வாழ்க்கை சரிதை
யெகோவாவின் அன்பான பராமரிப்பில் நம்பிக்கை
அன்னா டென்ஸ் டர்பென் சொன்னபடி
சின்னப் பிள்ளையாக இருந்தபோது கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு என் பெற்றோரைத் துளைத்தெடுப்பேன். அம்மா என்னைப் பார்த்து “நீ ஒரு ‘கேள்வி நாயகி!’” என்பார் புன்முறுவலுடன். துருதுருவென நான் ஆர்வத்தோடு கேட்கும் கேள்விகளுக்காக அம்மாவும் அப்பாவும் என்னைத் திட்டினதே இல்லை. மாறாக, நன்கு யோசித்து செயல்படவும், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கவுமே அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். அந்தப் பயிற்சி எவ்வளவு பிரயோஜனமாய் இருந்தது! ஒரு நாள் நாசிக்கள் என்னுடைய அருமையான பெற்றோரை என்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள். அப்போது எனக்கு 14 வயதிருக்கும். அதற்குப் பிறகு நான் என் பெற்றோரைப் பார்க்கவே இல்லை.
என்னுடைய அப்பா ஆஸ்கார் டென்ஸ், அம்மா அன்னா மாரியா. இருவரும் ஜெர்மனியைச் சேர்ந்த லோயராக் நகரில் வாழ்ந்து வந்தார்கள். அது சுவிட்சர்லாந்து நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. அவர்கள் இளம் வயதிலேயே அரசியலில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள், அதனால் சமுதாயத்தில் பேரும் புகழும் மதிப்பும் மரியாதையும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் 1922-ல், திருமணமாகி கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அரசியலைப் பற்றி தங்களுக்கிருந்த கருத்துகளையும் வாழ்க்கையின் இலக்குகளையும் மாற்றிக்கொண்டார்கள். பைபிள் மாணாக்கர்கள் என்று அப்போது அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளோடு, அம்மா பைபிள் படிக்க ஆரம்பித்தார். கடவுளுடைய ராஜ்யம் இந்தப் பூமியில் சமாதானத்தை நிலைநாட்டும் என்பதைக் கற்றபோது ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். விரைவிலேயே அப்பாவும் பைபிள் படிப்பில் கலந்துகொண்டார். இருவரும் பைபிள் மாணாக்கர்களுடைய கூட்டங்களுக்கும் போகத் தொடங்கினார்கள். அந்த வருட கிறிஸ்மஸ் பரிசாக, கடவுளின் சுரமண்டலம் (ஆங்கிலம்) என்ற பைபிள் படிப்பு புத்தகத்தை அம்மாவுக்கு அப்பா கொடுத்திருந்தார். நான் அவர்களுடைய ஒரே மகள், மார்ச் 25, 1923-ல் பிறந்தேன்.
கோடை காலத்தில், பிளாக் ஃபாரஸ்ட் என்ற நிசப்தமான காட்டுக்குள் நெடுந்தூரம் வாக்கிங் போனது, அம்மா வீட்டு வேலைகளைச் சொல்லித் தந்தது—ஆஹா, இனிய நினைவுகள் அவை! அம்மா கிச்சனில் நின்றுகொண்டு எனக்குச் சமைக்க கற்றுக்கொடுத்த காட்சி, இன்னமும் என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. மிக முக்கியமாக, யெகோவா தேவனை நேசிக்கவும் நம்பவும் என் பெற்றோர் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.
எங்களுடைய சபையில் வைராக்கியமான ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் சுமார் 40 பேர் இருந்தார்கள். ராஜ்யத்தைப் பற்றி பேச வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் என் பெற்றோருக்கு விசேஷ திறமை இருந்தது. முன்பு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால், மற்றவர்களிடம் பேசுவது அவர்களுக்குச் சுலபமாக இருந்தது; ஜனங்களும் அவர்கள் சொல்வதை நன்றாக கேட்டார்கள். எனக்கு ஏழு வயதாயிருக்கையில், நானும் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். முதன்முதலாக நான் ஊழியத்திற்குச் சென்றிருந்தபோது, என்னோடு வந்த சகோதரி சில பத்திரிகைகளை என் கையில் கொடுத்து, ஒரு வீட்டைக் காண்பித்து, “அவர்களுக்கு இது வேணுமான்னு போய் கேட்டுட்டு வா” என்று சொன்னார். 1931-ல், பைபிள் மாணாக்கர்களுடைய மாநாடு சுவிட்சர்லாந்திலுள்ள பாஸ்லே நகரில் நடந்தது. அங்கு என் பெற்றோர் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.
