உலகத்தைக் கவனித்தல்
மதகுருவுக்குக் கண்டனத் தீர்ப்பு
ஐம்பத்திரண்டு வயதுடைய பிரபல அமெரிக்க இறைமையியல் வல்லுநர் சார்லஸ் E. குரன் என்பவரை வாஷிங்டனிலுள்ள அமெரிக்கக் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் ரோமன் கத்தோலிக்க இறைமையியல் ஆய்வுத் துறை ஆசிரியராக இருப்பதிலிருந்து வத்திக்கான் நீக்கிவிட்டது. செயற்கை முறைக் குடும்பக் கட்டுப்பாடு, ஓரினப்புணர்ச்சி, கருச்சிதைவு, விவாகத்திற்கு முன்பு பாலுறவு கொள்ளுதல், மற்றும் விவாகரத்து ஆகியவற்றின் மீது சர்ச்சின் முழு தடையை எதிர்த்து குரன் அடிக்கடி சவால் விட்டிருப்பதன் காரணத்தால் இந்தக் கண்டனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. விசேஷமான சூழ்நிலைகளில் இவை ஒழுக்கரீதியாக நியாயமானது என்பது குரனின் கருத்து. (1985-ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி ஐக்கிய மாகாணங்களிலுள்ள பெரும்பான்மையான கத்தோலிக்கர் ஒழுக்கம் சம்பந்தமாகக் குரனின் கருத்தை ஒத்துக் கொள்கின்றனர்.) ஒழுக்கப் பிரச்னைகளின்பேரில் இந்தக் கண்டிப்பான நடவடிக்கை கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதலாவதாகும். ஒழுக்க போதனைகளில் சர்ச் குற்றமற்ற நிலையிலிருக்கிறது என்ற தனது உரிமைப் பாராட்டலுக்கு இந்த நடவடிக்கை ஒரு முற்சான்றாய் கருதப்படுகிறது. இந்தக் கண்டனத் தீர்ப்பு சர்ச்சின் அதிகாரம் மற்றும் பாலுறவு சம்பந்தப்பட்ட ஒழுக்க நெறிப் பிரச்னைகளின் பேரில் ஐக்கிய மாகாணங்களிலுள்ள கத்தோலிக்கரிடையே நிலவும் பிளவை நீக்கிட வந்திக்கான் மேற்கொண்டிருக்கும் ஒரு வழியாக இருப்பதாய்ச் சில வத்திக்கான் அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஏய்ட்ஸ் நோயும் மாற்றுருப்புகள் பொருத்தப்படுவதும்
ஏய்ட்ஸ் மறைந்திருந்த இரண்டு உருப்புகளாவது மற்றவர்களுக்குப் பொருத்தப்பட்டிருக்கிறது என்று வடக் கரோலினாவில் கிரீன்ஸ்பரோவிலுள்ள ஒரு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏய்ட்ஸ் நோய் வஸ்துக்களுடைய உருப்புகள் விபத்துக்குள்ளான மூளை பாதிக்கப்பட்ட ஒரு மரித்த ஆளிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த நபர் ஏராளமான இரத்தத்தை ஏற்றிக்கொண்டவராயிருந்தார். இவருடைய இரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்த்தபோது எந்தவிதத்திலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆரம்ப பரிசோதனைகள் காண்பிக்கவில்லை. புதிதாக ஏற்றப்பட்ட இரத்தம் ஏய்ட்ஸ் வஸ்துக்களை மூடி மறைத்து விட்டதாகத் தெரிகிறது. மாற்றுருப்புகள் ஏய்ட்ஸ் நோயைக் கடத்துவதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், ஏய்ட்ஸ் நோயாளிகளின் உருப்புகள் “நோயைக் கடத்தும் தன்மை கெண்டதாகக் கருதப்படுகிறது” என்றும் மாற்றுருப்பு சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் ஐ.மா. நோய்த் தடுப்பு மையம் எச்சரிக்கிறது.
‘காபி’யா ‘டீ’யா?
