உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwbr20 டிசம்பர் பக். 1-6
  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்—பயிற்சி புத்தகம் (2020)
  • துணை தலைப்புகள்
  • டிசம்பர் 7-13
  • டிசம்பர் 14-20
  • டிசம்பர் 21-27
  • டிசம்பர் 28–ஜனவரி 3
வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்—பயிற்சி புத்தகம் (2020)
mwbr20 டிசம்பர் பக். 1-6

வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்

டிசம்பர் 7-13

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 10-11

“குடும்பத்தாரைவிட யெகோவாவை அதிகமாக நேசியுங்கள்”

it-1-E பக். 1174

அத்துமீறல்

அத்துமீறி தூபம் காட்டுதல். லேவியராகமம் 10:1 சொல்கிறபடி, ஆரோனின் மகன்களான நாதாபும் அபியூவும் “யெகோவா ஏற்றுக்கொள்ளாத விதத்தில், அத்துமீறி” அவருடைய சன்னிதியில் “தூபம் காட்டினார்கள்.” “அத்துமீறி” என்பதற்கான எபிரெய வார்த்தை, சார் (பெண்பால், சாரா; நேரடி அர்த்தம், விநோதம்). அவர்கள் அத்துமீறியதால், யெகோவாவின் சன்னிதியிலிருந்து நெருப்பு வந்து அவர்களைச் சுட்டுப் பொசுக்கியது. (லேவி 10:2; எண் 3:4; 26:61) அதன்பின் யெகோவா ஆரோனிடம், “நீயும் உன்னோடு இருக்கிற உன் மகன்களும் திராட்சமதுவோ வேறெந்த மதுவோ குடித்துவிட்டு சந்திப்புக் கூடாரத்துக்குள் வரக் கூடாது. அப்படி வந்தால் செத்துப்போவீர்கள். தலைமுறை தலைமுறைக்கும் இதை உங்களுக்கு நிரந்தரச் சட்டமாகத் தருகிறேன். ஏனென்றால், பரிசுத்தமான காரியங்களுக்கும் பரிசுத்தமில்லாத காரியங்களுக்கும், சுத்தமான காரியங்களுக்கும் அசுத்தமான காரியங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் காட்ட வேண்டும். அதோடு, யெகோவாவாகிய நான் மோசே மூலம் கொடுத்த எல்லா விதிமுறைகளையும் நீங்கள் இஸ்ரவேலர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்” என்று சொன்னார். (லேவி 10:8-11) இதை வைத்துப் பார்க்கும்போது, நாதாபும் அபியூவும் குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. அதனால்தான், அத்துமீறி தூபம் காட்டுகிற துணிச்சல் அவர்களுக்கு வந்தது. அவர்கள் எந்த அர்த்தத்தில் ‘அத்துமீறினார்கள்’? தவறான நேரத்தில், இடத்தில், அல்லது விதத்தில் அவர்கள் தூபம் காட்டியிருக்கலாம். அல்லது யாத்திராகமம் 30:34, 35-ல் சொல்லப்பட்டதுபோல் தயாரிக்கப்படாத தூபத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். அவர்கள் குடிபோதையில் இருந்தார்கள் என்பதற்காக அவர்கள் செய்தது பாவம் இல்லை என்று ஆகிவிடாது.

w11 7/15 பக். 31 பாரா 16

நீங்கள் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்கிறீர்களா?

