1914 முதற்கொண்டு இந்த உலகம்
பாகம் 7: 1960-1969 1960-கள்—கொந்தளிப்பான எதிர்ப்புகளின் ஒரு காலம்
மறைமுகப் போரின் இறுக்கங்களை விரைவில் தளர்த்திவிடலாம் என்ற எந்த நம்பிக்கையையும் அழித்துவிடும் வகையில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. அது அமெரிக்காவின் வேவு பார்க்கும் விமானமாக (U-2) இருந்தது. அது சோவியத்துக்கு 1960 மே 1-ம் தேதி அனுப்பப்பட்டிருந்தது.
சோவியத்தின் தலைவர் நிக்காட்டா குருசேவ் அமெரிக்கா இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இப்படிப்பட்ட சம்பவங்கள் இனிமேல் நேரிடாது என்று உறுதிதர வேண்டும் என்றும் வற்புறுத்தினார். ஜனாதிபதி ஐசன்ஹோவரின் பதிலில் திருப்தியடையாத அவர் மே 16-ம் தேதி பாரிஸில் திட்டமிடப்பட்டிருந்த கிழக்கு மேற்கு உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மறுப்பதன் மூலம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
1960-ம் ஆண்டுகளுக்கு இது நல்லதோர் ஆரம்பமாக இருக்கவில்லை. இது எதிர்க்கின்ற ஆவியை உடையவர்களாயும் ஆட்கள் எதிலும் இணங்கிப்போகத் திறமையற்றவர்களாயுமிருந்த அந்தத் தனித்தன்மை வாய்ந்த காலப்பகுதியின் மாதிரியாக இருந்தது.
அமைதியின் மத்தியிலும் மூன்று விதமான போர்கள்
மறைமுகப் போர் இன்னும் நடந்துகொண்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் இதற்குக் காரணமாக இருந்தன. 1961 ஆகஸ்ட் மாதம் சோவியத் நாட்டவர் பெர்லின் சுவரை அமைப்பதன் மூலம் மேற்கத்திய சுற்று கண்டங்களிலிருந்து பெர்லினில் அவர்களுடைய குடியிருப்புப் பகுதியைத் துண்டித்துக் கொண்டார்கள். ஓராண்டுக்குப் பின்னர், அவர்கள் க்யூபாவில் சோவியத் எறிபடைகளை நிறுவ முயன்றார்கள். அமெரிக்காவின் கடற்படை “தடுப்புக்காப்பு” அல்லது வழியடைப்பின் காரணமாக இது தோல்வியடைந்தது. செக்கோஸ்லவேக்கியாவில் மாணவர்களின் கிளர்ச்சி புதிய அரசாங்கம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது. ஆனால் அரசாங்க சீர்த்திருத்தங்கள் ப்ராக் வசந்த காலத்தை முழு அளவில் மலர்ச்சியுறும் கோடை காலமாக மாற்றி விடாதபடிக்கு 1968-ல் சோவியத் நாட்டவர் குறுக்கிட்டனர்.
மறைமுகப் போரின் குளிரினால் அவதியுற்றதோடுகூட, உலகமானது அதிக “இயல்பான” போரின் உஷ்ணத்தையும்கூட அனுபவித்தது. 1945—1959-க்கு இடைப்பட்ட காலத்தில் குறைந்த பட்சம் 54 சண்டைகள் ஆரம்பமாயிருந்தன. இப்பொழுது 1960-களில் காங்கோவின் போர், நைஜீரியாவின் உள்நாட்டுப் போர்கள், மத்திய கிழக்கின் ஆறுநாள் போர் மற்றும் வியட்நாம் போர் உட்பட இதோடு மற்றொரு 52 புதிய சண்டைகள் சேர்ந்துகொண்டன.a
ஆனால் 1960-கள் மூன்றாவது வகையான ஒரு போர் ஆரம்பமாவதைப் பார்த்தது. அந்தச் சமயம் வரையாக ஒப்பிடுகையில் உலகமானது, சமுதாய மற்றும் உள்நாடுகளின் மட்டத்தில் அமைதியாகவே இருந்தது. ஆனால் இப்பொழுதோ, போருக்குப் பிற்பட்ட கால சந்ததியினர் வளர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் பார்த்த உலகத்தை அவர்கள் விரும்பாததாலும் அதன் பிரச்னைகள் திறமையற்ற விதத்தில் கையாளப்படுவதாக நினைத்தாலும் அவர்கள் சொந்தமாக மற்றொரு வகையான போரில்—எதிர்ப்புகளின் ஒரு போரில் ஈடுபடலானார்கள்.
