உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwbr18 அக்டோபர் பக். 1-7
  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்—பயிற்சி புத்தகம் (2018)
  • துணை தலைப்புகள்
  • அக்டோபர் 1-7
  • அக்டோபர் 8-14
  • அக்டோபர் 15-21
  • அக்டோபர் 22-28
  • அக்டோபர் 29–நவம்பர் 4
வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்—பயிற்சி புத்தகம் (2018)
mwbr18 அக்டோபர் பக். 1-7

வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்

அக்டோபர் 1-7

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 9-10

“தன்னுடைய ஆடுகளை இயேசு கவனித்துக்கொள்கிறார்”

யோவா 10:1-க்கான nwtsty மீடியா

ஆட்டுத்தொழுவம்

திருடர்களிடமிருந்தும் கொடிய மிருகங்களிடமிருந்தும் பாதுகாப்பதற்காக ஆடுகள் அடைத்து வைக்கப்பட்ட இடங்கள்தான் தொழுவங்கள். ராத்திரி நேரங்களில் மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளைத் தொழுவங்களில் பத்திரமாக அடைத்து வைத்தார்கள். பைபிள் காலங்களில், தொழுவங்களுக்குக் கூரை இருக்கவில்லை. அவை வித்தியாசமான வடிவங்களிலும் அளவுகளிலும் இருந்தன. பொதுவாக, அந்தத் தொழுவங்களுக்குக் கற்சுவர்களும், ஒரேவொரு கதவும் இருந்தன. (எண் 32:16; 1சா 24:3; செப் 2:6; அடிக்குறிப்புகள்) தொழுவத்துக்கு “கதவு” இருந்ததாகவும், “காவற்காரன்” இருந்ததாகவும் யோவான் எழுதியிருக்கிறார். (யோவா 10:1, 3) அன்று பொது தொழுவங்களும் இருந்தன; ராத்திரியில் நிறைய பேருடைய மந்தைகள் அங்கே அடைத்து வைக்கப்பட்டன. அவற்றைக் காவற்காரன் காவல்காப்பது வழக்கமாக இருந்தது. காலையில், மேய்ப்பர்களுக்காக அவன் தொழுவத்தின் கதவைத் திறந்துவிடுவான். ஒவ்வொரு மேய்ப்பரும் குரல் கொடுக்கும்போது, அவரவருடைய ஆடுகள் அவரவருடைய குரலை அடையாளம் கண்டுகொண்டு, வெளியே வரும். (யோவா 10:3-5) இயேசு தன் சீஷர்கள்மேல் வைத்திருந்த அக்கறையைப் பற்றிச் சொல்லும்போது இந்த வழக்கத்தைத்தான் உவமையாகப் பயன்படுத்தினார்.—யோவா 10:7-14.

w11 5/15 7-8 ¶5

கிறிஸ்தவக் குடும்பங்கள் ‘விழிப்புடனிருக்க’...

5 பொதுவாக, ஒரு மேய்ப்பனுக்கும் மந்தைக்கும் இடையே பந்தம் ஏற்படுவதற்கு அறிவும் நம்பிக்கையுமே அடிப்படை. அந்த மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளை நன்கு அறிந்திருக்கிறார், ஆடுகளும் அவரை அறிந்திருப்பதோடு அவர்மேல் நம்பிக்கை வைக்கின்றன. அவை அவருடைய குரலை அடையாளம் கண்டுகொண்டு அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. “நான் என்னுடைய ஆடுகளை அறிந்திருக்கிறேன், என்னுடைய ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன” என்று இயேசு சொன்னார். சபையிலுள்ளவர்களைப் பற்றி அவர் மேலோட்டமாக மட்டுமே அறிந்திருக்கவில்லை. ‘அறிந்திருப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தை “அன்னியோன்னியமாக, மிக நன்றாக அறிந்திருப்பதை” குறிக்கிறது. ஆம், நல்ல மேய்ப்பன் தம்முடைய ஆடுகள் ஒவ்வொன்றையும் மிக நன்றாக அறிந்திருக்கிறார். அவை ஒவ்வொன்றின் தேவைகளை, பலங்களை, பலவீனங்களை அறிந்திருக்கிறார். தம் ஆடுகளைப் பற்றிய எந்தவொரு விஷயமும் இந்த மேய்ப்பனின் கண்ணைத் தப்பாது. ஆடுகளும் மேய்ப்பனை நன்கு அறிந்து, அவருடைய வழிநடத்துதலில் நம்பிக்கை வைக்கின்றன.

cf 125 ¶17

‘உவமைகள் இல்லாமல் அவர் பேசியதே இல்லை’

17 ஜார்ஜ் ஏ. ஸ்மித் என்பவர் தான் நேரடியாக கவனித்த சம்பவத்தை புனித தேசத்தின் புவியியல் என்ற ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு எழுதினார்: “சில சமயம் மதியவேளை யூதேயாவில் உள்ள கிணறுகளில் ஒன்றின் அருகே நாங்கள் ஓய்வெடுப்போம். அங்கு மூன்று அல்லது நான்கு மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளோடு வருவார்கள். அப்போது, எல்லாருடைய ஆடுகளும் ஒன்றாக கலந்துவிடும்; எப்படி அந்த மேய்ப்பர்கள் தங்களுடைய ஆடுகளைப் பிரித்து அழைத்துச் செல்வார்கள் என்று நாங்கள் யோசித்தோம். ஆனால், அவை தண்ணீர் குடித்து, விளையாடி முடித்த பின்பு மேய்ப்பர்கள் ஒவ்வொருவரும் பள்ளத்தாக்கின் வெவ்வேறு திசைகளில் போய் நின்றுகொண்டு, ஒவ்வொருவரும் பிரத்தியேகக் குரல் கொடுப்பார்கள்; அப்போது அந்தந்த மந்தையைச் சேர்ந்த ஆடுகள் கூட்டத்திலிருந்து பிரிந்து அதனதன் மேய்ப்பனிடம் போய்ச் சேர்ந்துகொள்ளும்; மந்தைகள் எப்படி வந்தனவோ அப்படியே ஒழுங்காகப் பிரிந்து சென்றுவிடும்.” தம் குறிப்பை வலியுறுத்த இதைவிட சிறந்த உதாரணத்தை இயேசு பயன்படுத்தியிருக்க முடியாது! ஆம், அவருடைய போதனைகளை நாம் அறிந்துகொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படிந்தால்... அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றினால்... ‘நல்ல மேய்ப்பனின்’ கவனிப்பின்கீழ் வருவோம்.

