1. “அடிமை” என்ற வார்த்தையைக் கேட்டவுடனே மக்கள் பொதுவாக எப்படிக் கற்பனை செய்வார்கள்?
ஏ றக்குறைய 2,500 ஆண்டுகளுக்குமுன், கிரேக்க நாடக ஆசிரியர் ஒருவர், “யாருமே ஆசைப்பட்டு அடிமைத்தன நுகத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று எழுதினார். இதைப் பெரும்பாலோர் கண்ணை மூடிக்கொண்டு ஆமோதிப்பார்கள். “அடிமை” என்ற வார்த்தையைக் கேட்டவுடனே, அடக்கியொடுக்கப்படுகிற ஆட்கள்தான்... சங்கிலியால் கட்டி வைக்கப்படுகிற ஆட்கள்தான்... தங்கள் எஜமான்களுக்காக மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்கிற ஆட்கள்தான்... நம் மனக்கண்ணில் தெரிவார்கள்.
2, 3. (அ) கிறிஸ்துவின் அடிமைகள், அதாவது வேலையாட்கள், என்ன ஸ்தானத்தை வகிக்கிறார்கள்? (ஆ) நிர்வாகப் பொறுப்பைப் பற்றி என்ன கேள்விகளை இப்போது சிந்திப்போம்?
2 இயேசுவும்கூட தம் சீடர்கள் சாதாரண வேலையாட்களாக, அதாவது அடிமைகளாக, இருப்பார்கள் எனச் சுட்டிக்காட்டினார். ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் அடிமைகளாக இருப்பது கேவலமான, கொடுமையான விஷயம் கிடையாது. இந்த அடிமைகள் கௌரவமான, மதிப்பான, நம்பகமான ஸ்தானத்தை வகிக்கிறார்கள். உதாரணமாக, இயேசு மரணமடைவதற்குச் சில நாட்களுக்குமுன் ஓர் ‘அடிமையை’ பற்றி என்ன சொன்னாரென்று கவனியுங்கள். ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு’ சில வேலைகளைக் கொடுக்கப்போவதாக அவர் சொன்னார்.—மத். 24:45-47.
3 இந்த அடிமை, லூக்கா புத்தகத்தில் “நிர்வாகி” எனக் குறிப்பிடப்படுகிறார். (லூக்கா 12:42-44-ஐ வாசியுங்கள்.) இன்று பெரும்பாலான உண்மைக் கிறிஸ்தவர்கள் அந்த நிர்வாகி வகுப்பைச் சேர்ந்தவர்களாக இல்லை. என்றாலும், யெகோவாவுக்குச் சேவை செய்கிற எல்லோருக்குமே நிர்வாகப் பொறுப்பு இருக்கிறதென்று பைபிள் காட்டுகிறது. அந்தப் பொறுப்பில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கின்றன? அவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்? இதற்கான பதில்களைத் தெரிந்துகொள்ள பூர்வகால நிர்வாகிகளுக்கு இருந்த பொறுப்புகளை இப்போது ஆராய்ந்து பார்க்கலாம்.
நிர்வாகிகளும் அவர்களுடைய பொறுப்புகளும்
4, 5. பூர்வகால நிர்வாகிகளுக்கு என்ன பொறுப்புகள் இருந்தன? உதாரணங்களைக் கொடுங்கள்.
4 பூர்வகாலத்தில் ஒரு நிர்வாகி நம்பிக்கைக்குரிய அடிமையாக இருந்தார்; தன் எஜமானரின் வீட்டை அல்லது வியாபாரத்தைக் கவனித்துவந்தார். பொதுவாக, நிர்வாகிகளுக்குப் பெருமளவு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது; வீட்டிலுள்ள உடமைகளையும், பணத்தையும், மற்ற வேலைக்காரர்களையும் நிர்வகிக்கிற பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. உதாரணத்திற்கு, ஆபிரகாமின் ஏராளமான உடமைகளைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பு அவருடைய வீட்டு விசாரணைக்காரனான, அதாவது நிர்வாகியான, எலியேசரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கிற்குப் பெண் பார்க்க மெசொப்பொத்தாமியாவுக்கு அவரைத்தான் அனுப்பி வைத்திருக்க வேண்டும். எவ்வளவு முக்கியமான வேலை, பொறுப்பான வேலை!—ஆதி. 13:2; 15:2; 24:2-4.
