1914 முதற்கொண்டு இந்த உலகம்
பாகம் 6: 1946-1959 இல்லாத சமாதானத்தின் மத்தியில் ஏமாற்றும் இயல்புடைய செழுமை
“நாம் அதை ஏற்றுக்கொள்ள விரும்பினாலும்சரி விரும்பாவிட்டாலும்சரி, இன்றைய உலகம் ஹிட்லர் உருவாக்கினதே,” என இலக்கிய புலமை பரிசு பெற்றவரும் பத்திரிகை எழுத்தாளருமான சபாஸ்டியன் ஹாஃப்னர் பாராட்டுகிறார். அவர் விளக்குவதாவது: “ஹிட்லர் இல்லாமல் ஜெர்மனியின் மற்றும் ஐரோப்பாவின் பிரிவு உண்டாயிராது; ஹிட்லர் இல்லாமல் பெர்லினில் அமெரிக்கரும் ரஷியரும் இரார்; ஹிட்லர் இல்லாமல் இஸ்ரேயல் உண்டாகியிராது; ஹிட்லர் இல்லாமல் குடியேற்றம் இராது, அவ்வளவு விரைவிலாவது ஏற்பட்டிராது, ஆசிய, அரபிய மற்றும் கருப்பு ஆப்பிரிக்க அடிமை ஒழிப்பு இராது, ஐரோப்பிய தரங்கெடலும் இராது.”
நிச்சயமாகவே, அந்நாளின் மற்ற உலகத் தலைவர்களும் பெரும் விளைவுகளை உண்டுபண்ணின காரியங்களைச் செய்தனர். உதாரணமாக, “ஐரோப்பாவின் தற்போதைய கிழக்கு-மேற்கு பிரிவு உண்டானதை டெஹெரனில் [1943-ன் முடிவில் நடந்த டெஹெரன் கலந்தாய்வுக் கூட்டத்தில்] அந்தப் பெரும் மூவர் முடிவு செய்தத் தீர்மானங்களிலிருந்து தோன்றினதாகத் தற்போதைய சரித்திராசிரியர் பெரும்பான்மையர் காண்கின்றனர்,” என்று கனேடிய பத்திரிகை மக்ளீன்ஸ் கூறுகிறது. எனினும் அது மேலும் தொடர்ந்து, “யால்ட்டா [பிப்ரவரி 1945-ல் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டம்] . . . ஸ்டலின் தன் மேற்கத்திய சரிநிகரானவர்களைச் சூழ்ச்சியினால் வென்று ஒரு பேரரசை வஞ்சகமாய்க் கவர்ந்தக் கூட்டமென . . . சரித்திராசிரியர் பலருக்குள் மிக நன்றாய் அறியப்படலாயிற்று. . . . சில வாரங்களுக்குள்தானே ஸ்டலினின் படைகள் திரட்டி பலப்படுத்தப்பட்டு கிழக்கு ஐரோப்பாவில் தங்கள் பிடியை விரிவாக்கினர். . . . [நேருக்குநேர் தொடுத்த] கடும் வெப்பப் போர் முடிவடைந்து கொண்டிருந்தது, ஆனால் [உள்ளுக்குள் குமுறும்] குளிர்போர் அப்போதுதான் தொடங்கினது.”
குளிர்போரா? ஆம். ஐக்கிய மாகாணங்களுக்கும் சோவியத் யூனியனுக்குமிடையே இருந்துவரும் போட்டியுணர்ச்சியை விரிவாக்க ஐக்கிய மாகாணங்களின் ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறுபவர் பெர்னார்ட் பாரூக் 1947-ல் பயன்படுத்திய பதம் இதுவே. இது அரசியல் பொருளாதாரம் மற்றும் பிரச்சார செயல் துறைகளின் பேரில் தொடுக்கப்பட்ட குளிர் போர்.
