பைபிள் வாசித்தேன் வாழ்நாளெல்லாம் பலம் பெற்றேன்
மார்சோ லர்வா சொன்னபடி
“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” என்னுடைய அறையில் தன்னந்தனியாக உட்கார்ந்துகொண்டு இந்த வார்த்தைகளை பைபிளிலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன். ஏன் ரகசியமாக வாசித்தேன், தெரியுமா? ஏனென்றால், என் அப்பா ஒரு நாத்திகர்; நான் பைபிளைக் கையில் வைத்திருப்பதை அவர் பார்த்தால் அவ்வளவுதான்!
அதற்கு முன்னால் நான் பைபிளை வாசித்ததே கிடையாது; ஆதியாகமத்திலுள்ள அந்த ஆரம்ப வார்த்தைகளை வாசித்ததும் எனக்குள் ஒரு மின்னல் வெட்டியதுபோல் இருந்தது. ‘இயற்பியல் சட்டங்கள் அற்புதமா இயங்குவதப் பாத்து நான் எப்பவுமே பிரமிச்சுப் போயிருக்கேன்; அதுக்கான காரணம் இப்போதான் புரியுது!’ என நினைத்தேன். அதன்பின், ராத்திரி எட்டு மணியிலிருந்து விடியற்காலை நான்கு மணிவரை பைபிள் படிப்பிலேயே மூழ்கிவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! அன்று ஆரம்பித்த பழக்கத்தை இன்றுவரை விடவே இல்லை; பைபிளைத் தவறாமல் படித்ததால் வாழ்நாள் முழுவதும் எப்படிப் பலம் பெற்றேன் என்பதை இப்போது உங்களுக்குச் சொல்கிறேன்.
“தெனமும் வாசிச்சிட்டே இருக்கணும்”
1926-ல், பிரான்சின் வடக்கே வெர்மெல் என்ற கிராமத்தில் நான் பிறந்தேன்; அங்கு நிலக்கரி சுரங்கமிருந்தது. இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் நிலக்கரிக்கு நாடெங்கும் ரொம்ப மவுசு இருந்தது. நான் ஒரு சுரங்கத் தொழிலாளி என்பதால் ராணுவச் சேவையிலிருந்து எனக்கு அரசாங்கம் விலக்களித்தது. ஆனால் இன்னும் வசதியாக வாழ, ரேடியோ எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிகல் துறைகளைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில்தான் இயற்பியல் சட்டங்கள் அற்புதமாக இயங்குவதைப் பார்த்துப் பிரமித்துப்போனேன். எனக்கு 21 வயதானபோது, என்கூட படித்த ஒரு மாணவன், “இது கண்டிப்பா வாசிக்க வேண்டிய ஒரு புஸ்தகம்” என்று சொல்லி ஒரு பைபிளை நீட்டினான். அதுதான் எனக்குக் கிடைத்த முதல் பைபிள். அதை வாசித்து முடித்தபோது, அது உண்மையிலேயே கடவுள் தந்திருக்கும் புத்தகம் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.
என் அக்கம்பக்கத்தாரும் ஆசை ஆசையாகப் படிப்பார்கள் என்று நினைத்து, எட்டு பைபிளை வாங்கிக்கொண்டு போனேன். ஆனால், அவர்கள் என்னைக் கேலி கிண்டல் செய்வார்கள்... எதிர்ப்பார்கள்... என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. மூடநம்பிக்கைகளில் ஊறிப்போயிருந்த என் சொந்தபந்தங்கள் என்னிடம் வந்து, “நீ இந்தப் புஸ்தகத்தை வாசிக்க ஆரம்பிச்சிட்டீன்னா அவ்வளவுதான், தெனமும் வாசிச்சிட்டே இருக்கணும்” என்று எச்சரித்தார்கள். உண்மையில் நான் அதைத்தான் செய்தேன், தினமும் பைபிளை வாசித்து வந்தேன்; அதற்காக ஒருநாளும் வருத்தப்பட்டது கிடையாது. பைபிள் வாசிப்பு என் வாழ்நாள் பூராவும் தொடரும் ஒரு பழக்கமாகிவிட்டது.
