ஆடைகள் உங்களுக்கு என்ன அர்த்தத்தை உடையதாக இருக்கின்றன?
“எனக்கு, ஆடைகள் வெப்பத்தையும், உடலை மூடும் துணியையும், செளகரியத்தையும் அர்த்தப்படுத்துகின்றன” என்று ஒரு பெண் பதிலளித்தாள்.
“அலங்கரிப்பு” என பிரதிபலித்தாள் மற்றொருத்தி.
“அவை எல்லாவற்றையும் அர்த்தப்படுத்துகின்றன,” என்று ஒருவர் சொன்னார். “ஏன், அவை இல்லாமல் வெளியே செல்லவோ அல்லது என்னுடைய வேலையைச் செய்யவோ என்னால் முடியாது.”
இரண்டு ஆட்கள் சரியாகவே ஒரே மாதிரியாக இல்லாதபடியால், உண்மையில், ஆடைகள் பற்றிய கருத்துக்கள் வேறுபடுகின்றன. ஆகவே, நீங்கள் ஆடைகளை எப்படிக் கருதுகிறீர்கள்? நீங்கள் என்ன உடுத்துகிறீர்கள் மற்றும் அதை எப்படி உடுத்துகிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் சிந்தனை செலுத்துகிறீர்களா? மற்றும் உங்களுடைய ஆடை உங்களைப் பற்றி என்ன சொல்லுகிறது?
உடலை மூடும் துணியைக் காட்டிலும் அதிகம்
ஆடைகளின் அடிப்படைச் செயல் உடலை மூடுவது என்பது சரியே. ஆனால் இந்த வரம்பிற்குள், வகைகளுக்கு முடிவில்லை. உதாரணமாக, இந்தியரின் ‘புடவை,’ ஜப்பானியரின் ‘கிமோனோ,’ ஹவாய் நாட்டவரின் ‘மூமூ,’ மற்றும் மத்திய கிழக்கிற்குரியவரின் ‘அபா’ எல்லாம் உடலை மூடுகின்றன, ஆனால் முற்றிலும் வித்தியாசமான வழிகளில். ஜெர்மானியரின் ‘ஹோம்புர்க்,’ ஃபிரான்ஸ் நாட்டவரின் ‘பெரெட்,’ மற்றும் அரேபியரின் ‘கஃப்பிஎ’ எல்லாம் மனிதனின் தலையை மூடுகின்றன, இருப்பினும் அவை ஒன்றிலிருந்து மற்றொன்று அதிக வித்தியாசமானவை. மர அடியுடைய பாதஅணி, செருப்பு மற்றும் பூட்ஸ் எல்லாம் பாதங்களை மூடுகின்றன, ஆனால் வித்தியாசமான வழிகளில். மேலும் எது அதிக செளகரியமாக இருக்கிறது என்று யார் கூறுவார்—ஸ்காட்லாந்து நாட்டவரின் இடுப்பிலிருந்து முழங்கால் வரை தொங்கும் ஆடை அல்லது அமெரிக்கரின் தளர்த்தியான கால் சட்டை?
நம்முடைய ஆடைகளைப் பற்றி நாம் எப்படி உணருகிறோம் என்பதில் அக்கறையில்லாதிருந்தாலும், அவை நம்மைக் குறித்தும் மற்றும் மற்றவர்களிடமான நம்முடைய உணர்வுகளைக் குறித்தும் அதிகத்தை வெளிபடுத்துகின்றன. நாம் ஒரு வார்த்தையேனும் சொல்லுவதற்கு முன், நம்முடைய உடைகள் நம்மைப்பற்றி ஏதேனும் சொல்லியிருக்கும். நாம் என்ன உடுத்துகிறோம் மற்றும் அதை எப்படி உடுத்துகிறோம் என்பதன் அடிப்படையில் மக்கள் நம்மை தீர்மானிக்கிறார்கள் மற்றும் பாகுபடுத்துகிறார்கள். உதாரணமாக, கந்தை ஆடை அணிந்த ஒரு பிச்சைக்காரன் மற்றும் ‘டக்சீடோ’ அணிந்த ஒரு மனிதன் இருவரும் தங்கள்மேல் ஆடைகளைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளிலும் மற்றும் அவர்கள் நடத்தப்படும் வழியிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
அதிகமதிகமாக, ஆடைகள் ஒருவருடைய வாழ்க்கை பாணியின் தெரிவு, அரசியல் சம்பந்தமான கருத்துக்கள், தேசீய அடையாளம் முதலியனவற்றைத் தெரிவிக்கும் கருவிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, சீனாவிலுள்ள ஸாங்காயில், அநேக பெண்கள் அதிகமான அலங்கரிப்பு, கால்களை வெளியில் காட்டும் ஆடைகள் மற்றும் மேற்கத்திய விவாக உடை ஆகியவற்றை விரும்புகிறார்கள்—கடந்த காலத்திலிருந்து ஒரு திட்டவட்டமான மாற்றம். மறுபட்சத்தில், சில மத்திய கிழக்கு நாடுகளில் மற்றும் மற்ற முகமதிய நாடுகளில், பெண்கள் பாரம்பரிய இஸ்லாமிய ஆடைகளுக்குத் திரும்புகிறார்கள்.