கலவரம் முதல் கொடுங்கோன்மை வரை
அந்நாட்களில் ஜெர்மனியெங்கும் ஒரே கலவர மயம். பல்வேறு அரசியல் கட்சிகள் தெருக்களிலேயே நேருக்கு நேர் மோதி வன்முறையில் ஈடுபட்டார்கள். ஒருநாள் இராத்திரி, எங்கள் பக்கத்து வீட்டிலிருந்து வந்த அலறல் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். தங்களுடைய அண்ணனின் அரசியல் கொள்கைகள் பிடிக்காததால், இரண்டு டீனேஜ் பையன்கள் அவரைக் கவைக் கம்பால் குத்திக் கொன்றிருந்தார்கள், அப்போது ஏற்பட்ட சத்தம்தான் அது. யூதர்களுக்கு எதிரான பகைமையும் ரொம்ப அதிகரித்தது. என்னுடைய பள்ளியில் படித்த ஒரு பெண் யூத மதத்தைச் சேர்ந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக, மற்றவர்களிடமிருந்து அவளைப் பிரித்து தன்னந்தனியாக ஒரு மூலையில் நிற்க வைத்தார்கள். அவளுக்காக நான் மிகவும் பரிதாபப்படுவேன். அதே நிலையை நானும் அனுபவிக்கப் போகிறேன் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
ஜனவரி 30, 1933-ல் அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் தலைவர் ஆனார். நகராட்சி அலுவலகத்தின் மேல், ஸ்வஸ்திக் சின்னமுள்ள கொடியை நாசிக்கள் வெற்றிக்களிப்புடன் ஏற்றியதை நாங்கள் இரண்டு கட்டடங்கள் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுடைய பள்ளியில் “ஹெய்ல் ஹிட்லர்!” என்ற வாழ்த்துதல் சொல்ல வேண்டுமென உற்சாகத்துடன் டீச்சர் எங்களுக்குச் சொல்லித் தந்தார். அதைப் பற்றி அன்று மதியம் அப்பாவிடம் சொன்னேன். அவர் கலக்கமடைந்தார். பின்பு இவ்வாறு சொன்னார்: “எனக்கு இது சுத்தமா பிடிக்கல. ‘ஹெய்ல்’ என்றால் இரட்சிப்புன்னுதானே அர்த்தம். நாம் ‘ஹெய்ல் ஹிட்லர்!’ என்று சொன்னால் ஹிட்லரால் நமக்கு இரட்சிப்பு வருகிறது என்றுதானே அர்த்தம். ஆனால் யெகோவா மூலமாகத்தான் நமக்கு இரட்சிப்பு வரும். அதனால் அப்படிச் சொல்றது என்னவோ சரின்னு எனக்குப் படல, ஆனால் நீ என்ன செய்யணும்னு நீயே தீர்மானிச்சுக்கோ.”
ஹெய்ல் ஹிட்லர் என்ற வாழ்த்துதலை இனி சொல்லக் கூடாதென்று தீர்மானித்தேன். அதனால் என் பள்ளியில் படிப்பவர்கள் என்னை ஏதோ தீண்டத்தகாதவளைப் போல நடத்தினார்கள். டீச்சர்கள் பார்க்காத சமயத்தில், சில பையன்கள் என்னை அடிக்கவும் செய்தார்கள். கடைசியாக, என்னை சட்டை செய்வதையே நிறுத்திவிட்டார்கள். என்னோடு விளையாடக் கூடாது என தங்கள் அப்பாமார் சொன்னதாக என்னுடைய ஃப்ரண்ட்ஸ்கூட சொன்னார்கள். என்னால் தங்களுக்கு ஏதோ ஆபத்து வரக்கூடுமென நினைத்தார்கள்.
ஜெர்மனியை நாசிக்கள் கைப்பற்றி இரண்டு மாதங்கள் கழித்து, யெகோவாவின் சாட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது, நாட்டிற்கு அவர்கள் ஆபத்தானவர்கள் என்று கருதப்பட்டதால் அவ்வாறு தடை விதிக்கப்பட்டது. மாக்டிபர்க்கில் இருந்த சாட்சிகளுடைய அலுவலகத்தை நாசிக்களின் அதிரடிப் படையினர் மூடிவிட்டார்கள்; கூட்டங்களைத் தடை செய்தார்கள். ஆனால் எங்கள் குடும்பத்தார் எல்லைப் பகுதியில் வாழ்ந்ததால், எல்லையைக் கடந்து பாஸ்லே நகர் செல்ல பெர்மிட்டுகளை அப்பா வாங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுக்காக நாங்கள் பாஸ்லே நகர் சென்றோம். எதிர்காலத்தை தைரியத்தோடு எதிர்ப்பட ஜெர்மனியிலுள்ள சகோதரர்களுக்கு இதுபோன்ற ஆன்மீக உணவு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென அப்பா அடிக்கடி சொல்வார்.
