பைபிளின் கருத்து
ஈஸ்டர்—அது கிறிஸ்தவர்களுக்குரியதா?
ஈஸ்டர் பற்றி உங்கள் கருத்து என்ன? கனடாவிலிருக்கும் ஆறுவயது அலெக்ஸாண்ட்ரா என்ற சிறுமிக்கு அது விருந்து நிகழ்ச்சியாக இருக்கிறது. ‘கேக் சாப்பிட உன் நண்பர்கள் உன்னை அழைப்பார்கள். நீ ஈஸ்டர் முயலுக்கு எழுதி, அவன் சாக்லெட் முட்டைகளை கொண்டு வந்திருக்கிறானா என்று தெரிந்துகொள்ளலாம்,’ என்று அவள் சொன்னாள். வேறு சிலருக்கு அந்த சந்தர்ப்பமானது வேலையிலிருந்தோ அல்லது பள்ளியிலிருந்தோ சற்று கூடுதலான விடுமுறைகள் வார இறுதியில் நீண்ட ஓய்வு ஆகியவற்றை குறிக்கிறது. ஆனால் இன்னும் அநேகருக்கு ஈஸ்டரானது அந்த ஆண்டின் மிக முக்கியமான மத பண்டிகையாக இருக்கிறது. அதாவது இயேசு கொல்லப்பட்டு மூன்று நாள் கழித்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் நிகழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த ஈஸ்டர் பண்டிகையை கடவுள் எப்படி கருதுகிறார். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஆசரிப்பதை காட்டிலும் அதில் அதிகம் உட்பட்டிருக்கிறதா? கடவுளுடைய அங்கீகாரம் நமக்கு வேண்டுமானால் அதைப்பற்றி அறிவது அதிக அத்தியாவசியமானது.
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மிகவும் முக்கியமானது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கிறிஸ்தவ நம்பிக்கைக்கு மையமானது. அதை பின்வருமாறு எழுதுவதன் மூலம் அப்போஸ்தலனாகிய பவுல் வலியுறுத்தினான்: “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் எங்கள் பிரசங்கமும் விருதா. உங்கள் விசுவாசமும் விருதா. மேலும் கிறிஸ்து எழுந்திராவிட்டால் உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.” (1 கொரிந்தியர் 15:14, 17)) எனவே நம்முடைய வணக்கம் கடவுளை பிரியப்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டுமானால் நாம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைக்க வேண்டும்.
ஆனால் ஈஸ்டர் கொண்டாடுவதில் கிறிஸ்துவின் உயிர்தெழுதலை கொண்டாடுவதைக் காட்டிலும் அதிகம் உட்பட்டிருக்கிறது. மனிதர்கள், பைபிளின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டு அத்துடன் பொய் தெய்வங்களை வணங்கிய பண்டைய கால மக்களிடமிருந்து தோன்றின அடையாளங்களையும் பழக்க வழக்கங்களையும் இணைத்துவிட்டார்கள். உதாரணமாக, சில நாடுகளில் நன்கு அறியப்பட்ட ஈஸ்டர் சின்னமாகிய முயலைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். பண்டைய கால புறமதத்தினர் இளவேனிற் பருவத்தில் நிறைவான புதிய வாழ்க்கையின் அடையாளச் சின்னமாக முயலை பயன்படுத்தினார்கள். . . . ஈஸ்டரின் அடையாளச் சின்னமாக முயல் பயன்படுத்தப்பட்ட முதற்பதிவு ஜெர்மனியில் சுமார் 1572-ல் காணப்படுகிறது என்று பள்ளி மற்றும் இல்லத்திற்கான தி கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா சொல்லுகிறது. அதே போன்று ஈஸ்டர் காலத்தில் பயன்படுத்தப்படும் சூடான சிலுவை பன்கள் (hot cross buns) பிரகாசமான வண்ணந்தீட்டப்பட்ட முட்டைகள், அல்லது சாக்லெட் மணிகள் புறமத நம்பிக்கைகளில் அதன் மூலத்தை கொண்டிருக்கிறது. மேலும் (சில மொழிகளில் பயன்படுத்தப்படும்) ஈஸ்டர் என்ற பெயர்தானே புறமத தெய்வத்துடன் சம்பந்தப்பட்டதாயிருக்கிறது என்பதை அறிவது வியப்பூட்டுவதாயிருக்கிறது. ‘ஈஸ்டர் ஆரம்பத்தில் ட்யூட்டானிக் ஒளித் தேவதையை கனப்படுத்தும் இளவேனிற்கால பண்டிகையாக இருந்தது, மேலும் ஆங்கிலோ-சாக்ஸன் மொழியில் இளவேனிற் பருவம் ஈஸ்டர் என்றறியப்பட்டிருந்தது என்று பைபிளின் வெஸ்ட்மினிஸ்டர் அகராதி 8-ம் நூற்றாண்டான அவ்வளவு முந்திய காலத்திலேயே இந்த பெயரானது பழங்கால ஆங்கில மொழியினரால் (Anglo-Saxons) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொண்டாடுவதற்கு திட்டமிட்டமைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ திருவிழாவிற்கு மாற்றப்பட்டது.”
இந்த புறமத மூதாதையர் மரபு பரவலாக அங்கீகரிக்கப்பட்டதாயும் திட்டமான ஆதாரச் சான்றுகளை கொண்டதாயுமிருக்கிறது. கேள்வியென்னவெனில் இதை கவனிப்பது அவ்வளவு முக்கியமானதா? ஈஸ்டர் கிறிஸ்துவை கனப்படுத்தும் நோக்குடன் செய்யப்படுவதன் காரணமாக அதனுடைய பண்டிகை கால அலங்காரங்களும் ஏன் அந்த பெயர்தானேயும் மற்ற கடவுட்களின் வணக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற உண்மையை கடவுள் கவனியாது விட்டுவிடுவாரா?
ஈஸ்டர் பற்றிய கடவுளுடைய கருத்து
மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட பத்து கட்டளைகளில் முதல் இரண்டு கட்டளையில் கடவுள் சொன்னதாவது: “உன் தேவனாகிய யெகோவா நானே, என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். உன் தேவனாகிய யெகோவாவாகிய நான் எரிச்சலுள்ள தேவன்.” (தனிப்பட்ட பக்தியை விரும்புகிறவர், NW) (உபாகமம் 5:6-9) பொய் வணக்கத்தின் யோசனையையுங்கூட கடவுள் பொறுத்துக்கொள்ளவில்லை என்பதை இஸ்ரவேல் தேசத்தினருடன் கடவுள் கொண்ட தொடர்புகளில் மீண்டும் மீண்டுமாக காண்கிறோம்.
உதாரணமாக, மோசே இரண்டு கற்பலகைகளில் பத்து கட்டளைகளை பெற்ற சீனாய் மலையிலிருக்கும்போது இஸ்ரவேலர்கள் தங்களுடைய யெகோவாவின் வணக்கத்தில் எகிப்திய மதத்தின் சின்னங்களை கலக்க ஆரம்பித்தார்கள். ஜனங்களிடமிருந்து பொன்காதணிகளை சேகரித்த பின்பு உருக்கி வார்க்கப்பட்ட ஒரு கன்றுகுட்டி உண்டாக்கப்பட்டது. அதன் பின்பு, “இஸ்ரவேலரே உங்களை எகிப்திலிருந்து அழைத்துக் கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே” என்று சொன்னார்கள். பைபிள் பதிவு நமக்கு சொல்வதாவது: ஆரோன் அதை பார்த்து அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்கு யெகோவாவுக்கு பண்டிகை என்று கூறினான். மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து சர்வாங்க தகன பலிகளையிட்டு, சமாதான பலிகளை செலுத்தினார்கள். பின்பு ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.”—யாத்திராகமம் 32:1-6.
நவீன காலங்களில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுபவர்களைப் போன்றே இஸ்ரவேலரும் உண்மையான கடவுளை வணங்குவதாக உரிமை பாராட்டினார்கள். அது “கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, NW] பண்டிகை” என்று சொல்லப்பட்டது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அந்த சிலையுடன் யெகோவாவின் வணக்கத்தை சம்பந்தப்படுத்த அவர்கள் முயன்றார்கள். என்றபோதிலும் ஒரு எகிப்திய தெய்வத்தை—ஒருவேளை எபிஸ், இவன் ஒரு இளம் காளையை பிரதிநிதித்துவம் செய்தான்—அவனை பாவனை செய்துகாட்டிய ஒரு பண்டிகையில் அகமகிழ்ந்து கொண்டிருந்தார்கள். கடவுள் இதில் பிரியங்கொண்டாரா? இல்லவே இல்லை. அதன் சம்பந்தமாக அந்த தேசத்தினரை பெருமளவிற்கு அழித்துப்போட்டார்.—யாத்திராகமம் 32:7-10.
அதே விதமாகவே, கிறிஸ்தவர்கள் தங்கள் வணக்கத்தை பொய்த் தெய்வங்களுடன் சம்பந்தப்பட்ட எந்த பழக்கவழக்கங்களுக்கும் அடையாள சின்னங்களுக்கும் மற்றும் பண்டிகைகளுக்கும் தொடர்பற்றதாய் தூய்மையாகவும் மற்றும் கறைகளின்றியும் வைத்துக்கொள்ளும்படி எதிர்பார்க்கிறார். இதை பின்வருமாறு சித்தரிக்கலாம். ஒருவேளை கத்தி மோசமான ஒரு காரியத்துக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் உணவு பண்டங்களை அறுத்துச் சாப்பிடுவதற்கு அந்த கத்தியை பயன்படுத்துவதை குறித்து நீங்கள் எவ்வாறு உணருவீர்கள்? இந்த ஈஸ்டர் பண்டிகையானது எங்கிருந்து தோன்றியதோ அந்த அருவருப்பான புறமத பழக்கவழக்கங்களை கடவுள் தாமே நேரில் கண்டவராக இருக்கிறார். அப்படியானால், அவருடைய கருத்துதானே நமக்கு முக்கியமானதாக இருக்க வேண்டுமல்லவா?
அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினதாவது: “நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?” சம்பந்தமே இல்லை என்பதே இதற்கு விடை. அதன் பின்பு அவர் தொடருவதாவது: ஆனபடியால் நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துப்போய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.”—2 கொரிந்தியர் 6:14-17.
ஆரம்ப காலமுதற்கொண்டே பொய் மதத்தின் எந்த ஒரு இணைப்புமின்றி தம்முடைய ஜனங்கள் தமக்கு தனிப்பட்ட பக்தி செலுத்த வேண்டும் என்பதை கடவுள் வலியுறுத்தி வந்திருக்கிறார். உண்மை கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு போற்றுதலை காட்டுவது எப்படியெனில் புறமத வழிப்பாட்டிலிருந்து கடத்தப்பட்டு வந்திருக்கும் ஒரு பண்டிகை கொண்டாடுவதன் மூலமல்ல, ஆனால் அதற்கு மாறாக, இயேசுவினுடைய கட்டளைக்கிணங்க, அவருடைய மரணத்தை நினைவுகூறுதலாக ஆசரிப்பதன் மூலமும் மற்றும் இயேசுவை போன்று கடவுளை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொண்டு கடவுளை தொடர்ந்து பிரியப்படுத்த முயலுவதன் மூலமும் இந்த போற்றுதலை காண்பிக்கின்றனர்.—லூக்கா 22:19; யோவான் 4:24. (g86 3/8)
[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]
ஈஸ்டர் கிறிஸ்துவை கனப்படுத்தும் நோக்குடன் செய்யப்படுவதன் காரணமாக, அதனுடைய பண்டிகை கால அலங்காரங்கள் மற்ற கடவுட்களின் வணக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற உண்மையை கடவுள் கவனியாது விட்டுவிடுவாரா?
[பக்கம் 14-ன் படம்]
இவற்றிற்கும் இயேசுவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?