ஊர்வலத்தில் மாணவர்கள்
“அணுகுண்டை தடைசெய்” ஊர்வலங்கள் அநேக மைல்கள் நடந்து செல்லப்பட்டிருக்கின்றன. உண்மையில் எதிர்ப்பதற்குத் தகுதியுள்ளதாகக் கருதப்பட்டது எதுவாயிருப்பினும் அதற்காக ஊர்வலமும், மாணவர்கள் வேலை நிறுத்தமும், பொது இடங்களில் கண்டனம் தெரிவிக்கக் கூட்டங்களும், அல்லது சட்ட மறுப்பு செயல்களும் நியாயமானதாகக் கருதப்பட்டது. பெரும்பாலான இளைஞர்கள் குறைந்தபட்சம் கொள்கையளவிலாவது இப்புதிய போர் முறைக்கு ஆதரவு தெரிவித்தனர். 1968-ல் ஜெர்மானிய இளைஞர்களின் மத்தியில் செய்யப்பட்ட வாக்கெடுப்பு 67 சதவிகிதத்தினர் இதை ஆதரிப்பதைக் காண்பித்தது. இதன் காரணமாகவே, டெர் ஸ்பகல் என்ற ஜெர்மானிய செய்திப் பத்திரிக்கை பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: “ஊர்வலம் என்று வரும்போது, அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் இருதயங்களை மட்டுமல்ல, ஆனால் அவர்களுடைய கால்களையும் தேவையிருந்தால் அவர்களுடைய கைமுட்டிகளையும்கூடக் கொடுக்க மனமுள்ளவர்களக இருக்கிறார்கள்.”
1968-ல் ஈஸ்டர் வாரத்தின்போது 20 ஜெர்மானிய நகரங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற வகையில் ஆயிரக்கணக்கானோர் நடைபாதைத் தளத்தை அடித்து நொறுக்கியபோது இது காண்பிக்கப்பட்டது. இருவர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். இதற்கு ஓராண்டுக்கு முன்னால் ஈரானின் ஷாவுக்கும் அவனுடைய ஆட்சிக்கும் எதிராகச் செய்யப்பட்ட கிளர்ச்சிகளின் ஒரு இயல்பான விளைவாக இது இருந்தது. அந்தச் சமயத்தில் ஜூன் 2-ம் தேதி பெர்லினில், கிளர்ச்சி செய்தவர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். அநேகர் காயமுற்றனர்.
நல்ல காரணத்துடன்தானே ஆசிரியர் வில்லியம் பர்ரோஸ் 1968-ல் பின்வருமாறு சொன்னார்: “இளைய சமுதாயத்தினரின் கலகம் வரலாற்றில் இதற்கு முன் காணப்படாத உலகம் முழுதும் தழுவிய ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக இருக்கிறது.” அந்த வருடத்தில் மாணவர்கள் செய்த ஆர்ப்பாட்டம் பிரான்சில் ஒரு பொதுவான வேலை நிறுத்தத்துக்கு வழிநடத்தியது. இது ஏறக்குறைய டி காலின் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டது. பத்தாண்டின் துவக்கத்தில், மாணவர்கள் செய்த கிளர்ச்சி தென் கொரியாவின் அரசாங்கத்தை உண்மையில் கவிழ்த்துவிட்டது. இதில் 200 உயிர்கள் இழக்கப்பட்டது. ஜப்பானில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களைக் குறித்து, 1968 வெல்ட்பனோராமா சொல்வதாவது: “ஜப்பான் அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் வித்தியாசப்பட்டதாக இல்லை. மிஞ்சிப் போனால், ஜப்பானிய மாணவர்கள் பெர்க்கிலி, பாரிஸ் மற்றும் ஃபரான்ங்பர்ட்டிலுள்ள அவர்களுடைய சக மாணவர்களைவிட ஓரளவு அதிகக் கற்பனையாற்றல் படைத்தவர்களாகவே இருக்கிறார்கள்.”
