உலகத்தைக் கவனித்தல்
எங்கும் பரவியுள்ள ஊட்டக்குறைவு
உலக வங்கியின் சமீபகால ஆராய்ச்சியின் பிரகாரம் 1970-1980 வரையான பத்தாண்டு காலத்தில் போதிய உணவின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை 14 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வளர்ச்சியடையும் நாடுகளான ஆப்ரிக்கா இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா—தகவல் இல்லாமையால் சீனா சேர்க்கப்படவில்லை—ஆகிய 87 நாடுகளிலிருக்கும் 34 கோடி மக்கள் தங்கள் ஆரோக்கியத்திற்குப் படுமோசமாய் கேடு விளைவிக்கக்கூடியதும் சரீர வளர்ச்சியை குறைக்கக்கூடியதுமான கடும் ஊட்டக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வெறுமென உயிர் பிழைக்கும் அளவான உணவையே அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். கூடுதலாக தங்கள் உழைக்கும் வாழ்க்கையை நடத்துவதற்கு 39 கோடி மக்கள் போதிய உணவு இல்லாமலிருக்கின்றனர். இந்தப் பிரச்னை பூகோள உணவு குறைபாடு, விலைவாசி உயர்வு அல்லது விளைச்சலை மிஞ்சிவிடும் ஜனத்தொகை ஆகியவற்றின் காரணமாக அல்ல என்று வங்கி சொல்லுகிறது. “கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் என்றுமில்லாத ஜனத்தொகை அதிகரிப்பைக் காட்டிலும் பூகோள அளவிலான உணவு உற்பத்தி அதிவேகமாக இருந்திருக்கிறது. உலக மார்க்கெட்டுகளில் தானிய விலைகள் சரிந்துகொண்டிருக்கின்றன.” அப்படியானால் நாடுகளும் அவற்றின் மக்களும் ஏன் இந்த ஏராளமான உணவில் பங்குகொள்ளுகிறதில்லை. ஏனெனில் தேவையான உணவை வாங்குவதற்கு முடியாத அதிக ஏழ்மையான நிலையில் அவர்கள் இருக்கின்றனர். மேலும் “உணவு குறைபாடு தானே பிரச்னைகளின் வேர் என்ற தவறான அபிப்பிராயம் நிலவுவதன் காரணமாகவும்” அப்படியிருக்கிறது என்று வங்கி சொல்லுகிறது.
அதிக நீண்ட காலமாக ஆட்சிபுரியும் பேரரசன்
ஜப்பானின் சக்கரவர்த்தியான ஹீரோ ஹிடோ இப்பொழுது 85 வயதுள்ளவராயிருக்கிறார். இவர் உலகிலேயே நீண்டகால ஆட்சியாளராகவும் மற்றும் மிகப்பழமையான முடிமன்னராகவும் இருக்கிறார். 1986-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவானது ஹீரோ ஹிடோவின் 60-வயது ஆண்டுகால ஆட்சியினைக் குறித்த அரசு ஆதரவு பெற்ற விழாவுடன் இணைந்துவிட்டது. “கடந்த 60-வது ஆண்டுகளில் நான் நினைவுகூறும் படுமோசமான சம்பவம் இரண்டாம் உலகப் போருடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களே” என்றார் இந்தச் சக்ரவர்த்தி. இவர் இந்தப் போருக்கு முன்பு கடவுளாக மதிக்கப்பட்டு வந்தார். சக்ரவர்த்திக்கு வாழ்த்துதல் தெரிவிக்க சுமார் 56,000 ஆட்கள் அரசர் மாளிகையில் குவிந்தனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏனெனில் சமீப ஆண்டுகளில் ஜப்பானில் வன்முறை தலைதூக்கியிருக்கிறது.