யோவா 10:16-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

கொண்டுவர: வே.வா., “வழிநடத்த.” இதற்கான கிரேக்க வினைச்சொல், ஏகோ. அந்தந்த வசனத்தின் சூழமைவைப் பொறுத்து, “(உள்ளே) கொண்டுவர” அல்லது “வழிநடத்த” என்ற அர்த்தத்தை அது தரும். இதனோடு சம்பந்தப்பட்ட ஒரு கிரேக்க வார்த்தையான சினேகோ, சுமார் கி.பி. 200-ஆம் வருஷத்தைச் சேர்ந்த ஒரு கிரேக்க கையெழுத்துப் பிரதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது “கூட்டிச்சேர்க்க” என்று அடிக்கடி மொழிபெயர்க்கப்படுகிறது. இயேசு ஒரு நல்ல மேய்ப்பராக, “இந்தத் தொழுவத்தை” சேர்ந்த ஆடுகளையும் (லூ 12:32-ல் சிறுமந்தை என்று அழைக்கப்படுகின்றன), ‘வேறே ஆடுகளையும்’ கூட்டிச்சேர்க்கிறார், வழிநடத்துகிறார், பாதுகாக்கிறார், அவற்றுக்கு உணவளிக்கிறார். அவை “ஒரே மேய்ப்பரின்” கீழ் ‘ஒரே மந்தையாக’ ஆகின்றன. இயேசுவின் சீஷர்கள் அனுபவிக்கும் ஒற்றுமையை இந்தச் சொல்லோவியம் வலியுறுத்திக் காட்டுகிறது.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

யோவா 9:38-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

அவர் முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினான்: வே.வா., “அவர் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து; அவருக்கு மரியாதை செலுத்தி.” இதற்கான கிரேக்க வினைச்சொல், ப்ரோஸ்கினீயோ. ஒரு தெய்வத்தை வணங்குவது சம்பந்தமாகப் பயன்படுத்தப்படும்போது “வணங்க” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (மத் 4:10; லூ 4:8) ஆனால் இந்த வசனத்தில், அற்புதமாகக் குணமாக்கப்பட்ட அந்த மனிதன் (பிறவியிலேயே கண் தெரியாதவனாக இருந்தவன்), இயேசுவை ஒரு தெய்வமாக நினைக்கவில்லை. அவர் கடவுளுடைய பிரதிநிதி என்பதைப் புரிந்துகொண்டுதான் அவர் முன்னால் தலைவணங்கினான். இயேசு தெய்வீக அதிகாரம் பெற்ற மேசியா என்றும், முன்னறிவிக்கப்பட்ட “மனிதகுமாரன்” என்றும் அவன் நம்பினான். (யோவா 9:35) எபிரெய வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் நபர்கள் தீர்க்கதரிசிகளையோ ராஜாக்களையோ கடவுளுடைய மற்ற பிரதிநிதிகளையோ சந்தித்தபோது மரியாதைக்காக அவர்கள் முன்னால் தலைவணங்கினார்கள். (1சா 25:23, 24; 2சா 14:4-7; 1ரா 1:16; 2ரா 4:36, 37) அதே காரணத்துக்காகத்தான் இந்த மனிதனும் இயேசுவுக்கு முன்னால் தலைவணங்கியதாகத் தெரிகிறது. நிறைய சந்தர்ப்பங்களில், தெய்வீக வெளிப்படுத்துதலுக்காக அல்லது தெய்வீகக் கருணைக்காக நன்றி காட்டும் விதத்தில் ஆட்கள் இயேசுவுக்கு முன்னால் தலைவணங்கினார்கள்.