“அன்பு செலுத்துங்கள், போர் வேண்டாம்”
இந்த எதிர்ப்புகள் அனைத்தும் பொதுவாகப் போரை எதிர்க்கும் வகையிலும், குறிப்பாக வியட்நாம் போரை எதிர்க்கும் வகையிலும் நடத்தப்பட்டன. 1946-ல் இந்தோசீனாவில் பிரெஞ்சு குடியேற்ற அரசுக்கு எதிராகச் சுதந்திரப் போராட்டம் ஆரம்பமானது. வியட்நாம் இதன் ஒரு பாகமாக இருந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பின், போர் நிறுத்த ஒப்பந்தம் தேசத்தை இரண்டாகப் பிரித்தது. அதை ஒன்று சேர்க்க புதிதாகத் தேர்தல் நடத்தப்படும் வரையாக இது ஒரு தற்காலிகமான ஏற்பாடாக இருந்தது. ஒரு பகுதி கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழும் மற்றொன்று கம்யூனிஸ்ட் அல்லாத ஆட்சியின் கீழும் வந்தது. ஜெர்மனி மற்றும் கொரியாவில் நடந்தது போலவே வல்லரசுகள் அரசியலுக்கு உகந்த எல்லையின் குறுக்கே நடைப்பெற்ற மறைமுகப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன.b
மறைமுகப் போர் கடைசியாக வியட்நாமில் நேர்முகப் போராகவே மாறியது. முதலில் அமெரிக்கா தெற்கு வியட்நாமுக்கு இராணுவ உதவியை மாத்திரமே அளித்து வந்தது. ஆனால் 1960-ல் அது படைப் பிரிவுகளை அனுப்ப ஆரம்பித்து, பத்தாண்டு முடிவுக்குள் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையை அது எட்டிவிட்டது. போரானது குணமாக மறுத்த ஒரு சீழ்கொண்ட வெம்புண்ணைப் போல ஆனது. “[1965-ல்] மே மாதம் [அமெரிக்காவில்] ஒரு வகுப்புக்குச் சென்றிருந்த பன்னிரண்டாயிரம் மாணவர்கள், அதைப் போர் எதிர்ப்பு பேரணியாக மாற்றி, மீதமிருந்த பத்தாண்டுகளைத் தனிப்படுத்திக் காண்பித்த, பெரிய அளவு கல்லூரி வளாக போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு மாதிரியை வைத்தார்கள்” என்கிறார் சார்ல்ஸ் R. மாரிஸ் அவர் எழுதிய தி டைம் ஆப் பாஷன்—அமெரிக்கா 1960-1980 என்ற புத்தகத்தில். தங்களுடைய நிலைநிற்கையை ஆணித்தரமாக எடுத்துச்சொல்ல ஆயிரக்கணக்கான வாலிபர் தங்கள் காசோலை அட்டைகளை எரித்தனர். இன்னும் சிலர், இதற்கு மிஞ்சி சென்று, “போரை எதிர்க்கின்ற வகையில் எல்லோர் முன்னிலையிலும் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட” இரண்டு வாலிபர்களின் உதாரணங்களை மாரிஸ் தருகிறார்.
“நான் கனா காண்கிறேன்”
எதிர்ப்பின் போரில் மாணவர்கள் முன்நின்று செயல்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் மட்டுமே இதைச் செய்துகொண்டில்லை. உதாரணமாக, அமெரிக்காவின் மக்கள் உரிமை இயக்கத்துக்கு அதன் தென் பாப்டிஸ்ட் பிரசங்கியாகிய மார்டின் லூதர் கிங் Jr. தலைமையில் எல்லா வயதுகளிலுமிருந்த கறுப்பர்களும் வெள்ளையர்களும் ஆதரவாக இருந்தனர். 1963-ல் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் வாஷிங்டனில் அணிவகுத்துச் சென்றனர். இங்கே “நான் ஒரு கனா காண்கிறேன்” என்ற ஒரு பேச்சைக் கொடுத்து கிங் அவர்களை ஊக்குவித்தார்.