16 மோசேயின் சகோதரன் ஆரோன் தன்னுடைய இரண்டு மகன்கள் செய்த காரியத்தின் நிமித்தம் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். நாதாப், அபியூ என்ற அவருடைய மகன்கள் யெகோவாவுடைய கட்டளைக்கு எதிராக நெருப்பை அவருடைய சன்னதிக்குக் கொண்டு போனார்கள். அதனால், அவர் வானத்திலிருந்து நெருப்பை அனுப்பி அவர்களைக் கொன்று போட்டார். அந்தச் சமயத்தில் ஆரோன் எந்தளவுக்குத் துடிதுடித்திருப்பார் என்பதை நினைத்துப் பாருங்கள். தன்னுடைய மகன்களுடன் இனி பேச முடியாமல் அவர் கஷ்டப்பட்டிருக்கலாம். ஆனால், அவரும் அவருடைய மற்ற மகன்களும் இதைவிட பெரிய கஷ்டத்தையும் எதிர்ப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை வெளிக்காட்டக் கூடாதென யெகோவா சொன்னதாக மோசே அவர்களிடம் தெரிவித்தார். “நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக” என்று மோசே சொன்னார். (லேவி. 10:1-6) இதில் நமக்கென்ன பாடம்? யெகோவாவுக்கு உண்மையாய் இராத குடும்ப அங்கத்தினரைவிட யெகோவாவையே நாம் அதிகம் நேசிக்க வேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w14 11/15 பக். 17 பாரா 18

எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்

18 பரிசுத்தமாக இருப்பதற்கு நாம் பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்க வேண்டும். அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் வேண்டும். ஆரோனுடைய மகன்களின் உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். நாதாபும் அபியூவும் யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்தார்கள். அவர்கள் ஒருவேளை குடி போதையில் ஆலயத்திற்குள் போயிருக்கலாம். (லேவி. 10:1, 2) இந்தச் சம்பவம் நடந்த பிறகு ஆரோனுக்கு கடவுள் ஒரு கட்டளை கொடுத்தார். இது லேவியராகமம் 10:8-11-ல் (வாசியுங்கள்.) இருக்கிறது. அப்படியென்றால், சபைக் கூட்டங்களுக்கு போவதற்கு முன்பு நாம் குடிக்கலாமா? இதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: இன்று நாம் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. (ரோ. 10:4) இயேசு பஸ்கா பண்டிகையின்போது திராட்சை மதுவை பயன்படுத்தினார். பிறகு, கடைசி இரவு விருந்தின்போது அவர் தம்முடைய இரத்தத்தை அடையாளப்படுத்தும் திராட்சை மதுவைக் குடிக்கும்படி சீடர்களிடம் சொன்னார். (மத். 26:27) அளவுக்கு அதிகமாகக் குடிப்பதையும் குடிவெறியையும்தான் பைபிள் தவறு என்று சொல்கிறது. (1 கொ. 6:10; 1 தீ. 3:8) சில நாடுகளில், யெகோவாவின் சாட்சிகள் உணவு சாப்பிடும்போது அளவாக குடிக்கிறார்கள்; பிறகு கூட்டங்களுக்குப் போகிறார்கள். ஆனால் நிறைய பேர், கூட்டங்களுக்கோ ஊழியத்திற்கோ போவதற்கு முன்பு குடிப்பதை சுத்தமாகத் தவிர்க்கிறார்கள். நாட்டுக்கு நாடு பழக்க வழக்கங்களும் சூழ்நிலைகளும் மாறுவதால் நம் சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானம் எடுக்க வேண்டும். “பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும்” உள்ள வித்தியாசத்தைப் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருப்போம்; யெகோவாவையும் சந்தோஷப்படுத்துவோம்.

it-1-E பக். 111 பாரா 5

விலங்குகள்

“அவை உங்களுக்கு [அதாவது, இஸ்ரவேலர்களுக்கு] அசுத்தமானது” என்று லேவியராகமம் 11:8 சொன்னது. அதனால், எந்தெந்த விலங்குகளைச் சாப்பிடலாம், எந்தெந்த விலங்குகளைச் சாப்பிடக் கூடாது என்ற விதிமுறைகள் திருச்சட்டத்தின்கீழ் இருந்தவர்களுக்கு மட்டும்தான் பொருந்தின. இயேசு கிறிஸ்துவின் தியாக மரணம் திருச்சட்டத்துக்கு முடிவுகட்டியபோது, அந்த விதிமுறைகளும் முடிவுக்கு வந்தன. அதுமுதல், மறுபடியும் எல்லா மனிதர்களும் ஒரே பொதுவான சட்டத்துக்கு மட்டும் கட்டுப்பட வேண்டியிருக்கிறது. பெருவெள்ளத்துக்குப் பிறகு நோவாவிடம் சொல்லப்பட்ட சட்டம்தான் அது.—கொலோ 2:13-17; ஆதி 9:3, 4.