போர் முடிந்தபோது நேசநாடுகள் ஜெர்மனியை நான்கு குடியிருப்பாட்சி முனைகளாகப் பிரித்தனர். பிரெஞ்ச், பிரிட்டிஷ், மற்றும் அமெரிக்கர் அந்நாட்டின் தென் மற்றும் மேற்குப் பகுதிகளை ஏற்றனர். ரஷியர் கிழக்குப் பகுதியை ஏற்றனர். இவ்வாறு இரண்டு தேசீய கூட்டணிகள் உண்டாயின, ஒன்று குடியரசு கூட்டணி மற்றொன்று பொதுவுடைமை கூட்டணி. அது முதற்கொண்டு, அவர்கள் காணக்கூடாத இரும்புத் திரைக்கப்பால் ஒருவருக்கொருவர் கடும் பகைமையான பார்வையைப் பரிமாற்றம் செய்துகொண்டிருக்கின்றனர்.
பெர்லினும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முந்தின ஜெர்மன் தலைநகர் ரஷியர் குடியிருப்பாட்சி செலுத்தும் பகுதிக்குள் அடங்கியிருந்ததால், அதன் பிரிட்டிஷ், பிரெஞ்ச், மற்றும் அமெரிக்கப் பகுதிகளுக்குச் செல்லும் தேவைப் பொருட்கள் ரஷிய பகுதியினூடே கடந்து செல்ல வேண்டியிருந்தது. இது பிரச்னைகளை உண்டுபண்ணிற்று, மேலும் 1948-ன் மத்தியில் ரஷியர் பெர்லினிலிருந்து கிழக்கே செல்லும் நில போக்குவரத்து வழிகள் எல்லாவற்றையும் அடைத்துவிட்டனர். இதற்கு எதிர்ச் செயலாக மேற்கத்திய வல்லரசுகள் தங்களுக்குத் தேவைப்பட்ட உணவு, எரிபொருள் யாவற்றையும் ஆகாய வழியாய் விமானங்களில் கொண்டுவந்தார்கள். 11 மாதங்களுக்கப்பால் இந்நிலைமை முடிவடையும் வரையில், பெர்லின் வழியடைப்பும் ஆகாய வழியாய்ப் பொருட்களைக் கொண்டு வருவதும் உள்ளுக்குள் குமுறும் குளிர்போர் நிலையைக் கடுமையாய் வைத்து வந்தது.
“ஏறக்குறைய ஓரிரவுக்குள்ளாக” பெர்லினுடைய சாயல் பிரஷியன் இராணுவ ஆட்சிக்குரிய மற்றும் ஹிட்லர் சர்வாதிகார ஆட்சிக்குரிய அடையாளத்திலிருந்து விடுதலைக்குரிய அடையாளமாய் மாறிற்று” என பாரிஸ் சர்வகலாசாலையின் பேராசிரியர் ஆல்பிரட் கிரோஸர் எழுதுகிறார். இன்று பெர்லின் இன்னும் மதிப்புப் பெற்ற அடையாளமாயிருக்கிறது, கிழக்கிலும் மேற்கிலுமுள்ள அரசியலாளர்கள் இருவருமே குளிர்போர் எரிநெருப்பைத் தூண்டிவிட அதைச் சாக்குப்போக்காகப் பயன்படுத்துகின்றனர்.
இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னால் ரஷிய அரசு ஜப்பானின்மீது போர் தொடுத்து ஜப்பானியர் குடியேறிய கொரியாவை அதன் வட முனையில் தாக்கினது, ஜப்பான் கட்டுப்பாட்டின் மீது சரணடைந்தபோது, 38-வது இணைதொலைவு கோட்டுக்கு வடக்கேயிருந்த ஜப்பானிய படைகள் ரஷியரிடம் சரணடைய வேண்டுமெனவும் அந்தக் கோட்டுக்குத் தெற்கேயுள்ளவர்கள் அமெரிக்கரிடம் சரணடைய வேண்டுமெனவும் நேசநாடுகள் ஒப்புக்கொண்டன. நாட்டை இயற்கைக்கு மாறான முறையில் பிரித்த இந்தப் பிரிவு 1950-ல் போருக்கு வழிநடத்தினது. அது முடிவதற்கு முன்னால், ஏறக்குறைய 20 தேசங்கள் இராணுவ சம்பந்தமாய் உட்பட்டன, இன்னும் 40-க்கு மேற்பட்ட தேசங்கள் இராணுவ போர்த் தளவாடங்களை அல்லது தேவைப் பொருட்களை அளித்தன. லட்சக்கணக்கான ஆட்கள் மாண்ட பின்பு ஜூலை 27, 1953-ல் கடைசியாகச் சுடுவதை நிறுத்தும்படி ஆணையிட்டுப் போர் நிறுத்தப்பட்டது. எதற்காக? இன்று, 30 ஆண்டுகளுக்குப் பின்னும் கொரியாவின் அந்தக் பிரச்னைக்குத் தீர்வான முடிவு இன்னும் கண்டுபிடிக்கப்பட்டில்லை. அந்தப் பிரிவை மூங்கில் திரை என்று அவர்கள் அழைக்கின்றனர்.
