இளைஞர் கேட்கின்றனர். . .
மோகத்திலிருந்து நான் எவ்விதமாக விடுபடலாம்?
“என் உணர்ச்சிகளையெல்லாம் வெளியிட்டு அவனுக்கு நான் கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.” என்று அந்த இளம் பெண் சொல்லுகிறாள். “அவன் எவ்விதமாக உணருகிறான் என்பதாக நான் கேட்கும்போதெல்லாம் என்னிடம் அவனுக்கு எந்தவிதமான ஈடுபாடும் இல்லை என்பதாக அவன் எப்பொழுதும் மறுதலிக்கிறான். ஆனால் அவன் பார்க்கும் விதத்திலிருந்தும் நடந்துகொள்ளும் விதத்திலிருந்தும் இது உண்மையில்லை என்று என்னால் சொல்ல முடியும்.
மோகத்தின் கண்கட்டை அணிந்து கொண்டிருப்பவர் நிஜங்களை பார்ப்பதில்லை. இந்த இளைஞன் தனக்கு இதில் அக்கறை இல்லை என்பதைத் தெரிவிப்பதில் தயவாக இருக்க முயற்சி செய்து, இதில் கிறிஸ்தவ மூப்பர்களின் உதவியையுங்கூட பயன்படுத்திக் கொண்டான். ஆனால் அந்த இளம் பெண் இந்த மறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவன் எந்த உள்நோக்கமுமில்லாமல் சொன்ன வார்த்தைகளும் செயல்களும்கூட அவளிடமாக அவனுடைய அன்புக்கு மறைவான அடையாளமாக அவளுக்குத் தோன்றியது. இவ்விதமாக அவளுடைய கற்பனை வளர்ந்தது.
நீங்களும்கூட ஒரே விதமான உணர்ச்சிகளை அல்லது இன்னும் மோசமான உங்களுக்கு அவ்விதமான உணர்ச்சிகள் இருப்பதைக் கூட அறிந்திராத எவரோ ஒருவருடன் உறவு வைத்துக்கொள்ள ஏங்கிக் கொண்டிருக்கக்கூடும். அவனுடைய அல்லது அவளுடைய கவனத்தைக் கவர நீங்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்திருக்கலாம். உண்மையில் அவ்விதமாகச் செய்ய முயலுகையில் சங்கடமான நிலையிலும்கூட நீங்கள் உங்களை கண்டிருக்கலாம். என்றபோதிலும் எப்படியாவது காரியங்கள் மாறிவிடும் என்பதாக ஆவலோடு நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம்.
அப்படியானால், இது இளமைப் பருவத்துக்குரிய ஒரு மோக உணர்ச்சியின் அனுபவமாகவே இருக்கிறது. இது எவரோ ஒருவருடன் நியாயமாக அறிமுகமானதால் இல்லாமல், வெறும் கற்பனையைத் தானே அப்படியாகக் கொண்ட போலி அன்பாக இருக்கிறது. ஆம், இளைஞர்கள் மத்தியில், மோக உணர்ச்சி ஏற்படுவது அநேகமாக, வெகு தெளிவாகவே, கைக்கு எட்டாத நபரின்-மீதாக இருக்கிறது.a அதிர்ஸ்டவசமாக, முதிர்ச்சி ஏற்படுகையில், பெரும்பாலானவர்கள் இந்த உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டவர்களாகிவிடுகிறார்கள். ஆனால் சிலர் இந்த மோகத்தைத் துண்டித்துக் கொள்கையில், வேதனைத் தரும் பின்வாங்கல் நோய்குறிகளை அனுபவிக்கிறார்கள். இந்த வேதனையைத் தணிக்க ஏதாவது வழி இருக்கிறதா?
நீங்கள் தன்மையில் இல்லை
முதலாவதாக, தக்கவாறு கைமாறு செய்யப்படாத அன்பைக் காட்டிய அனுபவத்தில் நீங்களே முதலாவதாக இல்லை என்ற உண்மையில் ஆறுதலடையுங்கள். மிகப் பெரிய ஞானவானாக இருந்த சாலொமோன் ஒரு அழகான இஸ்ரவேல் பெண்ணை மிகவும் நேசித்தான். அவன் அவளை வருணித்து மிக அழகிய கவிதைகளைப் பாடினான். அவள், “சந்திரனைப் போல் அழகும் சூரியனைப் போல் பிரகாசமுமுள்ளவள்” என்று அவன் சொன்னான்-இவை எதற்கும் அவள் சிறிதும் அசையவில்லை.—உன்னதப்பாட்டு -6:10
ஆகவே உங்கள் வயதிலுள்ள மற்ற அநேகரும் உங்கள் பெற்றோரும் கூட அதே விதமான காரியத்தை அனுபவித்திருக்கிறார்கள். ஆகவே உங்களுடைய உணர்ச்சிகள் கட்டாயமாகவே அசாதாரணமானவை அல்ல. ஆனால் மோக உணர்ச்சி கொள்வது சாதாரணமாக இருந்தபோதிலும் அவை கைமீறி போய்விடவும் கூடும்.
