மத்தேயு
ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 3
யோவான்: எபிரெயுவில், யெகோனான் அல்லது யோகனான். இதன் அர்த்தம், “யெகோவா கருணை காட்டியிருக்கிறார்; யெகோவா கனிவுள்ளவராக இருக்கிறார்.”
ஸ்நானகர்: வே.வா., “அமிழ்த்தியெடுப்பவர்; முக்கியெடுப்பவர்.” அநேகமாக, இது ஒரு சிறப்புப் பெயராகப் பயன்படுத்தப்பட்டது. தண்ணீரில் முக்கியெடுப்பதன் மூலம் ஞானஸ்நானம் கொடுப்பது யோவானின் சிறப்பம்சமாக இருந்ததை இது காட்டுகிறது. “ஸ்நானகர் என்று அழைக்கப்பட்ட யோவான்” என யூத சரித்திராசிரியரான ஃபிளேவியஸ் ஜொசிஃபஸ் எழுதினார்.
யூதேயாவின் வனாந்தரத்துக்கு: இது யூதேய மலைகளின் கிழக்குச் சரிவில் இருந்தது. பொதுவாக, யாரும் குடியிருக்காத பொட்டல் நிலப்பகுதியாக இருந்தது. யோர்தான் ஆறு மற்றும் சவக் கடலின் மேற்குக் கரையோரத்திலிருந்து சுமார் 1,200 மீ. (3,900 அடி) உயரத்துக்கு இருந்தது. இந்த வனாந்தரத்தின் ஒரு பகுதியில், அதாவது சவக் கடலுக்கு வடக்குப் பகுதியில், யோவான் தன் ஊழியத்தை ஆரம்பிக்கிறார்.
மனம் திருந்துங்கள்: இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையை “மனதை மாற்றுங்கள்” என்று நேரடியாக மொழிபெயர்க்கலாம். எண்ணத்தையோ, மனப்பான்மையையோ, நோக்கத்தையோ மாற்றிக்கொள்வதை இது குறிக்கிறது. இந்த வசனத்தில், கடவுளோடு ஒருவருக்கு இருக்கும் பந்தம் சம்பந்தமாக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.—மத் 3:8, 11-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும், சொல் பட்டியலில் “மனம் திருந்துதல்” என்ற தலைப்பையும் பாருங்கள்.
பரலோக அரசாங்கம்: இவற்றுக்கான கிரேக்க வார்த்தைகள் கிட்டத்தட்ட 30 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளன, அதுவும் மத்தேயு சுவிசேஷத்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷங்களில் இவற்றுக்கு இணையான வார்த்தைகள், அதாவது ‘கடவுளுடைய அரசாங்கம்’ என்ற வார்த்தைகள், பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘கடவுளுடைய அரசாங்கம்’ பரலோகத்தில் நிறுவப்பட்டு, அங்கிருந்து ஆட்சி செய்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.—மத் 21:43; மாற் 1:15; லூ 4:43; தானி 2:44; 2தீ 4:18.
அரசாங்கம்: வே.வா., “ராஜ்யம்.” கிரேக்கில், பஸிலீயா. இந்த வசனத்தில்தான் இந்த வார்த்தை முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு அரசரின் ஆட்சியை மட்டுமல்லாமல், அவரால் ஆட்சி செய்யப்படும் பகுதியையும் மக்களையும்கூட குறிக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இந்த வார்த்தை 162 தடவை வருகிறது. அதில் 55 தடவை மத்தேயுவின் பதிவில் வருகிறது; அதிலுள்ள பெரும்பாலான வசனங்களில் கடவுளுடைய பரலோக ஆட்சியைக் குறிக்கிறது. மத்தேயு இந்த வார்த்தையை மிகவும் அடிக்கடி பயன்படுத்துவதால் அவருடைய சுவிசேஷத்தை அரசாங்கத்தின் சுவிசேஷம் என்றுகூட அழைக்கலாம்.—சொல் பட்டியலில் “கடவுளுடைய அரசாங்கம்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
நெருங்கி வந்துவிட்டது: அதாவது, பரலோக அரசாங்கத்தின் எதிர்கால ராஜா வரவிருந்தார்.
பிரசங்கித்துக்கொண்டிருந்தார்: ‘பிரசங்கிப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தையின் அடிப்படை அர்த்தம், “ஒரு பொதுத் தூதுவராக எல்லாருக்கும் ஒரு செய்தியை அறிவிப்பது.” இந்த வார்த்தை, பிரசங்கிக்கும் விதத்தை வலியுறுத்துகிறது; அதாவது, ஒரு தொகுதிக்கு முன்பு பிரசங்கம் செய்வதைக் குறிக்காமல், வெளிப்படையாக எல்லாருக்கும் பிரசங்கிப்பதைக் குறிக்கிறது.
