வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜனவரி 7-13
பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 21-22
“யெகோவாவுடைய விருப்பப்படி நடக்கட்டும்”
“யெகோவாவுடைய சித்தத்தின்படி நடக்கட்டும்”
15 பவுல் பிலிப்புவோடு தங்கியிருந்த சமயத்தில் மதிப்புக்குரிய இன்னொருவர் வந்தார்; அவர் பெயர் அகபு. அவர் ஒரு தீர்க்கதரிசி என்பது பிலிப்புவின் வீட்டில் கூடியிருந்தவர்களுக்குத் தெரிந்திருந்தது; கிலவுதியு அரசனின் காலத்தில் கொடிய பஞ்சம் ஏற்படப்போகிறதென அவர் முன்னறிவித்திருந்தார். (அப். 11:27, 28) எனவே, ‘அகபு ஏன் இங்கு வந்திருக்கிறார்? இப்போது என்ன செய்தி சொல்லப்போகிறார்?’ என்றெல்லாம் அவர்கள் யோசித்திருக்கலாம். அவர்கள் அகபுவையே கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் பவுலுடைய இடைக்கச்சையை எடுத்தார். (இடைக்கச்சை என்பது பணமும் பொருள்களும் வைப்பதற்காக இடுப்பில் கட்டப்பட்ட நீண்ட துணியாகும்.) பின்பு, அதை வைத்துத் தன் கால்களையும் கைகளையும் கட்டிக்கொண்டார். அதன்பின் ஒரு முக்கியமான செய்தியைச் சொன்னார். “கடவுளுடைய சக்தி தெரிவிப்பது இதுதான்: ‘இந்த இடைக்கச்சை யாருக்குச் சொந்தமோ அவரை யூதர்கள் எருசலேமில் இப்படிக் கட்டி, புறதேசத்தாரின் கைகளில் ஒப்படைப்பார்கள்’” என்றார்.—அப். 21:11.
16 பவுல் எருசலேமுக்குப் போவார் என்பதை இந்தத் தீர்க்கதரிசனம் உறுதிப்படுத்தியது. அதோடு, பிரசங்க வேலையின் காரணமாக யூதர்கள் அவரை “புறதேசத்தாரின் கைகளில் ஒப்படைப்பார்கள்” என்பதையும் அது வெளிப்படுத்தியது. இந்தத் தீர்க்கதரிசனத்தைக் கேட்டவர்கள் கலக்கமடைந்தார்கள். லூக்கா இவ்வாறு எழுதுகிறார்: “எருசலேமுக்குப் போக வேண்டாமென்று நாங்களும் அங்கிருந்தவர்களும் பவுலைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டோம். அதற்கு பவுல், ‘ஏன் இப்படி அழுது என்னை மனந்தளர வைக்கிறீர்கள்? எஜமானராகிய இயேசுவின் பெயருக்காக எருசலேமில் விலங்கிடப்படுவதற்கு மட்டுமல்ல சாவதற்குக்கூடத் தயாராயிருக்கிறேன்’ என்றார்.”—அப். 21:12, 13.
“யெகோவாவுடைய சித்தத்தின்படி நடக்கட்டும்”
17 இந்தக் காட்சியைச் சற்றுக் கற்பனை செய்துபாருங்கள்: லூக்கா உட்பட அங்கிருந்த சகோதரர்கள் பவுலை எருசலேமுக்குப் போக வேண்டாமெனக் கெஞ்சிக் கேட்கிறார்கள். சிலர் கண்ணீர்விட்டு அழுகிறார்கள். அவர்களுடைய அன்பையும் அக்கறையையும் பார்த்து நெகிழ்ந்துபோகிற பவுல், “ஏன் . . . என்னை மனந்தளர வைக்கிறீர்கள்?” எனக் கனிவாகக் கேட்கிறார்; “மனந்தளர வைக்கிறீர்கள்” என்பதற்கான கிரேக்கச் சொற்றொடரைச் சில மொழிபெயர்ப்புகள், “மனதை உடைக்கிறீர்கள்” என மொழிபெயர்த்திருக்கின்றன. என்றாலும், பவுல் தன் தீர்மானத்தில் உறுதியாய் இருக்கிறார்; தீருவிலிருந்த சகோதரர்களுடைய கெஞ்சல்களுக்கு இணங்காதது போலவே இவர்களுடைய கெஞ்சல்களுக்கும் கண்ணீருக்கும் அவர் இணங்குவதில்லை. மாறாக, தான் ஏன் எருசலேமுக்குச் செல்ல வேண்டுமென்பதை அவர்களுக்கு விளக்குகிறார். எப்பேர்ப்பட்ட உறுதி! எப்பேர்ப்பட்ட தைரியம்!! இயேசுவைப் போலவே, அவர் எருசலேமுக்குப் போகத் திடத்தீர்மானமாயிருக்கிறார். (எபி. 12:2) இயேசுவின் சீடராகிய அவர் ஓர் உயிர்த் தியாகியாய் ஆக வேண்டுமென விரும்புவதில்லை, ஆனால் ஒருவேளை அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், அதை ஒரு கௌரவமாகவே கருதுவார்.
