இளைஞர் கேட்கின்றனர் . . .
விவாகத்துக்கு முன்னான பாலுறவுக்கு நான் மறுப்புத் தெரிவிப்பது எப்படி?
நம்முடைய உலகம் பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஊறிக்கிடக்கிறது. மற்றும் நீ அதில் பங்கு கொள்வதற்குரிய மிகுதியான அழுத்தங்கள் இருக்கின்றன. எனினும் அநேக இளைஞர் விவாகத்துக்கு முன்னான பாலுறவு ஈடுபாடுகளின் வேதனை மிகுந்த பின்விளைவுகளைக் காண்பதனால் அவர்கள் தங்களுக்கு மேம்பட்ட காரியங்களை விரும்புகின்றனர். இளைஞர்கள் தகவல் விரும்பிய முதன்மையான ஒரு பிரச்னையானது: “பாலுறவு அழுத்தங்களுக்கு நாங்கள் மறுப்புத் தெரிவிப்பது எப்படி?” என்பதே என்று டீன் (பருவவயது) என்ற பத்திரிகையினரால் நடத்தப்பட்ட நாடு முழுவதிலுமான ஒரு சுற்றாய்வுக் காண்பித்தது. அப்படியானால் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பைபிளின் தராதரங்கள் எட்டமுடியாத அளவுக்கு உயர்ந்தவையாக இருக்கின்றன என்று இது அர்த்தங்கொள்ளுகிறதா? இல்லவே இல்லை பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வெற்றிகரமாய் கற்புடன் வாழ்ந்திருக்கின்றனர்.
“வாலிபன் [அல்லது இளம் பெண்] தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்?” என்பதே சங்கீதம் 119:9-ல் எழுப்பப்பட்டுள்ள முக்கிய கேள்வியாக இருக்கிறது. அதற்கு விடை: “உமது [கடவுளுடைய] வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.” ஆனால் தலையறிவைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. “ஒழுக்கயீனமான பாலுறவைக் குறித்துப் பைபிள் என்ன சொல்லுகிறது என்பதை நீ உன் மனதில் அறிந்திருக்கிறாய், ஆனால் உன்னுடைய இருதயம் அந்தக் காரணங்களை உன் மனதுக்குப் பின்னாக தள்ளிக் கொண்டேயிருக்கிறதே” என்று ஒப்புக்கொண்டாள், ஒரு இளம் பெண். பொருத்தமாகவே சங்கீதக்காரன் தொடர்ந்ததாவது: “நான் உமக்கு விரோமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.”—சங்கீதம் 119:11.
இருதயத்தைக் காத்துக்கொள்
கடவுளுடைய வார்த்தைகளை உன்னுடைய இருதயத்தில் பொக்கிஷமாக வைத்துக்கொள்ள முதலில் நீ வேதவசனங்களையும் மற்றும் பைபிள் சார்ந்து எழுதப்பட்ட இலக்கியங்களையும் வாசிக்க வேண்டும், ஆராய வேண்டும். இது கடவுளுடைய சட்டங்கள் உனக்கு மெய்யான மதிப்புள்ளவை—ஒரு பொக்கிஷம்—என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்கு உனக்கு உதவக்கூடும். இப்படிப்பட்ட மதித்துணர்வை உருவாக்க உனக்கு உதவுவதற்கே இந்தத் தொடர்ச்சியான இளைஞர் கேட்கின்றனர் . . . என்ற கட்டுரை எழுதப்படுகிறது. ஒவ்வொரு கட்டுரையையும் நீ கவனமாக படிக்கிறாயா?
மறுபட்சத்தில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய தகவல்களை வாசிக்கையில், செவி கொடுக்கையில், அல்லது பொழுதுபோக்குக்காக பார்க்கையில், அது “மோகத்தை” அல்லது “காம பசியைத்” தீவிரமாக கிண்டிவிடக்கூடும். (கொலோசெயர் 3:5) இப்படிப்பட்ட தகவல்களைக் கண்டிப்பாய் தவிர்த்துவிடு! மாறாக கற்புள்ள காரியங்களை ஆழ்ந்து யோசித்துக் கொண்டிரு. அப்பொழுது உடலின்பத்துக்கான உன் இருதயத்தின் ஆசைகளை நீ குறைப்பாய்.
அக்கறையூட்டக்கூடிய ஒரு காரியமென்னவெனில், ஒருவன் கற்புள்ளவனாக நிலைத்திருப்பானா என்பது ஒரு இளைஞனின் மிக நெருங்கிய நண்பர்களுடைய மிகுதியான செல்வாக்கின் பேரிலேயே இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஆகையால், தங்களுடைய இருதயத்தைக் காத்துகொள்ள விரும்புகிறவர்கள் சங்கீதக்காரனின் வார்த்தைக்குச் செவி கொடுப்பார்கள்: “உமக்குப் [கடவுளுக்கு] பயந்து உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.”—சங்கீதம் 119:63.