இத்தகைய நேருக்குநேர் எதிர்ப்பு இரண்டு அடையாளக் குறிப்பான அரசர்களுக்கிடையில் நடைபெறுமென தீர்க்கதரிசி தானியேல் முன் கண்டான். இந்தக் குளிர்போர், நம் நாளின் இந்த இரண்டு வல்லரசுகளுக்கு, ஒருவரோடொருவர் உரையாடி “ஒரே பந்தியிலிருந்து பொய் பேசும்” தங்கள் நெடுங்கால நடத்தைப் போக்கில் தொடருவதற்கு மிகுதியான வாய்ப்பை அளித்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் தேசீய அக்கறைகளைப் பின்தொடர்ந்து, அதே சமயத்தில் தன்னல அனுகூலத்துக்காக ஒருவருக்கெதிராக மற்றொருவர் ‘முட்டுக்கு நிற்பதில்’ மும்முரமாய் ஈடுபடுகின்றனர்.—தானியேல் 11:27-45.
கட்டுக் கடங்காத “குழந்தைகள் திருப்திகரமாய்ப் பிறந்தன”
அணுக்குண்டு முதலாவது வெற்றிகரமாய் நியூ மெக்ஸிக்கோவில் வெடித்தபோது, ஐ.மா. ஜனாதிபதி ட்ரூமனுக்கு ஒரு இரகசிய செய்தி பின்வருமாறு அனுப்பப்பட்டது: “குழந்தைகள் திருப்திகரமாய்ப் பிறந்தன.” ஆனால் இந்தக் “குழந்தைகள்” எவ்வளவு கட்டுக்கடங்காதவையும் விடாமல் வற்புறுத்திக் கேட்பவையுமாகிவிட்டன! இவை தேசங்களை, பெரியவற்றையும் சிறியவற்றையும் முன் ஒருபோதுமிராத வண்ணம் உலகமெங்கும் இராணுவத் துறைகளைக் கட்டியெழுப்பும்படி உந்தித் தள்ளி, வறுமையிலிருக்கும் தங்கள் நாட்டினருக்கு உணவளிக்கவும் கல்வி பயிற்றுவிக்கவும் நல்ல முறையில் பயன்படுத்தக்கூடிய பணத்தை இராணுவ முயற்சிக்குச் செலவிடும்படி வற்புறுத்தின. வல்லரசுகள் ஒருவருக்கொருவர் போர்த்தளவாடங்களைச் சமநிலை வலிமைப்படுத்தி வருவதன் மூலம் சமாதானத்தைப் பாதுகாக்க முயலும் அபாய போக்கை அவை ஆதரித்து இடமளித்தன. ஒவ்வொரு தேசிய அல்லது சர்வதேச சிறு சண்டையையும், அது எவ்வளவு சிறிதாயினும் அணுக்குண்டு படுகொலைக்கு வழிநடத்தக் கூடியதாக்க கருதும்படி இவை ஐக்கிய நாட்டு சங்கத்துக்குப் போதிய காரணத்தை அளித்தன. 1949-ல் NATO அதாவது வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பையும் 1955-ல் உவார்ஸா பாக்ட்டையும் (Warsha Pact) போன்ற சமாதானத்தைக் காக்கும் புதிய அமைப்புகளை ஏற்படுத்தி வைப்பதைத் தேவைப்படுத்தின.
