நான் யெகோவாவுக்கு என்ன கைமாறு செய்வேன்?
ரூத் டானே சொல்கிறார்
‘1933 பயங்கரமான சம்பவங்கள் நடந்த வருஷம், ஏனென்றால், ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார், போப் அதைப் புனித ஆண்டு என்று அறிவித்தார், நீயும் பிறந்தாய்’ என்று என் அம்மா கிண்டலாகச் சொல்வார்.
என்னுடைய அப்பாவும் அம்மாவும் பிரான்சில் லரேன் என்ற இடத்திலுள்ள யூட்ஸ் ஊரில் வாழ்ந்து வந்தார்கள்; அது ஜெர்மனியின் எல்லைப் பகுதியைத் தொட்டாற்போல் அமைந்துள்ள சரித்திரப் புகழ்பெற்ற ஊராகும். தீவிர கத்தோலிக்கராய் இருந்த என் அம்மா புராட்டஸ்டன்டினராக இருந்த என் அப்பாவை 1921-ல் கல்யாணம் செய்தார். என்னுடைய அக்கா ஹெலன் 1922-ல் பிறந்தார்; அவருக்குக் குழந்தையிலேயே கத்தோலிக்க சர்ச்சில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.
1925-ல் ஒருநாள், கடவுளின் சுரமண்டலம் என்ற புத்தகத்தின் ஒரு ஜெர்மன் பிரதி அப்பாவுக்குக் கிடைத்தது. அதைப் படித்ததும் ‘இதுதான் சத்தியம்’ என்று அப்பாவுக்குப் புரிந்துவிட்டது. உடனே, அப்புத்தகத்தைப் பிரசுரித்தோருக்குக் கடிதம் எழுதினார். யெகோவாவின் சாட்சிகள் அவரைச் சந்திப்பதற்கு அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்; ஜெர்மனியில் அப்போது யெகோவாவின் சாட்சிகள் பீபல்ஃபார்ஷர் என்று அழைக்கப்பட்டார்கள். அப்பா, தான் கற்றுக்கொண்ட விஷயங்களை உடனடியாக மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க ஆரம்பித்தார். அம்மாவுக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. “நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்க, ஆனா தயவுசெய்து அந்த பீபல்ஃபார்ஷர் ஆட்களோடு மட்டும் போகாதீங்க!” என்று அம்மா அன்பாகச் சொல்வார். ஆனால், அப்பா தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ளவில்லை; 1927-ல் அவர் ஞானஸ்நானம் பெற்று ஒரு யெகோவாவின் சாட்சி ஆனார்.
அதனால், அப்பாவை விவாகரத்து செய்யும்படி என் (அம்மாவழி) பாட்டி என்னுடைய அம்மாவை நச்சரிக்க ஆரம்பித்தார். ஒருநாள் சர்ச் பூசையின்போது, “பொய்த் தீர்க்கதரிசியான டானேயிடம் யாரும் சேராதீர்கள்” என்று கூடியிருந்தோரைப் பாதிரி எச்சரித்தார். பூசை முடிந்து வீட்டிற்கு வந்த பாட்டி, ஒரு பூந்தொட்டியைத் தூக்கி மாடியிலிருந்து அப்பாமேல் போட்டார். அப்பாவின் தலையில் விழவிருந்த கனமான அந்தத் தொட்டி சற்றே பிசகி அவருடைய தோளில் விழுந்தது. அந்தச் சம்பவம் அம்மாவை யோசிக்க வைத்தது. ‘ஒரு மதம் கொலை செய்யக்கூட ஒருவரைத் துணியவைக்கிறதென்றால் அது சரியான மதமாக இருக்கவே முடியாது’ என்று அவர் நினைத்தார். அதனால், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை வாசிக்க ஆரம்பித்தார். சீக்கிரத்திலேயே ‘இதுதான் சத்தியம்’ என்பதைப் புரிந்துகொண்டார்; 1929-ல் ஞானஸ்நானம் பெற்றார்.
