மெப்ஸ்—அது என்ன செய்யமுடியும், என்ன செய்ய முடியாது
“மெப்ஸ் [MEPS] உங்களுக்கு இருப்பது நிச்சயமாகவே ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்”ஒரு பெரிய காரியம் அல்லவா?” என்பதாக ஒரு எழுத்தாளரைப் பார்த்து புருக்லினில் தலைமைக் காரியாலயத்தில் வெளியீட்டு இலாக்காவில் பணிப்புரியும் மற்றொரு நபர் சொன்னார். “இப்பொழுது எழுதுவது உங்களுக்கு சுலபமாக இருக்க வேண்டும்.”
பன்மொழி மின்அணு இயக்க நிழற்பட அச்சுக்கோப்பு முறை (Multilanguage Electronic Phototypesetting System) என்பதன் தலைப்பெழுத்துச் சொல்லாகிய ‘மெப்ஸ்’ (MEPS) என்பது கட்டுரை எழுதுவதை எப்படியோ எளிதாக்கிவிடும் என்பதாக இவ்விதமாகச் சொன்னவர் உண்மையில் நம்பினார். இது எழுத்தாளருக்கு சற்று வேடிக்கையாகவும் குறிப்பாக ஆச்சரியமாகவும் இருக்க, எழுதுவது ஆட்கள்தானே, இயந்திரங்கள் அல்ல என்பதை அவருக்கு இவர் உறுதி செய்தார்.
சரி, அப்படியென்றால் மெப்ஸ் என்ன செய்ய முடியும்? எழுதுவதற்கு அது உண்மையில் உதவி செய்கிறதா? அப்படியானால் எவ்விதமாக? எழுதப்பட்ட தகவலை ஒரு மொழியிலிருந்து மற்றொன்றுக்கு அதினால் மொழிப் பெயர்க்க முடியுமா?
கட்டுரை எழுதுவதற்கு மெப்ஸ்
மெப்ஸ் என்பது அச்சியந்திரத்தில் முக்கியமாக ஆப்செட் அச்சியத்திரத்தில் அச்சடிப்பதற்காக தகவலை தயாரிப்பதற்கு ஒரு கம்ப்யூட்டர் அமைப்பாக இருக்கிறது. அமைப்பின் முக்கியப்பகுதி மெப்ஸ் கம்ப்யூட்டராகும். இது சுமார் மூன்று அடி கன சதுரமுள்ள ஒரு சட்டத்துக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எழுதப்பட்ட வாசகத்தை பக்கங்களாக வடிவமைப்பது, மெப்ஸ் எழுத்து உரு டெர்மினலை பயன்படுத்தி மின் இயக்கத்தால் செய்யப்படுகிறது. பின்னர், மெப்ஸ் நிழற்பட அச்சுக் கோப்புப் பொறி, அச்சடிப்பதற்கான பக்கங்களை அமைத்துக்கொடுக்கிறது. இவை பின்னர் அச்சியந்திரத்தில் பயன்படுத்தப்படும் பதிவுத் தகடுகளில் பதிவு செய்யப்படுகிறது. வட நியு யார்க்கிலுள்ள காவற்கோபுர பண்ணையின் கட்டிடத்தில் யெகோவாவின் சாட்சிகளே, மெப்ஸ் கம்ப்யூட்டர் எழுத்து உரு டெர்மினலும் மற்றும் நிழற்பட அச்சுக் கோப்பு பொறி ஆகியவற்றை திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள்.
என்றபோதிலும் ஐ.பி.எம். (I.B.M.) கம்ப்யூட்டர் டெர்மினல்களுங்கூட மெப்ஸ் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் பதிவு செய்யப்படுகின்றவற்றை மெப்ஸ் கம்ப்யூட்டருக்கு அனுப்பி வைக்கும் இந்த ஐ.பி.எம். டெர்மினல்களைத் தானே நியு யார்க், புரூக்ளினிலுள்ள காவற்கோபுர சங்கத்தின் எழுத்து அலுவலகங்களில், எழுத்தாளர்கள் முதல் முதலாக வாசகத்தை பதிவு செய்ய பயன்படுத்துகிறார்கள். இந்த சாதனத்தின் உபயோகம் உண்மையில் எழுதுவதை எளிதாக்கிவிடுகிறதா?