5 ஆபிரகாமின் கொள்ளுப்பேரனான யோசேப்பு, போத்திபாரின் வீட்டை நிர்வகித்துவந்தார். (ஆதி. 39:1, 2, 4) பிற்பாடு, யோசேப்பின் வீட்டைக் கவனித்துக்கொள்வதற்கும் ஒரு நிர்வாகி நியமிக்கப்பட்டிருந்தார். அந்த நிர்வாகி, யோசேப்பின் பத்துச் சகோதரர்களுக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார். யோசேப்பின் கட்டளைப்படி, வெள்ளிப் பாத்திரம் ஒன்றை யாருக்கும் தெரியாமல் யோசேப்பின் தம்பியுடைய சாக்குப்பையில் போட்டார். நிர்வாகிகள் பெருமளவு நம்பிக்கைக்குரிய ஸ்தானத்தை வகித்தார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.—ஆதி. 43:19-25; 44:1-12.
6. கண்காணிகளுக்கு என்னென்ன நிர்வாகப் பொறுப்புகள் இருக்கின்றன?
6 சுமார் 1,800 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவக் கண்காணிகளைப் பற்றிச் சொல்லும்போது, அவர்கள் ‘கடவுளால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள்’ என்று குறிப்பிட்டார். (தீத். 1:7) “கடவுளுடைய மந்தையை” மேய்ப்பதற்காக நியமிக்கப்படுகிற கண்காணிகள் முன்நின்று வழிநடத்துகிறார்கள், அறிவுரை வழங்குகிறார்கள். (1 பே. 5:1, 2) உண்மைதான், கண்காணிகளுக்கு வெவ்வேறு நிர்வாகப் பொறுப்புகள் இருக்கலாம். உதாரணத்திற்கு, பெரும்பாலான கண்காணிகள் தங்களுடைய சபையை மட்டுமே கவனித்துக்கொள்கிறார்கள். பயணக் கண்காணிகள் ஏராளமான சபைகளைக் கவனித்துக்கொள்கிறார்கள். கிளை அலுவலகக் குழுவிலுள்ளவர்கள் தங்கள் நாட்டிலுள்ள எல்லாச் சபைகளையும் கவனித்துக்கொள்கிறார்கள். என்றாலும், எல்லாக் கண்காணிகளுமே அவரவர் பொறுப்புகளை உண்மையோடு கையாள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள்; அவர்கள் எல்லோருமே கடவுளுக்கு ‘கணக்குக் கொடுக்க வேண்டும்.’—எபி. 13:17.
7. கிறிஸ்தவர்கள் எல்லோருமே நிர்வாகிகளாக இருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?
7 உண்மைத்தன்மையுடன் சேவை செய்கிற மற்றவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அப்போஸ்தலன் பேதுரு கிறிஸ்தவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “பலவிதங்களில் வெளிக்காட்டப்படுகிற கடவுளுடைய அளவற்ற கருணையைப் பெற்றிருக்கும் நீங்கள் அதன் சிறந்த நிர்வாகிகளாக இருக்கிறீர்கள்; ஆகவே, அவரவர் பெற்ற வரத்திற்கு ஏற்றபடி, அந்த வரத்தை ஒருவருக்கொருவர் சேவை செய்யப் பயன்படுத்துங்கள்.” (1 பே. 1:1; 4:10) கடவுள் தம்முடைய அளவற்ற கருணையால் நம் ஒவ்வொருவருக்கும் வரங்களை, ஆஸ்திகளை, திறமைகளைத் தந்திருக்கிறார்; சக வணக்கத்தாரின் நன்மைக்காக நாம் அவற்றைப் பயன்படுத்த முடியும். எனவே, கடவுளுக்குச் சேவை செய்கிற எல்லோருமே நிர்வாகிகளாக இருக்கிறார்கள். அதனால், அவர்கள் எல்லோரையும் அவர் நம்புகிறார், மதிக்கிறார், அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.
நாம் கடவுளுக்குச் சொந்தமானவர்கள்
8. மனதில் வைக்க வேண்டிய ஒரு முக்கியமான நியமம் என்ன?