யெகோவா நிஜமானவர் என்பதை எனக்கும் அக்காவுக்கும் புரியவைக்க என் பெற்றோர் அரும்பாடுபட்டார்கள். அவர்கள் பைபிள் கதைகளை எங்களுக்கு வாசித்துக்காட்டினார்கள்; அதிலுள்ள கதாபாத்திரங்கள் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்று எங்களிடம் கேட்டார்கள். இப்படி எங்களோடு சேர்ந்து படிப்பதற்காகவும் கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் செல்வதற்காகவும் நேரம் ஒதுக்க அப்பா விரும்பியதால், இரவில் அல்லது சாயங்காலத்தில் வேலைக்குச் செல்வதை விட்டுவிட்டார்; வருமானம் பெருமளவு குறைந்துவிடும் என்று தெரிந்தும் அப்படிச் செய்தார்.
துன்பப் புயல் தாக்குகிறது
ஸ்விட்ஸர்லாந்திலிருந்தும் பிரான்சிலிருந்தும் வந்த பயணக் கண்காணிகளையும் பெத்தேல் ஊழியர்களையும் என்னுடைய பெற்றோர் எப்போதும் உபசரித்தார்கள். எங்களுடைய வீட்டிலிருந்து சில மைல் தூரத்திலேயே இருந்த ஜெர்மனியில் சகோதர சகோதரிகள் அனுபவித்துக்கொண்டிருந்த கஷ்டங்களைப் பற்றி அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள். நாசி அரசாங்கம் அப்போது யெகோவாவின் சாட்சிகளைச் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பியது, அவர்களுடைய பிள்ளைகளையும் அவர்களிடமிருந்து பிரித்தது.
கஷ்டங்களைச் சந்திக்க எங்கள் பெற்றோர் என்னையும் அக்காவையும் தயார்படுத்தினார்கள். நாங்கள் சரியான தீர்மானங்களை எடுப்பதற்குக் கைகொடுக்கும் சில பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்ய உதவினார்கள். உதாரணத்திற்கு அவர்கள் எங்களிடம், “என்ன செய்வது என்று தெரியாமல் திணரும்போது நீதிமொழிகள் 3:5, 6-ஐ ஞாபகப்படுத்திப் பாருங்கள்; ஸ்கூலில் வருகிற சோதனைகளைக் குறித்துப் பயந்துபோனால் 1 கொரிந்தியர் 10:13-ஐ சிந்தியுங்கள்; எங்களிடமிருந்து நீங்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நீதிமொழிகள் 18:10-ஐ திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்ளுங்கள்” என்று சொல்வார்கள். நான் 23-ஆம் சங்கீதத்தையும் 91-ஆம் சங்கீதத்தையும் மனப்பாடம் செய்தேன்; யெகோவா எப்போதும் என்னைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.
1940-ல் அல்சேஸ்-லரேனை நாசி ஜெர்மனி கைப்பற்றியது; அந்தப் புதிய அரசாங்கம் வயதுவந்தோர் எல்லாரையும் நாசி கட்சியில் சேரும்படி வற்புறுத்தியது. அப்பா அதில் சேர மறுத்துவிட்டதால், கெஸ்டபோ என்ற இரகசிய போலீசார் அவரைக் கைது செய்வதாகப் பயமுறுத்தினார்கள். ராணுவ சீருடைகளைத் தைக்க அம்மா மறுத்ததால், அவரையும் அவர்கள் பயமுறுத்தினார்கள்.
