யெகோவா என்னோடு இருப்பவராக நிரூபித்தார்
மாக்ஸ் ஹென்னிங் சொல்லியபடி
அது 1933, ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லர் அப்போதுதான் அதிகாரம் ஏற்றிருந்தார். எனினும், பெர்லின் பரப்பெல்லையிலிருந்த ஏறக்குறைய 500 பேரான யெகோவாவின் சாட்சிகள் தடுமாற்றம் அடையவில்லை. இளைஞர் பலர் பயனியர்கள், அல்லது முழுநேர ஊழியர்களானார்கள். சிலர், மற்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்கான ஊழிய நியமிப்புகளையும் ஏற்றனர். என் நண்பர் வெர்னர் ஃப்ளேட்டனும் நானும் வழக்கமாய் ஒருவரையொருவர் இவ்வாறு கேட்டுக்கொள்வோம்: “நாம் ஏன் இவ்வாறு தாமதித்து, நம் நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறோம்? நாம் ஏன் வேறு இடங்களுக்குச் சென்று அங்கே பயனியர் செய்யக்கூடாது?”
ஆ ண்டு 1909-ல் நான் பிறந்த எட்டு நாட்களுக்குப் பின், அன்புள்ள வளர்ப்பு பெற்றோரின் கவனிப்பின்கீழ் வந்தேன். 1918-ல் என் சிறிய வளர்ப்புச் சகோதரி திடீரென்று மரித்தபோது, எங்கள் குடும்பம் துயரத்தில் ஆழ்ந்தது. பைபிள் மாணாக்கர்கள் என்று அப்போது அறியப்பட்ட யெகோவாவின் சாட்சிகள், அதற்குப் பின் சீக்கிரத்திலேயே, எங்களைச் சந்தித்தனர், என் வளர்ப்புப் பெற்றோரின் இருதயம் பைபிள் சத்தியத்தை ஆவலோடு ஏற்றது. ஆவிக்குரிய காரியங்களை மதித்துணரும்படி எனக்கும் அவர்கள் கற்பித்தனர்.
உலகப் பிரகாரமான பள்ளி படிப்பில் நான் கவனம் செலுத்தி, குழாய் பழுதுபார்ப்பவனானேன். ஆனால் அதிக முக்கியமாக, ஆவிக்குரியப் பிரகாரமாய் என் நிலைநிற்கையை ஏற்றேன். மே 5, 1933-ல் வெர்னரும் நானும் பயனியர் ஊழியம் செய்யத் தொடங்கினோம். பெர்லினுக்கு வெளியே ஏறக்குறைய 100 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஒரு பட்டணத்துக்கு மிதிவண்டியில் சென்று, அங்கே இரண்டு வாரங்கள் தங்கி பிரசங்கித்தோம். பின்பு அவசியமானக் காரியங்களைக் கவனிப்பதற்காக பெர்லினுக்குத் திரும்பி வந்தோம். அதன்பின் எங்கள் பிரசங்கிப்பு பிராந்தியத்துக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்குத் திரும்ப சென்றோம்.
வேறொரு நாட்டில் சேவிப்பதற்கு நாங்கள் மனு செய்தோம். அப்போது யுகோஸ்லாவியாவாக இருந்த இடத்துக்கு ஒரு நியமிப்பை டிசம்பர் 1933-ல் பெற்றோம். எனினும், நாங்கள் புறப்படுவதற்கு முன்பாக, எங்கள் இட நியமிப்பு, நெதர்லாந்திலுள்ள உட்ரெய்ச்ட்டுக்கு மாற்றப்பட்டது. அதற்குச் சிறிது பின்பு, நான் முழுக்காட்டப்பட்டேன். அந்நாட்களில் முழுக்காட்டுதலின்பேரில் குறைந்த அழுத்தமே வைக்கப்பட்டது; ஊழியமே முக்கியமானக் காரியமாக இருந்தது. யெகோவாவை நம்பி இருப்பதே இப்போது என் வாழ்க்கையில் இடைவிடாத அம்சமாயிற்று. பைபிள் சங்கீதக்காரனின் இவ்வார்த்தைகளில் நான் மிகுந்த ஆறுதலைக் கண்டடைந்தேன்: “இதோ! கடவுளே என் சகாயர்; என் ஆத்துமாவை ஆதரிப்போருக்குள் யெகோவா இருக்கிறார்.”—சங்கீதம் 54:4, NW.
