ஓர் இராணுவ வரலாற்று ஆசிரியனாக எனது பிரதிபலிப்புகள்
தேதி ஆகஸ்ட் 25, 1944. இடம்: பிரான்ஸில் உள்ள பாரிஸ். அகன்ற ஷான்ஸேலிஸே பெருஞ்சாலையில் எங்கள் ஜீப் சென்றுகொண்டிருக்கும்போது, பதுங்கித்தாக்கும் நாஸிகளிடமிருந்து குண்டுகள் தெருவின் குறுக்கே பாய்ந்து செல்வதனால், பலமுறை ஜீப்பிலிருந்து இறங்கி மறைவிடத்திற்கு ஓடிப்போக வேண்டியதாயிருந்தது.
இரண்டாம் உலகயுத்தத்தின்போது ஹிட்லர் படைகளிலிருந்து பாரிஸை விடுதலைசெய்வது அன்றுதான் தொடங்கியது. அந்நகரத்தில் நுழையும் முதல் அமெரிக்கர்கள் மத்தியில் நானும் ஒருவனாக இருந்தேன். பிரான்சு நாட்டின் ஆண்களும் பெண்களும் உணர்ச்சிமிகு திரள்களாக, அவர்களை விடுவித்தவர்களாகிய எங்களை வரவேற்க தெருக்களிலே திரண்டுவந்தனர். ஜெர்மானிய உயர் அதிகாரிகளால் அன்றுதான் உடனடியாக காலிசெய்யப்பட்ட ஒரு சொகுசு ஹோட்டலில் இரவைக் கழித்தோம்.
வரலாற்று எதிர்த்தாக்குக் குழுவின் ஓர் அங்கத்தினனாக நான் ஐரோப்பாவில் இருந்தேன். அக்குழு ஜெனரல் ஜார்ஜ் S. பேட்டன், Jr. என்பவரால் கட்டுப்படுத்தப்பட்டு, ஐ.மா.-வின் மூன்றாம் படையின் போர் நடவடிக்கைகளைப் பதிவுசெய்துகொண்டிருந்தது.
யுத்தம் எழுப்பிய கேள்விகள்
பாரிஸில் நுழைவதற்குச் சில நாட்களுக்குமுன், நாங்கள் குறுகிய சாலைகள் வழியாக வாகனத்தை ஓட்டிச்சென்றோம். அவற்றில் கிடந்த எரிக்கப்பட்ட ஜெர்மானிய கவசவாகனங்களின் அழிபாடுகள் சமீபத்தில்தான் அகற்றப்பட்டன. காடுகளில் இருந்த ஐ.மா. படைகளால் சமீபத்தில் பாழாக்கப்பட்ட அரண்வலுப்படுத்தப்பட்ட ஓர் இடத்தில் நாங்கள் சற்று நிறுத்தினோம். ஜெர்மானிய படைவீரர்களின் சடலங்கள் கிழிபட்டு, முறுக்கப்பட்டுக் கிடந்தன. அவர்களுடைய பெல்ட்டின் வார்ப்பூட்டுகள், “கடவுள் எங்களோடு இருக்கிறார்” என்ற வழக்கமான வாசகத்தைக் கொண்டிருந்தன. இருந்தபோதிலும், அருகிலிருந்த ஒரு கற்சுவரில், ஜெர்மானிய படைவீரன் ஒருவன், “தலைவா [ஹிட்லர்], எங்களுக்கு உதவிசெய்யும்!” என்ற வேண்டுகோளைக் கிறுக்கியிருந்தான்.
அந்த இரண்டு கூற்றுகளும் என் மனதில் மறக்கமுடியாதபடி பதிந்தன. ஒருபக்கம், நாஸி ஆட்சியினர், கடவுள் தங்களோடு இருப்பதாக உறுதியோடு கூறினர். மறுபக்கமோ, ஒரு படைவீரன் இரட்சிப்புக்காக தலைவர் ஹிட்லரிடம் வேண்டுகோள் விடுத்தான். ஜெர்மானியர்களுக்கு இந்த முரண்பாடு ஒன்றும் வழக்கத்திற்கு மாறானதல்ல. இந்தப் பயங்கர சண்டையில் இரு தரப்பினருக்கும் இது வழக்கமானதாகவே இருந்தது. எனவே ‘கடவுள் யுத்தத்தில் எப்பக்கத்தையாவது ஆதரிக்கிறாரா? அவர் யார் பக்கம் இருக்கிறார்?’ என்றெல்லாம் நான் சிந்தித்தேன்.