இந்த அணுக்குண்டு “குழந்தைகளும்” அவற்றைப் பெற்ற தேசங்களும் எண்ணிக்கையில் வளருகையில், எதிர்பாராத விபத்தாலோ, அல்லது திட்டமிடப்பட்டோ பூகோள அணுக்குண்டுப் போர் ஏற்படுவதன் அபாயமும் வளருகிறது. “பூமியின் மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்து” நடுங்கிக் கொண்டிருக்கும்படி அவை இந்த உலகத்தை வைத்திருக்கின்றன.—லூக்கா 21:26.
கவிஞர் ரால்ஃப் உவால்டோ எமர்சன் அழைத்தபடி 1775-ல் ஐக்கிய மாகாணங்களின் சுதந்திரப் போரைத் தொடங்கிய அந்தத் துப்பாக்கிக் குண்டே “உலக முழுவதிலும் சுற்றிக் கேட்கப்பட்ட குண்டு” என்றால், 1945-ல் இரண்டாம் உலகப் போரை முடிவுசெய்த அணுக்குண்டு வெடியே மிக நிச்சயமாய் ‘உலக முழுவதிலும் சுற்றிக் கேட்கப்பட்ட வெடி’யாகும்.
போருக்குப் பிற்பட்ட சகாப்தத்தின்போது “திருப்திகரமாய்ப் பிறந்த” கட்டுக்கடங்காத வேறுசில “குழந்தைகளைப்” பற்றி தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா நமக்குச் சொல்லுகிறது. “புதிய தேசங்கள் எழும்புவதைக்” குறிப்பிட்டு அது பின்வருமாறு விளக்குகிறது: “இரண்டாம் உலகப் போருக்குப் பின், பெரிய மிகப் பரந்த ஐரோப்பிய பேரரசுகள் ஒவ்வொன்றாகத் தகர்ந்தன. கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லண்ட்ஸ், இன்னும் மற்றப் பெரிய குடியேற்ற நாட்டு வல்லரசுகள் போரின்போது இழந்தவற்றால் பலங்குன்றச் செய்யப்பட்டிருந்தன. இவை தங்கள் அயல்நாட்டுக் குடியிருப்பு நாடுகளை வலிமையால் வற்புறுத்தி வைத்திருக்க இனிமேலும் முடியாமற்போயிற்று. இந்தோனேஷியா, பிலிப்பீன்ஸ், பாக்கிஸ்தான், இந்தியா, சிலோன் (இப்பொழுது ஸ்ரீ லங்கா), இஸ்ரேயல், லிபியா, டுனீஷியா, கானா ஆகியவை முதலாவது சுதந்திரமடைந்த குடியேற்ற நாடுகளாகும்.
அரசியல் சுதந்திரமடைய வேண்டுமென்ற போக்கு இந்நாள் வரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் 1945 முதற்கொண்டு குறைந்தது நூறு புதிய தேசங்கள் பிறப்பதில் விளைவடைந்துள்ளது.
குடியேற்றக் கோட்பாடு அதற்குரிய குறைபாடுகளைக் கொண்டிருந்தது, எனினும் அதனிடத்தை எடுத்தது அதைவிட மேம்பட்டதாயிருக்குமென சொல்வதற்கில்லை. ஆட்சிக்குழுவாகச் செயற்பட்டு பத்திரிகையில் தொடர்ந்தெழுதும் ஜியார்ஜ் ஆனி கீஸர் குறிப்பிடுவதாவது: “குடியேற்ற நாடுகளைக் கொண்ட பேரரசுகள் முடிவுற்றபோது, புதிய தேசங்களில் பல மெள்ள மெள்ள நெடுங்காலம் தகரும் போக்கைத் தொடங்கினது. இது அடிக்கடி உள்நாட்டுப் போரால் குறிக்கப்பட்டது.” இவ்வாறு, மனிதன் தன்னைத்தான் வெற்றிகரமாய் ஆண்டுகொள்ள முடியாதென்பதற்கு அத்தாட்சி பெருகியிருக்கிறது.—பிரசங்கி 8:9; எரேமியா 10:23.
