“உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது
“நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.” இவை தம்மைச் சேவிப்பதாக உரிமைப்பாராட்டிய, ஆனால் குற்றமற்ற இரத்தத்தைச் சிந்துவதில் உட்பட்டிருந்தவர்களைப் பார்த்து சர்வவல்லமையுள்ள கடவுள் சொன்ன வார்த்தைகள்.—ஏசாயா 1:15.
இந்த உலகத்தின் மதங்கள் குற்றமற்ற இரத்தத்தைச் சிந்திய குற்றமுடைய மதங்களாக இருக்கின்றனவா? ஆம், நிச்சயமாக. இந்த 20-ம் நூற்றாண்டில் ஒவ்வொரு போரிலும் இந்த உலக மதங்களும் அவற்றின் குருவர்க்கமும் இரத்தஞ்சிந்துதலை ஆதரித்திருக்கிறார்கள். இது ஒரே மதத்தைச் சார்ந்த ஆட்கள் ஒருவரையொருவர் பெரும் எண்ணிக்கையில் கொல்லுவதற்கு வழி வகுத்திருக்கிறது.
என்றபோதிலும் ‘பட்டயத்தை அதின் உறையிலே போட்டுவிடும்படியாக’ இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார். (மத்தேயு 26:52) அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு சொன்னான்: ‘எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயில்லை.’ (2 கொரிந்தியர் 10:4) உண்மை வணக்கத்தை அப்பியாசிப்பவர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும், இரத்தம் சிந்தக்கூடாது என்பதே கடவுளுடைய வார்த்தையின் வல்லமைவாய்ந்த செய்தி: “இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும், நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்க வேண்டாம்.”—1 யோவான் 3:10-12.
ஒரு மதம் இப்படிப்பட்ட அன்பை அப்பியாசிக்காமலிருந்தால், அதன் ஜெபங்களுக்குக் கடவுள் செவிகொடுக்க மாட்டார். பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்கிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறாம்.” (1 யோவான் 3:22) ஆனால் இந்த உலக மதங்கள் கடவுளுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் இந்நூற்றாண்டுப் போர்களிலே மட்டும் ஒவ்வொரு வாரமும் சுமார் பத்துகோடி மக்களைக் கொல்லுவதில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்!
தலைவர்களும் மக்களும் செவிசாய்ப்பார்களா?
அஸிஸியில் தான் ஆற்றிய நிறைவுப் பேச்சில் ஜான் பால் II பின்வருமாறு சொன்னார்: “சமாதானத்தின் தேவனை நோக்கி நாங்கள் ஏறெடுத்த எங்கள் தாழ்மையான விண்ணப்பத்திற்கு உலக தலைவர்கள் கவனம் செலுத்தும்படி அழைக்கிறோம்.” இந்த அழைப்புக்கு அரசியல் தலைவர்களும் மக்களும் செவிசாய்ப்பார்களா? இதைக் காண நாம் சரித்திரத்தைச் சற்று நோக்குவோமாக.
சமாதானத்துக்கான ஒப்பந்தங்களும் ஜெபங்களும் புதியவை அல்ல என்று சரித்திரம் காண்பிக்கிறது. இடைக்காலங்களில் சமாதான ஒப்பந்தங்கள் தேவ உடன்பாடுகள் அல்லது பரிசுத்த உடன்பாடுகள் என்று அழைக்கப்பட்டன. கிறிஸ்தவ மண்டலத்தின் பண்டிகைக் காலங்களின்போது அந்த உடன்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அந்தச் சமயங்களில் எல்லாப் போர்களும் நிறுத்தப்பட வேண்டும். அந்த உடன்பாடுகளை மீறியவர்கள் தங்கள் மதத்திலிருந்து விலக்கப்படுவார்கள் என்ற அச்சுறுத்தல் இருந்தபோதிலும் அவற்றிற்கு மனிதர்கள் மரியாதை காண்பிக்கும்படியாகச் செய்யவில்லை.
