உங்களுடைய வாசிப்பை முன்னேற்றுவியுங்கள்—நீங்கள் அதைச் செய்ய முடியும்!
நன்றாக வாசிப்பதற்கு மாயவித்தை வாய்ப்பாடு எதுவும் இல்லை என்பது உண்மையே. உங்களால் வாசிக்க முடிந்தால் அப்பொழுது நீங்கள் நன்றாக வாசிக்கமுடியும். ஒழுங்காக வாசிக்காவிட்டால் நீங்கள் நன்றாக வாசிக்க எதிர்பார்க்க முடியாது. குறைந்தபட்சம் அரை மணி நேரம்—கூடுமானால், அதிக நேரம் ஒதுக்கி வைக்க வேண்டும்.
கவனமாக தெரிந்துகொள்வதன் அவசியம்
நீங்கள் எதை வாசிப்பீர்கள் என்பதை கவனமாக தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு பழக்கப்ட்ட வார்த்தைகளையுடைய தகவலையும் தொழில்துறை சாராத தலைப்புப் பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள். பின்பு, படிப்படியாக உங்களுடைய மொழி ஞானத்தை வளர்க்கக்கூடிய புத்தகங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
வேறொரு அர்த்தத்திலும்கூட வாசிப்பதை தெரிந்துகொள்வதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லா புத்தகங்களுமே கட்டியெழுப்புவதாகவோ மனதுக்கு புத்துயிர் அளிப்பதாகவோ இருப்பதில்லை. ஒரு ஞானவான் ஒரு சமயம் இவ்விதமாகச் சொன்னான்: “அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.” (பிரசங்கி 12:12) புத்தகங்கள் இன்று ஏராளமாக இருக்கின்றன. அநேக புத்தகங்கள் வாசிப்தற்கு பிரயோஜனமானவையாக இருக்கின்றன. ஒழுக்க ரீதியிலும், ஆவிக்குரிய வகையிலும் உங்களுக்கு அதிக பிரயோஜனமாக இருக்கக்கூடியவற்றை தெரிந்து கொள்ளுங்கள். பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளில், அதிகாரம் 13 வசனம் 20 இவ்விதமாகச் சொல்லுகிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” தோழர்களை கவனமாக தேரிந்தெடுப்பதைப் போலவே புத்தகங்களையும் ஒருவர் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே இங்கு நியமமாக இருக்கிறது.
வாசிப்பு பழக்கத்தில் ஒரு மாற்றம்
நிச்சயமாகவே பிறந்தவுடனே நம்மால் வாசிக்க முடியாது. வாழ்க்கையிலுள்ள மற்ற அநேக காரியங்களைப் போலவே, வாசிப்பதும் வளர்த்துக் கொள்ளப்படும் ஒரு திறமையாக இருக்கிறது. ஹார்மோனியம் வாசிக்க பழகி கொள்ளாமல் ஒரு நபர் ஹார்மோனிய வித்துவானாக ஆகமுடியுமா? அல்லது நிறைய டென்னிஸ் பந்தாட்டம் விளையாடாமல், ஒரு டென்னிஸ் பந்தாட்ட வீரராக ஆக முடியுமா? ஹார்மோனிய வித்துவானாக அல்லது டென்னில் வீரராக ஒரு நபர் ஆரம்பத்திலேயே கெட்ட பழக்கங்களை வளர்த்துக் கொள்வாரேயனால் அவர் அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். அல்லது அவற்றால் அவர் முதல் நிலைக்கு வராமலேயே இருப்பார்.
வாசிப்பதில் இது உண்மையாக இருக்கிறது. சிறு வயதிலேயே மாணக்கர் மோசமான வாசிப்பு பழக்கங்களை வளர்த்துக் கொள்வாரேயானால், அவருக்கு முன்னேற வாய்ப்பிராது. இதன் விளைவாக மிகவும் குறைந்த வாசிப்பு திறமையோடு அவர் வாழ்நாள் முழுவதும் அச்சடிக்கப்பட்ட தாளோடு போராடிக் கொண்டிருக்க வேண்டும். அவருக்கு வயதாகும்போது, மோசமான வாசிப்பு பழக்கங்களை விட்டுவிடுவது அதிக கடினமாகிவிடுகிறது. ஆனால் ஒருவர் முயற்சி செய்ய மனமுள்ளவராக இருப்பாரேயானால் இதை அவர் செய்ய முடியும்! இந்த பழக்கங்களில் சிலவற்றை நாம் சிந்திப்போமாக.
வாசிப்பதில் அடிப்படையான சரீர சம்பந்தமான அம்சம் கண்களின் அசைவாக இருக்கிறது. ஒவ்வொரு சமயமும் நீங்கள் அச்சடிக்கப்பட்ட ஒரு வரியை வாசிக்கையில் உங்களுடைய கண்ணின் அசைவு இடையில் நின்றுவிடுகிறது அல்லது நேராக பதிந்துவிடுகிறது. பார்வையை நேராக பதிப்பது முக்கியமாக இருக்கிறது. ஏனென்றால் அப்பொழுதுதானே அங்கு என்ன இருக்கிறது என்பதை கண்ணால் உண்மையில் பார்க்கமுடிகிறது. இந்த இடைவெளிகளின்போது, பார்வையால் பெறப்பட்ட கருத்துக்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் மொழிபெயர்க்கப்படுவதற்காக மூளைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கண் அல்ல, மூளையே வாசிப்பைச் செய்கிறது. உங்களுடைய கண்கள், உங்கள் மூளையின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன.
மெதுவாக வாசிப்பவர், பெரும்பாலும் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் நிறுத்துகிறார். இது மூளைக்கு தகவல்களை துண்டு துண்டாக அனுப்புகிறது. அப்பொழுது கண்கள் அதிகமாக வேலை செய்வதால் வாசிப்பது ஒரு வேலையாகிவிடுகிறது. வாசிக்கப்பட்டதில் சிறிதளவே நினைவில் இருக்கிறது. மாறாக, திறமையாக வாசிப்பவர்கள் வாசிக்கையில், கண் அசைவு தட்டுதடங்கலின்றியும் ஒரே சீராகவும் இருக்கிறது. ஒவ்வொரு வரியிலும் அவர்கள் நிறுத்தங்களின் எண்ணிக்கையை குறைக்க கற்றுக் கொள்கிறார்கள். செற்றொடர்களை அல்லது வார்த்தை தொகுதிகளை வாசிப்பதன் மூலம் அவர்களால் அதிக வேகமாக வாசிக்கவும், அவர்களுடைய புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்கவும் முடிகிறது.
இது வாசித்த வார்த்தைகளை அல்லது வாக்கியத்தை பின்சென்று வாசிக்கும் விஷயத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. பின்னோக்கிச் செல்லுதல் என்பது பின்னால் சென்று ஏற்கெனவே வாசித்ததை திரும்ப வாசிப்பதாகும். இந்த குறிப்பிட்ட பழக்கத்துக்கு ஆளாகிவிடுவதே பெரும்பாலும் இதற்கு காரணமாக இருக்கிறது. குறிப்பிடப்பட்ட ஒரு கருத்து விளங்காமல் இருக்கும் சமயங்கள் இருக்கலாம். அப்பொழுது பின்னோக்கிச் சென்று திரும்பவும் வாசிப்பது இன்றியமையாததாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் பின் சென்று திரும்ப வாசிப்பது உண்மையில் அவசியமற்றதாகவும் வாசகரின் வேகத்தை குறைப்பதாகவுமே இருக்கிறது. கூடிய வரையில் இதை தவிர்க்கப் பாருங்கள்.
நல்ல வாசிப்பு பழக்கத்துக்கு இடையூறாக இருப்பதாக அநேக நிபுணர்கள் நம்பும் மற்றொரு காரியமானது வாய்விட்டு வாசிப்பதாகும். அதாவது வாசகர் உதடுகளை அசைத்து உண்மையில் ஒவ்வொரு வார்த்தையையும் தமக்குத் தாமே சொல்லிக் கொள்ளுகிறார். அதே விதமாக சில ஆட்கள் வார்த்தைகளை மெளனமாக தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டு, மனதில் அதை கேட்டுக் கொண்டிருப்பார்கள். வாய்விட்டுச் சொல்வது அல்லது வாய் அசைப்பது, ஒரு நிமிடத்தில் நாம் வாசிக்கக்கூடிய வார்த்தைகளின் எண்ணிக்கையை குறைத்துவிடுகிறது. ஏனென்றால் நாம் அப்பொழுது பேசும் வேகத்தில்தானே வாசிக்கிறோம். சராசரி மனிதன் ஒரு நிமிடத்துக்கு சுமார் 125 வார்த்தைகளை பேசலாம். ஆனால் சராசரி வாசிப்பு வேகம் ஒரு நிமிடத்துக்கு 230-250 வார்த்தைகளாக இருக்கின்றன.
நாம் வேகமாக வாசிப்பதற்கு அநேக காரியங்கள் இருப்பதன் காரணமாக வாய்விட்டு வாசிப்பதை பொதுவாக பழக்கப்படுத்திக் கொள்ளாதிருப்பதே நல்லது. பொதுவாக வாய்விட்டு அல்லது வாய் அசைத்து வாசிப்பதைவிட வேகமாக வாசிக்க முயற்சியுங்கள். வார்த்தை தொகுதிகளை வாசிக்க முயலுங்கள். வாய்விட்டு வாசிப்பது அல்லது வாயசைப்பது கருத்தை கிரகித்துக் கொள்வதற்கு பொதுவாக உதவி செய்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பின்சென்று வாசிப்பது போலவே, வாய்விட்டு வாசிப்பதும்கூட சில சமயங்களில் பொருத்தமாக இருக்கலாம். குறிப்பிட்ட ஒரு தகவலின் மீது தியானம் செய்யவோ அல்லது அதை மனப்பாடம் செய்யவோ ஒருவர் விரும்புவாரேயானால், வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்வது மட்டுமல்லாமல் ஓரளவு வாய்விட்டு வாசிப்பதும்கூட பிரயோஜனமாக இருக்கும். பொதுவாக அது “தாழ்வான குரலில்” அல்லது சப்தமாக வாசிக்கப்படுகிறது.
பூர்வ இஸ்ரவேல் தேசத்தாரின் தலைவனான யோசுவாவுக்கு பின்வரும் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது: “[கடவுளுடைய] இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இரவும் பகலும் அதை தாழ்வான குரலில் நீ வாசித்துக் கொண்டிருப்பாயக.” ஏன்? “இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி” அதைச் செய்ய வேண்டும். “அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய்.” (யோசுவா 1:8, NW) நியாயப் பிரமாண புஸ்தகத்தை தாழ்வான குரலில் (வாய்விட்டு) வாசிப்பது அதை மனப்பாடம் செய்யவும், அங்கு வெளியிடப்பட்டிருக்கும் அனைத்துக் காரியங்களையும் கவனமாக தியானம் செய்யவும் உதவி செய்யும். இவ்விதமாக, கடவுளுடைய ஊழியனாக, எவ்விதமாக தன்னை நடத்திக்கொள்ள வேண்டும் என்பதை யோசுவாவுக்கு நினைப்பூட்ட நியாயப் பிரமாணம் எப்போதும் அவனுக்கு முன்னாலிருக்கும். அதே விதமாக இன்றுள்ள உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையை “நினைக்கிறதும்” அதன் பேரில் தியானம் செய்வதும் எவ்வளவு விவேகமானது என்பதை மதித்துணருகிறார்கள். ஆகவே அவர்கள் அதை ஒழுங்காக வாசிக்கிறார்கள்.—சங்கீதம் 103:17, 18; நீதிமொழிகள் 4:5 ஒப்பிடவும்.
நன்றாக புரிந்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளுதல்
டயக்னாஸ்டிக் அண்டு ரெமிடியல் டீச்சிங் என்ற தம்முடைய புத்தகத்தில் க்ளென் மையர்ஸ் ப்ளேர் இவ்விதமாக குறிப்பிட்டிருந்தார்: “மாணாக்கரின் விளங்கிக் கொள்ளும் ஆற்றலை வளர்ப்பதே அனைத்து வாசிப்பு முன்னேற்ற திட்டங்களின் அடிப்படை இலக்காகவும் இருக்கிறது. மற்றவை முக்கியத்துவத்தில் இரண்டாம் இடத்தையே பெறுகின்றன.” நீங்கள் வாசிப்பதை விளங்கிக் கொள்வது என்பது அதன் பொருளை உணர்ந்து, அதை புரிந்துகொள்வதை அடிப்படையில் அர்த்தப்படுத்துகிறது. இதுவே வாசிப்பதை மதிப்பு மிக்கதாயும் பிரயோஜனமானதாயும் செய்கிறது.
நியு யார்க் நகர கல்லூரியில், கல்வி பயிற்சி அளிப்பவரும் பேராசிரியருமான ராபர்ட் க்ருச் இவ்விதமாக சிபாரிசு செய்திருந்தார்: “விளங்கிக் கொள்வதற்கு உதவியாக, எல்லா சமயங்களிலும் ஒரு நோக்கத்தோடு வாசிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் வாசிக்கும் புத்தகத்திலிருந்து என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துவிடுங்கள். ஒரு சமயம் குறிப்பாக சில உண்மைகளை தெரிந்து கொள்வதற்காக நீங்கள் வாசிக்க விரும்பலாம். மற்ற சமயங்களில் வெறுமென இன்பத்துக்காகவும் பொழுது போக்குக்காகவும் நீங்கள் வாசிக்க விரும்பலாம். எப்படியிருந்தாலும் வாசிக்கப்படும் பகுதி எத்தனை கடினமானது என்பதைப் பொறுத்து வாசிக்கும் வேகத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். வாசிக்கும்போதும் நுணுக்கமாக ஆராயப்பாருங்கள். உங்களை இவ்விதமாக கேட்டுக் கொள்ளுங்கள்: எழுத்தாளர் ஏன் இதைச் சொன்னார்? அவருடைய நோக்கமென்ன? பாராவின் முக்கிய குறிப்பை அல்லது கருத்தை பிரித்தெடுத்து பாருங்கள். வாசகராகிய என்னை இது எவ்விதமாக பாதிக்கிறது? என்று கேட்டுக் கொள்ளுங்கள். ஆம், ஒரு நோக்கத்தோடு வாசிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வாசிப்பதை பழக்கமாகிக்கொள்ளுங்கள். வாசிப்பது ஒரு மனமகிழ்வைத் தரும் ஒரு அனுபவமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
நன்றாக வாசிப்பது அநேக நன்மைகளை கொண்டு வருகிறது
நீங்கள் ஒரு மாணாக்கராக, தொழிலை நடத்தி வரும் ஒருவராக, குடும்பத்தலைவியாக, ஒரு அலுவலகத்தில் அல்லது தொழிற்சாலையில் வேலை செய்பவராக, யாராக இருந்தாலும்சரி, நல்ல வாசிப்பு பழக்கங்கள் இன்றியமையாததாக இருக்கின்றன.
நன்றாக வாசிக்கும் ஒரு மாணவன், தன்னுடைய வேலையில் அதிக திறமையுள்ளவனாகவும் பள்ளியில் அதிகம் கற்றுக் கொள்கிறவனாகவும் இருப்பான் என்பதில் சந்தேகமில்லை. வாசிப்பிலும் மறுவாசிப்பிலும் செலவிடும் நேரத்தை அவன் குறைத்துக் கொள்ளலாம்.
அதேவிதமாக, தொழிலை அல்லது வியாபாரத்தை நடத்துபவரும்கூட, வாசிப்பதில் திறமையுள்ளவராக இருக்கும்போது நீண்ட செய்தி குறிப்புகள் போன்றவற்றை வெற்றிகரமாக சமாளித்து வருவார். இதனால் நோயாளிகள், கட்சிக்காரர்கள் அல்லது வாடிக்கையாளர்களோடு தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொள்ள அவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். வாசிப்பதில் நல்ல திறமையுள்ளவராக இருக்கும் பட்சத்தில் அவரால் அதிகமாக வாசிக்க முடியும். இது மற்றவர்களின் பணிகளை, ஆராய்ச்சிகளை மற்றும் சோதனைகளை நல்ல முறையில் தெரிந்துகொள்ள உதவி செய்யும்.
திறமையாக வாசிப்பதால் அதிகமான அறிவை பெற்றுக்கொள்ளும் குடும்பத் தலைவர்கள் அவர்களுடைய வேலையிலும் பொறுப்பிலும் அநேகமாக தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். தகவல் தொகுதிகளையும் விதிமுறைகளையும் அறிவுரைகளையும் வாசிக்கக்கூடியவர்களாய் இருக்கும்போது, வீட்டில் காரியங்களை நல்ல விதமாக கவனித்துக் கொள்வதற்கு உதவியாக இது இருக்கிறது. குடும்பத்தின் பணவிஷயங்களை நிர்வகிப்பதிலும்கூட வாசிக்கும் திறமை உதவியாக இருக்கிறது.
வாசிப்பதன் மூலமாக அதிகமான அறிவை பெற்றுக் கொள்ளும் குடும்பத் தலைவிகள், சரியான சத்துணவு, சுகாதாரம், நோய்தடுப்பு அல்லது வியாதிப்பட்டிருப்பவர்கள் சம்பந்தமாக குடும்பத்தை நல்ல விதமாக பேணி காத்துக்கொள்ள முடியும். நன்றாக வாசிக்கும் தாய்மார்கள் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதற்கு முன்பாகவே அவர்களுக்கு வாசிக்க கற்றுக் கொடுக்க முடியும்.—1968, மே 22, விழித்தெழு! பக்கங்கள் 20-2 பார்க்கவும்.
அதிக முக்கியமாக, நன்றாக வாசிக்கக் கூடியவர்கள் இந்த தற்போதைய காரிய ஒழுங்குக்கும் அப்பால், ஜீவனுக்கு வழிநடத்துக்கூடிய அறிவை பெற்றுக்கொள்ள முடியும். தற்போதைய காரிய ஒழுங்கின் முடிவோடு சம்பந்தப்பட்ட பைபிள் தீர்க்கதரிசனங்கள் இப்பொழுது நிறைவேறி வருகின்றன. பரதீஸிய பூமியின் மீது நித்திய ஜீவனை அனுபவித்துக் களிக்கும் நம்பிக்கையையுடைய அனைவரும் நம்முடைய சிருஷ்டிகரையும்” அவருடைய நோக்கங்களையும் பற்றிய அறிவை எடுத்துக் கொள்வது இன்றியமையாததாக இருக்கிறது. யோவான் 17:3-ல் இயேசு சொன்னார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.
ஆகவே அறிவும் கிளர்ச்சியும் நிறைந்த உலகினுள் பிரவேசிப்பதற்கான கதவு, அதனுள் பிரவசிக்க விரும்பும் எவருக்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதற்கு திறவுகோல் வாசித்தலாகும். ஆம், நன்றாக வாசியுங்கள். அந்தக் கதவு உங்களுக்கு எப்போதும் திறந்திருக்கிறது. (g85 9/8)
[பக்கம் 7-ன் படம்]
நீங்கள் எதை வாசிக்கிறீர்கள் என்பதை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்