நெதர்லாந்தில் பயனியர் செய்வது
நெதர்லாந்துக்கு வந்த சிறிது காலத்துக்குப் பின், ராட்டர்டாம் நகரத்துக்கு மறுபடியுமாக நாங்கள் நியமிக்கப்பட்டோம். நாங்கள் தங்கியிருந்த குடும்பத்தில் தகப்பனும் ஒரு மகனுங்கூட பயனியர்களாக இருந்தார்கள். சில மாதங்களுக்குப் பின், உட்ரெய்ச்ட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள ஒரு பட்டணமாகிய லீர்சம்மில் ஒரு பெரிய வீடு, பயனியர்களுக்குத் தங்குமிடமாக வாங்கப்பட்டது, நானும் வெர்னரும் அங்கு இடம் மாறிச் சென்றோம்.
அந்தப் பயனியர் வீட்டில் நாங்கள் வாழ்ந்து வருகையில், அருகிலிருந்த பிராந்தியங்களுக்கு மிதிவண்டியில் சென்றோம், தொலைவிலிருந்தவற்றிற்குச் செல்ல ஏழு பயணிகள் அடங்கக்கூடிய காரைப் பயன்படுத்தினோம். அந்தச் சமயத்தில் நெதர்லாந்து முழுவதிலும் நூறு சாட்சிகள் மாத்திரமே இருந்தோம். 60 ஆண்டுகளுக்குப் பின்னான இன்று, பயனியர் வீட்டிலிருந்து நாங்கள் ஊழியம் செய்த அந்தப் பிராந்தியம் 4,000-த்துக்கும் மேற்பட்ட பிரஸ்தாபிகளை ஏறக்குறைய 50 சபைகளில் கொண்டுள்ளது!
ஒவ்வொரு நாளும் 14 மணிநேரங்கள் வரையாக ஊழியத்தில் செலவிட்டு கடினமாக உழைத்தோம், அது எங்களை மகிழ்ச்சியுடன் வைத்தது. எவ்வளவு கூடுமோ அவ்வளவு அதிக பிரசுரங்களை அளிப்பதே முக்கியமான ஒரு நோக்கமாக இருந்தது. பொதுவாக ஒரு நாளைக்கு நூறுக்கு மேற்பட்ட சிறு புத்தகங்களை அக்கறை காட்டுவோரிடம் விட்டு வந்தோம். மறுசந்திப்புகள் செய்வதும் பைபிள் படிப்புகள் நடத்துவதும் அப்போது எங்கள் ஒழுங்குமுறையான நடவடிக்கையின் பாகமாக இருக்கவில்லை.
ஒரு நாள் என் தோழரும் நானும் ஃப்ரேஸ்வாக் பட்டணத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தோம். இராணுவ கோட்டையின் வாசலில் ஒரு மனிதனுக்கு அவர் சாட்சி கொடுத்துக்கொண்டிருக்கையில், என் பைபிளை வாசிப்பதற்கு நான் அந்த நேரத்தைப் பயன்படுத்தினேன். அது சிவப்பிலும் நீல நிறத்திலும் மிகுதியாய் அடிக்கோடிடப்பட்டு இருந்தது. பின்னால், அருகிலிருந்த ஒரு கூரையின்மீது வேலைசெய்துகொண்டிருந்த ஒரு தச்சன், நான் ஒருவேளை ஏதோ வேவுபார்ப்பவனாக இருக்கக்கூடும் என்று வாசலிலிருந்தவனை எச்சரித்தான். இதன் விளைவாக, அதே நாளில் கடைக்காரன் ஒருவனுக்கு சாட்சிகொடுத்துக் கொண்டிருக்கையில் நான் கைது செய்யப்பட்டேன், என் பைபிள் பறிமுதல் செய்யப்பட்டது.