ஸ்கூல் என்றாலே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். ஒவ்வொரு நாளும் ஹிட்லருக்காகப் பிரார்த்தனை செய்து, “ஹிட்லர் வாழ்க!” என்று சொல்லி, வலது கையை நீட்டியபடி தேசிய கீதம் பாடிய பிறகே வகுப்பு தொடங்கும். “ஹிட்லர் வாழ்க!” என நான் சொல்லக்கூடாது என்று என் பெற்றோர் நேரடியாக என்னிடம் சொல்வதற்குப் பதிலாக, என்னுடைய மனசாட்சியைப் பயிற்றுவிப்பதற்கு உதவினார்கள். ஆகவே, அதைச் சொல்லக்கூடாது என நானே முடிவு செய்தேன். அதனால், ஆசிரியர்கள் என்னை மாறி மாறி அறைந்தார்கள், ஸ்கூலைவிட்டு வெளியேற்றி விடுவதாகப் பயமுறுத்தினார்கள். எனக்கு ஏழு வயது இருக்கும்போது ஸ்கூலிலிருந்த 12 ஆசிரியர்களுக்கு முன்பாகவும் நான் நிற்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. “ஹிட்லர் வாழ்க!” என்று சொல்லும்படி அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள். இருந்தாலும், யெகோவாவின் உதவியோடு நான் உறுதியாக மறுத்துவிட்டேன்.
ஒரு ஆசிரியர் நைசாகப் பேசி என் மனதை மாற்ற முயன்றார். ‘நீ நல்ல பிள்ளை, உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன்னை ஸ்கூலிலிருந்து அனுப்பிவிட்டால் என் மனசுக்கு ரொம்பவே கஷ்டமாகி விடும்’ என்பதாகச் சொன்னார். பின்பு, “நீ உன்னுடைய கையை நேராக நீட்ட வேண்டிய அவசியம்கூட இல்லை. கொஞ்சம் உயர்த்தினாலே போதும். ‘ஹிட்லர் வாழ்க!’ என்று நீ வாய்திறந்து சொல்லவும் வேண்டியதில்லை. அப்படிச் சொல்வதுபோல் வாய் அசைத்தாலே போதும்” என அவர் சொன்னார்.
ஆசிரியர் அப்படிப் பேசியதை அம்மாவிடம் சொன்னேன்; அப்போது, பாபிலோன் ராஜா செய்துவைத்த சிலைக்குமுன் நின்ற மூன்று எபிரெய இளைஞரைப் பற்றிய பைபிள் பதிவை அவர் எனக்கு ஞாபகப்படுத்தினார். “அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?” என்று அவர் கேட்டார். “கீழே குனிந்து வணங்க வேண்டியிருந்தது” என்று சொன்னேன். அதற்கு அவர், “அப்படிக் குனிந்து வணங்க வேண்டியிருந்த சமயத்தில் அவர்கள் குனிந்து தங்களுடைய செருப்பின் வார்களைக் கட்டுவதுபோல் பாவனை செய்திருந்தால் சரியாக இருந்திருக்குமா? நீயே முடிவுசெய்; உனக்கு எது சரியென்று படுகிறதோ அதைச் செய்” என்றார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவைப் போல நானும் யெகோவாவுக்கு மட்டுமே விசுவாசமாய் இருக்க முடிவு செய்தேன்.—தானி. 3:1, 13-18.
ஆசிரியர்கள் பலமுறை என்னை ஸ்கூலிலிருந்து நீக்கினார்கள், பெற்றோரிடமிருந்து என்னைப் பிரித்துவிடுவதாகவும் பயமுறுத்தினார்கள். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று என் மனது அடித்துக்கொண்டே இருந்தது; ஆனால், என்னுடைய பெற்றோர் எப்போதும் எனக்குத் தைரியம் சொன்னார்கள். நான் ஸ்கூலுக்குப் போகும்போதெல்லாம் என்னோடு சேர்ந்து அம்மா ஜெபம் செய்வார், எனக்குப் பாதுகாப்பு கொடுக்கும்படி யெகோவாவிடம் கேட்பார். சத்தியத்தில் உறுதியாய் இருப்பதற்குத் தேவையான பலத்தை யெகோவா தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. (2 கொ. 4:7) ஸ்கூலில் எனக்கு ரொம்ப தொல்லை கொடுக்கப்பட்டால், பயப்படாமல் வீட்டிற்கு வந்துவிடும்படி அப்பா சொன்னார். “நாங்கள் உன்மேல் உயிரையே வைத்திருக்கிறோம். நீ எப்போதும் எங்களுடைய பிள்ளைதான். ஆனால், இது உனக்கும் யெகோவாவுக்கும் இடையேயுள்ள விஷயம்” என்று அப்பா சொன்னார். இந்த வார்த்தைகள் யெகோவாவுக்கு உத்தமமாய் இருக்க வேண்டும் என்ற என் ஆசைக்கு உரம் போட்டன.—யோபு 27:5.