இல்லை. எழுதுவது என்பது படைக்குந் திறமையாக இருக்கிறது. அது ஒரு இயந்திரத்தால் அல்ல ஆனால் ஒரு ஆளால் செய்யப்பட வேண்டும்! இந்த இயந்திரம், அதாவது ஐ.பி.எம். டெர்மினல், அடிப்படையில் ஒரு தட்டச்சுப் பொறியைப் போலவே செயல்படுகிறது. உண்மையில் அதனுடைய விரற்கட்டை தட்டி, ஒரு தட்டச்சுப் பொறியினுடைய விரற்கட்டை தட்டியைப் போலவே இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட வாசகம், ஒரு துண்டு காகிதத்தில் தோன்றுவதற்கு பதிலாக இது ஒரு திரையில் தோன்றுவதே முக்கியமான வித்தியாசமாக இருக்கிறது. என்றபோதிலும், அச்சடிக்கப்பட்ட ஒரு பத்திரம் தேவையாக இருந்தால், அருகிலுள்ள அதிவேகமாக அச்சு செய்யும் இயந்திரத்தை செயல்படச்செய்து, பதிவு செய்யப்பட்ட அனைத்தையும் ஒழுங்கான தாள்களில் அச்சாகும்படி செய்துவிடலாம்.
ஆகவே அச்சடிப்பதற்கு வார்த்தைகளை நேரடியாக உருவாக்குவதைப் பொருத்தவரையில், எழுத்தாளருக்கு மெப்ஸ் அதிக உதவியாக இருப்பதில்லை. ஆனால் ஒரு கம்ப்யூட்டர் டெர்மினல் எழுத்தாளருக்கு குறிப்பிடத்தக்க விதங்களில் உதவக்கூடும். எவ்விதமாக? ஆம், ஒரு தட்டச்சுப் பொறியைவிட, இது பலவிதமாக இயங்கும் திறமையுடையதாக இருக்கிறது. அச்சடிக்கும்போது ஏற்படும் பிழைகள் விரைவாகவும் எளிதாகவும் திருத்தப்பட முடியும். ஒரு சில விரற்கட்டைகளை தட்டுவதன் மூலம், வாசகத்தின், வார்த்தைகள் வாக்கியங்கள் மற்றும் பாராக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றப்பட முடியும். இது, தன்னுடைய கருத்துக்களின் விளைவை உடனடியாக, பார்ப்பதற்கு எழுத்தாளருக்கு உதவி செய்கிறது.
எதிர்காலத்தில், செய்தி குறிப்புகளின் தளம் என்றழைக்கப்படும் காவற்கோபுரம் சங்க பிரசுரங்களின் ஒரு முழு அளவு கோப்பு மெப்ஸில் கிடைக்கக்கூடியதாக இருக்கும். ஒரு எழுத்தாளர், பைபிள், ஏய்ட் டு பைபிள் அண்டர்ஸ்டாண்டிங், மற்ற புத்தகங்கள், ஒருவேளை 100 அல்லது அதற்கும் அதிகமான சங்கத்தின் பத்திரிக்கைகள் போன்ற வித்தியாசமான பிரசுரங்களிலிருந்து தகவலை திரையில் தோன்றும்படியாகச் செய்வதை இது கூடிய காரியமாக்கும். இது கட்டுரை எழுதுவதற்கு உதவும் ஒரு பயனுள்ள சாதனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,
ஒரு எழுத்தாளருக்கு, மெப்ஸ் வெறுமென மிக உயர்தரமான ஒருவித தட்டச்சுப் பொறியாக மட்டுமே இருக்குமானால், இந்த கம்ப்யூட்டர் அமைப்பை உருவாக்குவதற்கு ஏன் இவ்வளவு நேரமும் முயற்சியும் பணமும் செலவழிக்கப்பட்டிருக்கிறது? என்பதாக நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம்.