யோவா 10:22-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

அர்ப்பணப் பண்டிகை: இந்தப் பண்டிகையின் எபிரெயப் பெயர் ஹனுக்கா (ச்சனுக்கா). இதன் அர்த்தம், “திறப்பு விழா; அர்ப்பணம்.” கிஸ்லே மாதம் 25-ஆம் தேதி ஆரம்பித்து மொத்தம் எட்டு நாட்களுக்கு இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டது. வருஷத்திலேயே மிகவும் குறுகிய பகலைக் கொண்ட நாள் வரவிருந்த சமயம் அது. (இணைப்பு B15-ஐப் பாருங்கள்.) கி.மு. 165-ல் எருசலேமின் ஆலயம் மறுபடியும் அர்ப்பணிக்கப்பட்டதன் நினைவாக இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்குமுன், சீரியா நாட்டு ராஜாவான நான்காம் அந்தியோக்கஸ் எப்பிபானஸ், யூதர்களின் கடவுளாகிய யெகோவாமேல் வெறுப்பைக் காட்டுவதற்காக அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தியிருந்தான். உதாரணத்துக்கு, தினமும் தகன பலி செலுத்தப்பட்டுவந்த பெரிய பலிபீடத்தின் மேல் அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். கி.மு. 168-ஆம் வருஷம், கிஸ்லே மாதம், 25-ஆம் தேதியில், யெகோவாவின் ஆலயத்தை முற்றிலும் தீட்டுப்படுத்துவதற்காக அந்தியோக்கஸ் அந்தப் பலிபீடத்தின் மேல் பன்றியைப் பலி செலுத்தினான்; அதோடு, அதன் இறைச்சியை வேக வைத்து, அந்தத் தண்ணீரை ஆலயத்தின் எல்லா பகுதிகளிலும் தெளிப்பதற்கு ஏற்பாடு செய்தான். பிறகு, ஆலயத்தின் கதவுகளைச் சுட்டெரித்து, குருமார்களின் அறைகளை இடித்துப்போட்டான். அதோடு, தங்கத்தாலான பலிபீடத்தையும் படையல் ரொட்டிகளுக்கான மேஜையையும் தங்கக் குத்துவிளக்கையும் சூறையாடினான். அதன்பின், யெகோவாவின் ஆலயத்தை ஒலிம்பஸ் மலையின் தெய்வமான சீயுசுக்கு அர்ப்பணித்தான். இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, அந்த நகரமும் ஆலயமும் மறுபடியுமாக யூதர்களின் கைக்கு வந்தது; யூதாஸ் மக்கபேயஸ் அவற்றைக் கைப்பற்றினார். ஆலயம் சுத்திகரிக்கப்பட்டது. கி.மு. 165-ஆம் வருஷம், கிஸ்லே மாதம், 25-ஆம் தேதி, அதாவது சீயுஸ் தெய்வத்துக்கு அந்தியோக்கஸ் அருவருப்பான பலியைச் செலுத்தி சரியாக மூன்று வருஷங்களுக்குப் பிறகு, ஆலயம் மறுபடியும் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதன்பின், பழையபடி அங்கே யெகோவாவுக்குத் தினமும் தகன பலிகள் செலுத்தப்பட்டன. யூதாஸ் மக்கபேயசுக்கு யெகோவாதான் வெற்றி தந்தார் என்றோ, ஆலயத்தைப் புதுப்பிக்க யெகோவாதான் அவரை வழிநடத்தினார் என்றோ பைபிள் எங்கும் நேரடியாகச் சொல்வதில்லை. ஆனால், யெகோவா தன்னுடைய வணக்கம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களைச் செய்ய மற்ற தேசங்களைச் சேர்ந்த ஆட்களைக்கூட பயன்படுத்தியிருந்தார்; உதாரணத்துக்கு, பெர்சிய ராஜா கோரேசைப் பயன்படுத்தியிருந்தார். (ஏசா 45:1) அப்படியென்றால், யெகோவா தன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு, தனக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த மக்களில் ஒருவரைப் பயன்படுத்தியிருப்பார் என்ற முடிவுக்கு நாம் வருவது நியாயமானதுதான். அதோடு, மேசியாவையும் அவருடைய ஊழியத்தையும் அவருடைய பலியையும் பற்றிய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதற்குக் கடவுளுடைய ஆலயம் நிலைத்திருக்க வேண்டியிருந்ததை வசனங்கள் காட்டுகின்றன. அங்கே உண்மை வழிபாடு தொடர்ந்து நடக்க வேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, மேசியா மிக மதிப்புள்ள தன் உயிரை மனிதர்களுக்காகப் பலி செலுத்தும்வரை லேவியர்கள் ஆலயத்தில் மிருக பலிகளைச் செலுத்த வேண்டியிருந்தது. (தானி 9:27; யோவா 2:17; எபி 9:11-14) அர்ப்பணப் பண்டிகையைக் கொண்டாடும்படி கிறிஸ்துவின் சீஷர்களுக்குக் கட்டளை கொடுக்கப்படவில்லை. (கொலோ 2:16, 17) ஆனாலும், அதைக் கொண்டாடுவதை இயேசுவோ அவருடைய சீஷர்களோ கண்டனம் செய்ததாக எந்தப் பதிவும் இல்லை.

அக்டோபர் 8-14

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 11-12

“இயேசுவைப் போலவே கரிசனை காட்டுங்கள்”

யோவா 11:24, 25-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்

அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்: கடைசி நாளில் நடக்கப்போகும் உயிர்த்தெழுதலைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்ததாக மார்த்தாள் நினைத்தாள். உயிர்த்தெழுதல் நடக்கும் என்பதில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ஆனால், அவளுடைய காலத்தில் இருந்த மதத் தலைவர்களான சதுசேயர்கள் அதை நம்பவில்லை; கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட வேதாகமத்தில் உயிர்த்தெழுதலைப் பற்றித் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தும் அவர்கள் அதை நம்பவில்லை. (தானி 12:13; மாற் 12:18) பரிசேயர்களோ, அழியாத ஆத்துமா என்ற ஒன்று இருப்பதாக நம்பினார்கள். ஆனால், இயேசு உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றித்தான் கற்றுத்தந்தார் என்பது மார்த்தாளுக்குத் தெரிந்திருந்தது; இயேசு ஏற்கெனவே சிலரை உயிரோடு எழுப்பியிருந்ததும் அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன; அவ்வளவு நாட்களுக்குப் பிறகு ஒருவரை இயேசு உயிரோடு எழுப்பியதாக அதுவரை அவள் கேள்விப்பட்டதில்லை.

நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்: இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும், இறந்துபோன மனிதர்கள் மறுபடியும் உயிர்பெறுவதற்கு வழியைத் திறந்து வைத்தன. இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு, இறந்துபோன மனிதர்களை உயிரோடு எழுப்புவதற்கு மட்டுமல்லாமல், அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வைக் கொடுப்பதற்கும் யெகோவா அவருக்கு அதிகாரம் தந்தார். வெளி 1:17, 18-ல், ‘உயிருள்ளவர் நான்தான்’ என்றும், “மரணத்தின் சாவியும் கல்லறையின் சாவியும் என்னிடம் இருக்கின்றன” என்றும் இயேசு சொல்லியிருக்கிறார். அதனால், உயிருள்ளவர்களுக்கும் சரி, இறந்தவர்களுக்கும் சரி, இயேசு நம்பிக்கையாக இருக்கிறார். கல்லறையில் இருப்பவர்களை உயிரோடு எழுப்பப்போவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். அப்படி உயிரோடு எழுப்பப்படுகிறவர்கள், பரலோகத்தில் அவரோடு சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள் அல்லது அவருடைய பரலோக அரசாங்கத்தின் குடிமக்களாகப் புதிய பூமியில் வாழ்வார்கள்.—யோவா 5:28, 29; 2பே 3:13.

யோவா 11:33-35-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்

அழுவதையும்: இதற்கான கிரேக்க வார்த்தை, பெரும்பாலும் சத்தமாக அழுவதைக் குறிக்கிறது. எருசலேமுக்கு வரவிருந்த அழிவைப் பற்றி முன்னறிவித்தபோது இயேசு அழுததாகச் சொல்லப்படும் பதிவில் இதே வினைச்சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.—லூ 19:41.

உள்ளம்: கிரேக்கில், நியூமா. இந்த வசனத்தில், ஏதோவொரு விஷயத்தைச் சொல்லவோ செய்யவோ ஒருவருடைய இதயத்தில் ஏற்படும் தூண்டுதலைக் குறிக்கிறது.—சொல் பட்டியலில், “ரூவக்; நியூமா” என்ற தலைப்பைப் பாருங்கள்.

குமுறினார், மனம் கலங்கினார்: இதற்கான இரண்டு கிரேக்க வார்த்தைகளும் சேர்த்துக் கொடுக்கப்பட்டிருப்பது, இந்தச் சந்தர்ப்பத்தில் இயேசுவின் உணர்ச்சிகள் எந்தளவுக்கு உள்ளத்தின் அடிஆழத்திலிருந்து பொங்கின என்பதைக் காட்டுகிறது. “குமுறினார்” (எம்ப்ரிமாயோமாய்) என்று இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொல், உணர்ச்சி பெருக்கெடுப்பதைப் பொதுவாகக் குறிக்கும். ஆனால் இந்த வசனத்தில், இயேசுவின் மனம் மிகவும் உருகியதால் அவர் குமுறினார் என்பதை அது குறிக்கிறது. “மனம் கலங்கினார்” என்பதற்கான கிரேக்க வார்த்தையின் (டாராஸோ) நேரடி அர்த்தம், கொந்தளிப்பு. இந்த வசனத்தில் அது “உள்ளுக்குள் ஏற்படும் சலனம்; கடும் வலி; பயங்கர வேதனை” ஆகியவற்றைக் குறிப்பதாக ஒரு அறிஞர் சொல்கிறார். யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்பதை நினைத்தபோது இயேசு எப்படி உணர்ந்தார் என்று விவரிப்பதற்கு இதே வினைச்சொல்தான் யோவா 13:21-ல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணீர்விட்டார்: இதற்கான கிரேக்க வார்த்தை, டாக்கிரியோ. இது, லூ 7:38; அப் 20:19, 31; வெளி 7:17; 21:4 போன்ற வசனங்களில் ‘கண்ணீர்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க பெயர்ச்சொல்லின் வினைவடிவம். இந்த வினைச்சொல், சத்தமாக அழுவதை அல்ல, ஆனால் கண்ணீர் சிந்துவதை வலியுறுத்துவதாகத் தெரிகிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், இந்தக் கிரேக்க வினைச்சொல் இங்கு மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மரியாளும் யூதர்களும் அழுததைப் பற்றிச் சொல்லும்போது யோவா 11:33 வேறொரு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறது. லாசருவை உயிரோடு எழுப்பப்போவதைப் பற்றி இயேசுவுக்கு முன்பே தெரியும். ஆனால், அவருடைய அன்பான நண்பர்கள் துக்கத்தில் தவித்ததைப் பார்த்தபோது அவருடைய மனம் துடித்தது. தன் நண்பர்கள்மேல் அளவுகடந்த அன்பும் கரிசனையும் வைத்திருந்ததால், எல்லாருக்கும் முன்பாக அவர் கண்ணீர்விட்டார். அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுப்பவர்கள்மேல் இயேசு அனுதாபம் காட்டுகிறார் என்பதை இந்தப் பதிவிலிருந்து தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

யோவா 11:49-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

தலைமைக் குருவாகவும்: இஸ்ரவேல் ஒரு சுதந்திர தேசமாக இருந்தபோது, தலைமைக் குரு தன் வாழ்நாள் முழுவதும் குருத்துவச் சேவை செய்தார். (எண் 35:25) ஆனால், ரோமர்கள் இஸ்ரவேலைக் கைப்பற்றிய பிறகு, அவர்கள் நியமித்த ஆட்சியாளர்களுக்கு தலைமைக் குருவை நியமிக்கவும் நீக்கவும் அதிகாரம் இருந்தது. (சொல் பட்டியலில், “தலைமைக் குரு” என்ற தலைப்பைப் பாருங்கள்.) ரோமர்களால் நியமிக்கப்பட்ட தலைமைக் குருவாகிய காய்பா, அரசியல் விவகாரங்களை நடத்துவதில் சாமர்த்தியசாலியாக இருந்தார்; அதனால், தனக்கு முன்பிருந்த பலரைவிட நிறைய காலத்துக்குத் தன் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். இவர் சுமார் கி.பி. 18 முதல் சுமார் கி.பி. 36 வரை சேவை செய்தார். ‘அந்த வருஷத்தில்,’ அதாவது கி.பி. 33-ல், காய்பா தலைமைக் குருவாக இருந்தார் என்று யோவான் சொல்கிறார்; அப்படியென்றால், இயேசு கொலை செய்யப்பட்ட அந்த முக்கியமான வருஷத்திலும் காய்பா தலைமைக் குருவாகச் சேவை செய்ததை அவர் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.—காய்பாவின் வீடு எங்கு இருந்திருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள இணைப்பு B12-ஐப் பாருங்கள்.