1915-ல் போப் பெனடிக்ட் XV, முதல் உலக மகா யுத்தத்தின் “மிருகத்தனமான படுகொலைக்கு” முடிவு கட்டும்படியாக தேசங்களுக்கு அறிக்கை விடுத்தார். “இந்தப் பொல்லாத வாதையின் நிறுத்தத்துக்காக” அவர் கடவுளிடம் ஜெபித்தார். ஆனால் தேசத்தலைவர்களும்சரி, மக்களும்சரி, இதற்கு செவிகொடுக்கவில்லை. தர்க்கரீதியாக கடவுளும் செவிகொடுக்கவில்லை, ஏனென்றால் போரில் ஈடுபட்ட இருதரப்பினரும் ஒரே மதத்தினராவர். இப்படியாக, கத்தோலிக்கர் கத்தோலிக்கரைக் கொன்றனர், புராட்டஸ்டான்டினர் புராட்டஸ்டான்டினரைக் கொன்றனர். இது கடவுளுடைய கற்பனைகளுக்கு முற்றிலும் முரணாக இருந்தது.
1939-ம் ஆண்டின் வசந்தத்தில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போர் மேகங்கள் திரண்டுவர ஆரம்பித்தன. பயஸ் XII “சமாதானத்துக்கான பொது ஜெபங்களுக்காக” ஏற்பாடு செய்தார். அதைப் பின்தொடர்ந்த ஆகஸ்ட் மாதத்தில், இரண்டாம் உலக மகா யுத்தம் துவங்குவதற்கு முன்னால், மோசமான விளைவுகளைத் தவிர்க்க “குற்றஞ்சாட்டுவதிலிருந்தும், அச்சுறுத்துவதிலிருந்தும் பரஸ்பர நம்பிக்கையின்மைக்கான காரணங்களிலிருந்தும்” விலகிநிற்கும்படியாக அவர் தேசத் தலைவர்களையும் மக்களையும் வேண்டிக்கொண்டார்.
ஆனால் அந்த ஜெபங்களும் வேண்டுதல்களும் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டான்ட் ஜெர்மனியின் போர் இயந்திரங்களை நிறுத்தவில்லை; அல்லது கத்தோலிக்க இத்தாலிக்கும் ஷின்டோ மத ஜப்பானுக்கும் சமாதான வழியைக் காண்பிப்பதாயில்லை. ஒரே மதத்தைச் சேர்ந்த மற்றவர்களைக் கொல்லுவதற்காக அந்த அங்கத்தினர்களை மதத்திலிருந்து விலக்கிவிடுவதாக இருந்த எந்தவித அச்சுறுத்தலும் செயல்படவில்லை. எனவே, சகோதரன் சகோதரனைக் கொல்லும் இந்தக் காரியம் ஒவ்வொரு தேசத்தின் மத குருவர்க்கத்தினரின் ஆதரவு பெற்ற நிலையில் ஆறு ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.
அஸிஸியில் போப் விடுத்த வேண்டுகோளுக்கு பிரதிபலிப்பாக அக்டோபர் 27, 1986 அன்று ஒரு சில இடங்களில் போர் நிறுத்தப்பட்டது. ஆனால் மற்ற தேசங்களில் அவை தொடர்ந்தன. அநேக சந்தர்ப்பங்களில் இந்நிலை அஸிஸியில் பிரதிநிதிகளாகக் கூடியவர்களின் நாடுகளிலேயே நிலைத்தது. உதாரணமாக, IRA-வை சேர்ந்த கத்தோலிக்க கொரில்லா போராளிகள் அயர்லாந்து மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தியாவில் சீக்கியர் போராடினர். அப்கானிஸ்தான், எத்தியோப்பியா, லெபனான், ஈரான் மற்றும் ஈராக் உட்பட மற்ற இடங்களிலும் இரத்தம் சிந்துதல் தொடர்ந்தது. அந்த ஒரு நாள் தற்காலிக போர் நிறுத்தம் இருந்த இடங்களிலுங்கூட மறுநாளே மரணமும் பயங்கரவாதமும் விதைக்கப்படலாயின. ஆம், அபூர்வ அமைதி!