ஆபத்தான நடைப்பயணங்கள்
மாக்டிபர்க் அலுவலகம் மூடப்பட்ட பிறகு, அங்கு சேவை செய்த யூலியுஸ் ரிஃபல் என்பவர் தன் சொந்த ஊரான லோயராக்கில் தலைமறைவாக செய்யப்பட்டு வந்த ஊழியத்தை ஒழுங்கமைப்பதற்காக வந்திருந்தார். அவருக்குத் தோள்கொடுக்க அப்பா உடனே முன்வந்தார். அம்மாவையும் என்னையும் உட்கார வைத்து அப்பா பேசினார். பைபிள் பிரசுரங்களை சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனிக்குக் கொண்டுவரும் வேலையில் உதவ அப்பா ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். அது மிக மிக ஆபத்தானது என்றும் தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் அவர் சொன்னார். அந்த வேலையைச் செய்ய அப்பா எங்களைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் அந்த வேலை எங்கள் உயிருக்கே உலை வைத்துவிடலாம். ஆனால் அம்மா, “நீங்க என்ன சொல்றீங்களோ அதை நான் செய்யத் தயார்!” என்று மறுயோசனையின்றிச் சொன்னார். இருவரும் என்னைப் பார்த்தபோது, “ஓ, நானும் தயார்!” என்று சொன்னேன்.
நம்முடைய காவற்கோபுர பத்திரிகை அளவிலான ஒரு பர்ஸை அம்மா தன் கையாலேயே தைத்தார். அந்தப் பர்ஸின் ஒரு அறையில் பத்திரிகையை நுழைத்துத் தைத்தார். அப்பாவுடைய துணிமணிகளிலும் உள் பாக்கெட்டுகளைத் தைத்தார். இடுப்புப் பட்டைகள் இரண்டையும் தைத்தார். அவரும் நானும் அதில் சிறிய பைபிள் படிப்பு புத்தகங்களைக் கவனமாக கொண்டு போவோம். ஒவ்வொரு முறையும் எங்களுடைய இந்த இரகசிய பொக்கிஷத்தை வெற்றிகரமாக வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டால் ‘அப்பாடி’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு, யெகோவாவுக்கு நன்றி தெரிவிப்போம். எங்கள் வீட்டின் மேல் மாடியிலிருந்த சிறிய அறையில் பிரசுரங்களைப் பதுக்கி வைப்போம்.
முதலில் எங்கள் மீது நாசிக்களுக்குத் துளியும் சந்தேகம் ஏற்படவில்லை. எங்களை நிறுத்தி கேள்வி கேட்கவோ வீட்டைச் சோதனையிடவோ இல்லை. இருந்தாலும், பிரச்சினை வந்தால் சகோதரர்களை எச்சரிக்க ஒரு ரகசிய குறியீட்டைப் பயன்படுத்தத் தீர்மானித்தோம். அது 4711 என்ற பிரபலமான ஒரு ‘சென்ட்’ பெயர். எங்கள் வீட்டிற்குள் வருவது ஆபத்தென்றால், எப்படியாவது இந்த நம்பரைச் சொல்லி சகோதரர்களை உஷார்படுத்திவிடுவோம். கட்டடத்திற்குள் நுழையும் முன்னரே, முன் ரூம் ஜன்னல்களைப் பார்க்குமாறு அவர்களிடம் அப்பா சொல்லியிருந்தார். இடது பக்க ஜன்னல் திறந்திருந்தால், ஏதோ பிரச்சினை என்றும் உள்ளே வரக்கூடாது என்றும் விளக்கியிருந்தார்.