டிசம்பர் 14-20

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 12-13

“தொழுநோய் சம்பந்தப்பட்ட சட்டங்களிலிருந்து பாடங்கள்”

wp18.1 பக். 7

பைபிள் துல்லியமானதா?

• நோயாளிகளைப் பிரித்துவைப்பது.

தொழுநோயாளிகளை மற்றவர்களிடமிருந்து பிரித்துவைக்க வேண்டும் என்று மோசேயின் திருச்சட்டம் குறிப்பிட்டது. ஆனால், சுமார் 700 வருஷங்களுக்கு முன்பு, கொடிய நோய்கள் மக்களைத் தாக்கிய பிறகுதான், மருத்துவர்கள் இந்த ஆலோசனையைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். இந்த ஆலோசனை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.—லேவியராகமம் அதிகாரங்கள் 13, 14.

wp16.3 பக். 9 பாரா 1

உங்களுக்குத் தெரியுமா?

பழங்காலத்தில் வாழ்ந்த யூதர்கள் ஒருவகையான தொழுநோய்க்கு பயந்து நடுங்கினார்கள்; பைபிள் காலங்களில், இந்தத் தொழுநோய் சாதாரணமாக காணப்பட்டது. பயங்கரமான அந்த நோய் ஒருவருடைய நரம்பு முனைகளை (nerve endings) தாக்கும், பின்பு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு, உடலுறுப்புகளை உருக்குலைத்துவிடும். இந்தத் தொழுநோய்க்கு எந்தவித நிவாரணமும் இல்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். மற்றவர்கள் யாராவது பக்கத்தில் வந்தால் அவர்களை எச்சரிக்க வேண்டும்.—லேவியராகமம் 13:45, 46.

it-2-E பக். 238 பாரா 3

தொழுநோய்

உடைகளிலும் வீடுகளிலும். கம்பளி உடைகளை, நாரிழை உடைகளை, அல்லது தோல் பொருள்களைக்கூட தொழுநோய் தாக்கியது. தண்ணீரில் கழுவியபோது சிலசமயங்களில் அந்தத் தொழுநோய் போய்விட்டது. ஆனால், மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் அல்லது சிவப்பு நிறத்தில் அந்தக் கறை விடாப்பிடியாக படிந்திருந்தால், அது கொடிய தொழுநோயாக இருந்தது. அதனால், அந்தப் பொருளை எரித்துவிட வேண்டியிருந்தது. (லேவி 13:47-59) ஒரு வீட்டின் சுவரில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலோ சிவப்பு நிறத்திலோ குழிகள் விழுந்திருந்தால் குருவானவர் அந்த வீட்டை ஏழு நாட்களுக்கு அடைத்து வைப்பார். சிலசமயம், தொற்று பரவிய இடத்திலுள்ள கற்களைப் பெயர்த்து, அந்த வீட்டுக்குள் இருக்கிற சுவர்களின் காரையை முழுவதுமாகக் கொத்தியெடுக்க வேண்டியிருந்தது. கொத்தியெடுக்கப்பட்ட காரையை நகரத்துக்கு வெளியே அசுத்தமான பொருள்கள் கொட்டும் இடத்தில் எறிந்துவிட வேண்டியிருந்தது. மறுபடியும் தொற்று வந்திருந்தால், அந்த வீடு தீட்டானது என்று அறிவித்து, அதை முழுவதுமாக இடித்துப் போட்டு, அந்தப் பொருளையெல்லாம் நகரத்துக்கு வெளியே அசுத்தமான பொருள்கள் கொட்டும் இடத்தில் எறிய வேண்டியிருந்தது. மறுபடியும் தொற்று வராதிருந்தால், அந்த வீடு தீட்டில்லாதது என்று அறிவித்து, முறைப்படி சுத்திகரிப்பு செய்ய வேண்டியிருந்தது. (லேவி 14:33-57) உடைகளையோ வீடுகளையோ தாக்கிய தொழுநோய் ஒருவகை பூஞ்சணமாகவோ பூஞ்சக்காளானாகவோ இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது, ஆனால் இது உறுதியாகத் தெரியாது.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w04 5/15 பக். 23 பாரா 3

லேவியராகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

12:2, 5—குழந்தைப்பேறு ஒரு பெண்ணை ஏன் ‘தீட்டுப்படுத்தியது’? பரிபூரண மனித உயிரை கடத்துவதற்காகவே இனவிருத்தி உறுப்புக்கள் உண்டாக்கப்பட்டன. என்றாலும், சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் பாதிப்புகளால் பாவமுள்ள அபூரண உயிரே பிள்ளைகளுக்கு கடத்தப்பட்டது. குழந்தைப்பேற்றினால் சிறிது காலத்திற்கு ‘தீட்டுப்பட்டிருப்பதும்,’ மாதவிடாய், இந்திரியம் கழிதல் ஆகியவையும் பரம்பரையாய் சுதந்தரித்த இந்தப் பாவத்தையே மனதிற்கு கொண்டு வந்தன. (லேவியராகமம் 15:16-24; சங்கீதம் 51:5; ரோமர் 5:12) இஸ்ரவேலர் செய்ய வேண்டியிருந்த சுத்திகரிப்பு முறைமைகள், மனிதகுலத்தின் பாவத்தை போக்குவதற்கும் மீண்டும் பரிபூரணத்தை அடைவதற்கும் மீட்கும் பலி அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். இவ்வாறு, நியாயப்பிரமாணம் ‘கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்தும் உபாத்தியாய்’ ஆனது.—கலாத்தியர் 3:24.

wp18.1 பக். 7

பைபிள் துல்லியமானதா?

• விருத்தசேதனம் செய்யப்படும் நாள்.

ஆண் குழந்தை பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்று கடவுளுடைய சட்டம் சொன்னது. (லேவியராகமம் 12:3) குழந்தை பிறந்த ஒரு வாரத்துக்குப் பிறகுதான் இரத்தத்துக்கு உறையும் தன்மை கிடைக்கிறது. பைபிள் காலங்களில், நவீன மருத்துவ சிகிச்சைகள் இல்லாதபோது, குழந்தை பிறந்த ஒரு வாரத்துக்குப் பிறகு விருத்தசேதனம் செய்தது ஒரு ஞானமான செயலாக இருந்தது.

டிசம்பர் 21-27

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 14-15

“தூய வணக்கத்துக்கு சுத்தமாக இருப்பது முக்கியம்”

it-1-E பக். 263

குளிப்பது

பல சந்தர்ப்பங்களில், இஸ்ரவேலர்கள் தூய்மைச் சடங்குக்கென்று குளிப்பது அவசியமாக இருந்தது. உதாரணத்துக்கு, ஒருவர் தொழுநோயிலிருந்து குணமானால்... “ஒழுக்கு நோயுள்ளவன்” தொட்ட பொருள்களை ஒருவர் தொட்டுவிட்டால்... ஒருவருக்கு விந்து வெளியேறினால்... ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு அல்லது இரத்தப்போக்கு ஏற்பட்டால்... ஒரு தம்பதி உடலுறவு வைத்துக்கொண்டால்... அவர்கள் “தீட்டுள்ளவர்களாக” இருந்தார்கள். அதனால், அவர்கள் குளிக்க வேண்டியிருந்தது. (லேவி 14:8, 9; 15:4-27) பிணம் இருக்கும் கூடாரத்துக்குள் போகிறவர்கள் அல்லது பிணத்தைத் தொடுகிறவர்கள் ‘தீட்டுள்ளவர்களாக’ இருந்தார்கள். அதனால், சுத்திகரிப்பு நீரினால் தங்களைத் தூய்மையாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. அப்படிச் செய்யாதவன் “சபையில் இல்லாதபடி கொல்லப்பட வேண்டும். ஏனென்றால், அவன் யெகோவாவின் கூடாரத்தைத் தீட்டுப்படுத்திவிட்டான்” என்று கடவுளுடைய சட்டம் சொன்னது. (எண் 19:20) அதனால், தண்ணீரால் கழுவுவது அல்லது குளிப்பது யெகோவாவுக்குமுன் சுத்தமாக இருப்பதற்கு அடையாளமாக இருந்தது. (சங் 26:6; 73:13; ஏசா 1:16; எசே 16:9) யெகோவாவின் சத்திய வார்த்தை என்ற தண்ணீருக்கு நம்மை சுத்திகரிக்கும் வல்லமை இருக்கிறது.—எபே 5:26.