இதில் ஓரளவு வெற்றி கிட்டியது. “இந்த நூற்றாண்டின் முக்கியமான மனித உரிமை சட்டங்களை ஏற்படுத்துவதன்” மூலம் அமெரிக்க காங்கிரஸ் பிரதிபலித்தது. 1964 நோபெல் சமாதானப் பரிசு கிங்க்கு அளிக்கப்பட்டபோது, அது அவருடைய சொந்த வெற்றியாக இருந்தது.
எல்லோரும் அவரவரின் சொந்த காரியத்தையே செய்கின்றனர்
இளைய சமுதாயத்தினர், அதனுடைய வழக்கமான உடையையும் சிகை அலங்காரத்தையும் தள்ளிவிடுவதன் மூலம் இந்த அமைப்பைத் தாங்கள் எதிர்ப்பதைக் காண்பித்தனர். “1957-ல் லண்டனில் கார்ன்பி தெருவில் ஆரம்பமான நாகரீகப் புரட்சி, 1960-களின், கட்டுப்பாடற்ற இளைஞர்கள் விரும்புகின்ற, மற்றும் வழக்கமான பாணிகளை எதிர்க்கின்ற நிலைக்கு வழிநடத்தியது” என்பதாக தி நியு என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறது. அநேகப் பெண்கள் குட்டைப்பாவாடையையும், உணர்ச்சிகளைத் தூண்டுகிற கால் சட்டைகளையும் விரும்பி அணிந்தனர்; ஆண்கள் தாடிகளையும் நீளமான மயிரையும் வளர்த்துக் கொண்டனர்; இருபாலாருமே, பின்னால் ஹிப்பித் தோற்றம் என்றழைக்கப்பட்ட இருபாலாருக்கும் பொதுவான பாணிகளையும் பொதுவாக பரட்டைத் தலையில் காட்சியளிப்பதயுமே விரும்பினர்.
அந்நாளைய இசையும்கூட போதை மருந்துகளின் உபயோகத்தை உற்சாகப்படுத்திக் கட்டுப்பாடற்ற பாலுறவையும் ஆண்புணர்ச்சியையும் உயர்த்திக் காண்பிப்பதன் மூலம் எதிர்ப்பின் ஆவியை ஊக்குவித்தது. ராக் நட்சத்திரங்களும் பாப் இசைப் பாடகர்களும் வழிப்பாட்டுக்குரியவர்களாகி நாகரீகத்தையும் நடத்தையையும் கட்டளையிடுகிறவர்களானார்கள். விவாகம் செய்யாமல் ஒன்றாகக் கூடிவாழ்தல் பிரபலமானது. முன்னோரு காலத்தில் ஏற்கப்படாத இதுவும், மற்ற வாழ்க்கை பாணிகளும் ஏற்கப்படக்கூடிய மாற்றீடுகளாகக் கருதப்பட்டன. இவை அனைத்துமே 1970 மற்றும் 1980-களில் அதன் அவலமானக் கனிகளை அறுவடை செய்ய இருந்தன.
அகியார்னமென்டோவும் “ஜீஸஸ் ஆட்களும்”
“ரோமன் கத்தோலிக்க கோட்பாடுகளையும் நிறுவனங்களையும் காலத்துக்கு ஏற்ற நிலைக்குக் கொணரவும் அல்லது நவீன மயமாக்கவும் வேண்டும் என்ற 1962-1965-ன் இரண்டாவது வத்திகன் குழுவின் இலக்குகளில் ஒன்றைச் செயல்படுத்துவது” அகியார்னமென்டோவுக்கு ஒரு அகராதி தரும் விளக்கமாக இருக்கிறது. சர்ச்சானது பழம் பாணியில் இருப்பதாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை வலிமையற்றதாக்கவும், சர்ச்சின் போதகங்களையும் பழக்க வழக்கங்களையும் பகிரங்கமாக எதிர்க்கும் மனச்சாய்வு வளர்ந்து வருவதை ஈடுகட்டவுமே போப் பால் XXIII இந்த முயற்சியில் இறங்கினார். இதில் முக்கிய கத்தோலிக்க குருமாரும்கூட அடங்குவர். உதாரணமாக, ஜெர்மன் இறைமை நூலர் ஹான்ஸ் கங் அவர் ஏற்றுக்கொள்ளாதக் கருத்துக்களைத் தெளிவுபடுத்த ரோமுக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அவர் போக மறுத்துவிட்டார்.