யோவா 12:42-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்

யூதத் தலைவர்களில்கூட: இங்கே ‘தலைவர்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, யூத உயர் நீதிமன்றமாகிய நியாயசங்கத்தின் உறுப்பினர்களைக் குறிப்பதாகத் தெரிகிறது. யோவா 3:1-ல் இந்த வார்த்தை, நியாயசங்கத்தின் உறுப்பினராக இருந்த நிக்கொதேமுவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜெபக்கூடத்திலிருந்து நீக்கிவிட: வே.வா., “ஜெபக்கூடத்திலிருந்து ஒதுக்கிவைக்க.” ஏப்போசினகாகோஸ் என்ற கிரேக்கப் பெயரடைச்சொல் இந்த வசனத்திலும், யோவா 12:42; 16:2 ஆகிய வசனங்களிலும் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜெபக்கூடத்திலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் சமுதாயத்தைவிட்டே வெறுத்து ஒதுக்கப்படுவார். மற்ற யூதர்கள் அவரோடுள்ள சகவாசத்தைத் துண்டித்துக்கொள்வார்கள் என்பதால், அவருடைய குடும்பம் பொருளாதார விதத்தில் மிகவும் கஷ்டப்படும். ஜெபக்கூடங்கள் கல்வி புகட்டுவதற்காக முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டன; சிலசமயங்களில், உள்ளூர் நீதிமன்றங்களாகவும் அவை பயன்படுத்தப்பட்டன. முள்சாட்டையால் அடிக்கும்படியும் ஜெபக்கூடத்திலிருந்து நீக்கும்படியும் உத்தரவிட இந்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருந்தது.

அக்டோபர் 15-21

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 13-14

“உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்”

யோவா 13:5-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

சீஷர்களின் பாதங்களைக் கழுவவும்: பழங்கால இஸ்ரவேலில், வார்களைக் கொண்ட செருப்புகள்தான் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டன. பாதங்களை அவை முழுமையாக மூடவில்லை; அதனால், சாலைகளிலும் வயல்நிலங்களிலும் இருந்த மண்ணும் தூசியும் பயணிகளின் பாதங்களில் படிந்தன. இந்தக் காரணத்தால், ஒரு வீட்டுக்குள் போவதற்கு முன்பு செருப்புகளைக் கழற்றிவிடுவது விருந்தாளிகளின் வழக்கமாக இருந்தது; விருந்துக்கு அழைத்தவர் விருந்தாளிகளின் பாதங்களைக் கழுவுவார். இந்த வழக்கத்தைப் பற்றி நிறைய வசனங்கள் சொல்கின்றன. (ஆதி 18:4, 5; 24:32; 1சா 25:41; லூ 7:37, 38, 44) மனத்தாழ்மை காட்ட வேண்டியதும் ஒருவருக்கு ஒருவர் பணிவிடை செய்ய வேண்டியதும் அவசியம் என்ற பாடத்தைக் கற்றுத்தருவதற்காக இயேசு தன் சீஷர்களுடைய பாதங்களைக் கழுவினார்.

யோவா 13:12-14-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

வேண்டும்: வே.வா., “கடமைப்பட்டிருக்கிறீர்கள்.“ இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வினைச்சொல் பண விஷயங்களைச் சொல்வதற்காக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படை அர்த்தம், “ஒருவருக்குக் கடன்பட்டிருப்பது; ஒருவருக்கு ஏதோவொன்றைக் கொடுக்கக் கடமைப்பட்டிருப்பது.” (மத் 18:28, 30, 34; லூ 16:5, 7) இந்த வசனத்திலும் மற்ற வசனங்களிலும், ஏதோவொன்றைச் செய்ய கடமைப்பட்டிருப்பதை அது பொதுப்படையாகக் குறிக்கிறது.—1யோ 3:16; 4:11; 3யோ 8.

w99 3/1 31 ¶1

மிகப் பெரிய மனிதர் தாழ்வான சேவை செய்கிறார்

இயேசு, தம் சீஷர்களின் கால்களைக் கழுவி விடுவதன் மூலம் மனத்தாழ்மை பற்றிய மிகச் சிறந்த ஒரு பாடத்தை கற்பித்தார். உண்மையில், தாங்கள் மிகவும் பெரியவர்கள் ஆதலால் மற்றவர்கள் எப்போதுமே தங்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று நினைக்கவோ மதிப்பும் கௌரவமும் உள்ள ஸ்தானங்கள் வேண்டும் என்றோ கிறிஸ்தவர்கள் நாடித்தேடக் கூடாது. அதற்கு மாறாக, “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்த” இயேசுவின் முன்மாதிரியை அவர்கள் பின்பற்ற வேண்டும். (மத்தேயு 20:28) ஆம், இயேசுவைப் பின்பற்றுவோர் அனைவரும் ஒருவருக்காக ஒருவர் மிகவும் தாழ்வான வேலையைக்கூட செய்ய தயாராய் இருக்கவேண்டும்.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

