வாழ்க்கை சரிதை
யெகோவாவின் துணையுடன் சர்வாதிகார ஆட்சிமுறையைச் சகித்தோம்
ஹென்றிக் டார்நிக் சொன்னபடி
நா ன் 1926-ல் பிறந்தேன். என் பெற்றோர் கத்தோலிக்க மதத்தில் ஆழ்ந்த பற்றுடையவர்கள். தெற்கு போலந்தில் காடாவீட்செ என்னும் சுரங்க பட்டணத்திற்கு அருகிலிருந்த ரூடா ஷ்லான்ஸ்கா என்னுமிடத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். எனக்கு பெர்னார்ட் என்று ஓர் அண்ணன், ருஷா, எடீட்டா என இரு தங்கைகள். ஜெபம் செய்யவும் ஆலய ஆராதனைகளுக்குச் செல்லவும், பிராயசித்த உறுதிமொழி எடுக்கவும் அம்மா அப்பா எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.
பைபிள் சத்தியம் கிடைக்கிறது
ஜனவரி 1937-ல், எனக்கு பத்து வயதாக இருந்தபோது, ஒரு நாள் அப்பா மிகவும் சந்தோஷமாக வீடு திரும்பினார். யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து பெற்ற பெரியதொரு புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தார். “பிள்ளைகளே, நான் என்ன கொண்டு வந்திருக்கிறேன், பாருங்கள்—பரிசுத்த வேதாகமம்!” என்றார். அதற்கு முன்பு நான் பைபிளைப் பார்த்ததே இல்லை.
ரூடா ஷ்லான்ஸ்காவிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் இருந்த மக்கள்மீது நெடுங்காலமாகவே கத்தோலிக்க சர்ச்சின் தாக்கம் பலமாக இருந்து வந்தது. சுரங்க உடைமையாளர்களுடன் மிகவும் சிநேகமாக இருந்த மதகுருமார், சுரங்கத் தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும் இம்மி பிசகாமல் தங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென எதிர்பார்த்தனர். சுரங்கத் தொழிலாளி ஒருவர் பூசைக்கு வரவில்லை என்றால் அல்லது பாவ அறிக்கை செய்வதற்கு மறுத்தால், அவர் அவிசுவாசியென கருதப்பட்டு சுரங்க வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவார். அப்பா, யெகோவாவின் சாட்சிகளுடன் பழக ஆரம்பித்ததால் சீக்கிரத்தில் அவரும் இந்தப் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் அபாயத்தில் இருந்தார். அப்படியிருந்தும், ஒரு பாதிரியார் எங்கள் வீட்டிற்கு வந்தபோது மதத்தின் போர்வையில் அவர் மாய்மாலம் பண்ணுவதை எல்லோர் முன்பாகவும் அப்பா வெட்டவெளிச்சமாக்கினார். தர்மசங்கடமான நிலைக்குள்ளான பாதிரியார் இதற்குமேலும் எந்தப் பிரச்சினையையும் விரும்பாததால், அப்பாவின் வேலையில் கைவைக்கவில்லை.
பாதிரியாருடன் நேருக்கு நேர் ஏற்பட்ட இந்தச் சர்ச்சையைப் பார்த்ததிலிருந்து பைபிளைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற என் தீர்மானம் இன்னும் வலுவடைந்தது. யெகோவாவை மேன்மேலும் நேசிக்க ஆரம்பித்தேன், அவருடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொண்டேன். பாதிரியாருடன் அப்பா பேசிய பிறகு சில மாதங்களுக்குள் நாங்கள் இயேசுவின் மரண நினைவு நாள் ஆசரிப்புக்குச் சென்றோம். அங்கு வந்திருந்த 30 பேர் முன்பாக “இவரும் ஒரு யோனதாப்” என்று அப்பா அறிமுகப்படுத்தப்பட்டார். பூமியில் வாழும் நம்பிக்கை உடைய கிறிஸ்தவர்களே ‘யோனதாபுகள்’ என அழைக்கப்பட்டார்கள் என்பதையும் அவர்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதையும் விரைவில் தெரிந்துகொண்டேன்.a—2 இராஜாக்கள் 10:15-17.
“தம்பி, முழுக்காட்டுதல் எதைக் குறிக்கிறதென்று உனக்குத் தெரியுமா?”
சத்தியத்தை ஏற்றுக்கொண்ட பிறகு அப்பா குடிப்பதை நிறுத்திவிட்டு ஒரு நல்ல கணவனாகவும் அப்பாவாகவும் மாறினார். அம்மாவோ, அவருடைய மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் முன்போல் ஒரு கத்தோலிக்கராய் இருந்தாலே தேவலை என்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனாலும், இரண்டாம் உலகப் போர் மூண்ட பிறகு பாதிரிமாரின் மாய்மாலத்தை அம்மா கவனித்தார்; படையெடுத்து வந்த ஜெர்மானியர்மீது போலந்து வெற்றி சிறக்க வேண்டுமென ஜெபித்த அதே பாதிரிமார் இப்போது ஹிட்லரின் வெற்றிகளுக்காக நன்றிதெரிவித்து ஜெபித்தார்கள்! பின்னர், 1941-ல் அம்மாவும் எங்களுடன் சேர்ந்து யெகோவாவைச் சேவிக்க ஆரம்பித்தார்.
இதற்கு முன்பே, நான் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்த விருப்பம் தெரிவித்திருந்தேன்; சபை மூப்பர்களோ நான் இன்னும் சிறுவனாக இருந்ததாக நினைத்து காத்திருக்கச் சொன்னார்கள். என்றாலும், 1940-ல் டிசம்பர் 10 அன்று, கான்ராட் க்ராபோவி (பின்னர், சித்திரவதை முகாமில் உண்மையுள்ளவராய் இருந்து மரித்த ஒரு சகோதரர்) பிறர் கவனத்தை ஈர்க்காதவாறு என்னை ஒரு சிறிய வீட்டில் வைத்து கேள்விகளைக் கேட்டார். அவர் கேட்ட ஐந்து கேள்விகளுக்கும் என்னிடமிருந்து திருப்திகரமான பதில்கள் கிடைத்ததும் எனக்கு முழுக்காட்டுதல் கொடுத்தார். “தம்பி, முழுக்காட்டுதல் எதைக் குறிக்கிறதென்று உனக்குத் தெரியுமா?” என்பது அவர் கேட்ட ஒரு கேள்வி. “இப்போது போர் நடந்துகொண்டிருப்பதால், நீ யாருக்கு உண்மையாக இருக்கப்போகிறாய், ஹிட்லருக்கா யெகோவாவுக்கா என்பதை நீ சீக்கிரத்தில் தீர்மானிக்க வேண்டியிருக்கும். உன் தீர்மானத்தைப் பொறுத்து உனக்கு மரணமும் நேரிடலாம் என்பது உனக்கு தெரியுமா?” என்பது மற்றொரு கேள்வி. சற்றும் தயங்காமல், “எனக்குத் தெரியும்” என்றேன்.
துன்புறுத்தல் துவங்குகிறது
கான்ராட் க்ராபோவி ஏன் அதுபோன்ற திட்டவட்டமான கேள்விகளைக் கேட்டார் தெரியுமா? 1939-ல் ஜெர்மன் படை போலந்தைக் கைப்பற்றியிருந்தது. அதற்குப்பின் எங்கள் விசுவாசமும் உத்தமமும் கடுமையாகச் சோதிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும், நிலைமை கெடுபிடியாகி வந்தது. கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் கைதுசெய்யப்பட்டதாகவும், நாடுகடத்தப்பட்டதாகவும், சிறைகளுக்கோ சித்திரவதை முகாம்களுக்கோ அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. சீக்கிரத்தில் எங்களுக்கும் அதே நிலைமைதான்.
நாசிக்கள், இளைய தலைமுறையினரை ஹிட்லர் ஆட்சியின் ஆதரவாளர்களாக மாற்ற முயன்றனர். பிள்ளைகளான எங்கள் நான்கு பேரையும்கூட அவ்வாறு மாற்ற முயன்றனர். அப்பாவும் அம்மாவும் ஃபாக்லிஸ்ட்டில் (ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்றிருந்தவர்கள் அல்லது பெற விரும்பியவர்களின் பட்டியலில்) கையெழுத்திட அநேக முறை மறுத்ததால், தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கான சட்டப்பூர்வ உரிமை மறுக்கப்பட்டது. அப்பா, ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். பிப்ரவரி 1944-ல் நானும் என் அண்ணனும் நைஸாவுக்கு அருகேயுள்ள க்ராட்குவிலிருந்த (க்ராட்கௌ) சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டோம்; எங்கள் தங்கைகள் ஓபாலெக்கு அருகே, சார்நோவாங்ஸியிலுள்ள (க்ளோஸ்டப்ருயெக்) கத்தோலிக்க கான்வென்ட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அம்மா, வீட்டில் தனியாக விடப்பட்டார். அந்த அதிகாரிகளின் பார்வையில் “எங்கள் பெற்றோரின் கருத்துகள் வஞ்சனையானவைகளாக” தெரிந்தன. அந்தக் கருத்துக்களை நாங்கள் நம்பாதபடி எங்களை மறுக்க வைப்பதே அவர்களுடைய இலட்சியமாக இருந்தது.
ஒவ்வொரு நாள் காலையும் சீர்திருத்தப் பள்ளியின் முற்றத்தில் சுவஸ்திகா கொடி ஏற்றப்பட்டது; “ஹெய்ல் ஹிட்லர்” என்று சொன்னவாறே எங்கள் வலது கைகளை உயர்த்தி வணக்கம் தெரிவிக்க வேண்டுமென எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது. அது கடினமான விசுவாச பரீட்சையாக இருந்தது. ஆனால், பெர்னார்ட்டும் நானும் விட்டுக்கொடுக்கவே இல்லை. அதனால், “மரியாதையற்ற” விதத்தில் நடந்தோம் என்று குற்றம் சாட்டப்பட்டு கடுமையாக அடிக்கப்பட்டோம். எங்களுடைய மன உறுதியைக் குலைக்க தொடர்ந்து எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியைத் தழுவின. எனவே, அந்த SS காவலர்கள் முடிவாக எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்கள். “ஜெர்மன் அரசுக்கு உண்மையுடன் இருப்பதாக வாக்குமூலத்தில் கையெழுத்திட்டு, வேர்மாக்ட்டில் [ஜெர்மன் படையில்] சேர்ந்து கொள்ளுங்கள் அல்லது சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்படுவீர்கள்” என்றார்கள்.
ஆகஸ்ட் 1944-ல், சித்திரவதை முகாமுக்கு எங்களை அனுப்பச் சொல்லி அதிகாரப்பூர்வமாக எழுதிய கடித்தில் அந்த அதிகாரிகள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்: “இவர்கள் எதற்கும் மசியாதவர்கள். உயிர்த்தியாகம் செய்வது அவர்களுக்கு சந்தோஷத்தை தருகிறது. அவர்கள் இப்படி விடாப்பிடியாக எதிர்த்து நிற்பது சீர்திருத்தப் பள்ளிக்கே ஆபத்து.” உயிர்த்தியாகம் செய்ய நான் விரும்பவில்லை. என்றாலும், யெகோவாவிடம் என் உத்தமத்தைக் காப்பதற்காக தைரியத்தோடும் பெருந்தன்மையோடும் துன்பப்படுவது எனக்கு நிச்சயமாகவே மகிழ்ச்சி அளித்தது. (அப்போஸ்தலர் 5:41) நான் எதிர்ப்படவிருந்த துயரங்களை என் சொந்த பலத்தால் நிச்சயம் சகித்திருக்க முடியாது. மறுபட்சத்தில், நான் யெகோவாவிடம் இருதயப்பூர்வமாகச் செய்த ஜெபங்கள் என்னை அவரிடம் நெருங்கிச் செல்ல உதவின. அவர், தம்மை நம்புகிறவர்களைக் கைவிடமாட்டார் என்பதை நிரூபித்தார்.—எபிரெயர் 13:6.
சித்திரவதை முகாமில்
சீக்கிரத்திலேயே நான் ஸைலீஷியாவிலுள்ள க்ரோஸ்ரோஸன் சித்திரவதை முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டேன். எனக்கென்று ஒரு கைதி எண்ணும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக அடையாளம் காட்டும் ஊதா நிற முக்கோணமும் கொடுக்கப்பட்டது. SS காவலர்கள் எனக்கு ஒரு வாய்ப்பை அளித்தார்கள். என்னை முகாமிலிருந்து விடுவிப்பது மட்டுமல்லாமல் நாசி படையில் என்னை ஒரு அதிகாரியாக ஆக்குவதாகவும் கூறினார்கள். ஆனால், ஒரு நிபந்தனை. “ஹிட்லரின் ஆட்சிக்கு விரோதமாக இருக்கும் பைபிள் மாணாக்கரின் கருத்துகளை நீ விட்டுவிட வேண்டும்” என்றார்கள். இதுபோன்ற ஒரு வாய்ப்பு வேறு எந்த கைதிக்கும் கிடைக்கவில்லை. முகாம்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான வாய்ப்பு யெகோவாவின் சாட்சிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. ஆனால், ஆயிரக்கணக்கானோரைப் போலவே நானும் இந்த ‘அரிய வாய்ப்பை’ உறுதியாக மறுத்துவிட்டேன். அந்தக் காவலரோ, “உன்னை பொசுக்கி பஸ்பமாக்கிவிடும் அந்தப் புகைப்போக்கியை நன்றாகப் பார்த்துக்கொள். மீண்டும் யோசித்துப் பார், அல்லது அந்தப் புகைப்போக்கியின் வழியாகத்தான் உனக்கு விடுதலை கிடைக்கும்” என்றார். திரும்பவும் உறுதியாக மறுத்துவிட்டேன். “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்” என்னுள் நிரம்பியதை அந்த நிமிடம் உணர்ந்தேன்.—பிலிப்பியர் 4:6, 7.
முகாமிலுள்ள சக விசுவாசிகளுடன் பேச வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்று யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். அவர் என் ஜெபத்திற்கு பதிலளித்தார். நான் சந்தித்த சக கிறிஸ்தவர்களில் ஒருவரான கூஸ்டாஃப் பாவ்மெர்ட் என்ற உண்மையுள்ள சகோதரர் என்னைக் கனிவோடும் அன்போடும் கவனித்துக்கொண்டார். யெகோவா ‘இரக்கங்களின் பிதாவாகவும் சகலவிதமான ஆறுதலின் தேவனாகவும்’ தன்னை நிரூபித்தார் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகம் இல்லை.—2 கொரிந்தியர் 1:3.
சில மாதங்கள் கழித்து, ரஷ்ய படைகள் வந்து நாசிக்களை முகாமிலிருந்து சீக்கிரமாக வெளியேற்றினர். வெளியேற தயாராகிக் கொண்டிருந்தபோது, பெண்களின் முகாம்களுக்குப் போய் அங்கிருந்த சுமார் 20 சகோதரிகளின் நலனைத் தெரிந்து வர எங்கள் உயிரையே பணயம் வைத்துச் செல்ல தீர்மானித்தோம். எல்ஸா ஆப்ட், கெர்ட்ரூட் ஆகியோர் அந்த ஆன்மீக சகோதரிகளில் இருவர்.b சகோதரிகள், எங்களைப் பார்த்ததும் உடனடியாக ஓடி வந்தார்கள். சீக்கிரமாக ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டோம், பிறகு பின்வரும் வார்த்தைகளை உடைய ராஜ்ய பாடலை அவர்கள் சேர்ந்து பாடினார்கள்: “உத்தமமுள்ளோன், உண்மையுள்ளவன், என்றுமே அஞ்சாதவன்.”c எங்கள் அனைவரின் கண்களிலும் நீர் ததும்பியது!
அடுத்த முகாமிற்கு
சரக்கேற்றிச் செல்லும் ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றிலும் நாசிக்கள், 100-லிருந்து 150 கைதிகளைச் சாப்பாடோ தண்ணீரோ இல்லாமல் நெருக்கி அடைத்து அனுப்பிவிட்டார்கள். உறைபனியிலும் உறையவைக்கும் மழையின் குளிரிலும் நாங்கள் பயணித்தோம். தாகமும் காய்ச்சலும் எங்களை வாட்டி எடுத்தன. நோயுற்ற, களைப்புற்ற கைதிகள் ஒவ்வொருவராக சாக சாக, ரயில் பெட்டிகள் காலியாயின. என்னால் எழுந்து நிற்கவே முடியாத அளவுக்கு என் கால்களும் மூட்டுகளும் வீங்கிவிட்டன. பத்து நாள் பயணத்திற்குப் பின், தப்பிப்பிழைத்த வெகு சில கைதிகள், நார்ட்ஹௌஸன் நகரிலுள்ள மிட்டல்பௌடோரா கடுங்காவல் முகாமுக்கு வந்துசேர்ந்தார்கள். இந்த நகரம் துரிஞ்சியா பகுதியிலுள்ள வைமார் நகரில் உள்ளது. திகிலூட்டும் இந்தப் பயணத்தில் சகோதரர்கள் எவருமே மரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
இந்தப் பயணத்தின் பாதிப்புகளிலிருந்து மீண்டு வெளிவருவதற்குள், சீதபேதி ஒரு கொள்ளைநோயாக இந்த முகாமைத் தாக்கியது. நானும் சில சகோதரரும் பாதிக்கப்பட்டோம். முகாமில் தரப்பட்ட சூப்புகளைச் சாப்பிடாமல் சுட்டுத்தரப்பட்ட ரொட்டியை மட்டும் சாப்பிடும்படி சொல்லப்பட்டோம். அப்படியே செய்து சீக்கிரத்தில் குணமடைந்தேன். 1945-ன் வருடாந்தர வசனம், மத்தேயு 28:19 என மார்ச் மாதத்தில் கேள்விப்பட்டோம்: ‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்.’ விரைவில் முகாம்களின் கதவுகள் திறக்கப்பட்டு, நற்செய்தி தொடர்ந்து பிரசங்கிக்கப்படும் என தோன்றியது! சந்தோஷமும் நம்பிக்கையும் நிறைந்தவர்களானோம், ஏனென்றால், இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம் அர்மகெதோனாக இருக்குமென நாங்கள் நினைத்திருந்தோம். அந்தக் கடினமான காலங்களில் யெகோவா எங்களை எவ்வளவு அருமையாகப் பலப்படுத்தினார்!
முகாம்களிலிருந்து விடுதலை
ஏப்ரல் 1, 1945-ல், நேச நாடுகளின் படைகள், SS காவலரின் குடியிருப்புகளிலும் பக்கத்திலிருந்த முகாமிலும் குண்டு மழை பொழிந்தன. அநேகர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். மறுநாள், பெருமளவில் குண்டுவீச்சு தொடர்ந்தது. அந்தத் தாக்குதலில், சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டு என்னைத் தூக்கி எறிந்தது.
ஃபிரிட்ஸ் உல்ரிக் என்ற சகோதரர் உதவிக்கு வந்தார். நான் உயிருடன் இருப்பேன் என்ற நம்பிக்கையில் இடிபாடுகளுக்கிடையே தோண்டி பார்த்தார். கடைசியில், எப்படியோ என்னைக் கண்டுபிடித்து, அந்த சிதைவுகளுக்கு உள்ளிருந்து வெளியே இழுத்தார். சுய நினைவு பெற்றதும் முகத்திலும் உடலிலும் ஏகப்பட்ட காயங்கள் இருப்பதை உணர்ந்தேன். எனக்கு காது கேட்கவே இல்லை. குண்டுவெடிப்பின் சத்தம் என் செவிப்பறைகளைச் சேதப்படுத்தியிருந்தன. அவை குணமடைய அநேக வருடங்கள் எடுத்தன. அதுவரை படாதபாடுபட்டேன்.
ஆயிரக்கணக்கான கைதிகளில் வெகு சிலரே அந்தக் குண்டுவெடிப்பிலிருந்து தப்பினர். சில சகோதரர்கள் இறந்துபோனார்கள். அருமை சகோதரர் கூஸ்டாஃப் பாவ்மெர்ட்டும் இறந்துபோனார். எனக்கு இருந்த காயங்கள் காரணமாக தொற்று ஏற்பட்டது; அதோடு கடும் காய்ச்சலும் வந்துவிட்டது. எப்படியோ சீக்கிரமாக நேச நாட்டு படைகள் எங்களைக் கண்டுபிடித்து விடுதலை செய்தன. இதற்கிடையில், செத்துப்போனவர்கள் அல்லது கொலை செய்யப்பட்ட கைதிகளின் உடல் கெட்டு அழுகி, டைஃபஸ் என்ற நச்சுக்காய்ச்சலைப் பரப்பியது. அது என்னையும் தொற்றிக்கொண்டது. நோயுற்ற மற்றவர்களுடன் நானும் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டேன். டாக்டர்கள் முழுமூச்சாக முயன்றபோதிலும், மூவர் மட்டுமே காப்பற்றப்பட்டோம். கடினமான அந்தக் காலங்களில் உண்மையுடன் நிலைத்திருக்க என்னைப் பலப்படுத்தியதற்காக யெகோவாவுக்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாய் இருந்தேன்! என்னை ‘மரண இருளிலிருந்து’ விடுபட வைத்ததற்காகவும் நான் யெகோவாவுக்கு நன்றிகடன்பட்டிருந்தேன்.—சங்கீதம் 23:4.
கடைசியாக வீட்டில்!
ஜெர்மனி சரணடைந்தபின், கூடிய விரைவில் வீடு திரும்புவேன் என நினைத்தேன். ஆனால், அது நான் எதிர்பார்த்த அளவுக்கு சுலபமாக இருக்கவில்லை. கேத்தலிக் ஆக்ஷன் என்ற தொகுதியின் அங்கத்தினராய் இருந்த பழைய கைதிகள் சிலர் என்னை அடையாளம் கண்டு, “அவனைக் கொல்லுங்கள்!” என்று கர்ஜித்து, என்னைக் கீழே தள்ளி மிதித்தார்கள். யாரோ ஒருவர் வந்து அந்தக் கொடூரர்களின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றினார். ஆனாலும், அதிலிருந்து மீண்டுவர எனக்குப் பல நாட்கள் எடுத்தன. ஏனென்றால், நான் ஏற்கெனவே காயப்பட்டிருந்தேன். அதோடு, டைஃபஸ் காய்ச்சல் காரணமாக பலவீனமாகவும் இருந்தேன். கடைசியில் ஒருவழியாக, வீடு போய் சேர்ந்தேன். மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்தபோது என்னே ஒரு மகிழ்ச்சி! நான் இறந்துவிட்டேன் என்று அவர்கள் நினைத்திருந்ததால் என்னைப் பார்த்ததும் அவர்கள் எல்லாருக்கும் ஒரே சந்தோஷம்.
சீக்கிரத்தில் நாங்கள் பிரசங்க வேலையை மீண்டும் ஆரம்பித்தோம். நிஜமாகவே சத்தியத்தைத் தேடியவர்கள் பலர் நாங்கள் கற்பித்தவற்றை ஏற்றுக்கொண்டார்கள். சபைகளுக்கு பைபிள் பிரசுரங்களை எடுத்துச் செல்லும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெர்மனியின் கிளை அலுவலகத்திலிருந்து வந்த பிரதிநிதிகளை வைமாரில் சந்திக்கும் அரிய வாய்ப்பை நானும் சில சகோதரர்களும் பெற்றோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அச்சிடப்பட்ட ஜெர்மன் காவற்கோபுர இதழ்களை அங்கிருந்து போலந்துக்குக் கொண்டு வந்தோம். அவை உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டன, ஸ்டென்ஸில்கள் தயாரிக்கப்பட்டு பல பிரதிகள் அச்சிடப்பட்டன. லோட்ஜிலுள்ள எங்கள் அலுவலகம் போலந்தில் நடைபெறும் வேலையை முழுவதுமாக மேற்பார்வையிட ஆரம்பித்தபோது, பைபிள் அடிப்படையிலான பிரசுரங்கள் சபைகளுக்குத் தவறாமல் கிடைத்து வந்தன. பெரிய பிராந்தியமான ஸைலீஷியாவில் நான் ஒரு விசேஷ பயனியராக, அதாவது, முழுநேர ஊழியராக சேவை செய்யத் தொடங்கினேன். அப்போது அதன் பெரும்பகுதி போலந்தின் பாகமாகியிருந்தது.
இருந்தாலும், சீக்கிரத்திலேயே யெகோவாவின் சாட்சிகள் மீண்டும் துன்புறுத்தப்பட்டனர். இந்தச் சமயம், போலந்தில் புதிதாக நிறுவப்பட்ட கம்யூனிஸ ஆட்சியால் துன்புறுத்தப்பட்டனர். ஒரு கிறிஸ்தவனாக நான் நடுநிலைமை வகித்ததால், 1948-ல் இரு வருடங்களுக்கு எனக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடவுளிடம் நெருங்கி வர அநேக கைதிகளுக்கு என்னால் உதவி செய்ய முடிந்தது. அதில் ஒருவர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, பின்னர் தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டார்.
1952-ல் நான் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டேன். அமெரிக்காவுக்காக வேவு பார்த்ததாக இந்த முறை குற்றம் சுமத்தப்பட்டேன்! நீதிமன்ற விசாரணைக்காகக் காத்திருந்த சமயத்தில் நான் தனிச்சிறையில் வைக்கப்பட்டு, இரவும் பகலும் கேள்விமேல் கேள்வி கேட்கப்பட்டேன். என்றாலும், என்னைத் துன்புறுத்துகிறவர்களின் கைகளிலிருந்து மறுபடியும் யெகோவா என்னை விடுவித்தார். தொடர்ந்து வந்த வருடங்களில் இதுபோன்ற கஷ்டங்களை நான் எதிர்ப்படவே இல்லை.
எப்படி என்னால் சகிக்க முடிந்தது
சோதனைகளும் வேதனைகளும் மிகுந்த அந்த வருடங்களை நினைத்துப் பார்க்கையில், உற்சாக ஊற்றுகளாக திகழ்ந்த சில விஷயங்களை என்னால் குறிப்பாகச் சொல்ல முடியும். முதலாவதாக, யெகோவாவும் அவருடைய வார்த்தையாகிய பைபிளும் தந்த பலமே எல்லாவற்றையும் சகிக்க உதவியாக இருந்தது. ‘சகலவிதமான ஆறுதலின் தேவனை’ நோக்கி இடைவிடாமல் ஊக்கமாக மன்றாடுவதும் அவருடைய வார்த்தையைத் தினமும் படிப்பதும் எங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள உதவின. கையால் எழுதி நகல் எடுக்கப்பட்ட காவற்கோபுர பிரதிகளும் எங்களுக்குத் தேவைப்பட்ட ஆன்மீகப் போஷாக்கை அளித்தன. சித்திரவதை முகாம்களில், அக்கறையோடு கவனித்த சக விசுவாசிகள் என்னைப் பெரிதும் பலப்படுத்தினார்கள். அவர்கள் உதவி செய்ய தயாராகவும் மனமுள்ளவர்களாகவும் இருந்தார்கள்.
என் மனைவி மார்யா, யெகோவாவிடமிருந்து எனக்குக் கிடைத்த மற்றொரு ஆசீர்வாதம். அக்டோபர் 1950-ல் நாங்கள் மணம் முடித்தோம். ஹாலீனா என்று எங்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். அவள் யெகோவாவை நேசித்து அவருக்குச் சேவை செய்யும் பிள்ளையாக வளர்ந்தாள். மார்யாவும் நானும் 35 வருடங்களாக மண வாழ்வை அனுபவித்தோம். நெடுநாளாக அவளைப் பாதித்த நோயின் கொடுமையால் அவள் மரித்துப்போனாள். அவளுடைய மரணம் எனக்குத் துயரத்தையும் வேதனையையும் அளித்தது. சில காலத்திற்கு ‘கீழே தள்ளப்பட்டது’போல் உணர்ந்தபோதிலும் ‘மடிந்து போகவில்லை.’ (2 கொரிந்தியர் 4:9) வேதனையான அந்தக் காலங்களில், என் அருமை மகளும் அவளுடைய கணவனும் என் பேரப்பிள்ளைகளும்தான் எனக்கு ஆதரவாய் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே யெகோவாவை உண்மையுடன் சேவிக்கிறார்கள்.
1990 முதல், போலந்து கிளை அலுவலகத்தில் நான் சேவை செய்து வருகிறேன். அருமையான ஒரு பெத்தேல் குடும்பத்தின் சகவாசத்தைத் தினமும் அனுபவித்து வருவது பெரியதோர் ஆசீர்வாதமே. மோசமாகி வரும் என் உடல்நிலை காரணமாக சிறகடித்துப் பறக்க முடியாத பலமிழந்த கழுகைப் போல அவ்வப்போது உணருகிறேன். இருப்பினும், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கிறேன். இன்றுவரையாக, ‘யெகோவா எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுகிறேன்.’ (சங்கீதம் 13:6) சாத்தானின் கொடிய ஆட்சிமுறை காரணமாக ஏற்பட்டிருக்கும் எல்லா தீங்கையும் எனக்கு உதவி செய்கிறவராகிய யெகோவா நீக்கிப்போடும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
[அடிக்குறிப்புகள்]
a ஜனவரி 1, 1998 காவற்கோபுர இதழில் பக்கம் 13, பாரா 6-ஐப் பார்க்கவும்.
b காவற்கோபுரம், ஏப்ரல் 15, 1980, பக்கங்கள் 12-15-ல் எல்ஸா ஆப்ட்டின் வாழ்க்கை சரிதையைப் பார்க்கவும்.
c யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட யெகோவாவைத் துதிக்கும் பாடல்கள் என்ற 1928-ம் வருட பாட்டுப் புத்தகத்தில் பாட்டு எண் 101. தற்போதுள்ள பாட்டுப் புத்தகத்தில் பாட்டு எண் 56.
[பக்கம் 10-ன் படம்]
சித்திரவதை முகாமில் இந்த எண்ணையும் ஊதா முக்கோணத்தையும் பெற்றேன்
[பக்கம் 12-ன் படம்]
1980-ல் என் மனைவி மார்யாவுடன்