உன்னுடைய தோழர்கள் உண்மையாகவே “கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதற்கு” முயற்சிப்பவர்களா? மறுப்புத் தெரிவிக்க கற்றுக்கொண்ட ஜோஹன்னா என்ற ஒரு இளம் பெண் தனக்கு எது உதவியது என்பதை அறிவித்தாள்: “நீ யெகோவாவை நேசிக்கக்கூடிய ஆட்கள் மத்தியில் இருந்தால், ஒழுக்கத்தைக் குறித்துப் பேசுகையில் அவர்கள் உணருவதைப்போன்றே நீயும் உணர ஆரம்பிப்பதை நீ காண்பாய். உதாரணமாக, ஒழுக்கயீனமான காரியம் அருவருப்பாயிருக்கிறது என்று அவர்கள் சொல்வதை நீ கேட்கையில் நீயும் அவ்வாறே உணர ஆரம்பிக்கிறாய். மறுபட்சத்தில் நீ அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத ஆட்களுடன் இருக்கையில் வெகு விரைவிலேயே நீயும் அவர்களைப் போன்றே ஆகிவிடுவாய்.”—நீதிமொழிகள் 13:20.
உன்னுடைய இருதயத்தினுள் என்ன செல்லுகிறதோ அதைக் காத்துக்கொள்வது அத்தியாவசியமானதாக இருக்கையில், பெரும்பாலான இளைஞர்கள் எதிர் பாலருடன் தனிமையில் அதிகப்படியான நேரத்தைச் செலவழிக்க ஆரம்பிக்கையில்தானே, வழக்கமாய் ஒழுக்கயீமான நடத்தையில் சிக்கிக்கொள்கின்றனர். ராபர்ட் சோர்சன் என்பவரால் நடத்தப்பட்ட நாடு முழுவதிலுமான ஒரு ஆராய்ச்சியானது, ஆய்வு செய்யப்பட்ட 52 சதவிகிதமான இளைஞரும் மற்றும் 82 சதவிகிதமான பெண்களும் தாங்கள் தொடர்ந்து பழகிவந்தவர்கள் அல்லது குறைந்த பட்சம் நன்கு அறிந்த மற்றும் அதிகம் விரும்பியவர்களுடன்தானே முதல் தடவையாக பாலுறவில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று காண்பித்தது. எனவே நீ திருமணம் செய்துகொள்ளும் வயதை எட்டியிருந்தால் யாராவது ஒருவருடன் நன்கு அறிமுகமாகும் அதே சமயத்தில் கற்பைக் காத்துக் கொள்வது எப்படி?
காதல் சந்திப்புகளின் போது தவிர்க்க வேண்டிய படுகுழிகள்
ஒரு தம்பதி ஒருவரையொருவர் பார்க்க துவங்குகையில் விரைவில் அவர்கள் இருதயம் பிணைந்துவிடுகிறது. எனினும் பைபிள் எச்சரிப்பதாவது: “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9) எவர் பேரிலாவது ஒருவர் சரியாகவே இயல்பான கவர்ச்சியை உணரக்கூடும். ஆனால் நீங்கள் எவ்வளவு அதிகமாய் ஒன்று சேர்ந்து இருக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாய் நீங்கள் கவர்ந்திழுக்கப்படுவீர்கள். அவ்வாறே நாம் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். எனினும் இந்த இயல்பான ஆசை உன்னுடைய இருதயத்தை வழிவிலகிப் போகும்படி செய்யக்கூடும்: “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும் . . . வேசித்தனங்களும் புறப்பட்டு வரும் என்று இயேசு கிறிஸ்து கூறினார்.” (மத்தேயு 15:19) இப்படிப்பட்ட காரியத்தைத் தவிர்க்க வேண்டுமாயின், இருதயம் உன்னை வழிநடத்த அனுமதிப்பதற்கு மாறாக, இருதயத்தை நீ வழிநடத்த வேண்டும். அதை நீ எவ்வாறு செய்யலாம்?—நீதிமொழிகள் 23:19.