கொல்லுவதை இன்று நிறுத்தி நாளை துவங்கும் காரியத்தை மறைமுகமாக அங்கீகரிக்கும் அந்த ஏற்பாடுகளை “சமாதானத்தின் தேவன்” ஆசீர்வதிக்கக்கூடுமா? ஆபேலைக் கொலை செய்த காயீனை கடவுள் பின்னால் அங்கீகரித்தாரா? நிச்சயமாக இல்லை!—எபிரெயர் 13:20.
சமாதானத்துக்கான சக்தி அல்ல
அநேக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றாய்வின்படி, உலக மதங்கள் சமாதானத்தை வளர்ப்பவர்களாக இருப்பதற்கு பதிலாக போரை ஊக்குவிப்பவர்களாக இருப்பதாகவே பெரும்பான்மையான மக்கள் கருதுகின்றனர். இப்படியாகத் தான் பிரஞ்சு மக்களில் 47 சதவிகிதத்தினரும் இஸ்ரேல் மக்களில் 48 சதவிகிதத்தினரும் உணருகின்றனர்.
சமாதானத்துக்கான உலக மத மகாநாட்டின் பொதுச் செயலாளர் ஜான் டெய்லர் பிரஞ்சு கத்தோலிக்க மாதாந்தர பத்திரிகையாகிய L’Actualite’ Religieuse dans le Monde என்பதில் பின்வருமாறு சொன்னார்: “மதங்கள் போர்களின்பேரில் வெளிச்சத்தையும் தர்மத்தையும் நிலைநாட்டும் என்றும், போருக்கும் போர்த் தளவாடங்களுக்கும் எதிரான சக்திகள் ஒன்று சேர்வதிலிருந்து நாம் அதிக நன்மை பெருவோம் என்றும் நினைத்துக்கொண்டிருந்ததில் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டோம். ஆனால் இந்தப் பிரச்னைகளை ஆராய்கையில், போர்கள் போர்த் தளவாடங்களால் ஏற்படுவதல்ல, ஆனால் மனிதர் மத்தியில் பகை, மற்றும் பிரிவினைகளாலேயே ஏற்படுகிறவை என்பதை நாம் படிப்படியாக உணர ஆரம்பித்தோம் . . . இந்த இடத்திலுங்கூட மதம் தன் பாகத்தைக் காண்கிறது.”
சரித்திராசிரியர் எர்னஸ்டோ கேலி டெல்லாலோகியா கத்தோலிக்க தினசரியாகிய அவ்வனிரில் இன்னும் அதிக குறிப்பாகக் கூறினதாவது: “மனிதரிலும் மக்களிலும் மதம் ஒற்றுமைபடுத்தும் ஓர் கட்டமைப்பை உருவாக்கியிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, எதிர்மாறானதையே உருவாக்கியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நிலைமை இப்படியாகத்தான் இருந்துவந்திருக்கிறது. ஒரே தெய்வ வழிபாடுடையவர்களாக உரிமைபாராட்டியிருக்கும் மிகப் பெரிய மதங்கள் போரில் ஒருவருக்கெதிராக ஒருவர் போரிட்டிருப்பது மட்டுமல்லாமல், அவர்களில் சிலர்—முக்கியமாக கிறிஸ்தவர்களும் முகமதியரும் நாகரீகமற்றவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் மதங்களை ஒழித்திட தங்கள் அனைத்து சக்தியையும் ஒப்புக்கொடுத்திருக்கின்றனர். இப்படிச் சம்பவித்திருப்பதற்குக் காரணம், மதமும் அரசியல் வல்லமையும் பணத்தின் இருபக்கங்கள்.”