இரகசிய போலீசார் அடிக்கடி எங்களுடைய வீட்டிற்கு வந்து சாட்சிகளுடைய பிரசுரங்கள் இருக்கிறதா என்று சோதனை செய்தார்கள், என் பெற்றோரைத் துருவித் துருவி விசாரித்தார்கள். அவர்கள் அடிக்கடி அம்மாவை வீட்டிலிருந்து கொண்டுபோய் விடுவார்கள், பல மணிநேரத்திற்குப் பிறகுதான் அனுப்புவார்கள். அதேபோல் அப்பாவையும் அக்காவையும்கூட வேலையிடத்திலிருந்து கொண்டுபோய் விடுவார்கள். நான் ஸ்கூலிலிருந்து திரும்பி வரும்போது வீட்டில் அம்மா இருப்பார்களா என்றுகூட சொல்ல முடியாது. சில சமயங்களில் பக்கத்து வீட்டிலுள்ளவர், “உன் அம்மாவை அவர்கள் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள்” என்று சொல்வார். அப்போது நான் வீட்டில் ஒளிந்துகொண்டு, ‘அம்மாவை அவர்கள் கொடுமைப்படுத்துகிறார்களோ? அம்மாவை நான் திரும்பப் பார்க்க முடியுமா?’ என்றெல்லாம் யோசிப்பேன்.
நாடுகடத்தப்படுதல்
ஜனவரி 28, 1943 அன்று விடியற்காலை மூன்றரை மணிக்கு இரகசிய போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை எழுப்பினார்கள். என்னுடைய பெற்றோரும் நானும் அக்காவும் நாசி கட்சியில் சேர்ந்துவிட்டால் எங்களை நாடுகடத்த மாட்டார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். இல்லையெனில், மூன்று மணிநேரத்திற்குள் தயாராகும்படி சொன்னார்கள். இப்படியொரு சூழ்நிலை வருமென்று தெரிந்து, ஒரு டிரஸ்ஸையும் ஒரு பைபிளையும் எங்களுடைய பைகளில் அம்மா ஏற்கெனவே தயாராக வைத்திருந்தார்; அதனால், அந்த மூன்று மணிநேரத்தில் நாங்கள் ஜெபம் செய்து ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினோம். ‘கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து எதுவுமே நம்மைப் பிரிக்க முடியாது’ என்பதை அப்பா எங்களுக்கு நினைவுபடுத்தினார்.—ரோ. 8:35-39.
இரகசிய போலீசார் டாணென்று வந்து நின்றார்கள். நாங்கள் போகையில், ஆங்லாட் என்ற வயதான சகோதரி கண்ணீர் பொங்க கையசைத்து எங்களை வழியனுப்பியது இன்றும் என் கண்முன் நிற்கிறது. இரகசிய போலீசார் மெட்ஸ் ரயில் நிலையத்திற்கு எங்களை கூட்டிக்கொண்டு போனார்கள். மூன்று நாள் ரயில் பயணத்திற்குப் பிறகு காக்வாவிட்செக் முகாமுக்கு வந்து சேர்ந்தோம்; அது போலந்திலுள்ள ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமின் ஒரு கிளை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு க்ளிவிட்செ என்ற இடத்திலுள்ள முகாமுக்கு அனுப்பப்பட்டோம்; முன்பு அது ஒரு கான்வென்டாக இருந்தது. எங்களுடைய நம்பிக்கையை விட்டுக்கொடுத்துவிடுவதாக ஒரு சான்றிதழில் ஒவ்வொருவரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் எங்களை விடுதலை செய்துவிடுவதாகவும் எங்களுடைய உடைமைகளைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் அவர்கள் சொன்னார்கள். அப்பாவும் அம்மாவும் கையெழுத்துப் போட மறுத்துவிட்டார்கள்; அதனால் அந்தக் காவலாளிகள், “இனி உங்களுடைய வீட்டை மறந்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்கள்.