1936, 37 வருடங்களில், கெஸ்டாப்போ என்ற ரகசிய போலீசார் கும்பல் கும்பலாக ஆட்களைக் கைது செய்தார்கள். ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளைச் சிறைச்சாலைகளுக்கும் சித்திரவதை முகாம்களுக்கும் அனுப்பினார்கள். அங்கு அவர்கள் மிகவும் மூர்க்கமாகவும் கொடூரமாகவும் நடத்தப்பட்டார்கள். முகாம்களில் நடப்பதைப் பற்றி விரிவான அறிக்கைகளை சுவிட்சர்லாந்து நாட்டில், பெர்னிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் சேகரிக்க ஆரம்பித்தது. சில அறிக்கைகள் முகாம்களிலிருந்து இரகசியமாக கொண்டு வரப்பட்டன. அவற்றைத் தொகுத்து க்ராய்ட்ஸ்ட்ஸூக் கேகன் டாஸ் கிரிஸ்டன்டூம் (கிறிஸ்தவத்திற்கு எதிரான போர்) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை அது வெளியிட்டது. நாசிக்களின் அட்டூழியங்களை அந்தப் புத்தகம் தோலுரித்துக் காட்டியது. எல்லையைக் கடந்து பாஸ்லேவுக்கு இந்த இரகசிய அறிக்கைகளை எடுத்துச் செல்ல வேண்டிய ஆபத்தான வேலையை நாங்கள் செய்து வந்தோம். சட்டவிரோதமான இந்தப் பத்திரங்களோடு நாசிக்கள் எங்களைக் கையும் களவுமாக பிடித்துவிட்டால், அடுத்த நிமிஷம் நாங்கள் இருக்க வேண்டிய இடம் ஜெயில்தான். சகோதரர்கள் அனுபவிக்கும் வேதனைகளை அதில் படித்தபோது நான் அழுதுவிட்டேன். இருந்தாலும் நான் பயப்படவில்லை. என்னுடைய பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்களாக யெகோவாவும் என் அப்பா அம்மாவும் இருக்கும்போது எனக்கென்ன கவலை என்று தைரியமாயிருந்தேன்.
என்னுடைய 14-வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு, ஒரு ஹார்ட்வேர் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். பெரும்பாலும் சனிக்கிழமை மதியம் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பாவுக்கு லீவு இருக்கும்போது பிரசுரங்களை எடுத்து வர நாங்கள் செல்வோம். சராசரியாக, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அப்படிச் செல்வோம். வார இறுதியில் மற்றவர்கள் உலாவச் செல்வது போல நாங்களும் செல்வதாக தெரியும். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு, எல்லைக் காவலர்கள் எங்களை நிறுத்தவோ சோதனையிடவோ இல்லை. பிப்ரவரி 1938-ல் அந்த நாள் வரும் வரை நாட்கள் இப்படியே நகர்ந்தன.
பிடிபட்டோம்!
பத்திரிகைகளை எடுத்து வருவதற்காக பாஸ்லேக்கு அருகே உள்ள ஓர் இடத்திற்கு நாங்கள் போனபோது, கட்டுக் கட்டாக பிரசுரங்கள் அங்கு எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தன. அத்தனைப் பிரசுரங்களைப் பார்த்ததும் அப்பாவின் முகம் அப்படியே மாறியது. அதை என்னால் மறக்கவே முடியாது. பத்திரிகைகளைக் கொண்டு செல்லும் மற்றொரு குடும்பத்தார் கைதாகி விட்டதால், கூடுதலான புத்தகங்களை நாங்கள் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. எல்லையை அடைந்தபோது, கஸ்டம்ஸ் அதிகாரியின் சந்தேகப் பார்வை எங்கள் மேல் விழுந்தது, உடனே எங்களைச் சோதனையிட உத்தரவிட்டார். பிரசுரங்களைக் கண்டுபிடித்தவுடன், அங்கு நின்றுகொண்டிருந்த காவல்துறையின் கார்களை நோக்கி துப்பாக்கி முனையில் எங்களை நடத்திச் சென்றார். அதிகாரி காரை ஓட்டுகையில், அப்பா என் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, மெல்லிய குரலில் சொன்னார்: “துரோகியாக மாறி யாரையும் காட்டிக் கொடுத்து விடாதே!” “அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்” என்று அப்பாவுக்கு உறுதியளித்தேன். லோயராக் வந்து சேர்ந்தவுடன் என் அன்பு அப்பாவைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். அவர் உள்ளே சென்றவுடன் சிறைக்கதவுகள் மூடப்பட்டன. அதுதான், கடைசி தடவையாக நான் அப்பாவைப் பார்த்தது.