அச்சகத்துக்கு வாசகம் தயாரித்தல்
தொழில்துறை அளவில், வெப்ப உலோக அச்சுக் கோப்பும், உயர்வாக்கப்பட்ட பரப்பில் அச்சடிப்பும் முறையும் கைவிடப்பட்டு, நிழற்பட அச்சுக் கோப்புக்கும் ஆஃப்செட் அச்சு முறைக்கும் மாற்றப்பட்டதே அடிப்படை காரணமாக இருக்கிறது. வெப்ப உலோக அச்சுக்கோப்பு முறையில், உருக்கி வார்க்கப்பட்ட ஈயம், வரியச்சுப் பொறி என்பதாக பொதுவாக அழைக்கப்படும் ஒன்றினால், உலோக எழுத்துருவாக மாற்றப்படுகிறது. பின்பு முழு வாசகமும் பட உருவமும் ஈயப்பதிவு தகட்டின் உயர்வாக்கப்ட்ட பரப்பில் உருவாக்கப்பட்டு அச்சடிக்கப்படுவதற்காக அச்சியந்திரத்தில் பொருத்திவைக்கப்படுகிறது. ஆப்செட் அச்சு முறையில் ஒவ்வொரு பக்கத்தின் வாசகமும் படஉருவமும் நிழற்படத் தகட்டில் மறுபடி எடுக்கப்பட்டு, ஆப்செட் தகட்டின் மேற்பரப்புக்கு நிழற்படத்தின் மூலமாக மாற்றப்படுகிறது.
வெப்ப உலோக அச்சுக் கோப்பும் உயர்வாக்கப்பட்ட பரப்பில் அச்சடிப்பும் கைவிடப்பட்டபோது, அச்சு செயல் முறைக்கு தேவையான முன் ஆயத்தங்கள் வழக்கற்று போனதால் அதை மாற்றீடு செய்வதற்காகவே குறிப்பாக மெப்ஸ் உருவாக்கப்பட்டது. தொழில்துறையின் நிழற்பட அச்சுக் கோப்பு சாதனம் நம்முடைய பன்மொழி தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானவையாக இல்லாதபடியால் அதை உருவாக்குவது முக்கியமாக அவசியமாக இருந்தது. அது அற்புதமாக பயனுள்ள ஒரு கருவியாக இருந்து வருகிறது. உதாரணமாக ஒரு விழித்தெழு! கட்டுரை எழுதப்பட்டு, திருத்தியமைக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, அச்சு செய்வதற்கு தயாராக இருப்பதாக தேர்ந்து முடிவு செய்யப்பட்ட பின்பு என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்.
முன்னால் குறிப்பிடப்பட்டபடியே பதிவு செய்யப்பட தயாராக இருக்கும் கட்டுரை, மெப்ஸ் கம்ப்யூட்டரில் பாதுகாத்து வைக்கப்படுகிறது. இது ஐ.பி.எம். கம்ப்யூட்டரின் மூலமாக பதிவு செய்யப்பட்டதாக இருக்கிறது. இந்தக் கட்டுரை இப்பொழுது மெப்ஸ் ஓவிய டெர்மினலில் வரவழைக்கப்பட்டு டெர்மினல் திரையிலேயே பக்கங்கள் வடிவில் உருவாக்கப்படுகிறது. எழுதப்பட்ட வாசகத்தின் எந்தப் பகுதியிலும் வேண்டிய அளவில் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு எழுத்தின் உருவை மாற்றிக் கொள்ளலாம். தயாரான பின்பு, எழுதப்பட்ட வாசகம், செங்கோண அமைப்புள்ள வாசகப் பெட்டிக்குள் அல்லது படங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைச் சுற்றி பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள வடிவங்களுக்குள் “செலுத்தப்”படுகிறது.