it-2-E பக். 372 பாரா 2

மாதவிலக்கு

மாதவிலக்கு அல்லாத சமயத்தில் ஒரு பெண்ணுக்குப் பல நாட்கள் இரத்தப்போக்கு ஏற்பட்டால், அல்லது “மாதவிலக்கு நாட்கள் முடிந்தும் இரத்தப்போக்கு நீடித்தால்” அவள் தீட்டுள்ளவளாக இருந்தாள். அந்த நாட்களில் அவள் எதன்மேல் படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும் அது தீட்டுள்ளதாக இருந்தது. அவற்றைத் தொடுகிறவர்கள் தீட்டுள்ளவர்களாக இருந்தார்கள். அவளுடைய இரத்தப்போக்கு நின்றுவிட்டால், அது நின்று ஏழு நாட்களுக்குப் பின்பு அவளுடைய தீட்டு நீங்கியது. எட்டாம் நாளில் இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ குருவானவரிடம் அவள் கொடுக்க வேண்டியிருந்தது. குருவானவர் அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் செலுத்தி, யெகோவாவின் முன்னிலையில் அவளுக்குப் பாவப் பரிகாரம் செய்ய வேண்டியிருந்தது.—லேவி 15:19-30.

it-1-E பக். 1133

பரிசுத்த இடம்

2. சந்திப்புக் கூடாரம், பிற்பாடு ஆலயம். வழிபாட்டுக் கூடாரத்தின் பிரகாரமும் சரி, ஆலயத்தின் பிரகாரங்களும் சரி, பரிசுத்த இடங்களாக இருந்தன. (யாத் 38:24; 2நா 29:5; அப் 21:28) பிரகாரத்தில் முக்கியமாக பலிபீடமும் வெண்கலத் தொட்டியும் வைக்கப்பட்டிருந்தன. அவை பரிசுத்தமான பொருள்களாக இருந்தன. சடங்காச்சார முறைப்படி சுத்தமாக இருந்தவர்கள் மட்டும்தான் வழிபாட்டுக் கூடாரத்தின் பிராகரத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் போக முடிந்தது. அதேபோல், தீட்டுப்பட்டிருந்த யாருமே ஆலயத்தின் பிரகாரங்களுக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. உதாரணத்துக்கு, தீட்டுள்ள ஒரு பெண் பரிசுத்தமான பொருள்களைத் தொடுவதற்கோ பரிசுத்த இடத்துக்குள் போவதற்கோ அனுமதிக்கப்படவில்லை. (லேவி 12:2-4) இஸ்ரவேலர்கள் தீட்டிலிருந்து விலகாமல் இருந்தபோதும் வழிபாட்டுக் கூடாரத்தை அவர்கள் தீட்டுப்படுத்தியதாகக் கருதப்பட்டது. (லேவி 15:31) தொழுநோயிலிருந்து தங்களை சுத்திகரிப்பதற்காகக் காணிக்கைகளைக் கொண்டுபோனவர்கள் பிரகாரத்தின் நுழைவாசல்வரைதான் அனுமதிக்கப்பட்டார்கள். (லேவி 14:11) தீட்டுள்ளவர்கள் வழிபாட்டுக் கூடாரத்திலோ ஆலயத்திலோ சமாதான பலியின் இறைச்சியைச் சாப்பிட்டுவிட்டால் அவர்கள் கொல்லப்பட வேண்டியிருந்தது.—லேவி 7:20, 21.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