நான்கு கெஸ்டாப்போ போலீஸார் என்னை நாலு மணிநேரம் விசாரணை செய்தார்கள். மற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய பெயர்களையும் விலாசங்களையும் சொல்லும்படி என்னைக் கட்டாயப்படுத்தினார்கள். நான் சொல்ல மறுத்தபோது, ஓர் அதிகாரி கொதித்தெழுந்தார். “உன்ன பேச வைக்க எங்களால முடியாதுன்னு நெனச்சியா?” என்று மிரட்டினார். அவருடைய சலசலப்புக்கெல்லாம் நான் மசியவில்லை. பின்பு அம்மாவையும் என்னையும் எங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய், முதல் முறையாக வீட்டைச் சோதனை போட்டார்கள். பிறகு அம்மாவையும் சிறைக்குக் கொண்டு போனார்கள். என்னைப் பெரியம்மா வீட்டிற்கு கொண்டு சென்று, அவருடைய காவலில் வைத்தார்கள். என்னுடைய பெரியம்மாவும் ஒரு யெகோவாவின் சாட்சி என்பது அவர்களுக்குத் தெரியாது. வேலைக்குச் செல்ல என்னை அனுமதித்தார்கள். இருந்தாலும் நான்கு கெஸ்டாப்போ போலீஸார் எங்கள் வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு என்னுடைய ஒவ்வொரு அசைவையும் நோட்டமிட்டுக் கொண்டே இருந்தார்கள். ஒரு போலீஸ்காரர் வீதியில் ரோந்து வருவார்.
சில நாட்களுக்குப் பின்னர், மதிய சாப்பாட்டு வேளையில் நான் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, ஓர் இளம் சகோதரி சைக்கிளில் என்னை நோக்கி வந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவள் நெருங்கி வர வர, ஒரு பேப்பரை என்னிடம் தூக்கிவீசப் போகிறாள் என்று மனதில் பட்டது. நான் நினைத்தபடியே அவள் ஒரு பேப்பரை வீசினாள், அதை நான் பிடித்துக்கொண்டேன். ஒருவேளை கெஸ்டாப்போ ஆட்கள் அதைப் பார்த்துவிட்டிருப்பார்களா என்று பயந்தபடியே திரும்பிப் பார்த்தேன், என்ன ஆச்சரியம்! அவர்கள் எல்லோரும் வேறு பக்கம் திரும்பியவாறு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தச் சகோதரியின் பெற்றோர் வசிக்கும் இடத்திற்கு மதியம் 12 மணியளவில் நான் போக வேண்டுமென அந்தப் பேப்பரில் அவள் எழுதியிருந்தாள். ஆனால் கெஸ்டாப்போ போலீஸார் என்னை நோட்டமிட்டுக் கொண்டே இருக்கிறார்களே. அப்படியிருக்க, நான் எப்படி அந்த சகோதரியுடைய பெற்றோரைச் சென்று பார்ப்பது? காரில் இருந்த நான்கு கெஸ்டாப்போ போலீஸாரையும் தெருவில் ரோந்து சென்ற போலீஸையும் பார்த்தேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. யெகோவாவின் உதவிக்காக ஊக்கமாய் ஜெபித்தேன். திடீரென்று ரோந்தில் இருந்த போலீஸ்காரர் கெஸ்டாப்போ ஆட்களின் காருக்கு அருகே சென்று அதில் உட்கார்ந்திருந்தவர்களிடம் பேசினார். பின்பு அவரும் அந்தக் காரில் ஏறிக்கொண்டார்; கார் புறப்பட்டுப் போனது!
அப்போது, என்னுடைய பெரியம்மாவும் தெரு முனையில் வந்து கொண்டிருந்தார். ஏற்கெனவே மதியம் 12 மணி கடந்துவிட்டது. அவர் அந்தக் குறிப்பை வாசித்துவிட்டு அதில் சொல்லப்பட்டுள்ளபடியே அங்குப் போவதுதான் நல்லது என்றார். என்னை சுவிட்சர்லாந்துக்கு அனுப்ப சகோதரர்கள் ஏதோ ஏற்பாடு செய்துள்ளது போல் தெரிவதாக சொன்னார். நானும் பெரியம்மாவும் அங்குச் சென்றவுடன், அந்தக் குடும்பத்தார் ஹைன்ரிச் ரைஃப் என்ற சகோதரரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன் நான் அவரைப் பார்த்ததில்லை. பத்திரமாக நான் அங்கு வந்து சேர்ந்ததற்காக சந்தோஷப்பட்டார், அங்கிருந்து என்னை சுவிட்சர்லாந்துக்கு அனுப்ப வந்திருப்பதாக சொன்னார். இன்னும் அரை மணி நேரத்திற்குள் ஒரு காட்டுப்பகுதியில் தன்னைச் சந்திக்கச் சொன்னார்.