நான் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கே, என் பைபிளிலிருந்த அந்தக் கோடுகள் அந்தக் கோட்டையை வரைவதற்குச் செய்த ஒரு முயற்சி என்று குற்றம் சாட்டப்பட்டது. நான் குற்றமுள்ளவனாகத் தீர்க்கப்பட்டேன், சிறையில் இரண்டு ஆண்டுகள் வைக்கப்படும்படி நீதிபதி எனக்குத் தீர்ப்பளித்தார். எனினும், அப்பீல் செய்யப்பட்டது. நான் குற்றமற்றவனாகத் தீர்க்கப்பட்டேன். விடுதலையாகியிருந்ததில் நான் எவ்வளவாக மகிழ்ச்சியடைந்தேன், ஆனால் என் பைபிள் அதன் எல்லா குறிப்புகளோடும் திரும்ப கொடுக்கப்பட்டபோது நான் இன்னும் அதிக மகிழ்ச்சியடைந்தேன்!
1936-ன் வேனிற்காலத்தின்போது, வீட்டிலிருந்த பயனியர்களில் ஒருவரான ரிக்கார்ட் ப்ரானிங்கும் நானும், அந்நாட்டின் வடக்கே பிரசங்கிப்பதில் வேனிற்காலத்தைச் செலவிட்டோம். முதல் மாதத்தில் 240 மணிநேரங்கள் ஊழியத்தில் செலவிட்டு மிகுதியான பிரசுரங்களை அளித்தோம். நாங்கள் ஒரு கூடாரத்தில் வசித்து, துணி துவைப்பது, சமைப்பது, முதலியவற்றைச் செய்வதான எங்கள் சொந்தத் தேவைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டோம்.
பின்னால் ஒளிகொண்டுசெல்வோன் என்ற பெயருடைய சிறு கப்பலுக்கு நான் மாற்றப்பட்டேன், அது நெதர்லாந்தின் வடக்கில் பிரபலமாயிற்று. அந்தச் சிறு கப்பலில் ஐந்து பயனியர்கள் வாழ்ந்தனர், அதிலிருந்துகொண்டு தொடர்பற்ற ஒதுக்கமான அநேக பிராந்தியங்களை நாங்கள் சென்றெட்ட முடிந்தது.
கூடுதலான சிலாக்கியங்கள்
1938-ல், யெகோவாவின் சாட்சிகளின் வட்டாரக் கண்காணிகள் அப்போது அழைக்கப்பட்டபடி, ஒரு மண்டலக் கண்காணியாக இருக்கும்படி நான் நியமிக்கப்பட்டேன். ஆகையால் ஒளிகொண்டுசெல்வோனை விட்டுவிட்டு, மூன்று தெற்கு மாநிலங்களில் சபைகளையும் தனித்த இடங்களிலிருந்த சாட்சிகளையும் சந்திக்கத் தொடங்கினேன்.
மிதிவண்டியே எங்கள் ஒரே போக்குவரத்து சாதனமாக இருந்தது. ஒரு சபையிலிருந்து அல்லது அக்கறை காட்டுவோரின் ஒரு தொகுதியிலிருந்து அடுத்ததுக்குப் பயணப்பட அடிக்கடி ஒரு முழு நாளும் எடுத்தது. இப்போது நான் வசிக்கும் இடமாகிய ப்ரெடா, நான் சந்தித்த பட்டணங்களுக்குள் ஒன்றாக இருந்தது. அந்தச் சமயத்தில், ப்ரெடாவில் ஒரு சபைகூட இருக்கவில்லை, வயது முதிர்ந்த சாட்சிளான ஒரு தம்பதியினர் மட்டுமே இருந்தனர்.
லிம்பர்க்கிலிருந்த சகோதரர்களுக்குச் சேவை செய்கையில், யோஹன் பீப்பர் என்ற பெயர்கொண்ட சுரங்க வேலையாளர் ஒருவர் கேட்ட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும்படி நான் அழைக்கப்பட்டேன். பைபிள் சத்தியத்திற்காக அவர் உறுதியான நிலைநிற்கை எடுத்து, தைரியமுள்ள ஒரு பிரசங்கியானார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் அவர் கைதுசெய்து சித்திரவதை முகாமில் போடப்பட்டு, அங்கே மூன்றரை ஆண்டுகள் செலவிட்டார். தான் விடுதலை செய்யப்பட்ட பின்பு, பிரசங்க ஊழியத்தை ஆர்வத்துடன் மறுபடியும் ஏற்றார், இன்று அவர் உண்மையுள்ள மூப்பராக இன்னும் சேவிக்கிறார். லிம்பர்க்கில் 12 சாட்சிகளைக் கொண்டிருந்த அந்தச் சிறிய சபை இப்போது ஏறக்குறைய 1,550 பிரஸ்தாபிகளைக் கொண்ட 17 சபைகளாக பெருகிவிட்டிருக்கிறது!
