அன்று இராணுவ வீரன் இன்றோ இயேசுவின் படைவீரன்
லிவீ லால்யா என்பவரால் சொல்லப்பட்டது
அந்த நாள் ஆகஸ்ட் 16, 1944. இரண்டாம் உலக யுத்தத்தில் தென் பிரான்ஸின் கடற்கரை ஓரங்களில் வந்திறங்கிய நேச நாடுகளின் படையில் நானும் இருந்தேன். மத்தியதரைக் கடலின் கரையோரத்தில் நடத்திய ஒரு வாரகால சண்டைக்குப் பிறகு எங்கள் பீரங்கிப் படை துறைமுகப் பட்டணமாகிய மார்செய்ல்ஸுக்குள் நுழைந்தது; மலைப்பாங்கான பகுதியில் போரிட்டுக் கொண்டே நாட்ரா-டாம்-டா-லா-கார்ட் பெசிலிக்காவை நோக்கி முன்னேறியது. ஜெர்மானியரின் அரண்கள் அனைத்தையும் வளைத்துப் பிடிப்பதுதான் எங்கள் படையெடுப்பின் நோக்கம்.
சண்டை வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. முதலில் எங்களுடைய பீரங்கிகளில் ஒன்று தாக்கப்பட்டதினால் எங்கள் அருமை சகாக்களில் மூவரை பறிகொடுத்தோம். அடுத்து, என்னுடைய பீரங்கியின் சக்கரம் ஒன்றை கண்ணிவெடி பதம்பார்த்ததால், முடமாகிவிட்டது. ஆனாலும் எங்கள் பிடி தளரக்கூடாது என்பதில் எங்களுக்கிருந்த மன உறுதி இன்னும் பல மணி நேரம் போரிட வைத்தது.
போர் மும்முரம் குறைந்த சமயத்தில் அதை எனக்கு சாதகமாக்கிக் கொண்டு நடந்தே முன்னேற ஆரம்பித்தேன். ஒரு கையில் மெஷின் கன்-னையும் மறுகையில் பிரெஞ்ச் கொடியையும் பிடித்தவனாய் ஃப்ரீ ஃபிரெஞ்ச் வீரர் ஒருவருடன் அடிமேல் அடிவைத்து முன்னேறினேன். என் சக்தி எல்லாம் இழந்து துவண்ட நிலையில், பெசிலிக்காவின் வாயிலில் பிரெஞ்ச் தேச கொடியை நாட்டினேன். குண்டுவீச்சின் புகையினால் என் முகம் கருத்திருக்க உள்ளமோ வெற்றியினால் பூரித்திருந்தது.
விடுதலை
அதைத் தொடர்ந்த வாரங்களில் பின்வாங்கிக்கொண்டிருந்த ஜெர்மானிய படைகளை துரத்திக் கொண்டு வடக்கு நோக்கி முன்னேறினோம். பதுங்கி இருந்து சுடுபவர்கள் இருந்ததாலும், ரோடுகளுக்கு குறுக்கே தந்திக் கம்பிகள் எங்கள் தலைகளுக்கு மேலே எட்டும் உயரத்தில் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்ததாலும் எங்கள் பீரங்கி வண்டிகளின் கதவுகளை டைட்டாக பூட்டி வைத்தவர்களாய் முன்னேறினோம்.
அக்டோபரில் எங்கள் படைப்பிரிவு வடகிழக்கு பிரான்ஸில், வாஷ் மலைத்தொடரில் அமைந்துள்ள ராமான்ஷான் என்ற சிறு நகரத்தை அடைந்தது. நகரமே சத்தமின்றி வெறிச்சோடி காட்சியளித்தது. பீரங்கியின் மேலே ஏறி சுற்றிலும் ஒரு நோட்டம் விடுகையில் திடீரென்று எங்கிருந்தோ ஒரு சன்னலிலிருந்து பாய்ந்து வந்த ஏவுகணை பீரங்கிக்குள் விழுந்த அதே கணத்தில் வெடித்து எங்களில் மூவரை பலிகொண்டது. நானும் இன்னொரு சிப்பாயும் பலத்த காயமுற்றோம். பீரங்கி வண்டியின் சக்கரங்களோ நகர முடியாதளவுக்கு மண்ணில் புதைந்துவிட்டன. அந்தத் தாக்குதலின்போது மட்டும் 17 வெடிகுண்டு துண்டுகள் என் காலுக்குள் ஏறின. படுமோசமான இந்த நிலையிலும் வேறொரு பீரங்கி எங்கள் பீரங்கியை இழுத்துச் செல்ல நான் இதை ஓட்டிச்சென்றேன்.