எனக்கு பைபிளில் ஆர்வம் இருப்பதை அக்கம்பக்கத்தார் சிலர் பார்த்து, யெகோவாவின் சாட்சிகள் தந்திருந்த புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். உதாரணமாக, ஒரே உலகம், ஒரே அரசாங்கம்a (படத்தில் உள்ளது பிரெஞ்சு மொழி பிரதி) போன்ற சிறு புத்தகங்களைக் கொடுத்தார்கள்; கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் மனிதர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்பதை அந்தப் புத்தகங்கள் பைபிளிலிருந்து விளக்கின. (மத். 6:10) அவற்றை வாசித்த பிறகு, அந்த நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டும் என்ற என் தீர்மானம் இன்னும் உறுதியானது.
என்னிடமிருந்து பைபிளைப் பெற்றுக்கொண்ட முதல் ஆள், நோயெல்; அவன் சிறு வயதிலிருந்தே என் நண்பன், ஒரு கத்தோலிக்கன். பாதிரியாவதற்குப் படித்துக்கொண்டிருந்த ஒருவரை நாங்கள் சந்திக்க அவன் ஏற்பாடு செய்தான். அவரைச் சந்தித்துப் பேச நான் முதலில் பயந்தேன்; ஆனால், உருவச் சிலைகளை வணங்குவதும் குருமாரை மத சம்பந்தமான பட்டப்பெயர் வைத்து அழைப்பதும் தவறென சங்கீதம் 115:4-8, மத்தேயு 23:9, 10 போன்ற வசனங்களிலிருந்து தெரிந்திருந்ததால் தைரியத்தோடு சாட்சி கொடுத்தேன். அதைக் கேட்ட நோயெல் சத்தியத்தை ஏற்றுக்கொண்டான், இன்றுவரை யெகோவாவின் சாட்சியாக உண்மையோடு நிலைத்திருக்கிறான்.
அதன்பின் நான் என் அக்காவைப் போய்ப் பார்த்தேன். அவளுடைய வீட்டுக்காரர் மாயமந்திர புத்தகங்களை வைத்திருந்தார், பேய்களின் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு உதவ என்னால் முடியுமா என்ற சந்தேகம் முதலில் இருந்தது; ஆனால், யெகோவாவின் தூதர்கள் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எபிரெயர் 1:14 போன்ற வசனங்களிலிருந்து கிடைத்தது. ஆகவே, கடவுள் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை என் அக்கா வீட்டுக்காரருக்கு பைபிளிலிருந்து காட்டினேன்; அவர் அதை ஏற்றுக்கொண்டு, தன்னிடம் இருந்த எல்லா மாயமந்திர பொருட்களையும் தூக்கிப்போட்டு விட்டார்; அதன் பிறகு பேய்களின் தொல்லை ஒழிந்தது. இப்போது, அவரும் என் அக்காவும் யெகோவாவின் சாட்சிகளாகப் பக்திவைராக்கியத்தோடு ஊழியம் செய்து வருகிறார்கள்.
1947-ல், ஆர்த்தர் எம்யாட் என்ற அமெரிக்க சகோதரர் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். எனக்கு ஒரே குஷியாகிவிட்டது! சாட்சிகள் எங்கே கூட்டம் நடத்துகிறார்கள் என்று அவரிடம் கேட்டேன். கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) தொலைவிலிருந்த லயேவின் என்ற இடத்தில் சில சாட்சிகள் இருப்பதாக அவர் சொன்னார். அந்தக் காலத்தில் சைக்கிள் வாங்குவதுகூட பெரும் பாடாக இருந்தது; அதனால், எத்தனையோ மாதங்களாகக் கூட்டங்களுக்கு நடந்தே போய் நடந்தே வந்தேன். பிரான்சில் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம் எட்டு வருடங்களாகத் தடை செய்யப்பட்டிருந்தது. அங்கு 2,380 சாட்சிகள் மட்டுமே இருந்தார்கள்; அவர்களில் அநேகர் போலந்திலிருந்து வந்து குடியேறியவர்கள். செப்டம்பர் 1, 1947 அன்று, நம் ஊழியத்துக்கு பிரான்சு அரசாங்கம் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்தது. பாரிஸிலுள்ள வில்லா கிபெர் என்ற இடத்தில் ஒரு கிளை அலுவலகம் மறுபடியும் நிறுவப்பட்டது. அப்போது பிரான்சில் ஒரு பயனியர்கூட இல்லை; ஆகவே, 1947, டிசம்பர் மாத நம் ராஜ்ய ஊழியத்தில் (அன்றைய பெயர், இன்ஃபார்மென்ட்) ஒழுங்கான பயனியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அச்சமயத்தில் ஒழுங்கான பயனியர்கள் மாதந்தோறும் 150 மணிநேரம் ஊழியம் செய்ய வேண்டியிருந்தது. (1949-ல் அது 100 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது.) “[கடவுளுடைய] வார்த்தையே சத்தியம்” என்று இயேசு சொன்னதை மனதார ஏற்றுக்கொண்டு, 1948-ல் ஞானஸ்நானம் பெற்றேன். (யோவா. 17:17) டிசம்பர் 1949-ல் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன்.
