“நாசி ஆட்கள் எங்களைத் தடுத்துநிறுத்த முடியவில்லை!”
யாரோ ஒருவருடைய வீடு. நான் அந்த வீட்டின் கதவைத் தட்டிய பிறகு, யாரும் அவ்வீட்டிலிருக்கக்கூடாது என்று எண்ணி நடுநடுங்கிக்கொண்டு நின்றேன். நான் இளைஞனாயிருந்தேன்—21 வயதுதான்—யெகோவாவின் சாட்சிகளுடைய வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் முதல் முறையாக ஈடுபட்டேன். அது நவம்பர் 1934-ல், இங்கே ஜெர்மனியில், ஹிட்லர் இப்பேர்ப்பட்ட அனைத்துப் பிரசங்க வேலைக்கும் கண்டிப்பான தடை விதித்திருந்தார். ஒருசில நபர்கள் ஆஜராகக்கூடிய எங்களுடைய கூட்டங்களை நடத்திவந்த ஊழியர் சுவிசேஷக வேலையில் செல்வதற்குரிய ஏற்பாடுகளைக் குறிப்பிடுகையில், “அவர் நான் வரவேண்டும் என்று அர்த்தப்படுத்தவில்லை!” என்று நான் எண்ணினேன். நான் முழுக்காட்டுதலுங்கூட இன்னும் பெறவில்லை, எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு பைபிள் வசனம்தான் என்று நான் நினைத்துக்கொண்டேன். ஆனால் நான் நினைத்தது தவறு—அவர் நான் வரவேண்டும் என்றே அர்த்தப்படுத்தினார், ஆகையால் நான் பிரசங்க வேலை செய்ய சென்றேன்.
அந்த வீட்டில் யாருமில்லை! நான் மனஆறுதலடைந்தேன். அடுத்த வீட்டிற்கு சென்றபோது, அங்கும் யாரும் வரவில்லை, ஆனால் அந்த வீட்டில் சத்தம் கேட்டதால், நான் கதவைத் திறந்தேன். ஒரு பெண் ஒருசில பாத்திரங்களை அலம்பிக்கொண்டிருந்தார், என்னைப் பார்த்தவுடன், திடுக்கிட்டுப் பயந்தார். கலக்கமடைந்தவனாக, எனக்குத் தெரிந்த ஒரு வசனத்தை, மத்தேயு 24:14-ஐ, நான் விளக்கிக்காட்டத் தொடங்கினேன். அந்தப் பெண் என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே இருந்தார். (அவருக்குக் காது கேட்காது என்று நான் பின்னர் அறியவந்தேன்.) திடீரென்று ஓர் ஆள் என் பக்கத்தில் வந்து நின்றார். அந்தப் பெண்ணின் கணவராக இருக்கும் என்று எண்ணி, நான் தொடர்ந்து சாட்சிக்கொடுக்கும்போது, அவரிடம் என்னைச் சுடுவதற்கு ஒரு துப்பாக்கி இருந்ததைப் பார்த்தேன். இந்த நபர் ஒரு நாசி தலைவர்! தெருவின் எதிர்ப்பக்கத்தில் ஊழியஞ்செய்துகொண்டிருந்த என்னுடைய கூட்டாளி, இந்த நபருடைய வீட்டில் சாட்சிக்கொடுத்தபோது, அதைச் செய்ததற்கு காலால் உதைக்கப்பட்டு படிகளினூடே கீழே தள்ளப்பட்டார். அந்தச் சகோதரருடைய சாட்சிக்கொடுக்கும் வேலைக்கு அன்றையதினம் முடிவுக்கட்டிவிட்டதாக எண்ணிய அவர், என்னைப் பார்த்தவுடன் என்னைக் கைதுசெய்ய வந்தார். என்னுடைய கூட்டாளி வெறுமனே தூசியைத் துடைத்துக்கொண்டு தொடர்ந்து பிரசங்க வேலையில் ஈடுபட்டார், நானோ நான்கு மாதங்களுக்கு சிறையிலடைக்கப்பட்டேன். இவ்வாறு என்னுடைய பிரசங்க வேலை தொடங்கியது!
சித்திரவதை முகாமுக்கு!