ஆனால் நீங்கள் இப்பொழுது இவ்விதமாக யோசிக்கலாம்: மெப்ஸ் காட்சி திரையிலிருந்து இந்த தகவல், எவ்விதமாக ஆப்செட் அச்சுப் பொறிகளுக்கு தேவையான அச்சு தகடுகளுக்கு மாற்றப்படுகிறது? இதைச் செய்வது மெப்ஸ் நிழற்பட அச்சுக் கோப்புப் பொறியாகும். இந்தப் பொறி, சித்திரங்கள் டெர்மினல் திரையில் அச்சு கோத்து இணைக்கப்பட்டிருப்பது போலவே, அப்படியே துல்லிபமாக பக்கங்களின் உருவங்களை ஒரு நிழற்பட தாள் தனிச் செய்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்பு, ஒரு சுருளை உண்டாக்க இது படம் எடுக்கப்படுகிறது. இது ஆப்செட் தகடுகளை உண்டாக்க பயன்படுத்தப்படுகிறது.
மெப்ஸ் மொழிபெயர்க்கிறதா?
மெப்ஸ் ஒரு பன்மொழி அமைப்பு என்பதை இப்பொழுது நினைவில் வையுங்கள். இது நிச்சயமாகவே யெகோவாவின் சாட்சிகளுக்கு தேவையாக இருக்கிறது. ஏனென்றால் 150-க்கும் மேற்பட்ட மொழிகளில் அவர்கள் தொடர்ந்து அச்சு செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த எல்லா மொழிகளையும், இன்னும் அநேக மற்ற மொழிகளையுங்கூட கையாளக்கூடிய அதன் திறமையின் காரணமாக மெப்ஸ் ஈடிணையற்ற சாதனமாக இருக்கிறது. உண்மையில் தற்சமயம் அது சுமார் 200 மொழிகளை கையாள திட்டமிடப்பட்டிருக்கிறது! இது எதை அர்த்தப்படுத்துகிறது? மெப்ஸினால் எவ்விதமாக எழுதப்பட்ட ஒரு வாசகத்தை உதாரணத்துக்கு, ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிய மொழிக்கு மொழிப்பெயர்க்க உதவ முடிகிறது?
மெப்ஸினால் அநேக வித்தியாசமான மொழிகளை கையாள முடிந்தாலும், அதனால் ஒரு மொழியிலிருந்து மற்றான்றுக்கு மொழிபெயர்க்க முடியாது என்பதே தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய குறிப்பாக இருக்கிறது. உண்மையில் மொழிப்பெயர்ப்பதற்கு ஆட்கள்தானே பயன்படுத்தப்படுகிறார்கள். உண்மையில் திறம்பட்ட மொழிப்பெயர்ப்பாளர்களாக மனிதர்களை இயந்திரங்களால் மாற்றீடு செய்ய முடியாது. மெப்ஸ் எழுத்து உருவ டெர்மினல், பல்வேறு மொழிகளை தொகுப்பதற்காக திட்டமிடப்பட்டிருக்கிறது. இது எவ்விதமாக செய்யப்பட்டிருக்கிறது? கம்ப்யூட்டர் எந்த மொழியை கட்டளையிடுகிறதோ அந்த மொழிக்கு விரற்கட்டை தட்டிலுள்ள விரற்கட்டைகளை, மின் இயக்கத்தால் மாற்ற முடிகிறது.
