1914 முதற்கொண்டு இந்த உலகம்
பாகம் 5: 1943-1945 இரண்டாம் உலகப் போர்—அதன் கொடிய மற்றும் கோரமான முடிவு
1940-களின்போது ஓர் இளம் பள்ளிச் சிறுவனாக அவனும் அவனுடைய தம்பியும் கலிபோர்னியாவிலிருந்த தங்கள் வீட்டில் ஒவ்வொரு இரவும் வானொலிப் பெட்டிக்கு முன்னால் எவ்விதமாக வழக்கமாய் உட்கார்ந்துவிடுவார்கள் என்பது ரேவுக்கு நினைவிருக்கிறது. அவ்விடத்துக்கும் ஐரோப்பாவுக்குமிடையே நேரத்திலுள்ள வித்தியாசம், ஜெர்மனி மீது அந்த இரவு செய்யப்பட்ட வெடிகுண்டு தாக்குதலைப் பற்றிய அறிவிப்புகளை கேட்பதற்கு உதவியாக இருந்தது. தரையில் தங்களுக்கு முன்னால் ஐரோப்பாவின் பெரிய நிலப்படத்தை விரித்து வைத்துக்கொண்டு ஈசென், பெர்லின், ஸ்டுட்கார்ட், ஹாம்பர்க் இன்னும் மற்ற ஜெர்மன் நகரங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வது இந்த இளைஞர்களுக்கு ஒவ்வொரு இரவும் வழக்கமாகச் செய்யும் வேலையாயிற்று.
இதற்கிடையில் ஜெர்மனியிலுள்ள இளைஞர்கள் போரைப் பற்றி உடனடியாக அறிந்து வந்தார்கள். விமானத் தாக்குதலுக்கு பயந்து வறட்சியான மறைவிடத்தில் அடைப்பட்டு உறங்க முயற்சி செய்வது அவர்களுடைய இரவு நேர வழக்கமாக இருந்தது. 30 வருடங்களுக்குள்ளாகவே இரண்டு தடவைகள் ஜெர்மனி திட்டமிட்டு தலைவணங்கும்படியாகச் செய்யப்பட்டது. பின்னால் ஒரு ஜெர்மானிய செய்தித்தாள் எழுதியதாவது: “அது வரையாக நேரிடுமோ என்று பயந்துவந்த நிகழ்ச்சி இப்பொழுது—42/43வது ஆண்டுகளின் மாரிகாலத்தின்போது—உண்மையிலேயே நடந்துவிட்டது. எற்கெனவே தோல்வியடைந்துவிட்ட ஒரு போரில் ஜெர்மனி இனிமேலும் வெற்றி பெற முடியாது.”
வானத்திலிருந்து நெருப்பு
வானத்திலிருந்து விழுவதுபோல காணப்பட்ட நேச நாடுகளின் அணுகுண்டுகள், தோல்வி தவிர்க்க முடியாததே என்பதை உறுதியாக நம்புவதற்கு ஜெர்மானியர்களுக்கு உதவியாக இருந்தது. யுத்தத்தின்போது தேசத்தில் ஒவ்வொரு ஐந்து வீடுகளிலும் ஒரு வீடு அழிக்கப்பட்டோ அல்லது குடியிருக்க முடியாதபடி மோசமாக சேதமடைந்தோ விட்டது. பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட படைத்துறை சாராத பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அல்லது பலத்த காயமுற்றனர். எழுபதிலிருந்து எண்பது லட்சம் ஆட்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.