கருப்பை சவ்வின் வீக்கமும் உடற்பயிற்சியும்
மலட்டுத்தன்மை மற்றும் கருப்பையில் கட்டியின் வளர்ச்சியை—கருப்பையிலுள்ள உட்புர சவ்வின் வீக்கத்தை—உண்டுபண்ணக்கூடிய ஒரு நோயை பெண்கள் அடையும் அபாயத்தைக் கடுமையான உடற்பயிற்சி குறைப்பதாக தோன்றுகிறது. ஐக்கிய மாகாணங்களில் இறுதி மாதவிடாய்க்கு முற்பட்ட காலங்களிலிருக்கும் 10 முதல் 15 சதவிகிதமான பெண்கள் இப்படிப்பட்ட நோயினால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. கருப்பையின் மீதுள்ள சவ்வில் விபரீதமான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது வழக்கமாய் மாதவிடாய்க்கு முன்னான கடும் வேதனையூட்டும் சுளுக்கை உண்டுபண்ணுகிறது. விடாது தொடர்ந்து செய்யப்படும் சரீர அப்பியாசம் “அநேக மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்படுகிறது,” என்றார் நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் டாக்டர் க்ராமர். மேலும் அவர் சொன்னதாவது: “அதிலிருந்து பயனடைவதற்கு நீங்கள் ஒரு உடற்பயிற்சியில் தேர்ச்சிபெற்ற விளையாட்டு வீரராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு வாரத்தில் சில மணிநேரங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது ஒரு பாதுகாப்பான பயனை அளிக்கக்கூடும்.”
விண்வெளி துணைக்கோள் மூலம் நிலப்படம் வரைதல்
சுற்றிவரும் துணைக்கோள்களிலிருந்து ரேடார் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் சமுத்திரத்தின் தரையைப் பற்றிய துல்லியமும் விவரமுமான நிலப்படங்களை விஞ்ஞானிகள் இப்பொழுது தயாரிக்கிறார்கள். உண்மையில் சமுத்திரத்தின் மேல்பரப்பே அளவிடப்படுகிறது. கப்பலில் பயணஞ்செய்யும் மனிதரால் உணரமுடியாதபோதிலும் சமுத்திரத்தின் தரைமட்டம் சமசீராக இல்லை. புவியீர்ப்பு சக்தியின் காரணமாக தண்ணீர் பள்ளத்திடமாக இழுக்கப்படுகிறது, அல்லது மலைகளின் உச்சியையும் மூடியிருக்கிறது. இதனால் 50 அடிகள் (15 மீ) அல்லது அதற்கும் அதிகமான வேறுபாடு இருக்கக்கூடும். “சமீப காலத்து கணிப்புகள் சமுத்திர தரைமட்டத்தின் திட்டவட்டமான அம்சங்களுக்கும் தண்ணீரின் மேல்பரப்பிற்கும் உள்ள 10 சென்டிமீட்டர் (4 அங்குலம்) அளவான மிகச் சிறிய வேறுபாடுகளையும் கண்டுபிடித்துவிடும் அளவிற்கு மிகத்துல்லியமாக இருக்கின்றன” என்று யு.எஸ். நியுஸ் அண்ட் உவர்ல்ட் ரிப்போர்ட் சொல்லுகிறது. எதிர்கால விண்வெளி துணைக்கோள்களால் இன்னமும் அதிகமான விவரங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. சமுத்திர தரைமட்டத்தின் இட அமைப்பு விளக்கப்படத்திலிருந்து பூமியதிர்ச்சி மற்றும் நிலத்திற்குக் கீழான அழுத்தம் ஆகியவற்றை உண்டுபண்ணுவதற்கு நிலத்தின் மேற்பரப்பிலுள்ள கெட்டியான ஓடுகளும் மற்றும் கட்டமைவு தகடுகள் என்றழைக்கப்படும் தகடுகளும் எப்படி ஒன்றோடொன்று எதிர்செயலாற்றுகின்றன என்பதையும் நிலவியல் ஆய்வாளர்கள் படித்தறியக்கூடும்” என்று கட்டுரை சொல்லுகிறது.