விடுதலைசெய்தப் பிறகு, இரகசியமாக செய்யப்படும் சாட்சிக்கொடுக்கும் வேலைக்கு உதவும்படியான பொறுப்பை சகோதரர்கள் எனக்கு அளித்தனர். என்றபோதிலும், நாசி ஆட்கள் நான் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டேயிருந்து, விரைவில் மீண்டும் என்னைச் சிறையிலிட்டனர். உள்ளூர் போலீஸ் என்னை இரகசிய போலீஸிடம் அழைத்துச் சென்றார். “சித்திரவதை முகாமுக்கு!” என்ற தீர்ப்பைக் கேட்டபோது நான் திகிலடைந்தேன். நான் எஸ்டெர்வேஜென்-க்கு செல்லவேண்டியிருந்தது. அங்கு நாங்கள் 120 சாட்சிகள் (பைபல்பார்ஷர்) இருந்தபடியால், மெய்க்காவலர்கள் எங்களுடைய உத்தமத்தைக் குலைத்துப்போட தீர்மானித்திருந்தனர்.
அங்கு “இரும்பு கஸ்டாவ்” என்று நாங்கள் பட்டப்பெயரிட்ட ஒரு காவல்துறை முகவர் இருந்தார். அவர் எங்களைச் சம்மதிக்கவைக்கச் செய்வதற்கு உறுதியோடிருந்தார். ஒரு நாள் எங்களனைவரையும் ஆகஸ்ட் மாத கொதிக்கும் வெயிலில் மிகவும் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யும்படி வலுக்கட்டாயப்படுத்தினார்—அதை விடாது தொடர்ந்து நாள் முழுவதுமாக நாங்கள் செய்யவேண்டும். அந்நாளின் முடிவில், சகோதரர்களில் பாதிபேர் தளர்ந்துபோனார்கள், அல்லது மிகவும் சுகவீனமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விசனகரமாக, ஒரு சபை கண்காணி விசுவாசத்தில் குன்றிப்போய் “உடன்பாட்டுத் தாளில்” கையெழுத்திட்டார், அவரோடு சேர்ந்து அவருடைய சபையிலுள்ள மற்ற 12 பேரும் கையெழுத்திட்டனர்.
இப்போது, தான் செய்த சித்திரவதை பயனளிக்கிறது என்கிற செருக்குடன், “இந்தக் கடிதத்தை கையெழுத்திடுவதில் நாளை நீங்கள் யாவரும் சந்தோஷமாயிருப்பீர்கள், எந்த யெகோவாவும் உங்களுக்கு உதவிசெய்யமாட்டார்,” என்று அந்த “இரும்பு கஸ்டாவ்” வாக்குறுதி பண்ணினார். நாங்கள் அன்றிரவு ஊக்கமாக ஜெபம்பண்ணியிருப்போம் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியும். அடுத்த நாள் காலை “இரும்பு கஸ்டாவ்” வருவதற்கு நாங்கள் காத்திருந்தோம். தொடர்ந்து காத்துக் கிடந்தோம். இறுதியில் தங்குமிடங்களுக்கு திரும்பி செல்ல எங்களிடம் கூறினர். கஸ்டாவ் இன்னும் வரவேயில்லை! கடைசியில் அவருக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் தெரியவந்தோம். அந்நாள் காலை முகாமுக்குள் வரும்போது, “இரும்பு கஸ்டாவ்” தான் இரும்பைவிட குறைவாக இருக்கும் ஏதோவொன்றால் உண்டாக்கப்பட்டிருக்கிறார் என்பதை கடினமான அனுபவத்தின் மூலமாக கற்றுக்கொண்டார். முகாமுடைய நுழைவாயிலின் பக்கவாட்டில் இருக்கிற ஒரு செங்கல் தூணுக்கு நேராக தன்னுடைய மோட்டார் சைக்கிளை அவர் ஓட்டிச் சென்றார். அந்த நுழைவாயில் ஒன்பது மீட்டருக்கும் மேற்பட்ட அகலத்தையுடையதாயிருந்தது! பிளவுண்ட நெற்றியோடும் உடைந்த கையோடும் அவர் மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச்செல்லப்பட்டார். கடைசியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு அவரை நாங்கள் திரும்பவும் பார்க்கையில், “உங்கள் யெகோவாதான் இதை எனக்குச் செய்தார்!” என்று எங்களைப் பார்த்து கத்தினார். அப்போது நாங்கள் யாவருமே அவர் சொன்னதைக் குறித்து சந்தேகிக்கவில்லை.