வேறொரு நாட்டில் வாழ்க்கை
சொன்னபடியே சகோதரர் ரைஃப்பை சந்தித்தேன், பொலபொலவென்று கண்ணீர் வந்தது. அப்பா அம்மாவை விட்டுவிட்டுப் போகிறேனே என்று நினைத்தபோது மனம் பாரமாக இருந்தது. எல்லாம் இவ்வளவு விரைவில் நடந்துவிட்டது. பரபரப்பான இந்தச் சூழலுக்குப் பின், சுற்றுலா பயணிகளின் ஒரு குரூப்போடு சேர்ந்து நாங்கள் சுவிட்சர்லாந்து எல்லையை பாதுகாப்பாக கடந்தோம்.
பெர்னிலுள்ள கிளை அலுவலகத்திற்கு வந்தவுடன்தான் தெரிந்தது, நான் தப்பித்து வர அங்குள்ள சகோதரர்களே ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று. தங்குவதற்கு ஒரு இடத்தையும் கொடுத்தார்கள். நான் கிச்சனில் வேலை செய்தேன்; அது எனக்கு ரொம்ப சந்தோஷத்தைத் தந்தது. ஆனால் என்னுடைய பெற்றோருக்கு இரண்டாண்டு கால சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று தெரியாமல், வேறொரு நாட்டில் வாழ்வது எவ்வளவு வேதனையாக இருந்தது! இப்படி வேதனையும் கவலையும் என்னை அதிகமாக வாட்டியபோதெல்லாம், அழுவதற்காக பாத்ரூமுக்குள் ஓடிச் சென்று கதவை அடைத்துக்கொள்வேன். அப்பா அம்மாவுக்கு தவறாமல் கடிதம் எழுதினேன், நான் உத்தமத்தோடு நிலைத்திருக்கும்படி அவர்களும் எனக்கு ஊக்கமூட்டி எழுதினார்கள்.
என் பெற்றோருடைய விசுவாசத்தின் முன்மாதிரியால் தூண்டப்பட்டு, யெகோவாவுக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தேன்; ஜூலை 25, 1938-ல் முழுக்காட்டுதல் பெற்றேன். ஒரு வருடம் பெத்தேலில் இருந்த பிறகு, ஷானேலா என அழைக்கப்பட்ட பண்ணையில் வேலை செய்யச் சென்றேன். பெத்தேல் குடும்பத்தினருக்கு உணவளிக்கவும், துன்புறுத்தல் காரணமாக ஓடிவந்த சகோதரர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும் சுவிட்சர்லாந்து கிளை அலுவலகம் அந்தப் பண்ணையை வாங்கியிருந்தது.
என்னுடைய பெற்றோரின் தண்டனைக் காலம் 1940-ல் முடிவடைந்தபோது, விசுவாசத்தை விட்டுக்கொடுத்தால் அவர்களை விடுதலை செய்வதாக நாசிக்கள் சொன்னார்கள். அவர்களோ விட்டுக்கொடுக்கவில்லை. அதனால், அப்பாவை டாக்காவ் சித்திரவதை முகாமிற்கும் அம்மாவை ராவன்ஸ்புரூக் சித்திரவதை முகாமிற்கும் அனுப்பினார்கள். 1941-ன் குளிர்காலத்தில் அம்மாவும், முகாமிலிருந்த யெகோவாவின் சாட்சிகளாகிய மற்ற பெண்களும் ராணுவத்திற்கு ஆதரவாக சேவை செய்ய மறுத்தார்கள். அதற்குத் தண்டனையாக 3 நாட்கள் இரவும் பகலும் அவர்களைக் குளிரில் நிற்க வைத்தார்கள். பின்பு அவர்களை இருட்டான சிறைகளில் அடைத்து, 40 நாட்களுக்கு சரியாக உணவளிக்காமல் விட்டுவிட்டார்கள். அதன்பின் அவர்களைச் சாட்டையால் அடித்தார்கள். அம்மாவை காட்டுமிராண்டித்தனமாக அடித்ததால், மூன்று வாரம் கழித்து ஜனவரி 31, 1942 அன்று அம்மா உயிரிழந்தார்.