யுத்தங்களும் யுத்தத்தின் முன்னறிகுறிகளும்
நான் 1917-ல் மொன்டானாவின் ப்யூட்டில் பிறந்தேன். அமெரிக்கா முதல் உலக யுத்தத்தில் பிரவேசித்ததும் அதே வருடம்தான். தனியார் கல்விநிலையம் ஒன்றில் 1936-ல் பட்டப்படிப்பை முடித்த பிறகு, நான் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நுழைந்தேன். எனினும், உலகைச்சுற்றி சம்பவித்துக்கொண்டிருக்கும் குழப்பம் விளைவிக்கும் நிகழ்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, என்னுடைய முதல் வருடத்திற்குத் தேவையான பாடங்கள் சலிப்பூட்டுபவையாய் இருந்ததை நான் கண்டேன். ஜப்பான் சீனாவுக்கெதிராக படையெடுத்தது, முசோலினி எதியோபியாவை வென்றார், மற்றும் ஸ்பானிய உள்நாட்டுப்போர் உச்சநிலையை அடைந்தது. அப்போரில் நாஸிகளும், பாஸிஸக் கொள்கையினரும், கம்யூனிஸ்ட்களும், இரண்டாம் உலக யுத்தத்தில் உபயோகிப்பதற்கான ஒத்திகையில், தங்களுடைய போர்க்கருவிகளையும், போர்க்கலைகளையும், சோதனை செய்துகொண்டிருந்தனர். ஆனால் சர்வதேச சங்கமோ அமைதியாய் நின்று பார்த்துக்கொண்டிருந்தது.
இரண்டு செமஸ்டர்களுக்குப் பிறகு, நான் கல்லூரியிலிருந்து நின்றுவிட்டேன். அதற்குப்பதிலாக, என் கல்விக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மீதி பணத்தை, என் தந்தையின் சம்மதத்தோடு, ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்காவுக்கும் பயணம் செய்ய உபயோகிக்கத் தெரிந்துகொண்டேன். நான் 1938-ன் முடிவில் டாய்ச்லாண்ட் என்ற ஒரு ஜெர்மானிய கப்பலில், அட்லான்டிக் பெருங்கடலைக் கடந்தேன். அப்போது கப்பலில் இருந்த இளம் ஜெர்மானிய அதிகாரிகளிடம், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பேரரசுகளுக்கெதிராக ஒப்பிடும்போது ஜெர்மனிக்கிருந்த பலத்தைப்பற்றி நெடுநேரம் சர்ச்சை செய்தேன். பாரிஸில் மக்கள், ஹிட்லரின் அண்மைக்கால பயமுறுத்தல்கள், தற்பெருமைகள், உறுதிமொழிகள் போன்றவற்றைப்பற்றி பேசினர், இருப்பினும் அனுதின வாழ்க்கை வழக்கம்போலவே போய்க்கொண்டிருந்தது. ஆப்பிரிக்காவின் டேன்ஜியருக்குச் சென்றபோது, ஜிப்ரால்டர் ஜலசந்தியின் குறுக்கே, உள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்டிருக்கும் ஸ்பெய்னில் யுத்தத்தின் சப்தத்தை எனக்கு அவ்வப்போது கேட்கமுடிந்தது.
நான் 1939-ல் ஐக்கிய மாகாணங்களுக்குத் திரும்பியபோது, எங்களுடைய காலங்களைப்பற்றிய முன்னறிவிப்புக்களை உணர்ந்தேன். டிசம்பர் 1941-ல் ஜப்பானியர்கள் முத்துத் துறைமுகத்தைத் தாக்கி, ஐக்கிய மாகாணங்களை இரண்டாம் உலக யுத்தத்திற்குள் கொண்டுவந்தபின், நான் இராணுவ போக்குவரத்துச் சேவையில் படைத்துறையைச் சாராத ஊழியனாக சேர்ந்தேன். நான் 1942-ல் அலாஸ்காவில் இருந்த சமயம், ட்ராஃப்ட் போர்டிலிருந்து ஓர் அழைப்பைப் பெற்றேன்.