“யெகோவாவுடைய சித்தத்தின்படி நடக்கட்டும்”
18 பவுல் பேசியதைக் கேட்ட அந்தச் சகோதரர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். “நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்காததால், ‘யெகோவாவுடைய சித்தத்தின்படி நடக்கட்டும்’ என்று சொல்லி அமைதியாகிவிட்டோம்” என்று லூக்கா குறிப்பிடுகிறார். (அப். 21:14) ஆம், தாங்கள் சொன்னபடிதான் பவுல் நடக்க வேண்டுமென அவர்கள் பிடிவாதமாக இருக்கவில்லை. மாறாக, பவுல் சொல்வதைக் கேட்டு, அதை ஏற்றுக்கொண்டார்கள்; யெகோவாவின் சித்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கிசைய நடந்தார்கள்; அது கஷ்டமாக இருந்தபோதிலும், அப்படிச் செய்தார்கள். பவுல் தன்னுடைய உயிருக்கு ஆபத்தாக முடியப்போகிற பயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தார். அன்பான சகோதரர்கள் அவருக்குத் தடை சொல்லாமல் இருந்திருந்தால், அவருக்குச் சற்று எளிதாக இருந்திருக்கும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
“என் தரப்பு வாதத்தைக் கேளுங்கள்”
10 ஆனாலும், ஓய்வுநாளன்று வேலை செய்யக் கூடாது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது போன்ற யூத முறைமைகள் சிலவற்றைக் கடைப்பிடித்துவந்த சகோதரர்களுடைய மனநிலையை அவர் புரிந்திருந்தார். (ரோ. 14:1-6) விருத்தசேதனத்தைப் பற்றி அவர் சட்டதிட்டங்களை வகுக்கவில்லை. சொல்லப்போனால், தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் செய்தார்; எதற்காக? தீமோத்தேயுவின் தகப்பன் ஒரு கிரேக்கர் என்று தெரிந்திருந்த யூதர்கள் தேவையில்லாமல் அவர்மீது குறை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக. (அப். 16:3) விருத்தசேதனம் செய்வதா வேண்டாமா என்பது அவரவருடைய தனிப்பட்ட தீர்மானமாக இருந்தது. கலாத்தியர்களிடம் பவுல் இவ்வாறு சொன்னார்: “விருத்தசேதனம் செய்துகொள்வதும் முக்கியமல்ல, விருத்தசேதனம் செய்துகொள்ளாதிருப்பதும் முக்கியமல்ல; அன்பினால் விசுவாசத்தைக் காட்டுவதே முக்கியம்.” (கலா. 5:6) ஆனால், திருச்சட்டத்தின்கீழ் வருவதற்காக விருத்தசேதனம் செய்வது அல்லது யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகக் கட்டாயம் விருத்தசேதனம் செய்ய வேண்டுமெனச் சொல்வது விசுவாசமற்ற செயலாகும்.
11 எனவே, பவுலைப் பற்றிய வதந்திகள் முழுக்க முழுக்க பொய்யாக இருந்தபோதிலும், யூத கிறிஸ்தவர்களுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது. அதனால், மூப்பர்கள் பவுலைப் பார்த்து, “கடவுளிடம் நேர்ந்துகொண்டுள்ள நான்கு ஆண்கள் இப்போது எங்களோடு இருக்கிறார்கள். அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களோடு சேர்ந்து தூய்மைச் சடங்கு செய்துகொள்ளுங்கள்; அவர்கள் தலைச்சவரம் செய்துகொள்வதற்கு ஆகும் எல்லாச் செலவுகளையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிச் செய்தால் உங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட விஷயமெல்லாம் வெறும் வதந்தி என்பதையும், நீங்கள் நன்னடத்தை உள்ளவர் என்பதையும், திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவர் என்பதையும் எல்லாரும் புரிந்துகொள்வார்கள்” என்று சொன்னார்கள்.—அப். 21:23, 24.
12 உண்மையில் பிரச்சினை தன்னைப் பற்றிய வதந்திகள் அல்ல, ஆனால் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் யூத கிறிஸ்தவர்கள் காட்டிய வைராக்கியம்தான் என்று பவுல் அந்த மூப்பர்களிடம் அடித்துச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை, வளைந்துகொடுப்பவராக இருந்தார்; தெய்வீக நியமங்களுக்கு விரோதமாக இல்லாதவரை அந்த மூப்பர்கள் சொன்னவற்றைச் செய்ய மனமுள்ளவராக இருந்தார். முன்னொரு சமயம் கொரிந்து சபையாருக்கு அவர் இவ்வாறு எழுதியிருந்தார்: “திருச்சட்டத்தின்கீழ் இருப்பவர்களைக் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவருவதற்காகத் திருச்சட்டத்தின்கீழ் நான் இல்லாதபோதிலும் அச்சட்டத்தின்கீழ் இருப்பவனைப் போலானேன்.” (1 கொ. 9:20) இந்தச் சமயத்தில், பவுல் எருசலேமிலிருந்த மூப்பர்களோடு ஒத்துழைத்து, ‘திருச்சட்டத்தின்கீழ் இருப்பவனைப் போலானார்.’ எனவே, பவுலுடைய நல்ல முன்மாதிரியைப் பின்பற்றி, நாமும் பிடிவாதமாக இல்லாமல் வளைந்துகொடுப்பவர்களாக இருக்க வேண்டும், மூப்பர்களோடு ஒத்துழைக்க வேண்டும்.—எபி. 13:17.
அப் 22:16-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
அவருடைய பெயரில் நம்பிக்கை வை, அப்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்: ஞானஸ்நானம் எடுத்துவிட்டால் மட்டும் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று சொல்ல முடியாது; இயேசுவின் பெயரில் நம்பிக்கை வைத்து, அந்த நம்பிக்கையைச் செயலிலும் காட்டினால்தான் பாவங்கள் மன்னிக்கப்படும்.—அப் 10:43; யாக் 2:14, 18.
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
w10-E 2/1 13 ¶2–14 ¶2
வாராந்தர ஓய்வுநாளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமா?
கிறிஸ்து திருச்சட்டத்தை நிறைவேற்றிவிட்டதால் கிறிஸ்தவர்கள் வாராந்தர ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டுமா? கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: “சாப்பிடுவது குடிப்பது பற்றியோ, பண்டிகை நாள், மாதப்பிறப்பு, ஓய்வுநாள் ஆகியவற்றை அனுசரிக்காமல் இருப்பது பற்றியோ ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருக்கட்டும். ஏனென்றால், அவை வரப்போகிற காரியங்களின் நிழல் மட்டுமே, கிறிஸ்துதான் நிஜம்.”—கொலோசெயர் 2:16, 17.