வாழ்வுவளம்—ஆனால் பெருஞ்செலவும் ஏமாற்றும் இயல்புமுடையது
போர் பாழ்ப்படுத்தின ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் வாழ்ந்தவர்கள் 1945-ல் பல நெருக்கடிக்குள்ளிருந்தனர். மனித நலத்தைக் கருதி உதவி செய்யும்படியும், ஆனால் அதோடு தன்னல காரணங்களால் தூண்டப்பட்டும் நேசநாடுகள், ஐரோப்பாவை முன்னிலையடைய செய்யும் திட்டத்தை ஏற்பாடு செய்தனர். இது, குண்டுவெடித்து அழித்த ஐரோப்பாவின் தொழில்துறைகளைத் திரும்பப் புதுப்பித்துக் கட்டுவதற்கு பண உதவியை அளிக்க முன்வந்த நிறுவனம். பொதுவாய் இது மார்ஷல் திட்டம் என அறியப்பட்டது, இந்த எண்ணத்தை முதல் கொண்டுவந்த, ஐக்கிய மாகாணங்களின் அரசாங்க செயல் பொறுப்பாளரின் பெயரால் இது அழைக்கப்பட்டது; இந்த, நீங்களே-செய்யுங்கள் திட்டம், பெருஞ்செலவை தேவைப்படுத்தியபோதிலும் பலன் தந்தது.
பொருளாதாரம் மற்றும் தொழில் துறை மீண்டும் முன்னிலையடைய செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முழுவதும் புதுப்பாணியில் அமைந்த இயந்திர சாதனங்களைக் கொண்ட நவீன தொழிற்சாலைகள், தோல்வியுற்ற நாடுகள் வெற்றிப் பெற்றத் தங்கள் அயலாருக்கு இணையான நிலைக்கு முன்னேறவும், சிலவற்றின் காரியங்களில் அவற்றிற்கு மேலாகவுங்கூட முன்னேறவும் செய்தன, எப்படியெனில் வெற்றிப்பெற்ற நாடுகள் அநேகமாய்த் தங்கள் பழமைப்பட்ட இயந்திர சாதனங்களையும் தொழிற்சாலைகளையுங் கொண்டே சமாளிக்க வேண்டிய நிலையிலிருந்தனர். 1950-ன் பத்தாண்டுகளின்போது ஜெர்மன் பொருளாதார அற்புதம் என்றழைக்கப்பட்டது வெகு மும்முரமாய்ச் செயல்பட்டது, அந்தப் பத்தாண்டுகளின் முடிவுக்குள் ஜப்பான், வாணிகத் துறையில் உலகத்தின் பெரும்பாகத்தைத் தான் கைப்பற்றக்கூடியதாக்கும் கட்டும் திட்டத்தைக் கொண்ட ஒரு புதுச் செயலில் ஈடுபட்டது.
வெற்றிப் பெற்றோரும், இதற்கிடையில், தங்கள் உள்நாட்டு மற்றும் பொருளாதார செயல் திட்டங்களை முன்னிருந்த இயல்பான நிலைக்குக் கொண்டுவர முயன்றுகொண்டிருந்தனர். போர் காலத்தின்போது எல்லா “கவனமும் போருக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்யவே செலுத்தப்பட்டதால் வீடுகளைக் கட்டுவதும் வீட்டுக்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதும் கடுமையாய் மட்டுப்படுத்தப்பட்டன. மக்கள் நீண்ட காலம் தங்களுக்குக் கிடைக்காமல் சமாளித்தப் பொருட்கள் இப்பொழுது ஏராளமாய் விற்பனையாயிற்று. இது எல்லாருக்கும் வேலை கிடைத்திருப்பதைக் குறித்தது; அந்தச் சமயத்துக்காவது வேலையில்லாமை பிரச்னையாயில்லை. கடுங்குறைவு எற்பட்ட காலத்துக்கு முன்னிருந்து கண்டிராத வாழ்வு வளத்துக்குரிய ஒரு காலத்தை நோக்கி இவ்வுலகம் இப்பொழுது முன்னேறியது.
