வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
யெகோவாவின் சாட்சிகள் பிறந்தநாட்களை கொண்டாடுவதைத் தவிர்ப்பது, இப்பழக்கம் பூர்வ காலங்களில் ஏதோ மதசம்பந்தமான அர்த்தமுடையதாக இருந்தது என்பதாலா?
பிறந்தநாட்களைக் கொண்டாடுவது மூடநம்பிக்கையிலும் பொய் மதத்திலும் ஆரம்பமானது, ஆனால் யெகோவாவின் சாட்சிகள் ஏன் இப்பழக்கத்தைத் தவிர்க்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரே காரணமாக அல்லது முக்கிய காரணமாக இல்லை.
ஒரு சமயம் மத இயல்புள்ளதாக இருந்த சில பழக்கவழக்கங்கள் அநேக இடங்களில் இனிமேலும் அவ்விதமாக இருப்பதில்லை. உதாரணமாக, திருமண மோதிரம் ஒரு சமயம் மதசம்பந்தமான உட்பொருளை உடையதாயிருந்தது, ஆனால் பெரும்பாலான இடங்களில் இப்பொழுது அவ்வாறில்லை. ஆகவே அநேக மெய் கிறிஸ்தவர்கள் ஒரு நபர் திருமணமானவர் என்பதற்கு அத்தாட்சியாக திருமண மோதிரம் அணியும் உள்ளூர் பழக்கத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட காரியங்களில் பொதுவாய் செல்வாக்குமிக்கதாயிருப்பது, ஒரு பழக்கம் இப்பொழுது பொய் மதத்துடன் தொடர்புடையதாக இருக்கிறதா என்பதே ஆகும்.—ஜனவரி 15, 1972 மற்றும் ஜனவரி 15, 1992 காவற்கோபுரம், (ஆங்கிலம்) “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பார்க்கவும்.
ஆனால் மிகப்பல பார்வை குறிப்பு நூல்கள், பிறந்தநாள் கொண்டாட்டத்திலுள்ள மூடநம்பிக்கையையும் மதசம்பந்தமான முந்திய நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்துவதை மறுப்பதற்கில்லை. என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா (1991 பதிப்பு) குறிப்பிடுகிறது: “பண்டைய எகிப்து, கிரேக்கு, ரோம் மற்றும் பெர்சிய உலகம் கடவுட்கள், அரசர்கள் மற்றும் உயர்குடிமக்களின் பிறந்தநாட்களைக் கொண்டாடியது.” ரோமர்கள் ஆர்டிமிஸ் மற்றும் அப்போலோவின் பிறப்பை அனுசரித்தார்கள். இதற்கு எதிர்மாறாக, “இஸ்ரவேலில் ஆண் குடிமக்கள் தங்கள் வயது பற்றிய பதிவை வைத்திருந்தபோதிலும், அவர்கள் பிறந்த தேதியில் ஆண்டுநிறைவு கொண்டாட்டங்கள் எதையும் கொண்டிருந்ததற்கு எந்த அத்தாட்சியும் இல்லை.”
மற்ற பார்வை குறிப்பு நூல்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஆரம்பத்தைப் பற்றி கணிசமான விவரங்களுக்குள் செல்கின்றன. ‘பிறந்தநாள் விழாக்கள் பல வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் ஆரம்பமாயின. சில சமயங்களில் நல்ல மற்றும் தீய வனதேவதைகள் என்றழைக்கப்பட்ட நல்ல மற்றும் தீய ஆவிகளில் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு இந்த ஆவிகள் தீங்கிழைத்துவிடுமோ என அனைவருக்கும் பயமிருந்தது. எனவே அவர் நண்பர்களாலும் உறவினர்களாலும் சூழப்பட்டிருந்தார். இவர்களுடைய நல்வாழ்த்துக்களும், பிரசன்னமும் பிறந்தநாளில் வரக்கூடிய அறியப்படாத ஆபத்துகளுக்கு எதிராக அவரைப் பாதுகாக்கும். பரிசுகள் கொடுப்பது இன்னும் அதிகமான பாதுகாப்பைக் கொண்டுவந்தது. ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவது கூடுதலான பாதுகாப்பை அளித்து நல்ல ஆவிகளின் ஆசிகளைக் கொண்டுவர உதவியது. ஆகவே பிறந்தநாள் விழா ஆரம்பத்தில், ஒரு நபரைத் தீமையிலிருந்து பாதுகாத்து ஒரு நல்ல வருடம் வருவதை உறுதிசெய்யும் நோக்கமுடையதாகவும் இருந்தது.’—உலகம் முழுவதிலும் பிறந்த நாள் விழாக்கள் (Birthday Parties Around the World), 1967.
