மத்தேயு
ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 4
பிசாசு: கிரேக்கில், டியேபோலோஸ். இதன் அர்த்தம், “அவதூறு பேசுகிறவன்; இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன்.” (யோவா 6:70; 2தீ 3:3) இதோடு சம்பந்தப்பட்ட வினைச்சொல், டியபால்லோ. இதன் அர்த்தம், “குற்றம்சாட்டுவது; புகார் செய்வது.” இது லூ 16:1-ல் “புகார்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
யெகோவாவின்: இந்த வசனம் உபா 8:3-ஐ மேற்கோள் காட்டுகிறது. இதனுடைய மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) பயன்படுத்தப்பட்டுள்ளன.—இணைப்பு C-ஐப் பாருங்கள்.
எழுதப்பட்டிருக்கிறதே: பிசாசு சோதித்தபோது, எபிரெய வேதாகமத்திலிருந்து இயேசு மேற்கோள் காட்டினார்; அப்போது மூன்று தடவை இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்.—மத் 4:7, 10.
பரிசுத்த நகரத்துக்கு: இது எருசலேமைக் குறிக்கிறது; யெகோவாவின் ஆலயம் அங்கே இருந்ததால் அது பரிசுத்த நகரம் என்று அடிக்கடி அழைக்கப்பட்டது.—நெ 11:1; ஏசா 52:1.
ஆலயத்தின் உயரமான இடத்தில்: வே.வா., “ஆலயத்தின் கொத்தளத்தில்.” நே.மொ., “ஆலயத்தின் சிறகில்.” “ஆலயம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை ஆலயத்தின் முக்கியக் கட்டிடத்தையும் குறிக்கலாம், அந்த முழு வளாகத்தையும் குறிக்கலாம். அதனால், ஆலயத்தின் உயரமான இடம் என்பது ஆலய வளாகத்தைச் சூழ்ந்திருந்த மதிலின் மேல்பகுதியைக் குறிக்கலாம்.
யெகோவாவை: இந்த வசனம் உபா 6:16-ஐ மேற்கோள் காட்டுகிறது. இதனுடைய மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) பயன்படுத்தப்பட்டுள்ளன.—இணைப்பு C-ஐப் பாருங்கள்.
உலகத்தில்: கிரேக்கில், காஸ்மாஸ். இங்கே, அநீதியுள்ள மனித சமுதாயத்தைக் குறிக்கிறது.
ராஜ்யங்களையும்: மனித அரசாங்கங்களைப் பொதுப்படையாகக் குறிக்கிறது.
அவருக்குக் காட்டி: அநேகமாக, நிஜமானதுபோல் தெரிந்த ஒரு தரிசனத்தையே பேய்களின் தலைவனான பிசாசு இயேசுவுக்குக் காட்டினான்.
ஒரேவொரு தடவை . . . என்னை வணங்கினால்: “வணங்குவதற்காக” என்ற அர்த்தமுள்ள கிரேக்க வினைச்சொல் இங்கே பொது இறந்தகாலத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது அப்போதைக்கு மட்டுமே நடக்கும் ஒரு செயலைக் குறிக்கிறது. ‘ஒரேவொரு தடவை வணங்கினால்’ என்று அது மொழிபெயர்க்கப்பட்டிருப்பது, இயேசு எப்போதுமே தன்னை வணங்க வேண்டுமென்று பிசாசு கேட்காததைக் காட்டுகிறது; ஒரேவொரு முறை தன்னை வணங்கும்படிதான் அவன் இயேசுவைக் கேட்டான்.
சாத்தானே: ‘சாத்தான்’ என்ற வார்த்தை, சாத்தன் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. இதன் அர்த்தம், “எதிர்ப்பவன்.”
யெகோவாவை: இந்த வசனம் உபா 6:13; 10:20-ஐ மேற்கோள் காட்டுகிறது. இதனுடைய மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) பயன்படுத்தப்பட்டுள்ளன.—இணைப்பு C-ஐப் பாருங்கள்.
இயேசு கேள்விப்பட்டு: இதற்கு முந்தின வசனத்தில் சொல்லப்பட்ட சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகுதான் இந்த வசனத்தில் சொல்லப்படும் சம்பவம் நடந்தது. இந்த இடைப்பட்ட காலப்பகுதியில்தான், யோவா 1:29-லிருந்து 4:3-வரை சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் நடந்தன. கூடுதலான ஒரு விவரத்தை யோவான் பதிவு செய்திருக்கிறார்; அதாவது, இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குப் பயணம் செய்தபோது சமாரியா வழியாகப் போனதாகவும், அங்கே சீகாருக்குப் பக்கத்திலிருந்த கிணற்றுப் பக்கமாக ஒரு சமாரியப் பெண்ணைப் பார்த்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.—யோவா 4:4-43; இணைப்பு A7-ஐயும், “இயேசுவுடைய ஊழியத்தின் ஆரம்பம்” என்ற பட்டியலையும், வரைபடம் 2-ஐயும் பாருங்கள்.