போர் முனையிலிருந்து வந்த செய்தி நல்லதாகவும், விமானத் தாக்குதலுக்குப் பயந்து மறைவிடங்களில் தூங்கும் நிலை ஏற்படாமலும் இருந்த வரைக்கும், மக்கள் ஹிட்லரையும் அவனுடைய கொள்கைகளையும் ஆதரிக்க மனமுள்ளவர்களாக இருந்தனர். ஆனால் சூடென்ஷி ஸியிட்டுங் விளக்குகிற விதமாகவே, “துர்ச் செய்திகள் வந்து குவிய ஆரம்பித்தபோது, அது ஒரு திரும்புக் கட்டமாக இருந்தது. ஆகாயப் போர் அதன் பின்விளைவுகளை கொண்டிருந்ததை 1943 ஆகஸ்ட் 9 தேதியிட்ட ஒரு ஜெர்மானிய இரகசியப் பணி அறிக்கை ஒப்புக்கொண்டது. தனி மனிதன் உயிர்வாழ்தலே தீர்க்க முடியாத பிரச்னையாக ஆனபோது, இதுவரை கேட்கப்படாத ஏன் என்ற கேள்வி இப்பொழுது எழுப்பப்பட்டது. ஹிட்லரை கவிழ்க்கவோ அல்லது சமாதானத்தை நாடும்படி நிர்பந்தம் செய்யவோ திட்டமிடப்பட்டிருந்த தலைமறைவான இயக்கங்களுக்கு ஆதரவு குவிந்தது. 1944 ஜூலை 20-ம் தேதி செய்யப்பட்டது உட்பட, அவனைக் கொல்ல பல முறைகள் செய்யப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
அடைக்கப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் அதிகரித்த அதிருப்தி அநேகமாய் வேடிக்கையாக வெளியிடப்பட்டது. உதாரணமாக, பெர்லினைச் சேர்ந்த ஒரு மனிதனும் ஈசனைச் சேர்ந்த ஒரு மனிதனும் தங்களின் நகரங்களுக்கு வெடிகுண்டு விளைவித்த சேதத்தைப்பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பெர்லினைச் சேர்ந்தவர், பெர்லினின் மீது செய்யப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் அத்தனை கடுமையாக இருந்ததன் காரணமாக, விமானத் தாக்குதல் முடிந்து ஐந்து மணிநேரங்களுக்கு ஜன்னலின் கண்ணாடிச் சில்லுகள் வீடுகளின் வெளியே வந்து விழுந்து கொண்டிருந்ததாகச் சொன்னான். அதற்கு, “அது ஒன்றுமே இல்லை. விமானத்தாக்குதல் முடிந்தப் பின்பு இரண்டு வாரங்களுக்கு தலைவரின் படங்கள் ஜன்னலுக்கு வெளியே பறந்து கொண்டிருந்தன” என்று ஈசனைச் சேர்ந்தவர் பதிலளித்தார்!
எதிர்ப்பார்த்தபடியே ஐரோப்பாவை நேச நாடுகள் தாக்கும் சமயம் நெருங்கி வந்தபோது நேச நாடுகளின் “நேர் இலக்கு” என்றழைக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலின் ஆக்கிரமிப்பு தீவிரமாக்கப்பட்டது. உண்மையில், போரின் முடிவு வரையாக இது தொடர்ந்து இருந்துவந்தது. 1945 பிப்ரவரி வரையாக, போரின் மிகவும் வாதத்திற்கிடமான வெடிகுண்டு தாக்குதல் நடைபெறவில்லை. ஜெர்மன் செய்தித்தாள் ஸ்டுட்கார்டர் ஸியுட்டுங் அறிவிப்பதாவது: “முதலாவது பெர்லினே குறியிலக்காக கருதப்பட்டது. பின்னர் அதுவரையாக உண்மையில் தாக்கப்படாத ஒரு நகரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதாக முடிவு செய்யப்பட்டது . . . , டிரெஸ்டன் நகரம் . . . ஹிரோஷீமாவினுடைய அழிவின் முன்னுணர்வோடு இங்கு செய்யப்பட்ட அழிவின் அளவு, இந்தத் தாக்குதலை மற்ற எல்லாவற்றிலிருந்தும் வித்தியாசப்படுத்தியது.” தி இல்லஸ்ரியேட் உவோசென்ஸியுட்டுங் மேலுமாகச் சொல்வதாவது: “ஐரோப்பாவிலுள்ள மிக அழகிய நகரங்களில் ஒன்றாகிய டிரெஸ்டன் உயிரற்ற நகரமாகியது. ஜெர்மனியில் வேறு எந்த நகரமும் இப்படியாகத் திட்டமிடப்பட்டு வெடிகுண்டால் துண்டுத் துண்டாக்கப்படவில்லை.”