வித்தியாசப்பட்ட பிரதிபலிப்பு
“1986-ல் தொழில்துறையானது வீழ்ச்சிக்குரிய ஒன்று—இரண்டு அடிகளை வாங்கியிருப்பதாகத் தெரிகிறது” என்று தி நியு யார்க் டைம்ஸ் சொல்லுகிறது. “முதல் அடி ஏவுகணை ஆய்வுக்கு ஏற்பட்டது. விண்வெளி போக்குவரத்துக் கலம் வெடித்து சிதறியது. அதைப் பின்தொடர்ந்து விமான படையின் ஒரு டிடான் வின்வெளி கப்பலும் வானிலை துணைக்கோளைச் சுமந்து செல்லும் ஒரு டெல்டாவும் வெப்ப எதிரொலியால் படீரென வெடித்தது; இரண்டாவது அடி, அணுசக்தி எதிர் இயக்க கருவிக்கு ஏற்பட்டது. யுக்ரேனியில் அந்த எதிர் இயக்க கருவி படுமோசமாய் பழுதடைந்துவிட்டது.” இந்த நிகழ்ச்சிகளுக்கு மக்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்? அந்த விண்வெளி போக்குவரத்து ஊர்தியின் விபத்து நவீன தொழில்துறை சமுதாயத்தில் வாழ்வதனால் ஏற்படும் அபாயங்களில் இதுவும் ஒன்றென ஏற்கப்பட்டுவிட்டது. இதற்கொப்பான காரியங்கள் கடந்த காலங்களில் நேரிட்டபோது அது உருமாற்றப்பட்டு பாதுகாப்பானதாக ஆக்கப்பட வேண்டும் என்ற அதிகார கோரிக்கைகள் செய்யப்பட்டன. ஆனால் அடிப்படை மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. “குறைபாடுகள் வெளிப்படையானதாக இருந்தபோதிலும் தொழில் நுட்ப ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணமென்னவெனில் அவற்றினால் ஏற்படும் அபாயங்களை அவற்றினால் ஏற்படும் நன்மைகள் மிஞ்சிவிட்டதாக தோன்றுகிறது” என்று டைம்ஸ் பத்திரிகை சொல்லுகிறது. ஆனால் யுக்ரேய்னியில் அணுசக்தி எதிர் இயக்கக் கருவிக்கு ஏற்பட்ட பழுது பொருத்தமட்டில் உலகமுழுவதிலுமுள்ள பொது மக்களுடைய கருத்தானது குறிப்பிடத்தக்க விதத்தில் வித்தியாசமானதாக இருந்தது. அது ஏற்கப்படுவதற்கு மாறாக அதிகப்படியான சந்தேகத்தையும் பயத்தையும் தூண்டக்கூடிய ஒரு தொழில் நுட்ப ஆய்வாக இது இருக்கிறதென்பது மக்களுடைய தீவிரம் மற்றும் மனவெழுச்சியின் வேகம் தெரிவிக்கிறது.
அடையாளங் காண புதிய முறைகள்
காணாமற்போய்விட்ட அல்லது கடத்திச்செல்லப்பட்ட பிள்ளைகள், திசைதெரியாமல் போய்விட்ட பெரியவர்கள், காயமடைந்த தனியாட்கள் அல்லது மந்தமானவர்கள் ஆகியோருங்கூட இப்பொழுது சுலபமாக கண்டுபிடிக்கப்படலாம். சமூக பாதுகாப்பு எண்கள் என்பது போன்ற அடையாளங் கண்டுபிடிக்கும் எண்கள் ஒரு மைக்ரோ டிஸ்க்கில் (நுண்வட்டத் தகட்டில்) பொறிக்கப்பட்டு கடைவாய் பல்லில் இறுக இணைக்கப்படுகிறது. அந்த எண்கள் கம்ப்யூட்டர் பதிவேட்டில் பூர்த்திசெய்யப்படுகிறது. அத்துடன் அடையாளங் காட்டும் தகவல்களும் அந்த நபரின் மருத்துவ விவரங்களும் பதிவு செய்யப்படுகிறது. இந்தச் சேவை இப்பொழுது ஆறு வித்தியாசமான நிறுவனங்களில் அளிக்கப்படுகிறது. “குழப்பத்தை தவிர்ப்பதற்காக அமெரிக்க பல்மருத்துவ கழகம் இப்பொழுது அதை ஒரே மையமாக ஒருமுகப்படுத்துவதற்கு உழைத்துக் கொண்டிருக்கிறது” என்று அந்த அமெரிக்க பத்திரிகை குறிப்பிட்டது.