இயற்கை சேதங்களாலும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களாலும் காபி உற்பத்தி செய்யும் தேசங்கள் காபி உற்பத்தியில் கடந்த ஆண்டு கடுமையான சரிவைக் கண்டன. 1984-85 காலப்பகுதியில் உற்பத்தி 3 கோடி மூடைகளாக இருந்தன என்று இலண்டனின் தி டைம்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது. ஆனால் 1985-86-ல் உற்பத்தி 1.6 கோடி மூடைகளாக மட்டுமே இருந்திருக்கின்றன. இதனால் காபி கொட்டை விலை ஏறக்குறைய இரட்டிப்பாகிவிட்டது.—இந்த விலையுயர்வு காபி உட்கொள்ளுகிறவர்களுக்குக் கடத்தப்படுவது தவிர்க்கப்பட முடியாது. பிரிட்டன் மக்கள் இந்தக் காபி விலையுயர்வைக் கண்டு அச்சம் தெரிவித்துள்ளனரா? இல்லை. பிரிட்டன் மக்கள் மத்தியில் ‘டீ’ பருகுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று தி கார்டியன் பத்திரிகை அறிக்கை செய்கிறது. தேசத்தின் 80 சதவிகிதத்தினர் டீ பருகுகிறவர்களாயிருக்கின்றனர். பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக நான்கு கப் டீ குடிக்கிறார்கள்—இதில் “மேற்கு ஐரோப்பாவின் மற்ற பகுதியினரும் ஐக்கிய மாகாணத்தவரும் சேர்ந்து” பருகுகிறதைக் காட்டிலும் அதிக டீ உட்கொள்ளுகிறார்கள். உட்பட்டிருக்கும் விலை? ஒரு கப் விலை ஒரு பென்னியைவிட (ஏறக்குறைய 20 பைசா) குறைவாக இருக்கிறது. பால் மற்றும் சர்க்கரை விலை தனி.
லூத்தரன் சபையார் ஒன்றுசேருகின்றனர்
ஜனவரி 1, 1988 அன்று அமெரிக்காவிலுள்ள சுவிசேஷக லூத்தரன் சர்ச் 53 இலட்சம் அங்கத்தினர்களையுடைதாய் ஐக்கிய மாகாணங்களில் அதிகாரப்பூர்வமாக நான்காவது பெரிய புராட்டஸ்டாண்ட் சபையாக ஆகும். 20 ஆண்டு கால பேச்சு வார்த்தைகளுக்குப் பின்பு மூன்று பிரிவாக இருந்த லூத்தரன் தொகுதிகளும் ஒரு புதிய பிரிவாக ஒன்று சேர ஒப்புக்கொண்டனர். சமூக பிரச்னைகளின் பேரில் அரசாங்கங்களின் பேரளவான செல்வாக்கைக் கொண்டிருக்கும் என்றும், மற்ற சர்ச்சுகளுடன் பொதுத் தொடர்பு கொள்ளும் விஷயத்தில் இணைந்த குரலைக் கொண்டிருப்பது கூடிய காரியம் என்றும், இந்தப் புதிய சர்ச் ஆப்பிரிக்கா, ஸ்பேன் மற்றும் ஆசிய மக்களைக் கூடுதலாக கவர்ச்சி செய்யும் என்றும் ஒன்று சேரும் தொகுதிகளின் தலைமைக் குருக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இளைஞர் பெற்றோரைக் குறித்து தகவல் கொடுக்கிறார்
ஒரு 13 வயது கலிபோர்னியா சிறுமி போதை மருந்துகளைப் பயன்படுத்தும் தன்னுடைய பெற்றோரைக் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் கொடுத்தது நாடெங்கும் பாராட்டுதற்குரியதானது. சட்டத்திற்கு விரோதமாக போதை மருந்துகளைப் பயன்படுத்திய பெற்றோரைக் குறித்து காவல் துறைக்குத் தகவல்கொடுத்த இளம் பிள்ளையின் தீரச்செயலில் வெற்றிகரமான திரைப்படத்தை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் காண்கிறார்கள். “அவளுடைய கதையை வெளியிடும் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக குறைந்தபட்சம் ஒரு டஜன் திரைப்பட தயாரிப்பாளர்கள் விடாமல் முயற்சி செய்கிறார்கள்,” என்று தி நியு யார்ர்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. தன்னுடைய பெற்றோர் போதை மருந்துகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடும்படி அவர்களை மன்றாடிக் கேட்டும் தன் முயற்சியில் தோல்வியுற்றவளாய் ஒரு பை நிறைய மாரியுவானா போதை மாத்திரைகள் மற்றும் கொக்கேய்ன் ஆகியவற்றைக் காவல் துறையினரிடம் ஒப்படைத்ததாக அவள் சொன்னாள்.