இந்த வெடிகுண்டு தாக்குதலை நேரடியாகப் பார்த்த இருவரின் விவரிப்புகளை இப்பக்கத்திலுள்ள பெட்டியில் ஒப்பிட்டுப் பார்த்து பின்னர் உங்களை பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: போரின் கொடுமையையும் பயித்தியக்காரத் தனத்தையும் வேறு எதுவும் அதிக விளக்கமாக சுட்டிக்காட்ட முடியுமா?
ஆகவே “நட்சத்திரப் போர்களின்” நாட்களுக்கு வெகு காலத்துக்கு முன்பாகவே, வெறும் கடுமையான சீதோஷ்ண நிலையைத் தவிர வானங்கள் வேறு ஆபத்துக்களை தாங்கிக் கொண்டிருந்தது ஏற்கெனவே வெளிப்படையாகத் தெரிந்தது. கடைசி நாட்களைப் பற்றி கிறிஸ்து இயேசு முன்னறிவித்திருந்தவைகளை இவை நினைப்பூட்டுகின்றன: “வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். சூரியனிலும் சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்.”—லூக்கா 21:11, 25; வெளிப்படுத்தின விசேஷம் 13:13-ஐ ஒப்பிடவும்.
இரகசியமான ஒரு கருவி சமாதானத்தைக் கொண்டுவர தவறுகிறது
வட ஆப்பிரிக்காவிலிருந்து அண்டை வல்லரசுகளைத் துரத்தியப் பின்பு, நேச நாடுகள் 1943 ஜூலை மாதம் சிசிலியின் மீது படையெடுத்தன. செப்டம்பரில் அவை இத்தாலியின் தலை நிலப்பகுதிக்குள்ளேயே சென்றுவிட்டன. இதற்கிடையில், முசோலனியை பதவியிலிருந்து இறக்கிவிட்டிருந்த இத்தாலிய அரசாங்கம் சரணடைந்துவிட்டது. அக்டோபரில் அதன் முன்னாள் கூட்டாளியாகிய ஜெர்மனியின் மீதே போர் தொடுத்தது.
அதே ஆண்டின் முடிவில் ஹிட்லர் மேற்கேயிருந்து தாக்கப்படும் ஆபத்தை முன்னறிந்து கிழக்கேயிருந்த தன்னுடைய படையின் ஒரு பகுதியை திரும்ப அழைத்துக்கொண்டான். மேற்கே பிரெஞ்சு மற்றும் பெல்ஜியன் கரையோரங்களில் அவன் கட்டுப்பாட்டை காத்து வருவது தவிர்க்க முடியாததாக ஆனது. அங்கிருந்து ஒரு இரகசிய கருவியின் மூலமாக யுத்தத்தின் போக்கை மறுபடியுமாக தனக்கு சாதகமாக திருப்பிவிடலாம் என்ற எண்ணத்தோடு அவன் புதிய முயற்சியில் இறங்கினான்.
அது என்னவாக இருக்கக்கூடும்? லண்டன் நகரம் அளவுள்ள ஒரு இடத்தை குறிப்பிடத்தக்க குறுகிய காலத்தில் அழித்துவிடும் திறமையுள்ள ஒன்றாக அது கருதப்பட்டது. 1943 டிசம்பர் மாதத்தில் ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள், அணுகுண்டு தாக்குதலுக்கு பாதுகாப்பாக, 60 மணிநேரங்கள் மறைவிடங்களில் தங்கியிருக்க தயாராக இருக்கும்படி சொல்லப்பட்டதாக வதந்தி பரவியது. பழித்தீர்க்கும் நடவடிக்கையாக இரகசிய கருவி அதன் நோக்கத்தை நிறைவேற்றிய பின்பு, அவர்கள் நாசி ஆதிக்கம் தரக்கூடிய சமாதான உலகிற்கு வெளியே வரலாம்.
