உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwbr18 டிசம்பர் பக். 1-6
  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்—பயிற்சி புத்தகம் (2018)
  • துணை தலைப்புகள்
  • டிசம்பர் 3-9
  • டிசம்பர் 10-16
  • டிசம்பர் 17-23
  • டிசம்பர் 24-30
  • டிசம்பர் 31–ஜனவரி 6
வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்—பயிற்சி புத்தகம் (2018)
mwbr18 டிசம்பர் பக். 1-6

வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்

டிசம்பர் 3-9

பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 9-11

“தீவிரமாகத் துன்புறுத்தியவர் தீவிரமாகச் சாட்சி கொடுக்கிறவராக ஆகிறார்”

bt 60 ¶1-2

சபை ‘சில காலத்திற்கு அமைதியை அனுபவித்தது’

கடுகடுப்பான முகத்துடன்... பகைமை நிறைந்த பார்வையுடன்... கொடூர எண்ணத்துடன்... தமஸ்குவை நோக்கி நடைபோடுகிறார்கள் சிலர்—இயேசுவின் சீடர்களை வீடுகளிலிருந்து தரதரவென்று இழுத்து, கேவலப்படுத்தி, அவர்களுடைய கைகளைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டு வந்து நியாயசங்கம் முன் நிறுத்துவதற்காக.

2 இந்தக் கும்பலின் தலைவர் சவுல் ஏற்கெனவே இரத்தக்கறை படிந்தவர். சமீபத்தில், இயேசுவின் பக்திமிகு சீடரான ஸ்தேவானை சக தீவிரவாதிகள் கல்லெறிந்து கொன்றபோது இவர் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். (அப். 7:57–8:1) எருசலேமிலிருந்த இயேசுவின் சீடர்களைத் துன்புறுத்தியதோடு திருப்தியாகாமல் துன்புறுத்தல் எனும் தீப்பந்தத்தை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் சென்று தீ வைக்கிறார். ஆபத்தானதென கருதப்பட்ட “மார்க்கத்தை” சேர்ந்த அனைவரையும் அடியோடு அழிக்க ஆக்ரோஷமாய் அலைகிறார்.—அப். 9:1, 2; பக்கம் 61-ல், “தமஸ்குவில் சவுலின் அதிகாரம்” என்ற பெட்டியைக் காண்க.

w16.06 7 ¶4

யெகோவா நம்மை வடிவமைக்கிறார்

4 மக்களை நாம் பார்ப்பது போல் யெகோவா பார்ப்பதில்லை. ஏனென்றால், யெகோவா அவர்களுடைய இருதயத்தைப் பார்க்கிறார். அவர்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்துகொள்கிறார். (1 சாமுவேல் 16:7ஆ வாசியுங்கள்.) இந்த விஷயத்தை புரிந்துகொள்ள கிறிஸ்தவ சபையில் எப்படிப்பட்டவர்களை அவர் தேர்ந்தெடுத்தார் என்பதை கவனியுங்கள். மனிதர்களுடைய பார்வையில் மோசமானவர்களாக இருந்தவர்களை யெகோவா தேர்ந்தெடுத்தார். (யோவா. 6:44) அப்படிப்பட்ட ஒருவர்தான் பரிசேயனாக இருந்த சவுல். அவர் முன்பு ‘தெய்வநிந்தனை செய்கிறவராகவும், துன்புறுத்துகிறவராகவும், திமிர்பிடித்தவராகவும்’ இருந்தார். (1 தீ. 1:13) ஆனால் ‘இருதயங்களைச் சோதிக்கிறவரான’ யெகோவா சவுலின் மனதை பார்த்தார். (நீதி. 17:3) அவரை அழகாக வடிவமைக்க முடியும் என்பதை புரிந்துகொண்டார். அதனால், “புறதேசத்தாருக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும்” சாட்சியாக இருப்பதற்கு அவரை ஒரு கருவியாக யெகோவா தேர்ந்தெடுத்தார். (அப். 9:15) இதேபோல் யெகோவா நிறையப் பேரை தேர்ந்தெடுத்தார். முன்பு குடிகாரர்களாக, ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்களாக, திருடர்களாக இருந்தவர்களை எல்லாம் ‘கண்ணியமான காரியத்திற்கு பயன்படும் பாத்திரங்களாக’ வடிவமைத்தார். (ரோ. 9:21; 1 கொ. 6:9-11) அவர்கள் பைபிளை படித்து யெகோவாமீது இருந்த விசுவாசத்தை பலப்படுத்திக்கொண்டார்கள். அதோடு, யெகோவா தங்களை வடிவமைக்கவும் அனுமதித்தார்கள்.

bt 64 ¶15

சபை ‘சில காலத்திற்கு அமைதியை அனுபவித்தது’

15 ஜெபக்கூடத்தில் இயேசுவைப் பற்றி சவுல் பிரசங்கம் செய்தபோது மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஆரவாரத்தை... ஆச்சரியத்தை... அதிர்ச்சியை... ஆத்திரத்தை... உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? “எருசலேமிலே இந்தப் பெயரில் நம்பிக்கை வைக்கிறவர்களைக் கொடூரமாக நடத்தியவன் இந்த மனிதன்தானே?” என்று அவர்கள் கேட்டார்கள். (அப். 9:21) இயேசுவின்பால் தனக்கு ஏற்பட்ட மனமாற்றத்தை மக்களுக்கு சவுல் விளக்கி காட்டி, ‘அவர்தான் கிறிஸ்து என தர்க்கரீதியில் நிரூபித்தார்.’ (அப். 9:22) ஆனால், தர்க்கரீதியில் பேசுவது எல்லா இடங்களிலும் செல்லாது, வெல்லாது. பாரம்பரியத்தால் பூட்டப்பட்ட நெஞ்சங்களையும், பெருமையினால் விலங்கிடப்பட்ட இதயங்களையும் தர்க்கரீதியினால் தகர்க்க முடியாது. இருந்தாலும், சவுல் தன் முயற்சியை கைவிட்டுவிடவில்லை.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

bt 60-61 ¶5-6

சபை ‘சில காலத்திற்கு அமைதியை அனுபவித்தது’