அதிகமாக தனிப்பட்ட விதத்திலும்கூட, எதை உடுத்துவது, எப்பொழுது மற்றும் எங்கே அதை உடுத்துவது என்பதில் தீர்மானங்கள் செய்யப்பட வேண்டும். டன்காரீஸ், அல்லது புளு ஜீன்ஸ், விவசாயம் செய்கையில் அல்லது வீட்டைச் சுற்றி வேலை செய்கையில் அல்லது தற்செயலான சந்தர்ப்பங்களில் உகந்ததாக இருக்கலாம், ஆனால் அவை முறைப்படியான சந்தர்ப்பங்களுக்கு, வியாபாரத்திற்கு, அல்லது வணக்கத்திற்கான கூட்டங்களுக்குத் தகுந்தவை அல்ல. உணவுப் பொருட்கள் வாங்க சந்தை கடைகளுக்குச் செல்லும்பொழுது நாம் வழக்கமாக எதை உடுத்துகிறோமோ அது நண்பர்களோடு மாலைவேளையைக் களிப்பதற்குச் செல்லுகையில் சரியானதாக இருக்காது. நவீன போக்குகளும் நாகரீகங்களும் “புதிய ஒழுக்கத்”தாலும் மற்றும் அது பிரதிபலிக்கும் வாழ்க்கை முறைகளாலும் அதிகமான செல்வாக்குச் செலுத்தப்படுவதனால், சில வகையான ஆடைகளைத் தெரிந்தெடுப்பதில் கவனமும் கூட செலுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொருவருக்கும், ஆண் அல்லது பெண், சிறுவர் அல்லது பெரியவர், உடுத்தும் சாத்தியங்களில் ஏராளமான உடைகள் அறிமுகத்திலிருக்கின்றன, தனிப்பட்ட விவேகத்தையும் மற்றும் ஆய்வையும் கேட்கிற ஒரு அக்கறையூட்டும் சவால் இருக்கிறது. நீங்கள் எதை உடுத்துகிறீர்கள் மற்றும் அதை எப்படி உடுத்துகிறீர்கள் என்பதற்கு நீங்கள் சரியான சிந்தனை செலுத்துகிறீர்களா? எதன் அடிப்படையில் நீங்கள் உங்களுடைய தெரிவுகளைச் செய்கிறீர்கள்? மற்றும் உங்களுடைய ஆடைகள் உங்களைப் பற்றி என்ன பிரதிபலிக்கின்றன?
தெரிவு செய்வதற்கான சவால்
“முன்பிருந்த தரத்திற்கான அக்கறை இப்பொழுது தயாரிப்பாளரின் அடையாள அட்டைக்கான மோகமாக மாறியிருக்கிறது” என்று பார்பரா டயமன்ஸ்டைன் வோக் பத்திரிகையில் சொல்லுகிறார். உண்மையில், பெரும்பாலான மக்களுக்கு, ஆடைக்காக தெரிவுகள் இனிமேலும் வெறுமென தரத்திற்காக, உட்படுத்தப்படும் வேலைக்கான மற்றும் தேவைக்கான விஷயமாக மட்டுமே இருப்பதில்லை. மாறாக, ஒரு தயாரிப்பாளரின் அல்லது மற்றவரின் கையெழுத்துகள் அல்லது அடையாளங்கள் குறிக்கப்பட்ட ஆடைகளை உடத்துவோமானால் அழகு, சமுதாய அந்தஸ்து, புகழ், மற்றும் மக்களின் நன்மதிப்பு கிடைக்கும் என்று வாக்கு கொடுக்கும் விளம்பரங்களால் நாம் எப்பொழுதும் தொல்லைப்படுத்தப்படுகிறோம்.