ஆனால் 1944 ஜூன் 6, அதிகாலை ஹிட்லரின் இரகசிய கருவி செயல்படுவதற்கு முன்பாகவே நேசப் படைகள் நார்மண்டியின் பிரெஞ்சு கடற்கரையோரப் பகுதிகளை தாக்கின. ஹிட்லரின் படைகளை இப்பொழுது கிழக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள். ஒரு வாரத்துக்குப் பின்பு, ஜூன் 13-ம் தேதி ஹிட்லர் அவனுடைய இரகசிய கருவியோடு தாக்கினான். உண்மையில் அவை இரண்டு கருவிகளாக இருந்தன. ஒன்று V-1 ஏவுகனை என்றழைக்கப்பட்ட பறக்கும் வெடிகுண்டாகவும் மற்றொன்று நவீன நீண்ட தூர உந்துவிசை ஏவுகனையின் முன்னோடியாக இருந்த V-2 ராக்கட் என்றழைக்கப்பட்ட ஒரு கருவியாகவும் இருந்தது. “V” என்பது வெர்கெல்டுங்ஸ்வாஃபென் (Vergeltungswaffen) என்ற ஜெர்மன் வார்த்தையை குறிப்பதாக இருந்தது. இதன் பொருள் “பழித்தீர்க்கும் கருவிகள்” என்பதாகும். அப்போது துவங்கி அதை அடுத்துவந்த மார்ச் மாதம் வரையாக, அவை பிரிட்டனுக்குள்ளும் பெல்ஜியத்துக்குள்ளும் செலுத்தப்பட்டன. அதில் 23,000 பேர் காயமுற்றனர், பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆனால் ஹிட்லரின் இரகசிய கருவி மிகவும் காலதாமதமாக செயல்பட்டதும் வெகு குறைவானதையே சாதித்ததும் சீக்கிரத்தில் வெளிப்படையானது.
ஹிட்லர் தன்னுடைய தோல்விக்கு பிறர் மீது பழி சுமத்தியதும்கூட தெளிவாக இருந்தது. அவன் எழுதிய கடைசி சில வார்த்தைகள் பின்வருமாறு: “என்னுடைய நம்பிக்கையை அநேகர் தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ராஜதுரோகமும் நம்பிக்கை துரோகமும் போர் முழுவதிலும் எதிர்க்கும் ஆற்றலை அழித்துவிட்டிருக்கிறது.” இப்பொழுது அவன் துரோகிகளென கருதிய அவனுடைய முன்னாள் நெருங்கிய நண்பர்களான ஹெர்மன் கோரிங்கையும் ஹென்ரிச் ஹிம்லரையும் கட்சியிலிருந்தும் பணியிலிருந்தும் நீக்கிவிடுவதன் மூலம் இதை அவன் உறுதியாக நம்பியதை வலியுறுத்திக் காண்பித்தான். உண்மையில் ஜெர்மன் பத்திரிக்கையாசிரியரும் பரிசு பெற்ற ஆசிரியருமான செபாஸ்டியன் ஹாஃப்னரின்படி “உண்மையில் துரோகி”யாக இருந்தது ஹிட்லரே. மற்ற தேசங்கள் அல்லது தொகுதிகளுக்கு எதிராக ஹிட்லர் நடப்பித்த அட்டூழியங்களின் அளவும் வினைமையானத் தன்மையும் குறைவாக கருதப்பட முடியாது. ஆனால் எந்தவித “பாரபட்சமுமின்றி நோக்கும்போது,” “பெருமளவில் ஜெர்மனிக்கு சேதம் விளைவித்தது ஹிட்லரே” என்று ஹாஃப்னர் குறிப்பிடுகிறார்.
பெர்லினில் இப்பொழுது குண்டு காப்பரணிலிருந்த ஹிட்லர், 1945 ஏப்ரல் 30-ம் தேதி பெர்லினை முன்னிட்டு தீவிர போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் தற்கொலை செய்துகொண்டான். அவனுடைய விருப்பப்படியே தூதரக அலுவலக தோட்டத்தில் அவன் எரிக்கப்பட்டான். ஹிட்லரும் அவனுடைய கொள்கைகளும் புகையோடு மேலேச் சென்று மறைந்தன.
