புற்றுநோய்—நமது நிலை என்ன?
புற்றுநோயைப் பற்றிய இந்தத் தொடர் கட்டுரை இந்த நோய்க்குச் சிகிச்சையளிப்பதில் முயன்று பெறப்பட்டிருக்கும் முன்னேற்றங்களைப் பற்றிய உண்மையான கருத்தை வாசகராகிய நீங்கள் கொண்டிருக்க உங்களுக்கு உதவி செய்வதற்காகவே எழுதப்பட்டுள்ளது. சமீப பத்தாண்டுகளில் புற்றுநோய்க்கான காரணங்களில் சிலவற்றை புரிந்துகொள்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுப்பதைக் குறித்து நல்ல ஆலோசனை இப்பொழுது கிடைக்கிறது. மேலுமாக தொடக்கத்திலேயே நோயாளியின் புறக்குறிகளை வைத்து நோயை அறுதியிடுவது சுலபமானதாகவும் குணப்படுத்தப்படுவதற்கு இப்பொழுது அதிகமான சாத்தியமும் இருக்கிறது. அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் சுகாதார மற்றும் மனித சேவை இலாக்கா, அதை இவ்விதமாக தொகுத்துரைக்கிறது:
“நற்செய்தி: அனைவருக்கும் புற்றுநோய் வருவதில்லை. அமெரிக்க நாட்டவரில் மூன்றில் இரண்டு பேருக்கு புற்றுநோய் ஒருபோதும் வராது. மேன்மையான செய்தி: வருடந்தோறும் புற்றுநோயாளிகளில் அதிகமதிகம் பேர் குணமாக்கப்படுகிறார்கள். மிகச்சிறந்த செய்தி: நீங்கள் ஒவ்வொரு நாளும் புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள ஏதாவது செய்யக்கூடும்.”
இந்தப் பொருளை வெறும் தளராத நம்பிக்கையோடு மாத்திரமே சிந்திப்பது எமது நோக்கமல்ல. மொத்தத்தில், “ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே இப்பொழுது வாழ்ந்துவரும் 5,80,00,000 பேர் முடிவாக புற்றுநோயாளிகளாவார்கள்” என்பதாக மருத்துவ ஏடு ஒன்று சுட்டிக்காண்பிக்கிறது. மற்ற அநேக தேசங்களும் இதே விதமான வீதங்களையே கொண்டிருக்கின்றன. ஆகவே பொய்யான நம்பிக்கைக்கு உத்தரவாதமளிக்க முடியாது. என்றாலும் உண்மைகளை ஆதாரமாகக் கொண்ட நம்பிக்கை, நம்பிக்கையோடு நிஜங்களை எதிர்பட அனைவருக்கும் உதவிசெய்யும், மேலுமாக அதிக திறம்பட்ட விதத்தில் போராடுவதற்கு புற்று நோயாளிகளை இது உற்சாகப்படுத்தக்கூடும்.
புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?
நிபுணர்கள் இந்தக் கேள்விக்கு எவ்விதமாக பதிலளிக்கிறார்கள்? பின்வருவதை கவனியுங்கள்:
“புற்றுநோய்க்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்திட முடியும். அநேக சந்தர்ப்பங்களில், அதை முழுமையாக குணப்படுத்த முடியும். புற்றுநோய்க்காக சிகிச்சையளிக்கப்பட்ட அநேக ஆட்கள் நோயின் எந்த அறிகுறியோ நோய்க்குறியோ இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். . . . புற்று நோயை நிச்சயமாக குணப்படுத்தலாம்”—டாக்டர் பெஞ்சமின் F. மில்லர் எழுதிய முழு மருத்துவ கையேடு.
“புற்று நோயாளிகளில் பாதி பேரை குணப்படுத்திவிடலாம் மற்றும் குணப்படுத்தப்பட முடியாதவர்களுக்குச் சரியான சிகிச்சையை அளிக்கும் பட்சத்தில் செளகரியமான மற்றும் பயனுள்ள வாழ்நாட் காலத்தை அவர்களுக்குக் கூட்டிக்கொடுக்க முடியும் என்ற உண்மையை இந்த நோயைப் பற்றிய பயம் மறைத்துவிட்டிருக்கிறது”—யேல் பல்கலைக்கழகத்தின் அறுவை மருத்துவப் பிரிவு பேராசிரியர் டாக்டர் சார்லஸ் F. மக்கான் எழுதிய புற்றுநோய் பற்றிய உண்மைகள்.
“சில புற்று நோய்களை எளிதில் குணப்படுத்திடலாம்; ஆனால் மற்றவைகளை அறுதியிடுவதற்குள் பெரும்பாலும் எப்பொழுதும் குணப்படுத்த முடியாமலே போய்விடுகிறது. . . . மூன்று உறுப்புகளின் புற்றுநோய் (நுரையீரல், மார்பு மற்றும் பெருங்குடல்) தற்போது குறிப்பிடத்தக்க விதத்தில் முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இவையே ஐக்கிய மாகாணங்களில் புற்றுநோய் மரணங்களில் பாதிக்குக் காரணமாக இருக்கின்றன.”—புற்றுநோய்க்கான காரணங்கள், இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சர் ரிச்சர்ட் டால் மற்றும் ரிச்சர்ட் பீட்டோ.
ஆனால் இந்தச் செய்தி தொகுப்போடு சேர்ப்பதற்கு, கவலையுடன் கவனிக்கப்பட வேண்டிய ஒரு குறிப்பு இருக்கிறது. டார்கெட்: கான்ஸர் என்ற தன்னுடைய புத்தகத்தில், விஞ்ஞான எழுத்தாளர் எட்வர்ட் J. சில்வெஸ்டர் இவ்விதமாகச் சொல்கிறார்: “கொலையாளி இன்னும் பிடிபடவில்லை. ஐக்கிய மாகாணங்களில் பெரும்பாலான சாவுக்கேதுவான புற்றுநோய்கள்—நுரையீரல் புற்றுநோய், மாதவிடாய் நின்றுவிட்டபின் வரும் மார்பு புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்—இவைகளுள்ள நோயாளிகள் சில நேரங்களில் நீண்ட காலம் வாழ்ந்திருந்தாலுங்கூட, முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததுபோலவே இன்னும் குணப்படுத்தப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.”
புற்றுநோய் ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் பெரும் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் மனிதனுக்குத் தெரிந்துள்ள நோய்களில் இதுவே நழுவிச் செல்லும் கொலைகார நோயாக இருக்கிறது. என்றபோதிலும் குறிபிடப்பட்ட மூன்று நோய்களில், சிலர் “நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறார்கள்” என்ற நம்பிக்கையின் ஒரு இழை ஓடுகிறது.
புற்றுநோயைக் குறித்து பேசுகையில், நாம் அனைவரும் தற்செயல் நிகழ்வுக்குப் பலியாட்களா? அல்லது அதைத் தடுத்திட நாம் செய்யக்கூடியது ஏதாவது இருக்கிறதா? புற்றுநோய் வருவதற்கும் உணவு மற்றும் வாழ்க்கை முறைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா?
பின்வரும் கட்டுரைகளில், புற்றுநோயின் அறியப்பட்டிருக்கும் காரணங்களையும், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளையும், புற்று நோயை மேற்கொள்வதில் வெற்றி பெற்றவரின் அனுபவத்தையும் சிந்திக்கலாம். புற்றுநோயை விரைவில் எவ்விதமாக மேற்கொள்ளலாம் என்பதைக் கடைசி கட்டுரை விளக்கும். (g86 10/8)