it-1-E பக். 665 பாரா 5

காது

இஸ்ரவேலில் குருமார்கள் நியமிக்கப்பட்டபோது, அதற்காக பலி செலுத்தப்பட்ட செம்மறியாட்டுக் கடாவின் இரத்தத்தில் கொஞ்சத்தை மோசே எடுத்து, ஆரோன் மற்றும் அவருடைய மகன்களுடைய வலது காது மடலிலும் வலது கையிலும் வலது காலிலும் பூச வேண்டியிருந்தது. அவர்கள் கேட்கிற விஷயங்கள், செய்கிற விஷயங்கள், போகிற வழி என எல்லாமே அவர்கள் அங்கே செய்யும் பரிசுத்த சேவைக்குத் தகுந்தபடி இருக்க வேண்டியிருந்ததை அது காட்டியது. (லேவி 8:22-24) அதேபோல், குற்ற நிவாரண பலியாக செலுத்தப்பட்ட செம்மறியாட்டுக் கடாவின் இரத்தத்திலும் எண்ணெயிலும் கொஞ்சத்தைக் குருவானவர் எடுத்து, தொழுநோயிலிருந்து சுத்திகரிக்கப்படுகிற நபரின் வலது காதில் பூச வேண்டுமென்று திருச்சட்டம் சொன்னது. (லேவி 14:14, 17, 25, 28) வாழ்நாள் முழுவதும் தன் எஜமானுக்கு அடிமையாக இருக்க விரும்பியவர்களின் விஷயத்திலும் இதேபோல் செய்யப்பட்டது. அவர்களுடைய எஜமான் அவர்களைக் கதவின் நிலைக்காலுக்குப் பக்கத்தில் கொண்டுவந்து, ஒரு ஊசியால் அவர்களுடைய காதைக் குத்த வேண்டியிருந்தது. கேட்கும் திறனுள்ள உறுப்பில் இப்படிப்பட்ட நிரந்தரமான அடையாளக்குறியைப் போடுவது, அந்த அடிமைகள் எப்போதுமே தங்கள் எஜமான் சொல்வதைக் கேட்டு நடக்க விரும்பியதற்கு அடையாளமாக இருந்தது.—யாத் 21:5, 6.

g 1/06 பக். 14, பெட்டி

பூஞ்சணம் நண்பனும் பகைவனும்!

பூஞ்சணத்தைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறதா?

‘ஒரு வீட்டிலே [அதாவது, அந்தக் கட்டடத்திலே] குஷ்டதோஷம்’ இருப்பதைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (லேவியராகமம் 14:34-48) “வீட்டை அரிக்கிற குஷ்டம்” என்றும்கூட அழைக்கப்படுகிற அது, பூஞ்சக்காளானின் அல்லது பூஞ்சானின் ஒரு வகையாகும், ஆனால் அதை உறுதியாகக் கூற முடியாது. அது என்னவாக இருந்தாலும், அரிக்கப்பட்ட கற்களை நீக்க வேண்டுமென்றும், வீட்டின் உட்பகுதிச் சுவர் முழுவதையும் சுரண்டியெடுக்க வேண்டுமென்றும், சந்தேகத்திற்குரிய எல்லாப் பொருள்களையும் நகருக்குப் புறம்பே “அசுத்தமான ஒரு இடத்திலே” அப்புறப்படுத்த வேண்டுமென்றும் கடவுளுடைய சட்டம் வீட்டுச் சொந்தக்காரர்களுக்குக் கட்டளையிட்டது. ஒருவேளை அந்தத் தோஷம் மீண்டும் ஏற்பட்டால், முழு வீடும் தீட்டானது என்று அறிவிக்கப்பட்டு, இடிக்கப்பட வேண்டும், பிறகு அப்புறப்படுத்தப்பட வேண்டும். யெகோவா கொடுத்த விவரமான கட்டளைகள் தமது ஜனங்கள் மீதும், அவர்களுடைய ஆரோக்கியத்தின் மீதும் அவருக்கிருந்த ஆழ்ந்த அன்பையே வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