செவிலியர் தொடர்ந்து புகைபிடிக்கின்றனர்
நுரையீரல் புற்றுநோய் அதிகரித்துக் கொண்டிருக்கிறபோதிலும், இந்த நோய்க்கும் புகைபிடித்தலுக்கும் பேரளவு சம்பந்தமிருக்கிறது என்பதற்கு மறுக்கமுடியாத அத்தாட்சிகள் இருந்தபோதிலும் அதிகமதிகமான செவிலியர்கள் புகைபிடிக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆஸ்டின் செவிலியர் பள்ளியில் டாக்டர் க்ரேஸ் ஸ்டாட்ஸ் கூறினார். அவருடைய சுற்றாய்வு, உடல் நல துறையினரில் மிகக் குறைந்தளவு செவிலியர்களே புகைபிடித்தலை நிறுத்தியிருக்கின்றனர் என்றும், அமெரிக்க பொது மக்களில் புகைபிடித்தல் விகிதம் செவிலியர்களில்தான் அதிகமாக இருக்கிறது என்றும் காண்பித்தது. ஏன்? புகைபிடித்தலை விட்டுவிடாததற்கு அழுத்தம், ஏமாற்ற உணர்வு மற்றும் மன உறுதி இல்லாமை ஆகியவை செவிலியர் கொடுக்கும் காரணங்களாகும். “நம்மிடையே சிகரெட்டுகள் இல்லாமலிருந்தால், நுரையீரல் புற்றுநோய் ஓர் அரிய நோயாக இருக்கும்,” என்றார் ஸ்டாட்ஸ்.
நீர்வளிக் குண்டு விபத்து
புதிதாக வெளியிடப்பட்ட ஐ.மா. அரசு ஆவணங்கள் வெளிப்படுத்துவதுபோல், என்றும் உருவாக்கப்பட்டிராத மிக சக்திவாய்ந்த நீர்வளிக் குண்டுகளில் ஒன்று—42,000 பவுண்டு (19,000 கிலோ) எடையுடையது—29 ஆண்டுகளுக்கு முன்பு நியு மெக்ஸிக்கோவில் அல்புகுவர்க் நகருக்கு அருகாமையில் ஒரு ஐ.மா குண்டு வீச்சு விமானத்திலிருந்து எதிர்பாராத விதத்தில் விழுந்தது. எந்தவித வெடிப்பும் ஏற்படவில்லை என்றாலும், அந்த அணுகுண்டின் வெடிப்புச் சக்திகள் அதை நிலத்தில் ஆழமாகப் பதித்தது, இதனால் 12 அடி (3.7 மீ) ஆழமும் 25 அடி (7.6 மீ) அகலமுமான ஒரு குழியை ஏற்படுத்தியது என்று ஆல் புகுவர்க் ஜர்னல் குறிப்பிட்டது. “நாம் இதுவரை செய்திராத மிக சக்திவாய்ந்த அணுகுண்டாக இருக்கக்கூடும்,” என்றார் ஓர் அணு ஆயுத நிபுணர். இந்த அணுகுண்டின் அழிக்கும் சக்தி ஒரு கோடி டன் T.N.T-ஐவிட அதிகமாகும், அதாவது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டைவிட 600 மடங்கு அதிக அழிக்கும் சக்தி வாய்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது.
அழிந்துபோகும் தருவாயிலிருக்கிறது
நீண்ட அலகுகளையுடைய பறவை இனங்களில் ஒன்று பலவண்ண ஜப்பானிய இபிஸ் என்ற நாரை. இந்த இனம் அழிந்துபோகும் தருவாயிலிருக்கிறது. 1977-ல் ஜப்பானில் எட்டு வண்ணக் கழுத்துடைய இபிஸ் பறவைகள் இருந்தன. 1981-க்குள் இந்த அழகிய பறவைகளில் ஆறு மட்டுமே மீந்திருந்தன. இவை முற்றிலும் அழிந்துவிடுவதைத் தடுத்து இவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், ஜப்பான் சுற்றுப்புறச் சூழல் நிறுவனம், எஞ்சியிருந்த இப்பறவைகளைப் பிடித்து ஜப்பானில் பறவைகள் சரணாலயமாகிய சாடோகாஷிமா தீவில் விட்டனர். 1983-ல் ஒரு ஆண் பறவையும் இரண்டு பெண்பறவைகளுமே பிழைத்திருந்தன. இந்தப் பறவைகள் இனவிருத்தி செய்யாதிருந்ததால் சீனா தன்னிடமிருந்த 18 ஜப்பானிய இபிஸில் ஒன்றை கடன்கொடுத்தது. என்றபோதிலும் இன்றுவரை அவற்றை விருத்தி செய்வதற்கான முயற்சிகள் தோல்வி கண்டன. எஞ்சியிருந்த இரண்டு பெண் பறவைகளில் ஒன்று அன்மையில் மரித்துப்போனது. எனவே சுற்றுப் புறச்சூழல் நிறுவனத்தின் அதிகாரிகளும் டோக்கி பாதுகாப்பு மையமும், இந்த ஜப்பானிய பறவை இனத்தைக் காப்பதற்குக் கடைசி நம்பிக்கையாக செயற்கைக் கருவுறும் முறையை மேற்கொள்வது குறித்து சிந்தித்து வருகின்றனர்.