இந்தக் காரணத்தினிமித்தமும், மற்ற சில காரணங்களினிமித்தமும் அரசாங்கங்கள் மதத்தலைவர்களை அசட்டை செய்துவிடுகின்றனர் அல்லது வேறுவழியில்லை என்று அவர்களைப் பொறுத்துக்கொள்கின்றனர். உலகப் பிரகாரமான மதம் ஒரு பகட்டான மேலங்கி போன்று மனிதன் மீதும் உலக நிலைமைகள் மீதும் எந்தவித நன்மையான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத நிலையிலிருக்கிறது.
அந்த ஜெப தினத்தின் முடிவில் போப் தாமே இரத்தஞ்சிந்துதலில் கத்தோலிக்கரின் பங்கை ஒப்புக்கொள்கிறவராயிருந்தார். அவர் சொன்னதாவது: “இந்த விசுவாச உடன்பாட்டிற்குக் கத்தோலிக்கர் எல்லா சமயத்திலும் உண்மையாக இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறேன்.” தொடர்ந்து கூறினார்: “நாங்கள் எல்லா சமயத்திலும் ‘சமாதானம் பண்ணுகிறவர்களாக’ இருந்ததில்லை. எனவே இந்த அஸிஸி நிகழ்ச்சி எங்களுக்கு, ஒரு விதத்தில் எல்லாருக்குமே ஒரு பிராயச்சித்தமாக இருக்கிறது.”
ஆனால் நவீன கால மதம் போரிடமாகத் தனது மனநிலையை மாற்றிவிட்டிருக்கிறது என்பதை தன்னுடைய செயல்களில் வெளிக்காட்டியிருக்கின்றதா? தன் கனவீனமான கடந்த காலச் செயல்களின்பேரில் உண்மையிலேயே மனந்திரும்பியிருக்கிறதா? இன்றைய போர்களைக் குறித்து பேசுபவராய் எர்னஸ்டோ கேல்வி லோகியா பின்வரும் காரியத்தைக் குறிப்பிட்டார்: “பத்தில் ஒன்பது முறை இந்தப் போர்கள் மதப்போர்களாகவும் இருக்கின்றன.”
இப்படியாக சமாதானத்துக்கான ஜெபங்கள் பயனற்றதாகிவிட்டன. அரசியல் தலைவர்களானாலுஞ்சரி, மக்களும்சரி, இருசாராரும் அவற்றிற்கு செவிகொடுப்பதுமில்லை, அவற்றின்படி செயல்படுவதுமில்லை. கடவுளும் செயல்படுவதில்லை, ஏனென்றால் அவர் சொன்னார்: “நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.” (ஏசாயா 1:15) எனவேதான் ஐக்கிய நாட்டு சங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டு இந்த உலக மதங்களின் ஜெபங்களால் ஆதரிக்கப்பட்ட 1986 சர்வதேச சமாதான ஆண்டு தோல்விகண்டது. (g87 6⁄8)
[பக்கம் 10-ன் பெட்டி]
இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சுற்றாய்வு
விழித்தெழு! பத்திரிகை இத்தாலியின் பல நகர்களில் ஒரு சுற்றாய்வை மேற்கொண்டது. இது சமயம் நூற்றுக்கணக்கான ஆட்களைப் பேட்டி கண்டது. இவர்களில் பெரும்பான்மையினர் கத்தோலிக்கர். சமாதானத்துக்கும் போர் நிறுத்தத்துக்குமான அஸிஸி ஜெப தினம் போன்ற ஏற்பாடுகள் போர்களையும் போராயுதங்களையும் நீக்கிடுவதற்கு உதவுமா என்று கேட்கப்பட்ட சமயத்தில், 70 சதவிகிதத்தினர் உதவாது என்றார்கள். 17 சதவிகிதத்தினர் அதை முதல் படி என்றார்கள், மற்றும் 10 சதவிகிதத்தினர் அதை நம்பிக்கைக்குரிய நடவடிக்கை என்றார்கள்.