அநேக பிறந்தநாள் பழக்கவழக்கங்களையும்கூட புத்தகம் விளக்குகிறது: “[மெழுகுவர்த்தி பயன்படுத்துவதற்குரிய] காரணம், மெழுகுவர்த்திக்கு மந்திர தன்மைகள் இருப்பதாக கருதிய பூர்வ கிரேக்கர்கள் அல்லது ரோமர்கள் காலத்துக்குச் செல்கிறது. அவர்கள் மெழுகுவர்த்தியின் சுடரொளியில் கடவுட்களுக்கு கொண்டுசெல்லப்பட ஜெபங்களை ஏறெடுத்து விருப்பங்களைத் தெரிவிப்பார்கள். அப்போது கடவுட்கள் தங்கள் ஆசிகளை கீழே அனுப்பி ஒருவேளை ஜெபங்களுக்குப் பதிலளிக்கக்கூடும்.” இதுபோன்ற மற்ற பின்னணித் தகவல் உவாட்ச் டவர் சங்கம் வெளியிட்டுள்ள வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கங்கள் 69 மற்றும் 70-ல் காணலாம்.
இருப்பினும் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, பிறந்தநாட்களைக் கொண்டாடுவது மதசம்பந்தமானதாக இருந்ததா அல்லது இன்னும் இருக்கிறதா என்பதைக் காட்டிலும் இந்தக் கேள்வியில் அதிகம் உட்பட்டிருக்கிறது. பிறந்தநாட்கள் பற்றிய விஷயத்தை பைபிள் கவனத்துக்குக் கொண்டுவருகிறது. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் அது அளிக்கக்கூடிய எந்த குறிப்புகளுக்கும் ஞானமாக விழிப்புள்ளவர்களாக இருக்கின்றனர்.
தனிப்பட்ட ஆட்கள் பிறக்கையில், கடவுளுடைய பண்டைய ஊழியர்கள் அதைக் குறித்து வைத்தனர். இது வயதைக் கணக்கிட அவர்களுக்கு உதவியது. நாம் வாசிக்கிறோம்: “நோவா ஐந்நூறு வயதானபோது சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.” “நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் . . . மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன.”—ஆதியாகமம் 5:32; 7:11; 11:10-26.
இயேசுவும்கூட குறிப்பிட்ட வண்ணமாக கடவுளுடைய மக்கள் மத்தியில் குழந்தைப் பிறப்பு ஆசீர்வதிக்கப்பட்ட, மகிழ்ச்சியான சம்பவமாக இருந்தது. (லூக்கா 1:57, 58; 2:9-14; யோவான் 16:21) என்றபோதிலும் யெகோவாவின் மக்கள் பிறந்தநாள் நினைவுவிழா கொண்டாடவில்லை; அவர்கள் மற்ற ஆண்டுநிறைவு நாட்களை கொண்டாடினார்கள், ஆனால் பிறந்த நாட்களை அல்ல. (யோவான் 10:22, 23) என்ஸைக்ளோபீடியா ஜுடேயிக்கா (Encyclopaedia Judaica)சொல்கிறது: “பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பாரம்பரிய யூத சடங்கில் அறியப்படாததாக இருந்தது.” இஸ்ரவேலரின் பழக்கவழக்கங்களும் பாரம்பரியங்களும் (Customs and Traditions) குறிப்பிடுவதாவது: “பிறந்தநாள் கொண்டாட்டம் மற்ற தேசங்களின் பழக்கவழக்கங்களிலிருந்து கடன்வாங்கப்பட்டிருக்கிறது, யூதர்கள் மத்தியில் இந்தப் பழக்கத்தைப் பற்றி பைபிளில், தால்முட் அல்லது பிற்காலத்திய அறிஞர்களின் எழுத்துக்களில் எந்தக் குறிப்பும் இல்லை. உண்மையில் அது பண்டைய எகிப்திய பழக்கமாக இருந்தது.”