ஆப்ரிக்காவுக்குச் சரியான விதைகள்?
1960களின் பசுமைப் புரட்சி பல நாடுகளில் அமோக விளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதே விதைகள் ஏன் ஆப்ரிக்காவின் பசியைக் குறைத்திடவில்லை? “பசுமைப் புரட்சி முன்னேற்றம் அடையாத நாடாகிய தென் ஆப்ரிக்காவுக்கு உதவவில்லை,” என்கிறார் தென் ஆப்ரிக்காவில் விட்வாட்டார்ஸ்ராண்டு பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறைத்தலைவர் டாக்டர் H.கார்னட். புதிய விதை வகைகளின் உற்பத்தி அநேக ஆப்ரிக்க தேசங்களுக்கு அதிக விலையுயர்ந்ததாயிருக்கும் விவசாய தொழில் நுட்பத்தைச் சார்ந்திருக்கிறது. மற்றும் அந்த விதைகள் விருத்தி செய்யப்படும் நாடுகளின் தட்பவெப்ப நிலை ஆப்ரிக்க நாடுகளின் தட்பவெப்ப நிலைக்கு வித்தியாசமாயிருக்கிறது. “ஐரோப்பாவில் அல்லது அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் விருத்திசெய்யப்படும் விதை வகைகளை அறிமுகப்படுத்துவதில் ஒருவர் கவனமாயிருக்க வேண்டும்,” என்று விளக்கினார் கார்னட். “அதிகளவான உற்பத்தியளிக்கும் சோளம் சில ஆப்ரிக்க விவசாயிகளுக்குப் பலன்தருவதில்லை, ஏனென்றால் கதிர்கள் முதிர்ச்சியடைவதற்கு கூடுதலான ரசாயணங்களும் தண்ணீரும் தேவை.”
சீக்கிரமாக ஆரம்பித்தது
ஐக்கிய மாகாணங்களில் பகல் நீடிப்பு இந்த ஆண்டு சீக்கிரமாக ஆரம்பித்தது. ஏப்ரல் கடைசி ஞாயிறு ஆரம்பமாவதற்குப் பதில் அது ஏப்ரல் முதல் ஞாயிறு ஆரம்பித்தது. இருந்தாலும் அக்டோபர் கடைசி ஞாயிறுதான் முடிவுற்றது. சீக்கிரமாக ஆரம்பிப்பது சாலை விபத்துக்களின் மூலம் 1500 பேர் காயமுறுவதையும் 20 பேர் உயிரிழப்பதையும் தவிர்த்திடும் என்றும் விபத்து செலவில் $2.8 கோடி குறையும் என்றும் முன்னதாகக் கணக்கிடப்பட்டது.
ஊனமுற்றோருக்குப் புதிய கார்
படுமோசமாக ஊனமுற்றிருக்கும் ஆட்களுக்கென்று ஜப்பானில் அண்மையில் ஒரு கார் செய்யப்பட்டிருக்கிறது. “மின் சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவோர் உட்பட எல்லா கை கால்களும் ஊனமுற்றிருக்கும் மோசமான நிலையிலிருப்பவர்கள் இந்தப் புதிய காரை ஓட்டலாம்,” என்று அசாஹி ஈவ்னிங் நியூஸ் அறிக்கை செய்கிறது. பொதுவாக பயன்படுத்தும் கார் மாற்றியமைக்கப்பட்டு, ஓட்டுநர் கை சக்கரம், வேக மிதி மற்றும் நிறுத்த மிதிகளுக்குப் பதில், ஓட்டுநர் 12 அங்குல நீளமுடைய (30 செ.மீ.) ஒரு கோலைப் பயன்படுத்துகிறார். அந்தக் கோலை முன்னால் தள்ளுவது வேகத்தையும், பின்னால் தள்ளுவது வேகத் தடையையும் பக்கவாட்டில் தள்ளுவது வாகனத்தைத் திருப்புவதையும் செயல்படுத்துகிறது. அந்த ஓட்டுநர் கோலின் பக்கத்தில் பட்டன்கள் அமைக்கப்பட்டு அவை விளக்குகள் துடைப்பான்கள் மற்றும் பின்செல்லுதல் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்கிறது. ஒரு காரை மாற்றியமைப்பதற்கு ஏறக்குறைய 9,00,000 யென் (ரூ. 80,000) செலவாகிறது.