வாழ்வுவளம் அதற்குரிய விலையையும் கொண்டிருந்தது. மேலும் மேலும் அதிகமாகத் தாய்மார்கள் வீட்டுக்கு வெளியில் உலகப் பிரகாரமான வேலையை ஏற்றனர், இவ்வாறு செய்வதில் சில சமயங்களில் தங்கள் பிள்ளைகளைக் கவனிக்கத் தவறினர். உயர்ந்துகொண்டிருந்த வாழ்க்கைத் தரங்கள் அதிகப்படியான இன்பப் பொழுதுபோக்குக்கு இடமளித்தது, ஆனால் இது எப்பொழுதும் ஆரோக்கியத்துக்கு உகந்ததாயில்லை. டெலிவிஷன் பார்ப்பது குடும்ப உரையாடலின் இடத்தை ஏற்கத் தொடங்கினது. குடும்ப வாழ்க்கையில் முறிவு விவாகரத்துப் பெருகுவதற்கு வழிநடத்தினது. இந்தப் போக்கு, பின்னால், தனி ஆட்கள் மணம்செய்யாமல் ஒன்றுசேர்ந்து வாழும் போக்கு பெருகுவதால் ஓரளவு சரியீடு செய்யப்பட்டது. இரண்டு போக்குகளும் மற்றவர்களை இழப்புக்காளாக்கித் தங்கள் சொந்த அக்கறைகளை வலியுறுத்தும் மனச்சாய்வு வளர்ந்துகொண்டு போவதை மறைவாய்க் குறிப்பிட்டன. போரால் ஏற்கெனவே மிகக் கடுமையாய்த் தகர்க்கப்பட்ட வேதப்பூர்வ மற்றும் ஒழுக்க மதிப்புகள், இப்பொழுது மேலும் படிப்படியாய் அழிந்துகொண்டிருந்தன.
உண்மையான சமாதானமும் வாழ்வுவளமும்
முழுமையாக, இவ்வுலகத்தின் மத அமைப்புகள், இரண்டாம் உலகப் போரின்போது உடன் தோழரான மனிதரைப் படுகொலை செய்வதற்குத் தங்கள் உறுப்பினரை அனுப்புவதில் எந்தத் தவறையும் காணவில்லை. ஆகவே இப்பொழுது குளிர்போருக்கும் அரசியல் சம்பந்தமான கலக எழுச்சிகளுக்கும் விடுதலைப் போர் எனப்படுபவற்றிற்கும் கொள்கை மற்றும் உடல் சம்பந்தப்பட்ட ஆதரவைத் தருவதில் எந்தத் தவறையும் அவர்கள் காணவில்லை. ஆனால் கவனிக்கத்தக்க ஒரு விதிவிலக்கு அங்கிருந்தது.
யெகோவாவின் சாட்சிகள் இரண்டாம் உலகப் போரின்போதும் அதன் பின்னும் கிறிஸ்தவ நடுநிலை வகிப்பைக் காத்தனர். தங்களை அழிப்பதற்கு ஹிட்லர் எடுத்த முயற்சிகளுக்கு எதிர்வீச்சாக, ஜெர்மனியில் செயல்பட்ட சாட்சிகளின் எண்ணிக்கை 1946-ல் 9,000-த்துக்கும் குறைவாயிருந்ததிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் 52,000-த்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கைக்குப் பெருகினது. 1945-க்கும் 1959-க்கும் இடையில் உலகமுழுவதும் அவர்கள், 68 நாடுகளில் 1,41,606 சாட்சிகளிலிருந்து 175 நாடுகளில் 8,71,737 சாட்சிகளாகப் பெருகினர். மற்ற பல மதங்களின் உறுப்பினர், அரசியல் மற்றும் சமுதாய விவாதங்களின்பேரில் ஒருவருக்கொருவர் எதிராக அதிகமதிகமாய்ப் போரில் ஈடுபட்டுக் கொண்டும், அதோடு சர்ச் உறுப்பினரில் குறைவுற்று நிலையற்றிருந்த போது, யெகோவாவின் சாட்சிகள், ஆவிக்குரிய முறையில், உண்மையான சமாதானத்தையும் வாழ்வு வளத்தையும் அனுபவித்து மகிழ்ந்தனர்.