5 தமஸ்குவுக்குப் போகும் சாலையில் சவுலை இடைமறித்து, “நீ ஏன் என் சீடர்களைத் துன்புறுத்துகிறாய்?” என்று இயேசு கேட்கவில்லை. மாறாக, “நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்றே கேட்டார். (அப். 9:4) ஆம், சீடர்களுடைய சோதனைகளைத் தமக்கே வந்த சோதனைகளாக இயேசு எடுத்துக்கொள்கிறார்.—மத். 25:34-40, 45.

6 கிறிஸ்துமீது கொண்ட விசுவாசத்தின் காரணமாக நீங்கள் ஒடுக்கப்பட்டால், தளர்ந்துவிடாதீர்கள். ஏனென்றால், யெகோவாவும் இயேசுவும் உங்கள் நிலைமையைப் புரிந்துகொள்கிறார்கள். (மத். 10:22, 28-31) உங்கள் கஷ்டம் உடனே நீங்கிவிடாமல் இருக்கலாம். ஆனால் மறந்துவிடாதீர்கள்: ஸ்தேவான் கொலைக்கு சவுல் உடந்தையாய் இருந்ததை... எருசலேமிலிருந்த உண்மையுள்ள சீடர்களை வீடுகளிலிருந்து சவுல் தரதரவென்று இழுத்து வந்ததை... இயேசு கவனித்துக்கொண்டிருந்தார். (அப். 8:3) இருந்தாலும், அந்தச் சமயத்தில் குறுக்கிட்டு அவர் எதுவும் செய்யவில்லை. ஆனால், ஸ்தேவானும் மற்ற சீடர்களும் உண்மையுடன் இருக்க கிறிஸ்துவின் மூலம் யெகோவா பலம் அளித்தார்.

அப் 10:6-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

தோல் பதனிடுபவரான சீமோனின்: தோல் பதனிடும் வேலை செய்தவர்கள் மிருகங்களின் தோலில் ஒட்டிக்கொண்டிருந்த முடி, சதை, கொழுப்பு போன்றவற்றை ஒருவித சுண்ணாம்புக் கரைசலை வைத்து நீக்கினார்கள். பிறகு, வீரியமுள்ள மதுபானத்தை வைத்துப் பதப்படுத்தினார்கள்; இப்படி, தோல் பொருள்களைச் செய்வதற்கு அதைத் தயார்ப்படுத்தினார்கள். தோலைப் பதனிடும்போது பயங்கரமாக நாற்றம் அடிக்கும்; அந்த வேலைக்கு நிறைய தண்ணீரும் தேவைப்படும். அதனால்தான், சீமோனின் வீடு கடலோரத்தில் (அநேகமாக யோப்பாவின் புறநகர்ப்பகுதியில்) இருந்ததாகத் தெரிகிறது. திருச்சட்டத்தின்படி, மிருகங்களின் பிணத்தைத் தொடுகிறவர்கள் தீட்டுப்பட்டவர்களாக இருந்தார்கள். (லேவி 5:2; 11:39) அதனால், தோல் பதனிடுபவர்களைப் பொதுவாக யூதர்கள் இழிவாகப் பார்த்தார்கள்; அவர்களோடு தங்கவும் தயங்கினார்கள். சொல்லப்போனால், தோல் பதனிடும் வேலை சாணி அள்ளுவதைவிட கேவலமான ஒரு வேலை என்று தால்முட்டில் பிற்பாடு எழுதப்பட்டது. இருந்தாலும், பேதுருவுக்கு இப்படிப்பட்ட தப்பெண்ணம் இருக்கவில்லை, அவர் பரந்த மனதோடு சீமோனின் வீட்டில் தங்கினார். அது அவருடைய அடுத்த நியமிப்புக்கு அவரைத் தயார்ப்படுத்தியது. அதாவது, வேறு தேசத்தைச் சேர்ந்த ஒருவருடைய வீட்டுக்குப் போய் அவரைச் சந்திப்பதற்குத் தயார்ப்படுத்தியது. “தோல் பதனிடுபவர்” என்பதற்கான கிரேக்க வார்த்தை (பிர்சீயஸ்) சீமோனின் சிறப்புப் பெயராக இருந்திருக்கும் என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள்.