பவுலின் வார்த்தைகள் எதைக் காட்டுகின்றன? கடவுள் தன் வணக்கத்தாரிடம் எதிர்பார்த்த விஷயங்கள் அடியோடு மாறிவிட்டதைக் காட்டுகின்றன. ஏன் இந்த மாற்றம்? ஏனென்றால், கிறிஸ்தவர்கள் ஒரு புதிய சட்டத்தின்கீழ் இருக்கிறார்கள்; அதுதான் ‘கிறிஸ்துவின் சட்டம்.’ (கலாத்தியர் 6:2) மோசே மூலம் இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்ட ஒப்பந்தம் இயேசு இறந்த பிறகு முடிவுக்கு வந்தது. (ரோமர் 10:4; எபேசியர் 2:15) அப்படியென்றால், ஓய்வுநாள் சட்டமும் முடிவுக்கு வந்துவிட்டதா? ஆம். அதை எப்படிச் சொல்லலாம்? நாம் “[திருச்சட்டத்திலிருந்து] விடுதலை செய்யப்பட்டிருக்கிறோம்” என்று சொன்ன பிறகு, பத்துக் கட்டளைகளில் ஒன்றைப் பற்றி பவுல் பேசினார். (ரோமர் 7:6, 7) அதனால், திருச்சட்டம் முடிவுக்கு வந்தபோது, ஓய்வுநாள் சட்டம் உட்பட பத்துக் கட்டளைகளும் முடிவுக்கு வந்தன. அதனால், கடவுளுடைய வணக்கத்தார் வாராந்தர ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை.
இஸ்ரவேலர்களுடைய வணக்க முறையைக் கிறிஸ்தவர்களுடைய வணக்க முறை எப்படி மாற்றீடு செய்தது என்பதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு தேசத்தின் அரசியல் சட்டங்கள் மாற்றப்படலாம். அந்தப் புதிய சட்டங்கள் அமலுக்கு வந்த பிறகு பழைய சட்டங்களைக் குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டியிருக்காது. சில சட்டங்கள் பழைய சட்டங்களோடு ஒத்துப்போகலாம், ஆனாலும் மற்றவை வித்தியாசமாக இருக்கலாம். அதனால், தற்போது என்ன சட்டங்கள் அமலில் இருக்கின்றன என்பதை உண்மையுள்ள குடிமக்கள் கவனமாக அலசி ஆராய வேண்டும். அதோடு, அந்தப் புதிய சட்டங்கள் எப்போது அமலுக்கு வந்தன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதேபோல், யெகோவா தேவன் இஸ்ரவேல் தேசத்துக்கு 10 முக்கியமான கட்டளைகளையும் 600-க்கும் அதிகமான மற்ற சட்டங்களையும் கொடுத்தார். ஒழுக்கம், பலிகள், உடல்நலம், ஓய்வுநாள் போன்ற பல விஷயங்களோடு சம்பந்தப்பட்ட சட்டங்களை அவர் கொடுத்தார். ஆனாலும், பரலோக நம்பிக்கையுள்ள தன் சீஷர்கள் புதிய ‘ஜனமாக,’ அதாவது தேசமாக, இருப்பார்கள் என்று இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 21:43) கி.பி. 33-ஆம் வருஷத்திலிருந்து இந்த ஜனத்துக்குப் புதிய சட்டங்கள் கொடுக்கப்பட்டன. அந்தச் சட்டங்களுக்கு அடிப்படையாக இருந்த இரண்டு முக்கியமான கட்டளைகள் இவைதான்: (1) கடவுள்மேல் அன்பு காட்ட வேண்டும், (2) மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டும். (மத்தேயு 22:36-40) ‘கிறிஸ்துவின் சட்டமும்’ இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டமும் சில விஷயங்களில் ஒரேபோல் இருந்தாலும், மற்ற சில விஷயங்களில் ரொம்பவே வித்தியாசமாக இருக்கின்றன. அதுமட்டுமல்ல, திருச்சட்டத்தில் கொடுக்கப்பட்ட சில சட்டங்களை இப்போது நாம் கடைப்பிடிக்க வேண்டியதே இல்லை. அவற்றில் ஒன்றுதான், ஓய்வுநாளைப் பற்றிய சட்டம்.
ஜனவரி 14-20
பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 23-24
“விஷமி என்றும் தேசத் துரோகச் செயல்களைச் செய்பவர் என்றும் குற்றம்சாட்டப்பட்டார்”
“தைரியமாயிரு!”
5 தக்க சமயத்தில்தான் அவருக்கு அந்த ஊக்கம் கிடைத்தது. ஏனென்றால், அடுத்த நாள், 40-க்கும் அதிகமான யூத ஆண்கள் அவருக்கு எதிராக “சதித்திட்டம் போட்டார்கள்; ‘பவுலைக் கொலை செய்யும்வரை சாப்பிடவோ குடிக்கவோ மாட்டோம்’ என்று சொல்லிச் சபதமும் செய்தார்கள்.” பவுலைக் கொலை செய்ய அந்த யூதர்கள் எந்தளவு தீவிரமாயிருந்தார்கள் என்பதை அவர்களுடைய ‘சபதம்’ காட்டியது. இந்தச் சபதத்தை நிறைவேற்றாவிட்டால், தங்களுக்குச் சாபம் வருமென அவர்கள் நினைத்தார்கள். (அப். 23:12-15; அடிக்குறிப்பு) பவுலை விசாரணை செய்து விவரங்களைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற சாக்கில், அவரை மறுபடியும் நியாயசங்கத்திற்கு வரச்சொல்லி, வழியிலேயே தீர்த்துக்கட்ட அவர்கள் திட்டம் போட்டார்கள்; இந்தத் திட்டத்திற்கு, பிரதான குருமார்களும் மூப்பர்களும் உடந்தையாக இருந்தார்கள்.
6 ஆனால், பவுலுடைய சகோதரியின் மகன் இந்தச் சதித்திட்டத்தைக் கேள்விப்பட்டு, பவுலிடம் தெரிவித்தான். அதைக் கேட்ட அவர், ரோமப் படைத் தளபதியான கிலவுதியு லீசியாவிடம் போய்த் தெரிவிக்கும்படி சொன்னார். (அப். 23:16-22) பெயரிடப்படாத இந்த இளைஞனைப் போல் தைரியமாகச் செயல்படுகிற இளைஞர்களை யெகோவா நிச்சயம் நேசிக்கிறார்; அவர்கள் தங்களுடைய நலனைக் காட்டிலும் தங்கள் சகோதரர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், ஊழியத்தை ஆதரிப்பதற்காக முடிந்ததையெல்லாம் செய்கிறார்கள்.
“தைரியமாயிரு!”
