‘வெட்கப்படாத ஊழியக்காரனாய்’ இருக்கவே முயல்கிறேன்
ஆன்ட்ரே சோப்பா சொன்னது
இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்த நேரம். நடந்த படுகொலையின் கொடுமையை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நம்பிக்கை குழிதோண்டி புதைக்கப்பட்டது. ஜெர்மானிய கப்பற்படையில் நான் சிக்னல்மேன். நார்வேயிலுள்ள நர்விக் அருகே பணிபுரிந்தபோதுதான் மனிதாபிமானமற்ற செயல்களை கண்கூடாக பார்த்தேன். இரவில், குடாக்கடல் அருகே பதுங்கியிருக்கையில் வானமென்னும் கூடாரம் விரிந்திருக்க, வடகோளத்திற்கே உரிய கவர்ச்சிமிக்க விண்ணொளியை ரசித்தவாறு என் மனம் வாழ்க்கையைப் பற்றி அசைபோட ஆரம்பித்தது. இப்படிப்பட்ட அதிசயங்களைப் படைத்திருக்கும் கடவுள் நிச்சயமாகவே வெறித்தனமான போருக்கு காரணமாக இருக்கமாட்டார் என்பது தெளிவாக புரிந்தது.
நான் 1923-ல் செக்கோஸ்லோவாகியாவின் எல்லையில் அமைந்திருந்த (இப்போது போலந்தில் உள்ள) லாஸாட் என்ற குக்கிராமத்தில் பிறந்தேன். ஏழை விவசாய குடும்பத்தில் வளர்ந்தேன். அம்மா அப்பா கத்தோலிக்கர்கள். எங்கள் வாழ்க்கையில் மதத்திற்குத்தான் எப்போதும் முதலிடம். ஆனால் சிறு வயதிலேயே என் மதத்தைப் பற்றி எனக்குள் கேள்விகள் எழுந்தன. எங்கள் கிராமத்தில் வசித்த மூன்று புராட்டஸ்டன்ட் குடும்பத்தினரை கத்தோலிக்கர்கள் தள்ளிவைத்திருந்தனர். ஏன் அப்படிச் செய்யவேண்டுமென நினைத்தேன். ஸ்கூலில் காட்டிகிஸம் கிளாஸ் நடக்கும். ஒருமுறை திரித்துவத்தைப் பற்றி விளக்குமாறு பாதிரியிடம் கேட்டேன். அவர் கொடுத்த பதில் என்ன தெரியுமா? பத்து பிரம்படி. இருந்தாலும் எனக்கு 17 வயதிருக்கையில் நடந்த சம்பவத்தால்தான் சர்ச்சின் சுயரூபம் உண்மையிலேயே புரிந்தது. என் தாத்தாவும் பாட்டியும் ஒருத்தர் பின்னால் ஒருத்தராக ஒருமாத இடைவெளியில் இறந்தார்கள். அவ்வளவு குறுகிய காலத்திற்குள் இரண்டு முறை சர்ச்சில் சவ அடக்க பூசைகள் நடத்த அம்மாவிடம் பணம் இல்லை. ஆகவே பணம் கைக்கு வந்தவுடன் கட்டட்டுமா என பாதிரியிடம் கேட்டார்கள். அவரோ, “உன் அம்மா அப்பாகிட்ட சாமான்கள் இல்லாமலா இருந்திருக்கும், அதெல்லாம் வித்து காசு கொண்டுவா” என்றார்.
அதற்கு ஒருசில வருடங்களுக்கு முன்பு, 1933-ல் ஹிட்லர் பதவிக்கு வந்தபிறகு ஜெர்மன் மொழியில் பேச எங்களை கட்டாயப்படுத்தினார்கள். போலிஷ் பேச அனுமதியில்லை. மறுத்தவர்களும் ஜெர்மன் கற்றுக்கொள்ள முடியாதவர்களும் மாயமாய் மறைந்தனர்; அவர்கள் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டதாக பின்னர் தெரிந்துகொண்டோம். எங்கள் கிராமத்திற்குக்கூட க்ரூயன்ஃப்ளிஸ் என்ற ஜெர்மானிய பெயர் சூட்டப்பட்டது. 14 வயதிலேயே பள்ளிக்கு முழுக்குப் போட்டுவிட்டேன். ஹிட்லரின் இளைஞர் குழுவில் நான் சேராததால் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. பிறகு ஒருவழியாக கொல்லர் பட்டறையில் அப்ரென்டிஸ்ட்டாக வேலை கிடைத்தது. போர் ஆரம்பித்தவுடனே ஹிட்லருக்காகவும் ஜெர்மானிய படைகளின் வெற்றிக்காகவும் சர்ச்சில் பூசைகள் நடத்தப்பட்டன. எதிரிகளும் வெற்றிக்காக இதேவிதமாய்தானே ஜெபித்துக் கொண்டிருப்பார்கள் என நினைத்தேன்.
