இளைஞர் கேட்கின்றனர்
என்னுடைய உடைகளை நான் மேம்படுத்துவது எப்படி?
ராபர்ட்டுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! தன்னுடைய சகோதரியின் கல்யாணத்திற்குப் போகவேண்டும் ஆனால் உடுத்துக்கொண்டு போவதற்கு அவனுக்கு ஒன்றுமேயில்லை. “நிர்வாணமாக” என்று பைபிள் அழைக்கிற நிலையை ராபர்ட் அடைந்துவிட்டான் என்பதில்லை. (யாக்கோபு 2:15, NW) ஆனால் ராபர்ட் தினமும் அணியும் உடைகள் இந்த விசேஷ நிகழ்ச்சிக்கு ஏற்றவையாகவே இருக்காது.
இளம் பெண்ணாகிய ஏஞ்சலா, மூன்று தோழமை நிகழ்ச்சிகளுக்குப் போகவேண்டியிருக்கிறாள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெவ்வேறு பாணியில் உடுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. எனினும், ராபர்ட்டைப் போலல்லாமல், அணிவதற்குப் பொருத்தமான ஒன்றைத் தெரிந்தெடுப்பது அவளுக்கு அவ்வளவு கஷ்டமாக இல்லை. ஏஞ்சலா பணக்காரியாக இருக்கிறாள் என்பதல்ல. ஆனால் வெறுமனே பலவித சந்தர்ப்பங்களுக்கும் தகுந்தாற்போல் உடுத்துகிறமாதிரி அடிப்படை உடைகளை சேர்த்து வைத்திருக்கிறாள்.
உமன்ஸ் டே பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை சொன்னது: “உடைகள் முக்கியமானவை. நீங்கள் உங்களைப் பற்றியே நல்லவிதத்தில் உணர அவை அதிக பங்களிக்கமுடியும்.” நீங்கள் என்ன உடுத்துகிறீர்களோ அது, மற்றவர்கள் உங்களைப்பற்றி எவ்வாறு கருதுகிறார்கள், உங்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதன்பேரிலும் அதிக பாதிப்பைக் கொண்டிருக்கிறது. அப்படியானால், நல்ல காரணத்தோடுதான், நம்மை “தகுதியான வஸ்திரத்தினாலும், [அடக்க ஒடுக்கத்தோடும், NW] தெளிந்த புத்தியினாலும்,” அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என்று பைபிள் புத்திசொல்லுகிறது. (1 தீமோத்தேயு 2:10) நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பீர்களானால், தகுந்த உடைகளை வைத்திருப்பது உங்களுக்கு முக்கியமானதாக இருக்கவேண்டும்.
ஒருவேளை உடைகளை வைக்கும் அறை நிறைய உடைகளை வைத்துக்கொண்டு, ஆனால் போட்டுக்கொள்வதற்கு ஒன்றுமில்லையே என்று அவ்வப்போது நீங்கள் யோசிக்கிறீர்களா? பிரச்சினை என்ன? காரியங்களை நீங்கள் எவ்வாறு சரிசெய்யலாம்?