இந்தச் சாதனைக்கான பாராட்டு உடனடியாக எனக்கு பறந்துவந்தது. பிரெஞ்ச் முதல் படையின் கமாண்டர், ஜெனரல் டா லட்ர டா டாஸின்யியை சந்திக்கும் வாய்ப்பு சில தினங்களில் எனக்குக் கிடைத்தது; மார்செய்ல்ஸில் புரிந்த சாதனைக்காக பதக்கமளித்து என்னை கெளரவித்தபின் “சீக்கிரத்தில நாம திரும்பவும் சந்திப்போம்” என விடைபெறுகையில் அவர் என்னிடம் கூறினார்.
வெகு விரைவில் தூதரகத்தில் ஜெனரலின் செகரட்டரியாக நியமனம் பெற்றேன். சீக்கிரத்தில் பெர்லினுக்கு அவருடன் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது; அங்கு ஜெர்மானியர் மே 8, 1945-ல் சரணடைந்தபோது அவர்தான் பிரான்ஸ் பிரதிநிதியாக கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து வந்த 4 வருடங்களுக்கு அவர் இட்ட எந்த ஆணையையும் இம்மியும் பிசகாமல் செய்து வந்தேன்.
இருந்தபோதிலும் என்னால் எப்படி இந்தளவுக்கு இரண்டாம் உலகப் போரின் முக்கிய சம்பவங்களில் ஹீரோ ஆகமுடிந்தது?
சண்டையிலும் சர்ச்சிலும் பயிற்சி
நான் பக்திமிக்க ரோமன் கத்தோலிக்கனாக வளர்ந்தேன்; என் கடவுளுக்கும் நாட்டுக்கும் சேவை செய்ய விரும்பினேன். ஆகஸ்ட் 29, 1939-ல், இரண்டாம் உலக யுத்த களத்தில் பிரான்ஸ் குதிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு மோட்டாரில் போர் புரியும் சிப்பாய் பணிக்கு என் பெயரை பதிவுசெய்தேன். அந்தச் சமயத்தில் எனக்கு வயது 18 தான். பாரிஸில், எக்கால் மில்லிடெரில் 5 மாத பயிற்சிக்குப்பின் பிரான்ஸின் கிழக்கத்திய படையில் முன்னணியில் சேவிக்கும் படைத்துறை பதவி வகிக்காத இளம் அதிகாரியாக அனுப்பப்பட்டேன்.
இந்தக் காலப்பகுதியைப் போருக்காக காத்திருந்த காலப் பகுதி என்றே சொல்லலாம்; ஏனெனில் மற்ற பகுதிகளில் மும்முரமாக போரிட்டு வந்த ஜெர்மானியப் படையினரின் வரவை நாங்கள் எதிர்நோக்கி அப்போது காத்திருந்தோம். ஜெர்மானியர் எங்களைத் தாக்குகையில் ஜூன் 1940-ல் கைதியாக கொண்டுசெல்லப்பட்டேன். இரண்டு மாதங்களுக்குப் பிறகு தப்பியோடி, வட ஆப்பிரிக்காவில் இருந்த பிரெஞ்சு படைகளுடன் சேர்ந்துகொண்டேன்.
ஜெனரல் இர்வீன் ராமல் என்பவரின் தலைமையில் வந்த ஜெர்மானிய படைகளுக்கு எதிராக டுனிஷியாவில் போர் புரிந்தேன். அவருக்கு வனாந்தர நரி என்ற பட்டப் பெயர் இருந்தது. அப்போரில் எனக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா? உடலில் 70 சதவீதத்திற்கும் அதிகம் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு, 9 நாட்கள் கோமாவில் கிடந்தேன். வடமேற்கு அல்ஜீரியாவில், சிடி-பெல்-அபிஸ் என்ற இடத்திலிருந்த ஆஸ்பத்திரியில் 3 மாதங்கள் இருந்தேன்; இங்கு தான் பிரெஞ்சின் வெளிநாட்டு படைத்தளத்தின் தலைமையகமும் இருந்தது. வட ஆப்பிரிக்காவில் இருக்கையில், க்ரூவா டா கெர் என்ற பட்டாள சிலுவைக்குறியைப் பதக்கமாகப் பெற்றேன்.