இது 1958-ல் நியூ யார்க் நகரத்தில் நடந்த அவர்களுடைய, தெய்வ சித்த சர்வதேச மாநாட்டில் எளிதில் உணரத்தக்கதாயிருந்தது, அங்கே தொடர் கூட்டம் ஒன்றுக்கு வந்திருந்தவர்களின் உச்ச எண்ணிக்கை 2,50,000-த்துக்கு மேற்பட்டிருந்தது. முக்கிய பேச்சாளர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: “ஆவிக்குரிய இந்தப் பரதீஸ் செழித்தோங்குவதே யெகோவாவின் சாட்சிகளின் பொங்கி வழியும் மகிழ்ச்சிக்குக் காரணத்தை விளக்குகிறது . . . இந்த ஆவிக்குரிய பரதீஸ் கடவுளின் மகிமையைப் பிரதிபலித்து அவருடைய ராஜ்யம் ஸ்தபிக்கப்பட்டதற்குச் சாட்சி பகருகிறது.”
இரண்டாம் உலகப் போரைப் பின்தொடர்ந்த சமாதானம், உண்மையில் இல்லாத சமாதானமே, அதோடுகூட அது முன்னேற்றுவித்த முற்றிலும் பொருள் சம்பந்தமான செழுமை பின்வரும் இந்த மறுக்க முடியாத உண்மையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. உண்மையான சமாதானமும் வாழ்வுவளமும் கடவுளுடைய ஸ்தபிக்கப்பட்ட ராஜ்யத்தின் மூலம் மாத்திரமே வரமுடியும். “1960-ன் பத்தாண்டுகள்—கொந்தளிப்பான கண்டன அறிவிப்பு காலப்பகுதி”யில் இது இன்னும் அதிகம் தெளிவாகும். அதைப் பற்றி எங்கள் அடுத்த வெளியீட்டில் வாசியுங்கள். (g87 5⁄22)
[பக்கம் 22-ன் பெட்டி]
கவனிப்புக்குரிய மற்றச் செய்திக் குறிப்புகள்
1946—ஹோ ச்சி மின் வீயட்னாமில் விடுதலைப் போரைத் தொடங்குகிறார்
1947—சவக்கடல் சுருள்கள், இருப்பதில் மிகப் பூர்வ பைபிள் கைப்பிரதிகள் உட்பட, கண்டுபிடிக்கப்பட்டன
1948—மோஹன்தாஸ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்
1949—ஜனங்களின் விடுதலை செய்யும் படை சைனாவின் தலை நிலப்பரப்பைக் கைப்பற்றி முடிக்கிறது; கம்யூனிஸ்ட் அல்லாத நாஷனலிஸ்ட் அரசாங்கம் டைய்வான் தீவுக்கு விலகிச் செல்கிறது
1950—தென் ஆப்பிரிக்காவில் இன ஒதுக்கீட்டுக் கொள்கையினருக்கு எதிராகக் கலகக் கொந்தளிப்பு
1952—ஐக்கிய மாகாணங்கள் முதல் நீர்வளிக் குண்டை வெடிக்கிறது
1954—பள்ளிகளில் ஜாதிபேத ஒதுக்கம் அரசியலமைப்புக்கு முரண்பட்டது என்று ஐ.மா. மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்தது
1957—ரஷியர்கள் பூமியைச் சுற்றி வட்டமிட்ட முதல் துணைக்கோளம் ஸ்புட்னிக் 1-ஐ அனுப்புகின்றனர்
1958—ஐரோப்பிய பொருளாதார கூட்டுக் குழுமம் (பொது அங்காடி) வேலைகளைத் தொடங்குகிறது
1959—ரஷிய ராக்கட் சந்திரனின் படங்களைத் திரும்ப பூமிக்கு அனுப்புகிறது
[பக்கம் 23-ன் படம்]
யுத்தத்துக்குப் பிற்பட்ட கால வாழ்வுவளம் சிறந்த வீடுகளையும் புதிய மோட்டார்கார்களையும் பல குடும்பங்களுக்குக் கொண்டுவந்தது