ஹாலந்து நாட்டிற்கு
டிசம்பர் 1935-ல் என்னைச் சிறையிலிருந்து விடுதலைசெய்து, ஜெர்மன் இராணுவத்தில் சேர்ந்துகொள்ள கூறினர். மாறாக, ஹாலந்து நாட்டின் வழியாக ஸ்பெய்னுக்கு சென்று அங்கு சாட்சிக்கொடுக்கும் வேலையைத் தொடர்ந்து செய்ய நான் தீர்மானித்தேன். ஹாலந்து நாட்டை சென்றடைந்தவுடன், சாட்சிகளைத் தேடி கண்டுபிடித்தேன், அவர்கள் என்னை ஹாலந்து நாட்டிலேயே இருந்துவிடும்படி துரிதப்படுத்தினர். மீண்டும் சுதந்தரத்தோடுப் பிரசங்கிக்கவும், கிறிஸ்தவ கூட்டங்களில் சகோதர சகோதரிகளோடு இருப்பது என்னே ஆனந்தமாயிருந்தது! நாங்கள் டச் நாட்டுப்புறங்களினூடே சைக்கிளில் சென்று, பகலில் பிரசங்க வேலைசெய்து இரவில் கூடாரங்களில் படுத்துத் தூங்கினோம். ஒரு மாதத்தில் சராசரியாக 200-லிருந்து 220 மணிநேரங்கள் பிரசங்க வேலை செய்தோம்.
உணவு வாங்குவதற்கும் இதர செலவுகளுக்கும் பணம் வெகு குறைவாகவே எங்களிடம் இருந்தது. ஒரு விவசாயி, நாங்கள் இரவு நேரங்களில் குறைவான உணவை சமைத்து அருந்துவதைக் கண்டு, உணவருந்துவதற்கு எங்களை அவருடைய வீட்டுக்கு வரவழைத்தது எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அருஞ்சுவையூட்டும் உணவு கொண்ட மேசை எங்களுக்குக் காத்திருந்தது! அப்போது முதல், வெண்ணெய், முட்டைகள், பாலடைக்கட்டி, ரொட்டி ஆகிய எங்களுடைய அடிப்படைத் தேவைகளை இந்த அருமையான குடும்பத்தினர் கவனித்துக்கொண்டனர், எங்களுடைய துணிகளையும் இவர்கள் துவைத்துக் கொடுத்தனர். அந்த முழு குடும்பத்தினரும் சாட்சிகளாக மாறினர். இனி நடக்கவேண்டியிருந்த அந்த வேலையின் சமயத்தின்போது இவர்களே ஒரு முக்கிய தொடர்பாக அமைந்தனர்.
பெர்ன் என்ற இடத்தில், ஸ்விட்ஸர்லாந்தில், 1936-ல் ஒரு மாநாடு நடந்தது. அப்போது உவாட்ச் டவர் சங்கத்தின் தலைவராயிருந்த ஜோசப் F. ரதர்ஃபர்டு அம்மாநாட்டில் பேசினார். அப்போதுதானே கடைசியாக, ஒரு முழுநேர சுவிசேஷகனாக இவ்வளவு காலம் செலவழித்தப் பிறகு, நான் முழுக்காட்டப்பட்டேன்!
ஹேகு
ஹேகு என்ற பிரதேசத்தில் நான் நியமிக்கப்பட்டேன். அங்கு கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை அநேகர் ஆர்வமாக ஏற்றுக்கொண்டனர். இப்போது வரையாக நான் இன்னும் அங்குள்ள ஒருசிலரோடு தொடர்பு வைத்துவருகிறேன். டச் போலீஸார் 1939-ல் என்னைப்போய் ஒரு நாசி ஒற்றனாக கைதுசெய்தனர்! என்னால் எவ்வளவு சிறந்தது செய்ய முடியுமோ, அவ்வளவுக்குச் சிறையிலிருந்துகொண்டே நான் கடிதங்களை எழுதினேன், நான் அனுப்பும் தபால்களையெல்லாம் நீதிபதி வாசித்துப் பார்க்கிறார் என்பது எனக்கு நன்றாய் தெரியும். கடைசி இரண்டு மாதங்கள் தனியறையில் அடைத்துவைத்திருந்து, ஐந்து மாதங்களில் என்னை விடுதலை செய்தனர். ஹேகு-வில் உள்ள என்னுடைய வீட்டிற்கு திரும்பி சென்ற ஒருசில நாட்களில், ஜெர்மன் லப்ட்டுவாபே அந்தப் பகுதியை குண்டுவீசித் தாக்கத் தொடங்கினர்! கைப்பற்றும் இராணுவ வீரர்களுக்கு பின்னாலேயே இரகசிய போலீஸ் ஒருவர் இருப்பார் என்பதை நான் அறிந்திருந்தேன். திரும்பவும் தலைமறைவாக இருக்கவேண்டிய சமயம் எனக்கு வந்தது.