யோவா 14:6-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன்: முதலாவதாக, இயேசு மூலமாக மட்டும்தான் நம்மால் கடவுளிடம் ஜெபம் செய்ய முடியும் என்பதால் அவரே ‘வழியாக’ இருக்கிறார். அதோடு, மனிதர்கள் கடவுளோடு சமரசமாவதற்கு அவரே ‘வழியாக’ இருக்கிறார். (யோவா 16:23; ரோ 5:8) இரண்டாவதாக, இயேசு சத்தியத்தையே பேசியதாலும் சத்தியத்தின்படியே வாழ்ந்ததாலும் அவரே ‘சத்தியமாக’ இருக்கிறார். அதோடு, ஏராளமான தீர்க்கதரிசனங்களை அவர் நிறைவேற்றினார்; கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவர் முக்கியமான பங்கு வகிப்பதை அந்தத் தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன. (யோவா 1:14; வெளி 19:10) அவையெல்லாம் “அவர் மூலமாக ‘ஆம்’ என்றே ஆகியிருக்கின்றன,” அதாவது நிறைவேறியிருக்கின்றன. (2கொ 1:20) மூன்றாவதாக, மீட்புவிலையைச் செலுத்துவதன் மூலம் “உண்மையான வாழ்வை,” அதாவது “முடிவில்லாத வாழ்வை,” பெற மனிதர்களுக்கு அவர் வாய்ப்பு அளித்திருப்பதால் அவரே ‘வாழ்வாக’ இருக்கிறார். (1தீ 6:12, 19; எபே 1:7; 1யோ 1:7) பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கையுடன் உயிரோடு எழுப்பப்படப்போகிற லட்சக்கணக்கானவர்களுக்கும் அவரே ‘வாழ்வாக’ இருப்பார்.—யோவா 5:28, 29.

யோவா 14:12-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

அவற்றைவிட பெரிய செயல்களையும்: சீஷர்கள் தன்னைவிடப் பெரிய அற்புதங்களைச் செய்வார்கள் என்று இயேசு சொல்லவில்லை. பிரசங்கிக்கிற வேலையையும் கற்பிக்கிற வேலையையும் தன்னைவிட அதிகமாக அவர்கள் செய்வார்கள் என்றுதான் மனத்தாழ்மையோடு ஒத்துக்கொண்டார். அவருடைய சீஷர்கள் இன்னும் அதிகமான இடங்களிலும், இன்னும் அதிகமான மக்களிடமும், இன்னும் அதிகமான காலத்துக்கும் ஊழியம் செய்வார்கள் என்று அர்த்தப்படுத்தினார். தான் செய்த வேலையைத் தன் சீஷர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று இயேசு எதிர்பார்த்ததை அவருடைய வார்த்தைகள் தெளிவாகக் காட்டுகின்றன.

அக்டோபர் 22-28

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 15-17

“நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லை”

யோவா 15:19-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

உலகத்தின்: இந்த வசனத்தில், காஸ்மாஸ் என்ற கிரேக்க வார்த்தை கடவுளுடைய ஊழியர்களாக இல்லாத உலக மக்களைக் குறிக்கிறது; அதாவது, கடவுளிடமிருந்து விலகியிருக்கும் அநீதியுள்ள மனித சமுதாயத்தைக் குறிக்கிறது. தன் சீஷர்கள் இந்த ‘உலகத்தின் பாகமாக இல்லை’ என்று இயேசு சொன்னதாகப் பதிவு செய்திருக்கும் ஒரே சுவிசேஷ எழுத்தாளர் யோவான்தான். இயேசு உண்மையுள்ள தன் அப்போஸ்தலர்களோடு கடைசியாக ஜெபம் செய்தபோது, இன்னும் இரண்டு தடவை இதே விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.—யோவா 17:14, 16.

யோவா 15:21-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

என் சீஷர்களாக இருப்பதால்தான்: நே.மொ., “என் பெயருக்காக.” பைபிளில் “பெயர்” என்பது சிலசமயங்களில் அந்த நபரையும், அவர் எடுத்திருக்கும் பெயரையும், அவரை அடையாளப்படுத்துகிற எல்லாவற்றையும் குறிக்கிறது. இயேசுவின் பெயரைப் பொறுத்தவரை, அவருடைய தகப்பன் அவருக்குக் கொடுத்திருக்கிற அதிகாரத்தையும் மேலான நிலையையும்கூட அது குறிக்கிறது. (மத் 28:18; பிலி 2:9, 10; எபி 1:3, 4) உலக மக்கள் ஏன் தன்னுடைய சீஷர்களுக்கு விரோதமாக நடந்துகொள்வார்கள் என்று இயேசு இங்கே விளக்கியிருக்கிறார்; ஏனென்றால், அவரை அனுப்பியவரைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டால், இயேசுவின் பெயர் எதைக் குறிக்கிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியும். (அப் 4:12) இயேசு கடவுளால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளராக... ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக... வாழ்வு பெறுவதற்காக மக்கள் எல்லாரும் அடிபணிய வேண்டிய நபராக... இருப்பதை ஏற்றுக்கொள்வதும் இதில் உட்பட்டிருக்கிறது.—யோவா 17:3; வெளி 19:11-16; ஒப்பிடுங்கள்: சங் 2:7-12.