அப்பா டாக்காவ் முகாமிலிருந்து ஆஸ்திரியாவிலிருந்த மவுத்தவுசன் முகாமுக்கு மாற்றப்பட்டார். இந்த முகாமில், பொதுவாக கைதிகள் பட்டினி போடப்பட்டும் கடுமையாக வேலை சுமத்தப்பட்டும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்கள். அம்மா இறந்து ஆறு மாதங்கள் கழித்து, வித்தியாசமான முறையில் நாசிக்கள் என் அப்பாவை கொலை செய்தார்கள். எப்படியெனில் முகாமிலிருந்த டாக்டர்கள், சில கைதிகளுக்கு வேண்டுமென்றே காசநோயை வரவழைத்து, மருத்துவப் பரிசோதனைக்காக அவர்களைப் பயன்படுத்தினார்கள். பிற்பாடு, அந்தக் கைதிகளுக்கு இருதயத்தில் விஷ ஊசி போட்டு கொன்றார்கள். “இருதயத்தின் தசைகள் பலவீனமாக இருந்ததால்” அப்பா காலமானார் என்று அரசாங்கப் பதிவு குறிப்பிட்டது. அப்போது அவருக்கு 43 வயது. சில மாதங்களுக்குப் பின்னரே அந்தக் கொடூரக் கொலைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். அப்பா அம்மாவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடிவதில்லை. பரலோக நம்பிக்கை கொண்டிருந்த அவர்கள் இருவரும், யெகோவாவின் கைகளில் பத்திரமாக இருக்கிறார்கள் என்ற நினைப்புதான், அப்போதும் சரி இப்போதும் சரி எனக்கு ஆறுதலளித்து வந்திருக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், நியு யார்க்கிலுள்ள உவாட்ச் டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 11-ம் வகுப்பில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஐந்து மாதங்களுக்கு பைபிள் படிப்பில் மூழ்கியிருந்தது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது! 1948-ல் பட்டம் பெற்ற பிறகு, மிஷனரியாக சேவை செய்ய சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டேன். கொஞ்ச நாட்களிலேயே, விசுவாசமிக்க சகோதரரான ஜேம்ஸ் எல். டர்பென் என்பவரைச் சந்தித்தேன். அவர் கிலியட் பள்ளியின் 5-ம் வகுப்பில் பட்டம் பெற்றவர். துருக்கியில் முதல் கிளை அலுவலகம் நிறுவப்பட்டபோது, அதன் கண்காணியாக சேவை செய்திருந்தார். நாங்கள் இருவரும் மார்ச் 1951-ல் திருமணம் செய்துகொண்டோம். அதைத் தொடர்ந்து விரைவிலேயே நான் கர்ப்பமாகிவிட்டேன்! அதனால் அங்கிருந்து நாங்கள் அமெரிக்கா சென்றோம். அதே வருடம் டிசம்பர் மாதத்தில் எங்கள் மகள் மார்லின் எங்களுடைய கைகளில் தவழ்ந்தாள்.
பல வருடங்களாக, ராஜ்ய சேவையில் ஜிம்மும் நானும் அளவில்லா சந்தோஷத்தைக் கண்டிருக்கிறோம். சீன நாட்டு இளம் பெண்ணான பென்னி என்ற பைபிள் மாணாக்கரை என்னால் மறக்கவே முடியாது. பைபிளைப் படிக்க அவளுக்கு அப்படி ஓர் ஆர்வம். அவள் முழுக்காட்டப்பட்டு கை பியர்ஸ் என்பவரை மணமுடித்தாள். அவர் தற்போது ஆளும் குழுவின் அங்கத்தினராக சேவை செய்கிறார். இப்படிப்பட்ட அன்பான ஆட்கள் என்னுடைய பெற்றோரின் இழப்பை ஈடுசெய்தார்கள்.
2004-ம் ஆண்டின் தொடக்கத்தில், என்னுடைய பெற்றோரின் சொந்த ஊரான லோயராக்கில், சகோதரர்கள் புதிய ராஜ்ய மன்றத்தை ஸ்டிச் தெருவில் கட்டினார்கள். யெகோவாவின் சாட்சிகள் செய்த காரியங்களை அங்கீகரிக்கும் வகையில், அந்தத் தெருவின் பெயரை மாற்றி வைக்க நகரப் பேரவை தீர்மானித்தது. என்னுடைய பெற்றோரை கௌரவிக்கும் வண்ணம் அந்தத் தெருவிற்கு டென்ஸ்ஷ்ட்ராசா (டென்ஸ் தெரு) என்று பேரிட்டது. பாடிஷா ஸைடுங் என்ற உள்ளூர் செய்தித்தாள் ஒன்று, “புதிய தெருப் பெயர்—கொலை செய்யப்பட்ட டென்ஸ் தம்பதிகள் நினைவாக” என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது. “ஜெர்மனியில் நாசிக்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில், தங்கள் விசுவாசத்துக்காக சித்திரவதை முகாமில் கொலை செய்யப்பட்டார்கள்” என்று என் பெற்றோரைப் பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நகரப் பேரவையின் இந்த நடவடிக்கை எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாக இருந்தது, சூழ்நிலைமைகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் என் மனதிற்கு இதமளிக்கவும் செய்தது.
