர் 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 23-24
“மற்றவர்களை மன்னிக்கத் தயாராக இருங்கள்”
‘கிறிஸ்துவின் அன்பை அறிந்துகொள்ளுதல்’
16 மற்றொரு விதத்தில் இயேசு தமது பிதாவின் அன்பை பூரணமாக பிரதிபலித்தார், அதாவது ‘மன்னிக்க தயாராயிருந்தார்.’ (சங்கீதம் 86:5) கழுமரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சமயத்திலும்கூட இந்தக் குணத்தை தெளிவாக காட்டினார். கால்களிலும் கைகளிலும் ஆணிகள் அடிக்கப்பட்டு, அவமானமிக்க மரணத்திற்கு ஆளாக்கப்பட்டபோது, இயேசு என்ன சொன்னார்? தமக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கியவர்களை தண்டிக்கும்படி யெகோவாவை கூப்பிட்டாரா? இல்லை, அதற்கு நேர்மாறானதையே செய்தார்; “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என குறிப்பிட்டார்.—லூக்கா 23:34.
மோசமான பாவங்களை கடவுள் மன்னிக்கிறாரா?
பாவத்தை மட்டுமல்ல, அதைச் செய்தவரின் மனநிலையையும் யெகோவா பார்க்கிறார். (ஏசாயா 1:16-19) இயேசுவுக்கு அருகில் கழுமரத்தில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களுடைய சூழ்நிலையைச் சற்று சிந்திப்போம். உண்மையில், இருவருமே மோசமான குற்றங்களைச் செய்திருந்தார்கள். அவர்களில் ஒருவன், “நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ [இயேசுவோ] தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே” என்று சொன்னதன்மூலம் தன் குற்றத்தை மற்றவனிடம் ஒப்புக்கொண்டான். அவன் இயேசுவைப்பற்றி ஏதோ கொஞ்சம் அறிந்திருந்தான் என்பது அவனுடைய வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. ஒருவேளை, அந்த அறிவு அவனுடைய மனப்பான்மை மாறுவதற்கு வழிவகுத்திருக்கலாம். “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று அடுத்து அவன் சொன்னதிலிருந்து அவன் மனப்பான்மை மாறியிருந்தது தெரிகிறது. அவனுடைய உள்ளப்பூர்வமான வேண்டுகோளுக்கு கிறிஸ்து என்ன பதில் அளித்தார்? “மெய்யாகவே இன்று நான் உனக்குச் சொல்கிறேன், நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” என்று அவர் சொன்னார்.—லூக்கா 23:41-43; NW.
இந்த வார்த்தைகளை, மரண தண்டனை பெறத் தகுந்தவனென ஒப்புக்கொண்ட அந்த மனிதனிடம் இயேசு சொன்னார். இதைச் சற்று எண்ணிப் பாருங்கள்: கடைசி நேரத்தில், ஒரு மனிதராக இயேசு சொன்னவற்றில் அவருடைய இரக்கம் வெளிப்பட்ட இந்த வார்த்தைகளும் அடங்கும். இது மனதுக்கு எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது! எனவே, மேற்குறிப்பிடப்பட்ட விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, கடந்த காலத்தில் எப்படி வாழ்ந்திருந்தாலும் இப்போது உண்மையிலேயே மனம் வருந்துகிற அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவும் அவருடைய தகப்பனான யெகோவாவும் இரக்கம் காட்டுவார்கள் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்.—ரோமர் 4:7.
‘இந்த அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை’
17 இயேசுவின் மன்னிக்கும் குணத்திற்கு இதைவிட சிறந்த உதாரணம் அப்போஸ்தலன் பேதுருவை அவர் நடத்திய விதமாகும். இயேசுவை பேதுரு மிகவும் நேசித்தார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நிசான் 14 அன்று, அதாவது இயேசுவின் மானிட வாழ்க்கையின் கடைசி இரவு அன்று, பேதுரு அவரிடம் இவ்வாறு கூறினார்: “ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர ஆயத்தமாயிருக்கிறேன்.” ஆனால் சில மணிநேரத்திற்குப் பிறகு, இயேசுவை தெரியவே தெரியாது என்றுகூட சொல்லி மூன்று தடவை மறுதலித்தார்! பேதுரு மூன்றாவது தடவை மறுதலித்தபோது என்ன நடந்தது என்பதை பைபிள் நமக்கு சொல்கிறது: “கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார்.” தான் மிகப் பெரிய பாவத்தை செய்துவிட்டதை உணர்ந்த பேதுரு ‘வெளியே போய், மனங்கசந்து அழுதார்.’ அன்றைய தினம் இயேசு இறந்தபோது, ‘என்னுடைய கர்த்தர் என்னை மன்னித்தாரா?’ என இந்த அப்போஸ்தலன் யோசித்திருக்கலாம்.—லூக்கா 22:33, 61, 62.