டிசம்பர் 10-16

பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 12-14

“பவுலும் பர்னபாவும் தொலைதூர இடங்களில் சீஷர்களை உருவாக்கினார்கள்”

bt 85-86 ¶4

‘சந்தோஷத்தினாலும் கடவுளது சக்தியினாலும் நிரப்பப்பட்டார்கள்’

4 பிரத்தியேகமாக பர்னபாவையும் சவுலையும் “அந்த வேலைக்காக” ஒதுக்கி வைக்கும்படி கடவுளுடைய சக்தி ஏன் வழிநடத்தியது? (அப். 13:2) அதற்குரிய காரணத்தை பைபிள் சொல்வதில்லை. ஆனால் ஒன்று மட்டும் நமக்குத் தெரியும்: அவர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கடவுளுடைய சக்தி வழிநடத்தியது. இதைக் குறித்து அந்தியோகியாவிலிருந்த தீர்க்கதரிசிகள் மற்றும் போதகர்கள் மத்தியில் சலசலப்போ பூசல்களோ உண்டானதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் முழு ஆதரவு தெரிவித்தார்கள். அவர்களிடம் போட்டியோ பொறாமையோ துளியும் எட்டிப் பார்க்கவில்லை; மாறாக, “விரதமிருந்து, ஜெபம் செய்து, அவ்விருவர்மீதும் கைகளை வைத்து அவர்களை அனுப்பினார்கள்.” அதைப் பார்த்து, பர்னபாவும் சவுலும் எவ்வளவு பூரித்துப்போயிருப்பார்கள் என்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். (அப். 13:3) அதேபோல், கண்காணிகள் உட்பட பொறுப்புகளைக் கையாள சபையில் நியமிக்கப்படுகிற மற்ற சகோதரர்களுக்கு நாமும் தோள் கொடுக்க வேண்டும். அவர்கள்மீது பொறாமை கொள்ளாமல் ‘அவர்களுடைய உழைப்பின் காரணமாக அவர்களை மிக உயர்வாய்க் கருதி, அவர்கள்மீது அன்பு காட்ட வேண்டும்.’—1 தெ. 5:13.

bt 95 ¶5

“யெகோவா தந்த அதிகாரத்தில் தைரியமாகப் பேசி வந்தார்கள்”

5 முதலில், பவுலும் பர்னபாவும் இக்கோனியாவில் தங்கினார்கள்; இது, முழுக்க முழுக்க கிரேக்க கலாச்சாரம் பரவியிருந்த ஒரு நகரம்; அதோடு, ரோம மாகாணமாகிய கலாத்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் விளங்கியது. செல்வாக்குமிக்க யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்கள் பலரும் இந்நகரில் வாழ்ந்து வந்தார்கள். பவுலும் பர்னபாவும் தங்களுடைய வழக்கத்தின்படி, ஜெபக்கூடத்திற்குள் நுழைந்து பிரசங்கம் செய்யத் தொடங்கினார்கள். (அப். 13:5, 14) “அங்கு அவர்கள் திறம்படப் பேசியதால் யூதர்களிலும் கிரேக்கர்களிலும் ஏராளமானோர் விசுவாசிகளானார்கள்.”—அப். 14:1.

w14 9/15 13 ¶4-5

கஷ்டங்களைச் சமாளிக்கத் தயாராயிருங்கள்

4 பவுலும் பர்னபாவும் அதன்பிறகு தெர்பை நகரத்தில் இருந்தவர்களைச் சந்தித்தார்கள். அங்கிருந்து லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிப்போனார்கள். “அங்கிருந்த சீடர்களைப் பலப்படுத்தினார்கள்; ‘கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்’ என்று சொல்லி, விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.” (அப். 14:21, 22) இந்த வார்த்தைகள் சீடர்களை எப்படிப் பலப்படுத்தியிருக்கும்? ‘உங்களுக்கு நிறைய கஷ்டங்கள் வரும்’ என்று யாராவது சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இன்னும் கவலையாகத்தான் இருக்கும். அப்படியென்றால், பவுலும் பர்னபாவும் சொன்ன வார்த்தைகள் ‘சீடர்களைப் பலப்படுத்தியது’ என்று எப்படிச் சொல்ல முடியும்?

5 “பல உபத்திரவங்களைச் சகித்துக்கொள்ளுங்கள்” என்று பவுல் சொல்லவில்லை. “கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்” என்று சொன்னார். கடவுளுக்கு உண்மையாக இருப்பதால் கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றிதான் அவர் சொன்னார். இதைக் கேட்ட சீடர்கள் நிச்சயம் பலப்பட்டிருப்பார்கள். கடவுளுடைய அரசாங்கத்தில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள் வெறும் கனவோ வீண் ஆசையோ கிடையாது. கடைசிவரை கடவுளுக்கு உண்மையோடு இருப்பவர்கள் நிச்சயம் ‘மீட்புப் பெறுவார்கள்.’—மத். 10:22.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w08 5/15 32 ¶7

அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

12:21-23; 14:14-18. கடவுளுக்கே சேர வேண்டிய மகிமையை ஏரோது மனதார ஏற்றுக்கொண்டான். இவனோடு ஒப்பிட பவுலும் பர்னபாவும் எவ்வளவு வித்தியாசமாய் நடந்துகொண்டார்கள்! கடவுளுக்குரிய கனத்தையும் மகிமையையும் தங்களுக்கு மக்கள் கொடுத்தபோது அவர்கள் உடனடியாகவும் உறுதியாகவும் அதை மறுத்துவிட்டார்களே! யெகோவாவின் சேவையில் எதைச் சாதித்தாலும் பேருக்கும் புகழுக்கும் நாம் ஆசைப்படக் கூடாது.

அப் 13:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்

பவுல்: கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், பௌலோஸ் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இது பௌலஸ் என்ற லத்தீன் பெயரிலிருந்து வந்திருக்கிறது. இதன் அர்த்தம் “கொஞ்சம்; சின்னது.” இந்தப் பெயர் அப்போஸ்தலன் பவுலைக் குறிப்பதற்கு 157 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரே ஒரு தடவை மட்டும் சீப்புருவின் மாநில ஆளுநரான செர்கியு பவுலைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.—அப் 13:7.

