எஜமானுடைய சொத்துக்களை பராமரித்தல்
1 பைபிள் காலங்களில் ஒரு பணியாள் நம்பிக்கைக்குரிய முக்கிய பொறுப்பை வகித்தார். ஆபிரகாம் தன் மகனாகிய ஈசாக்கிற்கு மனைவியை தேடவேண்டிய பெரும் பொறுப்பை தன் ஊழியக்காரனிடம் ஒப்படைத்தார். (ஆதி. 24:1-4) ஆபிரகாமின் வம்சாவளி தொடர்வதற்குரிய பொறுப்பு இதன் மூலம் அந்த ஊழியக்காரனிடம் ஒப்படைக்கப்பட்டது. எப்பேர்ப்பட்ட பொறுப்பு! “ஓர் ஊழியக்காரனிடம் எதிர்பார்க்கப்படுவதாவது நம்பிக்கைக்குரியவனாக இருக்க வேண்டும் என்பதே” என அப்போஸ்தலன் பவுல் சொன்னதில் ஆச்சரியமேதும் இல்லை!—1 கொ. 4:2, NW.
கிறிஸ்தவரிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு
2 பைபிளில், கிறிஸ்தவ ஊழியத்தின் சில அம்சங்கள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாக விளக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, “உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்” என்பதாக அப்போஸ்தலன் பவுல் எபேசு சபையில் இருந்தவர்களிடம் குறிப்பிட்டார். (எபே. 3:2, பொ.மொ.; கொலோ. 1:26) புறஜாதிகளிடம் நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக அனுப்பப்பட்டதை, உண்மையுடன் நிறைவேற்றவேண்டிய ஒரு பொறுப்பாக அவர் கருதினார். (அப். 9:15; 22:21) அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு இவ்விதம் எழுதினார்: “முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள். நீங்கள் கடவுளுடைய [“கடவுளுடைய தகுதியற்ற தயவினால் பெற்றுக்கொண்ட,” NW] பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே உங்களுக்குள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக் கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.” (1 பே. 4:9, 10, பொ.மொ.; எபி. 13:16) அந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பொருளாதார ரீதியில் எவற்றையெல்லாம் வைத்திருந்தார்களோ அவையெல்லாம் யெகோவாவின் தகுதியற்ற தயவின் வெளிக்காட்டே. ஆகவே அவர்கள் அவற்றை கிறிஸ்தவ முறையில் சரியாக உபயோகிப்பதற்கு பொறுப்புள்ள பணியாளர்களாய் இருந்தனர்.
3 இன்று யெகோவாவின் சாட்சிகள் காரியங்களை இதே விதமாகவே நோக்குகின்றனர். அவர்கள் தங்களை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதால், தங்களிடம் உள்ள அனைத்தையும், அதாவது தங்கள் ஜீவன், சக்தி, பொருளாதாரம் ஆகியவற்றை ‘கடவுளுடைய தகுதியற்ற தயவினால் பெற்றுக்கொண்ட தயவு’ என்பதாகவே நோக்குகின்றனர். அவர்கள் நல்ல பணியாளர்களாக, தாங்கள் எவ்விதம் இவற்றை உபயோகிக்கிறார்களோ அதற்கு யெகோவாவிடம் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இதோடுகூட, நற்செய்தியின் அறிவும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதையும் தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட ஒரு உடைமையாகக் கருதி மிகச்சிறந்த முறையில், யெகோவா தேவனுடைய பெயரை மகிமைப்படுத்தவும் மற்றவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள உதவும் விதத்திலும் பயன்படுத்த விரும்புகின்றனர்.—மத். 28:19, 20; 1 தீ. 2:3, 4; 2 தீ. 1:13, 14.