18 பதிலுக்காக பேதுரு நெடுநாள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நிசான் 16 காலையில் இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார், அன்றே பேதுருவை தனிப்பட்ட விதமாக சந்தித்தார். (லூக்கா 24:34; 1 கொரிந்தியர் 15:4-8) தன்னை அப்பட்டமாக மறுதலித்த இந்த அப்போஸ்தலன் மீது இயேசு ஏன் விசேஷ கவனம் செலுத்தினார்? இன்னும் அவரை நேசிப்பதையும் உயர்வாக மதிப்பதையும் மனந்திரும்பிய பேதுருவுக்கு உறுதியளிப்பதற்கு இயேசு விரும்பியிருக்கலாம். அதேசமயத்தில், பேதுருவுக்கு உறுதியளிக்க இயேசு இன்னும் அதிகத்தை செய்தார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
லூ 23:31-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
மரம் பச்சையாக இருக்கும்போதே . . . மரம் பட்டுப்போன பின்பு: இயேசு அநேகமாக யூத தேசத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அது பட்டுப்போகவிருந்த மரம்போல் இருந்தது. இயேசுவும், அவரில் நம்பிக்கை வைத்த நிறைய பேரும் அந்தத் தேசத்தில் இருந்ததால் அதுவரை அது முழுமையாகப் பட்டுப்போகாமல் இருந்தது. ஆனாலும், சீக்கிரத்தில் இயேசு கொலை செய்யப்படவிருந்தார். அதோடு, உண்மையுள்ள யூதர்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆன்மீக இஸ்ரவேலின் பாகமாக ஆகவிருந்தார்கள். (ரோ 2:28, 29; கலா 6:16) அப்போது, நிஜமான இஸ்ரவேல் தேசம் பட்டுப்போன மரம்போல் ஆகியிருக்கும்; அதாவது, ஆன்மீக அர்த்தத்தில் அழிந்துபோயிருக்கும்.—மத் 21:43.
nwtsty மீடியா
ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு
4.5 அங்குல (11.5 செ.மீ.) நீளமுள்ள இரும்பு ஆணியால் துளைக்கப்பட்ட ஒரு மனித குதிங்கால் எலும்பு, 1968-ல் வட எருசலேமில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது. பிற்பாடு, அதேபோல் செய்யப்பட்ட ஒரு செயற்கை குதிங்கால் எலும்பைத்தான் இந்தப் படத்தில் பார்க்கிறோம். 1968-ல் கண்டெடுக்கப்பட்ட குதிங்கால் எலும்பு ரோமர்களின் காலத்தைச் சேர்ந்தது. ஆட்களை மரக் கம்பத்தில் அறைந்து கொல்ல ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு அந்தப் புதைபொருள் கண்டுபிடிப்பு ஒரு அத்தாட்சி. ஒருவேளை, இயேசு கிறிஸ்துவை மரக் கம்பத்தில் அறைவதற்காக ரோம வீரர்கள் அதுபோன்ற ஆணிகளைப் பயன்படுத்தியிருக்கலாம். அந்தக் குதிங்கால் எலும்பு, ஆஸ்யூரி என்ற ஒரு கல் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டது; அழுகிப்போன சடலத்தில் இருந்த உலர்ந்த எலும்புகள் இந்தப் பெட்டியில் வைக்கப்பட்டன. மரக் கம்பத்தில் கொல்லப்பட்டவர்கள் அடக்கமும் செய்யப்பட்டிருக்கலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.