புதிய புனித நினைவுச் சின்னமா?
கலிலேயா கடலில் வறட்சியின் காரணத்தால் நீர்மட்டம் வேகமாகக் குறைந்தபோது ஒரு பூர்வீகப் படகு கண்டுபிடிக்கப்பட்டது. அது கிறிஸ்துவின் காலத்திற்குரியது என்றும், சிதைவைத் தடைச் செய்யும் ஆக்ஸிஜன் இல்லாத மண்ணால் மூடப்பட்டிருந்ததால் அந்தக் கட்டைப்படகு இந்நாள்வரை சிதைவுறவில்லை என்றும் தொல்பொருளாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். டிஸ்கவர் பத்திரிகையில் அறிக்கை செய்யப்பட்டபடி பிளாஸ்டிக் தாளில் மூடப்பட்டு கரைசேர்க்கப்பட்டு செயற்கை மெழுகு பூசப்பட்டு காக்கப்படும். “இது இந்த உலகில் ஒரு புனித நினைவுச் சின்னமாகிவிடக்கூடாது என்பதே எங்கள் விருப்பம்,” என்கிறார் இஸ்ரேல் தேசத்து தொல்பொருள் துறையின் தொல்பொருளாராய்ச்சியாளர் ஷெல்லி வாஷ்மன். என்றபோதிலும், அதைப் பார்க்க சமய யாத்திரிகர் திரளாக வர ஆரம்பித்து விட்டனர். இயேசு அற்புதமாக 5,000 பேரைப் போஷித்த பின்பு கலிலேயா கடலைக் கடக்க அவர் பயன்படுத்திய படகு இது என்று அவர்கள் நம்புகின்றனர். இந்தப் படகு உடைந்துபோகும் நிலையிலிருப்பதால் இதைத் தொட முடியாததைக் காணும் சிலர் வாஷ்மனின் கைகளைத் தொடும்படியாகச் சொல்கின்றனர், ஏனென்றால் அவர் அதைத் தொட்டவர்!
சுய-தோல்வி
போர் விமானங்கள் அண்மை ஆண்டுகளில் அவ்வளவு துரிதமாகியிருப்பதால் தொழில் நுட்பத்தில் மனிதர் வரம்புடையவர்களாகிவிட்டனர். முதல் உலக மகா யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள் 10 முதல் 15 அளவு மானிகளையும் கருவிகளையும் கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் கொண்டிருந்தன. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட விமானங்களில் இவை 35-ஆக உயர்ந்தது. இன்றைய விமானங்களில் இவை ஏறக்குறைய 300-ஆக இருக்கிறது. விமான ஓட்டி எல்லா தகவல்களையும் கணித்து செயல்படுத்துவது மட்டுமின்றி ஆபத்தான சூழ்நிலையில் நொடிப் பொழுதுத் தீர்மானங்களை எடுக்க வேண்டும். அத்துடன் இந்த விமானங்கள் அதிவேக செயல்களைச் செய்யக்கூடுமாதலால் விமான ஓட்டிக்கு பலத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு கடினமான திருப்பத்தைக் குறித்து தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் பின்வருமாறு கூறியது: “அப்படிப்பட்ட செயல்கள் கைகளிலுள்ள இரத்த நாளங்களை முறித்துவிடும், தற்காலிகமாக பார்வை இழக்கச் செய்திடும், தலையை நெஞ்சில் இடித்திடும், மூளையிலுள்ள இரத்தத்தை இழக்கச் செய்யும், மற்றும் தான் எப்பொழுதும் இருப்பதைவிட ஒன்பது மடங்கு அதிக எடையுள்ளவனாக உணரச் செய்யும். மிக மோசமான காரியம், அது மந்த நிலையை ஏற்படுத்தி ஒரு மோசமான விபத்தை உண்டாக்கக்கூடும்.” இந்த விதத்தில் அநேக விமான ஓட்டிகள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். (g86 11/22)