ஆனால் அவர்கள் கண்களில் புலப்படாமல் நான் எப்படி தப்பித்துக்கொள்வேன்? சைக்கிள் கடை வைத்திருந்த ஒரு சகோதரர், விசேஷ ஒரு சைக்கிளை எனக்குச் செய்துகொடுத்தார். இரகசிய போலீஸார் வைத்திருந்த வண்டியைப் போலவே அது இருந்தது—அதே தனிப்பட்ட நிறம், உயர்ந்த கைப்பிடிகளும் ஒரு பட்டாக்கத்தியைப் பிடித்துக்கொள்ளக்கூடிய பிடிப்பு ஊக்குகளும் அதற்கு இருந்தது. அந்த இரகசிய போலீஸார் நான் அவர்களில் ஒருவர் என்று எண்ணி எனக்கு வணக்கம் சொல்வர்! என்றாலும், ஒரு நாள் சாலை வழியிலிருந்து புதர்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு சைக்கிள் பாதையில் நான் சைக்கிளை மிதித்துக்கொண்டுச் செல்லும்போது, சாலையின் எதிர் பக்கத்தில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு போலீஸார் புதர்களின் இடைவெளி ஒன்றில் என்னைப் பார்த்து நான் நாடோடி என்று அடையாளங்கண்டுகொண்டனர். நான் என்னுடைய வாழ்க்கையிலேயே சைக்கிளில் அந்தளவுக்கு அதிவேகமாக மிதித்துச் சென்றது கிடையாது! அவர்கள் சுற்றிவந்து என்னைப் பின்தொடருவதற்கு பாதைகள் குறுக்கிடுமிடம் ஒன்றை அவர்கள் கடந்துவரவேண்டியதாயிருந்தது, அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு என்னைப் பின்தொடர முயற்சிசெய்தபோதிலும், அவர்கள் கண்களில் தென்படாதவாறு இறுதியில் நான் தப்பினேன்.
அநேகமுறை மயிரிழையில் தப்பிய நிலைகள்
இப்போது போலீஸாருக்கு நான் ஹேகு-வில் இருப்பது தெரியும். பாதுகாப்பு வேண்டி நான் மாறிமாறி வெவ்வேறு வீடுகளில் படுத்துக்கொள்ள தொடங்கினேன். ஒருசமயம் மூன்று பிள்ளைகள்கொண்ட ஒரு குடும்பத்தையுடைய வீட்டில் நான் படுத்துத் தூங்கியிருந்தேன். எப்போதும் போல, திடீரென சோதனை செய்யப்பட்டால், சீக்கிரமாய் ஆடைகளை அணிந்துகொண்டு ஓடுவதற்கேற்ப நான் என் ஆடைகளைப் போட்டுக் கிடந்தேன். மேலும் நான் வீட்டை விட்டு ஓடும்போது, என்னுடைய காலியான படுக்கையில் ஒரு பிள்ளையை மாற்றிக்கிடத்த, இரண்டு பிள்ளைகளையும் நான் ஒன்றாக படுக்கவைத்தேன். இப்படியாக, நாசி ஆட்கள் ஓர் அனலான, காலி படுக்கையை பார்க்கமுடியாது.