it-1-E 516

தைரியம்

இந்த உலகம் யெகோவாவின் வெறுப்புக்கு ஆளாகியிருப்பதால், அதன் எண்ணங்களாலும் செயல்களாலும் கறைபடாமல் இருக்க... இந்த உலகம் நம்மை வெறுத்தாலும், யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக இருக்க... கிறிஸ்தவர்களுக்குத் தைரியம் தேவை. இயேசு அவருடைய சீஷர்களிடம் இப்படிச் சொன்னார்: “இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் இருக்கும். ஆனால் தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்.” (யோவா 16:33) கடவுளுடைய மகன், எந்தவொரு விஷயத்திலும் இந்த உலகத்தில் இருப்பவர்களைப் போல நடந்துகொள்ளவில்லை; இதன் மூலம் அவர் இந்த உலகத்தை ஜெயித்தார். இந்த உலகத்திலிருந்து விலகியிருப்பதற்கும் இந்த உலகத்தால் கறைபடாமல் இருப்பதற்கும் ஒரு கிறிஸ்தவருக்கு எப்படித் தைரியம் கிடைக்கும்? இயேசு கிறிஸ்து, உலகத்தை ஜெயிப்பதில் மிகச் சிறந்த முன்மாதிரி என்ற விஷயமும், இந்த உலகத்தின் பாணியின்படி அவர் நடக்காமல் இருந்தார் என்ற விஷயமும் ஒரு கிறிஸ்தவருக்குத் தேவையான தைரியத்தைக் கொடுக்கும்.—யோவா 17:16.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

யோவா 17:21-23-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்

ஒன்றாயிருக்கும்படி: வே.வா., “ஒற்றுமையாக இருக்கும்படி.” தானும் தன் தகப்பனும் ‘ஒன்றாயிருப்பது’ போலத் தன்னுடைய உண்மையான சீஷர்களும் ‘ஒன்றாயிருக்க’ வேண்டுமென்று இயேசு ஜெபம் செய்தார்; அதாவது, தானும் தன் தகப்பனும் ஒரே சிந்தையுடன் ஒற்றுமையாக வேலை செய்வது போல, தன் சீஷர்களும் ஒரே குறிக்கோளோடு ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டுமென்று ஜெபம் செய்தார். (யோவா 17:22) கிறிஸ்தவ ஊழியர்கள் ஒருவரோடு ஒருவர் வேலை செய்யும்போதும், கடவுளோடு வேலை செய்யும்போதும் இப்படிப்பட்ட ஒற்றுமையைக் காட்டுவார்கள் என்று 1கொ 3:6-9-ல் பவுல் விளக்குகிறார்.—1கொ 3:8-ஐப் பாருங்கள்.

முழுமையாக ஒன்றுபட்டிருப்பதற்காக: இந்த வசனத்தில், தன் சீஷர்கள் முழுமையாக ஒன்றுபட்டிருப்பதற்கும் அவர்கள்மேல் தன் தகப்பன் ‘அன்பு காட்டுவதற்கும்’ சம்பந்தம் இருப்பதாக இயேசு சொல்கிறார். கொலோ 3:14-ல் உள்ள வார்த்தைகளோடு இது ஒத்துப்போகிறது; “எல்லாரையும் பரிபூரணமாக இணைப்பது அன்புதான்” என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், சீஷர்கள் மத்தியில் பரிபூரணமான ஒற்றுமை இருக்கும் என்பதற்காக, அவர்கள் எல்லாரும் ஒரே விதமாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களுடைய சுபாவங்களும், திறமைகளும், பழக்கவழக்கங்களும், மனசாட்சியும் வித்தியாசப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், செயலிலும் நம்பிக்கையிலும் போதனையிலும் இயேசுவின் சீஷர்கள் எல்லாரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.—ரோ 15:5, 6; 1கொ 1:10; எபே 4:3; பிலி 1:27.

யோவா 17:24-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

இந்த உலகம் உண்டாவதற்கு: “உண்டாவதற்கு” என்பதற்கான கிரேக்க வார்த்தை எபி 11:11-ல் “கர்ப்பமானாள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இங்கே “உலகம் உண்டாவதற்கு” என்று சொல்லப்படும்போது, ஆதாம் மற்றும் ஏவாளுடைய பிள்ளைகள் கருவில் உருவானதையும் பிறந்ததையும் குறிப்பதாகத் தெரிகிறது. இயேசு ‘உலகம் உண்டானதை’ ஆபேலோடு சம்பந்தப்படுத்திப் பேசினார். அநேகமாக, மீட்பைப் பெறத் தகுதிபெற்றிருந்த முதல் மனிதர் ஆபேல்தான். “உலகம் உண்டானதுமுதல்” வாழ்வின் சுருளில் எழுதப்பட்ட பெயர்களில் முதலாவது பெயரும் அவருடையதுதான். (லூ 11:50, 51; வெளி 17:8) வெகு காலத்துக்கு முன்பே, அதாவது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பே, கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் ‘அன்பு காட்டினார்’ என்பது இயேசு செய்த இந்த ஜெபத்திலிருந்து தெரிகிறது.

அக்டோபர் 29–நவம்பர் 4

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 18-19

“சத்தியத்தைப் பற்றி இயேசு சாட்சி கொடுத்தார்”

யோவா 18:37-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்

சத்தியத்தை: இயேசு பொதுப்படையான உண்மையைப் பற்றி அல்ல, கடவுளுடைய நோக்கங்களோடு சம்பந்தப்பட்ட சத்தியத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். ‘தாவீதின் மகனாகிய’ இயேசு தலைமைக் குருவாகவும் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாகவும் இருக்க வேண்டும் என்பது கடவுளுடைய ஒரு முக்கியமான நோக்கம். (மத் 1:1) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியத்தை அறிவிப்பதற்காகத்தான் இயேசு முக்கியமாக இந்த உலகத்துக்கு வந்ததாகவும் இங்கே வாழ்ந்ததாகவும் ஊழியம் செய்ததாகவும் விளக்கினார். இதேபோன்ற ஒரு செய்தியைத்தான் தாவீது பிறந்த ஊரில், அதாவது யூதேயாவிலுள்ள பெத்லகேமில், இயேசு பிறப்பதற்கு முன்பும் அவர் பிறந்த சமயத்திலும் தேவதூதர்கள் அறிவித்தார்கள்.—லூ 1:32, 33; 2:10-14.