இப்படிப்பட்ட விளம்பரத்தின் ஏமாற்றமளிக்கிற உபாயங்களை எதிர்ப்பதற்கோ, அல்லது வாங்குவதற்குரிய ஒருவரின் சொந்த தூண்டுதலைக் கட்டுப்படுத்துவதற்கோ, மனோதிடமும் கட்டுப்பாடும் தேவைப்படுகிறது. “ஆ! தயங்காமல் இதை வாங்குங்கள். இது உங்களுக்கு மிகவும் பிரமாதமாக இருக்கிறது” என்ற யோசனைக்கு இடங்கொடாத நபர்கள் வெகு சிலரே. இத்தகைய வார்த்தைகள் நம்முடைய காதுகளுக்கு இனிமையாக இருந்தாலும், அவை நம்முடைய வரவு செலவு திட்டத்தில் சேதத்தையும் விளைவிக்கக்கூடும். ஒரு தீவிரமான விற்பனையாளரின் இச்சக வார்த்தைகளுக்கு நீங்கள் எளிதாக மயங்கிவிடுகிறீர்களா? அல்லது உங்களுக்கு உண்மையிலேயே தேவையில்லாத அல்லது வாங்க முடியாத ஒரு பொருளை வாங்குவதற்கான அழுத்தத்தை நீங்கள் எதிர்க்கக்கூடுமா? உங்களால் கூடுமானால், நீங்கள் பாராட்டுதலுக்குறியவர்கள்.
புதிய மற்றும் நாகரீகமான எதையேனும் ஒருவர் தெரிவு செய்யக்கூடாது என்று இது அர்த்தப்படுத்தாது. ஆனால் எச்சரிக்கையாக இருப்பது முக்கியமாக இருக்கிறது. நவீன நாளில் இருப்பவற்றால் அல்லது சகாக்களின் அழுத்தத்திற்கு இணங்கிபோவது மற்றும் ஏதோ ஒரு புதுமைப் போக்கால் கட்டுப்படுத்தப்படுவதைப் பார்க்கிலும் வயது, தோற்றம் மற்றும் வாழ்க்கை முறைக்கு இசைவாக உடுத்துவது எப்பொழுதும் ஒரு நல்ல கொள்கையாக இருக்கிறது. ஏதோ ஒரு புதுமைப் போக்கு “நாகரீக பாணி”யில் இருக்கிறது என்ற உண்மைதானே அது உங்களுக்குச் சரியாக இருக்கிறது என்று அர்த்தப்படுத்துவதில்லை. உதாரணமாக, ஆடவருக்குரிய தோற்றம், சில ‘ராக்’ இசைப் பாடகர்களால் சமீப காலத்தில் பிரபலப்படுத்தப்பட்டது, எதிர் பாலினரிடமிருந்து பின்பற்றப்பட்ட அலங்கரிப்பு, சிகை அலங்காரம், மற்றும் பழக்கங்கள் ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை மறைத்துவிடுகின்றன. ஒரு போக்கு சில குழுக்களிடையே பிரபலமானதாக இருக்கிறது என்பதன் காரணமாக அதைப் பின்பற்றுவது அறிவுள்ள காரியம் அல்ல. இந்த விஷயம் சம்பந்தமாக பைபிளில் உபாகமம் 22:5 என்ன விவரிக்கிறது என்பதை கவனிக்கவும்.
அடிப்படையாக, போக்கு என்பதை அகராதி விவரிப்பதாவது, அந்தப் பொருளைத்தாமே அர்த்தப்படுத்துவதைப் பார்க்கிலும் ஏதேனும் செய்யப்படும் அந்த வழியை அர்த்தப்படுத்துகிறது. உடுத்துதலில், ஒருவர் உடுத்தும் ஆடைகளின் வகையைப் பார்க்கிலும் இது ஒருவரின் ஒட்டுமொத்தமான தோற்றத்தைக் குறிக்கிறது. நவீன நாகரீகத்திலிருப்பவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவதைப் பார்க்கிலும் நல்ல ரசனை மற்றும் மிதத்தைப் பிரதிபலிக்கும் ஒரு தனிப்பட்ட பாங்கை வளர்த்துக்கொள்வது அதிக மதிப்புள்ளதாக இருக்கிறது.