யெகோவாவுக்கு: இது ஏசா 40:3-ன் மேற்கோள்; மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) பயன்படுத்தப்பட்டுள்ளன. (இணைப்பு C-ஐப் பாருங்கள்.) இயேசுவுக்காக யோவான் ஸ்நானகர் வழியைத் தயார்படுத்தியது இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் என்று மத்தேயு சுட்டிக்காட்டுகிறார். யோவான் சுவிசேஷத்தில், இந்தத் தீர்க்கதரிசனம் தன்னிடம் நிறைவேறுவதாக யோவான் ஸ்நானகர் சுட்டிக்காட்டுகிறார்.—யோவா 1:23.
அவருக்காகப் பாதைகளைச் சமப்படுத்துங்கள்: அந்தக் காலத்தில், அரசர்கள் தங்களுடைய ரதத்தில் எங்காவது பயணம் செய்வதற்குமுன், தங்களுக்காகப் பாதையைத் தயார்படுத்த ஆட்களை அனுப்பினார்கள். இந்த ஆட்கள், பாதையில் இருந்த பெரிய கற்களை எடுத்துப்போட்டார்கள், நீர்நிலைகளைக் கடக்க பாலங்களைக்கூடக் கட்டினார்கள், குன்றுகளையும் சமப்படுத்தினார்கள்.
ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப் போட்டிருந்தார்: யோவான் ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப் போட்டிருந்ததும் இடுப்பில் தோல் வாரைக் கட்டியிருந்ததும், எலியா தீர்க்கதரிசியின் உடையை ஞாபகப்படுத்துகிறது.—2ரா 1:8; யோவா 1:21.
வெட்டுக்கிளிகளையும்: புரதச்சத்து நிறைந்த பூச்சிகள்; இவற்றைச் சாப்பிடுவதற்குத் திருச்சட்டம் அனுமதித்தது.—லேவி 11:21, 22.
காட்டுத் தேனையும்: செயற்கையான தேன்கூடுகளிலிருந்து அல்ல, வனாந்தரத்தில் இருந்த இயற்கையான தேன்கூடுகளிலிருந்து எடுக்கப்பட்ட தேனைக் குறிக்கிறது. வனாந்தரத்தில் வாழ்ந்தவர்கள் வெட்டுக்கிளிகளையும் காட்டுத் தேனையும் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது.
தாங்கள் செய்த பாவங்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு: திருச்சட்ட ஒப்பந்தத்துக்கு எதிராகத் தாங்கள் செய்த பாவங்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்டவர்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஞானஸ்நானம்: வே.வா., “அமிழ்த்தியெடுத்தல்; முக்கியெடுத்தல்.”—மத் 3:11-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
பரிசேயர்களும்: சொல் பட்டியலில் “பரிசேயர்கள்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
சதுசேயர்களும்: சொல் பட்டியலில் “சதுசேயர்கள்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
விரியன் பாம்புக் குட்டிகளே: அவர்களுடைய அக்கிரமமும் ஆன்மீக ரீதியில் அவர்கள் செய்த பயங்கரமான கெடுதலும், அப்பாவி மக்களுக்கு விஷம்போல் இருந்ததால் இப்படி அழைக்கப்பட்டார்கள்.
மனம் திருந்திவிட்டீர்கள் என்பதைச் செயலில் காட்டுங்கள்: யோவான் சொன்னதைக் கேட்டவர்கள் தங்களுடைய மனதை அல்லது மனப்பான்மையை மாற்றியிருந்ததற்கு அத்தாட்சி அளிக்க வேண்டியிருந்ததைக் குறித்தது; அதாவது, அதைச் செயல்களில் காட்ட வேண்டியிருந்ததைக் குறித்தது.—லூ 3:8; அப் 26:20; மத் 3:2, 11-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும், சொல் பட்டியலில் “மனம் திருந்துதல்” என்ற தலைப்பையும் பாருங்கள்.
மனம் திருந்தியதால்: நே.மொ., “மனம் மாறியதால்.”—மத் 3:2, 8-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும், சொல் பட்டியலில் “மனம் திருந்துதல்” என்ற தலைப்பையும் பாருங்கள்.