உதாரணமாக, அம்னோன் என்ற பெயர் கொண்ட ஒரு வாலிபன், ஒரு இளம் பெண்ணிடமாக இப்படிப்பட்ட ஒரு ஏக்கத்தை வளர்த்துக்கொண்டதன் காரணமாக அவன் “வியாதிப்பட்டான்” என்று பைபிள் சொல்கிறது: (2 சாமுவேல் 13:1-14) இதே விதமாகவே, மோகங்கொண்டிருந்த ஒரு பெண், பின்வருமாறு சொன்னாள்: “என்னால் சாப்பிட முடிவதில்லை. . . என்னால் இனி படிக்க முடியாது, நான். . . பகலில் அவனைப் பற்றி கனவு காண்கிறேன். . .எனக்கு வேதனையாக இருக்கிறது.” ஆம் உங்கள் உடல் ஆரோக்கியமும் உணர்ச்சிப் பூர்வமான சுகநலமும் மோகத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்படக்கூடும். அப்படியென்றால், நிலைமையை எவ்விதமாக மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்?
நிஜங்களை எதிர்படுதல்
“தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்” என்று பைபிள் சொல்லுகிறது. (நீதிமொழிகள் 28:26) காதல் கற்பனையில் நீங்கள் சிக்கிக்கொண்டு விட்டீர்களேயானால் குறிப்பாக இது உண்மையாக இருக்கிறது. நீங்கள் உணர்ச்சிகளின் திரைகளை அணிந்துகொண்டு நீங்கள் பார்க்க விரும்புவதை மாத்திரமே பார்க்கிறீர்கள், என்றபோதிலும் நீதிமொழிகள் தொடர்ந்து சொல்லுகிறது: “ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.” அப்படியென்றால், காரியங்களை அவை இருக்கிற விதமாகவே பார்ப்பதை அர்த்தப்படுத்துகிறது.
“நியாயமான நம்பிக்கைக்கும் ஆதாரமில்லாத நம்பிக்கைக்கும் வித்தியாசத்தை நீங்கள் எவ்விதமாகச் சொல்ல முடியும்?” என்று டாக்டர் ஹோவார்ட் ஹால்பெர்ன் கேட்கிறார். “உண்மைகளை கவனமாகவும் உணர்ச்சிகளுக்கு இடம் தராமலும் உற்றுப் பார்ப்பதன் மூலம்.” இதைச் சிந்தித்துப் பாருங்கள் இந்த நபரோடு உண்மையான காதல் வளருவதற்கான வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது? அவனோ அல்லது அவளோ ஏற்கெனவே விவாகமானவரா? இப்படிப்பட்ட ஒருவரோடு காதல் கற்பனைகளில் ஈடுபடுவது வீணானதும் மிகவும் தவறானதுமாக இருக்கிறது. இவர் மிகவும் புகழ்பெற்ற ஒருவரா? அப்படியென்றால் இந்த நபரை நீங்கள் ஒருவேளை ஒருபோதும் சந்திக்கவும்கூட மாட்டீர்கள். காதல் வளருவதைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. ஆசிரியர் போன்ற வயதான ஒரு நபர் இதில் உட்பட்டவராக இருந்தாலும் கூட வாய்ப்பு மங்கலாகவே இருக்கிறது.
இதுவரை ஒரு நபர் உங்களில் அக்கறை காண்பிக்க தவறியிருந்தால், எதிர்காலத்தில் காரியங்கள் மாறிவிடும் என்று நம்புவதற்கு ஏதாவது உண்மையான ஒரு காரணமாயிருக்கிறதா? “இருதயம் திருக்குள்ளது” என்பதை நினைவில் கொள்ளுங்கள். (எரேமியா 17:9) உள்நோக்கம் எதுவுமில்லாத வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் அவை காதலீடுபாட்டை காண்பிப்பதாக பொருள்கொள்வது நம்மையே ஏமாற்றிக்கொள்வதற்கு சமமாக இருக்கிறது. தற்செயலாக, பெரும்பாலான தேசங்களில், ஆண்களே காதல் உணர்ச்சிகளை முதலாவதாக வெளிப்படுத்துவது பழக்கமாக இருக்கிறது. சற்றேனும் அக்கறையில்லாத ஒருவரை தானாகவே பின்தொடரும்போது ஓர் இளம் பெண் தன்னை அவமானப்படுத்திக்கொள்கிறாள்.
