ஈஸ்டரா—அல்லது நினைவு ஆசரிப்பா எதை நீங்கள் அனுசரிக்க வேண்டும்?
ஏப்ரல் 7-ம் தேதியன்று விடியல் தன் பிரகாச ஒளியை அடிவானத்தின்மீது பரப்பும்போது, வருடத்திலேயே மிகுந்த பரிசுத்த தினமான ஈஸ்டரை கோடிக்கணக்கானோர் வரவேற்பார்கள். செப்டுவாஜெஸிமா என்ற விடுமுறையோடு ஆரம்பமாகி திரித்துவ நாள் என்று சொல்லப்பட்டதோடு முடிவடைந்ததும், விருந்துகளும் உபவாசங்களும் நிறைந்ததுமான 120-நாள் காலப்பகுதிக்கு இந்தப் பெயர் ஒரு சமயத்தில் பொருந்தியது. இன்று இந்தப் பெயர் இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவுபடுத்தும் ஒரே நாளுக்கு—ஈஸ்டர் ஞாயிறுக்கு—பொருத்தப்படுகிறது.
எனினும், ஏப்ரல் 2, செவ்வாய்க்கிழமையன்று கர்த்தரின் இராப்போஜனம் என்றும் அழைக்கப்படும் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்காக மற்ற லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடி வருவார்கள். இது பூமியில் தம்முடைய கடைசி இரவின்போது இயேசுவினாலேயே துவக்கிவைக்கப்பட்ட ஆசரிப்பு ஆகும். அப்போது தம்முடைய சீஷர்களுக்கு அவர் இவ்வாறு சொன்னார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.”—லூக்கா 22:19.
நீங்கள் எதை அனுசரிக்க வேண்டும்?
ஈஸ்டரின் துவக்கம்
அநேக நாடுகளில் பயன்படுத்தப்படும் ஈஸ்டர் என்ற பெயர் பைபிளில் காணப்படுவதில்லை. இடைநிலைக் காலத்து விடுமுறைகளும் பண்டிகைகளும் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “விடியல் மற்றும் இளவேனிற்கால புறமத பெண்தெய்வமாகிய ஈயோஸ்டரின் பெயரால் இந்த விடுமுறை பெயரிடப்பட்டிருக்கிறது.” இந்தப் பெண்தெய்வம் யார்? “புராணக் கதையின்படி, தூய்மையின் காரணமாக வெண்மைக் கடவுள் என்பதாகவும், அதனுடைய நெற்றி மனிதவர்க்கத்திற்கு வெளிச்சத்தைக் கொடுப்பதாக கருதப்பட்டதன் காரணமாக சூரியக் கடவுள் என்பதாகவும் அழைக்கப்படும் போல்டரை அழைக்க வல்ஹால்லாவின் நுழைவாயிலைத் திறந்த கடவுள்தான் ஈயோஸ்டர்,” என்பதாக தி அமெரிக்கன் புக் ஆஃப் டேஸ் என்ற புத்தகம் பதிலளிக்கிறது. கூடுதலாக அது இவ்வாறு சொல்கிறது: “ஆரம்ப காலத்தில் சர்ச் பழைமையான புறமத வழக்கங்களை ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு ஒரு கிறிஸ்தவ அர்த்தத்தை கொடுத்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இளவேனிற்காலத்தில் ஜீவன் புதுப்பிக்கப்படுவதை கொண்டாடுவதே ஈயோஸ்டரின் பண்டிகையாயிருப்பதன் காரணமாக, எவருடைய சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்களோ அந்த இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததன் கொண்டாட்டமாக அதை ஆக்குவது சுலபமானதாயிருந்தது.”
அவர்கள் அதை ஏற்றுக்கொண்டது, ஈஸ்டர் வழக்கங்களான ஈஸ்டர் முட்டைகள், ஈஸ்டர் முயல், ஹாட் க்ராஸ் பன்கள் ஆகியவை எவ்வாறு சில நாடுகளில் ஆரம்பமாயின என்பதை விளக்குகிறது. “சிலுவையின் . . . அடையாளக் குறியோடு, பளபளக்கும் ப்ரௌன் நிற மேற்பகுதிகளையுடைய” ஹாட் க்ராஸ் பன்களைச் செய்வதன் வழக்கத்தைக் குறித்து ஈஸ்டரும் அதனுடைய வழக்கங்களும் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “முதல் புனிதவெள்ளி நிகழ்ச்சியிலிருந்து நித்திய முக்கியத்துவத்தை அது பெறுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே சிலுவை ஒரு புறஜாதி அடையாளச் சின்னமாயிருந்தது. மேலுமாக கிறிஸ்தவத்துக்கு முன்னான காலத்தில் ரொட்டிகளும் கேக்குகளும் சிலசமயம் சிலுவையின் அடையாளத்தைப் பெற்றிருந்தன.”