பாணியின் அதிக விலை
பெரும்பாலும் பணம் பிரச்சினையாக இருப்பதில்லை. ஆனால் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் இவ்வுலகத்தின் பாணிகளுக்கு அடிமைகளாகிவிடுவதன் விளைவே பிரச்சினையாக இருக்கிறது. “லேபில்களுக்காக துணிகளை வாங்க இளைஞர் எவ்வளவதிகம் பணத்தைச் செலவுசெய்வார்கள் என்பதை வியாபார உலகம் அறிந்திருக்கிறது,” என்று யூத்ட்ரென்ட்ஸ் என்ற புத்தகம் சொல்லுகிறது. பணப் பேராசையினால் ஆட்கொள்ளப்பட்ட ஆடை தயாரிப்புத் துறை, கணக்கில்லாமல் செலவழித்துக்கொண்டே இருக்கும்படி இளைஞரை ஈர்ப்பதற்காகக் கவர்ச்சிகரமான பத்திரிகையையும் டிவி விளம்பரங்களையும் உபயோகிக்கிறது! சகாக்களின் அழுத்தத்தால் இன்னும் உறுதிப்படுத்தப்பட்டு அந்தத் திட்டம் பலிக்கிறது. ஆசிரியர் ஒருவர் புலம்புகிறார்: “எல்லாரும் உடைகளில் அதிக பணத்தைக் கொட்டுகின்றனர்; செலவழிக்க வசதியற்ற பிள்ளைகளோ . . . டிசைனர் ஜீன்ஸ்களை வாங்குவதற்கென்றே பள்ளிநேரம் முடிந்ததும் வேலைக்குப் போகின்றனர்.”
பாணிக்கு அடிமையாக இருப்பது அதிக பணத்தைச் செலவழிக்க வைக்கிறது. ஆகவே உண்மையிலேயே உங்களுக்குத் தேவைப்படும் அதிக நடைமுறை பயனுள்ள உடைகளை வாங்க உங்களிடத்தில் பணம் இல்லாமல் போய்விடலாம். ஆகவேதான், “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், . . . உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்,” என்று சொல்கையில் ரோமர் 12:2 நல்ல புத்திமதியைக் கொடுக்கிறது. வித்தியாசமானவர்களாக தனித்து நிற்பது எப்பொழுதுமே சுலபமல்ல என்பது உண்மைதான். “பள்ளிக்கூடத்திலுள்ள பிள்ளைகளைப்போலவே உடுத்தவில்லையானால், அவர்கள் உங்களை ஏதோ விநோதமாகப் பார்க்கிறார்கள்,” என்று பதினாறு வயது ஷார்லின் ஒத்துக்கொள்கிறாள். எனினும், நீங்கள் செய்பவற்றின்மேல் மற்றவர்கள் அதிகாரம் செலுத்த இடங்கொடுத்தால், நீங்கள் அவர்களுடைய அடிமையாகிறீர்கள். (ரோமர் 6:16-ஐ ஒப்பிடுங்கள்.) “எப்பொழுது பார்த்தாலும் நான் மற்றவர்களுக்கென்றே உடை அணிந்திருப்பதைப் போல் உணர்கிறேன். அது எனக்கு எரிச்சலூட்டுகிறது,” என்று ஒரு இளம் பெண் ஜோஹேனா ஒத்துக்கொள்கிறாள்.
இது எப்பொழுதுமே ஞானமான காரியமாக இருக்கிறதா? எடுத்துக்காட்டாக, ஸ்ட்ரீட்-கேங்க், ஹிப்-ஹாப், மற்றும் “க்ரன்ஜ்” போன்ற உடை பாணிகளைப்பற்றி யோசித்துப் பாருங்கள். ஏதோ பிரபலமாக இருக்கின்றன என்பதற்காக மட்டுமே அநேகர் இந்தப் பாணிகளில் அணிகின்றனர். எனினும், அவை கோபத்தையும் எதிர்ப்பையும் தெட்டத்தெளிவாக வெளிக்காட்டுகின்றன. அவற்றை அணிவது உங்களைப்பற்றி தப்பான அபிப்பிராயத்தை மற்றவர்களுக்கு கொடுக்குமா? (யோவான் 15:19; ஒப்பிடுங்கள்: 2 கொரிந்தியர் 6:3, 4.) கேங்க் அங்கத்தினர் ஒருவரைப் போல தோன்றுவது நீங்கள் கொல்லப்படுவதற்கும் வழிநடத்தக்கூடும் என்பதை சொல்லவேண்டிய தேவையே இல்லை. ஆகவே, ஐ.மா. பள்ளிகளில் சில கேங்க் பாணிகளில் உடையணிவதற்குத் தடை விதித்திருக்கின்றன. இதன் படிப்பினை? உங்கள் உடைகளைத் தெரிந்தெடுக்கும்படி உங்களுடைய சகாக்களுக்கு இடமளிப்பது விவேகமற்றதாக இருக்கிறது, உங்களுடைய வாழ்க்கையில் அவர்களை ஆதிக்கம் செலுத்தவிடுவது அதைவிட விவேகமற்றதாக இருக்கிறது. அவர்களை எது சந்தோஷப்படுத்தும் என்று கவலைப்படுவதற்குப் பதிலாக, “கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பாருங்கள்”!—எபேசியர் 5:10.