ஜூன் மாதத்தில் ஸாம்ப்காவிட்செ என்ற இடத்திற்கு நாங்கள் அனுப்பப்பட்டோம்; அங்கு எனக்கு அடிக்கடி தலைவலி வர ஆரம்பித்தது, அந்தப் பிரச்சினை இன்றுவரை இருக்கிறது. என் கைவிரல்களில் ஒருவித தொற்று ஏற்பட்டது; மயக்க மருந்து கொடுக்காமலேயே பல நகங்களை டாக்டர் பிடுங்கி எடுத்தார். ஆனால், இவை எல்லாவற்றின் மத்தியிலும் எனக்குக் கிடைத்த சின்ன சந்தோஷம் என்னவென்றால், அந்தக் காவலாளிகள் அடிக்கடி என்னை பேக்கரிக்கு அனுப்பி ஏதாவது வாங்கிவரும்படி சொல்வார்கள்; அங்கிருந்த ஒரு பெண் எனக்குச் சாப்பிட ஏதாவது தருவார்.
அதுவரையில், நாங்கள் மற்ற கைதிகளோடு இல்லாமல் தனியே ஒரு குடும்பமாகத் தங்கியிருந்தோம். அக்டோபர் 1943-ல் நாங்கள் ஸாம்ப்காவிட்செயில் உள்ள முகாமுக்கு அனுப்பப்பட்டோம். அங்கே, ஒரு மாடி அறையில் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என சுமார் 60 பேருடன் அடுக்குக் கட்டில்களில் தூங்கினோம். வாயில் வைக்க முடியாதளவுக்குக் கெட்டுப்போன சாப்பாட்டைத்தான் நாசி படையினர் எங்களுக்குத் தந்தார்கள்.
இந்தக் கஷ்டத்தின் மத்தியிலும் நாங்கள் எங்களுடைய நம்பிக்கையை விட்டுவிடவே இல்லை. போருக்குப் பிறகு பிரசங்க வேலை பெரியளவில் நடைபெறும் என்பதை நாங்கள் காவற்கோபுரத்தில் படித்திருந்தோம். ஆகவே, ஏன் கஷ்டப்படுகிறோம் என்பதையும் எங்களுடைய கஷ்டமெல்லாம் சீக்கிரத்தில் தீரும் என்பதையும் அறிந்திருந்தோம்.
கூட்டுப் படையினர் முன்னேறி வருவதைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டதும் நாசி படைகள் தோல்வியடையப் போவதைப் புரிந்துகொண்டோம். 1945-ன் துவக்கத்தில், நாசி படையினர் எங்களுடைய முகாமை இழுத்துமூடத் தீர்மானித்தார்கள். ஆகவே, பிப்ரவரி 19-ல் சுமார் 240 கிலோமீட்டர் தூரத்திற்கு எங்களைக் கட்டாயப்படுத்தி நடக்க வைத்தார்கள். நான்கு வாரங்களுக்குப் பிறகு, ஜெர்மனியிலுள்ள ஸ்டைன்ஃபெல்ஸ் என்ற இடத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம்; அங்கே காவலாளிகள் ஒரு சுரங்கத்திற்குள் எல்லாரையும் கும்பலாக அழைத்துச் சென்றார்கள். எங்களைக் கொன்றுவிடுவார்கள் எனப் பலர் நினைத்தார்கள். ஆனால், அன்று கூட்டுப் படையினர் வந்து சேர்ந்தார்கள், உடனே நாசி படையினர் ஓட்டம் பிடித்தார்கள். அத்துடன் எங்களுடைய கஷ்ட காலம் தீர்ந்தது.