குப்பைத் தொட்டியில் பணம்
ஒரு வெள்ளிக்கிழமை மாலையன்று ஜெர்மனி, சாஹெர்லூயிஸ் என்னுமிடத்திலுள்ள ஒரு வங்கி காஷியரால் ரூ.1,36,000 (DM 20,000) காணாமற்போய்விட்டதற்குக் காரணம் காட்டமுடியவில்லை. அதைத் தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமையன்று நகர குப்பைத்தொட்டியிலிருந்து குப்பைகளை அகற்றும் மனிதனின் கண்டுபிடிப்பு வங்கியை தர்மசங்கடமான நிலைக்குள்ளாக்கியது. காலி டின்கள் வேண்டாத காகிதங்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றின் மத்தியில் அநேக பணக்கட்டுகளை அவன் கண்டுபிடித்தான். பல ஆட்கள் வந்து அந்தக் குப்பைகளைத் கிண்டி தேடியபோது ரூ.98,000-க்கு (DM 7,000) மேல் கண்டுபிடித்தார்கள். நிகழ்ந்தது என்ன? “கடந்த வெள்ளிக்கிழமை, ஜனவரி 31 அன்று, மாத கடைசிக்குரிய கணக்குகளை நாங்கள் அவசர அவசரமாக சரிபார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது பணக்கட்டுகள் குப்பைக் கூடைக்குள் தவறி விழந்துவிட்டிருக்கக்கூடும். பின்பு குப்பைக்கூடையிலிருந்து நகர குப்பைத் தொட்டிக்குள் சென்றுவிட்டிருக்கக்கூடும்” என்று கால் நெர் ஷ்டாட் ஆன்ஸீகெர் என்ற ஜெர்மன் பத்திரிகைக்கு ஒரு வங்கி பணியாளர் தகவல் கொடுத்தார்.
மேம்பட்ட சுமை தாங்கிகள்
அநேக ஆப்பிரிக்க பெண்கள் வாளி நிறைய தண்ணீர், விறகு கட்டை சுமைகள், சிமெண்ட் பைகள், பெட்டிகள் ஆகிய பாரமான சுமைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தலையின்மேல் சுமந்துகொண்டு போகிறார்கள். அவர்களுடைய சக்தி செலவழிவதை அளவிடும் விஞ்ஞான ஆராய்ச்சியின் பிரகாரம் தன்னுடைய உடல் எடையின் 70 சதவிகிதமான சுமையை சுமக்கும் ஒரு ஆப்ரிக்க பெண் 50 சதவிகித பிராணவாயுவை அதிகமாக உட்கொள்ளுகிறாள். அதே அளவான சுமைகளைத் தங்கள் முதுகின் மீது சுமக்கும் புது படைவீரர்கள் 100 சதவிகித பிராண வாயுவை அதிகமாக உட்கொள்ளுவதாக பதிவாகியிருக்கிறது. 20 சதவிகிதமான உடல் எடையுள்ள சிறிய சுமைகளைச் சுமக்கும் ஆப்ரிக்க பெண்களுடைய சக்தியின் செலவழிப்பு அதிகரிக்கவில்லை. புது படைவீரர்கள் மாறுபாடின்றி சிறு சுமைகளையும்கூட தூக்கமுடியவில்லை என்று இயற்கை என்ற ஆங்கில இதழ் அறிவிக்கிறது. இந்த அதிசயம் சிறுவயது முதற்கொண்டே கொடுக்கப்படும் பயிற்சியின் விளைவு என்றும் அதோடு நிற்கும் மற்றும் நடக்கும் விதமும் அதில் உட்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள் அந்த விஞ்ஞானிகள். நடப்பதற்குப் பெரும்பாலும் ஆற்றல் தேவைப்படுவதற்குக் காரணம் நமது உடல் மேலும் கீழுமாக அசைகிறது. “ஆப்ரிக்க பெண்களோ தங்கள் எல்லா சக்தியையும் முன்செல்ல பயன்படுத்துகிறார்கள் என்று டிஸ்கவர் என்ற பத்திரிகை கூறுகிறது. “பெரும்பாலான ஆட்கள், முட்டை வடிவ சக்கரத்தைக் கொண்ட ஒரு வண்டியில் செல்வது போல் துள்ளித்துள்ளி நடக்கிறார்கள். ஆப்பிரிக்க பெண்களோ வட்ட வடிவ சக்கர வண்டியில் செல்வதுபோல் செல்கிறார்கள்.”