4 பணியாளர்களாக யெகோவாவின் சாட்சிகள் தங்கள் பொறுப்புகளை எவ்விதம் நிறைவேற்றுகின்றனர்? கடந்த ஆண்டறிக்கையின்படி, சென்ற வருடம் மட்டும் அவர்கள் உலகம் முழுவதுமாக நூறு கோடி மணிநேரங்களுக்கும் அதிகமாய் “ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை” பிரசங்கிப்பதில் கழித்து, ஆர்வம் காட்டக்கூடிய 45,00,000-க்கும் அதிகமான ஜனங்களிடம் வீட்டு பைபிள் படிப்புகளை நடத்தியிருக்கின்றனர். (மத். 24:14, NW) உலகளாவிய பிரசங்க வேலையையும் உள்ளூர் ராஜ்ய மன்றத்தையும் ஆதரிப்பதற்காக அவர்கள் தாராளமாய் அளித்த நன்கொடை, பயண கண்காணிகளுக்கும் மற்ற சகோதரர்களுக்கும் காட்டிய விருந்தோம்பல், யுத்தத்தில் பாதிக்கப்பட்டோர் போன்ற மிக அதிக தேவையில் இருப்போருக்கு அவர்கள் காட்டிய மிகப்பெரிய தயை போன்றவை அவர்கள் யெகோவாவின் உண்மையுள்ள பணியாளர்களே என்பதை நிரூபிக்கின்றன. ஒரு தொகுதியாக உண்மை கிறிஸ்தவர்கள் தங்களுடைய எஜமானுடைய உடைமைகளை பொறுப்பாக கவனித்துக்கொள்கின்றனர்.
“உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்”
5 தனிப்பட்டவர்களிடம் மட்டும் அல்ல, அமைப்பு அளவிலும் இவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு இருக்கிறது. பூமியில் உள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ சபையை இயேசு “உண்மையுள்ள ஊழியக்காரன், விவேகமுள்ளவன்” என்பதாகக் குறிப்பிட்டார். (லூக். 12:42, NW) இந்த “உண்மையுள்ள ஊழியக்காரனுடைய” பொறுப்பு, “உணவை வழங்குவது” மற்றும் உலகளாவிய பிரசங்க வேலையைச் செய்வதில் தலைமை ஏற்பது ஆகும். (வெளி. 12:17) ஆகவே, உண்மையுள்ள அடிமை வகுப்பை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் குழுவே, உலகம் முழுவதுமாக இதற்காக அளிக்கப்படும் நன்கொடைகள் எவ்விதம் செலவிடப்படவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு பொறுப்புடையதாக இருக்கிறது. அளிக்கப்படும் எல்லா நன்கொடைகளும் நம்பிக்கையின் அடிப்படையில் அளிக்கப்படுகின்றன; ஆகவே அவற்றை ஞானமாக, சிக்கனமாக, பிரயோஜனமான முறையில் பயன்படுத்தவும், எந்த நோக்கத்திற்காக நன்கொடை அளிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றவும், ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனுக்கே’ பொறுப்பு இருக்கிறது.
6 இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள் பிரசுரிப்பதில் அடைந்த முன்னேற்றம் இப்படிப்பட்ட நன்கொடைகளை ஞானமாகப் பயன்படுத்தியதற்கு ஒரு உதாரணம். இப்படிப்பட்ட “கடைசிநாட்களில்,” பைபிள்களை அல்லது பைபிள் பிரசுரங்களான பத்திரிகைகள், புத்தகங்கள், சிற்றேடுகள், சிறு புத்தகங்கள், துண்டுப்பிரதிகள், ராஜ்ய செய்தி போன்றவற்றை விநியோகிப்பது, “நற்செய்தியை” பிரசங்கிப்பதில் முக்கிய பங்கை வகித்திருக்கிறது. (மாற். 13:10, NW; 2 தீ. 3:1) “தேவனுடைய வீட்டாரும்,” அவர்களுடைய கூட்டாளிகளான ‘வேறே ஆடுகளான’ ‘திரள் கூட்டத்தாருக்கும்’ ‘ஏற்றவேளையில் உணவை அளிப்பதில்’ காவற்கோபுர பத்திரிகை பிரதான பொறுப்பை வகித்திருக்கிறது.—மத். 24:45, NW; எபே. 2:19; வெளி. 7:9; யோவா. 10:16.