என்னுடைய இலட்சியங்களை எட்டுதல்
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, மே 5, 1945-ல் யூட்ஸ் ஊரில் இருந்த எங்களுடைய வீட்டிற்குத் தலை நிறைய பேனோடு அழுக்கு மூட்டையாக வந்து சேர்ந்தோம். நாங்கள் பிப்ரவரி மாதத்தில் போட்ட அதே உடைகளோடு இருந்தோம்; அதனால் அவற்றை எரித்துவிடத் தீர்மானித்தோம். அம்மா எங்களிடம், “இதுதான் உங்களுடைய வாழ்க்கையிலேயே ரொம்ப ரொம்ப சந்தோஷமான நாள். நம்மிடம் எதுவும் இல்லை. நாம் போட்டிருக்கிற டிரஸ்கூட நம்முடையது இல்லை. இருந்தாலும், நாம் நாலு பேரும் உண்மையுள்ளவர்களாய் திரும்பி வந்திருக்கிறோம். நாம் விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவே இல்லை” என்று சொன்னது இன்றும் நினைவிருக்கிறது.
உடல்நிலை தேறும் வரையில் மூன்று மாதங்கள் ஸ்விட்ஸர்லாந்தில் இருந்த பிறகு, நான் மீண்டும் ஸ்கூலில் சேர்ந்தேன்; வீட்டிற்கு அனுப்பிவிடுவார்களோ என்ற பயமே எனக்கு இருக்கவில்லை. அதுமுதல் சகோதர சகோதரிகளோடு ஒன்றுகூடி வர முடிந்தது, வெளிப்படையாகப் பிரசங்கிக்கவும் முடிந்தது. நான் பல வருடங்களுக்கு முன்பு யெகோவாவுக்குக் கொடுத்திருந்த உறுதிமொழியை யாவருக்கும் தெரியப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 28, 1947-ல் ஞானஸ்நானம் பெற்றேன்; அப்போது எனக்கு 13 வயது. மோசல் ஆற்றில்தான் அப்பா எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். உடனடியாக பயனியர் சேவையை ஆரம்பிக்க விரும்பினேன்; ஆனால், முதலில் ஒரு கைத்தொழிலைக் கற்றுக்கொள்ளும்படி அப்பா உறுதியாகச் சொல்லிவிட்டார். நான் தையல் வேலையைக் கற்றுக்கொண்டேன். 1951-ல் எனக்கு 17 வயது இருந்தபோது டியோன்வில் என்ற பக்கத்து ஊரில் ஒரு பயனியராக நியமிக்கப்பட்டேன்.
அந்த வருடம் பாரிஸ் நகரில் நடந்த மாநாட்டுக்குச் சென்றிருந்தபோது, மிஷனரி சேவைக்கு விண்ணப்பித்தேன். அப்போது எனக்குப் போதிய வயதாகாததால், என்னுடைய விண்ணப்பத்தைச் சகோதரர் நேதன் நார் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகச் சொன்னார். ஜூன் 1952-ல் அமெரிக்காவிலுள்ள நியு யார்க் நகரைச் சேர்ந்த சௌத் லான்சிங்கில் நடைபெற்ற உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 21-வது வகுப்பில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்டேன்.
கிலியட் பயிற்சியும் அதற்குப் பின்பும்
அது ஒரு மறக்க முடியாத அனுபவம்! மற்றவர்களுக்குமுன் என்னுடைய தாய்மொழியில் பேசுவதே எனக்குப் பெரும்பாடாக இருக்கும். அப்படியிருக்க நான் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருந்தது. ஆனாலும், கிலியட் பள்ளி ஆசிரியர்கள் அன்போடு எனக்கு உதவினார்கள். நான் எப்போதும் கூச்சத்தில் புன்னகைப்பதைப் பார்த்து ஒரு சகோதரர் எனக்குப் புன்னகை அரசி என்ற பட்டப்பெயரையே வைத்துவிட்டார்.