நாஜி அதிகார கடும் ஒடுக்குதலின்கீழ்
மே 1940-ல் நாஜிகள் நெதர்லாந்துக்குள் படையெடுத்தனர். ஆம்ஸ்டர்டாமிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்துக்குச் செல்லும்படியான ஊழிய நியமிப்பை நான் பெற்றேன். நாங்கள் எங்கள் ஊழியத்தை மீறிய மிக அதிக எச்சரிக்கையோடு நிறைவேற்ற வேண்டியிருந்தது. இது பின்வரும் இந்த பைபிள் நீதிமொழியை மதித்துணரும்படி எங்களைச் செய்வித்தது: “உண்மையானத் தோழன் . . . இக்கட்டு உண்டாயிருக்கையில் உதவுவதற்குப் பிறந்திருக்கிற ஒரு சகோதரன்.” (நீதிமொழிகள் 17:17, NW) இந்த நெருக்கடியான காலத்தின்போது செழித்தோங்கிய இனிமையான ஐக்கிய பிணைப்பானது, என் ஆவிக்குரிய முன்னேற்றத்தின்பேரில் ஆழ்ந்த பாதிப்பைக் கொண்டிருந்து, இனிவரவிருந்த இன்னுமதிகக் கடினமான நாட்களுக்காக என்னைப் பக்குவப்படுத்தினது.
பிரசுரங்களைச் சபைகளுக்குக் கொண்டுசென்று வழங்குவதைக் கண்காணிப்பது எனக்கு நியமிக்கப்பட்ட வேலையாக இருந்தது, இது வழக்கமாக தூதுவர்களால் செய்யப்பட்டது. ஜெர்மனியில் கட்டாயத் தொழிலாளராக வேலை செய்வதற்கு, இளைஞருக்காக கெஸ்டாப்போ காவற்படை இடைவிடாமல் தேடிக்கொண்டிருந்தது, ஆகையால் கிறிஸ்தவ சகோதரிகளை தூதுவர்களாக நாங்கள் பயன்படுத்தினோம். காலப்போக்கில், நானி என்று எப்போதும் அறியப்பட்ட வில்ஹெல்மீனா பேக்கர் ஹேகிலிருந்து எங்களிடம் அனுப்பப்பட்டாள். நான் அவளை எங்கள் கிளை அலுவலகக் கண்காணியான ஆர்த்தர் விங்க்ளர் ஒளிந்திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றேன். கூடியவரை அடையாளம் கண்டுகொள்ளாத முறையில் இருக்கும்படி முயற்சி செய்வதற்கு, ஒரு டச்சு விவசாயியைப்போல் மர புதைமிதிகளையும் மற்ற எல்லாவற்றையும் கொண்டு என்னை உடுத்துவித்துக் கொண்டு, தெருவிலிருந்த காரில் நானியோடு சென்றேன். நான் அடையாளம் கண்டுகொள்ளப்படாத முறையில் எவ்வகையிலும் இல்லையென அவள் உணர்ந்ததால், தன் சிரிப்பை அடக்குவது அவளுக்குக் கடினமாக இருந்ததென்று பின்னால் தெரிந்துகொண்டேன்.