அந்த நாள் காலை ஐந்து மணிக்கு, இந்தப் படுக்கை வசதிகள் பிரயோஜனமாயிருந்தன. வீட்டுக் கதவை விடாது பலமாக தட்டும் சத்தம் கேட்டது. உடனே, நான் ஒன்பது வயது பையனை என்னுடைய படுக்கையில் கிடத்திவிட்டு, என்னுடைய பெட்டியில் உடைகளைத் திணித்துக்கொண்டு, தொப்பியையும் மேற்சட்டையையும் அணிந்துகொண்டு பின்பக்க ஜன்னல் வழியாக பனிக்குள் வெறுங்காலோடு குதித்தேன். சந்தோஷகரமாக, வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு காவலாளியை நிற்கவைக்க அவர்கள் மறந்திருந்தனர். நான் பைபிள் படிப்பு நடத்திவந்த வீட்டிற்கு ஓடிச்சென்றேன். குளிர்காலமாக, காலை 5:30 மணிக்கு இருட்டாக இருந்தபோதிலும், அந்த ஆள் என்னை ஒன்றும் கேட்காமல் என்னை மறைத்து வைத்தார். அவருடைய குடும்பத்திலுள்ள மூவரும் பின்னர் சாட்சிகளாக மாறினார்கள்.
நான் வெளியேறிய வீட்டுக் குடும்பத்தாரில் உள்ள அந்தச் சிறு பையனிடம் வந்திருந்த அந்த இரகசிய போலீஸ்காரர் என்னைப் பற்றி சோதித்தார். ஓர் “அங்க்ள்” வீட்டிற்குச் சமீபத்தில் வந்துகொண்டிருந்தாரா என்பதைச் சொன்னால் பணம் தருவதாகவுங்கூட அவர்கள் அவனிடம் கூறினர். அவன் அவர்களிடம், “ஆமாம், அவர் வந்துபோய் ரொம்ப நேரம் ஆகிவிட்டதே,” என்று சொன்னான். எவ்வளவு நேரம்? அவனுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏமாற்றமடைந்தவர்களாக திரும்பிசென்றார்கள். பிறகு, அந்தப் பையனுடைய அம்மா, “அங்க்ள் டாம்” (தலைமறைவாயிருக்கையில் எனக்கு இருந்த பெயர்) அந்த இரவுதான் தங்களோடு இருந்தார் என்பதைத் தெரிந்திருந்தும், அவன் ஏன் அப்படி பதிலளித்தான் என்று அவனை கேட்டார். அவன், “இருபத்தினான்கு மணிநேரம் என்பது ரொம்ப நேரம் ஆச்சே, அநேக நிமிஷங்கள் ஆச்சே,” என்று பதிலளித்தான். ஆம், நிச்சயமாகவே!
நான் அடுத்து கிரானிங்கன் என்ற இடத்திற்கு நியமிக்கப்பட்டேன். அந்த நகரிலுள்ள சாட்சிகளை பயம் மேற்கொண்டதன் காரணமாக, பிரசங்க வேலை தடைப்பட்டிருந்தது. ஆனால் கூடியசீக்கிரத்தில் சகோதரர்கள் அந்தக் கொடுமையான டச் இரகசிய போலீசை எதிர்த்து, திரும்பவும் பயமற்றவர்களாக மாறினர். ஓர் இரவு 1942-ல் முன்னேற்பாடு செய்த பத்து-நிமிட வேளையின்போது நகரமுழுவதும் ஆயிரக்கணக்கான பைபிள் துண்டுப்பிரதிகளை விநியோகிக்கும் “எதிரான திடீர் நடவடிக்கை”யிலுங்கூட நாங்கள் ஈடுபட்டோம். பிரிட்டிஷ் தேசீய விமானப் படை யெகோவாவின் சாட்சிகளுடைய சார்பில் ஆயிரக்கணக்கானச் துண்டுப்பிரதிகளை விநியோகித்தனர் என்று அனைத்து செய்தித்தாள்களும் அறிக்கை செய்தன! நாங்கள் பிழைத்திருக்கிறோம், நன்றாக உள்ளோம் என்பதை நாங்கள் இரகசிய போலீஸ் தெரிந்துகொள்ள வைத்தோம். நாசி ஆட்கள் எங்களைத் தடுத்துநிறுத்த முடியவில்லை—ஒருக்காலும் முடியவில்லை!
