சோதிடம், பிறந்த நாட்கள் மற்றும் பைபிள்
ஆசிரியர்கள் ரால்ப் மற்றும் அடெலின் பிரகாரம் சோதிடத்துக்கும் பிறந்த நாட்களுக்கும் நிச்சயமாகவே சம்பந்தம் இருக்கிறது. பிறந்த நாட்களைப் பற்றிய கல்வி என்ற தங்களின் புத்தகத்தில் அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்கள்: “நாகரீகத்தின் பிறப்பிடமாக இருந்த மெசொப்பொத்தாமியாவும் எகிப்துமே, மக்கள் தங்கள் பிறந்த நாட்களை நினவு கூர்ந்து அவைகளைப் பெருமைப்படுத்திய தேசங்களாக இருந்தன. பிறந்த நாள் பதிவுகளை வைத்திருப்பது பூர்வ காலங்களில் முக்கியமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் ஒரு ஜாதகத்தைக் கணிக்க, பிறந்த தேதி இன்றியமையாததாக இருந்தது.”
உண்மைதான், இஸ்ரவேலர்களுங்கூட பிறப்பு சம்பந்தப்பட்ட பதிவுகளை வைத்திருந்தார்கள். ஆனால் இது ஆசாரிய, இராணுவ இன்னும் மற்ற பணிகளுக்கு மனிதர்களின் வயதை நிர்ணயிப்பதற்காகவே வைக்கப்பட்டது. (எண்ணாகமம் 1:2, 3; 4:2, 3; 2 இராஜாக்கள் 11:21) என்றபோதிலும் பைபிள் மிகப் பிரபலமான ஆட்களினுடைய—நோவா, ஆபிரகாம், மோசே, தாவீது அல்லது இயேசு கிறிஸ்துவினுடைய பிறந்த தேதியையுங்கூட பதிவு செய்யவில்லை. “நிச்சயமாக இருக்க வேண்டுமானால், பைபிளில் பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஆனால் அவை பார்வோன், ஏரோது போன்ற பொல்லாத அரசர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மட்டுமே ஆகும். பூர்வ கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் பிறந்த நாளை நிர்ணயிக்க முயன்றபோது, அநேக சர்ச் குருக்கள் அதை அடாத செயலாக கருதினார்கள் . . . அது தெய்வ பக்தியில்லாத புறமத பழக்கமாக இருந்ததன் காரணமாக அதைக் கொண்டாட எந்த முயற்சியும் செய்யப்படக்கூடாது என்பதாக அவர்கள் அறிவித்தார்கள்.”