ஆம்ஸ்டர்டாமில் பிரசுரங்களுக்கும் காகிதத்துக்குமுரிய சேமிப்பிடம் 1941, அக்டோபர் 21-ல் பகைஞருக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டது. கெஸ்டாப்போ காவற்படையின் திடீர் சோதனையின்போது, விங்க்ளரும் நானியும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களைச் சிறைச்சாலைக்கு ஒப்படைத்தபோது, கெஸ்டாப்போ படையினர் இருவர், “கருப்பு தலைமயிரைக் கொண்ட குள்ளமான ஓர் ஆளைத்” தாங்கள் பின்தொடர்ந்து பிடிக்கச் சென்று, ஜனநெருக்கமான வீதிகளில் அவன் கண்ணில்படாமல் போய்விட்டதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தது அவர்கள் காதில் விழுந்தது. அவர்கள் என்னைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர் என்பது தெளிவாக இருந்தது. ஆகையால் விங்க்ளர், சகோதரர்களுக்கு ஒரு செய்தியை எவ்வாறோ சமாளித்து அனுப்பினார். உடனடியாக, நான் ஹேகுக்கு மாற்றப்பட்டேன்.
இதற்கிடையில் நானி சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, பயனியர் செய்யும்படி ஹேகுக்குத் திரும்பிவந்தாள். அங்கே நான் அவளை மறுபடியுமாகச் சந்தித்தேன். ஆனால் ராட்டர்டாமில் சபை ஊழியர் கைதுசெய்யப்பட்டபோது, அவருடைய இடத்தை ஏற்கும்படி நான் அனுப்பப்பட்டேன். பின்னால் கௌடா சபையில் சபை ஊழியர் கைதுசெய்யப்பட்டார், அவருடைய இடத்தை ஏற்பதற்கு நான் அங்கே அனுப்பப்பட்டேன். கடைசியாக, 1943-ன் மார்ச் 29-ல் நான் பிடிபட்டேன். எங்கள் பைபிள் பிரசுர கையிருப்பை நான் தணிக்கை செய்துகொண்டிருக்கையில், ஒரு கெஸ்டாப்போ காவற்படையினரின் திடீர் தாக்கலால் திடுக்குற்றேன்.
மேசையின்மீது பைபிள் பிரசுரங்கள் பரப்பி வைக்கப்பட்டு இருந்தன, அதுமட்டுமல்லாமல், கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் பெயர்களை வரிசையாகக் கொண்ட ஒரு தாள், குறியீட்டு முறையில் எழுதப்பட்டிருந்தபோதிலும், அங்கிருந்தது. மனவேதனையில், நான் யெகோவாவிடம் ஜெபித்து, பிரசங்கிப்பதற்கு சுயாதீனராக இன்னும் இருந்தவர்களைப் பாதுகாக்க ஒரு வழியை எனக்கு அருளும்படி கேட்டேன். கண்டுபிடிக்கப்படாமல், என் திறந்த கையை, பெயர்களை வரிசையாகக் கொண்ட அந்தத் தாளின்மீது வைத்து அதை என் கைக்குள் கசக்கி சுருட்டிக்கொள்வதைச் சமாளித்தேன். பின்பு கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்டேன். அங்கே அந்தப் பெயர் வரிசை தாளைத் துண்டுதுண்டாகக் கிழித்து, கழிவறைத் தண்ணீரில் அடித்துச் செல்லும்படி செய்தேன்.
இத்தகைய இக்கட்டான பயங்கர நிலைமைகளில் இருக்கையில், கடந்த காலங்களில் தம்முடைய ஜனத்தினிடமாக யெகோவா நடப்பித்த செயல்களிலிருந்தும், விடுதலைக்குரிய அவருடைய வாக்குகளிலிருந்தும் பலத்தைப் பெறுவதற்கு நான் கற்றுக்கொண்டேன். இது என் மனதில் ஆழமாய் எப்போதும் பதிந்திருக்கிற தேவாவியால் ஏவப்பட்ட ஒரு நிச்சய உறுதியாக உள்ளது: “மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, . . . யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாதிருந்தால், . . . அவர்கள் நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.”—சங்கீதம் 124:1-3, தி.மொ.