கப்பர்நகூமுக்கு: “நாகூமின் கிராமம்” அல்லது “ஆறுதலின் கிராமம்” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு எபிரெயப் பெயரிலிருந்து வந்திருக்கிறது. (நாகூ 1:1, அடிக்குறிப்பு) கப்பர்நகூம், இயேசுவுடைய பூமிக்குரிய ஊழியத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்த ஒரு நகரமாக இருந்தது. அது கலிலேயா கடலின் வடமேற்குக் கரையில் அமைந்திருந்தது. மத் 9:1-ல் ‘அவருடைய சொந்த ஊர்’ என்று அழைக்கப்பட்டது.
செபுலோன், நப்தலி பகுதிகளில்: பாலஸ்தீனாவின் வட கோடியில், கலிலேயா கடலின் மேற்கிலும் வடக்கிலும் இருந்த பகுதிகளைக் குறிக்கிறது; கலிலேயா மாகாணத்தையும் இது உட்படுத்துகிறது. (யோசு 19:10-16, 32-39) நப்தலி பகுதி, கலிலேயா கடலின் மேற்குக் கரையோரம் முழுவதையும் ஒட்டியிருந்தது.
கடலுக்குப் போகும் வழியில்: கலிலேயா கடலை ஒட்டியபடியே மத்தியதரைக் கடல்வரை சென்ற பழங்காலச் சாலையை ஒருவேளை குறிக்கலாம்.
மற்ற தேசத்தார் குடியிருக்கிற கலிலேயாவே: இஸ்ரவேலுக்கும் சுற்றுப்புறத் தேசங்களுக்கும் இடையில் ஒரு எல்லைப் பகுதியாக கலிலேயா இருந்ததால், அதை ஏசாயா இப்படி விவரித்திருக்கலாம். கலிலேயா அமைந்திருந்த இடமும், அதன் வழியாகச் சென்ற சாலைகளும் மற்ற தேசத்தார் அடிக்கடி வந்துபோவதற்கு வசதியாக இருந்தன. இதனால், அங்கே படையெடுத்து வருவதும் குடியேறுவதும் மற்ற தேசத்தாருக்குச் சுலபமாக இருந்தன. முதல் நூற்றாண்டில், யூதர்களாக இல்லாத நிறைய பேர் அங்கே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்; அதனால், இந்த விவரிப்பு இன்னும் பொருத்தமாக இருந்தது.
பெரிய வெளிச்சத்தை: மேசியாவைப் பற்றி ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, கலிலேயாவில் இருந்த செபுலோன், நப்தலி பகுதிகளில்தான் இயேசு நிறைய ஊழியம் செய்தார். (மத் 4:13, 14) இப்படி, ஆன்மீக இருளில் இருப்பதாகக் கருதப்பட்ட மக்களுக்கு ஆன்மீக அறிவொளியை அவர் தந்தார்; அந்த மக்கள் யூதேயாவிலிருந்த சக யூதர்களால்கூட வெறுக்கப்பட்டார்கள்.—யோவா 7:52.
மரணத்தின் நிழல்: அநேகமாக, மரணம் மக்களை நெருங்கும்போது அடையாள அர்த்தத்தில் அவர்கள்மேல் நிழலிடுவதை இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. ஆனால் இயேசு, அந்த நிழலை நீக்கி, மரணத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் அறிவொளியைத் தந்தார்.
ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே: மத் 1:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது: ஒரு புதிய அரசாங்கம் உலகத்தை ஆட்சி செய்யும் என்பதுதான் இயேசு பிரசங்கித்த முக்கிய செய்தியாக இருந்தது. (மத் 10:7; மாற் 1:15) இயேசுவின் ஞானஸ்நானத்துக்குச் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு செய்தியை யோவான் ஸ்நானகர் அறிவிக்க ஆரம்பித்திருந்தார் (மத் 3:1, 2); இருந்தாலும், கடவுளுடைய அரசாங்கம் ‘நெருங்கி வந்துவிட்டதாக’ இயேசு சொன்னதில் இன்னும் அதிக அர்த்தம் இருந்தது; ஏனென்றால், அந்த அரசாங்கத்தின் எதிர்கால ராஜாவாக நியமிக்கப்பட்டிருந்த அவர் அப்போது அங்கு இருந்தார். கடவுளுடைய அரசாங்கம் ‘நெருங்கி வந்துவிட்டதை,’ அதாவது சீக்கிரத்தில் வரவிருந்ததை, பற்றி இயேசுவின் மரணத்துக்குப் பிறகு அவருடைய சீஷர்கள் தொடர்ந்து அறிவித்ததாக எங்கும் சொல்லப்படவில்லை.