ஜெர்மன் கப்பற்படையில் என் பணி
டிசம்பர் 1941-ல் ஜெர்மன் கப்பற்படையில் சேர்ந்தேன். 1942-ன் ஆரம்பத்தில் ஒரு உளவு கப்பலில் பணிபுரிய நார்வேயின் எல்லைக்கு அனுப்பப்பட்டேன். ட்ரோண்ட்ஹைமுக்கும் ஆஸ்லோவுக்கும் இடையே காவல்காப்பதே என் வேலை. படைகளையும் போர் ஆயுதங்களையும் சரக்குகளையும் சுமந்துசெல்லும் கப்பல்களுக்கு பாதுகாவலராக செல்லவேண்டும். அப்படி கப்பலில் பயணம் செய்கையில், உலகம் அழியப்போவதாய் பைபிளில் சொல்லப்பட்டிருப்பதாக இரண்டு பயணிகள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. வெளிப்படையாக பேச அவர்களுக்கு பயம். தங்கள் பெற்றோர்கள் யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவு கொண்டிருந்தபோதிலும் தங்களுக்கு அதில் ஈடுபாடு இல்லை என என்னிடம் சொன்னார்கள். அப்போதுதான் முதன்முறையாக யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி கேள்விப்பட்டேன்.
போர் முடிவடைந்தபோது, பிரிட்டிஷ்காரர்களால் நாங்கள் கைது செய்யப்பட்டோம்; மறுபடியும் ஜெர்மனிக்கு கொண்டுபோகப்பட அமெரிக்கர்களிடம் ஒப்படைக்கப்பட்டோம். இப்போது சோவியத் பகுதியில் குடியிருந்த நாங்கள் எல்லாரும் வட பிரான்ஸிலிருந்த லியேவான் சிறை முகாமுக்கு நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரிய அனுப்பப்பட்டோம். இது நடந்தது ஆகஸ்ட் 1945-ல். பிரான்ஸ் நாட்டு காவலாளிகள் ஒருவரிடம் அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவரென கேட்டது எனக்கு ஞாபகம் இருக்கிறது. “கத்தோலிக்கன்” என்று பதிலளித்தார். நானும் கத்தோலிக்கன் என்பதால், ஒருவருக்கொருவர் என்ன செய்துவிட்டோம், இப்படி எதிரிகளாவதற்கு என கேட்டேன். “அதப்பத்தி பேசி இப்ப என்ன ஆவப்போகுது. இதுதான் வாழ்க்கை” என்று பதில் வந்தது. ஒரே மதத்தைச் சேர்ந்தவங்க சண்டைபோட்டுக்கொள்வதும் கொலை செய்வதும், எனக்கு என்னமோ அபத்தமாக பட்டது.
நிலக்கரி சுரங்கத்தில் ஓர் ஒளிக்கீற்று
சுரங்கத்தில் முதல் நாள். மற்ற சுரங்கத் தொழிலாளர்களோடு வேலை செய்துகொண்டிருந்தேன். ஈவென்ஸ் எம்யாட் என்பவர் என்னோடு சான்ட்விச்சை பகிர்ந்துகொண்டார். அமெரிக்காவிலுள்ள ஒஹாயோதான் அவரது சொந்த ஊர். பல வருடங்களாக பிரான்ஸில் வசித்துவந்தார். போரே இல்லாத ஓர் உலகம் வரப்போவதாய் அவர் என்னிடம் சொன்னார். அவர் அவ்வளவு கரிசனையோடு பேசியது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. நானோ ஜெர்மானியன், அவரோ அமெரிக்கர். இருந்தாலும் என்னிடம் அவருக்கு துளிகூட வெறுப்பு இல்லை. பின் வெகு நாட்களுக்குப் பிறகு, 1948-ன் ஆரம்பத்தில்தான் மறுபடியும் ஒருவரையொருவர் சந்தித்தோம். அப்போதுதான் “சமாதானப்பிரபு” என்ற ஆங்கில புத்தகத்தை எனக்குக் கொடுத்தார். நற்குணம் நிறைந்த கடவுளை, போரை வெறுக்கும் கடவுளை, விண்ணொளியை ரசித்தவாறே நான் கற்பனைசெய்துபார்த்த கடவுளை ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டேன். இதைக் கற்பிக்கும் மதத்தையும் எப்படியாவது கண்டுபிடித்துவிட முடிவு செய்தேன். ஆனால் ஈவென்ஸ் சுரங்கத்தின் வேறொரு பகுதியில் வேலைசெய்ததால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. சிறை முகாமிலிருந்த எல்லா மதத்தினரிடமும் அந்தப் புத்தகத்தைக் காண்பித்து, ஏதாவது விவரம் தெரியுமா என கேட்டேன், ஆனால் யாருக்குமே தெரியவில்லை.