சிறைச்சாலைகளும் சித்திரவதை முகாம்களும்
ராட்டர்டாம் சிறைச்சாலைக்கு நான் கொண்டுசெல்லப்பட்டேன், அங்கே பைபிளை என்னோடு வைத்திருந்ததற்காக நன்றியுள்ளவனாக இருந்தேன். இரட்சிப்பு (ஆங்கிலம்) புத்தகமும், பிள்ளைகள் (ஆங்கிலம்) புத்தகத்தின் பாகங்களும்கூட என்னிடம் இருந்தன, இந்த எல்லா பிரசுரங்களையும் வாசிப்பதற்கு ஏராளமான நேரமும் இருந்தது. ஆறு மாதங்களுக்குப் பின்பு நான் மோசமாக நோயுற்று, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. சிறைச்சாலையை விட்டுவருவதற்கு முன்பாக, அந்தப் பிரசுரத்தை என் மெத்தையினடியில் மறைத்து வைத்தேன். பீட் புரூர்ட்ஜெஸ் என்னும் மற்றொரு சாட்சி சிறைச்சாலையில் என் அறைக்கு மாற்றப்பட்டு, அதைக் கண்டுபிடித்தார் என்று பின்னால் எனக்குத் தெரியவந்தது. இவ்வாறு, மற்றவர்கள் இன்னும் விசுவாசத்தில் இருக்கையிலேயே பலப்படுத்துவதற்கு அந்தப் பிரசுரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
நான் சுகமடைந்த பின்பு ஹேக்கிலிருந்த ஒரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டேன். அங்கே இருந்தபோது லியோ சி. வான் டெர் டாஸைச் சந்தித்தேன். அவர் நாஜி குடியேற்றத்தை எதிர்த்ததற்காக சிறையில் போடப்பட்டிருந்த ஒரு சட்ட மாணாக்கர். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அவர் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை, அவருக்குச் சாட்சிகொடுப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சில சமயங்களில் அவர் என்னை நள்ளிரவில் எழுப்பி கேள்விகள் கேட்பார். சாட்சிகளை தான் வியந்து பாராட்டுவதை அவரால் மறைக்க முடியவில்லை, முக்கியமாய், எங்கள் விசுவாசத்தைத் துறந்துவிட ஒப்புக்கொண்டு வெறுமனே ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டு விட்டால் நாங்கள் விடுதலை செய்யப்படக்கூடும் என்பதைத் தெரிந்துகொண்ட பின்பு அவ்வாறிருந்தார். போருக்குப் பின்பு, லியோ வழக்கறிஞராகி, வணக்க சுயாதீனம் உட்பட்ட பல வழக்குகளில், உவாட்ச் டவர் சொஸைட்டிக்காக வாதாடினார்.
1944, ஏப்ரல் 29-ல், வேதனையான 18 நாள் பயணத்தில் ஜெர்மனிக்கு செல்ல ஒரு ரயிலுக்குள் நான் திணிக்கப்பட்டேன். மே 18-ல் புக்கென்வல்ட் சித்திரவதை முகாமின் வாசல் கதவுகள் என்னை உள்ளிட்டு மூடின. ஓர் ஆண்டுக்குப் பின்னால் நேசநாடுகளின் படைகளால் நாங்கள் விடுதலை செய்யப்படும் வரையில், வாழ்க்கை விவரிக்க முடியாத முறையில் பயங்கரமாயிருந்தது. ஆயிரக்கணக்கானோர் மரித்தனர், பலர் எங்கள் கண்களுக்கு முன்பாகவே மரித்தனர். போர்க் கருவிகளை உற்பத்திசெய்த அருகிலிருந்த தொழிற்சாலையில் வேலை செய்ய நான் மறுத்ததால், சாக்கடையில் வேலைசெய்யும்படி நியமிக்கப்பட்டேன்.
ஒரு நாள் அந்தத் தொழிற்சாலையின்மீது குண்டு போடப்பட்டது. பாதுகாப்புக்காக போர்வீரர் குடியிருப்புக்குள் பலர் பாய்ந்து புகுந்தனர், மற்றவர்கள் காடுகளுக்குள் ஓடினர். குறிதவறிய குண்டுகள் போர்வீரர் குடியிருப்புகளைத் தாக்கின, மற்றும் எரியூட்டுக் குண்டுகள் காடுகளைத் தீக்கொளுத்தின. அது பயங்கர காட்சியாக இருந்தது! பலர் உயிரோடு எரிக்கப்பட்டனர்! பாதுகாப்பான ஒரு மறைவிடத்தை நான் கண்டடைந்திருந்தேன், தீ அணைந்தபோது, நான் நடந்து எண்ணற்ற சவங்களைக் கடந்து முகாமுக்குப் போய்ச் சேர்ந்தேன்.