ஜூலை 19, 1953-ல் எங்களுடைய பட்டமளிப்பு விழா நியு யார்க்கிலுள்ள யாங்கி ஸ்டேடியத்தில் நடைபெற்றது; நான் ஐடா கன்டுஸ்ஸோ (பிற்பாடு சானியாபாஸ்) என்ற சகோதரியுடன் பாரிஸுக்கு நியமிக்கப்பட்டேன். அங்குள்ள வசதிபடைத்த மக்களிடம் பிரசங்கிக்கச் சற்று பயமாக இருந்தது; ஆனால், தாழ்மையுள்ளம் படைத்த அநேகருக்கு பைபிள் படிப்பு நடத்த முடிந்தது. ஐடா திருமணம் செய்துகொண்டு, 1956-ல் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுவிட்டார்; ஆனால், நான் பாரிஸிலேயே இருந்து சேவை செய்தேன்.
1960-ல் நான் பெத்தேலில் உள்ள ஒரு சகோதரரை மணந்தேன்; நாங்கள் ஷோமானிலும் விஷியிலும் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்தோம். ஐந்து வருடங்களுக்குப் பிறகு, எனக்குக் காசநோய் வந்ததால் பயனியர் சேவையை விடவேண்டியதாயிற்று. கடைசி வரைக்கும் முழுநேர சேவை செய்ய வேண்டும் என்பது சிறு வயதிலிருந்தே என்னுடைய இலட்சியமாக இருந்ததால் அதை விட்டுவிட்டதை நினைத்து மனம் புழுங்கினேன். சில காலத்திற்குப் பிறகு, என்னுடைய கணவர் எனக்குத் துரோகம் செய்து வேறொரு பெண்ணோடு போய்விட்டார். அந்தக் கசப்பான காலத்தில் என் சகோதர சகோதரிகள் தூணாக இருந்து என்னைத் தாங்கினார்கள். யெகோவாவும் தொடர்ந்து என் சுமையைத் தாங்கினார்.—சங். 68:19.
இப்போது பிரான்சு கிளை அலுவலகத்திற்கு அருகே நார்மன்டேயிலுள்ள லூவியேவில் நான் வசிக்கிறேன். உடல்நலப் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, யெகோவா என்னை உள்ளங்கையில் வைத்துப் பராமரித்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். என்னுடைய அப்பா அம்மா சிறுவயதில் கொடுத்த பயிற்சிதான், இன்றும்கூட நல்ல மனப்பான்மையோடு இருக்க கைகொடுக்கிறது. யெகோவா ஒரு நிஜமான நபர்; அவரிடம் நான் அன்புகாட்ட முடியும், பேச முடியும், அவர் என் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார் என்றெல்லாம் என் பெற்றோர் கற்றுக்கொடுத்தார்கள். உண்மையில், “யெகோவா எனக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைமாறு செய்வேன்?”—சங். 116:12, NW.
[பக்கம் 6-ன் சிறுகுறிப்பு]
“யெகோவா என்னை உள்ளங்கையில் வைத்துப் பராமரித்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்”
[பக்கம் 5-ன் படம்]
ஆறு வயதில் நான்; நச்சுவாயுவைத் தடுக்கும் முகமூடியுடன்
[பக்கம் 5-ன் படம்]
16 வயதில் ஒரு விசேஷ ஊழியத்திற்காக லக்ஸம்பர்க்கில் மிஷனரிகளுடனும் பயனியர்களுடனும்
[பக்கம் 5-ன் படம்]
1953-ல் ஒரு மாநாட்டின்போது அப்பா அம்மாவுடன்