இந்தக் காரியங்களை வேத எழுத்துக்களில் நாம் எங்குமே காண்பதுமில்லை, இயேசுவின் பூர்வீக சீஷர்கள் அதை நம்பினார்கள் என்பதற்கு எந்த விதமான அத்தாட்சியும் இல்லை. உண்மையில், ‘[நாம்] வளருவதற்கு, . . . திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருக்கும்படி,’ அப்போஸ்தலனாகிய பேதுரு நமக்கு சொல்கிறார். (1 பேதுரு 2:3) புறமத அடையாளச் சின்னங்களென்று வெளிப்படையாகத் தெரிகிற இப்படிப்பட்டவற்றை ஏன் சர்ச்சுகள் தங்களுடைய நம்பிக்கைகளிலும் பழக்கங்களிலும் சேர்த்துக் கொண்டன?
புகழ்பெற்ற வழக்கங்களின் ஆவல்கள் என்ற ஆங்கில புத்தகம் பதிலளிக்கிறது: “அடியோடு அழிக்க முடியாததன் காரணமாக நடப்பிலுள்ள அப்படிப்பட்ட புறமத சடங்குகளுக்கு ஒரு கிறிஸ்தவ முக்கியத்துவத்தைக் கொடுப்பது பூர்வ சர்ச்சின் ஒரு நிலையான கொள்கையாயிருந்தது. ஈஸ்டரைப் பொறுத்தவரையில் மாற்றம் விசேஷமாக சுலபமானதாயிருந்தது. இயற்கை சூரியனின் உதயத்தைக் குறித்ததில் மகிழ்ச்சியும், குளிர்கால மரணத்திலிருந்து இயற்கை விழித்தெழுவதைக் குறித்த மகிழ்ச்சியும், நீதியின் சூரியன் உதிப்பதைக் குறித்த, அதாவது பிரேதக்குழியிலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்ததைக் குறித்த மகிழ்ச்சியாக ஆனது. அநேகமாக மே 1-லிருந்து நடைபெற்ற சில புறமத ஆசரிப்புகளும் ஈஸ்டர் கொண்டாட்டத்தோடு ஒத்திருக்கும்படி மாற்றப்பட்டது.” புகழ்பெற்ற புறமத வழக்கங்களையும் மாய்மாலமான மாயவித்தை சார்ந்த சடங்குகளையும் தவிர்ப்பதற்கு பதிலாக, அந்த மதத் தலைவர்கள் அவற்றை கவனித்தும் கவனியாது விட்டுவிட்டு அவற்றிற்கு “கிறிஸ்தவ முக்கியத்துவம்” கொடுத்தனர்.
‘ஆனால் அதில் எதாவது தீங்கு இருக்கிறதா?’ என்பதாக நீங்கள் யோசிக்கலாம். சிலர் இல்லை என்பதாக யோசிக்கிறார்கள். “கிறிஸ்தவத்தைப்போன்ற ஒரு மதம் வெளியிலுள்ள ஜனங்களால் வருகிறதென்றால், அது பண்டைய மதங்களிலிருந்து தோன்றியிருக்கும் மரபுபழக்கவழக்கங்கள் சிலவற்றை ஏற்றுக்கொண்டு ‘முழுக்காட்டுதல்’ கொடுக்கிறது,” என்பதாக ஈஸ்டர்—அதனுடைய கதையும் அர்த்தமும் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் ஆலன் டபிள்யூ. வாட்ஸ், என்ற ஒரு இப்பிஸ்கபல் மதகுரு கூறினார். “சர்ச்சினால் கற்றுக்கொடுக்கப்படும் அதே நித்திய நியமங்களை பொருள்படுத்துவதாகத் தோன்றுகிற ஆசரிப்புகளை கிறிஸ்தவமண்டலம் தேர்ந்தெடுத்து, மரபு வழிவந்த சடங்குக்குள் புகுத்துகிறது.” அநேகருக்கு, அவர்களுடைய சர்ச் இந்த ஆசரிப்புகளுக்கு அனுமதியளித்து அவற்றை புனிதமாகக் கருதும் உண்மைதானே அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு போதுமான காரணமாயிருக்கிறது. ஆனால் முக்கியமான கேள்விகள் கவனியாமல் விடப்படுகின்றன. கடவுள் இந்த வழக்கங்களைக் குறித்து எவ்வாறு உணருகிறார்? இந்தக் காரியத்தின்பேரில் பின்பற்றத்தக்க வழிகாட்டும் அறிவுரைகள் எவற்றையாவது நமக்கு கொடுத்திருக்கிறாரா?