பவுல் என்ற சவுல்: சவுல் இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து பவுல் என்று அழைக்கப்படுகிறார். அவர் ரோமக் குடியுரிமை பெற்ற ஒரு எபிரெயராகப் பிறந்தார். (அப் 22:27, 28; பிலி 3:5) அதனால், சிறு வயதிலிருந்தே அவருக்கு சவுல் என்ற எபிரெயப் பெயரும் பவுல் என்ற ரோமப் பெயரும் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. அந்தக் காலத்திலிருந்த யூதர்கள், முக்கியமாக இஸ்ரவேலுக்கு வெளியே வாழ்ந்த யூதர்கள், இரண்டு பெயர்களை வைத்துக்கொள்வது சகஜமாக இருந்தது. (அப் 12:12; 13:1) பவுலுடைய சொந்தக்காரர்களில் சிலருக்குக்கூட ரோமப் பெயர்களும் கிரேக்கப் பெயர்களும் இருந்தன. (ரோ 16:7, 21) பவுல் ‘மற்ற தேசத்து மக்களுக்கு அப்போஸ்தலனாக’ இருந்தார்; அதாவது, யூதர்கள் அல்லாத மக்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்கும் பொறுப்பைப் பெற்றிருந்தார். (ரோ 11:13) அதனால், தன்னுடைய ரோமப் பெயரைப் பயன்படுத்த அவர் முடிவு செய்திருக்கலாம்; இன்னும் நிறைய மக்கள் தன் செய்தியைக் கேட்பதற்கு அது உதவியாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். (அப் 9:15; கலா 2:7, 8) செர்கியு பவுலைக் கௌரவப்படுத்த நினைத்துத்தான் அவர் ரோமப் பெயரைப் பயன்படுத்தினார் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையாக இருக்க முடியாது என்று தெரிகிறது. ஏனென்றால், சீப்புருவைவிட்டுப் போன பிறகுகூட பவுல் அந்தப் பெயரைத்தான் பயன்படுத்தினார். இன்னும் சிலர், பவுல் தன்னுடைய எபிரெயப் பெயரைப் பயன்படுத்தாததற்கு வேறொரு காரணத்தைச் சொல்கிறார்கள்; அந்தப் பெயரின் கிரேக்க உச்சரிப்பு, திமிராக நடந்துபோகும் ஒருவரை (அல்லது ஒரு மிருகத்தை) குறிக்கும் இன்னொரு கிரேக்க வார்த்தையைப் போலவே ஒலித்ததால்தான் அவர் அதைப் பயன்படுத்தவில்லை என்று சொல்கிறார்கள்.

டிசம்பர் 17-23

பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 15-16

“கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது”

bt 102-103 ¶8

“பயங்கர கருத்துவேறுபாடும் விவாதமும் உண்டாயின”

8 லூக்கா தொடர்ந்து கூறினார்: “அவர்களுக்கும் [அந்த ‘சில ஆட்களுக்கும்’] பவுல் பர்னபா ஆகியோருக்கும் இடையே பயங்கர கருத்துவேறுபாடும் விவாதமும் உண்டாயின; இதன் காரணமாக, பவுலையும் பர்னபாவையும் வேறு சிலரையும் எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களிடமும் மூப்பர்களிடமும் அனுப்ப வேண்டுமென்று [மூப்பர்கள்] தீர்மானித்தார்கள்.” (அப். 15:2) “கருத்துவேறுபாடும் விவாதமும்” என்ற வார்த்தைகள்... அந்த இரு சாராருமே தங்கள் கருத்துகளில் உறுதியாய் இருந்தார்கள் என்பதைக் காட்டுகின்றன. அந்தியோகியா சபையால் அந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முடியவில்லை. சபையின் சமாதானத்தையும் ஒற்றுமையையும் காப்பதற்காக இந்தப் பிரச்சினையை “எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களிடமும் மூப்பர்களிடமும்,” அதாவது அன்றைய ஆளும் குழுவிடம், எடுத்துச் செல்லலாம் என சபை ஞானமாகத் தீர்மானித்தது. அந்தியோகியா மூப்பர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

w12 1/15 5 ¶6-7

உண்மைக் கிறிஸ்தவர்கள் பைபிளை உயர்வாய் மதிக்கிறார்கள்

6 ஆமோஸ் 9:11, 12-ல் உள்ள வார்த்தைகள் அந்தப் பிரச்சினையைத் தீர்க்கக் கைகொடுத்தன. அந்த வசனங்கள் அப்போஸ்தலர் 15:16, 17-ல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன: “நான் மறுபடியும் வந்து, கீழே விழுந்திருக்கும் தாவீதின் கூடாரத்தைத் திரும்ப எடுத்துக் கட்டுவேன்; சேதமடைந்தவற்றைச் சரிசெய்து, அதை மீண்டும் நேராக நிறுத்துவேன்; இவர்களில் மீந்திருக்கிற ஆட்கள், என் பெயரால் அழைக்கப்படுகிற சகல தேசத்து மக்களோடும் சேர்ந்து யெகோவாவாகிய என்னை ஊக்கமாய்த் தேடுவதற்காக அப்படி நிறுத்துவேன் என்று யெகோவா சொல்கிறார்.”