7 ஆரம்பத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய எல்லா பிரசுரங்களும் வெளி அச்சகங்களில் கொடுத்து அச்சடிக்கப்பட்டன. ஆனால் 1920-களில் யெகோவாவின் ஊழியர்களே அச்சடிக்க ஆரம்பித்தால் அது அதிக பயனளிப்பதாகவும் சிக்கனமாகவும் இருக்கும் என்பதாக முடிவு செய்யப்பட்டது. 1920-ல் சிறிய அளவில் அச்சடிக்க ஆரம்பித்ததானது நியூ யார்க்கிலுள்ள புரூக்ளினில் படிப்படியாக வளர்ந்து பிரமாண்டமானது. 1967-ல் அப்படிப்பட்ட பிரிண்டிங் வசதிகள் நான்கு சிட்டி பிளாக்குகள் அளவுக்கு, அதாவது 12, 38, 230 சதுரஅடி அளவிற்கு வளர்ந்துவிட்டன. மற்ற நாடுகளிலும் அச்சடிக்க வசதி செய்யப்பட்டது, ஆனால் அவற்றில் அநேக நாடுகளில் இரண்டாம் உலக யுத்தத்தால் அவை தடைப்பட்டன.
8 பெருமளவிற்கு அச்சக வசதிகள் ஐக்கிய மாகாணங்களில் வளர்ந்தாலும், அதனால் உலகம் முழுவதற்கும் விநியோகிக்க முடியவில்லை. ஆகவே யுத்தத்திற்கு பிறகு இங்கிலாந்து, கனடா, கிரீஸ், டென்மார்க், தென் ஆப்பிரிக்கா, மேற்கு ஜெர்மனி, ஸ்விட்ஸர்லாந்து போன்ற அநேக நாடுகளில் அச்சிடும் வேலை ஆரம்பிக்கப்பட்டது அல்லது ஏற்கெனவே நடந்துகொண்டிருந்தது. 1970-களின் ஆரம்ப வருடங்களில் ஆஸ்திரேலியா, கானா, நைஜீரியா, பிரேஸில், பிலிப்பீன்ஸ், பின்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் சேர்ந்துகொண்டன. இவற்றில் சில நாடுகள் பவுண்ட் புத்தகங்களையும் தயாரித்தன. அதைப்போலவே, 1970-களின் ஆரம்ப வருடங்களில் கிலியட் மிஷனரிகள் அச்சக பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளூர் சகோதரர்களுக்கு உதவி செய்வதற்காக குறிப்பிடப்பட்ட சில நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
9 1980-களில் பத்திரிகைகள் அச்சடிக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை 51 என்ற உச்சநிலையை எட்டியது. a இவையெல்லாம் எஜமானரின் ஆஸ்திகளை சரியாக உபயோகித்ததற்கு எப்பேர்ப்பட்ட நிரூபணம்! ராஜ்ய வேலையின் அதிகரிப்பிற்கு என்னே ஒரு மகத்தான அத்தாட்சி! ‘யெகோவாவை உன் பொருளால் கனம் பண்ணு’ என்ற வார்த்தைகளுக்கு இணங்க யெகோவாவின் சாட்சிகள் தாராளமாக நன்கொடை அளித்து ஆதரித்தார்கள் என்பதற்கு எப்பேர்ப்பட்ட பலத்த ஆதாரம்! (நீதி. 3:9, தி.மொ.) ஆகவே, அநேக விதங்களில் யெகோவா ஆசீர்வதித்ததற்கு தங்களை சிறந்த பணியாளர்களாக நிரூபித்திருக்கின்றனர்.