ராணுவ முகாமிலிருந்த கத்தோலிக்க சர்ச் “கிறிஸ்தவ” கடமையை சரிவர செய்யும்படி எங்களுக்கு போதித்தது. அங்கு பெற்ற அறிவுரைக்கு இசைவாய், பிரான்ஸுக்காக என் உயிரையே தியாகம் செய்ய தயாராய் இருந்தேன். என்னால் முடிந்த போதெல்லாம் யுத்தத்திற்கு செல்லும் முன் சர்ச்சில் நன்மை வாங்கிக்கொண்டேன். யுத்தம் வலுக்கையில் கடவுளிடமும் கன்னி மரியாளிடமும் ஜெபித்தேன்.
எதிரிப் படையிலிருந்த பக்திமிக்க ரோமன் கத்தோலிக்க சிப்பாய்களை பெரிதும் மதித்தேன். காட் மிட் உன்ஸ் (கடவுள் நம்மோடிருக்கிறார்) என்ற எழுத்துக்கள் அவர்களில் சிலருடைய பெல்ட் பக்கிள்களில் பளீரென்று டாலடித்தன. போரில் இரு தரப்பிலும் இருக்கும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள், வெற்றிக்காக கடவுளிடம் ஜெபிக்கையில் கடவுள் அவர்களுக்கு பதிலளிப்பார் என்பதை நினைத்துப் பார்க்கவே விநோதமாக இல்லையா?
யுத்தத்திற்குப் பின்னான மாற்றங்கள்
யுத்தத்திற்குப் பின், ஏப்ரல் 10, 1947-ல் ரேன் என்ற பெண் என் மனைவியானாள்; அவள் ஜெனரல் டா லட்ரா டா டாஸின்யி-ன் சொந்த ஊரான மூயரான்-ஆன்-பாரேன், வெண்டீயை சேர்ந்தவள். எங்கள் திருமணத்தில் இந்த ஜெனரல் என் சார்பாக சாட்சிக் கையெழுத்திட்டார். ஜனவரி 1952-ல் அவர் மரணமடைந்தபோது அரசு தரப்பு சவஅடக்கத்தில் அவருடைய கொடியை நான் சுமந்துசென்றேன்.
1952-ம் ஆண்டு முடியும் தறுவாயில், ஒருநாள் ஞாயிறு காலையில் நான், என் மனைவி, மகள் மூவரும் சர்ச் பூசைக்காக கிளம்பிக்கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் இரண்டு யெகோவாவின் சாட்சிகள் எங்கள் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினார்கள். பைபிளிலிருந்து அவர்கள் எங்களுக்கு சொன்ன விஷயங்கள் இன்னும் அதிகம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற பசியைத் தூண்டிவிட்டன. நானும் என் மனைவியும் மதப்பற்றுமிக்கவர்கள்தான்; ஆனாலும் எங்களுக்கு பைபிளைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஏனெனில் பைபிள் படிப்பதை சர்ச் உற்சாகப்படுத்தவில்லை. எங்களுக்கு பைபிளை படிக்க உதவி செய்தவர் லேயாபால் ஜான்டா என்பவர்; அவர் அப்போது பிரான்ஸிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் கண்காணியாக சேவை செய்து வந்தார். பைபிள் படிப்பினால் சிறுவயதுமுதல் என் மனதை உறுத்திக்கொண்டிருந்த எத்தனையோ கேள்விகளுக்கு பதில்களை கண்டுபிடிக்க முடிந்தது.