டிசம்பர் 28–ஜனவரி 3

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 16-17

“பாவப் பரிகார நாளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்”

w19.11 பக். 21 பாரா 4

லேவியராகமப் புத்தகம் சொல்லித்தரும் பாடங்கள்

4 லேவியராகமம் 16:12, 13-ஐ வாசியுங்கள். பாவப் பரிகார நாளில் நடந்ததையெல்லாம் உங்கள் மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள்: வழிபாட்டுக் கூடாரத்துக்குள் தலைமைக் குரு நுழைகிறார். அந்த நாளில் மொத்தம் மூன்று தடவை அவர் மகா பரிசுத்த அறைக்குள் போக வேண்டும். இப்போது, முதல் தடவையாகப் போகிறார். அவருடைய ஒரு கையில், நறுமணம் வீசும் தூபப்பொருள் அடங்கிய பாத்திரம்; இன்னொரு கையில், தணல்கள் நிரப்பப்பட்ட தங்கத் தூபக்கரண்டி. மகா பரிசுத்த அறைக்குள் நுழைவதற்கு முன், அந்த அறையின் நுழைவாசலில் போடப்பட்டிருக்கிற திரைச்சீலையின் முன் கொஞ்சம் நிற்கிறார். பிறகு, ஆழ்ந்த பயபக்தியோடு மகா பரிசுத்த அறைக்குள் நுழைந்து ஒப்பந்தப் பெட்டிக்கு முன் நிற்கிறார். ஒரு கருத்தில், யெகோவாவின் முன்னிலையிலேயே நிற்கிறார்! அதன்பின், பரிசுத்த தூபப்பொருளைக் கவனமாக தணல்மேல் போடுகிறார். உடனே அந்த அறை முழுவதும் நறுமணம் வீசுகிறது. பிற்பாடு, மிருக பலிகளின் இரத்தத்தை எடுத்துக்கொண்டு மறுபடியும் மகா பரிசுத்த அறைக்குள் போவார். ஆனால், அதற்கு முன்பு அவர் தூபப்பொருளை எரித்ததை மனதில் வையுங்கள்.

w19.11 பக். 21 பாரா 5

லேவியராகமப் புத்தகம் சொல்லித்தரும் பாடங்கள்

5 பாவப் பரிகார நாளில் தூபப்பொருள் எரிக்கப்பட்டதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். யெகோவாவின் உண்மை ஊழியர்கள் செய்கிற அர்த்தமுள்ள ஜெபங்கள் தூபப்பொருளைப் போல் இருப்பதாக பைபிள் சொல்கிறது. (சங். 141:2; வெளி. 5:8) தலைமைக் குரு தூபப்பொருளை ஆழ்ந்த பயபக்தியோடு யெகோவாவின் முன்னிலையில் கொண்டுபோனதை நினைத்துப் பாருங்கள். அதேபோல், நாம் இன்று யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது ஆழ்ந்த மரியாதையையும் பயபக்தியையும் காட்ட வேண்டும். அவர் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த கடவுள்! ஆனாலும், ஒரு பிள்ளை தன் அப்பாவிடம் பேசுவதுபோல் நாம் அவரிடம் பேசுவதற்கும் அவருடன் நெருக்கமாவதற்கும் அவர் நம்மை அனுமதிக்கிறார். (யாக். 4:8) தன்னுடைய நண்பர்களாக நம்மை அவர் ஏற்றுக்கொள்கிறார்! (சங். 25:14) இந்த அருமையான பாக்கியத்தை நாம் உயர்வாக மதிக்கிறோம். அதனால், அவருடைய மனதைக் கஷ்டப்படுத்த நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம்.