7 ‘ஆனால், புறதேசத்தைச் சேர்ந்த விசுவாசிகள் விருத்தசேதனம் செய்யத் தேவையில்லையென இந்த வசனம் சொல்லவில்லையே’ எனச் சிலர் ஆட்சேபிக்கலாம். அது உண்மைதான். என்றாலும், யூதக் கிறிஸ்தவர்களுக்கு அந்த வசனங்களிலிருந்த குறிப்பு புரிந்திருக்கும். ஏனென்றால், விருத்தசேதனம் செய்யப்பட்ட புறதேசத்தாரை வேறு ‘தேசத்து மக்களாக’ அவர்கள் கருதவில்லை, சகோதரர்களாகவே கருதினார்கள். (யாத். 12:48, 49) உதாரணத்திற்கு, செப்டுவஜென்ட்டின் பாக்ஸ்டர் மொழிபெயர்ப்பில் எஸ்தர் 8:17 இவ்வாறு வாசிக்கிறது: “புறதேசத்தாரில் அநேகர் விருத்தசேதனம் செய்துகொண்டு யூதர்களாக மாறினார்கள்.” முன்பு நாம் பார்த்த வசனத்தில், “இவர்களில் மீந்திருக்கிற ஆட்கள்” எனச் சொல்லப்படுவது இஸ்ரவேலரில் மீந்திருந்த ஆட்களைக் குறிக்கிறது; யூதர்களும், விருத்தசேதனம் செய்துகொண்டு யூத மதத்திற்கு மாறியவர்களும் இவர்களில் அடங்குவார்கள்; இவர்கள் “சகல தேசத்து மக்களோடும்” சேர்ந்து, அதாவது விருத்தசேதனம் செய்யப்படாத புறதேசத்தாரோடு சேர்ந்து, கடவுளுடைய பெயரால் அழைக்கப்படுகிற மக்களாக ஆவார்கள் என வேதவசனங்கள் முன்னறிவித்தன. ஆகவே, பிரச்சினைக்கான தீர்வு வேதவசனங்களில் தெளிவாக இருந்தது. ஆம், கிறிஸ்தவர்களாக மாற விரும்பிய புறதேசத்தார் விருத்தசேதனம் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை.

bt 123 ¶18

‘சபைகளைப் பலப்படுத்தினார்கள்’

18 பவுலும் தீமோத்தேயுவும் வருடக்கணக்காக ஒன்றுசேர்ந்து ஊழிய வேலையில் ஈடுபட்டார்கள். பயணக் கண்காணிகளான அவர்கள், ஆளும் குழுவின் சார்பில் பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றினார்கள். “இருவரும் நகரம் நகரமாகப் போனபோது, எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் தீர்மானித்திருந்த கட்டளைகளை அங்கிருந்தவர்களிடம் தெரிவித்து, அவற்றைக் கடைப்பிடிக்கச் சொன்னார்கள்” என்று பைபிள் பதிவு குறிப்பிடுகிறது. (அப். 16:4) சபைகளும் அவற்றைக் கடைப்பிடித்து நடந்தன. இத்தகைய கீழ்ப்படிதலின் காரணமாக, “சபைகள் விசுவாசத்தில் பலப்பட்டு வந்தன, விசுவாசிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வந்தது.”—அப். 16:5.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w12 1/15 10 ¶8

இயேசுவின் அப்போஸ்தலர்களிடமிருந்து விழிப்புணர்வைக் கற்றுக்கொள்ளுங்கள்

8 இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? பவுல் ஆசியாவுக்குக் கிளம்பிச் சென்ற பின்புதான் கடவுளுடைய சக்தி குறுக்கிட்டது. அடுத்து, பித்தினியாவை அவர் நெருங்கிய பின்புதான் இயேசு இடைமறித்தார். கடைசியாக, பவுல் துரோவாவுக்குச் சென்ற பின்புதான் மக்கெதோனியாவுக்குச் செல்ல இயேசு வழிநடத்தினார். சபையின் தலைவரான இயேசு, இதுபோலவே நம்மையும் வழிநடத்தலாம். (கொலோ. 1:18) உதாரணமாக, ஒரு பயனியராகச் சேவை செய்ய வேண்டுமென நீங்கள் நினைத்து வந்திருக்கலாம் அல்லது தேவை அதிகமுள்ள ஓரிடத்திற்குக் குடிமாறிச் செல்லத் திட்டுமிட்டு வந்திருக்கலாம். ஆனால், உங்கள் இலக்கை அடைய நடவடிக்கை எடுத்த பின்புதான் கடவுளுடைய சக்தியால் இயேசு உங்களை வழிநடத்துவார். இதை இப்படி விளக்கலாம்: கார் ஓடிக்கொண்டிருந்தால்தான் டிரைவர் அதை இடப்பக்கமோ வலப்பக்கமோ திருப்ப முடியும். அதேபோல், நாம் ஓடிக்கொண்டிருந்தால்தான், அதாவது நம்முடைய இலக்கை அடைய முயற்சி எடுத்துக்கொண்டிருந்தால்தான், இன்னுமதிக ஊழியம் செய்ய இயேசு நம்மை வழிநடத்த முடியும்.

அப் 16:37-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

நாங்கள் ரோமக் குடிமக்கள்: பவுலும், அநேகமாக சீலாவும்கூட, ரோமக் குடிமக்களாக இருந்தார்கள். ரோமச் சட்டத்தின்படி, அந்நாட்டுக் குடிமக்களை எப்போதுமே முறைப்படிதான் விசாரணை செய்ய வேண்டியிருந்தது, அப்படிச் செய்யாமல் பகிரங்கமாகத் தண்டனை வழங்க யாருக்கும் அனுமதி இருக்கவில்லை. ரோம சாம்ராஜ்யத்தின் எந்தப் பகுதிக்குப் போனாலும் ரோமக் குடிமக்களுக்குச் சில உரிமைகளும் சலுகைகளும் கிடைத்தன. அவர்கள் ரோமச் சட்டத்துக்குக் கீழ்ப்படியும்படிதான் எதிர்பார்க்கப்பட்டது, அதன் ஆட்சிக்கு உட்பட்ட மாகாணங்களின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியும்படி எதிர்பார்க்கப்படவில்லை. அவர்கள்மேல் ஏதாவது குற்றம்சாட்டப்பட்டால், உள்ளூர் சட்டப்படி விசாரிக்கப்பட அவர்கள் ஒத்துக்கொள்ளலாம்; ஆனாலும், ரோம நீதிமன்றத்துக்குத் தங்கள் வழக்கைக் கொண்டுபோகும் உரிமை அவர்களுக்கு இருந்தது. மரண தண்டனை பெறும் அளவுக்குப் பெரிய குற்றமாக இருந்தால் ரோம அரசனிடம் மேல்முறையீடு செய்யும் உரிமையும் அவர்களுக்கு இருந்தது. அப்போஸ்தலன் பவுல் ரோம சாம்ராஜ்யத்தின் எல்லா பகுதிகளுக்கும் போய் ஊழியம் செய்தார். மூன்று சந்தர்ப்பங்களில் பவுல் தன்னுடைய ரோமக் குடியுரிமையைப் பயன்படுத்தியதாக பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் முதல் சந்தர்ப்பம்தான் இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பிலிப்பியில் இருந்த நடுவர்கள் தன்னுடைய உரிமையை மதிக்காமல் தன்னை அடித்ததை அவர் சுட்டிக்காட்டியதாக இங்கே சொல்லப்பட்டிருக்கிறது.—மற்ற இரண்டு சந்தர்ப்பங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அப் 22:25; 25:11 ஆகிய வசனங்களைப் பாருங்கள்.

டிசம்பர் 24-30

பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 17-18

“பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் அப்போஸ்தலன் பவுலைப் பின்பற்றுங்கள்”

அப் 17:2, 3-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்

நியாயங்காட்டிப் பேசினார்: பவுல் அவர்களிடம் நல்ல செய்தியை வெறுமனே சொல்லவில்லை, அவர் அதை விளக்கினார். வேதவசனங்களிலிருந்து, அதாவது கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட எபிரெய வேதாகமத்திலிருந்து, அதை நிரூபித்தும் காட்டினார். அவர் வசனங்களை வெறுமனே வாசிக்காமல், கேட்பவர்களுக்கு ஏற்றபடி அவற்றிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார். டையலீகோமாய் என்ற கிரேக்க வினைச்சொல், “பேச்சுப் பரிமாற்றம் செய்வதை; உரையாடுவதை; கலந்துபேசுவதை” குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கிரேக்க வார்த்தை அப் 17:17; 18:4, 19; 19:8, 9; 20: 7, 9 ஆகிய வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிரூபிக்கிற விதத்தில் மேற்கோள்கள் காட்டி: இவற்றுக்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “பக்கத்தில் வைப்பது.” அப்படியென்றால், எபிரெய வேதாகமத்தில் மேசியாவைப் பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களை இயேசுவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு பவுல் கவனமாக ஒப்பிட்டுப் பேசியிருக்கலாம்; அந்தத் தீர்க்கதரிசனங்களை இயேசு எப்படி நிறைவேற்றினார் என்று காட்டியிருக்கலாம்.

அப் 17:17-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

சந்தையில்: அக்ரோபாலிசின் வட மேற்குப் பகுதியில் இருந்த அத்தேனே சந்தை (கிரேக்கில், அகோரா) சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. அது பொருள்களை வாங்குவதற்கும் விற்பதற்குமான இடமாக மட்டும் இருக்கவில்லை. பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் போன்ற அம்சங்களின் மைய இடமாக அது இருந்தது. அந்தப் பொது இடத்தில் ஒன்றுகூடிவந்து அறிவுப்பூர்வமான விவாதங்களை நடத்த அந்த நகர மக்கள் மிகவும் விரும்பினார்கள்.

அப் 17:22, 23-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

அறியப்படாத கடவுளுக்கு: இவற்றுக்கான கிரேக்க வார்த்தைகள், அக்னோஸ்டாய் தியாய். இந்த வார்த்தைகள் இன்னும் சில வார்த்தைகளோடு சேர்த்து அத்தேனே நகரத்திலிருந்த ஒரு பலிபீடத்தில் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த நகரத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குத் தெய்வபயம் இருப்பதைக் காட்டுவதற்காக நிறைய கோவில்களையும் பலிபீடங்களையும் கட்டினார்கள். புகழ், அடக்கம், ஆற்றல், பக்குவம், பரிதாபம் போன்றவற்றைக்கூட தெய்வங்களாக நினைத்து அவற்றுக்குப் பலிபீடங்களைக் கட்டினார்கள். ஏதாவது ஒரு தெய்வம் விடுபட்டுப் போய்விட்டால் தெய்வக்குற்றம் ஆகிவிடும் என்று பயந்து, “அறியப்படாத கடவுளுக்கு” ஒரு பலிபீடத்தை அர்ப்பணம் செய்தார்கள். இப்படி, தங்களுக்குத் தெரியாத ஒரு கடவுள் இருப்பதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். இந்தப் பலிபீடத்தை அடிப்படையாக வைத்து பவுல் அவர்களிடம் திறமையாகப் பேசினார்; அதுவரை அவர்களுக்குத் தெரியாமல் இருந்த உண்மையான கடவுளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w08 5/15 32 ¶5

அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

18:18—பவுல் என்ன பிரார்த்தனை, அதாவது பொருத்தனை செய்தார்? நசரேய விரதமிருக்க பவுல் பொருத்தனை செய்திருக்கலாம் என சில அறிஞர்கள் சொல்கிறார்கள். (எண். 6:1-21) என்றாலும், எத்தகைய பொருத்தனையை பவுல் செய்திருந்தார் என்பதை பைபிள் குறிப்பிடுவதில்லை. அதுமட்டுமல்ல, அவர் எப்போது அந்தப் பொருத்தனையைச் செய்தார், கிறிஸ்தவராவதற்கு முன்னரா, பின்னரா, அல்லது அந்தப் பொருத்தனையை அப்போதுதான் செய்திருந்தாரா, முடிக்கவிருந்தாரா போன்ற எந்தத் தகவலையும் அது குறிப்பிடுவதில்லை. எப்படியானாலும், அவர் அத்தகைய பொருத்தனை செய்தது தவறல்ல.

அப் 18:21-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு

யெகோவாவுக்கு விருப்பம் இருந்தால்: ஏதோவொன்றைச் செய்யும்போது அல்லது செய்யத் திட்டம் போடும்போது கடவுளுடைய விருப்பத்தைப் பற்றி யோசித்துப் பார்ப்பது அவசியம் என்பதை இந்த வார்த்தைகள் வலியுறுத்துகின்றன. அப்போஸ்தலன் பவுல் இந்த முக்கியமான விஷயத்தை எப்போதுமே மனதில் வைத்திருந்தார். (1கொ 4:19; 16:7; எபி 6:3) ‘யெகோவாவுக்கு விருப்பமானால், உயிரோடிருப்போம், இதை இதைச் செய்வோம்’ என்று சொல்லும்படி சீஷராகிய யாக்கோபும் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். (யாக் 4:15) வெறுமனே கடமைக்காக நாம் இந்த வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. “யெகோவாவுக்கு விருப்பம் இருந்தால்” என்று மனதாரச் சொல்கிறவர்கள், யெகோவாவின் விருப்பத்துக்கு இசைவாக நடந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். இந்த வார்த்தைகளை வாய்விட்டுச் சொல்ல வேண்டும் என்பதில்லை; அவை பெரும்பாலும் மனதில்தான் சொல்லப்படுகின்றன.

டிசம்பர் 31–ஜனவரி 6

பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 19-20

“உங்களுக்கும் மந்தை முழுவதுக்கும் கவனம் செலுத்துங்கள்”

w11 6/15 20-21 ¶5

‘உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்’

5 மூப்பர்கள் ‘தங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை’ மேய்க்க வேண்டுமென பேதுரு எழுதினார். மந்தை யெகோவாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உரியது என்பதை அவர்கள் புரிந்துகொள்வது மிகமிக முக்கியமாய் இருந்தது. கடவுளுடைய ஆடுகளைத் தாங்கள் கவனித்துக்கொண்ட விதத்திற்கு மூப்பர்கள் கணக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, உங்களுடைய நெருங்கிய நண்பர் தன்னுடைய குழந்தைகளை உங்களிடம் விட்டுவிட்டு வெளி ஊருக்குப் போயிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவர்களுக்கு உணவளித்து அவர்களை நன்கு கவனித்துக்கொள்வீர்கள், அல்லவா? அந்தக் குழந்தைகளில் ஒன்று வியாதிப்பட்டால், அதற்குத் தேவையான மருத்துவ உதவியை உடனே அளிப்பீர்கள், அல்லவா? அதேபோல் சபையிலுள்ள மூப்பர்கள், ‘கடவுளுடைய சபையாகிய அந்த மந்தையை மேய்க்க’ வேண்டும்; “கடவுள் தம் சொந்த மகனுடைய இரத்தத்தால் வாங்கிய சபை அது.” (அப். 20:28) ஆகவே, ஒவ்வொரு ஆடும் கிறிஸ்து இயேசுவின் மதிப்புமிக்க இரத்தத்தால் வாங்கப்பட்டிருப்பதை அவர்கள் மனதில் வைக்க வேண்டும். தாங்கள் கணக்குக் கொடுக்கும் பொறுப்பைப் பெற்றிருப்பதால், மூப்பர்கள் மந்தைக்கு உணவளித்து, அதைப் பாதுகாத்து, பராமரிக்க வேண்டும்.

w13 1/15 31 ¶15

கிறிஸ்தவ மூப்பர்கள் ‘நம் சந்தோஷத்திற்குச் சக வேலையாட்கள்’

15 ஒரு மேய்ப்பராக இருப்பது சாதாரண வேலை அல்ல, அது கடினமான வேலை. சில சமயம் மூப்பர்கள், தங்கள் சகோதரர்களை நினைத்து இரவு தூக்கத்தையே துறக்கிறார்கள்; நள்ளிரவில் எழுந்து சகோதரர்களுக்காக ஜெபம் செய்கிறார்கள் அல்லது அவர்களுக்கு உதவிசெய்ய ஓடுகிறார்கள். (2 கொ. 11:27, 28) ஆனாலும், பவுலைப் போலவே தங்களுடைய பொறுப்பை முழுமையாகவும் சந்தோஷமாகவும் நிறைவேற்றுகிறார்கள். கொரிந்தியர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “என்னிடம் இருப்பவற்றை உங்களுக்காகச் சந்தோஷமாய்ச் செலவு செய்வேன், என்னையே முழுவதுமாக உங்களுக்கு அர்ப்பணிப்பேன்.” (2 கொ. 12:15) ஆம், சகோதரர்கள்மீது பவுலுக்கு அளவில்லா அன்பு இருந்ததால்தான், அவர்களைப் பலப்படுத்த தம்மையே அர்ப்பணித்தார். (2 கொரிந்தியர் 2:4-ஐ வாசியுங்கள்; பிலி. 2:17; 1 தெ. 2:8) பவுலை சகோதரர்கள் நெஞ்சார நேசித்ததில் ஆச்சரியமே இல்லை!—அப். 20:31-38.

bt 172 ¶20

“எல்லா மனிதர்களுடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாக இருக்கிறேன்”

20 மந்தையிடமிருந்து ஆதாயம் பெறுகிற இந்த மதத் தலைவர்கள் எங்கே, சுய தியாக வாழ்க்கை வாழ்ந்த பவுல் எங்கே! சபைக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக பவுல் தன் சொந்தக் காலில் நின்று, தன் தேவைகளைக் கவனித்துக்கொண்டார். சொந்த ஆதாயம் கருதாமல் சக வணக்கத்தாருக்கு உதவி செய்தார். அதுமட்டுமல்ல, சுய தியாக மனப்பான்மையைக் காட்டும்படி எபேசு சபை மூப்பர்களையும் ஊக்கப்படுத்தினார். “பலவீனருக்கு உதவி செய்ய வேண்டும்” எனவும், “‘பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது’ என்று எஜமானராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை மறந்துவிடாதீர்கள்” எனவும் கூறினார்.—அப். 20:35.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

bt 161 ¶11

“யெகோவாவின் வார்த்தை . . . பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்தது”

11 அந்தப் பள்ளி அரங்கத்தில் பவுல் தினந்தோறும் காலை சுமார் 11 மணியிலிருந்து மாலை சுமார் 4 மணிவரை பேச்சுகளைக் கொடுத்திருக்கலாம். (அப். 19:9) அது அமைதியான, ஆனால் மிகவும் உஷ்ணமான வேளையாக இருந்தது; அநேகருக்கு அது, சாப்பிட்டுச் சற்று ஓய்வெடுக்கும் வேளையாக இருந்தது; அந்த வேளையில் அவர் பேச்சுகளைக் கொடுத்தார். பவுல் இவ்வாறு இரண்டு வருடங்களுக்குக் கடினமாக உழைத்திருந்தார் என்றால், ஏறத்தாழ 3,000 மணிநேரம், அதாவது ஒவ்வொரு மாதமும் 125 மணிநேரம், அவர் செலவிட்டிருப்பார். யெகோவாவின் வார்த்தை பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்ததற்கு இது மற்றொரு காரணம். பவுல் படு சுறுசுறுப்பானவராக, சூழ்நிலைக்கு ஏற்றவாறு சாட்சி கொடுப்பவராக இருந்தார். அந்த நகரத்து மக்களுடைய வசதிக்கு ஏற்றாற்போல் பவுல் தன்னுடைய அட்டவணையை மாற்றிக்கொண்டார். விளைவு? “ஆசிய மாகாணமெங்கும் குடியிருந்த யூதர், கிரேக்கர் என எல்லாரும் எஜமானரின் வார்த்தையைக் கேட்டார்கள்.” (அப். 19:10) பவுல் முழுமையாகச் சாட்சி கொடுத்தார் என்பதில் சந்தேகமே இல்லை!

bt 162-163 ¶15

“யெகோவாவின் வார்த்தை . . . பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்தது”

15 ஸ்கேவாவின் மகன்களுக்கு ஏற்பட்ட அவமானம், மக்கள் மத்தியில் தேவபயத்தை உண்டாக்கியது; பலர் விசுவாசிகளானார்கள், ஆவியுலகத் தொடர்பை விட்டொழித்தார்கள். எபேசு நகரத்தார் மாயமந்திரப் பழக்கங்களில் ஊறிப்போயிருந்தார்கள். மந்திர வாசகங்களைப் போலவே பில்லிசூனியமும் தாயத்துக்களும் அங்கு சர்வ சாதாரணமாகக் காணப்பட்டன. (இவை பெரும்பாலும் எழுத்துவடிவில் இருந்தன.) அந்தச் சம்பவத்திற்குப்பின், அங்கிருந்த அநேகர் தங்கள் மாயமந்திர புத்தகங்களைக் கொண்டுவந்து எல்லாருக்கும்முன் எரித்துப்போட்டார்கள்; தற்போதைய கணக்குப்படி அது பல லட்சம் மதிப்புள்ளது. “இவ்வாறு, யெகோவாவின் வார்த்தை மாபெரும் விதத்தில் பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்தது” என லூக்கா எழுதுகிறார். (அப். 19:17-20) பொய் வணக்கம், பேய் வணக்கம் ஆகியவற்றின்மீது சத்தியத்திற்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட வெற்றி அது! விசுவாசமிக்க அந்த எபேசியர்கள் நமக்கு நல்ல முன்மாதிரிகள். நாமும்கூட, இன்று ஆவியுலகத் தொடர்பில் ஊறிப்போயிருக்கிற ஓர் உலகில் வாழ்கிறோம். எனவே, ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்ட ஏதோவொரு பொருள் நம்மிடம் இருப்பது தெரிந்தால், அவர்கள் செய்தது போலவே நாமும் அதை உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டும்! அருவருக்கத்தக்க அத்தகைய பழக்கவழக்கங்களைவிட்டு ஒதுங்கியிருக்க வேண்டும், அதில் என்ன தியாகம் உட்பட்டிருந்தாலும் சரி!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்