சாட்சி கொடுப்பதற்காகவே: கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் ‘சாட்சி கொடுக்க’ (மார்டிரீயோ) என்றும், “சாட்சி” (மார்டிரீயா; மார்டிஸ்) என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைகளுக்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. இரண்டு வார்த்தைகளுமே, அனுபவத்தில் தெரிந்துகொண்ட அல்லது நேரடியாகத் தெரிந்துகொண்ட உண்மைகளுக்குச் சாட்சி சொல்வதைப் பொதுப்படையாகக் குறிக்கின்றன; அதேசமயத்தில், “அறிவிப்பது; உறுதிசெய்வது; மெச்சிப் பேசுவது” போன்ற அர்த்தங்களையும் அவை தரலாம். இயேசு, தான் உறுதியாக நம்பிய சத்தியங்களைப் பற்றிச் சாட்சி கொடுத்தார்; அதேசமயத்தில், தன் தகப்பனின் தீர்க்கதரிசன வார்த்தைகளும் வாக்குறுதிகளும் உண்மை என்பதை உறுதிசெய்யும் விதத்தில் அவர் வாழ்ந்தார். (2கொ 1:20) கடவுள் தன்னுடைய அரசாங்கத்தையும் அதன் மேசியானிய ராஜாவையும் பற்றிய தன் நோக்கத்தை ஏற்கெனவே விவரமாக முன்னறிவித்திருந்தார். இந்தப் பூமியில் இயேசு வாழ்ந்த வாழ்க்கையும், கடைசியில் செய்த உயிர்த் தியாகமும், அவரைப் பற்றிய எல்லா தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றின. திருச்சட்ட ஒப்பந்தத்தில் முன்நிழலாகச் சொல்லப்பட்டிருந்த எல்லாவற்றையும்கூட அவை நிறைவேற்றின. (கொலோ 2:16, 17; எபி 10:1) இப்படி, இயேசு தன் சொல்லினாலும் செயலினாலும் ‘சத்தியத்தைப் பற்றிச் சாட்சி கொடுத்தார்.’

யோவா 18:38அ-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

சத்தியமா? அது என்ன?: அநேகமாக, இயேசு பேசிக்கொண்டிருந்த ‘சத்தியத்தை’ பற்றி பிலாத்து குறிப்பாகக் கேட்கவில்லை; பொதுப்படையான உண்மையைப் பற்றித்தான் கேட்டார். (யோவா 18:37) சத்தியத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள பிலாத்து உண்மையிலேயே விரும்பியிருந்தால், இயேசு கண்டிப்பாக அவருக்குப் பதில் சொல்லியிருப்பார். ஆனால் பிலாத்து, நம்பிக்கையே இல்லாத விதத்தில், “சத்தியமா? அது என்ன சத்தியம்? அப்படி ஒன்று இல்லவே இல்லை” என்று சொன்னதாகத் தெரிகிறது. பார்க்கப்போனால், இயேசுவின் பதிலுக்காகக்கூடக் காத்திருக்காமல், வெளியே இருந்த யூதர்களிடம் பேச அவர் உடனடியாகப் போய்விட்டார்.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

யோவா 19:30-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

உயிர்விட்டார்: வே.வா., “இறந்துவிட்டார்.” இங்கே “உயிர்” என்பதற்கான கிரேக்க வார்த்தையாகிய நியூமா, “மூச்சை” அல்லது “உயிர்சக்தியை” குறிக்கலாம். இதை ஆதரிக்கும் விதத்தில், இதன் இணைவசனங்களான மாற் 15:37 மற்றும் லூ 23:46-ல் எக்பினீயோ (நே.மொ., “மூச்சை விடு”) என்ற கிரேக்க வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது (அங்கே அது “இறந்துபோனார்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; அடிக்குறிப்பில், “இறுதி மூச்சை விட்டார்” என்று கொடுக்கப்பட்டுள்ளது). சிலருடைய கருத்துப்படி, “விட்டார்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, இயேசு எல்லாவற்றையும் ‘முடித்துவிட்டதால்’ உயிர்வாழப் போராடுவதைத் தானாகவே நிறுத்திவிட்டார் என்பதை அர்த்தப்படுத்துகிறது. அவர் மனப்பூர்வமாக ‘தன்னுடைய உயிரையே கொடுத்தார்.’—ஏசா 53:12; யோவா 10:11.

யோவா 19:31-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு: பஸ்காவுக்கு அடுத்த நாளான நிசான் 15-ஆம் தேதி எந்தக் கிழமையில் வந்திருந்தாலும் சரி, அது ஒரு ஓய்வுநாளாக இருந்தது. (லேவி 23:5-7) இந்த விசேஷமான ஓய்வுநாளும் வழக்கமான ஓய்வுநாளும் ஒரே நாளில் வந்தபோது, அது “பெரிய” ஓய்வுநாளாக இருந்தது. (வழக்கமான ஓய்வுநாள் என்பது யூத காலண்டரின்படி வாரத்தின் ஏழாவது நாள்; வெள்ளிக்கிழமை சூரிய மறைவுக்குப் பிறகு ஆரம்பித்து, சனிக்கிழமை சூரிய மறைவின்போது முடிவுக்கு வந்தது.) அப்படிப்பட்ட பெரிய ஓய்வுநாள்தான் இயேசு இறந்த வெள்ளிக்கிழமைக்கு அடுத்த நாள் வந்தது. கி.பி. 29-ஆம் வருஷத்திலிருந்து கி.பி. 35-ஆம் வருஷம்வரை எடுத்துக்கொண்டால், கி.பி. 33-ல் மட்டும்தான் நிசான் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வந்தது. இந்த அத்தாட்சியை வைத்துப் பார்க்கும்போது, கி.பி. 33-ஆம் வருஷத்தில் வந்த நிசான் 14-ஆம் தேதியில்தான் இயேசு இறந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்