இறுதியாக ஏப்ரல் 1948-ல், சிறை முகாமிலிருந்து விடுதலையாகி, சுதந்திரப் பறவையாக வேலைசெய்ய ஆரம்பித்தேன். அடுத்த ஞாயிற்றுக்கிழமையே, தெருவில் மணிச்சத்தத்தைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். எட்டிப் பார்த்தால், ஈவென்ஸ்! எனக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. அவரோடு இன்னும் பல யெகோவாவின் சாட்சிகள். பொதுப் பேச்சின் தலைப்பை அறிவித்த விளம்பர அட்டைகளை மாட்டிக்கொண்டிருந்தனர். மணியடித்துக் கொண்டிருந்தவர் மார்சோ லர்வா. இப்போது அவர் பிரான்ஸின் கிளை அலுவலக குழுவினரில் ஒருவர். ஜெர்மன் மொழி பேசிய யோசஃப் கூல்சாக் என்பவரை எனக்கு அறிமுகப்படுத்தினர். போலந்தைச் சேர்ந்த அவர் தன் விசுவாசத்திற்காக சித்திரவதை முகாமில் வேதனைகளை அனுபவித்தவர். அதே நாள் சாயங்காலத்தில் நடக்கவிருந்த கூட்டத்திற்கு வரும்படி என்னை அழைத்தார். அங்கு சொல்லப்பட்டது ஒன்றும் புரியவில்லை. ஆனால் கூடியிருந்தவர்கள் எல்லாரும் கையைத் தூக்கியபோது, பக்கத்திலிருந்தவரிடம் ஏன் என கேட்டேன். “இவர்கள் அடுத்தவாரம் பிரசங்கிப்பதற்காக டன்கர்க் நகருக்கு போகிறார்கள்” என்றார். “நானும் வரட்டுமா?” என கேட்டேன். “ஓ, வரலாமே” என்றார். அந்த ஞாயிற்றுக்கிழமையே வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு சென்றேன். நாங்கள் சந்தித்த எல்லாரும் சொன்னதை சரியாக கேட்கவில்லை என்றாலும், எனக்குப் பிரசங்கிப்பது மிகவும் பிடித்துப்போய்விட்டது. அதன்பின் தவறாமல் ஊழியத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன்.
கோபத்தை அடக்குதல்
பிறகு விரைவிலேயே, விடுதலையாக்கப்பட்ட ஜெர்மன் கைதிகள் வசித்த முகாம்களில் சாட்சிகள் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார்கள். எனக்கு அது ரொம்ப சிரமமாக இருந்தது. ஏனென்றால் எனக்கு எதற்கெடுத்தாலும் மூக்குக்குமேல் கோபம்வரும் என்பது அங்கிருந்த எல்லாருக்குமே தெரிந்த விஷயம். நான் சொல்வதை காதுகொடுத்து கேட்கவில்லையென்றால், “இந்த எகத்தாளம் எல்லாம் என்கிட்ட நடக்காது, பிச்சுடுவேன்” என்று மிரட்டுவேன். ஒருமுறை சுரங்கத்தில் வேலைசெய்தபோது யெகோவாவை மட்டமாக பேசியதற்காக ஒருவனை ஓங்கி ஒரு குத்துவிட்டேன்.