போர் தொடர்ந்து நீடித்தது, தெருக்களில் நடப்பது மிகவும் ஆபத்தாக இருந்தது. ஓர் இரவு, ஒரு சகோதரரும் நானும் ஹில்வர்சம் என்ற இடத்தில் இரகசியமாக நடத்தப்படும் ஒரு சபை கூட்டத்திற்கு சென்று திரும்பிவருகையில், பின்புறத்திலிருந்து யாரோ ஒருவர் என்னைத் திடீரென தாக்கினார். என் காலின்கீழ் ஏதோவொன்று பொத் என விழுந்தது. பீதியோடு நான் அதை எடுத்துப் பார்த்தபோது, அது ஒரு ஜெர்மன் இராணுவ வீரனின் தலைக்கவசம்! அதை அணிந்திருந்த ஆள் தன் சைக்கிளில் நின்று, தன் கைவிளக்கை என்மீது காட்டிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்றேன்; அவர் என் கையிலிருந்த தலைக்கவசத்தைப் பிடுங்கி, தன் துப்பாக்கியை எடுத்து, “நான் உன்னைக் கைது செய்யப்போகிறேன்!” என்று கத்தினார்.
எனக்கு உதறல் எடுத்தது. என்னை அவர் கைதுசெய்தால், நான் இறந்துவிடுவேன். உதவிவேண்டி நான் கடவுளிடம் ஜெபித்தேன். என் குமுறலைக் கேட்டு, மக்கள் திரண்டு வந்தனர். அந்த இராணுவ வீரர் கொஞ்சம் தள்ளாடியதைக் கண்டபோது அவர் குடித்திருக்கிறார் என்று நான் தெளிவாக உணர்ந்துகொண்டேன். பின்னர் சாதாரண மக்களுடைய உடையை அணிந்து வெளியில் நடமாட அதிகாரிகளுக்கு ஜெர்மன் இராணுவ சட்டங்கள் அனுமதித்திருப்பது என் ஞாபகத்திற்கு வந்தது. அந்த இராணுவ வீரரிடம் சென்று, மிகுந்த அதிகார தோரணையில், “நான் யாரென்று உங்களுக்குத் தெரியாதா?” என்று என்னால் கத்த முடிந்த அளவுக்கு கூச்சல்போட்டேன். அந்த இராணுவ வீரர் திகைத்துப்போய் நின்றார். தன் தலைக்கவசத்தை உடனடியாக அணிந்துகொண்டு எனக்கு வணக்கம் தெரிவித்தார்! ஓர் அதிகாரியை அவமதித்ததாக உணர்ந்து, அவர் மெதுவாக நழுவிச்சென்று இருட்டில் மறைந்துவிட்டார். சுற்றி இருந்தவர்கள் என்னை விட்டுப் பிரிந்தனர். மீண்டும் ஒருமுறை மயிரிழையில் தப்பியதற்கு நான் யெகோவாவுக்கே நன்றி சொல்லவேண்டும்!
பெல்ஜியத்தில் தலைமறைவான வாழ்க்கை
எனக்கு அடுத்த நியமிப்பு பெல்ஜியம் என்ற மற்றொரு நாட்டில் இருந்தது. நான் ஆன்ட்வெர்ப் என்ற இடத்தில் நடத்தும் ஊழியராக ஆனேன். தடையின் காரணமாக, வெவ்வேறு வீடுகளில் ஒவ்வொரு வாரமும் நான் பல்வேறு சிறிய கூட்டங்களை நடத்திவந்தேன். நான் பணியாளனாகவும் இருந்தேன், அப்பேர்ப்பட்ட கடினமான வருடங்களில் ஆவிக்குரிய உணவை தொடர்ந்து கிடைக்கும்படி செய்த அந்த அதிசயமான சங்கிலித்தொடர்பில் மற்றொரு இணைத்தொடர்பாக நான் சேவித்தேன்.
