உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w21 அக்டோபர் பக். 29-31
  • 1921—நூறு வருஷங்களுக்கு முன்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 1921—நூறு வருஷங்களுக்கு முன்பு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தைரியமான ஊழியர்கள்
  • பைபிள் படிப்பு திட்டம்—தனி நபர்களுக்கும் குடும்பங்களுக்கும்
  • ஒரு புதிய புத்தகம்!
  • இனி செய்ய வேண்டிய வேலை
  • யெகோவா கொடுக்கிற வேலையைச் செய்தால் ஆசீர்வாதங்கள் நிச்சயம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • 1922—நூறு வருஷங்களுக்கு முன்பு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • சந்தோஷத்திற்கு வித்திடும் தீர்மானங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • பொய்சொல்லக்கூடாத கடவுளால் காக்கப்படுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
w21 அக்டோபர் பக். 29-31

1921—நூறு வருஷங்களுக்கு முன்பு

ஜனவரி 1, 1921, காவற்கோபுரத்தில் பைபிள் மாணாக்கர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது: “இந்த வருடத்தில் நாம் உடனடியாக செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்ன?” அந்தக் கேள்விக்கு ஏசாயா 61:1, 2-ல் இருக்கிற வார்த்தைகள் பதிலாக கொடுக்கப்பட்டது. இவைதான் அந்த வார்த்தைகள்: “தாழ்மையானவர்களுக்கு நல்ல செய்தி சொல்ல யெகோவா என்னைத் தேர்ந்தெடுத்தார். . . . , யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தைப் பற்றித் தெரிவிப்பதற்காகவும், நம் கடவுள் பழிவாங்கப்போகிற நாளைப் பற்றி அறிவிப்பதற்காகவும் . . .  அவர் என்னை அனுப்பினார்.” இப்படி, ஊழியத்தை இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று அவர்கள் ஞாபகப்படுத்தப்பட்டார்கள்.

தைரியமான ஊழியர்கள்

இந்த வேலையைச் செய்வதற்கு பைபிள் மாணாக்கர்களுக்குத் தைரியம் தேவைப்பட்டது. தாழ்மையானவர்களுக்கு ‘நல்ல செய்தியை’ அறிவிப்பதோடு கெட்டவர்களுக்கு நம்முடைய கடவுள் “பழிவாங்கப்போகிற நாளை” பற்றியும் அறிவிக்க வேண்டியிருந்தது.

கனடாவில் ஜெ.ஹெச். ஹாஸ்கின், என்ற ஒரு சகோதரர் இருந்தார். அங்கே எதிர்ப்பு இருந்தாலும் தைரியமாக பிரசங்கித்துக்கொண்டிருந்தார். 1921-ல், மெத்தடிஸ்ட் சர்ச்சை சேர்ந்த ஒரு போதகரை அவர் பார்த்தார். அவரிடம், “நாம பைபிள பத்தி பேசலாம். ஆனா நமக்குள்ள ஒருவேள கருத்து வேறுபாடு வந்தாலும் நாம சமாதானமா பிரிஞ்சுடுவோம்” என்று சொன்னார். ஆனால், அந்தப் போதகர் அப்படி நடந்துகொள்ளவில்லை. அதைப் பற்றி ஹாஸ்கின் இப்படிச் சொன்னார்: “நாங்க கொஞ்ச நேரம்தான் பேசியிருப்போம். அதுக்குள்ள அவரு கதவ ‘டமாரு’ன்னு சாத்திட்டாரு. அவரு சாத்துன வேகத்தில அதில இருக்கிற கண்ணாடி எல்லாம் உடஞ்சு விழுந்துடுமோன்னு நினச்சேன்.”

“கிறிஸ்தவங்களா இல்லாதவங்ககிட்ட போய் பேச வேண்டியது தானே?” என்று அவர் கத்தினார். அதற்கு சகோதரர் ஹாஸ்கின் எந்தப் பதிலும் பேசவில்லை. ஆனால், அவர் போன பின்பு, “அப்படிப்பட்ட ஒருத்தர்கிட்டதான் நான் பேசிட்டு இருந்தேன்னு நினைக்கறேன்!” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.