உதாரணமாக, பரமண்டல ஜெபம் அல்லது கர்த்தருடைய ஜெபம் என்று அழைக்கப்படும் அந்த ஜெபத்தை செய்யும்போதெல்லாம் இனந்தெரியாத ஒரு குழப்பம் எனக்குள் ஏற்பட்டதுண்டு. ஒரு கத்தோலிக்கனாக நல்லவர்கள் எல்லாம் இறந்துபோகையில் பரலோகத்திற்குப் போகிறார்கள் என்று நம்பினேன்; அப்படி இருக்கையில் ‘உமது திருவுளம் . . . மண்ணுலகில் நிறைவேறுக’ என ஏன் கடவுளிடம் ஜெபிக்கிறோம் என்று குழம்பிப் போயிருந்தேன். (மத்தேயு 6:9, 10, தமிழ் கத்தோலிக்க பைபிள்) இந்தச் சந்தேகத்தைக் பாதிரிகளிடம் கேட்கையில் ஒன்று என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் நழுவுவதிலேயே குறியாய் இருந்தார்கள் அல்லது எல்லாரும் ரோமன் கத்தோலிக்கராக மாறும்போதுதான் இந்த ஜெபத்திற்கு முழுமையான பதில் கிடைக்கும் என்று சொல்லி சமாளித்தார்கள். ஆனால் அந்த இரண்டு பதிலுமே எனக்கு திருப்தியளிக்கவில்லை.
திரித்துவம் சம்பந்தமாக நான் கேட்ட கேள்விகளுக்கும்கூட பாதிரிகள் சரியான பதிலை எனக்குச் சொல்லவில்லை. இந்தக் கத்தோலிக்க போதனை என்ன கற்பிக்கிறதென்றால், சர்ச்சின் விசுவாசப்பிரமாணத்திலுள்ள வார்த்தைகளின்படி, ‘பிதாவும் கடவுள், குமாரனும் கடவுள், பரிசுத்த ஆவியும் கடவுள், எனினும் மூன்று கடவுட்கள் அல்ல ஒரே கடவுளே இருக்கிறார்.’ ஆனால் இயேசு, கடவுளுடைய குமாரன், சர்வவல்லமையுள்ள கடவுள் அல்ல என்ற பைபிளின் தெளிவான போதனையை கண்டுபிடித்தபோது நானும் என் மனைவியும் அடைந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.—மாற்கு 12:30, 32; லூக்கா 22:42; யோவான் 14:28; அப்போஸ்தலர் 2:32; 1 கொரிந்தியர் 11:3.
உண்மையிலேயே அதுவரை குருடாக இருந்து முதன்முதலாக பார்வை பெற்றவர்களைப் போல் நாங்கள் இருவரும் உணர்ந்தோம். விலையுர்ந்த முத்து கிடைத்ததைப்போல் அது இருந்தது; அதற்காக செய்யும் எந்தத் தியாகமும் வீண்போகாது என்பதை உணர்ந்தோம். (மத்தேயு 13:46) கிடைத்த இந்தப் பொக்கிஷத்தை சொந்தமாக்கி கொள்வதா வேண்டாமா என்பதை நாங்கள் தீர்மானித்தே ஆகவேண்டும் என புரிந்துகொண்டோம். உடனே அப்போஸ்தலனாகிய பவுலைப் போல சிந்தித்தோம்; ‘கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணினேன்’ என்ற அவருடைய மனநிலைக்கு இசைவாக, கடவுளை சேவிப்பதற்கு நாங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை செய்தோம்.—பிலிப்பியர் 3:8.
என் நிலைநிற்கை
1953, ஏப்ரலில் அப்போதுதான் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்து ஒருசில மாதங்கள் ஆகியிருந்தன; அந்தச் சமயத்தில் இந்தோசீனாவில் போரிடும்படி அனுப்பப்படவிருந்த பிரெஞ்ச் படையுடன் செல்லும்படியான ஆர்டரைப் பெற்றேன். அப்போது பாரிஸிலிருந்த சட்டப்பேரவையில் உதவி கமாண்டிங் ஆபிஸராக நான் பணியாற்றி வந்தேன். அந்தச் சமயத்தில் நடுநிலைமை பற்றிய பைபிள் நியமத்தை புரிந்துகொண்டிருந்ததால், உடனடியாக ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். (யோவான் 17:16) அந்த நாள் வந்தது, இந்தோசீனாவில் சண்டையிட செல்லும்படி கொடுக்கப்பட்ட ஆணைக்கு இணங்கி செல்ல முடியாதென்பதை என் அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அதோடு இனி ஒருபோதும் யுத்தத்திற்கு செல்லப் போவதில்லை என்ற என் விருப்பத்தையும் குறிப்பிட்டேன்.—ஏசாயா 2:4.