8 நிர்வாகிகளான நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய மூன்று நியமங்களுக்கு இப்போது கவனம் செலுத்துவோம். முதல் நியமம்: நாம் எல்லோருமே கடவுளுக்குச் சொந்தமானவர்கள், அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்கள். “நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்களே அல்ல; ஏனென்றால், [கிறிஸ்துவின் மீட்புப் பலியினால்] நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்” என்று பவுல் எழுதினார். (1 கொ. 6:19, 20) நாம் யெகோவாவுக்குச் சொந்தமானவர்களாக இருக்கிறோம் என்பதால் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிறோம், அவை பாரமானவை அல்ல. (ரோ. 14:8; 1 யோ. 5:3) கிறிஸ்துவின் அடிமைகளாகவும் இருக்கிறோம். பூர்வகால நிர்வாகிகளைப் போல் நமக்கும் பெருமளவு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது; ஆனால், அதற்கும் வரம்புகள் இருக்கின்றன. கொடுக்கப்படுகிற அறிவுரைகளுக்கு இசைவாகவே நம்முடைய பொறுப்புகளை நாம் கையாள வேண்டும். சபையில் நமக்கு எத்தனை பொறுப்புகள் இருந்தாலும், கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் நாம் வேலையாட்கள்தான்.
9. ஓர் எஜமானருக்கும் அடிமைக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள இயேசு என்ன உதாரணத்தைச் சொன்னார்?
9 ஓர் எஜமானருக்கும் அடிமைக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள இயேசு தம் சீடர்களிடம் ஓர் உதாரணத்தைச் சொன்னார். நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிய ஓர் அடிமையைப் பற்றிய உதாரணம் அது. அந்த அடிமையிடம் “நீ வந்து முதலில் சாப்பிடு” என்று அவனுடைய எஜமான் சொல்வாரா? இல்லை. “நீ எனக்கு உணவு தயார் செய்து, துண்டைக் கட்டிக்கொண்டு எனக்குப் பரிமாறு; நான் சாப்பிட்ட பின் நீ போய்ச் சாப்பிடு” என்றுதான் சொல்வார். இயேசு இந்த உதாரணத்தை எப்படிப் பொருத்திக் காட்டினார்? “ஆகவே நீங்களும், கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து முடித்தபின், ‘நாங்கள் ஒன்றுக்கும் உதவாத அடிமைகள்; செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்” என்றார்.—லூக். 17:7-10.
10. யெகோவா நம்முடைய சேவையைப் பெரிதும் மதிக்கிறார் என்பதை எது காட்டுகிறது?
10 யெகோவா நம்முடைய சேவையைப் பெரிதும் மதிக்கிறார். “உங்களுடைய உழைப்பையும் தமது பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் அல்ல” என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (எபி. 6:10) யெகோவா நம்மிடம் எதையுமே அநியாயமாக எதிர்பார்க்க மாட்டார். அவர் நம்மிடம் செய்யச் சொல்கிற எல்லாமே நம்முடைய நன்மைக்காகத்தான் இருக்கும், ஒருபோதும் பாரமானதாக இருக்காது. இயேசு சொன்ன உதாரணத்தில், அந்த அடிமை தனக்குப் பிரியமாக நடக்கவில்லை, தன் எஜமானரின் விருப்பத்திற்கே முதலிடம் கொடுத்தான். அவ்வாறே, நாமும் கடவுளுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, அவருடைய சித்தத்திற்கே முதலிடம் கொடுக்கத் தீர்மானிக்கிறோம். இதை ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?
யெகோவா நம் எல்லோரிடமிருந்தும் எதிர்பார்ப்பவை
11, 12. நிர்வாகிகளாக, நாம் எந்தக் குணத்தை வெளிக்காட்ட வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும்?