உங்களுடைய தேவைகளைக் கருத்தில் கொள்ளுதல்
பாணிகளின் கொடும்பிடியில் இருந்து உங்களையே விடுவித்துக்கொண்டீர்கள் என்றால், பின்னர் உங்களுடைய உண்மையான தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய உடைகளைச் சேர்த்துவைக்க ஆரம்பியுங்கள். உதாரணமாக, உங்களுடைய நேரத்தில் அதிகத்தைப் பள்ளிக்கூடத்தில் செலவு செய்கிறீர்கள். உங்களுடைய பள்ளிக்கூடத்திற்கு சீருடை அணிந்து செல்வது அவசியமானால் அல்லது உடை அணிவதில் விதிமுறைகள் இருக்குமானால், நீங்கள் தெரிந்தெடுப்பதற்கு அதிகம் இருக்காது. ஆனால் அநேக பள்ளிகளில் தெரிந்துகொள்வது அனுமதிக்கப்படுகிறது, ஆகவே சாதாரணமான உடையணிவது வழக்கமாக இருக்கிறது.
அத்தகைய ஒரு சூழ்நிலையில், கோட்டு ஒன்றை மாட்டி, கழுத்தில் டையைக் கட்டி அல்லது பகட்டான ஒரு ஸ்கர்ட்டை அணிந்து மினுக்கிக்கொண்டு மற்றவர்கள் நடுவில் உங்களையே தனிப்படுத்திக் காண்பித்துக்கொள்வது ஞானமான காரியமாக இருக்காது. அதிநவீன பாணியிலோ அரைகுறையாகவோ இல்லாமல், சாதாரணமான உடைகளை அணிய விரும்புவீர்கள். மிலி என்ற பருவவயது பெண்ணொருத்தி அப்படித்தான் செய்தாள். பள்ளியில் இருக்கும்போது மட்டுக்குமீறிய பாணிகளைத் தவிர்த்தாள். உங்களுடைய நிலைமையும் அதைப்போன்று இருக்குமானால், அப்பெண் வைத்திருப்பது போலவே தொளதொளவென்றிருக்கும் ஒருசில சாதாரண கால்சட்டைகளும், கைசட்டைகளும் அல்லது பிளவுஸ்களும் உங்களிடத்தில் இருக்கவேண்டியது அவசியம். பணத் தட்டுப்பாடு இருக்குமானால், இந்த மாதிரி துணிகள் கொஞ்சமாக இருந்தாலே போதுமானது.—லூக்கா 10:42-ஐ ஒப்பிடுங்கள்.
உங்களுடைய பள்ளித் துணிமணிகளை ஓரளவான எண்ணிக்கையில் வைத்திருந்தால் தேவையான மற்ற உடைகள் வாங்குவதற்குப் போதுமான பணம் உங்கள் கைவசம் இருக்கும். உதாரணமாக, வீட்டிலிருந்து வெளியே சென்று வேலை செய்கிறீர்களா அல்லது அனுதின வீட்டுவேலைகள் செய்யவேண்டி இருக்கிறதா? அப்படியானால் நீடித்து உழைக்கக்கூடிய சில உறுதியான ஆடைகள் உங்களிடம் இருக்கவேண்டும். போட்டி விளையாட்டுகளுக்கும் மற்ற விளையாட்டுகளுக்கும் பொருத்தமான உடைகளும் தேவையாக இருக்கலாம். டிசைனர் அரைக்கால் சட்டைகள், டாப்ஸ், ஸ்நீக்கர்கள் போன்றவற்றை அணிவது பழக்கத்தில் இருந்தாலும், அவற்றைவிட மலிவாக கிடைக்கும் சில ஆடைகள் அவற்றிற்குச் சமமாக நீடித்துழைப்பதைக் காண்பீர்கள்.
யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருப்பீர்களானால், கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு அணிய பொருத்தமான உடைகளின் தேவைகளையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால் ஏனோதானோவென்று இருக்கும் உடைகள் வணக்கத்திற்கு ஒத்துவராதவையாக இருக்கின்றன. மேற்கத்திய பாணி உடைகளை அணியும் தேசங்களில், வாலிபப் பையன்கள் வழக்கமாக நேர்த்தியான பேண்ட்டும் சட்டையும் போட்டு, கழுத்தில் டை கட்டி, கோட்டு போட்டுக்கொள்கின்றனர். இளம் பெண்களோ பொதுவாக நேர்த்தியான உடைகளை அல்லது ஸ்கர்ட்டையும் சட்டையையும் அணிகின்றனர். அத்தகைய உடை வீட்டுக்குவீடு ஊழியத்திற்கும் அணியப்படுகிறது. அத்தகைய உடைகள் எத்தனை வாங்குவீர்கள் என்பது உங்களுடைய வரவுசெலவு திட்டத்தைப் பொருத்திருக்கும். சந்தோஷகரமாக, உங்களுடைய உடைகள் ஏராளமான எண்ணிக்கையிலோ அதிநவீன பாணியிலோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவை நேர்த்தியானவையாகவும் சுத்தமானவையாகவும் இருக்கவேண்டும்.
இயேசு கிறிஸ்து ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தார். நீங்களும்கூட ஏதாவதொரு தோழமை நிகழ்ச்சிக்கு வரும்படி அழைக்கப்படலாம். (யோவான் 2:1, 2) அப்படிப்பட்ட வைபவங்களுக்குச் சம்பிரதாய முறைப்படி உடைகளை அணிய வேண்டியிருந்தால், ஒருசில பொருத்தமான உடைகளை உங்கள் கைவசம் வைத்திருப்பது புத்தியுள்ள காரியமாக இருக்கும். “நான் நிகழ்ச்சிக்குப் பொருத்தமான உடையணிந்திராத சந்தர்ப்பங்கள் எனக்கு இருந்திருக்கின்றன, அது சந்தோஷகரமான சமயமாக இருந்ததில்லை,” என்று ஒப்புக்கொள்கிறாள் ஜோஹேனா. குறைந்தபட்சம் ஒரேவொரு நேர்த்தியான உடை வைத்திருப்பது கடைசிநேரத்தில் அடித்துப்பிடித்துச் சென்று வாங்கும் அழுத்தத்திலிருந்தும் செலவிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்.
விவரப் பட்டியலிடுதல்
நீங்கள் எழுத்தாளர் ஜீன் பேட்டன், துணியறைத் தணிக்கை (closet audit) என்றழைக்கும் தணிக்கையை நடத்தலாம். (கலர் டு கலர்) உங்களுடைய உடைகளையெல்லாம், வெவ்வேறு இடங்களில் சேர்த்து வைத்திருக்கும் துணிகள் உட்பட, வகைப்படுத்துங்கள். நீங்கள் மறந்தேபோய்விட்ட உடைகளை ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்கலாம். அதேசமயம், உங்களுக்குச் சிறியதாகிப் போய்விட்ட அல்லது உங்களுக்கு இனிமேலும் இஷ்டப்படாது என்றிருக்கும் உடைகளையெல்லாம் களைந்துவிடலாம்.