தொழில்நுட்பத்தில் மாற்றம்
10 1970-களிலும் 1980-களின் ஆரம்பத்திலும் அச்சுத் தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன; யெகோவாவின் சாட்சிகள் புதிய அச்சு முறைகளை உபயோகிக்க ஆரம்பித்தனர். முன்பு அவர்கள் சாதாரண லெட்டர்பிரஸ் முறைகளை உபயோகித்தனர். படிப்படியாக நவீன ஆஃப்செட் பிரிண்டிங்குக்கு அவர்கள் மாறினர். இதன் விளைவாக, பழைய லெட்டர்பிரஸ்களில் அச்சடிக்கப்பட்ட இரு வண்ண (கருப்பு மற்றும் ஏதாவது ஒரு வண்ணம்) படங்களுக்கு பதில் அழகிய முழு வண்ண படங்களுடன்கூடிய பிரசுரங்கள் வெளியிடப்படுகின்றன. மேலும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பிரிண்டிங்குக்கு முன்பு செய்யப்படும் எல்லா வேலைகளையும் முற்றிலும் மாற்றிவிட்டது. யெகோவாவின் சாட்சிகள், பன்மொழி மின் துகளியல் ஒளி அச்சுக்கோப்பு முறை (மெப்ஸ்) என்ற கம்ப்யூட்டர் முறையை உருவாக்கியிருக்கின்றனர்; அது 370-க்கும் அதிகமான மொழிகளில் அச்சடிப்பதற்கு உதவியாக இருக்கிறது. வெளியிலிருந்து வாங்கப்படும் எந்தக் கம்ப்யூட்டர் புரோகிராம்களையும், அநேக மொழிகளை கையாளக்கூடிய மெப்ஸுடன் ஒப்பிடவே முடியாது.
11 மெப்ஸ் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தாலும் ஈ-மெயில் போன்ற கண்டுபிடிப்புகளாலும், ஏற்ற வேளையில் உணவினை வழங்குவதற்கு பெரிய முன்னேற்றம் செய்யப்பட்டது. முற்காலங்களில் பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியபோது ஆங்கிலம் அல்லாத பிறமொழி பத்திரிகைகள் அநேக மாதங்களுக்குப்பின் அல்லது ஒரு வருடத்திற்குப்பின் வெளிவந்தன. ஆனால் இப்போதோ, ஆங்கிலத்தில் வெளியாகும் அதே சமயத்தில், காவற்கோபுரம் 115 மொழிகளிலும் விழித்தெழு! 62 மொழிகளிலும் வெளிவருகின்றன. அப்படியென்றால் உலகம் முழுவதுமாக யெகோவாவின் சாட்சிகளுடைய வாராந்தர காவற்கோபுர படிப்பு கூட்டங்களில் கலந்துகொள்ளும் 95 சதவீதத்தினருக்கும் அதிகமானோர் ஒரே சமயத்தில் அதே பத்திரிகையைப் படிக்கின்றனர். இது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! உண்மையிலேயே, இப்படிப்பட்ட புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யப்படுவதன் மூலம் எஜமானருடைய ஆஸ்திகள் அருமையான முறையில் பயன்படுத்தப்பட்டன!
அமைப்பின் தேவைகளில் மாற்றம்
12 அச்சிடுவதில் ஏற்பட்ட இவ்வித மாற்றங்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய அமைப்பின் அச்சிடும் அம்சங்களில் சிலமாற்றங்களை தேவைப்படுத்தின. பழைய லெட்டர்பிரஸ்களைவிட புதிய உவெப் ஆஃப்செட் பிரஸ்கள் வேகமாக அச்சிடுபவை, ஆனால் அதிக விலை உயர்ந்தவை. அது சம்பந்தமான வேலைகளான எழுதுவது, மொழிபெயர்ப்பது, ஆர்ட், கிராஃபிக்ஸ் போன்றவற்றில் கம்ப்யூட்டர் முறைகளை உபயோகிப்பது அதிக சுலபம் என்பது உண்மையே. இருந்தாலும் அவை அதிக செலவு பிடித்தவை. ஆகவே இப்படிப்பட்ட பத்திரிகைகளை 51 நாடுகளில் இந்தளவு செலவழித்து அச்சிடுவது இனியும் சாத்தியமல்ல என்பது சீக்கிரத்தில் தெளிவானது. ஆகவே, 1990-களில் ‘உண்மையுள்ள ஊழியக்காரனால்’ சூழ்நிலைமைகள் ஆய்வு செய்யப்பட்டது. என்ன முடிவு எடுக்கப்பட்டது?