பிரிட்டிஷ் தீவுகளுக்கு
வீட்டுக்கு ஒருமுறை சென்று வந்த பிறகு, நான் இராணுவத்தில் அமர்த்தப்பட்டு, ஒரு வருடத்திற்கு ஐக்கிய மாகாணங்களில் பணியாற்றினேன். அதன் பிறகு இங்கிலாந்துக்குக் கப்பலேற்றி அனுப்பிவைக்கப்பட்டேன், எங்கள் கப்பல் தொகுதி 1944-ன் வசந்தகாலத்தில், ஐக்கிய மாகாணங்களின் கிழக்குக் கரையைவிட்டுப் புறப்பட்டது. வட அட்லான்டிக் பெருங்கடலில், எங்கள் கப்பலுக்கு அடுத்ததாக இருந்த கப்பலை ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பல் மூழ்கடித்தபோதுதான் என்னுடைய முதல் யுத்த அனுபவம் ஏற்பட்டது. எங்கள் கப்பல் தொகுதி பிரிக்கப்பட்டு, கப்பல்கள் ஒவ்வொன்றும் மற்ற கப்பல்களின் உதவியின்றி அங்கிருந்து தனியாக லிவர்பூலுக்குச் சென்றன.
இங்கிலாந்தில் ஒரு பணிமனையில் வேலையில் அமர்த்தப்படுவதற்காக காத்திருந்த சமயத்தில், இராணுவ தலைவர் ஒருவரால் ஒரு சொற்பொழிவு கொடுக்கப்படுவதற்காக அணிகளெல்லாம் கூட்டிச் சேர்க்கப்பட்டன. இராணுவ தலைவர்கள், எதிர்த்த அணியிலுள்ள தங்களுடைய சொந்த மத அமைப்புகளின் அங்கத்தினருக்கு எதிராக ஆட்களை ஏவிவிட்டு, ஆனால் போரில் கடவுள் தங்களுடைய அணியை ஆதரிப்பதாக எப்போதும் உரிமைபாராட்டினர். இது என்னைக் கவலைக்குள்ளாக்கியது. சந்தேகமின்றி, இருதரப்பினருக்குமே கடவுளுடைய ஆதரவு இருந்திருக்கமுடியாது.
பிரிட்டிஷ் தீவுகள் 1944-ன் வசந்தகாலத்தில், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர்வீரர்களாலும் போர்த்தளவாடங்களாலும் நெருக்கப்பட்டன. சிசிலியா மற்றும் வட ஆப்பிரிக்க போர் இயக்கங்களில், துணிகரமுள்ள தந்திரங்களுக்குப் பேர்பெற்ற ஜெனரல் பேட்டன் (கீழே), உணர்ச்சியைத் தூண்டிவிடக்கூடிய, அனல்பறக்கும் பேச்சுகளை (pep talks) கொடுத்தார். அப்பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருந்த அணிகளுக்குத் தாங்கள் அங்கு இருப்பதன் நோக்கம் என்ன—வெற்றி அடைந்துதீரும்வரை, கையிலிருக்கும் ஒவ்வொரு ஆயுதத்தாலும், எதிரிகளில் எத்தனை பேரைக் கொல்லமுடியுமோ அத்தனை பேரையும் கொல்வதற்காகவே—என்பதில் அவர்களுக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. பேட்டன் ஒரு நவீனகால ரோம சண்டைவீரனைப்போல (gladiator)—உயரமான, ஆயுதங்களைத் தரித்த, தலைக்கவசம் அணிந்த, பளிச்சிடும் சீருடையணிந்த வீரனைப்போல—காணப்பட்டார். அவருடைய போர்ச்சட்டை நட்சத்திரங்களையும் மற்ற அலங்காரங்களையும் கொண்டு மினுமினுத்தது. அவர் ஆட்களைச் செயலுக்குப் பலமாக தூண்டுபவராகவும், முரட்டுத்தனமாக கொச்சையாய்ப் பேசுபவராகவும், மதப்பற்றுமிகுந்தவராகவும் இருந்தார். அவர் யுத்தத்திற்குமுன் ஜெபிப்பார்.