நாஜி படுகொலையின் பயங்கரங்களைப் பற்றி இன்று பெரும்பான்மையான ஆட்கள் தெரிந்திருக்கின்றனர். யெகோவா என் சிந்திக்கும் திறமையைப் பலப்படுத்தினதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆகையால், நான் அனுபவித்த அந்தப் பயங்கரங்கள் ஆண்டாண்டுகளாக என் சிந்தனைகளில் ஆதிக்கம் செலுத்தவில்லை. என் சிறையிருப்பு காலத்தைப் பற்றி நான் சிந்திக்கையில், யெகோவாவின் பெயருக்கு மகிமையுண்டாக, அவரிடம் உத்தமத்தைக் காத்ததன் மகிழ்ச்சியே என் முதன்மையான உணர்ச்சியாக உள்ளது.—சங்கீதம் 124:6-8.
போருக்குப் பின்னான நடவடிக்கை
நான் விடுதலையாகி ஆம்ஸ்டர்டாமுக்குத் திரும்பி வந்தபோது, ஒரு ஊழிய நியமிப்புக்காக நான் நேரடியாகக் கிளை அலுவலகத்துக்குச் சென்று தெரிவித்தேன். நான் அங்கு இராத காலத்தின்போது நடந்தவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தேன். ஏற்கெனவே நானி அங்கு வேலை செய்துகொண்டிருந்தாள். போரின் கடைசி ஆண்டின்போது, சபைகளுக்கு பைபிள் பிரசுரங்களைக் கொண்டுசென்று அளித்துவரும் தூதுவளாக அவள் சேவித்திருந்தாள். மயிரிழையில் உயிர் தப்பிய நிலைகளைப் பல தடவைகள் அவள் அனுபவித்திருந்த போதிலும், மறுபடியுமாக அவள் கைதுசெய்யப்படவில்லை.
சிறிது காலம் ஹார்லெமில் நான் பயனியர் செய்தேன், ஆனால் 1946-ல், ஆம்ஸ்டர்டாமிலுள்ள கிளை அலுவலகத்தில் பிரசுரங்களை அனுப்பும் பகுதியில் வேலை செய்வதற்கு அங்கு செல்லும்படி எனக்குச் சொல்லப்பட்டது. 1948-ன் முடிவில் நானியும் நானும் மணம் செய்துகொண்டு, ஒன்றுசேர்ந்து பயனியர் ஊழியம் செய்யும்படி கிளை அலுவலகத்தை விட்டுச் சென்றோம். எங்கள் பயனியர் ஊழிய நியமிப்பு இடம் அஸ்ஸெனில் இருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ரிக்கார்ட் ப்ரானிங்கும் நானும் அங்கே கூடாரத்தில் வாழ்ந்து, பிரசங்க ஊழியம் செய்துகொண்டு, வேனிற்காலத்தை கழித்திருந்தோம். சித்திரவதை முகாமுக்குப் போகும் வழியில் ரிக்கார்ட் சுட்டுக் கொல்லப்பட்டாரென்று எனக்குத் தெரியவந்தது.
நான் சிறையிலிருந்த காலம் என் உடல்நலத்தைச் சேதப்படுத்திவிட்டது. புக்கென்வல்டிலிருந்து விடுதலை செய்த ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு, நோய் என்னை நான்கு மாதங்கள் படுக்கையில் கிடக்கும்படி செய்துவிட்டது. பல ஆண்டுகளுக்குப் பின், 1957-ல், ஆண்டும் முழுவதும் எலும்புருக்கி நோயால் பீடிக்கப்பட்டிருந்தேன். என் உடலின் பலமெல்லாம் உறிஞ்செடுக்கப்பட்டுப் போயிற்று, எனினும் என் பயனியர் ஆர்வம் இன்னும் உறுதியாக இருந்தது. நான் நோயுற்றிருந்தபோது, சாட்சி கொடுப்பதற்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் ஆவலோடு பயன்படுத்திக்கொண்டேன். என் நோய் நிலைமைகள் என்னை நோய்ப்பட்ட சோம்பலான ஒரு மனிதனாக மாற்றுவதற்கு அனுமதியாதபடி தடுத்து வைத்ததில் இந்தப் பயனியர் ஆர்வமே முக்கியமான காரணமாக இருந்ததென்று நான் உணருகிறேன். எங்கள் உடல்நலம் அனுமதிக்கும் வரையில் முழுநேர ஊழியத்தை விடாது பற்றிக்கொண்டிருக்கும்படி நானியும் நானும் தீர்மானித்திருக்கிறோம்.