அந்தப் போதகர் அடுத்த நாள் அவருடைய சர்ச்சில் போதித்தபோது சகோதரர் ஹாஸ்கினைப் பற்றித் தப்புத்தப்பாகப் பேசினார். “அந்த ஊருக்கு இதுவரைக்கும் வந்தவங்களிலேயே நான்தான் பயங்கரமான ஏமாத்து பேர்வழினும் என்னை கொல்லனும்னும் சர்ச்சில இருந்தவங்ககிட்ட சொல்லியிருக்கிறார்” என்று சகோதரர் ஹாஸ்கின் சொன்னார். ஆனால், இதையெல்லாம் பார்த்து அவர் பயந்துவிடவில்லை. தொடர்ந்து பிரசங்கித்தார், நிறைய பேரிடம் அவரால் சத்தியத்தைச் சொல்ல முடிந்தது. “அங்க பிரசங்கிக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. சிலரு என்னை பார்த்து, ‘கடவுள்தான் உங்கள அனுப்பியிருக்கணும்’னுகூட சொன்னாங்க. எனக்கு என்னென்ன தேவையோ அதெல்லாம் கொடுக்கறதா சொன்னாங்க” என்று அவர் சொல்கிறார்.

பைபிள் படிப்பு திட்டம்—தனி நபர்களுக்கும் குடும்பங்களுக்கும்

ஆர்வம் காட்டினவர்கள் இன்னும் முன்னேறுவதற்கு த கோல்டன் ஏஜ்a பத்திரிகையில், பைபிள் படிப்புத் திட்டங்களை பைபிள் மாணாக்கர்கள் வெளியிட ஆரம்பித்தார்கள். அதில் ஒன்றுதான், பிள்ளைகளுக்கான பைபிள் படிப்புத் திட்டம். அதில் அப்பாவும் அம்மாவும் பிள்ளைகளிடம் கலந்து பேசுவதற்குச் சில கேள்விகள் இருந்தன. “அந்தக் கேள்விகளை அப்பா அம்மா கேட்பார்கள். அதற்கான பதிலை பிள்ளைகள் பைபிளிலிருந்து கண்டுபிடிக்க உதவுவார்கள்.” சில கேள்விகள் பைபிளில் இருக்கிற அடிப்படையான விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவின. அதில் ஒன்று: “பைபிளில் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன?” மற்ற கேள்விகள் தைரியமாகப் பிரசங்கிக்க பிள்ளைகளுக்கு உதவின. உதாரணத்துக்கு இந்தக் கேள்வியைச் சொல்லலாம்: “ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஏதோ ஒரு வகையில் துன்புறுத்தலைச் சந்தித்துதான் ஆக வேண்டுமா?”

பைபிளைப் பற்றி ஏற்கெனவே நிறைய தெரிந்தவர்களுக்கு இன்னொரு படிப்புத் திட்டம் இருந்தது. காலங்களின் தெய்வீக திட்டத்தைப் பற்றி ஆழமான படிப்பு என்பதுதான் அதன் பெயர். இதில் சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் இருந்தன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வேதாகமத்தில் படிப்புகள் தொகுதி ஒன்றில் பதில்கள் இருந்தன. இந்தப் படிப்புத் திட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் பிரயோஜனம் அடைந்தார்கள். ஆனாலும், டிசம்பர் 21, 1921-ல் வந்த த கோல்டன் ஏஜ் பத்திரிகையில் இந்த இரண்டு படிப்புத் திட்டங்களும் இனிமேல் வராது என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. ஏன் இந்தத் திடீர் மாற்றம்?

ஒரு புதிய புத்தகம்!