ஜனவரி 1, 1944 அன்று தனது “போர்வீரர்களின் ஜெபத்தில்,” பேட்டன் இவ்வாறு வேண்டிக் கொண்டார்: “கடலிலும், நிலத்திலும் எங்களை எப்போதும் வெற்றிக்கு வழிநடத்திய, எங்கள் பிதாக்களின் தேவனே, எங்கள் போர்களிலேயே மிகப் பெரியதாகிய இப்போரில், எழுச்சியூட்டும் உமது வழிநடத்துதல்களைத் தொடர்ந்து எங்களுக்குத் தாரும். . . . எங்களுக்கு வெற்றியைத் தாரும், கர்த்தாவே.”
ஐரோப்பாவின் படையெடுப்பு
ஜூன் 6, 1944-ல், உலகம் இதுவரை கண்டவற்றிலேயே பெரிய கப்பற்படை தொகுதியாக, இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து சென்ற ஆக்கிரமிப்புக் கூட்டுப் படைகள், ஜெர்மானிய படைகளின் தீவிர தாக்குதலுக்குட்பட்டதன் காரணமாக நார்மண்டி கடற்கரையில் இறங்கின. முப்பது நாட்கள் கழித்து எங்களுடைய மூன்றாம் படை இறங்கியபோது, கடற்கரை நிலப்பரப்புப் போதாமற்போயிற்று. ஜெர்மானிய விமானங்கள் அப்பகுதியில் குண்டுமழை பொழிந்துகொண்டிருக்க, குண்டுகளிலிருந்து தப்பிக்கொள்ளும் குழிகளில் (foxholes) இரவைக் கழித்தோம்.
ஜூலை 25-ல் கூட்டுப்படைகள் கடற்கரை பகுதிகளிலிருந்து முன்னேறி சென்றன. ஒரு வாரம் கழித்து, எங்களுடைய மூன்றாம் படை பிரிட்டன் தீபகற்பத்தை நோக்கி முன்னேறும்படி ஏவிவிடப்பட்டன. பிறகு நாங்கள் கிழக்கே, பின்வாங்கும் ஜெர்மானிய படைகளை ஊடுருவி பாரிஸுக்கு அருகிலுள்ள ஸீன் நதிக்குச் சென்றோம். செப்டம்பரில், நவீன வரலாற்றில் உள்ள குறிப்பிடத்தக்க இராணுவ தாக்குதல்கள் ஒன்றில், பேட்டனின் டாங்கிகளும் அணிகளும் கிழக்குப் பிரான்ஸின் உள்பகுதிக்குச் சென்றெட்டின. யுத்தத்தின் முடிவு நெருங்கிவிட்டது என்று சந்தோஷத்தோடு உணர்ந்தோம்.
எனினும், அதற்கான எந்தச் சாத்தியமும் மறைந்துபோயிற்று. காரணம் பெரும்பாலான அணிகளும் பொருட்களும் திடீரென பிரிட்டிஷ் ஃபீல்ட் மார்ஷல் மாண்ட்கோமரியின் படைகளுக்கெதிராக வடமுகப்பிற்குத் திருப்பிவிடப்பட்டன. அங்கு ஹாலந்தில் ஜெர்மானிய படைகளுக்கு எதிராக ஒரு கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் கூட்டுப்படையின் ஒரு விமானப்பிரிவு பலமிக்க ஒரு ஜெர்மானிய ஆயுதப்படைப்பிரிவின் மத்தியில் அறியாமல் வந்திறங்கியபோது பேராபத்து விளைந்து அது தோற்கடிக்கப்பட்டது. கூட்டுப்படையின் மீதமுள்ள தொகுதிகளும் அமிழ்ந்துபோய் முன்னேறி தாக்குவது தோல்வியடைந்தது.
மின்னல் போர்
ஹிட்லரும் அவருடைய ஜெனரல்களும் தொகுதிகளை மாற்றியமைக்க இருந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நெருக்கடிகால சேமப்படைகளை அழைத்து, ஐ.மா.-வின் படைகள் எங்குக் குறைவாக இருக்கின்றனவோ அதற்கருகில் ஒரு மிகப் பெரிய ஆயுத டாங்கிகள் தொகுதியை இரகசியமாகக் கூட்டிச் சேர்த்தனர். டிசம்பர் 16-ம் தேதி இரவு அடர்ந்த மேகக்கூட்டத்தின் கீழ் மின்னல் போர் என்றழைக்கப்படும் நாஸி தாக்குதல் தொடங்கிற்று. ஒரு ஜெர்மானிய ஆயுதப்படைப்பிரிவை வட கடல் வரை அனுப்பி, கூட்டுப்படைகளை இரண்டாகப் பிரித்து அவர்களது முக்கிய விநியோக துறைமுகத்தைக் கைப்பற்றுவதே இவர்களது நோக்கமாயிருந்தது.