பொருட்களை வாங்குதலில் விவேகம்
நல்ல ஆடைகளின் தொகுப்பு என்பது அதிக அளவிலான ஆடைகளைக் கொண்டிருப்பதோ அல்லது நவ நாகரீகத்திற்கு இணங்க இருப்பதோ அல்ல, ஆனால் கவனமாக பொருட்களை வாங்குதல் மற்றும் தேர்ந்தெடுத்தலின் விளைவாக இருக்கிறது. ஆகவே நீங்கள் கடைக்குச் செல்வதற்கு முன்பாக, நீங்கள் ஏற்கெனவே கொண்டிருக்கும் ஆடைகளை நன்கு கவனியுங்கள். ஒருவேளை நீங்கள் சில காலமாக உபயோகித்திராதவற்றை நீங்கள் மாற்றவோ அல்லது நீக்கிவிடவோ கூடும். நீங்கள் கொண்டிருக்கும் ஆடைகளைப் பரிசோதித்துப் பார்த்து புதிய தோற்றங்களை ஏற்படுத்துவதற்கு உங்களுடைய ஆடைகளின் வகைகளை எப்படி மாற்றலாம் என்று கண்டுபிடியுங்கள். இதைச் செய்வதானது உங்களுக்கு உண்மையிலேயே என்ன தேவை என்பதைத் தீர்மானிக்க உங்களை ஒரு மேம்பட்ட நிலையில் வைக்கும்.
நீங்கள் கடையில் பொருட்கள் வாங்கும்பொழுது, ஏற்கெனவே நீங்கள் கொண்டிருப்பவற்றோடு ஒரு புதிய வகை எப்படி ஒத்திருக்கும் என்பதற்குச் சிந்தனை செலுத்துங்கள். உங்களுடைய ஆடைகளின் நிறம் மற்றும் பாணி ஆகியவற்றோடு இசைவாக இருப்பவற்றைத் தேர்ந்தெடுங்கள். பாரம்பரிய பாணியிலான சாதாரண கோடுள்ள ஆடைகள் நல்ல முதலீடாக இருக்கின்றன. ஏனென்றால் அவை எல்லா சமயத்திற்கும் ஏற்றவையாகவும் மற்றும் நீண்ட காலம் நன்கு உழைப்பவையாகவும் இருக்கின்றன. மேலும் உதிரி ஆடைகளை அநேக மற்றும் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் ஏற்கெனவே உள்ள உங்கள் ஆடைத் தொகுப்புகளில் பெரும்பாலானவற்றை முழுமையாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட பழக்கங்கள் உங்களுடைய ஆடைகளை நீண்ட காலத்திற்கு அணிவதையும் மற்றும் அவற்றை அதிகமாக அனுபவிப்பதையும் சாத்தியமாக்குகிறது.
சரியான சமயத்தில் மற்றும் சரியான இடத்தில் பொருட்களை வாங்குதல் ஒரு பெரிய வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும். இது சிறிதளவு திட்டமிடுதலைத் தேவைப்படுத்துகிறது, இருப்பினும் பலன்களைப் பார்க்கையில் அது தகுதிவாய்ந்ததே. “ஏற்ற காலங்களில், ஆடைகள் தள்ளுபடி விற்பனையில் வரும் காலத்தில் மட்டுமே அவற்றை வாங்குவதில் நான் தீர்மானமாக இருப்பேன்” என்கிறாள் ஒரு பெண். ஆயினும், ஏதேனும் தள்ளுபடி விற்பனையில் இருக்கிறது என்ற உண்மைதானே அதை வாங்குவதற்குச் சிறந்ததாக ஆக்கிவிடாது. ஆகவே நல்ல தரமானவைகளைக் கொண்ட ஆடைகளை வாங்குவதில் கருத்தாய் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். “நான் விலை தள்ளுபடி உள்ள கடைகளை நாடுகிறேன் அல்லது மற்றவைகளில் பேரளவு தள்ளுபடி வரும்வரை காத்திருப்பேன்” என அவள் மேலும் சொல்லுகிறாள். “அந்த வழியில் நான் நல்ல தரமானவற்றை அடையவும் மற்றும் என்னுடைய வரவு செலவு திட்டத்திற்குள் இருக்கவும் முடிகிறது.”