ஞானஸ்நானம் கொடுக்கிறேன்: வே.வா., “அமிழ்த்தியெடுக்கிறேன்.” கிரேக்கில், பாப்டைசோ. இதன் அர்த்தம், “முக்கியெடுப்பது.” ஞானஸ்நானம் என்பது தண்ணீரில் முழுமையாக முக்கியெடுக்கப்படுவதைக் குறிக்கிறது என்பதை மற்ற பைபிள் வசனங்கள் காட்டுகின்றன. ஒரு சந்தர்ப்பத்தில், யோர்தான் பள்ளத்தாக்கில் இருந்த சாலிமுக்குப் பக்கத்தில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்; “ஏனென்றால், அங்கே நிறைய தண்ணீர் இருந்தது.” (யோவா 3:23) எத்தியோப்பிய அதிகாரிக்கு பிலிப்பு ஞானஸ்நானம் கொடுத்தபோது, இரண்டு பேரும் “தண்ணீருக்குள் இறங்கினார்கள்.” (அப் 8:38) இதே கிரேக்க வார்த்தையைத்தான் 2ரா 5:14-ல் செப்டுவஜன்ட் பயன்படுத்தியிருக்கிறது; நாகமான் ‘யோர்தான் ஆற்றில் ஏழு தடவை முங்கியெழுந்ததை’ பற்றி அங்கே சொல்லப்பட்டிருக்கிறது.
என்னைவிட வல்லவர்: “அதிக அதிகாரம்” இருப்பதைக் குறிக்கிறது.
செருப்புகளை: இன்னொருவரின் செருப்புகளைக் கழற்றித் தன் கையில் சுமந்துகொண்டு போவதோ, இன்னொருவரின் செருப்பு வார்களை அவிழ்ப்பதோ (மாற் 1:7; லூ 3:16; யோவா 1:27), பெரும்பாலும் ஒரு அடிமையால் செய்யப்பட்ட கௌரவக்குறைவான வேலையாகக் கருதப்பட்டது.
கடவுளுடைய சக்தியாலும் நெருப்பாலும் . . . ஞானஸ்நானம்: கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்படுவதையும் நெருப்பால் அழிக்கப்படுவதையும் குறிக்கிறது. கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளில், கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் கொடுப்பது ஆரம்பமானது. கி.பி. 70-ல் ரோமப் படைகள் எருசலேமை அழித்து, அதன் ஆலயத்தைச் சுட்டெரித்தபோது நெருப்பால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.
தூற்றுவாரியை: அநேகமாக, மரத்தால் செய்யப்பட்டிருந்த கருவி. போரடிக்கப்பட்ட தானியம் தூற்றுவாரியால் காற்றில் அள்ளி வீசப்பட்டது; அப்போது, அதிலிருந்த தவிடும் பதரும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
பதரையோ: பதர் என்பது பார்லி, கோதுமை போன்ற தானியங்களின் மேற்புறத்திலுள்ள லேசான தோல் அல்லது உமி. அது காற்றில் அடித்துவரப்பட்டு தானியக் குவியல்களோடு கலந்துவிடாமல் இருப்பதற்காகப் பொதுவாக வாரியெடுக்கப்பட்டு நெருப்பில் கொளுத்தப்பட்டது. அடையாள அர்த்தத்தில் மேசியா எப்படிக் கோதுமையைப் பதரிலிருந்து பிரிப்பார் என்பதை எடுத்துக்காட்டுவதற்கு, தானியங்களைத் தூற்றும் உதாரணத்தை யோவான் பயன்படுத்துகிறார்.
அணைக்க முடியாத நெருப்பில்: எருசலேமுக்கு முழுமையான அழிவு வரவிருந்ததைக் குறித்தது.
நீதியான எல்லாவற்றையும் . . . செய்ய: இயேசு ஞானஸ்நானம் எடுத்தது, மனம் திரும்புதலுக்கு அடையாளமாக இருக்கவில்லை. ஏனென்றால், அவர் பாவம் இல்லாதவர், கடவுளுடைய நீதியான சட்டங்களை அச்சுப்பிசகாமல் கடைப்பிடித்தவர். அவர் ஞானஸ்நானம் எடுத்தது, கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்ததுக்கு அடையாளமாகவும் இருக்கவில்லை. ஏனென்றால், ஏற்கெனவே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தார். உண்மையில் அவருடைய ஞானஸ்நானம், மேசியாவாக யெகோவாவின் நீதியான விருப்பத்தை நிறைவேற்ற தன்னை அளிப்பதற்கு அடையாளமாக இருந்தது. தன்னையே மீட்புவிலையாகக் கொடுப்பதும் அதில் அடங்கியிருந்தது. சங் 40:7, 8-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தை இயேசு நிறைவேற்றினார்; இந்தத் தீர்க்கதரிசனம் எபி 10:5-9-ல் விளக்கப்பட்டிருக்கிறது.
வானம்: இதற்கான கிரேக்க வார்த்தை வானத்தையும் குறிக்கலாம் பரலோகத்தையும் குறிக்கலாம்.