பிரசங்கிக்க: வெளிப்படையாக எல்லாருக்கும் அறிவிப்பதைக் குறிக்கிறது.—மத் 3:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
கலிலேயா கடலோரமாக: கலிலேயா கடல் என்பது வட இஸ்ரவேலின் உட்பகுதியில் இருந்த ஒரு நன்னீர் ஏரி. (‘கடல்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை ‘ஏரியையும்’ குறிக்கலாம்.) இது கின்னரேத் கடல் (எண் 34:11), கெனேசரேத்து ஏரி (லூ 5:1), திபேரியா கடல் (யோவா 6:1) என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 210 மீட்டருக்கு (700 அடிக்கு) கீழே அமைந்திருக்கிறது. வடக்கிலிருந்து தெற்குவரை இதன் நீளம் 21 கி.மீ. (13 மைல்), இதன் அகலம் 12 கி.மீ. (8 மைல்), இதன் அதிகபட்ச ஆழம் சுமார் 48 மீ. (157 அடி).—இணைப்பு A7-ஐயும், வரைபடம் 3B-ஐயும், “கலிலேயா கடலுக்குப் பக்கத்தில் நடப்பவை” என்ற பகுதியையும் பாருங்கள்.
பேதுரு என்ற சீமோனையும்: சீமோன் என்பதுதான் அவருடைய அசல் பெயர்; இயேசு அவருக்கு வைத்த பெயர் கேபா (கேஃபஸ்); இந்த செமிட்டிக் பெயரின் கிரேக்க வடிவம்தான் பேதுரு (பெட்ரோஸ்).—மாற் 3:16; யோவா 1:42; மத் 10:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
வலை வீசிக்கொண்டிருந்தார்கள்: மீனவர்கள் தண்ணீருக்குள் நடந்துபோய் அல்லது ஒரு சிறிய படகில் போய் வலையை வீசினார்கள்; நீர்ப்பரப்பின்மேல் ஒரு விரிப்புபோல் விழும் விதத்தில் தன்னுடைய வட்டமான வலையை வீச ஒரு திறமையான மீனவரால் முடிந்தது. அதன் விட்டம் ஒருவேளை 6-8 மீட்டராக (20-25 அடியாக) இருக்கலாம். அதன் ஓரத்தைச் சுற்றிலும் கனமான பொருள்கள் கட்டப்பட்டிருந்ததால், அது தண்ணீருக்குள் மூழ்கி, மீன்களை வாரிக்கொண்டது.
மீனவர்கள்: கலிலேயாவில் நிறைய பேர் மீன்பிடி தொழிலைச் செய்துவந்தார்கள். பேதுருவும் அவருடைய சகோதரரான அந்திரேயாவும் தனியாக மீன்பிடிக்கவில்லை; அநேகமாக, செபுதேயுவின் மகன்களான யாக்கோபோடும் யோவானோடும் சேர்ந்து மீன்பிடிக்கும் தொழிலைச் செய்துவந்தார்கள்.—மாற் 1:16-21; லூ 5:7, 10.
மனுஷர்களைப் பிடிப்பவர்களாக: இது, சீமோனும் அந்திரேயாவும் செய்துவந்த தொழிலின் அடிப்படையில் இயேசு பயன்படுத்திய சொல்வித்தை. கடவுளுடைய அரசாங்கத்துக்காக அவர்கள் ‘மனுஷர்களை உயிரோடு பிடிப்பார்கள்’ என்பதைக் காட்டினார். (லூ 5:10) அதோடு, இந்த விஷயங்களையும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கலாம்: மீன்பிடிக்கும் தொழிலைப் போலவே சீஷராக்கும் வேலையும் அதிக பாடுபட்டு உழைக்க வேண்டிய வேலை, விடாமுயற்சியோடு செய்ய வேண்டிய வேலை, ஆனால் அது எப்போதுமே பலன் தரும் என்று சொல்ல முடியாது.
அவர் பின்னால் போனார்கள்: பேதுருவும் அந்திரேயாவும் ஏற்கெனவே இயேசுவின் சீஷர்களாக இருந்தார்கள். அவர்கள் சீஷர்களாகி ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருஷம்வரை ஆகியிருந்தது. (யோவா 1:35-42) இப்போது, மீன்பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டு முழுநேரமாகத் தன்னைப் பின்பற்றும்படி இயேசு அவர்களை அழைக்கிறார்.—லூ 5:1-11; மத் 4:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
சகோதரர்களாக இருந்த . . . யாக்கோபும் யோவானும்: யாக்கோபு எப்போதுமே அவருடைய சகோதரரான யோவானோடு சேர்த்து குறிப்பிடப்படுகிறார். அதுவும் பெரும்பாலான வசனங்களில் முதலில் குறிப்பிடப்படுகிறார். அவர் யோவானுக்கு மூத்தவராக இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.—மத் 4:21; 10:2; 17:1; மாற் 1:29; 3:17; 5:37; 9:2; 10:35, 41; 13:3; 14:33; லூ 5:10; 6:14; 8:51; 9:28, 54; அப் 1:13.