இல்லாமற்போன இனம்
என்றுமே பறந்திராத மிகப்பெரிய விலங்கு என்றழைக்கப்பட்ட அந்த இராட்சத சிறகுடைய ஊரும் பிராணி நீண்ட காலமாக இல்லாமற்போன இனமாகிவிட்டது. இதனுடைய புதைபடிவமாகிவிட்ட எஞ்சியுள்ள பாகங்களில் ஒன்று 1972-ல் டெக்ஸாசில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் இடையகல அளவு 36 அடிகள் (11 மீட்டர்) மதிப்பிடப்பட்ட எடை 150 பவுண்டுகள் (68 கிலோ) மேலும் சாத்தியமான நிற்கும் உயரம் 12 அடிகள் (3.7 மீட்டர்) என்றும் அது வெளிப்படுத்தியிருக்கிறது. அதே போன்று பாதி அளவான 18 அடி (5.5 மீ) இடையகல சிறகுகளைக் கொண்ட ஒரு செயற்கை உருவத்தை உண்டுபண்ணுவதற்காக முழு அளவான நகல் ஒன்று வரையப்பட்டது. படபடவென்று அடிக்கும் அதன் சிறகுகளை இயக்க கம்ப்யூட்டர்களைக் கொண்ட இந்த மாதிரி உருவம் 7,00,000 டாலர்கள் (சுமார் ரூ.98,00,000) செலவில் செய்யப்பட்டு 1986-ம் ஆண்டின் துவக்கத்தில் சிறிது காலம் உண்மையிலேயே பறந்தது. காற்றின் மின்னோட்டத்திற்கு அது சுயமாகவே எதிர்செயலாற்றியது. இந்த வெற்றிகரமான வித்தை காட்டும் ஆகாய பயணம் ஸ்மித்சோனியன் நிறுவனத்தால் இயற்கை மற்றும் இயந்தர ஆகாய பயணம் என்ற திரைப்படத்திற்காக படமாக்கப்பட்டது. பறவையினுடைய கால்களின் இயக்கத்தை செயற்கையாக செய்யமுடியாத காரணத்தாலும் மேலும் எடையின் காரணமாக அது மேலெழும்ப முடியாததாலும் இந்த மாதிரி உருவம் ஆகாயத்தில் சுழல் விசிறியால் முன்னோக்கிச் செலுத்தப்பட வேண்டியதாக இருந்தது. இதில் ஏமாற்றமும் வெற்றியும் கலந்திருந்தது. ஆனால் அதனுடைய இறுதி காட்சி வாஷிங்டன் டி.சி.-க்கு அருகாமையில் பொதுமக்களுக்குக் காட்டப்பட்டபோது அது சடாரென்று தரையில் விழுந்து தன் தலையை முறித்துக்கொண்டது. அந்த “இராட்சத சிறகுடைய பிராணி இனம் ஏன் இல்லாமற் போய்விட்டது என்பது இப்பொழுது தெரிகிறது” என்று அதை உருவாக்கியவரான பால்மாக்கிரீடி சொன்னார்.