“இப்படி செய்வது உன் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளி விழுந்திடும், அதோடு, உன் எதிர்காலமே இருண்டுவிடும் என்பதை தெரிந்துதான் இப்படி பேசுகிறாயா?” என்று என் அதிகாரிகள் கேட்டனர். அந்தச் சமயத்திலிருந்து என்னை ஒருபுறமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள். இது எனக்கு ஒருவிதத்தில் நன்மை அளித்ததென சொல்லலாம்; ஏனெனில் அதுமுதல் மிலிட்டரி பயிற்சிகளில் கலந்துகொள்ள வரும்படி என்னை அழைக்கவில்லை. சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தாக கருதப்பட்ட ஒன்றை நான் துச்சமாக கருதுவதை என் குடும்பத்தாராலும் நண்பர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை.
மிலிட்டரி சர்வீசில் நான் படைத்த சாதனைகள், எனக்கு சலுகை அளிக்க அதிகாரிகளைத் தூண்டின; என்னுடைய நம்பிக்கைகள் வித்தியாசப்பட்ட போதிலும், என்னை மதிப்புடன் நடத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், நீண்ட காலத்திற்கு அதிகாரப்பூர்வமான மருத்துவ விடுப்பு எனக்குக் கிடைத்தது; அந்தச் சமயத்தில் என் டியூட்டி சம்பந்தப்பட்ட எதிலும் நான் கலந்துகொள்ளவில்லை. இதற்கிடையில், யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையில் நானும் என் மனைவியும் கூட்டங்களுக்குச் சென்றோம்; நாங்கள் கற்றுக்கொண்ட சத்தியத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் ஆரம்பித்தோம்.
கடைசியில்—கிறிஸ்துவின் படைவீரன்!
1955-ன் ஆரம்பத்தில் ஒருவழியாக மிலிட்டரி சம்பந்தப்பட்ட எல்லா பொறுப்புகளிலிருந்தும் ஒருவழியாக விலக்கப்பட்டேன். 15 நாட்களுக்குப் பிறகு, நானும் என் மனைவியும் யெகோவா தேவனோடு செய்துகொண்ட எங்கள் ஒப்புக்கொடுத்தலை வார்செய்ல்ஸில் நடைபெற்ற மாநாட்டில் மார்ச் 12-ம் தேதி அன்று தண்ணீர் முழுக்காட்டுதல்மூலம் வெளிக்காட்டினோம். இப்போதோ நான் வேலைவெட்டி இல்லாத குடும்பஸ்தன்; என் குடும்பதை ஆதரிக்க வேறு வேலை தேடவேண்டிய நிலை. அதன் பின் 4 வருடங்களுக்கு, பாரிஸில், ஏல்சில் (சென்ட்ரல் மார்க்கெட்டில்) போர்ட்டராக வேலை செய்தேன். இவ்வளவு பெரிய மாற்றத்தைச் செய்வதொன்றும் எனக்கு அவ்வளவு ஈஸியாக இருக்கவில்லை; ஆனால் யெகோவாவோ என் முயற்சிகளை ஆசீர்வதித்தார்.
கடந்த ஆண்டுகளில், நானும் என் மனைவியும் பைபிள் செய்தியை ஏற்றுக்கொள்ள அநேகருக்கு உதவ முடிந்திருக்கிறது. மிலிட்டரியிலுள்ள அதிகாரிகள், படைதுறை சாராத அதிகாரிகள் என பலருக்கு நடுநிலைமை பற்றிய கிறிஸ்தவ நோக்கு நிலையைக் குறித்து விளக்கினேன். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தப்பெண்ணங்களை சமாளிப்பதற்கு படைவீரனாக ஒருகாலத்தில் இருந்தது எனக்கு அடிக்கடி கைகொடுத்து உதவுகிறது. தேசங்களுக்கிடையே நடைபெறும் யுத்தங்களில் நம்முடைய கிறிஸ்தவ நடுநிலையைக் குறித்து விளக்க அது வாய்ப்பளித்திருக்கிறது; கிறிஸ்துவின் ஆரம்ப கால சீஷர்களும் இதே நிலைநிற்கையை ஏற்றனர் என சுட்டிக்காட்ட முடிந்திருக்கிறது. உதாரணமாக, ஆரம்ப கால சர்ச்சும் உலகமும் என்ற ஆங்கில புத்தகத்தில், “மார்கஸ் அரில்யஸுன் ஆட்சிகாலம் வரை [பொ.ச. 161-180], தன் முழுக்காட்டுதலுக்குப் பிறகு எந்தக் கிறிஸ்தவனும் படையில் சேரவில்லை” என பேராசிரியர் சி. ஜே. காடூ எழுதினார்.