மதசம்பந்தமான எதிர்ப்பின் ஆவி பழக்கப்பட்ட மதத்தைத் திருத்தி அமைக்கச் செய்யப்பட்ட முயற்சிகளோடு நின்றுவிடவில்லை. அநேக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க இளைஞர்கள், இந்தத் தொகுதிகளை ஒட்டுமொத்தமாக வெறுத்து ஒதுக்கி புதிய பிரிவுகளிடமாக அல்லது ஆசியதத்துவங்களிடமாகத் திரும்பினர். தெய்வீக வெளிச்சம் மிஷன், ஹரே கிருஷ்ணா மற்றும் கடவுளின் பிள்ளைகள் போன்ற தொகுதிகள் 1960-களில் ஆரம்பமாகி பிரபலமாயின.
எதிர்ப்பிலிருந்து வன்முறைக்கும் பயங்கரவாதத்துக்கும்
எதிர்ப்பின் ஆவி உலகம் முழுவதிலும் அதிகாரத்துக்கு—பெற்றோர், கல்வி, அரசாங்கம் மற்றும் மதசம்பந்தமான அதிகாரத்துக்கு மரியாதை காண்பிப்பதில் ஏற்பட்ட சீர்குலைவில் விளங்கியது. அடிக்கடி வன்முறைக்கு வழிநடத்திய ஒரு ஆவியை அது பேணி வளர்த்தது. 1914 முதற்கொண்டு போர்களத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ இதற்கு குறைவே இருக்கவில்லை.
வன்முறை நிறைந்த 1960-களை வேறுபடுத்திக் காண்பித்த சம்பவங்கள் சிலவற்றை நினைவுபடுத்திப் பாருங்கள்: ஆப்பிரிக்க தேசாபிமானத்துக்குக் காங்கோவில் அடையாளமாக இருந்த பாட்ரிஸ் லம்பம்பாவும் தென் ஆப்பிரிக்க பிரதம மந்திரி ஹென்ரிக் F. வெர்வோர்டும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள்; வியட்நாம் குடியரசின் தலைவர் நிகோ தின் தீம் ஒரு அரசியல் புரட்சியின்போது கொல்லப்பட்டார். அமெரிக்கா ஐந்துக்கும் குறைவான ஆண்டுகளுக்குள் மூன்று தலைவர்களைக் கொலையாளியின் துப்பாக்கிக்குப் பலிகொடுத்தது: ஜனாதிபதி ஜான் F. கென்னடி, மனித உரிமைகள் தலைவர் மார்டின் லூதர் கிங் மற்றும் சட்ட மாமன்ற மேலவை உறுப்பினர் ராபர்ட் F. கென்னடி.
இப்படியாக அதிகாரத்துக்குப் பணிய மறுத்து, கிளர்ச்சியின் இலக்குளை முயன்று பெற வன்முறையை உபயோகிப்பதிலிருந்து பின்வாங்காதிருந்தது பயங்கரவாதத்துக்கு ஒரு அஸ்திபாரத்தைப் போட உதவியது. உண்மையில் நவீன பயங்கரவாதம் 1968-ல் “கடந்த உலகப் போருக்குப் பின் பிறந்த சந்ததி சமுதாயத்தின் மீது போர் தொடுக்க ஆரம்பித்த வருடத்தில்” ஆரம்பமானது என்பதாக ஆசிரியரும் அரசியல் ஆய்வாளருமான க்ளேர் ஸ்டர்லிங் சொல்கிறார்.
உதவிக்காக வானங்களை நோக்கியிருந்தல்
பூமியின் மீதுள்ள பிரச்னைகளை மேற்கொள்வதற்கு வானங்களை வென்று கீழ்ப்படுத்துவது உதவக்கூடுமா? சிலர் அவ்விதமாக நினைத்ததாகத் தெரிகிறது. மறைமுகப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிழக்கும் மேற்கும் அவைகளிடையே தலைமைப் பதவிப் போட்டி தீவிரமாக, விண்வெளி ஆராய்ச்சி தொடர்ந்து முன்னேறி வந்தது. 1961-ல் சோவியத், பூமியைச் சுற்றிவர முதல் மனிதனை அனுப்பியது முதற்கொண்டு 1969-ல் அமெரிக்கா முதல் மனிதனைச் சந்திரனில் இறங்கும்படியாகச் செய்ததுவரை, உலகமானது அடுத்தடுத்து பல விண்வெளிச் சாதனைகளால் திகைத்து நின்றது.