w19.11 பக். 21 பாரா 6

லேவியராகமப் புத்தகம் சொல்லித்தரும் பாடங்கள்

6 நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பலிகள் செலுத்துவதற்கு முன்பு தலைமைக் குரு தூபப்பொருளை எரிக்க வேண்டியிருந்தது. அதைச் செய்வதன் மூலம் யெகோவாவின் அங்கீகாரம் தனக்கு இருப்பதை அவர் உறுதி செய்துகொண்டார். இதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? இயேசு இந்தப் பூமியிலிருந்தபோது, மனிதர்களை மீட்பதற்காகத் தன்னையே பலியாகக் கொடுத்தார். ஆனால் அதற்கு முன்பு, மனிதர்கள் மீட்படைவதற்கு வழி செய்வதைவிட மிக முக்கியமான ஒரு விஷயத்தை அவர் செய்ய வேண்டியிருந்தது. அதாவது, தன்னுடைய பலியை யெகோவா ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் அவருக்கு உத்தமமாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டியிருந்தது. அதன் மூலம், யெகோவாவின் வழியில் நடப்பதுதான் சரியான வாழ்க்கைப் பாதை என்பதை அவர் நிரூபித்தார். யெகோவா ஆட்சி செய்யும் விதம்தான் சரியானது, நியாயமானது என்பதையும் அவர் நிரூபித்தார்.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

it-1-E பக். 226 பாரா 3

போக்கு ஆடு

மனிதர்களுடைய பாவங்களைப் போக்குவதற்காக இயேசு தன்னுடைய பரிபூரணமான மனித உயிரை பலியாகக் கொடுத்தார். அப்போஸ்தலன் பவுல் விளக்கியபடி, ‘காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தால்’ சாதிக்க முடியாத பெரிய விஷயத்தை இயேசுவின் பலி சாதித்தது. (எபி 10:4, 11, 12) இப்படி, அவர் ‘நம்முடைய வியாதிகளைச் சுமக்கும்’ ‘போக்கு ஆடாக’ ஆனார், ‘நம்முடைய குற்றத்துக்காக குத்தப்பட்டார்.’ (ஏசா 53:4, 5; மத் 8:17; 1பே 2:24) தன்னுடைய பலியின் மதிப்பில் விசுவாசம் வைக்கிற எல்லாருடைய பாவங்களையும் அவர் ‘சுமந்துகொண்டு போனார்.’ பாவம் முற்றிலும் நீக்கப்படுவதற்காகக் கடவுள் செய்த ஏற்பாடுதான் அது. இந்த விதங்களில் “போக்கு ஆடு” இயேசு கிறிஸ்துவின் பலிக்கு அடையாளமாக இருக்கிறது.

w14 11/15 பக். 10 பாரா 10

நாம் ஏன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்?

10 லேவியராகமம் 17:10-ஐ வாசியுங்கள். இரத்தத்தை சாப்பிடக் கூடாது என்று இஸ்ரவேலர்களிடம் யெகோவா கட்டளையிட்டார். இன்று நாமும் இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டும். (அப். 15:28, 29) யெகோவாவுக்கு பிடிக்காததை செய்து சபைநீக்கம் செய்யப்படுவதை நம்மால் யோசித்துக்கூட பார்க்க முடியாது! நாம் யெகோவாவை நேசிப்பதால் அவருக்குக் கீழ்ப்படியவே ஆசைப்படுகிறோம். உயிர் போகும் சூழ்நிலையில்கூட நாம் யெகோவாவுக்குத்தான் கீழ்ப்படிவோம். அவரைப் பற்றி தெரியாத, அவருக்குக் கீழ்ப்படிய விரும்பாத ஆட்கள் சொல்வதைக் கேட்க மாட்டோம். அவர்கள் நம்மை கேலி செய்தாலும், நாம் யெகோவாவுக்கே கீழ்ப்படிவோம். (யூ. 17, 18) இரத்தத்தை ஏற்றிக்கொள்ளாமல் இருக்கவும் அதை சாப்பிடாமல் இருக்கவும் நமக்கு எது உதவும்?—உபா. 12:23.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்