பேச்சுத் தொடர்புக்குரிய ஒரு காரியம்: “அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்; அலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ [கருத்தைப் பரிமாறிக்கொள்ளுகிறவர்களிடத்திலோ, NW] ஞானம் உண்டு. (நீதிமொழிகள் 13:10) பாசத்தை வெளிக்காட்டும் காரியத்தில் ஒருவர் மற்றவரிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதைக் குறித்ததில் பெரும்பாலும் தம்பதிகள் தவறான அபிப்பிராயங் கொள்ளுகின்றனர். வழக்கமாக, தான் முத்தமிடவும் மற்றும் கட்டித்தழுவவும் துவங்க வேண்டும் என்று பெண் எதிர்பார்ப்பதாக ஒரு ஆண் உணரக்கூடும். ஆனால் உண்மையில் பெண் அதை எதிர்பார்க்காமலிருக்கக்கூடும். ஆகையால் அந்தக் காரியத்தைக் குறித்து மற்ற நபர் எவ்வாறு உணருகிறார் என்பதை அறிந்துகொள்ள “கருத்து பரிமாறிக்கொள்.” ஆனால் அந்த நபர் எப்படி உணர்ந்தாலுஞ்சரி அதனைப் பொருட்படுத்தாமல் நேசத்தை வெளிக்காட்டும் காரியத்தில் ஞானமாக ஒரு வரம்பை நிர்ணயித்துவிடு. அதே சமயத்தில் சலனத்தை ஏற்படுத்தும் காரியங்களைச் செய்யாதே. அதிக இறுக்கமான, உடலுறுப்புகள் தெரியும் வண்ணமாக மற்றும் காம உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய ஆடைகளை அணிவது உன் கூட்டாளிக்குத் தவறான எண்ணத்தைக் கொடுக்கக்கூடும்.
சந்தர்ப்ப சூழ்நிலைமைகளைக் குறித்து அதிக கவனமாயிரு: ஆரம்ப காலத்தின் தளிர்ப்பு பருவத்தின் அழகை ரசிப்பதற்காக மலைகளில் தனித்த இடங்களுக்குத் தன்னுடன் வரும்படியாக ஒரு இளம் கன்னிகையை அவளுடைய நேசன் அழைத்ததைக் குறித்து பைபிள் சொல்லுகிறது. என்றபோதிலும், அவளுடைய சகோதரர்கள் அதைப்பற்றி அறிந்துகொண்டபோது கோபத்துடன் அந்தத் தம்பதிகளின் திட்டங்களுக்கு தடைப் போட்டார்கள். அவள் ஒழுக்கயீனமானவள் என்று உணர்ந்ததினால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. ஆனால் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களின் போதுள்ள சோதனையின் சக்தியை அவர்கள் அறிந்திருந்தார்கள். (சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:6; 2:8-15; 8:10) உன்னுடைய தந்திரமான இருதயம் என்னவிதமான நியாய விவாதங்களை உன் மனக்கண் முன் கொண்டுவந்தாலுஞ்சரி ஒரு வீட்டிலோ அல்லது ஓர் தனியறையிலோ அல்லது ஏதாவது ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தப்பட்ட வாகனத்திலோ எதிர் பாலருடன் தனிமையில் இருப்பதைத் தவிர்த்துவிடு.
உன்னுடைய வரம்புகளை அறிந்திரு: மற்ற சில சமயங்களைக் காட்டிலும் பாலுறவு கவர்ச்சிகளுக்கு நீ இறையாகும் வாய்ப்பு மிகுதியாக இருக்கக்கூடிய சில சமயங்கள் இருக்கின்றன. சில தனிப்பட்ட தோல்விகளால் அல்லது மற்றவர்களுடன், ஒருவேளை உன் பெற்றோருடன் தானே ஏற்பட்ட பூசல் காரணமாக, நீ மனமுடைந்திருக்கக்கூடும். இப்படிப்பட்ட சமயங்களிலேயே நீ முக்கியமாய் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அதோடுகூட மதுபானங்களைப் பயன்படுத்துவதிலும் ஜாக்கிரதையாயிரு. இப்படிப்பட்டவைகளுடைய செல்வாக்கின் கீழ் நீ உன்னுடைய அடக்கும் சக்திகளை இழந்துவிடக்கூடும். “வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.”—ஓசியா 4:11.
மறுப்புத் தெரிவிக்கையில் அதற்கேற்ப செயற்படு: உணர்ச்சி வேகங்கள் அதிகரித்து ஆபத்தை உண்டுபண்ணும் விதத்தில் தங்களுக்கிடையே நெருக்கம் ஏற்படுகிறது என்பதை அறிகையில் தம்பதிகள் என்ன செய்யலாம்? அவர்களில் யாராவது ஒருவர் “அந்த வசியத்தை முறிக்கக்கூடிய” ஏதாவதொன்றைச் சொல்ல வேண்டும் அல்லது செய்ய வேண்டும். டெபோரா என்ற ஒரு இளம் பெண் தன்னுடைய காதலனோடு தனிமையிலிருக்க கண்டாள். அவன் அவளோடு “பேசுவதற்காக” காரை ஒரு தனிமையான இடத்தில் நிறுத்தினான். உணர்ச்சி வேகங்கள் அதிகரிக்க ஆரம்பித்தபோது டெபோரா தன் நண்பனிடம் சொன்னதாவது: “இது அளவுக்கு மிஞ்சி போகிறதல்லவா? இங்கே நாம் நிறுத்திக்கொள்ள வேண்டாமா?” அது அந்த வேகத்தை முறித்துவிட்டது. அவன் உடனடியாக வீட்டிற்குக் காரை ஓட்டிச் சென்றான். இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் மறுப்புத் தெரிவிப்பதென்பது நீ செய்ய வேண்டியதாக இருக்கக்கூடிய மிகக் கடினமான காரியமாக இருக்கக்கூடும். ஆனால் வேசித்தனஞ் செய்துவிட்ட ஒரு 20 வயது பெண் சொன்னதாவது: “நீ அவ்விடத்திலிருந்து வெளியே செல்லாவிட்டால், பின்னால் வருந்த வேண்டியதாயிருக்கும்!”