செபெதேயு: ஒருவேளை, இயேசுவின் தாயான மரியாளின் சகோதரி சலோமேயை இவர் கல்யாணம் செய்திருந்ததால் இயேசுவின் பெரியப்பாவாக அல்லது சித்தப்பாவாக இருந்திருக்கலாம். அப்படியென்றால், யோவானும் யாக்கோபும் இயேசுவின் பெரியப்பா அல்லது சித்தப்பா பையன்களாக இருந்திருக்கலாம்.
உடனடியாக . . . விட்டுவிட்டு: “உடனடியாக” என்பதற்கான கிரேக்க வார்த்தை யூத்தீயாஸ். இது இந்த வசனத்திலும் 20-வது வசனத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுநேரமாகத் தன்னைப் பின்பற்றும்படி இயேசு கொடுத்த அழைப்பை, பேதுருவையும் அந்திரேயாவையும் போலவே யாக்கோபும் யோவானும் உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
கலிலேயா முழுவதும் போய்: கலிலேயாவில் இயேசு தன்னுடைய முதல் ஊழியப் பயணத்தை ஆரம்பிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் தேர்ந்தெடுத்திருந்த சீஷர்களான பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகிய நான்கு பேரும் அவரோடு இருக்கிறார்கள்.—மத் 4:18-22; இணைப்பு A7-ஐப் பாருங்கள்.
ஜெபக்கூடங்களில்: சொல் பட்டியலில் “ஜெபக்கூடம்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
கற்பித்தார் . . . பிரசங்கித்தார்: பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஏனென்றால், கற்பிப்பவர் செய்தியை அறிவிப்பது மட்டுமல்லாமல் அறிவுரை சொல்கிறார், விளக்குகிறார், பக்குவமாக எடுத்துச் சொல்கிறார், அத்தாட்சி அளிக்கிறார்.—மத் 3:2; 28:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
நல்ல செய்தியை: கிரேக்கில், யூயாஜீலியான். இங்குதான் இது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில பைபிள்கள் இதை “சுவிசேஷம்” என்று மொழிபெயர்த்துள்ளன. இதோடு சம்பந்தப்பட்ட இன்னொரு கிரேக்க வார்த்தையான யூயாஜீலிஸ்டெஸ், ‘நற்செய்தியாளர்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம், “நல்ல செய்தியை அறிவிப்பவர்.”—அப் 21:8; எபே 4:11, அடிக்குறிப்பு; 2தீ 4:5, அடிக்குறிப்பு.
சீரியா: அதாவது, “ரோம மாகாணமாகிய சீரியா.” கலிலேயாவின் வடக்கில் இருந்த மற்ற தேசத்தாரின் பகுதி. தமஸ்குவுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் இருந்தது.
காக்காய்வலிப்பால் கஷ்டப்பட்டவர்களையும்: இதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “நிலவினால் தாக்கப்பட்டவர்கள்; சந்திரரோகிகள்.” (சில பழங்கால மொழிபெயர்ப்புகளில், “பைத்தியம்பிடித்தவர்கள்” என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.) ஆனாலும், மத்தேயு இந்த வார்த்தையை மருத்துவ ரீதியில்தான் பயன்படுத்தியிருக்கிறார். ஏதோ மூடநம்பிக்கையினால் நிலவின் சில பிறைகளோடு இந்த நோயை அவர் சம்பந்தப்படுத்திப் பேசவில்லை. மத்தேயுவும் மாற்குவும் லூக்காவும் குறிப்பிட்டிருக்கிற நோய் அறிகுறிகள் கண்டிப்பாக காக்காய்வலிப்பு நோயோடு சம்பந்தப்பட்டவைதான்.
தெக்கப்போலி: சொல் பட்டியலையும் இணைப்பு B10-ஐயும் பாருங்கள்.
யோர்தானுக்குக் கிழக்கிலிருந்தும்: யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கிலிருந்த பகுதி பெரேயா என்றும் அழைக்கப்பட்டது. இதற்கான கிரேக்க வார்த்தை, பீரான்; இதன் அர்த்தம், “அக்கரை; மறுபக்கம்; அப்பால்.”