மெய் வணக்கத்தார் கொண்டாடாத, பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எகிப்திய தொடர்பு தெளிவாக இருக்கிறது. அது யோசேப்பு எகிப்திய சிறைச்சாலையில் இருந்தபோது ஆட்சிசெய்துவந்த பார்வோனின் பிறந்தநாள் விருந்தாகும். அந்தப் புறமதஸ்தர்களில் சிலர் விருந்தைக் குறித்து மகிழ்ச்சியடைந்திருக்கலாம். ஆனால் பிறந்தநாள், பார்வோனின் சுயம்பாகிகளுடைய தலைவனின் தலை வெட்டப்பட்டதோடு சம்பந்தப்பட்டிருந்தது.—ஆதியாகமம் 40:1-22.
வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ள மற்றொரு பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பற்றியும்—மகா ஏரோதுவின் மகனான ஏரோது அந்திப்பாவினுடையது—இதேப் போன்று சாதகமற்ற விளக்கமே அளிக்கப்படுகிறது. இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டம் நிச்சயமாகவே பைபிளில் வெறுமென தீங்கற்ற விழாவாக அளிக்கப்பட்டில்லை. மாறாக, அது யோவான் ஸ்நானகனின் தலை வெட்டப்பட்ட ஒரு சமயமாக இருந்தது. பின்னர், “அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.” ‘இயேசு அதைக் கேட்டு தனியே இருக்க அவ்விடம் விட்டுப் புறப்பட்டு போனார்.’ (மத்தேயு 14:6-13) அந்தச் சீஷர்களோ இயேசுவோ பிறந்தநாள் கொண்டாட்டப் பழக்கத்திடமாக கவர்ந்திழுக்கப்பட்டிருப்பார்கள் என்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
பிறந்தநாள் கொண்டாடுவதைப் பற்றி அறியப்பட்டிருக்கும் அதன் ஆரம்பத்தை முன்னிட்டும், அதிக முக்கியமாக, அவை பைபிளில் சாதகமற்ற வெளிச்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாலும் யெகோவாவின் சாட்சிகளுக்கு இந்தப் பழக்கத்திலிருந்து விலகியிருக்க போதிய காரணமிருக்கிறது. உலகப்பிரகாரமான இந்தப் பழக்கத்தை அவர்கள் பின்பற்றவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் வருடத்தில் எந்தச் சமயத்திலும் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிடமுடியும். அவர்கள் பரிசு கொடுப்பது கட்டாயமானதாக அல்லது ஒரு விழாவின்போது அழுத்தத்தின்கீழும் அல்ல; அது தாராள மனப்பான்மையாலும் உண்மையான பாசத்தாலும் எந்தச் சமயத்திலும் பரிசுகளை இயல்பான உணர்ச்சியால் உந்துவிக்கப்பட்டு பகிர்ந்துகொள்வதாக இருக்கிறது.—நீதிமொழிகள் 17:8; பிரசங்கி 2:24; லூக்கா 6:38; அப்போஸ்தலர் 9:36, 39; 1 கொரிந்தியர் 16:2, 3.