11 இரண்டாவது நியமம்: நிர்வாகிகளாக, நாம் எல்லோருமே ஒரே நெறிமுறையைப் பின்பற்றுகிறோம். உண்மைதான், கிறிஸ்தவ சபையில் சில பொறுப்புகள் கொஞ்சப் பேரிடமே ஒப்படைக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான பொறுப்புகள் எல்லோருக்குமே இருக்கின்றன. உதாரணத்திற்கு, கிறிஸ்துவின் சீடர்களாகவும் யெகோவாவின் சாட்சிகளாகவும் இருக்கிற நாம், ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற கட்டளையைப் பெற்றிருக்கிறோம். அந்த அன்புதான் உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளச் சின்னம் என இயேசு சொன்னார். (யோவா. 13:35) என்றாலும், நம்முடைய சகோதரர்கள்மீது மட்டுமே நாம் அன்பு காட்டுவதில்லை. சத்தியத்தில் இல்லாதவர்கள்மீதும் அன்பு காட்டுகிறோம். இந்த அன்பை நாம் எல்லோருமே காட்ட முடியும், காட்டவும் வேண்டும்.
12 நாம் நன்னடத்தை உள்ளவர்களாய் இருக்க வேண்டுமென்றும் கடவுள் எதிர்பார்க்கிறார். அவருடைய வார்த்தை கண்டனம் செய்கிறவற்றை நாம் தவிர்க்க வேண்டும். “பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்கள், உருவ வழிபாடு செய்கிறவர்கள், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்கள், மற்ற ஆண்கள் தங்களைப் பாலுறவுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கும் ஆண்கள், ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள், திருடர்கள், பேராசைக்காரர்கள், குடிகாரர்கள், சபித்துப் பேசுகிறவர்கள், கொள்ளையடிக்கிறவர்கள் ஆகியோர் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று பவுல் எழுதினார். (1 கொ. 6:9, 10) உண்மைதான், கடவுளுடைய நீதிநெறிகளுக்கு இசைய வாழ கடினமான முயற்சி தேவைப்படுகிறது. என்றாலும், அத்தகைய முயற்சி வீண் போகாது; உடல் ஆரோக்கியம், பிறருடன் நல்லுறவு, கடவுளுடைய அங்கீகாரம் போன்ற பல நன்மைகளை அது அள்ளித்தரும்.—ஏசாயா 48:17, 18-ஐ வாசியுங்கள்.
13, 14. எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது, அதை நாம் எப்படிக் கருத வேண்டும்?
13 பூர்வகால நிர்வாகிகளுக்கு வேலை இருந்தது போல இன்று நமக்கும் இருக்கிறது. நாம் பெற்றிருக்கிற ஓர் அருமையான பரிசை, அதாவது சத்தியத்தைப் பற்றிய அறிவை, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார். (மத். 28:19, 20) “மக்கள் எங்களைக் கிறிஸ்துவின் பணியாளர்கள் என்றும், கடவுளுடைய பரிசுத்த ரகசியங்களை அறிவிப்பதற்கு நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் என்றும் கருத வேண்டும்” என பவுல் எழுதினார். (1 கொ. 4:1) “பரிசுத்த ரகசியங்களை,” அதாவது பைபிள் சத்தியங்களை, எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் அறிவுரைப்படி மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய பொறுப்பு தனக்கிருப்பதை பவுல் உணர்ந்திருந்தார்.—1 கொ. 9:16.
14 மற்றவர்களுக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுப்பது ஓர் அன்பான செயல். என்றாலும், சூழ்நிலை நபருக்கு நபர் வேறுபடலாம். எனவே, நம் எல்லோராலும் ஒரே அளவு நேரத்தை ஊழியத்தில் செலவிட முடியாது. யெகோவாவுக்கு அது தெரியும். தனிப்பட்ட விதத்தில் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதுதான் முக்கியம். அப்படிச் செய்யும்போது, யெகோவாமீதும் சக மனிதர்மீதும் சுயநலமற்ற அன்பைக் காட்டுகிறவர்களாய் இருப்போம்.
15-17. (அ) ஒரு நிர்வாகி உண்மையுள்ளவராக இருப்பது ஏன் முக்கியம்? (ஆ) உண்மையற்றவர்களாக நடந்துகொள்ளும்போது ஏற்படும் விளைவைப் புரிந்துகொள்ள இயேசு என்ன உவமையைச் சொன்னார்?