ஆயுதமடைதிறந்து ஜெர்மானிய ஆயுதங்கள் பொழிந்தன. விரைவில் பாஸ்டானில் அமெரிக்கப்படைகள் முற்றுகையிடப்பட்டன. விரைவில் ஜெனரல் பேட்டனின் கீழுள்ள மூன்றாம்படை தனது திசையை மாற்றிக்கொண்டது. நெடுந்தொலைக் கடுநடைக்குப்பின் நாங்கள் ஆயுத டாங்கி தொகுதிகளுக்கு எதிராக கடுந்தாக்குதலை நடத்த சென்றுசேர்ந்தோம். எனினும், அடர்த்தியான மேகமும் கனத்த மழையும் கிட்டத்தட்ட ஒரு வாரம் தொடர்ந்திருந்ததன் காரணமாக விமானப்படைகள் பயன்படுத்தப்படமுடியாமற்போயிற்று.
பேட்டனின் ஜெபம்
டிசம்பர் 22-ம் தேதி நடந்த ஏதோவொன்று ஆவிக்குரிய குழப்பத்திலிருந்த என் இருதயத்தைத் தொட்டது. வாரங்களுக்குமுன்பே, ஜெனரல் பேட்டன் தனது தலைமை குருவைக்கொண்டு துண்டுப் பிரசுரம் வடிவில் ஒரு ஜெபத்தைத் தயாரித்தார். இது ரைன் நதியின் மேற்குவரை பரந்திருந்த ஜெர்மானிய பாதுகாப்பு எல்லையில் பின்னர் உபயோகிப்பதற்காகும். ஆனால் இப்போது பேட்டன் சிலமணிநேரத்திற்குள் சுமார் 3,50,000 பிரதிகளை, மூன்றாம் படையிலுள்ள ஒவ்வொரு வீரருக்கும் ஒன்றைக் கொடுக்கும்படி செய்தார். அது “இந்த மிதமிஞ்சிய மழையை நிறுத்தும்படியும்,” ஐ.மா. இராணுவம் “எங்கள் எதிரிகளின் துன்மார்க்கத்தையும் ஒடுக்குதலையும் அழித்தது, மக்கள் மற்றும் தேசங்கள் மத்தியில் உமது நீதியை நிலைநாட்டுவதற்கும், சாதகமான வானிலையைக் கொடுக்கும்படியும்” பிதாவைக் கெஞ்சி கேட்டுக்கொண்டது.
கவனிக்கத்தக்கவகையில், அந்த இரவே வானம் திடீரென தெளிவடைந்து அடுத்த ஐந்து நாட்களுக்கும் தெளிவாகவே இருந்தது. இது கூட்டுப்படையின் சண்டையினரும் குண்டுவீச்சாளர்களும், நாஸி படையினரின் காவல் எல்லையின் முழுநீளத்திற்கும் சென்று, நாஸி படைகள் விளைவித்த பேரழிவைப் பழிவாங்கவும் அவர்களுக்கு அழிவு ஏற்படுத்தவும் அனுமதித்தது. இது ஹிட்லரின் மின்னல் போருக்கு முடிவையும், சிதறிய அவரது படைகள் பின்வாங்கிப்போதலின் தொடக்கத்தையும் அர்த்தப்படுத்திற்று.
பேட்டன் ஆனந்தக்களிப்பிலிருந்தார். “அந்த ஜெபத்தின் இன்னும் 1,00,000 பிரதிகளை அச்சடிக்கும்படி செய்யவேண்டும் என நான் நினைக்கிறேன். கர்த்தர் நம் பக்கம் இருக்கிறார். நமக்குத் தேவையானதை அவரிடம் நாம் சொல்லிவைக்கவேண்டும்,” என்றார் அவர். ஆனால் ‘அந்த ஜெபத்தைக் கொடுத்தாலும் கொடுக்காமலிருந்திருந்தாலும், டிசம்பர் 23-ம் தேதியன்று வானம் தெளிவாகியிருந்திருக்காதா?’ என்று நான் யோசித்தேன். பின்னர், ரஷ்யாவின் வறண்ட நிலப்பகுதிகளிலிருந்து ஒரு குளிர்ந்த காற்றுப் படலம் வந்து அந்த மேகக்கூட்டங்களைச் சிதறடித்ததாக வானிலை ஆய்வுக் குழு விளக்கிற்று.