உலகிலேயே மிகுந்த எடையுள்ளவன்
“ஆஸ்ட்டிரியாவின் ஆல்பர்ட் பெர்னிடிச் உலகத்திலேயே மிகுதியான எடையுள்ள ஒரு ஆள் என்று உரிமைப்பாராட்டுவதாக” ஜப்பான் ஏர்லைன்ஸ் நியூஸ் லெட்டர் குறிப்பிடுகிறது. இவன் பெருந்தீனிக்காரனும் பெருங்குடிகாரனுமாவான். இந்தப் பெர்னிடிச் என்பவன் ஒரே சமயத்தில் 80 குடுவை பியரையும் இரண்டு காலனுக்கும் (7.6 லிட்டர்) அதிகமான திராட்சமதுவையும் 14 கோழி இறைச்சியையும் விழுங்கிவிட்டான்.” பிறப்பின் சமயத்தில் இவன் 13 பவுண்டுகள் (5.9 கிலோ) 15 வயதில் 400 பவுண்டுகள் (180 கிலோ) இப்பொழுது 29 வயது மனிதனாக அவன் 876 பவுண்டுகள் (397 கிலோ) எடையுள்ளவனாக இருக்கிறான். ஜப்பானில் நடைபெற்ற ஒரு “டோக்கியோ விழாக்காட்சியில் அவனுடைய உடல் பருமனை பொதுமக்களுக்குக் காட்டுவதற்காக” ஜப்பான் ஏர்லைன்ஸ் மக்களால் எடுத்துச் செல்லப்பட்டான். அவன் அதில் பயணஞ் செய்வதற்காக 747 என்ற விமானத்தின் முதல் வகுப்பு அறையிலுள்ள ஆறு இருக்கைகள் நீக்கப்பட்டு ஒரு விசேஷ இருக்கையும் பாதுகாப்பு கச்சையும் பொருத்தப்பட்டது. அதோடு கூடுதலாக, வலுப்படுத்தப்பட்ட தரையும் மற்றும் பெரிதுபடுத்தப்பட்ட குளியலறையும் கட்டப்பட்டது. பஞ்சு மெத்தைகள் கொண்ட சரக்கு வண்டியின் மூலமாக விமானத்தினுள் அவன் ஏற்றப்பட்டான்.
புரூக்லின் பாலம் மேம்படுத்தப்படுகிறது
புருக்லின் பாலத்திலே செங்கோட்டு நிலையில் தொங்கவிடப்பட்டிருக்கும் 1,088 கம்பிகளும் மற்றும் அதன் போக்குவரத்து பாதையில் ஆதரவாக நிற்கும் எதிர்கோணங்களை இணைக்கும் குறுக்கு மரச்சட்டங்களும் மாற்றியமைக்கப்பட விருக்கின்றன. “இந்தப் பாலத்தைப் புதுகம்பிகளால் புதுப்பிப்பதே 15 ஆண்டுகால முக்கிய வேலையாகவும், 153 மில்லியன் டாலர் (சுமார் ரூ.205 கோடி) செலவில் செய்யப்படும் மறு சீரமைப்புத் திட்டமாகவும் இருக்கிறது. இது அந்தப் பாலம் அதன் இரண்டாம் நூற்றாண்டையும் கடப்பதற்கு உதவி செய்யும் என்று கட்டடக்கலை நிபுணர்கள் நம்புவதாக” தி நியு யார்க் டைம்ஸ் சொல்லுகிறது. இந்தப் பாலம் 1883-ல் திறக்கப்பட்டது. அந்தப் பழைய கம்பிக்கயிறுகளை அச்சமயத்தில் வழங்கினவன் குறைபாடுள்ள கம்பிகளை வழங்கினதால் அவனுடைய தொழிற்சாலையிலேயே நகர பரிசோதகர்களால் அது நிராகரிக்கப்பட்டது. என்றபோதிலும் இப்படிப்பட்டவற்றிற்குச் சரியீடு செய்வதற்காகவே அந்தப் பாலம் திட்டமிட்டமைக்கப்பட்டது. அந்தக் கம்பிக்கயிறு சிறப்பாக தாங்கிவந்திருக்கிறது, இப்பொழுது அது அதிகpls put zero spaces in here பழையதாகிவிட்டதால் மாற்றியமைக்கப்படுகிறது. 1981-ல் இரண்டு கம்பிகள் அறுந்துவிட்டன ஒரு கம்பி பாலத்தின் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த ஒருவனை கொன்றுவிட்டது. கம்பிகள் மாற்றியமைக்கப்பட்ட பிற்பாடு அந்த அழுத்தத்தைச் சமசீர்படுத்துவதற்காக அதன் இறுக்கம் கட்டட கலை நிபுணர்களால் சரிசெய்யப்படும். அந்தப் பாலத்தின் நான்கு முக்கிய கம்பிகள் மாற்றப்பட மாட்டாது. (g86 9/8)