15 மூன்றாவது நியமம் மேற்குறிப்பிடப்பட்ட மற்ற இரண்டு நியமங்களுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது: நாம் உண்மையுள்ளவர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும். ஒரு நிர்வாகியிடம் நல்ல குணங்களும் பற்பல திறமைகளும் இருக்கலாம். என்றாலும், அவர் பொறுப்பற்றவராகவோ உண்மையற்றவராகவோ நடந்துகொண்டால் அவை அனைத்துமே வீணாகிவிடும். திறம்பட்ட நிர்வாகியாகத் திகழ்வதற்கு உண்மைத்தன்மை மிகமிக அவசியம். “நிர்வாகிகள் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள்” என்று பவுல் எழுதிய வார்த்தைகள் உங்களுக்கு நினைவிருக்கும்.—1 கொ. 4:2.
16 நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், நிச்சயம் நமக்குப் பலன் உண்டு. உண்மையற்றவர்களாக இருந்தால், நஷ்டம்தான் மிஞ்சும். தாலந்துகளைப் பற்றி இயேசு சொன்ன உவமையிலிருந்து இந்த நியமத்தைப் புரிந்துகொள்கிறோம். எஜமானரின் பணத்தை வைத்து ‘வியாபாரம் செய்த’ அடிமைகள் பாராட்டப்பட்டார்கள், அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டார்கள். ஆனால், தன்னிடம் கொடுக்கப்பட்ட தாலந்தைப் பொறுப்பில்லாமல் புதைத்த அடிமை ‘பொல்லாதவன்,’ “சோம்பேறி,” ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ என்றெல்லாம் கண்டனம் செய்யப்பட்டான். அவனுக்குக் கொடுக்கப்பட்ட தாலந்து பிடுங்கப்பட்டது, அவன் வெளியே வீசியெறியப்பட்டான்.—மத்தேயு 25:14-18,23,26,28-30-ஐ வாசியுங்கள்.
17 உண்மையற்றவர்களாக நடந்துகொள்ளும்போது ஏற்படும் விளைவைப் புரிந்துகொள்ள இயேசு மற்றொரு உவமையைச் சொன்னார்: “பணக்காரர் ஒருவருக்கு வீட்டு நிர்வாகி ஒருவன் இருந்தான். அவருடைய பொருள்களையெல்லாம் அவன் வீணாக்குவதாக அவருக்குப் புகார் வந்தது. ஆகவே, அவர் அவனை அழைத்து, ‘என்ன இது? உன்னைப் பற்றி இப்படிக் கேள்விப்படுகிறேனே? நிர்வாகக் கணக்கையெல்லாம் ஒப்படைத்துவிடு, இனிமேல் நீ என் வீட்டை நிர்வகிக்க வேண்டாம்’ என்றார்.” (லூக். 16:1, 2) எஜமானுடைய சொத்துகளையெல்லாம் வீணாக்கிய வீட்டு நிர்வாகி வேலையிலிருந்து நீக்கப்பட்டான்! சிந்திக்க வைக்கும் எப்பேர்ப்பட்ட பாடம்! நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிற காரியங்களில் நாம் ஒருபோதும் உண்மையற்றவர்களாக நடந்துகொள்ளக் கூடாது.
18. நம்மை ஏன் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது?
18 ‘எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற நிர்வாகப் பொறுப்பை நான் எப்படிக் கருதுகிறேன்?’ என்று நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் பிரச்சினைகள் வரலாம். “ஒவ்வொருவனும் தன்தன் செயல்களைச் சோதித்துப் பார்க்கட்டும்; அப்போது, அவன் மற்றவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்துச் சந்தோஷப்படாமல் தன்னைப் பார்த்தே சந்தோஷப்படுவான்” என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. (கலா. 6:4) மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதற்குப் பதிலாக, தனிப்பட்ட விதத்தில் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால், தலைக்கனத்தில் துள்ளவும் மாட்டோம், மனச்சோர்வில் வாடவும் மாட்டோம். நம்முடைய சூழ்நிலைகள் மாறலாம்; உடல்நலக் குறைவு, வயோதிபம், பல்வேறு பொறுப்புகள் ஆகியவற்றின் காரணமாக முன்புபோல் அதிகமாய்ச் சேவை செய்ய முடியாதிருக்கலாம். மறுபட்சத்தில், முன்பைவிட அதிகமாய்ச் செய்யவும் முடியலாம். அப்படியானால், நம்முடைய சேவையை அதிகரிக்க நாம் ஏன் முயற்சி செய்யக் கூடாது?