13 யெகோவாவின் சாட்சிகளும் நண்பர்களும் அளிக்கும் ‘மதிப்பு வாய்ந்த பொருட்களை’ இன்னும் நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும் என்றால் அச்சிடும் வேலைகள் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் என்று ஆய்வுகள் எடுத்துக்காட்டின. ஆகவே அச்சக வசதியுள்ள கிளை அலுவலகங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டன. ஜெர்மனி, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்காக தற்சமயம் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் அச்சடிக்கிறது. அவற்றில் முன்பு அச்சிட்டுக்கொண்டிருந்த நாடுகளும் அடங்கும். கிரீஸ், அல்பேனியா உட்பட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கும், ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதிகளுக்கும் இத்தாலி விநியோகம் செய்கின்றது. ஆப்பிரிக்காவில் நைஜீரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மட்டுமே பத்திரிகைகளை அச்சடிக்கின்றன. இவ்வாறு உலகம் முழுவதும் அச்சகங்கள் குறைக்கப்பட்டன.
கவனிக்க வேண்டிய குறிப்புகள்
14 கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஜூலை 1998 முதல் பத்திரிகைகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டிருக்கும்: ஆஸ்திரியா, கிரீஸ், டென்மார்க், நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்விட்ஸர்லாந்து. ஐரோப்பாவிற்கான அச்சு வேலைகளை இத்தாலி, சுவீடன், பிரிட்டன், பின்லாந்து, ஜெர்மனி, ஸ்பெய்ன் போன்ற நாடுகள் எடுத்துக்கொள்ளும். எந்த நாடுகள் அச்சிடும் வேலைகளை தொடர்ந்து செய்யும் என்பதும் எவை அவ்விதம் செய்வதை நிறுத்திவிடும் என்பதும் எவ்விதம் தீர்மானிக்கப்பட்டது? எஜமானுடைய ஆஸ்திகளை ஜாக்கிரதையாக பராமரிக்க வேண்டும் என்ற கட்டளைக்கு ஏற்ப ‘உண்மையுள்ள ஊழியக்காரனால்’ ஒவ்வொரு இடத்திலும் அச்சிடுவதற்கு ஆகும் செலவுகள், அதைப்போலவே மற்ற இடங்களுக்கு விநியோகிப்பதில் ஏற்படும் செலவுகள் ஆகியவை கணக்கிடப்பட்டன. அதைப்போலவே ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் சட்டங்களை ஜாக்கிரதையாக ஆய்வு செய்து எங்கே பிரசுரங்களை அச்சடித்து விநியோகிப்பதற்கு சட்டப்படி எந்தத் தொந்தரவும் வராது என்பதையும் ஆய்வு செய்தது.
15 நடைமுறை தன்மையை கருதியே பல நாடுகளில் அச்சிடுவது நிறுத்தப்பட்டு சில நாடுகளோடு இணைக்கப்பட்டது. ஒரு நாடு மற்ற அநேக நாடுகளுக்காக அச்சிடுவதால், வேலை அதிக சுலபமாகிறது, மிகவும் விலையுயர்ந்த இயந்திரங்களை நல்லவிதமாக உபயோகிக்கவும் முடிகிறது. எங்கே விலை குறைவாக இருக்கிறதோ, தேவையான பொருட்கள் எளிதில் கிடைக்கிறதோ, சுலபமாக மற்ற இடங்களுக்கு விநியோகம் செய்ய முடிகிறதோ அப்படிப்பட்ட இடங்களில் இப்போது பிரிண்டிங் செய்யப்படுகிறது. ஆகவே எஜமானருடைய ஆஸ்திகள் சரியான விதத்தில் உபயோகிக்கப்படுகின்றன. ஒரு நாட்டில் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது என்பதற்காக அந்த நாட்டில் பிரசங்க வேலையும் நின்றுபோகும் என்பது அர்த்தமல்ல. இப்போதும்கூட அந்த நாடுகளில் ஏராளமான பிரசுரங்கள் கிடைக்கும்; அதன் மூலம் அங்கே வசிக்கும் லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய அயலகத்தினரிடம் வைராக்கியமாக “சமாதானத்தின் நற்செய்தியை” அறிவிப்பர். (எபே. 2:17, NW) இப்படிப்பட்ட மாற்று ஏற்பாடுகளால் பொருள் சம்பந்தமான நன்மைகள் மட்டுமல்லாமல் வேறு நன்மைகளும் இருக்கின்றன.