ஒரு துணைக்காவலைக் கொண்டிரு: ஒருசில நாடுகளில் இக்காரியம் ஏளனமாக கருதப்பட்டாலும் மற்ற நாடுகளில் அது கண்டிப்பான ஒன்று. “எங்கள் மீது நம்பிக்கையில்லாததுபோல் இது தோன்றுகிறதே,” என்று சில இளைஞர்கள் குறை கூறுகின்றனர். நம்ப முடியாமலிருப்பது உன்னை அல்ல, ஆனால் உன்னுடைய இருதயத்தையே! நீதிமொழிகள் 28:26 நேரிடையாக சொல்லுவதாவது: “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.” அப்படி நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்க விரும்பினால் யாரையாவது ஒருவரை உங்களுடன் அழைத்துச் செல்லுவதன் மூலம் ஞானமாக நடந்து கொள்ளுங்கள். “தன்னுடைய சொந்த துணைக்காவலை தன்னுடன் அழைத்துக் கொண்டு வரக்கூடிய ஒருவனை நான் உண்மையிலேயே போற்றுகிறேன். என்னைப் போலவே அவனும் எப்படிக் கற்புடன் இருக்க விரும்புகிறான் என்பதை நான் அறிந்திருக்கிறேன்” என்று தெரிவித்தாள் டெபோரா. “நாம் ஏதாவது தனியாக சொல்ல நினைத்தால் அதில் எதுவும் கஷ்டமில்லை, வெறுமென மற்றவருடைய காது கேட்காத தூரம் சென்றுவிடலாம். இதில் எந்த ஒரு சங்கடமிருந்தாலும், அது கொடுக்கக்கூடிய பாதுகாப்பு மதிப்பு வாய்ந்தது.”
என்றபோதிலும் கற்புடன் நிலைத்திருப்பதற்கு மிகப் பெரிய உதவி எது?
கடவுளுடன் நட்புறவு
ஒரு நண்பனின் உணர்ச்சிகளைப் புண்படுத்த விரும்பாததன் காரணமாக பெரும்பாலும் நீ ஒருசில செயல்களைச் செய்வதிலிருந்து விலகியிருக்கக்கூடும். அதேவிதமாகவே, கடவுளை உணர்ச்சிகளையுடைய ஒரு மெய்யான நபராக கருதி அவருடன் ஒரு நெருக்கமான நட்புறவை வளர்த்துக் கொள்வது அவரைப் புண்படுத்தக்கூடிய செயல்களைத் தவிர்ப்பதற்கு உனக்கு உதவக்கூடும். திட்டவட்டமான பிரச்னைகளைக் குறித்து அவரிடமாக உன்னுடைய இருதயத்தை ஊற்றுவது அவரிடமாக நெருங்கிவரும்படி செய்யும். கற்புடன் நிலைத்திருக்க விரும்பும் தம்பதிகள் உணர்ச்சி வேகங்களால் தாக்கப்படும் சமயங்களில் கடவுளிடம் ஒன்று சேர்ந்து ஜெபித்து தங்களுக்குத் தேவையான பலத்தை அருளும்படி கேட்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு மகத்துவமுள்ள வல்லமையைக் கொடுப்பதன் மூலம் யெகோவா தேவன் அதற்குப் பதிலளிக்கிறார். (2 கொரிந்தியர் 4:7) ஆனால் நீயோ, உன் பாகத்தைச் செய்ய வேண்டும். எனினும் கடவுளுடைய உதவி மற்றும் ஆசீர்வாதத்தோடுகூட பாலுறவு ஒழுக்கக்கேட்டிற்கு நீ மறுப்புத் தெரிவிப்பது கூடிய காரியம் என்பதில் நிச்சயமாயிருக்கலாம். (g86 4/22)
[பக்கம் 13-ன் படம்]
காதல் சந்திப்புகளின் போது தனிமையாக செல்லாமல் இருப்பதன் மூலம் ஒழுக்கக்கேட்டைத் தவிருங்கள்