நோயிலிருந்து நான் மீண்டும் உடல்நலம் பெற்ற பின்பு, ப்ரெடா பட்டணத்தில் ஊழியம் செய்யும்படி நியமிக்கப்பட்டோம். இது, மண்டல ஊழியனாக நான் இந்தப் பட்டணத்துக்கு முதன்முதல் சென்றிருந்ததற்கு 21 ஆண்டுகள் பின்னாகும். 1959-ல் நாங்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, 34 சாட்சிகளைக் கொண்ட ஒரு சிறிய சபை அங்கிருந்தது. 37 ஆண்டுகளுக்குப் பின்னான இன்று, 500-க்கு மேற்பட்ட சாட்சிகளைக் கொண்ட ஆறு சபைகளாக அது பெருகிவிட்டிருக்கிறது, இவர்கள் மூன்று இராஜ்ய மன்றங்களில் கூடுகிறார்கள்! எங்களுடைய ஓரளவு முயற்சிகளின் பலனாக பைபிள் சத்தியத்தைப் பற்றிய அறிவை அடைந்திருக்கும் பலரை, இவ்விடத்து எங்கள் கூட்டங்களிலும் அசெம்பிளிகளிலும் நாங்கள் காண்கிறோம். அப்போஸ்தலனாகிய யோவான் பின்வருமாறு எழுதினபோது உணர்ந்ததைப்போல் நாங்கள் அடிக்கடி உணருகிறோம்: “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.”—3 யோவான் 4.
நாங்கள் இப்போது முதிர்வயதானோராக இருக்கிறோம். என் வயது 86 நானியினுடையது 78, ஆனால் பயனியர் செய்வது உடல்நலத்திற்குகந்த ஊழியம் என்று நான் சொல்ல வேண்டும். என் சிறையிருப்பின்போது எனக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சினைகளில் பெரும்பான்மையானவை, நான் ப்ரெடாவில் இருந்தது முதற்கொண்டு ஒருவாறு தீர்ந்தன. யெகோவாவின் சேவையிலும், பலன்தரும் பல ஆண்டுகளை நான் அனுபவித்து மகிழ்ந்திருக்கிறேன்.
பலனுள்ள சேவையின் பல ஆண்டுகளைப் பின்னோக்கிக் காண்பது எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சிக்குக் காரணமாக உள்ளது. நாங்கள் உயிரோடிருக்கும் வரையில் யெகோவாவின் ஊழியத்தைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும்படி ஆவியையும் பலத்தையும் யெகோவா எங்களுக்கு அருளவேண்டுமென்பதே எங்கள் அன்றாட ஜெபமாக இருக்கிறது. திடநம்பிக்கையுடன் நாங்கள், சங்கீதக்காரனின் இவ்வார்த்தைகளில் எங்கள் உள்ளத்திலுள்ளதை வெளிப்படுத்துகிறோம்: “இதோ! கடவுளே என் சகாயர்; என் ஆத்துமாவை ஆதரிப்போருக்குள் யெகோவா இருக்கிறார்.”—சங்கீதம் 54:4, NW.
[பக்கம் 23-ன் படம்]
1930-ன் பத்தாண்டுகளில் பயனியர் ஊழியம் செய்தபோது பயன்படுத்தப்பட்ட கூடாரத்திற்கு அருகில் நிற்பது
[பக்கம் 23-ன் படம்]
தொடர்பற்ற ஒதுக்கமான பிராந்தியத்தை எட்டுவதற்கு நாங்கள் பயன்படுத்தின சிறிய கப்பல்
[பக்கம் 23-ன் படம்]
1957-ல் மாநாட்டு நிகழ்ச்சிநிரலில் பேட்டிகாணப்படுதல்
[பக்கம் 24-ன் படம்]
இன்று என் மனைவியுடன்