டிரெஸ்டனைவிட மோசமான ஒன்று
இதற்கிடையில் ஜப்பானுக்கு எதிரான போரில் நேச நாடுகள் கணிசமாக வெற்றி பெற்றுவந்தன. ஜப்பான் பெரு நிலப்பகுதி வரையாகச் செல்ல ஒரு தீவிலிருந்து மற்றொன்றுக்கு மாறிச் செல்லும் அவர்களுடைய திட்டம் எளியதாக இருந்தது. ஆனால் அதைச் செய்வது கடினமானதாக இருந்தது மட்டுமல்லாமல் பெருஞ்செலவைப் பிடிப்பதாகவும் இருந்தது. மேலுமாக, அவர்களாகவே தாயகம் சேர்ந்த தீவுகளின் மீது படையெடுப்பதால் நேச நாடுகளைச் சேர்ந்தவர்களில் ஐந்து லட்சம் பேரும் ஒருவேளை இன்னும் அதிகமான ஜப்பானியர்களும் உயிரிழப்பார்கள் என்பதாக மதிப்பிடப்பட்டது. போரை இன்னும் விரைவில் முடிவுக்கு கொண்டுவர மாத்திரம் ஏதாவது ஒரு வழி இருந்தால்! அமெரிக்கா செய்துவந்த இரகசிய கருவி அவ்விதமாகச் செய்வதை சாத்தியமாக்குமா?
இரண்டாம் உலகப்போர் ஆரம்பிப்பதற்கு முன்னால், ஜெர்மன் தேசத்து விஞ்ஞானிகள் அணுசக்தியை, கருவிகள் செய்வதற்கு பயன்படுத்தும் சாத்தியத்தைக் குறித்து பரிசோதித்து வருவதாக ஆல்பர்ட் ஐயன்ஸ்டீன் அமெரிக்க ஜனாதிபதியிடம் தெரிவித்தார். அதைச் செய்வதில் அவர்கள் வெற்றியடைவார்களேயானால், இராணுவத்தில் பயன்படுத்தக்கூடிய பேரளவான சக்தியைப் பெற்று தங்கள் இலக்குகளை அடைந்திட முடியும் என்பதாக அவர் எச்சரித்திருந்தார். இந்த ஆபத்தை ஈடுசெய்வதற்காக அமெரிக்க போர் துறை 1942-ல் திட்டமொன்றை செயல்படுத்தியது. இது அணுகுண்டை உற்பத்தி செய்யும் இலக்கைக் கொண்ட மான்ஹாட்டன் திட்டம் என்பதாக பின்னால் அழைக்கப்பட்டது.
1945 ஜூலை 16-ம் தேதி முதல் முறையாக, இப்படிப்பட்ட ஒரு வெடிகுண்டு நியு மெக்ஸிக்கோவின் மீது வெற்றிகரமாக போடப்பட்டது. ஐரோப்பாவில் இந்த இரகசிய கருவியை பயன்படுத்துவது மிகவும் பிந்திவிட்டது. ஆனால் ஆசியாவில் அவ்விதமாக இல்லை.a ஆகவே ஆகஸ்ட் 6-ம் தேதி ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவின் மீதும் மூன்று நாட்களுக்குப் பின்பு நாகசாக்கியின் மீதும் அணுகுண்டுகள் போடப்பட்டன. டிரெஸ்டன்மீது செய்யப்பட்ட தாக்குதலே வாதத்திற்குரிய ஒன்றாக இருந்திருக்குமேயானால், இந்த இரண்டு தாக்குதல்களும் இன்னும் எத்தனை அதிகமாய் அவ்விதமாக இருந்திருக்கும்! முடிவாக ஒருவேளை நூறாயிரக்கணக்கானோரின் உயிர் காப்பாற்றப்படுவதற்கு காரணமாக இருந்ததால் இவை நியாயமான தாக்குதல்களே என்பதாக சிலர் வாதாடுகிறார்கள். ஆனால் மற்றவர்களோ, குடியிருப்பில்லாத பகுதியில் பரிசோதனை செய்து காண்பித்திருந்தால் அதுவே ஜப்பான் சரணடைவதற்கு போதுமானதாக இருந்திருக்கும் என்பதாக சொல்லியிருக்கிறார்கள். எப்படியாயினும் நிலைமை மிகவும் மோசமாயிருப்பதை உணர்ந்து, ஜப்பான் கட்டுப்பாட்டின் மீது சரணடைந்தது. போர் முடிவுக்கு வந்தது—உண்மையில் முடிவுக்கு வந்தது!