என்றாலும் யெகோவாவின் உதவியோடு என் குணத்தை என்னால் மெல்ல மெல்ல மாற்றிக்கொள்ள முடிந்திருக்கிறது. ஒருமுறை இந்த முகாம்களில் நாங்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் பயங்கரமாக குடித்துவிட்டு வந்து சில சாட்சிகளுக்கு தொந்தரவுகொடுத்தது. என் முன்கோபத்தை அறிந்த சகோதரர்கள் நான் எங்கே தலையிட்டுவிடுவேனோ என பயந்து என்னைத் தடுத்தார்கள். ஆனால் ஒரு கை பார்த்துவிடலாம் என்ற தோரணையில் ஒருவன் தன் சட்டையைக் கழற்றியபடி என்னை நோக்கி வந்தான். நான் என் சைக்கிளை விட்டு இறங்கி, அதை அவனிடத்தில் பிடிக்கக் கொடுத்துவிட்டு, என் கைகளை பாக்கட்டில் போட்டுக்கொண்டேன். அவன் அப்படியே ஆடிப்போய்விட்டான். நான் சொல்வதை காதைத் தீட்டிக்கொண்டு கேட்க ஆரம்பித்தான். முதலில் வீட்டுக்கு போய், நன்றாக தூங்கியெழுந்து, பொதுப் பேச்சை வந்து கேட்கும்படி சொன்னேன். நம்புகிறீர்களோ இல்லையோ, பிற்பகல் 3:00 மணிக்கு டாண்ணென்று வந்துவிட்டான்! இறுதியில், சுமார் 20 முன்னாள் கைதிகள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். நான் செப்டம்பர் 1948-ல் முழுக்காட்டுதல் பெற்றேன்.
மும்முரமான, ஆத்ம திருப்தியான வாழ்க்கை
பிரசங்கிக்கவேண்டிய பிராந்தியங்களைக் கவனித்துக்கொண்டு, பொதுப் பேச்சுக்கள் கொடுப்பதற்கு இடம் தேடும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. இதற்காக சுரங்கங்களில் லேட் ஷிஃப்ட் செய்வதற்குமுன் நான் சிலசமயம் என் சிறு மோட்டார் சைக்கிளில் சுமார் 50 கிலோமீட்டர் பிரயாணம் செய்வேன். பிறகு சனி ஞாயிறன்று பஸ்ஸில் சென்று, பேச்சாளரையும் இரண்டு அல்லது நான்கு பிரஸ்தாபிகளையும் பிராந்தியத்தில் இறக்கிவிடுவோம். பெரிய பட்டணங்களில், பொருத்தமான இடம் கிடைத்துவிட்டால், எங்கள் சூட்கேஸுகளை அடுக்கிவைத்து அதையே ஸ்பீக்கர் ஸ்டான்டாக பயன்படுத்துவோம். அடிக்கடி, பொதுப் பேச்சின் தலைப்புள்ள விளம்பர அட்டைகளை மாட்டிக்கொண்டு எல்லாரையும் கூட்டத்திற்கு அழைப்போம்.
1951-ல், நான் ஜேனட் ஷோஃபூரை சந்தித்தேன். கண்டவுடன் காதல் மலர்ந்தது. ரேம்ஸில் வசித்துவந்த அவளும் ஒரு சாட்சி. ஒரு வருடம் கழித்து மே 17, 1952-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். டூயேவுக்குப் பக்கத்தில், சுரங்கமிருந்த பட்டணமான பெக்கான்கூருவுக்கு குடியேறினோம். ஆனால் சீக்கிரத்தில் எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. சுரங்கங்களில் வேலைசெய்ததால் சிலிகாஸிஸ் என்ற சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டேன். வேறெந்த வேலையும் கிடைக்கவில்லை. ஆகவே 1955-ல் ஜெர்மனியின் நூரெம்பர்க்கில் நடந்த சர்வதேச மாநாட்டில், கேலில் உள்ள சிறு சபைக்கு உதவும்படி போகமுடியுமா என எங்களைக் கேட்டபோது எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அது ரைன் நதியில் அமைந்திருக்கும் ஒரு சிறு தொழிற்பட்டணம். அப்போது அந்தச் சபையில் 45 பிரஸ்தாபிகள் மட்டுமே இருந்தனர். நாங்கள் அங்கு சென்ற ஏழு ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 95-ஆக உயர்ந்தது.