கடவுளுடைய நோக்குநிலையை புரிந்துகொள்வது
“நம் கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் ஆசரிப்பான ஈஸ்டர் திருநாள், கிறிஸ்தவ சர்ச்சின் பண்டிகைகள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய ஒன்று,” என்பதாக ஈஸ்டரும் அதனுடைய வழக்கங்களும் என்ற புத்தகத்தில் கிறிஸ்டினா ஹோல் கூறினார். மற்ற எழுத்தாளர்கள் கருத்தில் ஒன்றுபடுகின்றனர். “கிறிஸ்தவ வருடத்தில் எந்த புனித நாளோ அல்லது பண்டிகையோ ஈஸ்டர் ஞாயிறோடு முக்கியத்துவத்தில் ஒப்பிட முடியாததாய் இருக்கிறது,” என்பதாக ராபர்ட் ஜே. மையர்ஸ் கொண்டாட்டங்கள் என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஆயினும், அது சில கேள்விகளை எழுப்புகிறது. ஈஸ்டரை கொண்டாடுவது அவ்வளவு முக்கியமான ஒன்றென்றால், அதை அனுசரிக்க வேண்டுமென்பதாக பைபிளில் ஏன் எந்த ஒரு திட்டவட்டமான கட்டளையும் கொடுக்கப்படவில்லை? இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் ஈஸ்டர் ஞாயிறை அனுசரித்தார்கள் என்பதற்கு ஏதாவது பதிவு இருக்கிறதா?
எதைக் கொண்டாட வேண்டும் எதைக் கொண்டாடக்கூடாது என்பதன்பேரில் வழிகாட்டும் அறிவுரைகளை பைபிள் கொடுக்காமல் இல்லை. பூர்வ இஸ்ரவேல் தேசத்தாருக்கு கடவுள் இந்த விஷயத்தில் மிகவும் திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தார். முன்பு குறிப்பிடப்பட்ட விதமாக, கிறிஸ்துவின் மரண நினைவுகூருதலை தொடர்ந்து அனுசரிக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு தெளிவான அறிவுரைகள் கொடுக்கப்பட்டிருந்தன. (1 கொரிந்தியர் 11:23-26; கொலோசெயர் 2:16, 17) என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்காவின் ஆரம்ப பதிப்பு ஒன்று இவ்வாறு நமக்கு சொல்கிறது: “புதிய ஏற்பாட்டிலோ அல்லது அப்போஸ்தலர்களின் திருத்தூதர்களுடைய எழுத்துக்களிலோ ஈஸ்டர் பண்டிகையை அனுசரிக்க வேண்டியதைக் குறித்து எந்த ஒரு குறிப்பும் இல்லை. பண்டிகை நாட்களின் புனிதத்தன்மையின் எண்ணம் முதல் கிறிஸ்தவர்களின் மனங்களில் சிறிதும் இல்லை. . . . இந்தப் பண்டிகையையோ அல்லது வேறெந்த பண்டிகையையோ அனுசரிக்கும்படி கர்த்தரோ அல்லது அவருடைய அப்போஸ்தலர்களோ கட்டளையிடவில்லை.”
இப்படிப்பட்ட பண்டிகைகளின் மகிழ்ச்சியும் அவை கொண்டுவரும் சந்தோஷமும் அவற்றை அனுசரிப்பதை நியாயப்படுத்திக் காண்பிக்க போதுமானதாயிருக்கின்றன என்று சிலர் நினைக்கின்றனர். ஆயினும், ஒரு எகிப்திய மத பழக்கத்தை இஸ்ரவேலர்கள் ஏற்றுக்கொண்டு அதை ‘கர்த்தருக்கான ஒரு பண்டிகை’ என்பதாக பெயர்வைத்த அந்தச் சம்பவத்திலிருந்து நாம் பாடத்தை கற்றுக்கொள்ளலாம். பின்பு “ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.” ஆனால் அவர்களுடைய நடவடிக்கைகள் யெகோவா தேவனை அதிக கோபப்படுத்தியது, அவர்களை அவர் கடுமையாக தண்டித்தார்.—யாத்திராகமம் 32:1-10, 25-28, 35.
கடவுளுடைய வார்த்தை மிகவும் தெளிவாயிருக்கிறது. உண்மையான நம்பிக்கைகளின் “ஒளிக்கும்” சாத்தானிய உலகத்தின் “இருளுக்கும்” இடையே எதையும் பகிர்ந்து கொள்ளமுடியாது; கிறிஸ்துவிற்கும் புறஜாதி வணக்கத்திற்கும் எந்த ‘இசைவும்’ இருக்க முடியாது. நாம் இவ்வாறு சொல்லப்படுகிறோம்: ‘ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.’—2 கொரிந்தியர் 6:14-18.
நினைவு ஆசரிப்பு கொண்டாட்டம் மட்டும்தான்—ஈஸ்டர் அல்ல—கிறிஸ்தவர்களுக்கு பைபிளில் கட்டளையிடப்பட்டிருக்கிறது என்பதனால், அது அனுசரிக்கப்பட வேண்டும். ஆகையால் தகுதியுள்ள விதத்தில் அதை எவ்வாறு அனுசரிக்க வேண்டும்?
[பக்கம் 5-ன் படம்]
இஸ்ரவேலர்களின் ‘கர்த்தருக்கான பண்டிகை’ கடவுளை அதிக கோபப்படுத்தியது
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Cover: M. Thonig/H. Armstrong Roberts