நான் எதிர்ப்பட்டவற்றிலேயே தாங்கமுடியாத துயரம் என் மனைவியை 1977-ல் மரணத்தில் இழந்ததுதான். ஒரு வருடம் வியாதிப்பட்டிருந்தாள்; மரணத்தை தழுவும் அந்த கடைசி நிமிடம் வரை தைரியமாக தன் விசுவாசத்தைக் காத்துக்கொண்டாள். ஒப்பற்ற உயிர்த்தெழுதல் நம்பிக்கைதான் சமாளித்து வாழ இன்னும் எனக்கு உதவுகிறது. (யோவான் 5:28, 29) ஒழுங்கான பயனியர் ஊழியம், என்னுடைய துயரத்திற்கு வடிகாலாய் அமைகிறது; யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்கள் அவ்வாறே அழைக்கப்படுகின்றனர். 1982-ல் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பயனியர் ஊழியத்தைத் தொடர்ந்தேன். 1988-ல் பயனியர்களை பயிற்றுவிக்கும் பள்ளியில் போதகராய் சேவை செய்கையில் ஏற்பட்ட சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை!
என் மனைவியின் மரணத்திற்குப்பின் மனச்சோர்வெனும் அலை அவ்வப்போது என்னை புரட்டியெடுத்த சமயங்களும் உண்டு. அன்னியோன்யமாய் இருக்கும் ஆவிக்குரிய நண்பர்கள் எனக்கு பக்க பலமாக இருந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப எனக்குப் பெரும் உதவியாய் இருந்திருக்கின்றனர். எல்லா துன்பங்களின் மத்தியிலும் யெகோவாவே கதி என அவரையே நம்பி வந்திருப்போருக்கு அவர் கொடுக்கும் பலத்தையும் அவர் காண்பிக்கும் அன்புள்ள தயவையும் நான் பலமுறை ருசித்திருக்கிறேன். (சங்கீதம் 18:2) நாம் அனுபவிக்கும் கஷ்டங்களெல்லாம் ஆவிக்குரிய யுத்தத்திற்கு நம்மை பயிற்றுவிப்பதற்காகவே என நான் நினைக்கிறேன். (1 பேதுரு 1:6, 7) ஒருசமயம் மனச்சோர்விலிருந்து தேற்றப்பட்ட நான் இப்போது சபை மூப்பராக இருந்து மனச்சோர்வுற்றிருப்போரைத் தேற்றுகிறேன்.—1 தெசலோனிக்கேயர் 5:14.
நான் சிறுவனாய் இருக்கையில் படைவீரனாக வேண்டுமென்று கனவுகாணாத நாளில்லை; ஒருவிதத்தில் நான் இன்னமும் படைவீரன்தான். சொல்லப்போனால் ஒரு படையிலிருந்து இன்னொரு படைக்கு மாறியிருக்கிறேன் அவ்வளவுதான்; நான் “இயேசுகிறிஸ்துவுக்கு . . . போர்ச்சேவகனாய்” மாறியிருக்கிறேன். (2 தீமோத்தேயு 2:3) இன்று நல்ல திடகாத்திரமான நிலையில் நான் இல்லாதபோதிலும், கிறிஸ்துவின் படைவீரனாக, ‘நல்ல போராட்டத்தைப் போராட’ என்னால் முடிந்தளவுக்கு செய்கிறேன்; இந்தப் போராட்டம் வெற்றிக்கே வழிநடத்தும். அது நம்முடைய கடவுளாகிய யெகோவாவிற்கு மகிமையையும் புகழையும் சேர்க்கும்.—1 தீமோத்தேயு 1:18.
இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படுவதற்காக தயாராகி வருகையில் மார்ச் 1, 1998-ல் லிவீ லால்யா உயிர்நீத்தார்.
[பக்கம் 13-ன் படம்]
எங்கள் திருமணம், டா லட்ர டா டாஸின்யி கலந்துகொண்டார்
[பக்கம் 15-ன் படம்]
1976-ல் தன் மனைவி ரேனுடன் லிவீ லால்யா