மேலும் கிடைத்த ஊழிய சிலாக்கியங்கள்
சபை நன்கு வளர்ச்சியடைந்துவிட்டதால் பிரான்ஸில் விசேஷ பயனியர்களாக சேவை செய்யலாமா என சங்கத்திடம் அனுமதி கேட்டோம். சங்கம் எங்களை பாரிஸுக்கு அனுப்பியபோது ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அங்கு நாங்கள் இருந்த எட்டு மாத கால அனுபவம் மனதை விட்டு நீங்காத ஒன்று. ஜானட்டும் நானும் சேர்ந்து 42 பைபிள் படிப்புகளை நடத்தும் பாக்கியம் பெற்றோம். நாங்கள் அங்கிருந்தபோதே ஐந்து பேர் முழுக்காட்டுதல் எடுத்தார்கள், அதன்பின் 11 பேர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
நாங்கள் லாட்டின் க்வார்ட்டர் பகுதியில் வசித்ததால், சார்போன் யூனிவர்ஸிட்டி புரொஃபஸர்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. விசுவாச சுகப்படுத்துதல் செய்துவந்த, ஓய்வுபெற்ற புரொஃபஸர் ஒருவர் பைபிளைப் படித்து யெகோவாவின் சாட்சி ஆனார். ஜெஸ்யூட் ஆசிரியர்களோடு நெருங்கிய பழக்கமுள்ள ஒரு சிவில் என்ஜினியரோடு ஒருநாள் நான் பைபிளைப் பற்றி பேசினேன். அவர் பிற்பகல் மூன்று மணிக்கு எங்கள் அபார்ட்மெண்டிற்கு வந்தார், ராத்திரி பத்து மணிக்கு போனார். ஒன்றரை மணிநேரம் கழித்து மறுபடியும் வந்துவிட்டார்! அவர் ஒரு ஜெஸ்யூட்டிடம் பேசியிருக்கிறார், ஆனால் பைபிள் தீர்க்கதரிசனத்தை விளக்க அவரால் முடியவில்லை. காலை ஒரு மணிக்கு வீடு திரும்பி ஏழு மணிக்கெல்லாம் மீண்டும் வந்தார்!! அவரும் யெகோவாவின் சாட்சி ஆனார். சத்தியத்திற்காக இந்தளவு ஏங்கித் தவித்த ஆட்களை சந்தித்தது எனக்கும் என் மனைவிக்கும் அதிக உற்சாகம் தந்தது.
பாரிஸில் ஊழியம் செய்தபிறகு கிழக்கு பிரான்ஸில் பயணக் கண்காணியாக சேவிக்க நியமிக்கப்பட்டேன். பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் சபைகளை சந்தித்து சகோதரர்களை உற்சாகப்படுத்தியதால் கிடைத்த சந்தோஷத்தை எப்படித்தான் சொல்வது! லரேனிலுள்ள ராம்பாஸ் சபைக்குச் சென்றபோது நான் ஸ்டானிஸ்வாஸ் ஆம்ப்ராஷ்சாக்கை சந்தித்தேன். அவர் போலந்து நாட்டவர். போரின்போது நேசநாடுகளின் நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றி, நார்வே கடற்பகுதியில் சண்டையிட்டவர். அதே கடலில் நாங்கள் ஒருகாலத்தில் எதிரிகளாய் பயணம் செய்திருந்தோம். இப்போதோ சகோதரர்களாக யெகோவா தேவனை ஒன்றாக சேவிக்கிறோம். பாரிஸில் நடந்த இன்னொரு அசெம்பிளியின்போது ஒரு பழக்கமான முகம் தெரிந்தது. வட பிரான்ஸில் நான் கைதியாக இருந்தபோது முகாமின் ஆணை அதிகாரியாய் இருந்தவர். மாநாட்டின்போது ஒன்றுசேர்ந்து வேலைசெய்ததில் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எதிரிகளைக்கூட சகோதரர்களாகவும் நெருங்கிய நண்பர்களாகவும் மாற்றும் சக்தி படைத்ததே பைபிள்!
14 வருடங்களுக்குப் பிறகு, உடல்நலம் இன்னும் சீர்குலைந்ததால் பயணக் கண்காணியாக தொடர்ந்து சேவிக்க முடியவில்லை. இது வேதனையளித்தபோதும் முடிந்தளவு யெகோவாவை விடாது சேவிக்க நானும் என் மனைவியும் தீர்மானித்தோம். ஆகவே கிழக்கு பிரான்ஸிலுள்ள முல்ஹவுஸ் பட்டணத்தில் வேலை தேடி, வீடு பார்த்து, பயனியர்களானோம், அதாவது முழுநேர ஊழியம் செய்தோம்.