பத்தாண்டு அதன் முடிவை நெருங்கியபோது காலியர்ஸ் 1970 வருடாந்தர புத்தகம் பின்வருமாறு குறிப்பிட்டது: “மனிதன் முதல் முதலாகச் சந்திரனில் அடியெடுத்து வைத்த வருடமாகிய 1969, இந்த கிரகம் சோதிடத்தில் இதுவரையாக அறிந்திராத மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்ட வருடமாகவும்கூட இருக்கிறது. சகோதரத்துவம் பூமியின் மீது எங்கும் பரவியிருக்கும். இந்தக் கும்பராசியின் சகாப்தத்தை நாம் ஒருவேளை பார்க்கக்கூடும், அல்லது பார்க்காமலும் இருக்கலாம்.”c
அதிமதிகமான ஆட்கள் உதவிக்காக வானங்களை நோக்கியிருந்ததாகத் தெரிகிறது. பூமியின் துணைக்கோள்களைக் கோள்வீதியில் செலுத்தியது, கண்டங்களிடையே உடனடியாகப் பேச்சுத் தொடர்பு கொள்வதை சாத்தியமாக்கி, அந்த அளவு சொல்லர்த்தமான வானங்கள் தேசங்களை நெருங்கிவரவும் செய்தன. ஆனால் அவை உலகப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் அவற்றை நெருங்கிவரச் செய்யவில்லை. தேசங்கள் எப்போதும்போல ஓட்டாமலே, இன்னும் “இணங்காதவர்களாகவே” இருந்தன.—2 தீமோத்தேயு 3:1-3.
ஏன்? ஏனென்றால் 1960-களின் எதிர்க்கின்ற ஆவியின் இயல்பு அப்படிப்பட்டதாக ஒன்றுபடுத்த இயலாததாக இருந்தது. அது பிரிவினைகளை உண்டுபண்ணுகிறது. உலகப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உலகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஒற்றுமையை முயன்று பெற அவர்கள் உதவியை நாட வேண்டும். சடப்பொருளான அல்லது சோதிட வானங்களிடமிருந்து அல்ல ஆனால் கடவுளுடைய அரசாங்கமாகிய வானங்களிலிருந்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
1960-லிருந்ததைவிட 1969-க்குள் 48 சதவிகிதமாக எண்ணிக்கையில் உயர்ந்துவிட்டிருந்த யெகோவாவின் சாட்சிகள் அதையே செய்துகொண்டிருந்தார்கள். ரோமர் 13-ம் அதிகாரத்திலுள்ள கிறிஸ்தவ கீழ்ப்படிதலின் பேரில் கொடுக்கப்பட்ட காலத்திற்கேற்ற விளக்கமானது 1960-களின் தனித்தன்மையாக அமைந்திருந்த கொந்தளிப்பான எதிர்க்கின்ற ஆவியில் சிக்கிக்கொள்வதைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு உதவியதற்காக அவர்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருந்தனர்!—1962, நவம்பர் 1, நவம்பர் 15 மற்றும் டிசம்பர் 1 ஆங்கில காவற்கோபுரம் பத்திரிகைகளைப் பார்க்கவும்.
1960-கள் முடிவை நெருங்கியபோது, யெகோவாவின் சாட்சிகள் கும்பராசி சகாப்தத்தைப் பற்றி அல்ல ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் “பூமியின் மீதெங்கும் சகோதரத்துவம் பரவியிருக்கப்போகும்” வரப்போகிற அந்தச் சகாப்தத்தைப் பற்றியே சுறுசுறுப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதைத் தனிப்பட்ட வகையில் அனுபவிக்க அவர்கள் இருப்பார்களா? நீங்கள் இருப்பீர்களா? “1914 முதற்கொண்டு உலகம்” “உலகம் சிதைந்து கொண்டிருக்கையில் உங்கள் நம்பிக்கை பிரகாசமாகட்டும்!” என்ற தலைப்பில் எமது அடுத்த வெளியீட்டில் தோன்றும் இத்தொடரின் கடைசி கட்டுரையை வாசிக்கத் தவறாதீர்கள். (g87 6⁄8)
[அடிக்குறிப்புகள்]
a 1945 மற்றும் 1985 இடைப்பட்ட காலத்தில் 160 போர்கள் ஆரம்பமானதாக ஐக்கிய நாடுகளின் ஆதார ஏடுகள் காண்பிக்கின்றன.
