உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 166
  • பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேரா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேரா?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் தரும் பதில்
  • பணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
  • பண ஆசையைப் பற்றி பைபிள் ஏன் எச்சரிக்கிறது?
  • பண விஷயத்தில் பைபிள் சொல்வதுபோல் நடப்பதால் என்ன பலன் கிடைக்கும்?
  • பணம்தான் வாழ்க்கையா?
    விழித்தெழு!—2015
  • பணத்தைக் குறித்த ஞானமான கண்ணோட்டம் என்ன?
    விழித்தெழு!—2007
  • பணம்—சமநிலையான கருத்து
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • இளைஞர் கேட்கின்றனர் . . .
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 166
கத்தை கத்தையாகக் கிடக்கும் பணத்தை எடுத்துக்கொள்ள ஒருவர் தன் கைகளை நீட்டுகிறார்.

பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேரா?

பைபிள் தரும் பதில்

இல்லை. பணம் வைத்திருப்பதே தவறு என்று பைபிள் சொல்வதில்லை. சிலர் சொல்வதுபோல், பணம்தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்றும் அது சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, ‘பண ஆசைதான் எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது’a என்று சொல்கிறது.—1 தீமோத்தேயு 6:10.

  • பணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

  • பண ஆசையைப் பற்றி பைபிள் ஏன் எச்சரிக்கிறது?

  • பண விஷயத்தில் பைபிள் சொல்வதுபோல் நடப்பதால் என்ன பலன் கிடைக்கும்?

  • பணத்தைப் பற்றிச் சொல்லும் சில பைபிள் வசனங்கள்

பணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

பணத்தை ஞானமாகப் பயன்படுத்தினால் அது நமக்குப் பிரயோஜனமாக இருக்கும், நமக்கு ‘பாதுகாப்பும்’ தரும் என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 7:12) அதோடு, தாராள குணத்தோடு மற்றவர்களுக்கு உதவி செய்வதை பைபிள் பாராட்டுகிறது; அது பணம் பொருள் கொடுத்து உதவி செய்வதாகவும் இருக்கலாம்.—நீதிமொழிகள் 11:25.

அதேசமயத்தில், பணமே வாழ்க்கையாகிவிடக் கூடாது என்று பைபிள் எச்சரிக்கிறது. “பண ஆசையில்லாமல் வாழுங்கள். உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்” என்று அது சொல்கிறது. (எபிரெயர் 13:5) அதனால், பணத்தை அதன் இடத்தில் வைக்க வேண்டும். பணம் பொருள் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை போன்ற அவசியமான விஷயங்கள் இருந்தாலே போதும் என்று திருப்தியோடு இருக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 6:8.

பண ஆசையைப் பற்றி பைபிள் ஏன் எச்சரிக்கிறது?

பேராசை பிடித்தவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்காது. (எபேசியர் 5:5) அதற்கு ஒரு காரணம், பேராசை என்பது சிலை வழிபாட்டுக்கு சமம் என்று பைபிள் சொல்கிறது. அதாவது, அது பொய்யான வழிபாடு என்று சொல்கிறது. (கொலோசெயர் 3:5) இன்னொரு காரணம், பேராசை பிடித்தவர்கள் தாங்கள் ஆசைப்பட்டதை அடைய வேண்டுமென்ற வெறியில் ஒழுக்கம், நேர்மை, நியாயம் போன்ற நல்ல விஷயங்களைக் காற்றில் பறக்க விட்டுவிடுகிறார்கள். “சீக்கிரத்தில் பணக்காரனாக நினைக்கிறவன் குறுக்கு வழியில் போய்விடுவான்” என்று நீதிமொழிகள் 28:20 சொல்கிறது. அப்படிப்பட்டவர்கள், மிரட்டிப் பணம் பறிப்பது... மோசடி செய்வது... ஆட்களைக் கடத்துவது... கொலை செய்வது... போன்ற பயங்கரமான குற்றங்களைக்கூட செய்துவிடலாம்.