19. நமக்கு ஏதோவொரு பொறுப்பு கிடைக்கவில்லை என்றால் ஏன் சோர்ந்துபோய்விடக் கூடாது?
19 நமக்கு என்ன பொறுப்புகள் இருக்கின்றன அல்லது என்ன பொறுப்புகளைப் பெற ஏங்குகிறோம் என்பது சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயம். உதாரணத்திற்கு, ஒரு சகோதரர் மூப்பராகச் சேவை செய்யவோ மாநாடுகளில் பேச்சுகளைக் கொடுக்கவோ விரும்பலாம். அப்படிப்பட்ட பொறுப்புகளுக்குத் தகுதிபெற கடினமாக உழைப்பது நல்லதுதான். என்றாலும், எதிர்பார்க்கிற சமயத்தில் அவை கிடைக்காவிட்டால் அவர் சோர்ந்துபோய்விடக் கூடாது. ஏதோவொரு காரணத்திற்காக, சில பொறுப்புகள் எதிர்பார்த்த சமயத்தில் கிடைக்காமல், வெகு காலம் கழித்தே கிடைக்கலாம். இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வழிநடத்த மோசே தயாராக இருந்தபோதிலும், 40 வருடங்கள் அவர் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதை நினைவில் வையுங்கள். அடங்காத, கலகக்கார ஜனங்களை வழிநடத்துவதற்குத் தேவையான குணங்களை அவர் அந்த 40 வருட காலத்தில் வளர்த்துக்கொண்டார்.—அப். 7:22-25, 30-34.
20. யோனத்தானின் அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?
20 சிலசமயம், நமக்கு ஒரு பொறுப்பு கிடைக்காமலேயே போய்விடலாம். யோனத்தானின் விஷயத்தில் அதுதான் நடந்தது. சவுலுக்குப்பின் இஸ்ரவேலின் ராஜாவாய் ஆகும் உரிமை அவருக்கு இருந்தது. ஆனால், யோனத்தானைவிட வயதில் குறைந்த தாவீதை யெகோவா ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார். அப்போது, யோனத்தானுக்கு எப்படி இருந்தது? அதை அவர் ஏற்றுக்கொண்டார், தாவீதுக்கு ஆதரவளிப்பதற்காகத் தன் உயிரையே பணயம் வைத்தார். “நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்” என்று தாவீதிடம் அவர் சொன்னார். (1 சா. 23:17) நமக்கு என்ன பாடம்? யோனத்தான் தன் நிலைமையை நினைத்துப் புலம்பவில்லை; தன் தகப்பனைப் போல் தாவீதுமேல் பொறாமைப்படவில்லை. நாமும்கூட மற்றவர்களுக்குக் கிடைக்கிற பொறுப்புகளைக் கண்டு பொறாமைப்படாமல், தற்போது நமக்கு இருக்கிற பொறுப்புகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். அப்போது, யெகோவா தம்முடைய ஊழியர்கள் அனைவருடைய நியாயமான ஆசைகளையும் புதிய உலகத்தில் பூர்த்தி செய்வார் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம்.
21. நம்முடைய நிர்வாகப் பொறுப்பை நாம் எப்படிக் கருத வேண்டும்?
21 நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளான நாம், அடிமைத்தனத்திற்கே உரிய கொடுமைகளை அனுபவிப்பதில்லை, கண்ணீர் சிந்துவதில்லை. அதற்கு நேர்மாறாக, நற்செய்தியைப் பிரசங்கிக்கிற மதிப்புமிக்க வேலையைச் சந்தோஷமாகச் செய்துவருகிறோம்; ஆம், இனி ஒருபோதும் செய்யத் தேவையிராத பிரசங்க வேலையை இந்தக் கடைசி நாட்களில் மகிழ்ச்சியோடு செய்துவருகிறோம். அது சம்பந்தமான பொறுப்புகளைக் கையாள நமக்குப் பெருமளவு சுதந்திரம் இருக்கிறது. எனவே, நாம் உண்மையுள்ள நிர்வாகிகளாய் இருப்போமாக! இந்தப் பிரபஞ்சத்திலேயே மகா உன்னதராய்த் திகழ்கிற யெகோவாவுக்குச் செய்யும் சேவையைப் பொக்கிஷமாய்க் கருதுவோமாக!