ஒரு தட்டச்சுப் பொறியை வைத்து ஒரு ஸ்பானிய மொழிபெயர்ப்பாளர், ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிய மொழிக்கு மொழிப்பெயர்க்கையில் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனிப்பதன் மூலம் இதை விளக்கலாம். மொழிப்பெயர்ப்பாளர் ஒரு தாளில் ஆங்கில வாசகத்தை தன் முன்னால் வைத்திருக்கிறார். தன்னுடைய மொழி ஞானத்தை உபயோகித்து, எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கருத்துக்களை, ஸ்பானிய வாசகர் புரிந்துகொள்ளும் பொருட்டு அதை மொழியாக்கம் செய்கிறார். ஆனால் மொழிப் பெயர்ப்பவர், ஸ்பானிய வாசகத்தை ஆங்கில தட்டச்சுப் பொறியில் தட்டச்சடிக்க முடியாது. ஏன் முடியாது? ஏனென்றால் ஸ்பானிய மொழியின் எழுத்துக்களில் அழுத்தக் குறிகள் இருக்கின்றன. இவற்றை ஆங்கில தட்டச்சுப் பொறியில் காணமுடியாது. அவருக்கு ஒரு ஸ்பானிய மொழி தட்டச்சுப் பொறி வேண்டும். அதற்குத் தானே மெப்ஸ் எழுத்துரு டெர்மில் வசதியிருக்கிறது. ஸ்பானிய விரற்கட்டை தட்டி வேண்டுமானால், ஒரு குமிழை அழுத்துவதன் மூலம், ஸ்பானிய மொழி விரற்கட்டை கிடைக்கிறது.
ஆனால் முன்னால் கவனித்த விதமாகவே மெப்ஸ் ஓவிய டெர்மினல் வெறுமென ஸ்பானிய மொழியையும் ஆங்கிலத்தையும் மட்டுமல்ல, ஆனால் சுமார் 200 மொழிகளை கையாள முடியும்! நீங்கள் ஒருவேளை நன்றாக அறிந்திருக்கும் விதமாகவே, ஆர்மீனியா, கொரியா, ருசியா, அராபிக் போன்ற மொழிகள் முற்றிலும் வித்தியாசமான எழுத்துக்களை அல்லது கையெழுத்து முறையை பயன்படுத்துகின்றன. சீன மொழி மற்றும் ஜப்பானிய மொழி போன்றவற்றிற்கு ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளிலிருப்பது போன்று எழுத்துக்கள் கிடையாது. இப்பொழுது மெப்ஸில் இதற்காகவுங்கூட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சில மொழிகள் இடதிலிருந்து வலபக்கமாகவும், மற்றவை வலதிலிருந்து இடதாகவும் வாசிக்கின்றன. இந்த எல்லா மொழிகளுக்கும் மெப்ஸில் ஏற்பாடு செய்வது எளிதாக இருக்கவில்லை. இன்னும் செய்வதற்கு அதிகமிருக்கிறது!
என்றபோதிலும், இதை மனதில் கொள்ளவும்: மெப்ஸ் இந்த எல்லா மொழிகளையும் கையாண்டாலும் கூட மொழி தெரிந்த ஒரு நபர் மொழியாக்கம் செய்ய வேண்டும். மொழியாக்கம் செய்யப்பட்ட வாசகம் மெப்ஸில் பதிவு செய்யப்பட வேண்டும்.
சிறிய கிளைக் காரியாலயங்களும், வேறு இடங்களிலுள்ள மொழிப் பெயர்ப்பாளர்களும் மெப்ஸ் கருவியை நேரடியாக பயன்படுத்துவதில்லை. பெரும்பாலானவர்களின் விஷயத்தில் அவர்கள் ஐ.பி.எம். தனிநபர் கம்ப்யூட்டரை (Personal Computer) மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஒரு மெல்லிய, எளிதில் வளையத்தக்க வட்டத் தகட்டில் பதிவு செய்யப்பட்டவற்றை இது பாதுகாத்து வைக்கிறது. மெப்ஸ் கருவிகளுள்ள கிளைக்காரியாலயத்துக்கு இந்த வட்டத்தகடு தபாலில் அனுப்பி வைக்கப்படுகிறது. வட்டத் தகட்டில் பாதுகாத்து வைக்கப்பட்ட தகவல், அச்சு கோத்திணைக்கப்பட்டு அச்சடிக்கப்படுவதற்காக தயார் செய்யப்டுகிறது.