ஜெர்மனி சரணடைதலும் யுத்தத்திற்குப் பிறகுள்ள ஜெர்மனியும்
அந்தக் கூட்டுப்படையின் வசந்தகால தாக்குதல் ஹிட்லரின் பேரரசை அதன் முடிவுக்குக் கொண்டுவந்து, மே 7, 1945-ல் சரணடைதல் நடைபெற்றது. அன்று நான் ரைன்லேண்டில் உள்ள ஒரு ஜெர்மானிய கிராமத்தில் இருந்தேன். அங்குதான் பெல்ஜியத்திலிருந்து அகதியாக வந்த என்னுடைய அழகிய எதிர்கால மனைவி லிலியைக் கண்டேன். நவம்பர் 1945-ல் நான் இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஜெர்மனியில், ஐ.மா. ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வரலாற்றுப் பிரிவில் பணிக்குச் சேர்ந்தேன். டிசம்பரில், நானும் லிலியும் ஃப்ராங்க்ஃபர்ட் மேயர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம்.
இந்த வரலாற்றுப் பிரிவு, ஆக்கிரமிப்பு வரலாற்றைப் பதிவுசெய்துவைக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தது. அது ஜெர்மனியின் பக்கத்திலிருந்து யுத்த வரலாற்றை எழுதுவதற்கு, போரில் பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஜெர்மானிய ஜெனரல்களை உபயோகித்தது. தலைமை ஆவணக்காப்பாளராக நான் ஜெர்மனியில் ஐந்து வருடங்கள் பணிபுரிந்தேன். அதன்பின், எங்கள் இரண்டு குழந்தைகள், கேரி, லிஸட் ஆகியோரோடு நாங்கள் ஐக்கிய மாகாணங்களுக்கு மாறிச்சென்றோம்.
என்னுடைய பெற்றோரை ஒருமுறை சந்தித்த பின், மொன்டானா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். இராணுவத்தோடு எனக்கிருந்த உறவு முடிந்துவிட்டது என்று நான் கருதினேன். எனினும், 1954-ம் ஆண்டு வசந்தகாலத்தில், நான் மானிடவியலில் முதுகலை பட்டம் பெறப்போகும் தருவாயில், ஓக்லஹாமாவில் உள்ள இராணுவ பீரங்கி மற்றும் ஏவுகணை நிலைய அருங்காட்சியகத்தின் இயக்குநர்/காப்பாட்சியர் (curator) பதவிக்கு ஆள் தேவைப்படுவதாக என்னுடைய முன்னாள் உடன்வேலையாட்கள் இருவர் எனக்கு அறிவித்தனர். நான் விண்ணப்பித்தேன்; ஏற்றுக்கொள்ளப்பட்டேன், எனவே இடமாறிச் சென்றேன்.
இராணுவ அருங்காட்சியக நடவடிக்கைகள்
மீண்டும் நான் இராணுவ வரலாற்றைக் கையாண்டுகொண்டிருந்தேன். நான் ஆராய்ச்சி, கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருட்கள், காட்சிப்பொருட்கள் போன்றவற்றை வாங்குவது, சுற்றுலாக்கள், சொற்பொழிவுகள், புதைபொருள் அகழ்வாராய்ச்சிகள், இராணுவ மற்றும் வரலாற்று விழாக்கள் போன்ற நடவடிக்கைகளில் இறங்கிவிட்டேன். வரலாற்றின் ஒரு காலத்தில் விழாக்கோலத்தில் மனிதரும் குதிரைகளும் அலங்கரிக்கப்படுவதுபோல அலங்கரிக்கும் கூடம் (vintage ceremonial equestrian unit) ஒன்றை நான் ஒழுங்கமைத்தேன். அது 1973-ல் வாஷிங்டன் D.C.-யில் நடந்த ஜனாதிபதியின் தொடக்கவிழா அணிவகுப்பில் கலந்துகொண்டது. மேலும் நான் தேசிய கொடி மற்றும் இராணுவப் பிரிவுகளின் கொடிகளின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் சித்தரிக்கும் கொடிகளின் காட்சியகம் ஒன்றையும் நிறுவினேன். பல வருடங்களாக, இந்த ஆயுத அருங்காட்சியகம், ஒரே ஒரு கட்டடத்திலிருந்து நாட்டிலேயே மிகப்பெரிய இராணுவ அருங்காட்சியகமாக வளர்ந்திருக்கிறது.