ஹாலந்து நாட்டிலிருந்து எல்லைக்குக் குறுக்கே, நாங்கள் பிரசுரங்களை இரகசியமாக விநியோகம் செய்வதற்கு வழக்கமாகக் கூடுமிடம், ஒரு ஹோட்டலாக இருந்தது. அந்தக் கட்டிடம் பெல்ஜியத்தில்தான் இருந்தது, அதன் தோட்டமோ ஹாலந்து நாட்டில் இருந்தது, ஆகவே நான் பார்க்கவேண்டிய நபரைச் சந்தித்துப் பேசி பெட்டிகளை அவரோடே பரிமாற்றம் செய்வதற்கு வசதியான இடமாக அது இருந்தது. அந்த ஹோட்டலின் சொந்தக்காரர் எங்களைப் பிரிட்டிஷ் நாட்டு வேவுத்தகவல் அறிவிக்கும் ஒற்றர்கள் என்றெண்ணி எங்களுக்கு ஒத்துழைப்பைக் கொடுத்தார். அங்கு காவல்காக்கிற போலீஸ் அதிகாரியிடம் எங்களைத் தொந்தரவுபடுத்தவேண்டாம் என்றுங்கூட அவர் கூறினார். ஆனால் ஒரு நாள் ஒரு புதிய காவற்காரர் காவற்காக்கும் வேலையில் இருந்தார். இவர் என்னைப் பற்றி ஒன்றும் அறியாத நாசி எண்ணங்கொண்ட பெல்ஜிய நபர். என்னுடைய பெரிய தோல் பெட்டியை பார்த்தவுடன், அதைத் தனக்குத் திறந்துகாட்டும்படி அவர் என்னை வற்புறுத்தினார். நான் திறந்துகாட்ட மறுத்தேன்; அதில் முந்நூறு நானூறு காவற்கோபுரம் பத்திரிகைகள் மொத்தமாக இருந்தது. அவர் என்னைக் கைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். பொறுப்பிலிருந்த அந்த அதிகாரி தான் கவனித்துக்கொள்வதாக அந்தக் காவற்காரரிடம் கூறி, என்னை விட்டுவிட்டுச் செல்லும்படி அவரிடம் சொன்னார். பின்னர் அந்த அதிகாரி என்னிடம், “இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்பதை நான் பார்க்க விரும்பவில்லை. தயவுசெய்து அடுத்த முறை வெறும் சிறிய பெட்டிகளாக எடுத்துவரவும்,” என்று மெதுவாக சொன்னார். மறுபடியும் யெகோவாவுக்கே நான் நன்றி கூறினேன்!
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ்-அமெரிக்க படைகள் பிரான்ஸ்மீது படையெடுக்கும் நாளன்று (ஜூன் 6, 1944) இணைப்புப் படைகள் பெல்ஜியத்தைக் கைப்பற்றத் தொடங்கியபோது, ஆன்ட்வெர்ப் என்ற இடம் முழுவதையும் அந்தப் போர் தாக்கியது. இரண்டு பக்கங்களிலுமிருந்து, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுவதும் குண்டுவீசுதல்களும் நகரமெங்கும் வேகமாக நடக்கத் தொடங்கியபோது சாட்சிக்கொடுக்கும் வேலையில் ஈடுபடுவதும் கூட்டங்களுக்குச் செல்வதும் உண்மையிலேயே ஒரு சவாலாக இருந்தன. போர் முடியும் தறுவாயில் இருக்கையில், நான் இனிமேலும் தலைமறைவாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று கிளைஅலுவலக ஊழியர் தவறாக நினைத்தார். மிகவும் சிநேகப்பான்மையாக என்னிடம் பழகிய ஒரு போலீஸ் தலைவர் ஒருவர் இவ்வளவு சீக்கிரத்தில் வெளிவரவேண்டாம் என்று அவர் சொன்ன பேச்சைக் கேளாமல், நான் இவருடைய பேச்சைக் கேட்டு வெளிவந்தேன். என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்திராத அதிகடுமையான அனுபவத்தை அனுபவித்து பதினொன்று மாதங்களுக்குப் பிற்பாடு நான் வெளிவந்தேன். அதிகாரிகள் நான் சொன்ன கதையை நம்பவில்லை. என்னை இரகசிய போலீஸாரின் பிரதிநிதி என்று நினைத்து, இதுவரை நான் பார்த்திராத கொடிய நிலைமைகளின்கீழ் உள்ளே போட்டுச் சிறையிலடைத்தனர். அம்மாதங்களில் என்னைவிட இளம்வயதிலுள்ள அநேக ஆட்கள் நோயுற்று இறந்தனர். கடைசியாக என்னை சிறையிலிருந்து விடுவித்தபோது, நான் ஒன்றும் முடியாமல் சுகமில்லாமல் கிடந்தேன்.