வட இத்தாலி நகராகிய பெர்காமோவைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுரு ஒருவர் பின்வருமாறு சொன்னார்: “எடுக்கப்பட்ட நடவடிக்கையின் செய்தி எடுத்துரைக்கப்பட்டால் அது அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். தனியே விட்டுவிடப்படக்கூடாத ஒரு நல்ல ஆரம்பம்.”
ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த ஓர் இளம் கத்தோலிக்கப் பெண் பின்வருமாறு சொன்னாள்: “மத நம்பிக்கையின் காரணங்களுக்காக பல ஆண்டுகள் போர் செய்து வந்து, பின்பு தங்கள் ஆயுதங்களை இறக்கிவிட்டு உலக சமாதானத்துக்காக ஜெபிக்கும் ஆட்களின் மாய்மாலத்தனத்தைக் கண்டு ஒருவர் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது, ஏனென்றால் அடுத்த நாள் தாங்கள் போரைத் தொடருவார்கள் என்பதை முற்றிலும் அறிந்தவர்களாக அப்படிச் செய்கிறார்கள்.” பிரெஸியாவிலிருக்கும் ஓர் இளைஞன் சொல்வதாவது: “இப்படிப்பட்ட கூட்டங்கள் மத வேறுபாடுகளை மேற்கொள்ள உதவுவதில்லை. கடவுள் தங்களுக்கு செவிகொடுக்க விரும்பினால் சர்ச்சுகள் அரசியலில் அக்கறை காண்பிக்காதவையாக இருக்க வேண்டும்.”
“சமாதானத்துக்கு நன்கு உதவுவதற்கு மதங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்விக்கு டுரினிலுள்ள கத்தோலிக்கர் சொன்னதாவது: “சிக்கலான இவ்வுலகியல் காரியங்களிலிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டு போராயுதங்களின்றி வாழ மனிதருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.” கிரெமோனாவிலிருக்கும் ஓர் இளம் கிறிஸ்தவ பெண் குறிப்பிட்டாள்: “சர்ச், போர்களிலும் அரசியலிலும் ஈடுபடாதிருந்து ஒரு நல்ல முன்மாதிரியை வைத்திருக்க வேண்டும். ஆனால் இப்பொழுதோ காலம் கடந்துவிட்ட நிலை.”
“போப்பின் சமாதான முயற்சி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டதற்கு பெசரோ மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் பின்வருமாறு பதிலளித்தார்: “சமாதானப் பிரச்னையை சர்ச் தன்னுடைய இலட்சியத்திற்காக, உலகில் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்காகப் பயன்படுத்துகிறது. 84 வயது கத்தோலிக்க பெண்மணி பின்வருமாறு சொன்னாள்: “அதில் எந்த பயனும் கிடையாது. அவர்கள் போரை விரும்பினால், எப்படியாவது ஒன்றை ஆரம்பித்துவிடுவார்கள்.”
மதத்தின் “அரசியல் திட்டங்கள்” குறித்து இல் கூரியர் டெல்லா செரா என்ற மிலான் பிரசுரம் பின்வரும் குறிப்பைக் கொண்டிருந்தது: “சர்ச் போரொழிப்புக் கொள்கையை பயன்படுத்தி அந்தந்த சமயத்திற்கான பிரதான அரசியல் கேள்விகளின் பேரில் பொது மக்களின் கருத்து சார்ந்த விவாதங்களில் அடங்கியிருப்பதற்கு பதிலாக ஆதிக்கம் செலுத்துவதற்குத் தன்னை அனுமதிக்கும் காரியங்களைச் செய்ய முன்வருகிறது.” (g87 6⁄8)
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
உலகின் எல்லா பாகங்களையும் சேர்ந்த மக்களால் ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன
அநேக இளைஞர் உலக சமாதானத்தில் அக்கறையுடையவர்களாயிருக்கிறார்கள்