கடைசியாக ஓர் இளைஞனாக உங்கள் சொந்த வரையறைகளை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த நபர் உங்கள் அன்பை உண்மையில் ஏற்றுக்கொள்வாரேயானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? விவாகத்தின் அழுத்தங்களுக்கும் உத்தரவாதங்களுக்கும் நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இல்லையென்றால். கற்பனையிலே வாழ்ந்து கொண்டிருக்க மறுப்பதன் மூலம் “உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தை நீக்கிப்போடு” “சிநேகிக்க ஒரு காலமுண்டு,” உங்களுடைய விஷயத்தில் இது நீங்கள் இன்னும் வயதானவராக ஆகும்போது, பல வருடங்களுக்குப் பின்பாக இருக்கலாம்.-பிரசங்கி 11:10; 3:8.
உங்கள் உணர்ச்சிகளைப் பகுத்து ஆராய்தல்
“ஆனால் இப்பொழுது எனக்கிருக்கும் இந்த உணர்ச்சிகளைப் பற்றி என்ன?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். எதன் மீது மற்றும் எவ்விதமாக உணருகிறீர்கள் என்பதை கவனமாக ஆராய்ந்து பாருங்கள் உதாரணமாக டாக்டர் சார்லஸ் சாஸ்ட்ரோ இவ்விதமாகச் சொல்லுகிறார்: “ஒரு நபர் தான் எவர் மீது மோகங் கொண்டிருக்கிறாறோ அவரை ‘பரிபூரண காதலராக’ கருதும் போது தானே மோகம் ஏற்படுகிறது. அதாவது ஒரு துணைவரில் விரும்பப்படும் அனைத்து குணாதிசயங்களையும் அவர் கொண்டிருப்பதாக ஒரு நபர் முடிவுசெய்கிறார்” எங்குமே இல்லை “எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகிவிட்டோம்” என்று பைபிள் சொல்லுகிறது.-ரோமர் 3:23.
ஆகவே உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், என்னுடைய இதயத்தில் வைத்திருக்கும் இந்த நபரை நான் உண்மையில் எவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறேன்? என்னுடைய உணர்ச்சிகள், தெரிந்த விஷயங்களை அடிப்படையாக கொண்டிருக்கின்றனவா அல்லது மனதிலுள்ள ஒரு உருவத்தை நான் நேசிக்கிறேனா?” நான் ‘வெளித்தோற்றத்தின்படி காரியங்களைப் பார்க்கிறேனா?’ (2 கொரிந்தியர் 10:7) நான் இந்த நபரின் குறைகளைத் தெளிவாக பார்க்கிறேனா அல்லது அவைகளுக்கு கண்களை மூடிக்கொள்கிறேனா? உணர்ச்சிகளை ஒரு புறம் தள்ளிவிட்டு உங்கள் காதல் மயக்க நிலையை தெளிவிக்கக்கூடும்!
உங்கள் அன்பு எத்தகையது என்பதையும் கூட ஆராய்ந்து பாருங்கள். பைபிள் சொல்லுகிறது: “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை . . .தற்பொழிவை நாடாது.” (1 கொரிந்தியர் 13:4,5) உங்களுக்கிருக்கும் அன்பு இத்தகையதா? அல்லது அது “முதிர்ச்சியற்ற அன்பு” என்பதாக எழுத்தாளர் கேத்தி மக்காய் சொல்கிறார்: “முதிர்ச்சியற்ற அன்பு எந்த நேரமும் வந்து போகலாம். . . அங்கு முக்கியமாக இருப்பது நீங்களே, நேசிப்பது என்ற எண்ணத்தை நீங்கள் வெறுமென நேசிக்கிறீர்கள். . . முதிர்ச்சியற்ற அன்பு விடாது ஒட்டிக்கொள்வதாகவும் உரிமை பாராட்டுவதாகவும் பொறாமையுள்ளதாகவும் இருக்கிறது. . .முதிர்ச்சியற்ற அன்பு பரிபூரணத்தை எதிர்பார்க்கிறது.”
வெறும் கனவில் உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் விரயம் செய்திருப்பதை உணர்ந்துகொள்வது வேதனையாக இருக்கக்கூடும். என்றபோதிலும் டாக்டர் டேவிட் எல்கைன்ட் இந்தக் கருத்தைக் தெரிவிக்கிறார்: “தவறான குருத்துக்களிலிருந்து விடுபடுகையில் ஏற்படும் இந்த அதிர்ச்சிகள் இளைஞர்களுக்கு, உடல் கவர்ச்சிக்கும் தனிப்பட்ட இசைவு பொருத்தத்திற்குமிடையே உள்ள வித்தியாசத்தை காண உதவி செய்வதில் பயனுள்ள பாடங்களாக இருக்கக்கூடும்.”