அர்மகெதோன் நம்முடைய நாளில் வராது என்பது போல் நினைத்து நாம் எதையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டுமென்றும், அதே சமயம் அது நாளைக்கே வந்துவிடும் என்பது போல் நினைத்து வாழ்க்கையை நடத்த வேண்டுமென்றும் அப்பா அடிக்கடி சொல்வார். இந்தப் பொன்னான அறிவுரையைப் பொருத்துவதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். முதுமையின் பிடியில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் எனக்கு பொறுமையாக இருப்பதும் அதேசமயம் ஆவலோடு காத்திருப்பதும் எப்போதுமே சுலபமாக இருப்பதில்லை. என்றாலும், யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு அளித்த பின்வரும் வாக்குறுதியில் எனக்கு எந்தச் சந்தேகமும் எழும்பினதில்லை: ‘உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.’—நீதிமொழிகள் 3:5, 6.
[பக்கம் 29-ன் பெட்டி/படம்]
புதைந்திருந்த விலைமதிப்புள்ள வார்த்தைகள்
1980-களில், ஒரு பெண்மணி லோயராக் நகரைச் சுற்றிப்பார்க்க சற்று தொலைவிலிருந்த கிராமத்திலிருந்து வந்திருந்தார். அந்தச் சமயத்தில், நகரவாசிகள் தங்களுக்குத் தேவையில்லாத பொருட்களைப் பொது இடத்தில் வைத்திருந்தார்கள். மற்றவர்கள் அந்தப் பொருட்களைப் பார்த்து தாங்கள் விரும்பியதை எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பெண்மணி ஒரு தையல் பெட்டியை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்குச் சென்று பார்க்கையில் அந்தப் பெட்டியின் அடியில் ஒரு சின்னப் பெண்ணின் போட்டோக்களையும், சித்திரவதை முகாம் பேப்பரில் எழுதப்பட்டிருந்த கடிதங்களையும் பார்த்திருக்கிறார். அந்தக் கடிதங்களை வாசித்தவுடன் அந்தப் பெண்மணிக்கு ஆவல் அதிகமாகிவிட்டது. பின்னல் போட்டிருக்கும் அந்தச் சிறுமி யாராக இருக்கக்கூடும் என்று தெரிந்துகொள்ள விரும்பியிருக்கிறார்.
2000-ம் ஆண்டில் ஒரு நாள், லோயராக்கில் நடந்த வரலாற்றுக் கண்காட்சியைப் பற்றி பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையை அந்தப் பெண்மணி பார்த்தார். நாசி ஆட்சியின் போது யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தைப் பற்றி அதில் விவரிக்கப்பட்டிருந்தது. எங்கள் குடும்பத்தைப் பற்றியும் சொல்லப்பட்டிருந்தது; என்னுடைய இள வயது போட்டோக்கள் அதில் வெளிவந்திருந்தன. என்னுடைய முக ஜாடையைப் பார்த்ததும், அந்தப் பெண்மணி பத்திரிகை ஆசிரியரை தொடர்புகொண்டு அந்தக் கடிதங்களைப் பற்றி தெரிவித்தார்—மொத்தம் 42 கடிதங்கள்! ஒரு சில வாரங்களிலேயே அவை என் கைகளுக்குக் கிடைத்தன. அவை என் பெற்றோர் கைப்பட எழுதியவை. அதில் என்னைப் பற்றி என் பெரியம்மாவிடம் தொடர்ந்து விசாரித்திருக்கிறார்கள். என் மீது அவர்கள் வைத்திருந்த அன்பான அக்கறை குறையவே இல்லை. இந்தக் கடிதங்கள் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு மேல் புதைந்து கிடந்து மீண்டும் வெளிவந்தது உண்மையிலேயே பெரிய ஆச்சரியம்தான்!
[பக்கம் 25-ன் படங்கள்]
ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன் எங்கள் மகிழ்ச்சியான குடும்பம் சின்னாபின்னமானது
[படத்திற்கான நன்றி]
ஹிட்லர்: U.S. Army photo
[பக்கம் 26-ன் படங்கள்]
1. மாக்டிபர்க்கில் இருந்த அலுவலகம்
2. கெஸ்டாப்போ போலீஸார் ஆயிரக்கணக்கான சாட்சிகளைக் கைது செய்தார்கள்
[பக்கம் 28-ன் படம்]
ஜிம்மும் நானும் ராஜ்ய சேவையில் அதிக சந்தோஷத்தைக் கண்டடைந்தோம்