16 ஒரு நன்மையைச் கவனிக்கலாம்: டென்மார்க், கிரீஸ், நெதர்லாந்து, ஸ்விட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் இருந்த நவீன அச்சு இயந்திரங்கள் நைஜீரியாவுக்கும், பிலிப்பீன்ஸுக்கும் அனுப்பப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் இந்த அச்சு இயந்திரங்களை உபயோகித்த திறமை வாய்ந்த பணியாளர்கள் அச்சு இயந்திரங்கள் அனுப்பப்படுகையில் உடன்சென்று உள்ளூர் பணியாளர்களை பயிற்றுவிப்பதற்கு ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் மற்ற நாடுகளைப் போன்றே மிக உயர்தரம் வாய்ந்த பத்திரிகைகளை இப்போது இந்த நாடுகளும் பெற்றுக்கொள்கின்றன.
17 கீழ்க்கண்ட இன்னொரு நன்மையை கவனிக்கவும்: தொடர்ந்து அச்சடிக்கும் சில நாடுகள், அதற்கான செலவை தாங்களே ஏற்றுக்கொள்கின்றன. ஆகவே, எங்கெல்லாம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதோ அங்கெல்லாம் ராஜ்ய மன்றம் கட்டுதல், ஏழ்மை நாடுகளில் உள்ள சகோதரர்களின் தேவையை கவனித்தல் போன்ற காரியங்களை செய்ய பொருள் வசதி இப்போது இருக்கும். இவ்வாறு எஜமானுடைய ஆஸ்திகளை ஜாக்கிரதையாக கையாளுவது என்பது கொரிந்தியருக்கு எழுதிய பவுலுடைய வார்த்தைகளை சர்வதேச அளவில் இன்னும் திறம்பட பொருத்துவதை குறிக்கிறது: “மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புறவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்கவேண்டும் என்றே நாங்கள் சொல்கிறோம். இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். . . . இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும்.”—2 கொ. 8:13, 14, பொ.மொ.
18 இவ்விதமான இணைப்பினால் உலகளாவிய விதத்தில் யெகோவாவின் சாட்சிகள் எப்போதும் இருந்ததைவிட மிக நெருக்கமாக ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கின்றனர். டென்மார்க்கிலுள்ள சாட்சிகள் தங்கள் பத்திரிகைகளை தாங்களே முன்பு அச்சடித்தது உண்மையாக இருந்தாலும் இப்போது ஜெர்மனியில் அச்சடிக்கப்படுவதால் அவர்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லை. தங்களுடைய ஜெர்மானிய சகோதரர்களின் சேவைக்கு அவர்கள் நன்றி செலுத்துகிறார்கள். தங்களுடைய நன்கொடைகளை வைத்து பைபிள் இலக்கியங்கள் அச்சடிக்கப்பட்டு உக்ரேன், டென்மார்க், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறதே என்று நினைத்து ஜெர்மனியிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகள் வெறுப்படைகிறார்களா? நிச்சயமாகவே இல்லை! அந்த நாடுகளிலிருக்கும் தங்கள் சகோதரர்களின் நன்கொடைகள் வேறு முக்கியமான காரியங்களுக்காக உபயோகிக்கப்பட போகிறது என்பதை நினைத்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
எஜமானுடைய ஆஸ்திகளை கவனமாக கையாளுதல்