வானம் திறக்கப்பட்டது: அநேகமாக, பரலோகத்தில் இயேசு ஏற்கெனவே வாழ்ந்திருந்ததைப் பற்றி கடவுள் அவருக்கு ஞாபகப்படுத்தினார். அப்போது, பரலோகத்தில் தன் தகப்பனிடமிருந்து கற்றுக்கொண்ட சத்தியங்களும் அவருடைய ஞாபகத்துக்கு வந்திருக்கும்.
புறாவைப் போல்: புறாக்கள் பரிசுத்த காரியங்களுக்காக, அதாவது பலிகள் செலுத்துவதற்காக, பயன்படுத்தப்பட்டன. (மாற் 11:15; யோவா 2:14-16) புறாக்கள் கள்ளம்கபடமற்ற குணத்துக்கும் தூய்மைக்கும் அடையாளமாகக்கூட பயன்படுத்தப்பட்டன. (மத் 10:16) நோவா பேழையிலிருந்து ஒரு புறாவை அனுப்பியபோது, அது ஒரு ஒலிவ இலையோடு திரும்பியது. தண்ணீர் வடிந்திருந்ததையும் (ஆதி 8:11), நிம்மதியும் அமைதியுமான காலம் சீக்கிரத்தில் வரவிருந்ததையும் (ஆதி 5:29) அது காட்டியது. இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது, மேசியாவாக அவர் வகிக்கும் பங்கைச் சுட்டிக்காட்டுவதற்காக யெகோவா புறாவைப் பயன்படுத்தியிருக்கலாம். பாவமும் களங்கமும் இல்லாத தன் மகனாகிய இயேசு, மனிதர்களுக்காகத் தன் உயிரை பலி செலுத்தி, தன் ஆட்சியில் நிம்மதியும் அமைதியுமான காலத்தைக் கொண்டுவருவார் என்பதற்கு அது அடையாளமாக இருந்திருக்கலாம். அந்தச் சமயத்தில் கடவுளுடைய சக்தி இயேசுமேல் இறங்கிவந்தபோது, சிறகடித்துக்கொண்டே கூட்டை நெருங்கும் புறாவைப் போல அது தெரிந்திருக்கலாம்.
இவர் என் அன்பு மகன்: இயேசு பரலோகத்தில் கடவுளுடைய மகனாக இருந்தார். (யோவா 3:16) பூமியில் மனிதனாகப் பிறந்த சமயத்திலிருந்து, பரிபூரணமான ஆதாமைப் போலவே ‘கடவுளுடைய மகனாக’ இருந்தார். (லூ 1:35; 3:38) ஆனாலும், இயேசு யார் என்று மட்டுமே கடவுள் இங்கு குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. தன்னுடைய மகன் என்று சொல்லி தன்னுடைய சக்தியைப் பொழிந்ததன் மூலம், மனிதராக இருந்த இயேசு விசேஷமான விதத்தில் தன்னுடைய மகனாக ஆனதை அவர் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது. அதாவது, பரலோகத்துக்குத் திரும்பிப்போகும் நம்பிக்கையைப் பெற்றவராக இயேசு ‘மறுபடியும் பிறந்ததையும்,’ எதிர்கால ராஜாவாகவும் தலைமைக் குருவாகவும் தன்னுடைய சக்தியால் நியமிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.—ஒப்பிடுங்கள்: யோவா 3:3-6; 6:51; லூ 1:31-33; எபி 2:17; 5:1, 4-10; 7:1-3.
நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்: வே.வா., “நான் இவரை அங்கீகரிக்கிறேன்; இவர்மேல் மிகவும் பிரியமாக இருக்கிறேன்; இவரைக் குறித்துப் பூரிப்படைகிறேன்.” இதே வார்த்தைகளைத்தான் மத் 12:18-லும் வாசிக்கிறோம்; வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியாவை அல்லது கிறிஸ்துவைப் பற்றி ஏசா 42:1-ல் சொல்லப்பட்டிருந்ததை அது மேற்கோள் காட்டுகிறது. கடவுளுடைய சக்தி இயேசுமேல் பொழியப்பட்டதும், அவரைத் தன் மகனாகக் கடவுள் அறிவித்ததும், இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியா என்பதற்குத் தெளிவான அடையாளங்களாக இருந்தன.—மத் 12:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
வானத்திலிருந்து ஒரு குரல்: யெகோவா மனிதர்களிடம் பேசியதாக மூன்று சுவிசேஷப் பதிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது; அதில் முதல் பதிவு இதுதான்.—மத் 17:5; யோவா 12:28-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.