அவனை/அவளை மறந்துவிடுதல்
உலகிலுள்ள எல்லா நியாயமான விளக்கங்களும் உங்கள் உணர்ச்சிகளை முழுவதுமாக துடைத்தழித்து விடுவதில்லை என்பதை ஒப்புக்கொள்ள முடிகிறது. ஆனால் மனதிலிருந்து கவனத்தை எடுத்துப் போட நீங்கள் செய்யக்கூடிய சில காரியங்கள் இருக்கின்றன. முதலாவதாக பிரச்னையை வளர்ப்பதைத் தவிர்த்திடுங்கள்! காதல் கதைகளை வாசிப்பது, டி.வி.-யில் காதல் கதைகளைப் பார்ப்பது, அல்லது வெறுமென ஒரு சில வகையான இசையைக் கேட்டுக்கொண்டிருப்பது உங்கள் தனிமை உணர்ச்சிகளை இன்னும் மோசமாக்கிவிடக்கூடும். ஆகவே அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்க மறுத்துவிடுங்கள்: “விறகில்லாமல் நெருப்பு அவியும்.”—நீதிமொழிகள் 26:20.
உண்மையான சில நட்புகளை வளர்த்துக்கொள்ள முயற்சிசெய்யுங்கள். கற்பனைக் காதல், உங்களை உண்மையில் நேசித்து, உங்கள் மீது அக்கறை செலுத்துகிறவர்களுக்கு மாற்றீடாக இருக்க முடியாது. ஆகவே உங்களை ‘பிரித்துக் கொள்ளாதீர்கள்’ (நீதிமொழிகள் 18:1) உங்களுடைய பெற்றோர், விசேஷமாக அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தால் உங்களுக்கு வெகு உதவியாக இருப்பதை நீங்கள் ஒருவேளை காண்பீர்கள். “என்னுடைய மோக உணர்ச்சிகளைப் பற்றி பேசுவதற்கு அவர்களே கடைசியானவர்களாக இருப்பார்கள்” என்று ஓர் இளைஞன் சொன்னான். ஆனால் உங்கள் உணர்ச்சிகளை எத்தனை பாடுபட்டு மறைத்துக்கொண்டாலும், ஒருவேளை ஏதோ ஒன்று உங்களை உறுத்திக்கொண்டிருப்பதை அவர்கள் ஏற்கெனவே தெரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களை அணுகி ஏன் அவர்களுக்கு ‘உங்கள் இருதயத்தைத் தர’க்கூடாது? நீதிமொழிகள் 23:26) கிறிஸ்தவ சபையிலுள்ள முதிர்ச்சியுள்ள ஓர் உறுப்பினரும் கூட நல்ல விதமாக செவிகொடுத்து கேட்கக்கூடும்.
பருவ வயது எழுத்தாளர் எஸ்தர் டேவிடோவிட்ஸ் மேலுமாகச் சொல்வது, “சுறுசுறுப்பாயிருங்கள்.” ஓய்வு நேர விருப்பார்வத் தொழில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள். பைபிள் ஆராய்ச்சி ஒன்றைச் செய்யுங்கள். பயனுள்ள வேலைகளில் முழு ஈடுபாடு கொள்ளும்போது, பின்வாங்கல் நோய்க்குறிகளைத் தணிக்க இது உதவியாக இருக்கும்.
மோக உணர்ச்சியிலிருந்து விடுபடுவது எளிதல்ல. ஆனால் காலப்போக்கில் வேதனை குறைந்துவிடும். உங்களையும் உங்கள் உணர்ச்சிகளையும் பற்றி நீங்கள் அதிகத்தைக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். ஒருவேளை இந்தப் பாடங்கள், மனவேதனையை உண்டுபண்ணும் மோக உணர்ச்சி அனுபவத்தின் வேதனைக்கு ஈடு செய்வதாக இருக்கும். (g87 1/22)
a [அடிக்குறிப்புகள்]
”இளைஞர் கேட்கின்றனர். . .அது வெறும் மோகம் என்று யார் சொல்வது?” என்ற ஜனவரி 1988 விழித்தெழு! பிரதியில் வெளிவந்துள்ள கட்டுரையைப் பார்க்கவும்.
[பக்கம் 10-ன் படம்]
சிலருக்கு மோகத்தைத் துண்டித்துக்கொள்வது வேதனையாக இருக்கிறது