b தானியேல் 11-ல் பைபிள் கம்யூனிஸ்ட் கூட்டணி தேசங்களை “வடதிசை ராஜா” என்றும் அதை எதிர்க்கிற கூட்டணியை “தென்திசை ராஜா” என்றும் குறிப்பிடுகிறது. 1958-ல் உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்த “உம்முடைய சித்தம் பூமியிலே செய்யப்படுவதாக” என்ற ஆங்கில புத்தகம் பக்கங்கள் 264-307 பார்க்கவும்.
c கும்பராசி சகாப்தம் என்பது, வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் சுதந்திரத்தையும், பூமி முழுவதிலும் சகோதரத்துவம் பரவி இருப்பதையும், விண்வெளியை வென்று கீழ்ப்படுத்துவதையும் தனிப்படுத்திக் காண்பிக்கும் உலகின் புத்தூழித் தொடக்கமாக சோதிடர்களால் விளக்கப்படுகிறது.
[பக்கம் 17-ன் பெட்டி]
கவனிப்புக்குரிய மற்றச் செய்திக் குறிப்புகள்
1960—மொராக்கோவையும் சில்லியையும் கடுமையான பூமியதிர்ச்சி தாக்குகிறது
அடால்ப் இக்மேன், ஆர்ஜென்டீனாவில் கைது செய்யப்பட்டு இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகிறார். பின்னால் இவர் இரண்டாம் உலகப் போரின் குற்றச் செயல்களுக்குப் பொறுப்புள்ளவராகத் தீர்ப்பளிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்
1961—ஐக்கிய நாடுகள் செயலாளர் தலைவர் டாக் ஹேமர்ஷோல்ட் ஆப்பிரிக்காவில் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்
1962—செயல்திறமுள்ள முதல் செய்தி இணைப்பு துணைக்கோளான டெல் ஸ்டார் பொருத்தப்பட்டது
1963—புயல்காற்றிலும் வெள்ளத்திலும் கிழக்கு பாக்கிஸ்தானில் 30,000 பேர் உயிரிழந்தார்கள்
1964—ஜப்பானிலுள்ள டோக்கியோவில் XVIII ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்பட்டன. ரஷ்யா [96 பதக்கங்களையும்] அமெரிக்கா [90 பதக்கங்களையும்] தட்டிச் சென்றன
1965—போப் பால் VI இரண்டாவது வத்திகன் குழுவை முடித்து வைக்கிறார். ஐ.நா. பொது அவையில் அவர் கொடுத்த பேச்சில் சமாதானத்தை வலியுறுத்துகிறார்
1966—சீனாவில் கலாச்சாரப் புரட்சி ஆரம்பமாகிறது
1967—தென் ஆப்பிரிக்காவில் டாக்டர் கிறிஸ்டியன் பர்நார்ட் வெற்றிகரமாக முதல் இருதய மாற்று அறுவைச் சிகிச்சையை செய்துமுடிக்கிறார்
1968—மருந்து அங்கவீனமான அநேக குழந்தைகளின் பிறப்புக்குக் காரணமாயிருந்ததற்காக தாலிடோமைட் நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகிறது
1969—சாஸர் விளையாட்டுக்குப் பின்பு எல் சால்வடாருக்கும் ஹாண்டுராஸுக்மிடையே சாஸர் போர் என்றழைக்கப்பட்ட போர் துவங்கியது; ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்
கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டாண்டினருக்குமிடையே பெல்ஃபாஸ்டிலும் ஐயர்லாந்திலும் இரத்தம் சிந்தும் கலவரங்கள்
[பக்கம் 15-ன் படம்]
1960-களின் ஹிப்பி இயக்கம்
[படத்திற்கான நன்றி]
UPI/Bettmann Newsphotos
[பக்கம் 16-ன் படம்]
நியு யார்க்கில் போர் எதிர்ப்பு பேரணி