கடவுளுடைய சுரமண்டலம் புத்தகம்

எந்தப் பகுதியைப் படிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கார்டு

கேள்விகள் அடங்கிய கார்டுகள்

புதிதாக பைபிளைப் படிக்க ஆரம்பித்தவர்கள், பைபிளை முறையாகப் படிப்பது அவசியம் என்பதை முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள் நினைத்தார்கள். அதனால், நவம்பர் 1921-ல் கடவுளின் சுரமண்டலம் என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். அந்தப் புத்தகத்தை ஆர்வமாக வாங்கியவர்கள் சுரமண்டல பைபிள் படிப்பு திட்டத்தில் சேர்ந்துவிட்டார்கள். அதில் சேர்ந்து படித்தவர்கள், “கடவுள் மனிதர்களுக்கு முடிவில்லாத வாழ்க்கையைக் கொடுக்கப்போகிறார்” என்பதைப் புரிந்துகொண்டார்கள். அப்படியென்றால், இந்தப் படிப்பு எப்படி நடந்தது?

ஆர்வம் காட்டியவர்களுக்கு அந்தப் புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள். அதோடு, அந்தப் புத்தகத்தில் இருக்கிற எந்தப் பக்கங்களைப் படிக்க வேண்டும் என்று எழுதப்பட்ட ஒரு சின்ன கார்டையும் அனுப்புவார்கள். அதற்கு அடுத்த வாரம் இன்னொரு கார்டை அனுப்புவார்கள். அதில் அவர் ஏற்கெனவே படித்து வைத்திருந்த பகுதிகளுக்கான கேள்விகள் இருக்கும். அதே கார்டில், அதற்கு அடுத்த வாரம் என்ன படிக்க வேண்டும் என்பதையும் எழுதியிருப்பார்கள்.

இப்படி 12 வாரங்களுக்கு, உள்ளூர் சபையில் இருந்து கார்டு அனுப்புவார்கள். பெரும்பாலும், வயதானவர்களும் வீட்டுக்கு வீடு போக முடியாதவர்களும் இந்தக் கார்டை அனுப்பினார்கள். “என்னுடைய அக்கா தைல்லால நடக்க முடியாது. கடவுளுடைய சுரமண்டலம் புத்தகம் வந்தவுடனே அவங்களால சுறுசுறுப்பா சேவை செய்ய முடிஞ்சது. ஒவ்வொரு வாரமும் கார்டு அனுப்பினாங்க” என்று அமெரிக்காவில் இருக்கிற அன்னா கே. காட்னர் என்ற சகோதரி சொன்னார். இப்படி, ஒருவர் 12 வாரம் படித்து முடித்தவுடனே சபையில் இருந்து ஒருவர் அவர் வீட்டுக்குப் போய் பைபிளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள உதவி செய்வார்.

தைல் காட்னர், வீல்சேரில்

இனி செய்ய வேண்டிய வேலை

1921-ன் கடைசியில் எல்லா சபைகளுக்கும் சகோதரர் ஜெ. எஃப்.  ரதர்ஃபர்ட் ஒரு கடிதம் எழுதினார். “இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இந்த வருஷம் ஊழியத்தை அருமையாகச் செய்திருக்கிறோம். நிறைய பேருக்கு பிரசங்கித்திருக்கிறோம்” என்று அதில் எழுதியிருந்தார். இனிமேல் செய்யப்போகிற வேலையைப் பற்றியும் அவர் இப்படி எழுதியிருந்தார்: “செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. இந்த அருமையான வேலையைச் செய்வதற்கு எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.” அவர் கொடுத்த அறிவுரையின்படியே பைபிள் மாணாக்கர்கள் செய்தார்கள். 1922-ல் அதுவரைக்கும் செய்யாத அளவுக்கு பிரசங்க வேலையை அதிகமாகச் செய்தார்கள்.