சமநிலையைக் காத்துக்கொள்ளுதல்
ஒழுங்கற்ற தோற்றமானது அசட்டை மனப்பான்மையையும் மற்றும் சுய மரியாதை இல்லாமையையும், ஒருவர் மற்றவர்களில் என்ன பாதிப்பை உண்டுபண்ணுகிறார் என்பதில் அலட்சியத்தையும்கூட அறிவிக்கலாம். மறுபட்சத்தில், தீவிர நவ நாகரீக உணர்வை வெளிப்படுத்தும் பாணி சுயநலமுள்ள, தன்னையே விரும்பும் ஒரு தோற்றத்தை வெளிக்காட்டுகிறது. இவ்வாறாக, உள்ளெண்ணங்களைச் சோதித்தறிவது நல்லது. உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். நான் ஆடைகளின் பகட்டான காட்சியின் மூலம் மற்றவர்களைக் காட்டிலும் மேம்பட்டவனாகக் காட்சியளிக்க முயற்சி செய்கிறேனா? நான் ஆடைகளை உபயோகிப்பது மற்றவர்களோடு போட்டியிடுவதற்கா அல்லது அவர்களோடு சமனாக்கிக்கொள்ளவா? என்னுடைய ஆடைகள் காலம், இடம் மற்றும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாக இருக்கின்றனவா?
சந்தேகமில்லாமல், ஆடைகள் நம்மைக் குறித்து அநேகத்தைச் சொல்லுகின்றன. நாம் அடக்கமுள்ளவர்களாக அல்லது கர்வமுள்ளவர்களாக, மரியாதையுள்ளவர்களாக அல்லது அகந்தையுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை அவை சொல்லக்கூடும் ஆனால் நம்முடைய நல்ல ரசனை மற்றும் சுயமரியாதைக்கு அத்தாட்சியாக இருக்கக்கூடும், அல்லது அவை நாம் தற்புகழ்ச்சியாக மற்றும் அக்கறையில்லாதவர்களாக இருப்பதைக் காட்டிக்கொடுக்கலாம். ஆம், அவை நம்மைக் குறித்து முணுமுணுக்கவோ, பேசவோ அல்லது சப்தமிடவோகூடும். ஆகவே நம்முடைய ஆடைகளைத் தெரிந்தெடுப்பதில் சமநிலையைக் காத்துக்கொள்ளுதல் இன்றியமையாதது.
ஆடைகள் நம்முடைய உள்ளான ஆளின் வெளித்தோற்றம் மட்டுமே என்பதை மனதில் வைத்து, அடக்கமில்லாத அல்லது நவ நாகரீகங்களைத் தவிர்த்து, நம்முடைய ஆடைகள் ஏற்றதாகவும் மற்றும் கவனத்தைக் கவர்வதாகவும் இருக்க வேண்டும். நாம் எதை உடுத்துகிறோம் என்பதற்குச் சரியான கவனத்தைச் செலுத்துவோமேயானால், நம்முடைய ஆடைகள் நம்மைப் பற்றி நல்லதைப் பேசும். (g87 2/8)
[பக்கம் 27-ன் படம்]
ஆடைகளின் விவேகமுள்ள மற்றும் கண்ணைக் கவரும் பாணிகள் தேசத்திற்கு தேசம் வேறுபடுகின்றன
[பக்கம் 28-ன் பெட்டி]
தரமான ஆடைத் தொகுப்பிற்குத் தகவல்கள்
“ஓர் ஆடையின் தரமானது அது அணிவதற்கு நல்லதும், நல்ல பொருத்தத்தை உடையதாகவும் மற்றும் அநேக வருடங்கள் சலவை செய்த பிறகும் அதனுடைய தோற்றத்தைத் திரும்ப அடைந்திருப்பதையும் உறுதியளிக்கிறது” என்று ஹார்ட் ஸாஃப்னர் & மார்க்ஸ் க்ளோத்ஸ் என்ற நிறுவனத்தின் ஓர் உயரதிகாரி சொல்லுகிறார். ஒரு தரமான ஆடை தொகுப்பிற்கான சில தகவல்கள் இங்கு இருக்கின்றன.
◻தரத்திற்காக உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவை செலவு செய்யுங்கள்
◻நிறம், இழை மற்றும் பாணி ஆகியவற்றில் மட்டுக்கு மீறிய நவ நாகரீகத்தைத் தவிருங்கள்
◻நல்ல பொருத்தத்திற்காகவும் மற்றும் வேலைத் திறனுக்காகவும் வற்புறுத்திக் கேளுங்கள்
◻ஆடையின் நோக்கத்திற்கு இசைய ஆடை மற்றும் நிறத்தைத் தேர்ந்தெடுங்கள்
◻ஆடைகளைக் காற்றுபடும் விதத்தில் மேலே தொங்கவிடுங்கள், உபயோகித்தலுக்கு இடையே 24 மணிநேரம் ஓய்வு அனுமதியுங்கள்
◻தேவை ஏற்படும்பொழுது மட்டுமே ஆடைகளை சலவை செய்யுங்கள்; ஆலோசனைகளைக் கவனமாகப் பின்பற்றுங்கள்