இதற்கிடையில், எங்களது குழந்தைகள் வளர்ந்துவந்தனர். என் மகன் கேரி, கல்லூரியிலிருந்து பட்டதாரியான பின்பு, வழிநடத்துதல் இல்லாதவனாக உணர்ந்தான். அவன் கடற்படையில் சேர்ந்து, வியட்நாம் போரில் சேவைபுரிந்தான். வெளிநாட்டில் இரண்டு வருடங்களைக் கழித்தபின், அவன் வீட்டிற்குப் பத்திரமாகத் திரும்பிவந்ததற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருந்தோம். தெளிவாகவே, யுத்தங்கள் சமாதானத்தைப் பாதுகாக்க தவறுகின்றன. அதற்குப்பதிலாக, பட்டினியும் நோய்களும் தங்களுடைய மக்களை அலைக்கழித்துக்கொண்டிருக்கும்போது, ஐக்கிய நாடுகளின் அங்கத்தினர்கள் ஒருவருக்கெதிராக ஒருவர் தொடர்ந்து யுத்தம்செய்வதைப் பார்த்துவந்திருக்கிறோம்.
ஓய்வுபெறுதலும் ஏமாற்றமும்
இறுதியாக, 33 வருட இராணுவக் கூட்டுறவுக்குப்பின், ஓய்வுபெற வேளைவந்துவிட்டது என நான் தீர்மானித்தேன். தலைமை பொறுப்பிலிருந்த ஜெனரலும் பணியாட்களும் சேர்ந்து எனக்கு ஒரு விசேஷித்த ஓய்வுபெறும் விழாவை நடத்தினர். அப்போது ஓக்லஹாமா மாகாணத்தின் ஆளுநர் 1979 ஜூலை 20-ம் தேதியை என்னுடைய பேரில் ஒரு நாளாக அறிவித்தார். இராணுவ வரலாறு மற்றும் அருங்காட்சியக துறைகளுக்கான என்னுடைய பணியைப் பாராட்டி கடிதங்கள் பெறப்பட்டன.
நான் மிகுந்த சந்தோஷமுள்ளவனாக இருந்திருக்கவேண்டும். இருப்பினும், என்னுடைய கடந்தகாலத்தை நினைத்துப் பார்க்கும்போது, நான் சந்தோஷமடையவில்லை. யுத்தத்தின் கொடூரமான உண்மைகளை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அதன் பாரம்பரியம், சீருடைகள், பதக்கங்கள், ஆயுதங்கள், தந்திரங்கள், ஆசாரமுறைமைகள், விழாக்கள், ஆரவாரங்கள், கண்காட்சிகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், யுத்தத்தை மகிமைப்படுத்துவதற்காக என்னுடைய பணி அர்ப்பணம் செய்யப்பட்டது. பின்னர் ஐ.மா.-வின் 34-வது ஜனாதிபதியாயிருந்த ஜெனரல் ட்வைட் D. ஐஸ்னோவர் கூட, “யுத்தத்தின் சாரம், சுடுதல், பஞ்சம், கொள்ளைநோய்கள் போன்றவையாகும் . . . நான் யுத்தத்தை வெறுக்கலானேன். யுத்தம் எதையும் தீர்த்துவைப்பதில்லை,” என்று சொன்னார்.
காலப்போக்கில் ஐஸ்னோவரின் தாய் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்துவந்திருக்கிறார் என்றறிந்தேன். என் மனைவி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்துவந்ததால் அவர்களுடைய விசுவாசம் ஏற்கெனவே என்னைப் பாதித்திருந்தது. நான் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன், 1979-ல் அவள் முழுக்காட்டப்பட்ட ஒரு சாட்சியானாள். அவள் மாறினவளாகத் தோன்றினாள். எங்களுடைய மகனும் அவனுடைய மனைவி கேரனும் பைபிளைப் படிக்கத் தொடங்கி, ஒரே வருடத்திற்குள் அவர்களும் முழுக்காட்டுதல் பெற்ற சாட்சிகளாகும் அளவுக்கு, தான் கற்றுக்கொண்ட காரியங்களை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொள்வதில் அவளுக்கு விருப்பமும் சந்தோஷமும் இருந்தது.