19 உலகில் உள்ள எல்லா யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களிலும் “சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக நன்கொடை—மத்தேயு 24:14.” என்று குறிப்பிடப்பட்ட ஒரு நன்கொடைப் பெட்டி இருக்கின்றது. எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் பயன்படுத்தப்படுவதற்காக அதில் மனமுவந்து போடப்படும் நன்கொடைகள் உபயோகிக்கப்படுகின்றன. இந்த நன்கொடைகள் எவ்விதம் பயன்படுத்தப்படும் என்பதை முடிவெடுப்பது ‘உண்மையுள்ள ஊழியக்காரனே.’ ஆகவே ஒரு சபையில், இந்த நன்கொடைப் பெட்டியில் போடப்படும் நன்கொடை நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் உள்ள மற்றொரு யெகோவாவின் சாட்சிகளுடைய சபையின் தேவையை நிறைவேற்ற உபயோகிக்கப்படலாம். புயல், சூறாவளி, நிலநடுக்கம், உள்நாட்டு போர்கள் போன்றவற்றில் பாதிக்கப்பட்ட உடன் விசுவாசிகளுக்கு அவசரமாக உதவி அளிக்க இந்த நன்கொடைகள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டில் உள்ள எல்லா பாகங்களிலும் முழுநேர சேவையில் ஈடுபடும் ஊழியர்களை ஆதரிப்பதற்கும் அந்த நன்கொடைகள் பயன்படுகின்றன.
20 பொதுவாகவே யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் பணசம்பந்தமான கணக்குவழக்குகள் ஒரு மாதத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரு சில நிமிடங்களுக்கே அறிவிக்கப்படுகின்றன. ராஜ்ய மன்றங்களிலோ அல்லது மாநாடுகளிலோ எவ்விதமான நன்கொடைத் தட்டுகளும் ஒவ்வொருவரிடமும் அனுப்பப்படுவதில்லை. தனிப்பட்ட நபர்களிடம் நன்கொடை அளித்து ஆதரிக்குமாறு கேட்கப்படுவதுமில்லை. நன்கொடைகளை சேர்ப்பதற்கு யாரையும் பிரத்தியேகமாக பணியில் அமர்த்துவதுமில்லை. உலகளாவிய வேலையை ஆதரிக்க விரும்புகிறவர்கள் எவ்விதம் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டிக்கு நன்கொடை அளிக்கலாம் என்பதை பற்றிய விவரம் காவற்கோபுர பத்திரிகையில் வருடத்திற்கு ஒருமுறை ஒரு கட்டுரையில் மட்டுமே பொதுவாக வெளிவரும். விழித்தெழு! பத்திரிகையில் சங்கத்தின் நிதி ஆதரவை பற்றி எந்தவிதமான அறிவிப்புகளும் வெளிவராது. அப்படியென்றால் உலகம் முழுவதுமாக நற்செய்தியை பிரசங்கிப்பது, தேவையான ராஜ்ய மன்றங்களைக் கட்டுவது, விசேஷ முழுநேர சேவையில் இருப்பவர்களை ஆதரிப்பது, தேவையிலிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு உதவியளிப்பது போன்றவை எவ்விதம் நிறைவேற்றப்படுகின்றன? யெகோவா தம் ஜனங்களுக்கு தாராள குணத்தை அருளி மிக அற்புதமாக ஆசீர்வதித்திருக்கிறார். (2 கொ. 8:2) ‘யெகோவாவை தங்களுடைய மதிப்பு வாய்ந்த பொருட்களால் கனம் செய்வதில்’ பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எஜமானுடைய ஆஸ்திகளை சரியான விதத்தில் கவனித்து கொள்ளும் காரியத்தில் ‘உண்மையுள்ள ஊழியக்காரனிடம்’ நம்பிக்கை வைக்கலாம். உலகளாவிய விதத்தில் நடைபெறும் வேலையை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் யெகோவா ஆசீர்வதிப்பதற்காக நாங்கள் ஜெபிக்கிறோம்.
[அடிக்குறிப்பு]
a குறிப்பிடப்பட்டவற்றில், ஏழு நாடுகள் வெளி அச்சகங்களில் கொடுத்து அச்சடித்தன.