10 பவுல்மீது குற்றம்சுமத்தியவர்கள் எருசலேமிலிருந்து வரும்வரை அவர் செசரியாவிலே ‘ஏரோதுவின் மாளிகையில் காவல் வைக்கப்பட்டார்.’ (அப். 23:35) ஐந்து நாட்கள் கழித்து, தலைமைக் குருவான அனனியாவும், வழக்கறிஞரான தெர்த்துல்லுவும், சில மூப்பர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். யூதர்களுக்கென்று பேலிக்ஸ் செய்துவந்த காரியங்களுக்காக தெர்த்துல்லு முதலில் அவரைப் புகழ்ந்தான்; அவரை உச்சிகுளிர வைப்பதற்காகவும், அவருடைய தயவைப் பெறுவதற்காகவும் அப்படிப் புகழ்ந்திருக்கலாம். அதன்பின், விஷயத்திற்கு வந்தான்; பவுலைக் குறித்து இவ்வாறு குற்றம்சாட்டினான்: ‘இந்த ஆள் ஒரு விஷமி; நாசரேத்தாருடைய மதப்பிரிவின் தலைவன்; உலகெங்கும் உள்ள யூதர்கள் மத்தியில் தேசத்துரோகச் செயல்களைத் தூண்டிவிட்டு வருகிறான்; ஆலயத்தின் புனிதத்தைக் கெடுக்கவும் முயற்சி செய்திருக்கிறான்; இதையெல்லாம் நாங்கள் கண்டு இவனைப் பிடித்தோம்.’ தெர்த்துல்லு இப்படிச் சொன்னதும் அங்கிருந்த மற்ற யூதர்கள் “அவனோடு சேர்ந்துகொண்டு, அவன் சொன்னதெல்லாம் உண்மையே என்று சாதித்தார்கள்.” (அப். 24:5, 6, 9) தேசத்துரோகச் செயல்களைத் தூண்டிவிடுவது, ஆபத்தான ஒரு மதப்பிரிவுக்குத் தலைவனாக இருப்பது, ஆலயத்தின் புனிதத்தைக் கெடுப்பது—இவையெல்லாம் மரண தண்டனைக்குரிய கொடிய குற்றங்களாக இருந்தன.
“தைரியமாயிரு!”
13 ‘கலகக்காரர்கள், தேசத்துரோகிகள், ஆபத்தான மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள்’ என்றெல்லாம் அரசு அதிகாரிகள்முன் நாம் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டால், பவுலின் நல்ல முன்மாதிரியைப் பின்பற்றலாம். பவுல், தெர்த்துல்லுவைப் போல் ஆளுநருடைய தயவைப் பெறுவதற்காக உச்சிகுளிர வைக்கும் விதத்தில் பேசவில்லை. அமைதியாக, மரியாதையாகப் பேசினார். தெளிவாக, கவனமாக, சாதுரியமாக உண்மைகளை எடுத்துச்சொன்னார். ஆலயத்தின் புனிதத்தைக் கெடுத்ததாகத் தன்மீது குற்றம்சுமத்தியவர்களே, அதாவது ‘ஆசிய மாகாணத்தைச் சேர்ந்த யூதர்களே,’ நேரடியாக வந்து தங்கள் குற்றச்சாட்டுகளைச் சொல்வதுதான் சட்டப்படி சரியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.—அப். 24:18, 19.
14 எல்லாவற்றுக்கும் மேலாக, பவுல் தன் நம்பிக்கைகளைப் பற்றிச் சாட்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, நியாயசங்கத்தில் எந்த நம்பிக்கையைப் பற்றிப் பேசும்போது பெரும் அமளி உண்டானதோ அந்த நம்பிக்கையைப் பற்றி பவுல் மீண்டும் தைரியமாகப் பேசினார். (அப். 23:6-10) ஆம், அவர் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை வலியுறுத்திப் பேசினார். ஏன்? இயேசுவைக் குறித்தும், அவருடைய உயிர்த்தெழுதலைக் குறித்தும் தான் கொடுத்துவந்த சாட்சியைத் தன்னுடைய எதிரிகள் ஏற்றுக்கொள்ளாததால் அப்படி வலியுறுத்திப் பேசினார். (அப். 26:6-8, 22, 23) ஆக, பிரச்சினையே உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கைதான், சரியாகச் சொன்னால், இயேசுவையும் அவருடைய உயிர்த்தெழுதலையும் பற்றிய நம்பிக்கைதான்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
அப் 23:6-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
நான் ஒரு பரிசேயன்: அங்கே இருந்தவர்களில் சிலருக்கு பவுலைத் தெரிந்திருந்தது. (அப் 22:5) பவுல் எந்த அர்த்தத்தில் தன்னை பரிசேயர்களுடைய மகன் என்று சொன்னார் என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கும். அதாவது, முன்பு பரிசேயனாக இருந்ததைப் பற்றித்தான் சொன்னாரே தவிர, இப்போது அப்படி இருப்பதாக அவர் சொல்லவில்லை என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கும். ஏனென்றால், இப்போது அவர் பக்திவைராக்கியமுள்ள கிறிஸ்தவர் என்பது பரிசேயர்கள் எல்லாருக்குமே தெரிந்திருந்தது. அதேசமயத்தில், இந்தச் சந்தர்ப்பத்தில் பவுல் தன்னை சதுசேயர்களோடு சம்பந்தப்படுத்திப் பேசாமல் பரிசேயர்களோடு சம்பந்தப்படுத்திப் பேசியதற்குக் காரணம், பரிசேயர்களைப் போலவே தானும் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்திருந்ததைக் காட்டுவதற்காகத்தான். இந்த விஷயத்தில் அங்கே இருந்த பரிசேயர்களோடு தான் ஒத்துப்போவதை அவர் சுட்டிக்காட்டினார். அநேகமாக, சர்ச்சைக்குரிய இந்த விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், நியாயசங்க உறுப்பினர்களில் சிலர் தனக்கு ஆதரவு காட்டுவார்கள் என்று அவர் நினைத்திருக்கலாம்; அவர் நினைத்தபடியே நடந்தது. (அப் 23:7-9) தன்னைப் பற்றி அவர் அப் 23:6-ல் என்ன சொன்னாரோ அதைத்தான் பிற்பாடு அகிரிப்பா ராஜாவுக்கு முன்பும் சொன்னார். (அப் 26:5) அதன்பின், பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு ரோமிலிருந்து கடிதம் எழுதியபோதும், பவுல் தன்னை ஒரு பரிசேயன் என்று குறிப்பிட்டார். (பிலி 3:5) கிறிஸ்தவர்களாக மாறியிருந்த மற்ற பரிசேயர்களைப் பற்றி அப் 15:5-ல் சொல்லப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அப் 24:24-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
துருசில்லாளோடு: துருசில்லாள் என்பவள் அப் 12:1-ல் சொல்லப்பட்டிருக்கும் முதலாம் ஏரோது அகிரிப்பாவின் கடைசி மகள், அதாவது மூன்றாவது மகள். அவள் சுமார் கி.பி. 38-ல் பிறந்தாள். அவளோடு பிறந்தவர்கள், இரண்டாம் அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும். (சொல் பட்டியலில் “ஏரோது” என்ற தலைப்பைப் பாருங்கள்.) ஆளுநரான பேலிக்ஸ் அவளுடைய இரண்டாவது கணவர். எமஸாவைச் சேர்ந்த சீரிய ராஜாவான அசிசஸ்தான் அவளுடைய முதல் கணவர். அவரை அவள் விவாகரத்து செய்துவிட்டாள். கிட்டத்தட்ட 16 வயது இருக்கும்போது, அதாவது சுமார் கி.பி. 54-ல், பேலிக்சைக் கல்யாணம் செய்தாள். “நீதியையும் சுயக்கட்டுப்பாட்டையும் வரப்போகிற நியாயத்தீர்ப்பையும் பற்றி” பேலிக்சிடம் பவுல் பேசியபோது, அவளும் ஒருவேளை அங்கே இருந்திருக்கலாம். (அப் 24:25) ஆளுநர் பதவி பேலிக்சின் கையிலிருந்து பெஸ்துவின் கைக்கு மாறியபோது, பேலிக்ஸ் பவுலைச் சிறையிலேயே விட்டுவிட்டுப் போனார். ஏனென்றால், அவர் ‘யூதர்களுடைய தயவைப் பெற விரும்பினார்.’ இளவயதில் இருந்த தன்னுடைய யூத மனைவியைப் பிரியப்படுத்த அவர் அப்படிச் செய்ததாகச் சிலர் நினைக்கிறார்கள்.—அப் 24:27.
ஜனவரி 21-27
பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 25-26
“ரோம அரசனிடம் பவுல் மேல்முறையீடு செய்கிறார்; பிறகு, ஏரோது அகிரிப்பாவுக்குச் சாட்சி கொடுக்கிறார்”
“ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!”
6 யூதர்களின் தயவைப் பெற விரும்பி பெஸ்து செய்ய நினைத்த காரியம் பவுலுடைய உயிருக்கே உலை வைத்திருக்கும். எனவே, பவுல் தன்னுடைய ரோமக் குடியுரிமையைப் பயன்படுத்தினார். அவர் பெஸ்துவிடம், “நான் ரோம அரசனுடைய நியாயத்தீர்ப்பு மேடைக்குமுன் நிற்கிறேன். இங்குதான் நான் விசாரிக்கப்பட வேண்டும். யூதர்களுக்கு நான் எந்தக் கெடுதலும் செய்யவில்லை; இது உங்களுக்கே நன்றாகத் தெரிய வந்திருக்கும். . . . ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!” என்றார். பொதுவாக, இப்படி மேல்முறையீடு செய்துவிட்டால் அதை வாபஸ் பெற முடியாது. பெஸ்து இதை வலியுறுத்தி, “ரோம அரசனிடம் நீ மேல்முறையீடு செய்திருக்கிறாய்; அதனால் ரோம அரசனிடமே நீ போகலாம்” என்று சொன்னார். (அப். 25:10-12) பவுல் மேல்முறையீடு செய்ததன் மூலம் உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். நம்முடைய எதிரிகள் ‘சட்டம் என்ற பெயரால் தொல்லை கொடுக்க’ முயலும்போது நமக்கிருக்கும் சட்டப்பூர்வ உரிமைகளைப் பயன்படுத்தி நற்செய்திக்காக வழக்காடுகிறோம்.—சங். 94:20, கத்தோலிக்க பைபிள்.
“ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!”
10 அகிரிப்பாமுன் பேச வாய்ப்புக் கிடைத்ததற்காக பவுல் அவருக்கு மரியாதையுடன் நன்றி தெரிவித்தார். யூதர்களுடைய முறைமைகளையும் அவர்களிடையே உள்ள சர்ச்சைகளையும் அகிரிப்பா ராஜா மிக நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அதன்பின், பவுல் தன் கடந்த காலத்தைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “எங்கள் மதத்திலுள்ள மிகக் கண்டிப்பான பரிசேயப் பிரிவின்படி பரிசேயனாக வாழ்ந்து வந்தேன்.” (அப். 26:5) பவுல் பரிசேயனாக இருந்ததால் மேசியாவின் வருகையை எதிர்பார்த்திருந்தார். இப்போது, ஒரு கிறிஸ்தவராக ஆகியிருந்ததால் இயேசு கிறிஸ்துதான் ஆண்டாண்டு காலமாக எதிர்பார்க்கப்பட்ட மேசியா என்று தைரியமாகச் சொன்னார். தனக்கும் தன்னுடைய எதிரிகளுக்கும் இருந்த பொதுவான நம்பிக்கைக்காகத்தான், அதாவது மேசியாவைப் பற்றித் தங்கள் முன்னோர்களுக்குக் கடவுள் அளித்த வாக்குறுதி நிறைவேறும் என்ற நம்பிக்கைக்காகத்தான், அன்று விசாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். பவுல் அளித்த விளக்கத்தைக் கேட்ட அகிரிப்பாவுக்கு இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
11 கிறிஸ்தவர்களைக் கொடூரமாக நடத்தியது பற்றி பவுல் ஒத்துக்கொண்டார்; “நாசரேத்தூர் இயேசுவின் பெயருக்கு விரோதமாக எத்தனையோ காரியங்கள் செய்ய வேண்டுமென நானும்கூட உண்மையிலேயே நினைத்திருந்தேன். . . . அவர்கள்மீது [கிறிஸ்துவின் சீடர்கள்மீது] மூர்க்கவெறி கொண்டிருந்ததால் வேறு நகரங்களுக்கும் போய் அவர்களைத் துன்புறுத்தினேன்” என்றார். (அப். 26:9-11) பவுல் இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை. கிறிஸ்தவர்களை அவர் எந்தளவு கொடுமைப்படுத்தினார் என்பது அநேகருக்குத் தெரிந்திருந்தது. (கலா. 1:13, 23) ஆனால், இப்போது அவர் இந்தளவு மாறியிருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று அகிரிப்பா யோசித்திருக்கலாம்.
12 பவுல் அடுத்ததாகச் சொன்ன வார்த்தைகள் அந்தக் காரணத்தை அவருக்குத் தெளிவாக்கியிருக்கும்: ‘பிரதான குருமார்களிடமிருந்து அதிகாரமும் ஆணையும் பெற்றுக்கொண்டு தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். போகும் வழியில், மதிய வேளையில், ராஜாவே, சூரிய ஒளியைவிட மிகப் பிரகாசமான ஓர் ஒளி வானத்திலிருந்து தோன்றி, என்னையும் என்னோடு இருந்தவர்களையும் சுற்றிப் பிரகாசித்தது. நாங்கள் எல்லாரும் தரையில் விழுந்தோம்; அப்போது ஒரு குரல் என்னிடம், “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? தாற்றுக்கோலை உதைத்துக்கொண்டே இருப்பது உனக்குத்தான் கேடு” என்று எபிரெய மொழியில் சொல்வதைக் கேட்டேன். அதற்கு நான், “எஜமானே, நீங்கள் யார்?” என்றேன். அவரோ, “நீ துன்புறுத்துகிற இயேசுவே நான்” என்றார்.’—அப். 26:12-15.
13 இந்த அற்புதமான தரிசனம் கிடைப்பதற்கு முன்பு பவுல் அடையாள அர்த்தத்தில் ‘தாற்றுக்கோலை உதைத்துக்கொண்டே இருந்தார்.’ சுமை தூக்கும் ஒரு மிருகம், தாற்றுக்கோலின் கூரிய நுனியில் உதைத்தால் அது தேவையில்லாமல் தன்னையே காயப்படுத்திக்கொள்ளும்; அதேபோல், பவுலும் கடவுளுடைய சித்தத்தை எதிர்ப்பதன் மூலம் ஆன்மீக ரீதியில் தன்னையே காயப்படுத்திக்கொண்டார். அவருக்குப் பக்திவைராக்கியம் இருந்தது, ஆனால் திருத்தமான அறிவுக்கேற்ற பக்திவைராக்கியம் இல்லை. என்றாலும், தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்த வழியில் அவருக்குக் காட்சி அளித்ததன் மூலம் இயேசு அவருடைய சிந்தையை அடியோடு மாற்ற உதவினார்.—யோவா. 16:1, 2.
14 ஆம், பவுல் தன் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றங்களைச் செய்தார். அகிரிப்பாவிடம் அவர், “வானத்திலிருந்து தோன்றிய காட்சியைப் பார்த்தபோது எனக்குக் கிடைத்த கட்டளைக்கு நான் கீழ்ப்படியாமல் இருக்கவில்லை; மாறாக, மனந்திரும்ப வேண்டுமென்றும், மனந்திரும்புதலுக்கு ஏற்ற செயல்களைச் செய்து கடவுள் பக்கம் வர வேண்டுமென்றும் முதலில் தமஸ்குவிலும் பின்பு எருசலேமிலும் அறிவித்தேன்; அதன்பின், யூதேயா தேசத்தார் அனைவரிடமும் புறதேசத்தாரிடமும் அறிவித்தேன்” என்று சொன்னார். (அப். 26:19, 20) இயேசு கிறிஸ்து அவருக்குக் காட்சி அளித்தபோது கொடுத்த கட்டளையை அவர் பல வருடங்களாக நிறைவேற்றி வந்திருந்தார். பலன்? பவுல் அறிவித்த நற்செய்தியைக் கேட்டவர்கள் தங்களுடைய ஒழுக்கமற்ற, நேர்மையற்ற வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டு கடவுளிடம் திரும்பினார்கள். நல்ல குடிமக்களாக ஆனார்கள்; நாட்டின் சட்டம் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள்.
15 பவுலுடைய எதிரிகள் இந்த நன்மைகளையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பவுல் இவ்வாறு சொன்னார்: “இதற்காகத்தான் யூதர்கள் என்னை ஆலயத்தில் பிடித்துக் கொல்லப் பார்த்தார்கள். ஆனாலும், கடவுள் எனக்கு உதவியதால் இந்நாள்வரை சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சி கொடுத்து வருகிறேன்.”—அப். 26:21, 22.
16 உண்மைக் கிறிஸ்தவர்களான நாம் ‘நம்முடைய நம்பிக்கையைக் குறித்துக் கேள்வி கேட்கிறவர்களுக்கு . . . பதில் சொல்ல எப்போதும் தயாராயிருக்க’ வேண்டும். (1 பே. 3:15) அகிரிப்பாவிடமும் பெஸ்துவிடமும் பவுல் பேசியதைப் போலவே நாமும் நீதிபதிகளிடமும் அதிகாரிகளிடமும் பேச முயலலாம். பைபிள் சத்தியங்களின்படி நடந்ததால் நம்முடைய வாழ்க்கையிலும் மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் என்ன நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை நாம் மரியாதையுடன் சொல்வது, அந்த அதிகாரிகளின் மனதைத் தொடலாம்.
“ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!”
18 ஆளுநர் பெஸ்து அப்படிக் கத்தியதும் பவுல், “மாண்புமிகு பெஸ்து அவர்களே, எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை, நான் சத்திய வார்த்தைகளைப் பேசுகிறேன், அர்த்தமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன். உண்மையில், இந்த விஷயங்களைப் பற்றி ராஜாவுக்கு நன்றாகவே தெரியும்; அதனால்தான் தயக்கமில்லாமல் நான் அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்; . . . அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்களா? நம்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார். அப்போது அகிரிப்பா, “இப்படிப் பக்குவமாகப் பேசிப்பேசி கொஞ்ச நேரத்தில் என்னைக் கிறிஸ்தவனாக்கிவிடுவாய் போலிருக்கிறதே” என்று சொன்னார். (அப். 26:25-28) அவர் இதை மனதார சொன்னாரோ இல்லையோ பவுலுடைய வார்த்தைகள் அவரை வெகுவாகப் பாதித்திருந்ததையே இது காட்டுகிறது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
அப் 26:14-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
தார்க்கோலை உதைத்துக்கொண்டே: தார்க்கோல் என்பது விலங்குகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான தடி. (நியா 3:31) “தார்க்கோலை உதைப்பது” என்பது கிரேக்க இலக்கியங்களில் காணப்படும் ஒரு பழமொழி. ஒரு முரட்டுக் காளை தார்க்கோலை உதைத்துத்தள்ளினால் அதற்குத்தான் காயம் ஏற்படும். இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் பழமொழி உருவானது. கிறிஸ்தவராக ஆவதற்கு முன்னால் பவுலும் ஒரு முரட்டுக் காளையைப் போல நடந்துகொண்டார். யெகோவாவின் ஆதரவைப் பெற்ற இயேசுவின் சீஷர்களை அவர் எதிர்த்தார். அதனால், அவருக்குத்தான் பயங்கரமான ஆபத்து வரவிருந்தது. (ஒப்பிடுங்கள்: அப் 5:38, 39; 1தீ 1:13, 14) ஞானமுள்ளவர் பேசும் வார்த்தைகள் “தார்க்கோல்களுக்கு சமம்” என்று பிர 12:11-ல் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட வார்த்தைகள் கேட்பவர்களைச் செயல்படத் தூண்டும்.
nwt சொல் பட்டியல்
தார்க்கோல். கூர்மையான உலோக முனையைக் கொண்ட நீளமான தடி. விலங்குகளை ஓட்ட விவசாயிகள் இதைப் பயன்படுத்தினார்கள். ஞானமுள்ளவரின் வார்த்தைகள், கேட்பவர்களைச் செயல்படத் தூண்டுவதால் அவை தார்க்கோலுக்கு ஒப்பிடப்படுகின்றன. அடங்காத ஒரு காளையைத் தார்க்கோலால் குத்தினாலும், அது பணிந்துபோகாமல் தார்க்கோலை உதைத்து உதைத்து தன்னையே காயப்படுத்திக்கொள்ளும். இதை வைத்துதான் “தார்க்கோலை உதைத்துக்கொண்டே இருப்பது” என்ற சொற்றொடர் வந்தது.—அப் 26:14; நியா 3:31.
ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுங்கள்
14 அகிரிப்பா பெயரளவுக்கு மட்டுமே யூதராக இருந்ததை பவுல் அறிந்திருந்தார். யூதேய மதத்தைப் பற்றி அகிரிப்பா அறிந்திருந்த விஷயங்களை சுட்டிக்காட்டி, மேசியாவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி ‘தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தவற்றை’ பற்றியே தான் பிரசங்கித்ததாகவும் ‘வேறொன்றையும் தான் சொல்லவில்லை’ என்றும் பவுல் நியாயங்காட்டி பேசினார். (அப்போஸ்தலர் 26:22, 23) அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா?” என நேரடியாக அவரைப் பார்த்து பவுல் கேட்டார். இப்போது அகிரிப்பாவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கவில்லை என்று சொன்னால் யூத மதத்தவர் என்ற தன் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும். அதேசமயத்தில் பவுலுடைய நியாய விவாதத்தை அவர் ஒப்புக்கொண்டால் வெளிப்படையாக பவுலை ஆதரிப்பதாக ஆகிவிடும், கிறிஸ்தவர் என அழைக்கப்படும் நிலையும் ஏற்படும். ‘விசுவாசிக்கிறீர் என்று அறிவேன்’ என தன் கேள்விக்கு தானே ஞானமாக பதிலளித்தார். அப்போது அகிரிப்பாவின் இருதயம் என்ன சொல்லும்படி அவரை தூண்டியது? “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய்” என அவர் சொன்னார். (அப்போஸ்தலர் 26:27, 28) அகிரிப்பா கிறிஸ்தவராகாவிட்டாலும் பவுல் தன்னுடைய செய்தியால் அவருடைய இருதயத்தை ஓரளவு தூண்டுவித்தார் என்பது தெரிகிறது.—எபிரெயர் 4:12.
ஜனவரி 28–பிப்ரவரி 3
பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 27-28
“பவுல் ரோமுக்குக் கப்பலில் போகிறார்”
“நீங்கள் யாருமே உயிரை இழக்க மாட்டீர்கள்”
15 ‘கடவுள் கொடுத்த நம்பிக்கையான வாக்குறுதியை’ பற்றிக் கப்பலிலிருந்த அநேகரிடம் பவுல் சாட்சி கொடுத்துவந்திருக்கலாம். (அப். 26:6; கொலோ. 1:5) கப்பற்சேதம் உண்டாகிற நிலைமை ஏற்பட்டபோது, அவர்களுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என நம்புவதற்குரிய பலமான ஆதாரத்தை பவுல் அளித்தார்; அவர் இவ்வாறு சொன்னார்: “கடவுள் தம்முடைய தூதரை அனுப்பினார்; அவர் நேற்று இரவு என் அருகே வந்து நின்று, ‘பவுலே, பயப்படாதே. நீ ரோம அரசன்முன் நிற்க வேண்டும். இதோ! உன்னுடன் பயணம் செய்கிற எல்லாருடைய உயிரையும் கடவுள் காப்பாற்றுவார்’ என்றார். அதனால் நண்பர்களே, தைரியமாய் இருங்கள்; கடவுள்மீது நான் நம்பிக்கையாக இருக்கிறேன், என்னிடம் சொல்லப்பட்டபடியே நடக்கும். ஆனாலும், நாம் ஒரு தீவில் தள்ளப்படுவோம்.”—அப். 27:23-26.
“நீங்கள் யாருமே உயிரை இழக்க மாட்டீர்கள்”
18 உயிர்தப்பியவர்கள் சிசிலியாவின் தெற்கே இருந்த மெலித்தா தீவில் கரைசேர்ந்தார்கள். (“மெலித்தா—எங்கே இருந்தது?” என்ற பெட்டியைக் காண்க.) அயல்மொழி பேசிய அந்தத் தீவுவாசிகள் “அளவுகடந்த மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டார்கள்.” (அப். 28:2) தொப்பலாக நனைந்து நடுநடுங்கியபடி கரைசேர்ந்தவர்களுக்காக, அதுவும் முன்பின் தெரியாதவர்களுக்காக, தீவுவாசிகள் நெருப்பு மூட்டி குளிர்காய உதவினார்கள். மழையிலும் குளிரிலும் அந்த நெருப்பு அவர்களுக்கு இதமாக இருந்தது. அதோடு, ஓர் அற்புதம் நிகழ்வதற்கும் காரணமாக இருந்தது.
“நீங்கள் யாருமே உயிரை இழக்க மாட்டீர்கள்”
21 புபிலியு என்ற பணக்காரர் மெலித்தாவில் வசித்துவந்தார்; அவர் நிலபுலன்களுக்குச் சொந்தக்காரர். அங்கே அவர் ஒரு பிரபல ரோம அதிகாரியாக இருந்திருக்கலாம். அவர் ‘அத்தீவின் முக்கியத் தலைவர்’ என லூக்கா விவரித்தார்; மெலித்தாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளில் அதே பட்டப்பெயர் உள்ளது. பவுலையும் அவருடைய தோழர்களையும் அவர் மூன்று நாட்களுக்கு அன்போடு உபசரித்தார். புபிலியுவின் தகப்பனோ நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். அது எந்த விதமான நோய் என லூக்கா மிகத் துல்லியமாக விவரித்தார்; “சீதபேதியினாலும் காய்ச்சலினாலும் அவதிப்பட்டுப் படுக்கையில் கிடந்தார்” எனக் குறிப்பிட்டார். பவுல் ஜெபம் செய்து, அவர்மீது கைகளை வைத்து அவரைக் குணமாக்கினார். இந்த அற்புதத்தைக் கண்டு அசந்துபோன தீவுவாசிகள், தீவிலிருந்த மற்ற நோயாளிகளை அங்கு அழைத்துவர ஆரம்பித்தார்கள்; அதோடு, பவுலுக்கும் அவருடைய தோழர்களுக்கும் தேவையான பொருள்களையெல்லாம் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.—அப். 28:7-10.
‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
10 பவுலும் அவரோடு இருந்த சகோதரர்கள் அனைவரும் கடைசியாக ரோமாபுரிக்கு வந்துசேர்ந்தார்கள்; அப்போது, “ஒரு படைவீரனுடைய காவலில் தனி வீட்டிலே தங்கியிருக்க பவுல் அனுமதி பெற்றார்.” (அப். 28:16) இப்படி வீட்டுக்காவலில் வைக்கப்படும் கைதிகள் தப்பித்துப்போகாமல் இருக்க காவல்காக்கும் வீரர்களோடு சேர்ந்து சங்கிலியால் இணைக்கப்பட்டார்கள். பவுலும்கூட அப்படிச் சங்கிலியால் இணைக்கப்பட்டார்; ஆனாலும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர் பிரசங்கித்துவந்தார்; ஆம், அவருடைய கைக்குத்தான் சங்கிலி போட முடிந்ததே தவிர, வாய்க்கு அல்ல. ஆகையால், பவுல் பயணக் களைப்பிலிருந்து ஓய்வெடுத்த மூன்றே நாட்களுக்குள், ரோமாபுரியிலிருந்த பிரபல யூத ஆண்களைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார், அவர்களுக்குச் சாட்சியும் கொடுத்தார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
அப் 27:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
பாவப் பரிகார விரத நாளும்: வே.வா., “இலையுதிர் கால விரத நாளும்.” நே.மொ., “அந்த விரத நாளும்.” கிரேக்கில் ‘அந்த விரத நாள்’ என்று சொல்லப்பட்டிருப்பது, திருச்சட்டத்தில் கட்டளையிடப்பட்ட ஒரே விரத நாளைக் குறிக்கிறது. அதாவது, வருஷாவருஷம் பாவப் பரிகார நாளில் கடைப்பிடிக்கப்பட்ட விரதத்தைக் குறிக்கிறது. அந்த நாள் யொம் கிப்புர் என்றும் அழைக்கப்படுகிறது. (யொம் ஹக்கிப்புரிம் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்தது. இதற்கு “மூடுவதற்கான நாள்“ என்று அர்த்தம்) (லேவி 16:29-31; 23:26-32; எண் 29:7; சொல் பட்டியலில் “பாவப் பரிகார நாள்” என்ற தலைப்பைப் பாருங்கள்.) பாவப் பரிகார நாளில் எல்லாரும் ‘தங்களையே வருத்திக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லப்பட்டது. விரதம் இருப்பதன் மூலமோ வேறு விதத்தின் மூலமோ தங்களைத் தாங்களே கஷ்டப்படுத்திக்கொள்வதை அது குறித்ததென்று பொதுவாக நம்பப்படுகிறது. (லேவி 16:29, அடிக்குறிப்பு) அப் 27:9-ல் ‘அந்த விரத நாள்’ என்று கிரேக்கில் சொல்லப்பட்டிருப்பது, பாவப் பரிகார நாளில் முக்கியமாக விரதம் இருப்பதன் மூலமாகத்தான் மக்கள் தங்களையே வருத்திக்கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அந்த விரத நாள் செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத ஆரம்பத்தில் வந்தது.
அப் 28:11-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
சீயுசின் மகன்களுடைய: கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் புராணங்களின்படி, இரட்டைச் சகோதரர்களான கேஸ்டர் மற்றும் போலக்ஸ்தான் ‘சீயுசின் மகன்கள்.’ (கிரேக்கில், டையோஸ்கௌராய்) இவர்கள் சீயுஸ் (ஜூப்பிட்டர்) தெய்வத்துக்கும் ஸ்பார்டா நகரத்தின் ராணி லேடாவுக்கும் பிறந்தவர்கள். கப்பலில் பயணம் செய்கிறவர்களை ஆபத்திலிருந்து அவர்கள் காப்பாற்றுவதாக மக்கள் நம்பினார்கள்; தங்களுக்கு இன்னும் பல உதவிகள் செய்வதாகவும் நம்பினார்கள். கப்பலில் இந்தச் சின்னம் இருந்ததாகச் சொல்லப்பட்டிருப்பது, கண்ணாரப் பார்த்த ஒருவர்தான் இந்தப் பதிவை எழுதினார் என்பதற்கு இன்னொரு அத்தாட்சியாக இருக்கிறது.