அடுத்ததாக, ஒரு விவரப் பட்டியலைத் தயாரியுங்கள். முக்கிய ஆடைகள் (கோட்டுகள், சூட்டுகள், மேலங்கிகள், ப்ளேஸர்கள், வித்தியாசமான பேண்ட்டுகளோடு அணியும் கோட்டுகள்) துணை ஆடைகள் (பிளவுஸ்கள், ஸ்வெட்டர்கள், நேர்த்தியான சட்டைகள்) மற்றும் கூடுதல் ஆடையணிகள் (ஸ்கார்ஃப்கள், பெல்ட்டுகள், கையுறைகள், தொப்பிகள், ஷூக்கள், கைப்பைகள், கழுத்து டைகள்) என்று அவற்றை வகைப்படுத்தலாம். நீங்கள் வைத்திருக்கும் உடைகளை முழுமையாக்க இன்னும் என்னென்ன பொருட்கள் தேவைப்படுகின்றன என்பதை அத்தகைய பட்டியல் உங்களுக்குத் தனிப்படுத்திக் காட்டுகிறது.
விவேகத்துடன் வாங்குதல்
சில தேசங்களில் புதிய உடை மிக விலையுயர்ந்ததாக இருக்கிறது. இளைஞர் தங்களிடம் இருக்கிற உடைகளை நன்கு பராமரித்து நியாயமான அளவு சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்கின்றனர். ஒருசில புதிய துணிகளை வாங்கக்கூடிய அளவு உங்களிடம் பணம் இருக்குமானால் அப்போது என்ன? ஜேனட் வால்லச், நடைமுறையான உடைகள் என்ற தனது ஆங்கிலப் புத்தகத்தில், “நன்கு திட்டமிட்டும் நோக்கத்தோடும் துணிகளை வாங்குவதன்மூலம் ஒரு பெண் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்,” என்று கூறுகிறார். வாலிபப் பையன்களும்கூட இவ்வாறு செய்யமுடியும். ஒருவேளை உங்களிடம் பணம் குறைவாக இருந்தால், நீங்கள் வாங்கக்கூடிய எதையுமே பலமுறை யோசித்துதான் வாங்கவேண்டும். (லூக்கா 14:28, 30-ஐ ஒப்பிடுங்கள்.) அப்படி செய்வதற்கு, வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலைக் குறைத்துவிட்டு, மிகவும் முக்கியமான பொருட்களை மட்டும் வாங்கவேண்டி இருக்கலாம். அடிக்கடி அணியும் துணிகளை வாங்க பெரும்பாலான பணத்தைச் செலவழியுங்கள் என்பதே நடைமுறை நியதியாக இருக்கிறது.
தி பெட்டர் பிசினஸ் பீரோ ஏ டு ஸட் பையிங் கைய்ட் இவ்வாறு ஆலோசனை கூறுகிறது: “உங்களுடைய உடைகளெல்லாம் கருநீலக்கலர், சாம்பல்கலர், கரும்சிவப்புக்கலர், கருப்புக்கலர் போன்ற ஒரு அடிப்படை கலரில் இருக்கிறமாதிரி வாங்குங்கள். முக்கிய உடைகளை இந்தமாதிரி கலர்களில் வாங்கிவிட்டு, இதோடு இணைந்துபோகக்கூடிய பளிச்சிடும் கலர்களில் சட்டைகளையும், பிளவுஸ்களையும், துணை ஆடைகளையும் வாங்குங்கள்.” நடுத்தரமான நிறத்திலுள்ள துணிகளின் பாணி நீண்டகாலத்திற்கு நீடித்திருக்கும். அடிப்படைக் கலர்களை முக்கியமாக வைத்துக்கொண்டு புதிய உடைகளை நீங்கள் மிக எளிதில் உண்டாக்கலாம்.
“விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருப்பான்,” என்று நீதிமொழிகள் 14:15 சொல்கிறது. ஆகவே நீங்கள் வாங்குவதைப் பற்றிய திட்டவட்டமான திட்டத்தை மனதில் வைத்திருப்பது, கடைசி நிமிஷத்தில், தோன்றுவதையெல்லாம் அதிக பணம்கொடுத்து வாங்குவதைத் தவிர்க்க உங்களுக்கு உதவலாம். “நான் வாங்கப் போகும்போதெல்லாம் வாங்குவதற்காக எழுதிவைத்த பட்டியலை எடுத்துக்கொண்டு போவதுண்டு,” என்கிறார் ஒரு இளம் பெண்மணி. அதிக எண்ணிக்கையில் வாங்குவதல்ல, ஆனால் நல்ல தரத்தில் துணிகளை வாங்குவதே நீடித்த பலனளிக்கிறது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். தரமான ஒரு உடை வருஷக்கணக்கில் உழைக்கும். “பருவவயதில் நான் போட்டுக்கொண்டிருந்த ஸ்வெட்டர்களை நான் இன்னமும் போடுகிறேன்,” என்று சொல்கிறார் ஒரு இளம் பெண். இருந்தபோதிலும், ஒரு வர்த்தகக் குறிதானே தரத்தைப்பற்றி உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்றவசியமில்லை. உடையைக் கவனமாக பார்த்து தரத்தைத் தீர்மானிப்பதே மிகச் சிறந்த வழியாகும். a
பாணியைப் பொருத்தளவில் மிதமாக இருங்கள். சிறந்த முறையில் தைத்த எளிய உடையோ ஆணின் சூட்டோ பெரும்பாலும் எப்பொழுதுமே பாணியாக நிலைத்திருக்கும். நவீன பாணிகளோ சிறிது காலத்திற்குப் பிரபலமாக இருந்துவிட்டு விரைவில் மறைந்துபோகின்றன. கன்ஸர்வேட்டிவ் ச்சிக் என்ற தனது புத்தகத்தில் அமில்யா ஃபேட் குறிப்பிடுகிறார்: “மிதமான பாணியில் உள்ள உடைகளை மற்றவற்றோடு சேர்ந்து அணிவது எளிது, அடுத்த வருடம் போட்டுக்கொள்ளுவதும் எளிது, ஆகவே அது ஒரு நல்ல முதலீடாக இருக்கிறது.”
உடைகளை வாங்குவதில் உங்களுடைய பெற்றோருக்குப் பலவருட அனுபவம் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய விருப்பங்களில் சில ஒரு தலைமுறை வித்தியாசமுள்ளவையாக இருக்கலாம். ஆனாலும் அடிப்படை உடைகளில் நீங்கள் உணருவதைவிட அதிகம் விருப்பப்படலாம். “எனக்கும் என் சகோதரிக்கும் உடையணிவதில் என்னுடைய அம்மா நல்ல ரசனையை வளர்த்துக்கொள்ள உதவிசெய்தார்கள்,” என்று நினைத்துப் பார்க்கிறாள் ஏஞ்சலா. நீங்கள் பொறுமையாய் இருந்தால் காலப்போக்கில், உங்களாலும் பொருத்தமான நடைமுறையான உடைகளை சேர்த்து வைக்க முடியலாம். ஒருவேளை ‘உடுத்துக்கொண்டு போவதற்கு ஒன்றுமேயில்லை!’ என்று மீண்டும் ஒருக்காலும் சொல்லவேண்டி இருக்காது.
[அடிக்குறிப்புகள்]
a “இளைஞர் கேட்கின்றனர் . . . பொருத்தமான உடைகளைத் தேர்ந்தெடுப்பதன் ரகசியம் என்ன?” என்ற கட்டுரையை எமது ஏப்ரல் 8, 1991, பிரதியில் பாருங்கள்.
முதலாவதாக உங்களிடம் ஏற்கெனவே இருப்பவற்றை விவரப் பட்டியலிடுங்கள்