கருச்சிதைவு—அறிவு உங்களுக்கு உத்தரவாதத்தைக் கொண்டுவருகிறது
ஒரு காரியம் சரி என்று நீங்கள் அறிந்திருக்கும் போது அதைக் குறித்து நீங்கள் எல்லா சமயத்திலும் பேசுகிறீர்களா? அப்படிச் செய்வது நல்லது, விசேஷமாக மற்றவர்களுடைய நலம் அதில் உட்பட்டிருக்கும்போது. இந்தப் பத்திரிகையில் முன்னொரு பிரதியில் கருச்சிதைவின் பேரில் வந்த ஒரு கட்டுரையை வாசித்த பின்பு இங்கிலாந்திலுள்ள ஒரு தாய் பின்வருமாறு எழுதினாள்:
“ஜுலை 22, [1986] ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் வெளிவந்த ‘பிறவா’ குழந்தையின் தாயிடமிருந்து வந்த கடிதத்தைப் படித்தேன்.
“கருச்சிதைவு அனுபவம் எனக்குக் கிடையாது, ஆனால் என்னுடைய முதல் குழந்தைக்கு கருவுற்று நான்கு மாதமாக இருக்கும்போது, என்னுடைய நாத்தினார் தன்னுடைய மூன்றாவது குழந்தைக்கு இரண்டு மாதமாக இருந்தாள். அவள் அந்தச் சமயத்தில்தானே தன்னுடைய இரண்டு சிறு பெண்பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்ததோடு ஒரு நல்ல உத்தியோகத்தையும் கண்டுபிடித்தாள். அவளுக்கு அநேக காரியங்கள் வேண்டியதாயிருந்தன: தரை நாற்காலி விரிப்புகள், தட்டுமுட்டு சாமான்கள், வீடியோக்கள், ஒரு புதிய கார், தோட்டத்திற்குச் செடிகள். ஆனால் ஒரு குழந்தை பிறந்தால் அந்த வேலைக்கு ஒரு முடிவும், இந்த அனைத்து காரியங்களையும் வாங்குவதற்கான வருமானத்துக்கு ஒரு முடிவும் வந்துவிடும். எனவே கருச்சிதைவு செய்துகொள்ள தீர்மானித்தாள்.
“கருச்சிதைவுக்கான தேதி நெருங்கியபோது அவளுக்குள் ஒரு தனி கிளர்ச்சி. ஆனால் எனக்கோ அந்த எண்ணம் ஒரு கசப்பு. அந்தச் சமயத்தில் என் குழந்தை எனக்குள்ளே உதைத்துக்கொண்டிருப்பதை உணர ஆரம்பித்தேன். அதே சமயத்தில் என்னுடைய நாத்தினாரின் கருவில் வளரும் குழந்தை குறித்தும் நான் யோசனை செய்வேன்.
“கருச்சிதைவு செய்யப்படும் அந்த நாள் வந்தது. மாலைவேளை. அவள் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள மாட்டாளா என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். அவளுடைய குழந்தை கருப்பையில் பாதுகாப்பாக இருந்துகொண்டு தாயின் இருதயத் துடிப்பைக் கேட்டுக் கொண்டிருப்பதை என் மனக்கண்களில் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. பின்பு அந்தக் குழந்தை அதன் பாதுகாப்பான உலகிலிருந்து கலைக்கப்பட்டு அழிக்கப்படுவதைக் குறித்து யோசிக்கும்போது என்னுடைய மனம் அல்லற்படுகிறது. அந்த யோசனைதானே என்னைக் கண்ணீர் சிந்த செய்கிறது. கருச்சிதைவு நிறைவேற்றப்பட்டது. என்னுடைய மகளுக்கோ ஏறக்குறைய ஒரே வயதில் ஒன்றாக வளர்ந்திருக்க வேண்டிய தன் தங்கையை அறிந்துகொள்ள வழியில்லை.
“என்னுடைய நாத்தினாரைப் பற்றியதென்ன? அவள் தன்னுடைய வேலையை இழந்தாள், ஆனால் இன்னொரு வேலையைக் கண்டுபிடித்தாள், இப்படியாக அதுமுதல் பல வேலைகளில் மாறினாள். அவளுக்கு வேண்டிய வீடியோக்கள், புதிய கார், புதிய செடிகள், புதிய துணிமணிகள் போன்றவையெல்லாம் கிடைத்தன, ஆனால் மனசோர்வில் ஒரு நிலைக்குள்ளானாள், சில நாட்களில் கணவனையும் பிள்ளைகளையும் விட்டு வீடு திரும்பினாள். ஆனால் அவள் சந்தோஷமாக இல்லை. அவள் என்னை சந்திக்க வரும்போது, அவளுடைய இரண்டு சிறிய பெண்பிள்ளைகளும் என்னுடைய மகளுடனும் 11 மாத மகனுடனும் விளையாடுவார்கள். அப்பொழுது என்னுடைய மகளைக் குறித்து, ‘அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள், அம்மா? எங்களுக்குங்கூட இவளைப்போல ஒரு சிறிய தங்கையோ அல்லது தம்பியோ இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,’ என்று சொல்லுவார்கள். இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது நான் அவளுடைய முகத்தைப் பார்ப்பேன். அவளுக்கு ஆதரவு சொல்லவேண்டும் போல் இருக்கும், ஏனென்றால் அவள் கருச்சிதைவு செய்துகொண்ட சமயத்தில் தான் செய்வதைக் குறித்து நன்றாக நிதானிக்கவில்லை, ஆனால் என்னுடைய நாத்தினார் தன்னுடைய குழந்தையின் உயிரைவிட பணத்தையே அதிகமாக மதித்தாள், இந்தக் காரணத்துக்காகவே அவள் இப்பொழுது வருத்தப்படுகிறாள் என்பதைக் காண்கிறேன்.
“என்றபோதிலும், இது என்னை நானே ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டுக்கொள்ளும்படி செய்கிறது. நான் இன்னும் முழுக்காட்டுதல் பெறாவிட்டாலும் நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று எண்ணிக்கொள்ளக்கூடும். ஆனால் நான் நெடுந்தூரம் செல்ல வேண்டியதாயிருக்கிறது. ஏனென்றால், உண்மையான சாட்சிகள் இயேசுவைப்போல, மற்றவர்கள் என்னவாக இருந்திருந்தாலும் அல்லது என்ன செய்திருந்தாலும், எல்லார் மீதும் அன்பும் பரிவும் காண்பிப்பவர்களாயிருக்கிறார்கள். ஒருவேளை நான் மதில்மேல் பூனைபோல் இல்லாமலிருந்திருந்தால், என்னுடைய நாத்தினாரிடம் சாட்சி கொடுக்கும் தைரியம் எனக்கு இருந்திருக்கும், அதனால் அந்தக் குழந்தையைப் பாதுகாத்திருக்க முடியும்.”
தொடர்ச்சியான இந்தக் கட்டுரைகள் அந்த நோக்கத்தை நிறைவேற்றும் என்பது விழித்தெழு! பத்திரிகையைப் பிரசுரிப்போரின் உள்ளார்ந்த நம்பிக்கை. (g87 4/8)