“ஏன்” என்ற கேள்விக்கு பதிலளித்தல்
போர் துவங்குவதற்கும் அது தொடருவதற்கும் அடிப்படையில் காரணமாயிருந்தவர்களாக நேசப்படைகளால் கருதப்பட்டவர்கள் போர் குற்றங்களுக்காக நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். குற்றம் மெய்ப்பிக்கப்பட்டபோது அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.b உண்மையாகவே நாசிஸம் சரித்திரத்திலேயே மிக பயங்கரமான சில அட்டூழியங்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது. ஆனால் இவை அனைத்துக்கும் வழிநடத்திய காரணிகள் யாவை? நாசிஸத்தின் எழுச்சி பற்றி பேசுகையில் ஸ்விஸ் சரித்திராசிரியரும் பேராசிரியருமாகிய வால்தல் ஹோஃப்பர், “சரித்திர கேள்விகளுக்குரிய மிக எளிய விடைகள் பொதுவாக திரித்து கூறப்படுகின்றன என்றும் இந்த விஷயத்தில் இது விசேஷமாக உண்மையாய் இருப்பதாகவும்” வாதாடுகிறார். தொடர்ந்து அவர் இவ்விதமாக விளக்குகிறார்: “1914-1918 வரையாக நடைபெற்ற முழுவலிமை ஈடுபாட்டுப் போர் மற்றும் இராணுவ சூழ்நிலைமையின் தீவிரமான பின்விளைவுகளில்லாமல் தேசீய சோஷியலிஸ கொள்கையும் ஆட்சியும் நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருந்திருக்கும்.”
இந்த நூற்றாண்டின் பெரும் பகுதியிலும் இருந்து வந்திருக்கும் அவலமான உலக நிலைமைகள் 1914-1918 இடையே நடைபெற்ற சம்பவங்களோடு தொடர்புடையதாக இருக்கிறது என்ற உண்மையை இது ஆதரிக்கிறது. பைபிள் கால கணக்குப்படி இது “உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்டவன்” தேசங்களின் மீது தடையில்லாமல் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த பரலோகத்திலிருந்து தள்ளப்பட்ட சமயமாக இருந்தது. “அது பூமியிலே விழத் தள்ளப்பட்டது” என்பதாக எழுதிய பைபிள் எழுத்தாளன் பின்வருமாறு எச்சரிக்கிறான். “பூமியில் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்து மிகுந்த கோபங்கொண்டு உங்களிடத்தில் இறங்கியிருக்கிறான்.”—வெளிப்படுத்தின விசேஷம் 12:9, 12; வெளிப்படுத்தின விசேஷம் 11:18-ஐ ஒப்பிடவும்.