அஞ்சா நெஞ்சமுள்ள நண்பர்கள்

பைபிள் மாணாக்கர்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்தார்கள். அஞ்சா நெஞ்சமுள்ள நண்பர்களாக இருந்தார்கள். “கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த” சகோதரர்களாக இருந்தார்கள். (நீதி. 17:17) இதைப் புரிந்துகொள்வதற்கு இப்போது ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

1921-ஆம் வருடம், மே 31 செவ்வாய்கிழமை அன்று, அமெரிக்காவில் இருக்கிற ஓக்லகாமா மாகாணத்தைச் சேர்ந்த டல்சா நகரத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர், வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தாக்கிவிட்டதாகச் சொல்லி அவரை சிறையில் தள்ளினார்கள். அதற்குப் பின்பு, வெள்ளை இனத்தைச் சேர்ந்த 1,000-க்கும் அதிகமான ஆண்கள், கறுப்பினத்தைச் சேர்ந்த சிலரை பயங்கரமாகத் தாக்கினார்கள். கறுப்பின மக்கள் நிறைய பேர் வாழ்கிற கிரீன்வுட் என்ற இடத்தில் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. 1,400-க்கும் அதிகமான வீடுகளும் வியாபார நிறுவனங்களும் கொள்ளையடிக்கப்பட்டன, கொளுத்தப்பட்டன. இந்தப் பிரச்சினையில் 36 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. ஆனால், கிட்டத்தட்ட 300 பேர் இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தச் சம்பவம், பின்பு டல்சா இனப் படுகொலை என்று அழைக்கப்பட்டது.

கறுப்பினத்தைச் சேர்ந்த சகோதரர் ரிச்சர்ட் ஜே. ஹில் என்பவர் கிரீன்வுட்டில் குடியிருந்தார். அவர் ஒரு பைபிள் மாணாக்கர். அன்றைக்கு நடந்த சம்பவத்தைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “வன்முறை நடந்த அந்த ராத்திரி எங்களோட சபை கூட்டம் நடந்துட்டிருந்துச்சு. சபை கூட்டம் முடிஞ்ச அப்புறம் நடு ஊர்ல துப்பாக்கி சுடுற சத்தம் கேட்டுச்சு. ராத்திரி ரொம்ப நேரம் கேட்டுட்டே இருந்துச்சு.” அடுத்த நாள் ஜூன் 1-ஆம் தேதி, புதன்கிழமை காலையில் நிலைமை இன்னும் மோசமானது. “சிலர் எங்ககிட்ட வந்து நாங்க பத்திரமா இருக்கணும்ன்னா சமுதாய மன்றத்துக்கு போறதுதான் நல்லதுன்னு சொன்னாங்க” என்று அவர் சொல்கிறார். அதனால், சகோதரர் ஹில்லும் அவருடைய மனைவியும் ஐந்து பிள்ளைகளும் டல்சாவில் இருக்கிற சமுதாய மன்றத்துக்கு ஓடினார்கள். அங்கே, கறுப்பினத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3,000 ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். வன்முறையை அடக்குவதற்காக வந்திருந்த ராணுவ படையின் பாதுகாப்பில் இருந்தார்கள்.

அந்தச் சமயத்தில், வெள்ளை இனத்தைச் சேர்ந்த சகோதரர் ஆர்த்தர் க்ளாஸ் தைரியமான ஒரு காரியத்தைச் செய்தார். “அந்த கலகக்காரங்க, கிரீன்வுட்ல இருக்கற வீடுகள கொள்ளயடிச்சுட்டு தீ வெச்சு கொளுத்திட்டிருந்தாங்க. அதனால, என்னோட நண்பர் ஹில் எப்படி இருக்காருன்னு பாக்கறதுக்கு அவரோட வீட்டுக்கு போனேன்” என்று சகோதரர் ஆர்த்தர் சொல்கிறார்.

கடவுளுடைய சுரமண்டலம் புத்தகத்தைப் பயன்படுத்தி சகோதரர் ஆர்த்தர் க்ளாஸ் 14 பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தார்

ஹில்லின் வீட்டுக்கு ஆர்த்தர் போனபோது, ஹில்லின் பக்கத்து வீட்டுக்காரர் கையில் துப்பாக்கியோடு நின்றுகொண்டிருந்தார். அவர் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர். ஹில்லின் நண்பர் ஆர்த்தரைக் கலகக்காரர்களில் ஒருவர் என்று நினைத்துவிட்டார். அதனால், “உனக்கு இங்க என்ன வேல? நீ எதுக்கு இங்க வந்த?” என்று கத்தினார்.

“நான் ஒழுங்கா பதில் சொல்லாம இருந்திருந்தா அவர் என்னை சுட்டிருப்பாரு. நான் ஹில்லோட நண்பன். நிறைய தடவை இங்க வந்திருக்கறேன்னு அவர் கிட்ட சொன்னேன்” என்று ஆர்த்தர் சொல்கிறார். ஆர்த்தரும் அந்தப் பக்கத்து வீட்டுக்காரரும் சேர்ந்து ஹில்லின் சொத்துபத்துகளை கலகக்காரர்கள் எதுவும் செய்யாதபடி பார்த்துக்கொண்டார்கள்.

சீக்கிரத்திலேயே சகோதரர் ஹில்லும் அவருடைய குடும்பமும் சமுதாய மன்றத்தில் இருப்பதை ஆர்த்தர் தெரிந்துகொண்டார். படைத் தளபதி பேரட்டின் கையெழுத்து இல்லாமல் கறுப்பின மக்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு போக முடியாது என்று சிலர் ஆர்த்தரிடம் சொன்னார்கள். “அந்த படைத் தளபதியை பாக்கிறதே ரொம்ப கஷ்டம். அதனால, எப்படியோ அவர பார்த்து, ஹில்லோட குடும்பத்த கூட்டிட்டு போறதா சொன்னேன். அதுக்கு அவரு, ‘அவங்கள நீ நல்லா பாத்துக்குவியா?’னு கேட்டாரு. ‘கண்டிப்பா பாத்துக்குவேன்’னு சொன்னேன்” என்று ஆர்த்தர் சொல்கிறார்.

படைத் தளபதியின் கையெழுத்தை வாங்கிய உடனே ஆர்த்தர் சமுதாய மன்றத்துக்கு ஓடினார். அங்கே இருக்கிற அதிகாரியிடம் அதைக் கொடுத்தார். “தளபதி கிட்டயே கையெழுத்து வாங்கிட்ட, பரவாலயே! நீதான் முதல் முதலா ஒருத்தர இங்கிருந்து கூட்டிட்டு போற” என்று அவர் சொன்னார். சீக்கிரத்திலேயே ஹில்லையும் அவருடைய குடும்பத்தையும் அந்தக் கூட்டத்துக்குள்ளே ஆர்த்தர் கண்டுபிடித்து, தன்னுடைய காரில் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார்.

‘எந்த இன வேறுபாடும் இல்லாம, கடவுளோட மக்கள் ஒருத்தர ஒருத்தர் சரிசமமா நடத்துனாங்க’

சகோதரர் ஹில்லும் அவருடைய குடும்பமும் பத்திரமாக இருப்பதற்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் சகோதரர் ஆர்த்தர் செய்தார். அவர் காட்டிய தைரியமும் அன்பும் மற்றவர்களுடைய மனதை தொட்டது. “ஹில்லின் சொத்துபத்துகளை பாதுகாப்பா பாத்துகிட்ட அந்த பக்கத்து வீட்டுக்காரருக்கு கடவுளோட மக்கள்மேல இருக்கிற மதிப்புமரியாதை கூடிடுச்சு. எந்த இன வேறுபாடும் இல்லாம கடவுளோட மக்கள் ஒருத்தர ஒருத்தர் சரிசமமா நடத்தறத பாத்தவங்களுக்கு, சத்தியத்த பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஆசை வந்துச்சு” என்று ஆர்த்தர் சொல்கிறார்.

a த கோல்டன் ஏஜ் பத்திரிகை 1937-ல் கான்ஸலேஷன் என்றும் 1946-ல் விழித்தெழு! என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்