நிர்வாக உபயோகங்கள்
அச்சு செய்யப்படுவதற்கு பத்திரிக்கைகள், புத்தகங்கள் இன்னும் மற்ற பிரசுரங்களை தயாரிப்பதில் அது பயன்படுவது மட்டுமல்லாமல், மெப்ஸ் கருவி அநேக கிளைக் காரியாலயங்களில் நிர்வாகப் பணிக்காகவுங்கூட பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, கையிருப்பிலுள்ள பிரசுரங்களின் முழு தொகையின் திருத்தமான விளக்க விவரப் பட்டியலை வைத்துக்கொள்ள இது பயன்படுத்தப்படுகிறது. பிரசுரங்களை ஆர்டர் செய்யும் சபைகளுக்கு அனுப்பி வைக்க ஒரு விலைப்பட்டியலை இந்த அமைப்பு உருவாக்குகிறது. ஒவ்வொரு மொழியிலும் மீதமிருக்கும் உருபடிகளின் எண்ணிக்கை, கிளைக்காரியாலய இருப்பு விளக்க விவரப்பட்டியலில் தானாகவே சரிப்படுத்தப்பட்டு விடுகிறது. மேலுமாக சில கிளைக்காரியாலயங்களில், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் சந்தாதாரருடைய விலாசங்களை பாதுகாக்கவும் அச்சு செய்யவும் மெப்ஸ் பயன்படுத்தப்படுகிறது
உலகம் முழுவதிலும் மெப்ஸின் உபயோகம்
1982-ல் தானே முதல் மெப்ஸ் கம்ப்யூட்டர் பூர்த்தி செய்யப்பட்டு பரிசோதனையாக பயன்படுத்தப்பட்டது. 1983 பிப்ரவரியில், ஐக்கிய மாகாணங்களுக்கு வெளியே மெப்ஸ் கம்ப்யூட்டரை நான்கு எழுத்து உரு டெர்மினல்களோடு சேர்த்து பெற்றுக்கொண்ட முதல் தேசம் ஜெர்மனியே. 1983 நவம்பரில்தானே முதல் மெப்ஸ் நிழல்பட அச்சு கோப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டது.
தற்சமயம் காவற்கோபுர சங்கத்தின் 25 கிளைக்காரியாலயங்களில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மெப்ஸ் கப்ப்யூட்டர்களும் மொத்தம் 150 எழுத்து உரு டெர்மினல்களும் இருக்கின்றன. 24 கிளைக் காரியாலயங்களில் மெப்ஸ் நிழல்பட அச்சுக் கோப்பு பொறிகள் இருக்கின்றன. இந்த எல்லா உயர்தரமான மெப்ஸ் கருவிகளும், வால்கில்லுக்கு அருகாமையிலுள்ள வட நியு யார்க்கில், யெகோவாவின் சாட்சிகளாலேயே உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. கடைசியாக உலகம் முழுவதிலும் 30-க்கும் மேற்பட்ட தேசங்களில் அது பயன்படுத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே 30 மொழிகளில் காவற்கோபுரம் பத்திரிகையையும் 14 மொழிகளில் விழித்தெழு! பத்திரிகையையும் ஒரே விதமாக பிரசுரிப்பதை மெப்ஸ் கூடிய காரியமாக்கியிருக்கிறது.
ஆம், அநேக மொழிகளில் பிரசுரிப்பதை மெப்ஸ் எளிதாக்கிக் கொண்டிருக்கிறது, எழுதுவதை எளிதாக்காவிட்டாலும், அது மொழியாக்கம் செய்யாவிட்டாலும், வெளியீட்டு துறையில் உண்மையாகவே இது முன்னோக்கிய கிளர்ச்சியூட்டும் ஒரு உயர்படியாகவே இருக்கிறது. (g86 3/8)
[பக்கம் 20-ன் படம்]
காவற்கோபுர சங்கத்தின் வாசகம் எழுதும் இலாக்காவில் பணிப்புரியும் ஒரு நபர் தனது கம்ப்யூட்டரில் வேலை செய்கிறார்
[பக்கம் 22-ன் படம்]
பக்கம் 20 ஆங்கில மொழியில் எழுத்துரு டெர்மினலில் பக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறது
[பக்கம் 23-ன் படம்]
பக்கம் 20 தமிழ் மொழியில் எழுத்துரு டெர்மினலில் பக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறது