வாழ்க்கை சரிதை
பலவீனத்திலும் பலமுள்ளவனாயிருக்கிறேன்
லேயோபால்ட் யெங்லைட்னர் சொன்னபடி
எஸ்எஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து, என் நெற்றியில் வைத்து அழுத்தியபடி, “சாகத் தயாரா?” என்று கேட்டார். “உன்னை திருத்தவே முடியாது, அதனால் உன்னை சுடப்போகிறேன்” என்றும் சொன்னார். குரலில் சிறிதும் தடுமாறாமல், “நான் தயார்” என்றேன். பிறகு, என்னைத் திடப்படுத்திக்கொண்டு, கண்களை மூடி, அவர் என்னை சுடுவதற்காகக் காத்திருந்தேன். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. “சாகக்கூட வக்கில்லாத முட்டாள்” என்று கத்திவிட்டு, என் கன்னப்பொட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். இத்தகைய ஆபத்தான சூழ்நிலைக்கு நான் எப்படி வந்தேன்?
ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வீற்றிருக்கும் ஐகென்ஃபோகில்ஹூப் நகரில் ஜூலை 23, 1905-ம் ஆண்டில் நான் பிறந்தேன். மரம் அறுக்கும் தொழிலாளிக்கும் உள்ளூர் விவசாயியின் மகளுக்கும் மூத்த மகனாக நான் பிறந்தேன். என் பெற்றோர் ஏழைகளாக இருந்தாலும், கடின உழைப்பாளிகள். சால்ஸ்பர்க் அருகே பாட் இஷல் என்ற நகரில், ரம்மியமான ஏரிகள், மலைக்க வைக்கும் மலை சிகரங்கள் மத்தியில் என்னுடைய சிட்டுப் பருவம் கழிந்தது.
வாழ்வின் அநீதிகளைக் குறித்து அந்தச் சின்ன வயதிலேயே அடிக்கடி சிந்தித்துப் பார்த்ததுண்டு. என்னுடைய குடும்பம் ஏழ்மையில் வாடியதால் மட்டுமல்ல, வளைந்துபோன தண்டுவடத்தால் நான் பிறவியிலேயே பாதிக்கப்பட்டிருந்ததாலும் அவ்வாறு சிந்தித்துப் பார்த்ததுண்டு. இதனால் ஏற்பட்ட முதுகுவலியால், என்னால் நிமிர்ந்து நிற்கவே முடியவில்லை. பள்ளியில் ஜிம்னாஸ்டிக்ஸில் சேர அனுமதிக்கப்படாததால் சக மாணவர்களின் கேலிக்கு ஆளானேன்.
முதல் உலக யுத்தம் முடிவடைந்த சமயத்தில், எனக்கு 14 வயதுகூட முடியவில்லை. அப்போதே, வறுமையிலிருந்து மீளுவதற்கு வேலை தேட தீர்மானித்தேன். எந்நேரமும் பசியின் கோரப் பிடியில் சிக்கித் தவித்தேன். கோடிக்கணக்கானோரைக் கல்லறைக்கு வழியனுப்பிய ஸ்பானிஷ் ஃப்ளுவினால் ஏற்பட்ட கடுமையான காய்ச்சல் அவ்வப்போது வந்து என்னை பலவீனப்படுத்தியது. நான் வேலை கேட்டபோது, விவசாயிகள் பலரும் “உன்னை மாதிரி நோஞ்சான்களை வைத்து நாங்கள் என்ன செய்வது?” என்றனர். இருந்தாலும், ஒரு விவசாயி இரக்கப்பட்டு என்னை வேலையில் சேர்த்துக் கொண்டார்.
கடவுளுடைய அன்பைக் கற்றுக்கொள்ளுதல்
என்னுடைய அம்மா கத்தோலிக்க மதப்பற்றுள்ளவராக இருந்தார். என்றாலும் என்னுடைய அப்பா மத விஷயங்களில் அதிக கண்டிப்பானவராக இல்லை, அதனால் நான் எப்போதாவதுதான் சர்ச்சுக்குப் போனேன். என்னைப் பொறுத்தவரை, ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் மலிந்து கிடந்த விக்கிரக வழிபாடு எனக்குப் பிடிக்கவில்லை.
அக்டோபர் 1931-ல், பைபிள் மாணாக்கர் என்று அப்போது அறியப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் நடத்திய மதக் கூட்டத்திற்கு வரும்படி என்னுடைய நண்பன் என்னை அழைத்தான். விக்கிரக வழிபாடு கடவுளை பிரியப்படுத்துகிறதா? (யாத்திராகமம் 20:4, 5) எரிநகரம் உண்மையில் இருக்கிறதா? (பிரசங்கி 9:5) இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்களா? (யோவான் 5:28, 29) போன்ற மிக முக்கியமான கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதில் கிடைத்தது.
இரத்த வெறிபிடித்த போர்களை கடவுளுடைய பெயரில் மனிதர் செய்தாலும் அவற்றை கடவுள் அங்கீகரிப்பதில்லை என்ற உண்மைதான் என்னை ரொம்பவே கவர்ந்தது. “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்பதையும், அவருக்கு யெகோவா என்ற உன்னத பெயர் இருக்கிறது என்பதையும் கற்றுக்கொண்டேன். (1 யோவான் 4:8; சங்கீதம் 83:17) யெகோவாவுடைய அரசாங்கத்தில், பூமிக்குரிய பரதீஸில் மனிதர்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ முடியும் என்பதைக் கற்றுக்கொண்டபோது மெய்சிலிர்த்துப் போனேன். கடவுளுடைய பரலோக அரசாங்கத்தில் இயேசுவோடு ஆட்சி செய்ய அபூரண மனிதர்கள் சிலரைக் கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்ற மகத்தான எதிர்பார்ப்பை பற்றியும் கற்றுக் கொண்டேன். அந்த அரசாங்கத்திற்காக எதையும் செய்யத் தயாரானேன். ஆகவே மே 1932-ல் முழுக்காட்டப்பட்டு, ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறினேன். அந்தப் படியை எடுப்பதற்குத் தைரியம் தேவைப்பட்டது; ஏனென்றால் தீவிர கத்தோலிக்க நாடான ஆஸ்திரியாவில் மத சகிப்பின்மை அப்போது நிலவி வந்தது.
அவமானத்தையும் எதிர்ப்பையும் சந்தித்தல்
சர்ச்சிலிருந்து நான் விலகியபோது, என்னுடைய பெற்றோர் அதிர்ச்சியடைந்தார்கள். பாதிரியார் விரைவில் அதை சர்ச்சில் அறிவித்து, எல்லாருக்கும் தெரியப்படுத்தினார். அக்கம்பக்கத்தார் எல்லாரும் தங்களுடைய வெறுப்பைக் காட்டுவதற்காக என் முன்னால் தரையில் துப்பினார்கள். என்றாலும், முழுநேர ஊழியராக வேண்டுமென்று தீர்மானித்து, ஜனவரி 1934-ல் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன்.
எங்களுடைய பிராந்தியத்தில் நாசி கட்சியின் செல்வாக்கு அதிகமானதால், அரசியல் நிலவரம் இறுக்கமாகிக் கொண்டிருந்தது. என்ஸ் நதிப்பகுதியிலுள்ள ஸ்டிரியா பள்ளத்தாக்கில் பயனியராக ஊழியம் செய்த சமயத்தில், போலீசார் என்னை நிழல்போல் பின்தொடர்ந்தார்கள். அதனால், ‘பாம்பைப் போல் வினாவுள்ளவனாக’ இருக்க வேண்டியிருந்தது. (மத்தேயு 10:16) 1934 முதல் 1938 வரை துன்புறுத்தல் என்னுடைய அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. எனக்கு வேலை இல்லாதிருந்தபோதிலும், வேலை வாய்ப்பற்றோருக்கு கொடுக்கப்படும் இழப்பீடு தொகை எனக்கு மறுக்கப்பட்டது. பிரசங்க வேலை செய்ததால் அநேக முறை குறைந்தகால சிறைவாசத்தையும், நான்கு முறை நீண்டகால சிறைவாசத்தையும் அனுபவித்தேன்.
ஹிட்லரின் துருப்புகள் ஆஸ்திரியாவை ஆக்கிரமிக்கின்றன
மார்ச் 1938-ல் ஹிட்லரின் துருப்புகள் ஆஸ்திரியாவிற்குள் புகுந்தன. சில நாட்களுக்குள் 90,000-க்கும் அதிகமானோர், அதாவது பெரியவர்களில் கிட்டத்தட்ட 2 சதவீதத்தினர், நாசி ஆட்சியை எதிர்ப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறைச் சாலைகளுக்கும் சித்திரவதை முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர். வரவிருந்த இக்காரியங்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் ஓரளவு தயாராகவே இருந்தனர். 1937-ன் கோடை காலத்தில் என்னுடைய சபையிலிருந்த அநேகர் ப்ராக்கில் நடந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 350 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்தனர். ஜெர்மனியிலிருந்த சக கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களைப் பற்றி அங்கே கேள்விப்பட்டனர். நாங்களும் சீக்கிரத்தில் துன்புறுத்தப்படுவோம் என்பது தெளிவானது.
ஹிட்லரின் துருப்புகள் ஆஸ்திரியாவில் கால்பதித்த நாளிலிருந்தே, யெகோவாவின் சாட்சிகள் தங்கள் கூட்டங்களையும் பிரசங்க வேலையையும் இரகசியமாக நடத்த வேண்டியதாயிற்று. சுவிஸ் எல்லையைத் தாண்டி பைபிள் பிரசுரங்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டபோதிலும் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு போதுமான பத்திரிகைகள் கிடைக்கவில்லை. ஆகவே வியன்னாவிலிருந்த சக கிறிஸ்தவர்கள் பத்திரிகைகளை இரகசியமாக தயாரித்தனர். பிரசுரங்களைச் சாட்சிகளுக்கு கொண்டு செல்லும் வேலையை அடிக்கடி நான் செய்தேன்.
சித்திரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்படுதல்
ஏப்ரல் 4, 1939-ல் பாட் இஷல்லில் கிறிஸ்துவின் மரண நினைவு நாளை ஆசரித்துக் கொண்டிருந்தபோது நானும் சக கிறிஸ்தவர்கள் மூவரும் கெஸ்டப்போவால் கைது செய்யப்பட்டோம். நாங்கள் எல்லாரும் லின்ஜ் நகரில் உள்ள போலீஸ் தலைமையகத்திற்கு காரில் கொண்டு செல்லப்பட்டோம். அதுதான் என்னுடைய முதல் கார் பயணம், ஆனால் அதை அனுபவித்து மகிழ முடியாத அளவிற்கு நான் கவலையில் ஆழ்ந்திருந்தேன். லின்ஜில், அடுத்தடுத்து பல விசாரணைகளில் சித்திரவதை செய்யப்பட்டேன். ஆனால் என் விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவே இல்லை. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மேல் ஆஸ்திரியாவில் இருந்த நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டேன். எதிர்பாராத விதமாக, எனக்கெதிரான கிரிமினல் வழக்குகள் கைவிடப்பட்டன. ஆனால் என்னுடைய சோதனைகள் அத்துடன் முடிந்துவிடவில்லை. இதற்கிடையில், அந்த மூன்று சகோதரர்களும் சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் கடைசி வரை உண்மையாயிருந்து அங்கேயே மரித்தனர்.
நான் காவலில் வைக்கப்பட்டிருந்தேன். அக்டோபர் 5, 1939-ல் ஜெர்மனியிலுள்ள பூக்கன்வால்ட் சித்திரவதை முகாமுக்கு என்னை அனுப்பப் போவதாகத் தெரிவித்தார்கள். கைதிகளான எங்களைக் கொண்டு செல்ல லின்ஜ் ரயில் நிலையத்தில் ஒரு விசேஷ ரயில் தயாராக நின்றது. ரயில் பெட்டிகளில் இருவர் அமரக்கூடிய அறைகள் இருந்தன. என்னோடு பயணம் செய்தவர் வேறு யாருமல்ல, மேல் ஆஸ்திரியாவின் முன்னாள் ஆளுநரான டாக்டர் ஹைன்ரிக் கிளைஸ்நெ தான்.
டாக்டர் கிளைஸ்நெயும் நானும் ஆர்வத்திற்குரிய சம்பாஷணையில் ஈடுபட்டோம். என்னுடைய நிலைமையைக் கண்டு மிகவும் சங்கடப்பட்டார். அவர் பதவி வகித்த சமயத்தில்கூட அவருடைய மாகாணத்தில் யெகோவாவின் சாட்சிகள் எண்ணற்ற வழக்குகளை எதிர்ப்பட்டனர் என்பதை அறிந்து திடுக்கிட்டார். பிறகு என்னிடம் வருத்தத்தோடு இவ்வாறு சொன்னார்: “மிஸ்டர் யெங்லைட்னர், நடந்த தவறை என்னால் சரிசெய்ய முடியாதுதான். ஆனால் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். எங்கள் ஆட்சியில் அரசாங்கம் நீதி செய்ய தவறிவிட்டது போலிருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய தயாராக இருக்கிறேன்.” போருக்குப் பிறகு நாங்கள் மறுபடியும் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் நாசி பலியாட்களுக்கான அரசாங்க ஓய்வூதியத்தை நான் பெறுவதற்கு உதவினார்.
“உன்னை நான் சுடப்போகிறேன்”
அக்டோபர் 9, 1939-ல் பூக்கன்வால்ட் சித்திரவதை முகாமுக்குப் போய்ச் சேர்ந்தேன். புதிதாக வந்தவர்களில் ஒரு சாட்சியும் இருக்கிறார் என்ற தகவல் சீக்கிரத்திலேயே முகாம் காவலருக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால், நான் அவருடைய முக்கிய குறியானேன். அவர் என்னை கண்மூடித்தனமாக அடித்தார். என் விசுவாசத்தைக் கைவிடச் செய்ய அவரால் முடியாது என்பதை அறிந்த பிறகு, இவ்வாறு சொன்னார்: “யெங்லைட்னர், உன்னை நான் சுடப்போகிறேன். அதுக்கு முன்னாடி, உன் அப்பா அம்மாவுக்கு கடைசியாக கடிதம் எழுத அனுமதிக்கிறேன்.” என்னுடைய பெற்றோருக்கு கடிதம் எழுத ஆறுதலான வார்த்தைகளுக்காக யோசித்தேன். ஆனால், நான் எழுத முற்பட்டபோதெல்லாம், அவர் என் வலது முழங்கையில் தாக்கி என்னை கிறுக்கும்படி செய்தார். “சரியான முட்டாள்! இவனால் இரண்டு வரிகூட ஒழுங்காக எழுத முடியவில்லை. ஆனால் பைபிள் படிப்பதை மட்டும் நிறுத்த முடியாது, இல்ல?” என்று ஏளனம் செய்தார்.
அடுத்து, தனது துப்பாக்கியை எடுத்து, என் தலையில் வைத்து அழுத்தினார். நான் முன்பு சொன்னபடி, நிஜமாகவே சுடப்போவதாக என்னை நம்ப வைத்தார். பிறகு, என்னை ஒரு சிறிய, நெரிசலான அறைக்குள் தள்ளினார். நின்றுகொண்டே இரவைக் கழிக்க வேண்டியிருந்தது. எப்படியிருந்தாலும், என்னால் தூங்கியிருக்க முடியாது. ஏனென்றால் என்னுடைய உடம்பெல்லாம் புண்ணாக வலித்தது. “ஏதோவொரு அர்த்தங்கெட்ட மதத்திற்காகச் சாவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை!” என்ற வார்த்தைகள்தான் என்னுடன் சிறையில் இருந்தவர்கள் கொடுத்த ஒரே “ஆறுதல்.” டாக்டர் கிளைஸ்நெ அடுத்த அறையில் அடைக்கப்பட்டிருந்தார். நடந்ததையெல்லாம் கேட்ட பிறகு, யோசனையோடு இவ்வாறு கூறினார்: “கிறிஸ்தவர்கள் மீதான துன்புறுத்தல் மறுபடியும் அதன் கோர முகத்தை காட்டுகிறது!”
1940-ம் ஆண்டு கோடை காலத்தில், ஞாயிற்றுக்கிழமை அன்று குவாரியில் வேலை செய்யச் சொல்லி சிறை கைதிகள் அனைவருக்கும் ஆணை வந்தது. ஆனால், பொதுவாக எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் எங்களுக்கு விடுமுறையாக இருந்தது. கைதிகள் சிலரின் ‘தவறான நடத்தைக்கு’ தண்டனை கொடுக்க இவ்வாறு செய்யப்பட்டது. குவாரியிலிருந்து பெரிய கற்களை முகாமுக்கு எடுத்துச் செல்லும்படி எங்களுக்கு கட்டளையிடப்பட்டது. இரண்டு கைதிகள் ஒரு பெரிய கல்லை என் முதுகில் வைக்க முயற்சி செய்தார்கள். அதன் பாரம் தாங்காமல் நான் அப்படியே நிலைதடுமாறி போனேன். என்றாலும், எல்லாரும் அஞ்சிநடுங்கிய லாகஃப்யூரா (முகாம் மேற்பார்வையாளர்) ஆர்டூர் ரோடில் எதிர்பாராத விதமாக உதவிக்கு வந்தார். கல்லை சுமக்க நான் பட்ட கஷ்டத்தைப் பார்த்து, “இந்த கல்லை முதுகில் சுமந்துகொண்டு உன்னால முகாமுக்கு வரவே முடியாது! அதை உடனே கீழே போடு!” என்று என்னிடம் சொன்னார். அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிவதில் எனக்கு அதிக சந்தோஷம். அதன் பிறகு, ஒரு சிறிய கல்லைக் காட்டி, “இதை தூக்கிக்கொண்டு முகாமுக்கு வா. இதை சுமப்பது சுலபம்தான்!” என்று ரோடில் சொன்னார். பிறகு எங்கள் மேற்பார்வையாளரிடம் திரும்பி, “பைபிள் மாணாக்கர்கள் தங்கள் குடியிருப்புக்குத் திரும்பி போகட்டும். ஒரு நாளுக்குரிய வேலையை அவங்க செய்துட்டாங்க!” என்று சொன்னார்.
வேலை முடிந்து ஒவ்வொரு நாள் முடிவிலும் என்னுடைய ஆவிக்குரிய குடும்பத்தோடு கூட்டுறவு கொள்வதில் மகிழ்ந்தேன். ஆவிக்குரிய உணவை பகிர்ந்தளிப்பதற்கு நாங்கள் ஏற்பாடுகள் செய்திருந்தோம். ஒரு சகோதரர் துண்டு சீட்டு ஒன்றில் பைபிள் வசனத்தை எழுதி, அதை மற்றவர்களுக்கு அனுப்புவார். ஒரு பைபிளும்கூட முகாமிற்குள் இரகசியமாகக் கொண்டு வரப்பட்டிருந்தது. அதிலுள்ள ஒவ்வொரு புத்தகங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு யோபு புத்தகம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதை என்னுடைய சாக்ஸில் மறைத்து வைத்தேன். தொடர்ந்து உறுதியாக இருப்பதற்கு யோபுவின் பதிவு எனக்கு உதவியது.
கடைசியாக மார்ச் 7, 1941-ல் ஒரு பெரிய தொகுதியை நிடஹாகன் சித்திரவதை முகாமிற்கு இடமாற்றம் செய்தார்கள், அதில் நானும் சேர்ந்து கொண்டேன். என்னுடைய நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. மரச்சட்டத்தாலான பெட்டிகளில் கருவிகளை அடைத்து வைக்கும்படி எனக்கும் இரண்டு சகோதரர்களுக்கும் ஒருநாள் ஆணை கொடுத்தார்கள். அதைச் செய்த பிறகு, சக கைதிகளோடு குடியிருப்புக்குத் திரும்பினோம். நான் மெதுவாக நடப்பதை எஸ்எஸ் வீரர் ஒருவர் கவனித்தார். பயங்கர கோபமடைந்த அவர் எதுவும் சொல்லாமலேயே பின்னாலிருந்து என்னை கண்மூடித்தனமாக எட்டி உதைத்தார், படுமோசமாக காயமடைந்தேன். வலி உயிர்போனது, இருந்தாலும் வலியை பொறுத்துக்கொண்டு அடுத்த நாள் வேலைக்குச் சென்றேன்.
எதிர்பாராத விடுதலை
ஏப்ரல் 1943-ல் நிடஹாகன் முகாமிலிருந்த அனைவரும் கடைசியில் வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து ராவன்ஸ்புரூக்கில் இருந்த மரண முகாமுக்கு மாற்றப்பட்டேன். பிறகு, எதிர்பாராத விதமாக ஜூன் 1943-ல் சித்திரவதை முகாமிலிருந்து எனக்கு விடுதலை அளிக்கப்பட்டது. விசுவாசத்தை கைவிட்டால்தான் விடுதலையென இம்முறை எந்த நிபந்தனையும் போடப்படவில்லை. ஆனால் என்னுடைய வாழ்நாளின் மீதி காலம் முழுவதும் ஒரு பண்ணையில் கட்டாயமாக உழைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. முகாமின் பயங்கரங்களிலிருந்து தப்பிப்பதற்காக, அதைச் செய்ய மனமுள்ளவனாக இருந்தேன். கடைசி பரிசோதனைக்காக முகாம் மருத்துவரைச் சந்திக்கச் சென்றேன். மருத்துவர் என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். “நீ இன்னும் யெகோவாவின் சாட்சியாகத்தான் இருக்கிறாயா!” என்று வியந்தார். “ஆமாம் டாக்டர்” என்று பதிலளித்தேன். “அப்படின்னா, உன்னை நாங்க ஏன் விடுதலை செய்யணும்னு எனக்குப் புரியல. இருந்தாலும், உன்னை மாதிரி நோஞ்சானை விட்டு விடுறதுதான் எங்களுக்கு நிம்மதி” என்றார்.
அவர் சொன்னது உண்மைதான். ஏனென்றால், என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. உடம்பெல்லாம் பேன்களால் ஓரளவிற்கு அரிக்கப்பட்டிருந்தது. வாங்கிய அடிகளால் என்னுடைய ஒரு பக்க காது செவிடாகியிருந்தது. என்னுடைய உடல் முழுவதும் சீழ்வடியும் புண்களால் நிரம்பியிருந்தது. 46 மாதங்கள் அனுபவித்த கஷ்டநஷ்டங்கள், தீரா பசி, கட்டாய உழைப்பு ஆகியவற்றுக்குப் பிறகு என்னுடைய எடை வெறும் 28 கிலோவாக இருந்தது. இந்நிலையில் ஜூன் 15, 1943-ல் ராவன்ஸ்புரூக்கிலிருந்து விடுவிக்கப்பட்டேன்.
எந்தக் காவலாளியையும் துணைக்கு அனுப்பாமல் என்னுடைய சொந்த ஊருக்கு என்னை ரயில் ஏற்றினார்கள். லின்ஜ் நகரில் உள்ள கெஸ்டப்போ தலைமையகத்தில் ஆஜரானேன். கெஸ்டப்போ அதிகாரி என்னுடைய விடுதலை பேப்பர்களை கொடுத்துவிட்டு இவ்வாறு எச்சரித்தார்: “உன்னுடைய இரகசிய வேலைகளைத் தொடர்ந்து செய்வதற்காக உன்னை விடுதலை செய்கிறோம் என்று நீ நினைத்தால், அது தவறு! நீ பிரசங்கிப்பதை இனிமேல் பார்த்தால், அப்புறம் கடவுள்தான் உன்னை காப்பாற்றணும்.”
கடைசியாக வீடு திரும்பினேன்! ஏப்ரல் 4, 1939-ல் நான் முதல் முறை கைது செய்யப்பட்ட சமயத்திலிருந்து என்னுடைய அறையிலிருந்த பொருட்கள் ஒன்றையும் என்னுடைய அம்மா மாற்றவில்லை. படுக்கைக்குப் பக்கத்திலிருந்த மேஜையில் என்னுடைய பைபிள்கூட அப்படியே திறந்த நிலையில் இருந்தது! முழங்காற்படியிட்டு ஜெபித்து இருதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தேன்.
மலைப்பகுதியிலிருந்த பண்ணையில் வேலை செய்வதற்கு நான் நியமிக்கப்பட்டேன். அங்கிருந்த விவசாயி என்னுடைய பால்ய நண்பன். எனக்குச் சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லாதிருந்தபோதிலும், அவர் எனக்குக் கொஞ்சம் சம்பளம் கொடுத்தார். போருக்கு முன்பு, பைபிள் பிரசுரங்கள் சிலவற்றை தன்னுடைய இடத்தில் மறைத்து வைத்துக்கொள்ள இந்த நண்பர் எனக்கு அனுமதி அளித்திருந்தார். ஆவிக்குரிய பலத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்காக அந்தப் பிரசுரங்களை நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டேன். என்னுடைய எல்லா தேவைகளும் திருப்தி செய்யப்பட்டன. போர் முடியும் வரையில் அந்தப் பண்ணையிலேயே இருப்பதற்குத் தீர்மானித்தேன்.
மலைகளில் ஒளிந்து வாழ்தல்
ஆனாலும், சுதந்திர காற்றை கொஞ்ச காலம்தான் நிம்மதியாக சுவாசிக்க முடிந்தது. 1943-ம் ஆண்டு ஆகஸ்ட் மாத மத்திபத்தில் மருத்துவ பரிசோதனைக்காக ஒரு ராணுவ மருத்துவரை சென்று சந்திக்கும்படி உத்தரவிடப்பட்டேன். என்னுடைய பலவீனமான முதுகின் காரணமாக, ராணுவ சேவைக்கு நான் தகுதியற்றவன் என அவர் முதலில் அறிவித்தார். ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு, அதே மருத்துவர் தன்னுடைய அறிக்கையைத் திருத்தி, “போர்முனையில் சண்டையிட தகுதியுள்ளவர்” என்று எழுதினார். சிறிது காலத்திற்கு ராணுவத்தால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஏப்ரல் 17, 1945-ல் போர் முடிவதற்குச் சற்று முன்னர் அவர்கள் என்னைக் கண்டுபிடித்தனர். போர்முனையில் சேவை செய்ய நான் சேர்க்கப்பட்டேன்.
கொஞ்சம் துணிமணிகள், உணவு, பைபிள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அருகேயுள்ள மலைகளில் தஞ்சம் புகுந்தேன். ஆரம்பத்தில் என்னால் வெளியே தூங்க முடிந்தது. ஆனால் சீதோஷ்ண நிலை மோசமடைந்து இரண்டடி உயரத்திற்குப் பனி பெய்தது. அப்படியே தொப்பலாக நனைந்து விட்டேன். பிறகு, கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 4,000 அடி உயரத்திலிருந்த மலை குடிலுக்குச் சென்றேன். நடுங்கிக்கொண்டே, அங்கிருந்து கனல் அடுப்பைப் பற்றவைத்து, நானும் குளிர்காய்ந்து கொண்டு என்னுடைய உடைகளையும் காய வைத்தேன். ரொம்பவே களைத்துப் போனதால், அந்த அடுப்பின் முன் இருந்த பெஞ்சில் படுத்து தூங்கிவிட்டேன். வலி தாங்க முடியாமல் சட்டென எழுந்தேன். என் உடையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது! தீயை அணைக்க தரையில் உருண்டேன். என்னுடைய முதுகு முழுக்க கொப்புளங்கள் ஆயிற்று.
பிடிபட்டுவிடும் ஆபத்து இருந்தபோதும், மலைப் பகுதியிலிருந்த பண்ணைக்கு விடியும் முன் சென்றேன். ஆனால் அந்த விவசாயியின் மனைவி மிகவும் பயந்ததால், ஆட்கள் வலைவீசி தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்லி என்னை அனுப்பிவிட்டாள். அதனால் என்னுடைய பெற்றோரிடம் போனேன். என்னை உள்ளே அனுமதிக்க என் பெற்றோர்கூட முதலில் தயங்கினர். கடைசியில் வைக்கோல் பரணில் தூங்குவதற்கு என்னை அனுமதித்தனர். அம்மா என் காயங்களுக்கு மருந்து போட்டார். நான் அங்கிருப்பதை நினைத்து என் பெற்றோர் ரொம்பவே பயந்ததால், இரண்டு நாட்களுக்குப் பிறகு மலைகளில் ஒளிந்து கொள்வதே நல்லதென தீர்மானித்தேன்.
மே 5, 1945-ல் பெரும் சத்தத்தைக் கேட்டு எழுந்தேன். நேச நாடுகளின் விமானங்கள் தாழ்வாக பறப்பதை என்னால் பார்க்க முடிந்தது. ஹிட்லரின் ஆட்சி தூக்கியெறியப்பட்டதை அப்போதே தெரிந்து கொண்டேன்! நினைத்துக்கூட பார்க்க முடியாத அக்கினிப் பரீட்சையில் சகித்திருக்க யெகோவாவின் ஆவி என்னை பலப்படுத்தியிருந்தது. சங்கீதம் 55:22-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை அனுபவ ரீதியாக கண்டறிந்தேன். நான் முதன்முதலில் சோதனைகளைச் சந்தித்தபோது அது எனக்கு வெகுவாக ஆறுதல் அளித்தது. நான் என் ‘பாரத்தை யெகோவா மீது வைத்து விட்டேன்.’ நான் உடல் ரீதியாக பலவீனமாக இருந்தபோதிலும், ‘மரண இருளின் பள்ளத்தாக்கின்’ வழியே நடந்தபோது அவர் என்னை பாதுகாத்தார்.—சங்கீதம் 23:4.
யெகோவாவின் பலம் ‘பலவீனத்தில் பூரணமாய் விளங்கியது’
போருக்குப் பிறகு வாழ்க்கை மறுபடியும் சகஜ நிலைக்குத் திரும்பியது. என்னுடைய விவசாய நண்பனின் மலைப் பண்ணையில் கூலியாளாக முதலில் வேலை செய்தேன். ஐக்கிய மாகாணங்களில் ஆட்சி பொறுப்புடைய படை ஏப்ரல் 1946-ல் தலையிட்ட பிறகே, வாழ்நாள் முழுவதும் விவசாய பண்ணையில் உழைக்க வேண்டுமென்ற கட்டாயத்திலிருந்து நான் விடுவிக்கப்பட்டேன்.
போர் முடிவடைந்த பிறகு, பாட் இஷல்லிலும், அதைச் சுற்றியிருந்த மாவட்டங்களிலும் இருந்த கிறிஸ்தவ சகோதரர்கள் தவறாமல் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தனர். புதுத் தெம்புடன் பிரசங்க வேலையைத் தொடங்கினர். ஒரு தொழிற்சாலையில் இரவுநேர வாட்ச்மேனாக எனக்கு வேலை கிடைத்ததால், பயனியர் சேவையை என்னால் தொடர முடிந்தது. காலப்போக்கில் செ. உல்ப்காங்க் பகுதியில் குடியேறினேன். 1949-ல் தெரேசியா குர்ட்ஸ் என்பவளை மணந்தேன். அவளுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ஒரு மகளும் இருந்தாள். நாங்கள் 32 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். 1981-ல் அவள் மரித்தாள். 7 வருடங்களுக்கு மேலாக நான் அவளைப் பராமரித்து வந்தேன்.
தெரேசியா இறந்த பிறகு மறுபடியும் பயனியராகச் சேவை செய்ய ஆரம்பித்தேன். இழப்பின் வலியை ஆற்றும் அருமருந்தாக அது இருந்தது. தற்போது நான் ஒரு பயனியராகவும், பாட் இஷல் சபையில் மூப்பராகவும் சேவை செய்கிறேன். வீல்சேரே தஞ்சமென இருப்பதால், பாட் இஷல்லில் உள்ள பூங்காவிலோ, என் வீட்டிற்கு முன்பாகவோ மக்களிடம் ராஜ்ய நம்பிக்கையைக் குறித்துப் பேசி, பைபிள் பிரசுரங்களை அளிக்கிறேன். இப்படி பைபிள் விஷயங்களைப் பேசுவது எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது.
கடந்த காலத்தை நான் திரும்பிப் பார்க்கையில், நான் சகிக்க வேண்டியிருந்த பயங்கரமான அனுபவங்கள் என்னை கசப்படையச் செய்யவில்லை என்று உறுதியாகக் கூற முடியும். சோதனைகளின் காரணமாக சிலசமயம் நான் கைவிடப்பட்டவனைப் போல உணர்ந்தது உண்மைதான். என்றாலும், யெகோவா தேவனோடு எனக்கிருந்த கனிவான உறவு அப்படிப்பட்ட கஷ்ட காலங்களைச் சமாளிக்க எனக்கு உதவியது. “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று பவுலுக்கு கர்த்தர் கொடுத்த வாக்குறுதி என் வாழ்க்கையிலும் நிஜமாயிற்று. இப்போது கிட்டத்தட்ட 100 வயது எட்டிவிட்ட சமயத்தில், அப்போஸ்தலன் பவுலோடு சேர்ந்து என்னால் இவ்வாறு கூற முடியும்: “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.”—2 கொரிந்தியர் 12:9, 10.
[பக்கம் 25-ன் படங்கள்]
ஏப்ரல் 1939-ல் கெஸ்டப்போவால் கைது செய்யப்படுதல்
குற்றச்சாட்டுகளுடன் கெஸ்டப்போ ஆவணம், மே 1939
[படத்திற்கான நன்றி]
இரண்டு படங்களும்: Privatarchiv; B. Rammerstorfer
[பக்கம் 26-ன் படம்]
அருகிலிருந்த மலைகள் தஞ்சமளித்தன
[பக்கம் 23-ன் படத்திற்கான நன்றி]
Foto Hofer, Bad Ischl, Austria