உண்மையுள்ள ஊழியம் தொடர்ந்து நடக்கிறது
அதிக கடுந்துயரமூட்டும் தடங்கல்களும் விசாரணைகளும் சிறைவாசங்களும் அனுபவித்து, இறுதியில் நான் ஜெர்மனிக்கு திரும்பி சென்றேன்—அந்நாட்டை விட்டுவந்து பத்து வருடங்களுக்குப் பின்! உண்மையுள்ள சாட்சியாயிருக்கும் என்னுடைய அம்மாவோடு திரும்பவும் ஒன்றுசேர்ந்தேன். பகருவதற்கு எங்களுக்கு அநேக அனுபவங்கள் இருந்தன. நான் மெதுவாக சுகமடைந்து, இப்போது ஷுவென்பர்ட் என்ற இடத்தில் திரும்பவும் முழுநேரமாக சாட்சிக்கொடுக்க தொடங்கினேன். ஹிட்லர் அகங்காரத்தோடுத் தன் படையணிகளைத் திரட்டிய நியூரெம்பர்க் என்ற அந்த இடத்திலேயே போர் முடிந்த பிறகு எங்களுடைய முதல் மாநாடு நடக்க ஆயத்தப்படுத்துவதற்கு உதவிசெய்வது என்னே ஒரு பேரானந்தத்தைக் கொடுத்தது! பின்னர் ஒரு மிஷனரியாக பயிற்றுவிக்கப்படுவதற்கு ஐக்கிய மாகாணங்களில் நடைபெற்ற உவாட்ச்டவர் கிலியட் பள்ளிக்கு அழைக்கப்பட்டபோது நான் கிளர்ச்சியடைந்தேன்.
கிலியட் செல்வதற்கு சற்று முன் நடந்த ஒரு கூட்டத்தில், ஐக்கிய மாகாணங்களில் கொடி வணக்கம் சம்பந்தப்பட்டப் பிரச்னையின்பேரில் மத சுயாதீனத்தைப் பெறுவதற்கு அரும்பாடுபட்டதில் முக்கிய பாகம் வகித்த லிலீயன் கோபிட்டஸ் என்பவரை சந்தித்தேன். இந்தச் சகோதரி கூட்டத்தில் நான் பாடிய பாட்டுகளை அனுபவித்து மகிழ்ந்ததாக கூறினார், அவர் சொல்வது எனக்கு புரியாததன் காரணமாக, நான் வெறுமனே அவரைப் பார்த்து சிரித்தேன். நான் சிரித்துக்கொண்டே இருந்தேன். அவர் பேசிக்கொண்டே இருந்தார். கடைசியில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்! நாங்கள் இருவரும் கிலியட் பட்டதாரிகளாக ஆன பிறகுதான் இது நடந்தது, ஆஸ்திரியாவில் நாங்கள் மிஷனரிகளாக சேவித்து வந்தோம்.
காலப்போக்கில், என்னுடைய உடல்நல பிரச்னைகள் ஐக்கிய மாகாணங்களுக்கு திரும்பி செல்ல எங்களைக் கட்டாயப்படுத்தியது. இப்போது இரண்டு அருமையான பிள்ளைகள்—ஒரு மகனும் ஒரு மகளும் எங்களுக்கு இருக்கின்றனர். அவர்கள் இருவரும் சத்தியத்தை ஆர்வமாக ஏற்றுக்கொண்டுவருவதைப் பார்ப்பது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய உடல்நலம் முன்னேறியபிறகு, ஐக்கிய மாகாணங்களிலும் கனடாவிலும் உள்ள சபைகளுக்கு நான் உதவிபுரிந்து வந்தேன். வேலை முடிவடைவதே கிடையாது, நாங்களும் வேலை செய்துகொண்டேயிருக்க முயற்சி செய்கிறோம். இப்போதுங்கூட, தலைமறைவாக வேலை செய்த வருடங்களை நான் சந்தோஷத்தோடு எண்ணிப் பார்க்கிறேன். நாசி ஆட்கள் எங்களைத் தடுத்துநிறுத்த முடியவில்லை, ஏனெனில் யெகோவா எங்களோடேகூட இருந்தார். அவர் தொடர்ந்து அந்த வேலையை ஆசீர்வதித்து வருகிறார் என்பது தெளிவாயிருக்கிறது, அவர் மனநிறைவடையும் வரை எதுவும் அந்த வேலையைத் தடுத்துநிறுத்த முடியாது!—எர்வின் க்ளோஸ் கூறியது. (g92 11/22)
[பக்கம் 20-ன் படம்]
எர்வின் க்ளோஸ்