எனினும், நான் சந்தேகப்பட்டேன். கடவுள் உண்மையிலேயே மனித விவகாரங்களில் தலையிட்டு, இவ்வுலகத்திற்கு முடிவைக் கொண்டுவந்து, யுத்தமில்லாத ஒரு புதிய உலகத்திற்குக் கூட்டிச்செல்வார் என்பதெல்லாம், ஒரு கூடாத காரியம் என்பதாக எனக்குத் தோன்றின. இருப்பினும், முக்கியமாக சாட்சிகளுடைய மத நம்பிக்கைகள் உறுதியான ஆதாரங்களைக் கொண்டிருந்தனவா என்று கண்டுபிடிப்பதற்காக நானும் அவர்களோடு படிக்கத் தொடங்கினேன். என்னுடைய பின்னணி மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட ஆராய்ச்சித் திறமைகளின் காரணமாக, அவர்களுடைய நம்பிக்கைகளில் உள்ள தவறுகளையும், முரண்பாடுகளையும் மிக விரைவிலேயே எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று கருதினேன்.
ஒரு புதிய வாழ்க்கைப் பாதை
எனினும், என்னுடைய பைபிள் படிப்பில் முன்னேறிவரவர, நான் எவ்வளவு தவறாக கருதினேன் என்பதை விரைவில் உணர்ந்தேன். மத அறியாமை என்ற செதிள்கள் என் கண்களிலிருந்து விழத்தொடங்கியபோது, என்னுடைய சந்தேகம் மறைந்தது. உண்மையில், நீதிவாசமாயிருக்கும் ஒரு புதிய உலகத்திற்கான கடவுளுடைய வாக்குறுதியில் நம்பிக்கை வைப்பதற்கு ஓர் உறுதியான ஆதாரம் இருந்ததை என்னால் காணமுடிந்தது. (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4) மனிதவர்க்கத்தின் மத்தியில் தலைவிரித்தாடும் துன்மார்க்கமும், அநீதியும் நிலவியிருப்பது, கடவுளாலல்ல, ஆனால் இந்த ஒழுங்குமுறையின் அதிபதியாகிய சாத்தானாலே என்றறிவது என்னே ஒரு விடுதலை! (யோவான் 14:30; 2 கொரிந்தியர் 4:4) இதனால், யெகோவா தேவன் தேசங்களின் யுத்தங்களில் எந்தத் தரப்பினருக்கும் ஆதரவளிப்பதில்லை. இருப்பினும், அவர் மனிதர்கள்மேல் அக்கறைகொள்கிறார்.—யோவான் 3:16.
மொன்டானாவின் பில்லிங்ஸில் 1983-ல் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு ஒன்றில், நான் முழுக்காட்டப்பட்டு, இவ்வாறு யெகோவாவுக்கான என்னுடைய ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்திக்காட்டினேன். என் மகன் கேரியும், நானும் எங்களுடைய அந்தந்தச் சபைகளில் மூப்பர்களாக சேவைசெய்துவருகிறோம். இந்தத் தலைமுறையை அடையாளப்படுத்தும் பேரழிவுக்குரிய சம்பவங்களின் அர்த்தத்தை அறிந்துகொள்ள உதவிய பைபிள் சத்தியங்களுக்கு, தம்முடைய வார்த்தையின் மூலமும் தம்முடைய சாட்சிகளின் மூலமும், எங்கள் இருதயங்களைத் திறந்தமைக்காக நானும் லிலியும் யெகோவாவுக்கு ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். (மத்தேயு 24:3-14; 1 யோவான் 2:17)—ஜெலெட் க்ரிஸ்வல்ட் சொன்னபடி. (g93 4/22)
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
Parisians scatter as German snipers open fire, August 1944 (U.S. National Archives photo)
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo
[பக்கம் 11-ன் படம்]
நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்ட ஜெர்மானிய கவசங்களின் அழிபாடுகள், பிரான்ஸ், 1944
[படத்திற்கான நன்றி]
U.S. Department of Defense
[பக்கம் 12-ன் படம்]
என்னுடைய மனைவி மற்றும் மகளுடன் 1947-ல்