என் சந்தோஷத்தின் விளக்கிற்கு எண்ணெய்வார்த்த மற்றொரு பாக்கியம், ராஜ்ய மன்றங்கள் கட்டுவதில் பல வருடங்களாக பங்கேற்றதுதான். 1985-ல் கிழக்கு பிரான்ஸிற்காக கட்டுமானக் குழுவை உருவாக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. பலவிதங்களில் திறமைபடைத்த ஆட்களும், பயிற்சியளிக்கப்பட்ட வாலண்டியர்களும் அடங்கிய ஒரு குழுவாக நாங்கள் 80 மன்றங்களுக்கும் அதிகமாக கட்டியிருக்கிறோம் அல்லது யெகோவாவின் வணக்கத்திற்கு ஏற்றவாறு பழுதுபார்த்து மாற்றியமைத்திருக்கிறோம். 1993-ல், தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் ஒரு அசெம்பிளி மன்றத்தையும் ஐந்து ராஜ்ய மன்றங்களையும் கட்டும் பணியில் பங்கேற்றது என்னை சந்தோஷத்தில் திளைக்க வைத்தது!
சோதனையின் மத்தியிலும் உறுதியாயிருத்தல்
50 வருடங்களுக்கும் அதிகமாக கடவுளுக்கு நான் செய்த சேவையில் அடைந்த சந்தோஷங்களும் பாக்கியங்களும் பலப் பல. 43 வருடங்களாக என்னோடு தாம்பத்தியம் நடத்திய என் ஆசை மனைவி டிசம்பர் 1995-ல் இறந்தது வேதனையான அனுபவம். இது எனக்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு. இப்போதும் அதை நினைத்து நினைத்து வேதனையில் வெம்புகிறேன். ஆனால் யெகோவா என்னைப் பலப்படுத்துகிறார். அதோடு ஆவிக்குரிய சகோதர சகோதரிகளும் எனக்கு அன்பும் ஆதரவும் தருகிறார்கள். அது என் வேதனையைத் தணிக்கும் மருந்துபோல் இருக்கிறது.
1963-ல் ஜெர்மனியில் ம்யூனிச்சில் நடந்த அசெம்பிளியில் அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு சகோதரர் என்னிடம் சொன்னது நேற்று சொன்னதுபோல் மனதில் பசுமையாய் இருக்கிறது. “ஆன்ட்ரே, எந்தக் காரணத்தக்கொண்டும் மனம் தடுமாறாத. சித்திரவதை முகாம்கள்ல பிரதர்ஸ் சோதனைகளைச் சகிச்சாங்க. இப்ப நாம அத சகிக்கணும். நம்மேலயே நாம பரிதாபப்பட்டு விட்டுக்கொடுத்துடக் கூடாது. உறுதியாயிரு!” இதை நான் நினைக்காத நாளில்லை. சுகவீனமும் முதிர்வயதும் முன்பு போல் சேவை செய்ய அனுமதிப்பதில்லை. ஆனாலும் எபிரெயர் 6:10 எப்போதும் எனக்கு ஆறுதல் தருகிறது: ‘உங்கள் கிரியையையும் . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.’ சந்தேகமில்லாமல், யெகோவாவுக்கு சேவை செய்வதே ஒருவருக்குக் கிடைக்கும் பெரும் பாக்கியம். கடந்த 50 வருடங்களாக, ஏன், இன்னமும் என் இலக்கு ‘வெட்கப்படாத ஊழியக்காரனாய்’ இருக்க வேண்டும் என்பதே.—2 தீமோத்தேயு 2:15.
[பக்கம் 22-ன் படம்]
நார்வே குடாக்கடலில் இதுபோன்ற படகில்தான் பணிபுரிந்தேன்
[பக்கம் 23-ன் படம்]
வட பிரான்ஸில் சைக்கிளில் பிரசங்கித்தபோது
[பக்கம் 23-ன் படம்]
சூட்கேஸுகளை அடுக்கிவைத்து ஸ்பீக்கர் ஸ்டான்டாக பொதுப் பேச்சிற்குப் பயன்படுத்தினோம்
[பக்கம் 24-ன் படம்]
1952-ல், எனக்கும் ஜானட்டுக்கும் திருமணமானபோது