இரண்டாம் உலகப்போரைப் போலவே, முதல் உலகப் போரும் பிசாசினுடைய கோபத்தின் வெளிக்காட்டாக இருக்கிறது. இதன் காரணமாகவே, இரண்டு போர்களுக்கும் அவை உண்டுபண்ணின எல்லா வேதனைகளுக்கும் அவனே அடிப்படை காரணமாக இருக்கிறான். ஆஷ்விட்ஸை முன்னிட்டு ஜெர்மானியர்களிடமாக கோபத்தையும், பெர்ல் துறைமுகத்தை முன்னிட்டு ஜப்பானியர்களிடமாகவும் கோபத்தை அடக்கிக்கொள்வதை கடினமாக சிலர் உணருவதை புரிந்துகொள்ள முடிகிறது. மறுபட்சத்தில், டிரெஸ்டனை முன்னிட்டு சிலர் பிரிட்டிஷ் நாட்டவரிடமும் ஹிரோஷிமாவை முன்னிட்டு அமெரிக்க நாட்டவரிடமும் கோபங்கொள்ளக்கூடும். தேசீய மற்றும் தனிப்பட்ட வெறுப்புகள் மறைவது கடினமாக இருக்கிறது. ஆனால் கிறிஸ்தவர்களின் சிந்தனைகளை அவை கட்டுப்படுத்தக்கூடாது. இவர்கள் வெகு பொருத்தமாகவே பிசாசாகிய சாத்தானிடமாகத் தங்கள் கோப உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் கடவுளுடைய ராஜ்யம் பிசாசை அழித்து மனிதவர்க்கத்தின் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடும். இப்பொழுது இரண்டாம் உலகப்போர் முடிந்துவிட்டிருக்க, 1939-ல் எண்ணிக்கையில் 71,509 ஆக இருந்து 1945-ல் 1,41,606 ஆக வளர்ந்துவிட்டிருந்த யெகோவாவின் சாட்சிகள் விரிவான வகையில், பிரசங்கிக்க விரும்பிய நற்செய்தி இதுவாகவே இருந்தது. “இல்லாத ஒரு சமாதானத்தின் மத்தியில் ஏமாற்றத்துக்குரிய செழுமை” அவ்விதமாகச் செய்வதிலிருந்து அவர்களை தடை செய்யாது. எமது அடுத்த இதழில் அதைப்பற்றி வாசிக்கவும். (g87 5⁄8)
[அடிக்குறிப்புகள்]
a இன்னும் மூன்று மாதங்கள் ஹிட்லர் உயிரோடிருந்திருந்தால், அணுகுண்டால் தாக்கப்பட்ட முதல் நாடு என்ற நம்பத்தகாத தனிப்பெயரை ஜெர்மனி சம்பாதித்திருக்கும்
b நியுரெம்பெர்க் விசாரணையில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட உயர் பதவியிலிருந்த 22 நாசிக்களில் 12 பேர் மரண தீர்ப்பளிக்கப்பட்டார்கள். 3 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டார்கள். மற்றவர்களுக்கு பத்து ஆண்டுகளிலிருந்து ஆயுள் வரையாக நீடித்த சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
[பக்கம் 14-ன் பெட்டி]
மற்ற புதிய செய்திக் குறிப்புகள்
1944—வெடிகுண்டு தாக்குதலில், போப் ரோமை அழிக்காமல் விட்டுவிடும்படியாக போர் செய்துகொண்டிருந்த தேசங்களை கேட்டுக்கொள்கிறார்
1945—சர்வ தேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்துக்கொள்ள ஐக்கிய நாடுகள் அவை ஸ்தாபிக்கப்படுகிறது
கள்ள வாணிகம் செழித்தோங்க, உணவையும் உடையையும் மருந்து பொருட்களையும் அனுப்பிவைக்க எங்கும் நிவாரணம் அளிக்கும் அமெரிக்க கூட்டுறவு ஸ்தாபனம் (CARE) ஏற்படுத்தப்படுகிறது
இரண்டாம் உலகப் போரின் கடைசி மாதங்களின் போது, தென் அமெரிக்காவைச் சேர்ந்த 7 தேசங்கள் உட்பட, 13 கூடுதலான தேசங்கள் ஜெர்மனி மீது போர் தொடுக்கின்றன
பெண்களுக்கு வாக்குரிமை பிரான்சில் சட்டப் பூர்வமாக அளிக்கப்படுகிறது
ப்ரேஸில் நாட்டு ஜனாதிபதி கெட்டுலியோ வார்காஸின் 15 ஆண்டுகால ஆட்சி இரத்தம் சிந்துதலில்லா புரட்சியின் மூலம் கவிழ்க்கப்படுகிறது
[பக்கம் 12-ன் படங்கள்]
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் V-1 ஏவுகணையும் (வலது) V-2 ராக்கட்டும் (கீழே)