பண ஆசையினால் ஒருவர் பயங்கரமான குற்றங்களைச் செய்யாமல் போனால்கூட, அவருக்கு வேறு பாதிப்புகள் வரலாம். “பணக்காரராக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் சிக்கிக்கொள்கிறார்கள்; அதோடு, தீமையான, முட்டாள்தனமான பலவிதமான ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—1 தீமோத்தேயு 6:9.

பண விஷயத்தில் பைபிள் சொல்வதுபோல் நடப்பதால் என்ன பலன் கிடைக்கும்?

பணத்துக்காக ஒழுக்கநெறிகளையும் கடவுளுடைய நீதிநெறிகளையும் விட்டுக்கொடுக்காமல் இருந்தால் நமக்கு சுயமரியாதை இருக்கும். அதோடு, கடவுளுடைய ஆசீர்வாதமும் ஆதரவும் கிடைக்கும். கடவுளுக்குப் பிரியமாக நடக்க உண்மையிலேயே முயற்சி செய்கிறவர்களுக்குக் கடவுள் இப்படி வாக்குக் கொடுக்கிறார்: “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்.” (எபிரெயர் 13:5, 6) அதுமட்டுமல்ல, “உண்மையாக நடக்கிறவன் நிறைய ஆசீர்வாதங்களைப் பெறுவான்” என்றும் வாக்குக் கொடுக்கிறார்.—நீதிமொழிகள் 28:20.

பணத்தைப் பற்றிச் சொல்லும் சில பைபிள் வசனங்கள்

பிரசங்கி 7:12: ‘பணம் பாதுகாப்பு தரும்.’

அர்த்தம்: பணம் ஓரளவு பாதுகாப்பு தரும் என்பதால், அதை ஞானமாகப் பயன்படுத்தும்போது அது நமக்குப் பிரயோஜனமாக இருக்கும்.

லூக்கா 12:15: “ஒருவனுக்கு ஏராளமான சொத்து இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது.”

அர்த்தம்: பணம்தான் எல்லாமே என்று நினைப்பது தவறு. அது நமக்கு வாழ்வு தராது.

1 தீமோத்தேயு 6:10: “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு, விசுவாசத்தைவிட்டு விலகி, பலவிதமான வேதனைகளால் தங்கள் உடல் முழுவதும் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”

அர்த்தம்: பணம் வைத்திருப்பதே தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், பண ஆசை பிடித்தவர்கள், அதாவது பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பவர்கள், நிறைய பிரச்சினைகளை வரவழைத்துக்கொள்கிறார்கள். உதாரணத்துக்கு, வேலை செய்து செய்து உடம்பைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுடைய குடும்பமும் சிதைந்துவிடுகிறது.

எபிரெயர் 13:5: “பண ஆசையில்லாமல் வாழுங்கள். உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.”

அர்த்தம்: பணம் பணம் என்று ஆலாய்ப் பறப்பதைவிட, அவசியமானது இருந்தாலே போதும் என்று நினைப்பது புத்திசாலித்தனம்.

மத்தேயு 19:24: “கடவுளுடைய அரசாங்கத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவதைவிட ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம்.”

அர்த்தம்: ஒரு பணக்கார வாலிபனைத் தன் சீஷராக வரச்சொல்லி இயேசு அழைத்தார். ஆனால், அவன் மறுத்துவிட்டான். ஏனென்றால், சொத்து சுகத்தைவிட்டுப் பிரிய அவனுக்கு மனம் இல்லை. அதனால், இயேசு இந்த எச்சரிப்பைக் கொடுத்தார். கடவுளைவிடப் பணமும் பொருளும்தான் முக்கியம் என்று நினைக்கிறவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்காது.

a “பண ஆசையானது எல்லா விதமான பாவங்களுக்கும் வழிவகுக்கும்” என்று இன்னொரு மொழிபெயர்ப்பு சொல்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்