சிறைச்சாலையிலிருந்து மீண்டும் டன்கர்க் ஊருக்கு
பிரான்சின் தெற்கே இருந்த ஆஷன் என்ற ஊரில் ஊழியம் செய்ய முதலில் எனக்கு நியமிப்புக் கிடைத்தது; ஆனால் நான் ரொம்ப நாள் அங்கு இருக்கவில்லை. சுரங்க வேலையை விட்டுவிட்டதால் ராணுவத்தில் சேரும்படி அதிகாரிகள் என்னைக் கட்டாயப்படுத்தினார்கள்; நான் மறுத்தபோது என்னைச் சிறையில் தள்ளினார்கள். அங்கு பைபிளை வைத்திருக்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை; இருந்தாலும், சங்கீத புத்தகத்தின் சில பக்கங்கள் எப்படியோ என் கைக்குக் கிடைத்தன. அவைதான் எனக்கு உற்சாக டானிக்காக இருந்தன. நான் விடுதலையானபோது, முழுநேர ஊழியத்தை விட்டுவிட்டு ‘செட்டில்’ ஆகிவிடலாமா என யோசித்தேன். ஆனால், சரியான தீர்மானத்திற்கு வர பைபிள் வசனங்கள் மீண்டும் கைகொடுத்தன. “என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டு” என்று பிலிப்பியர் 4:11-13-ல் பவுல் சொன்ன வார்த்தைகளைத் தியானித்துப் பார்த்தேன். பயனியர் ஊழியத்தைத் தொடர்வதென்ற முடிவுக்கு வந்தேன். 1950-ல், முன்பு நான் ஊழியம் செய்துவந்த டன்கர்க் என்ற ஊருக்கே மீண்டும் நியமிக்கப்பட்டேன்.
நான் அங்கு போனபோது, என்னிடம் எதுவுமே இல்லை. இரண்டாம் உலகப் போரினால் ஊரே சின்னாபின்னமாகியிருந்தது; அதனால், தங்குவதற்கு இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. முன்பு நான் சந்தித்துச் சாட்சி கொடுத்திருந்த ஒரு குடும்பத்தைப் போய்ப் பார்க்கலாம் என முடிவு பண்ணினேன். அந்த வீட்டுப் பெண்மணி என்னைப் பார்த்தவுடன், “அட! மிஸ்டர் லர்வா! விடுதலையாகிவிட்டீர்களா?!” எனச் சந்தோஷம் பொங்கச் சொன்னார்; பின்பு, “உங்களை மாதிரி நாலு பேர் இருந்தால் போரே நடந்திருக்காது என்று என் வீட்டுக்காரர் சொல்வார்” என்றார். அவர்களுக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருந்தது; சுற்றுலா சீஸன் ஆரம்பிக்கும்வரை நான் அங்கு தங்கலாம் என அவர்கள் சொன்னார்கள். அதே நாள் ஆர்த்தர் எம்யாட்டின் அண்ணன் ஈவென்ஸ் எம்யாட் எனக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்தார்.b அவர் துறைமுகத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்துவந்தார்; ராத்திரியில் கப்பலைக் காவல்காக்கிற வேலைக்காக ஆள் தேடிக் கொண்டிருந்தார். கப்பல் அதிகாரி ஒருவரிடம் அவர் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். சிறையிலிருந்து நான் வந்திருந்ததால் எலும்பும் தோலுமாக இருந்தேன். அதை ஈவென்ஸ் விளக்கியபோது, ஃபிரிட்ஜில் இருந்த பதார்த்தத்தை எடுத்துச் சாப்பிடும்படி அந்த அதிகாரி என்னிடம் சொன்னார். தங்குவதற்கு இடம், செய்வதற்கு வேலை, சாப்பிடுவதற்கு உணவு எனச் சகலமும் அந்த ஒரே நாளில் எனக்குக் கிடைத்துவிட்டது! மத்தேயு 6:25-33-ல் இயேசு சொன்ன வார்த்தைகளில் எனக்கு இருந்த நம்பிக்கை எந்தளவு அதிகரித்தது எனச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
சுற்றுலா சீஸன் ஆரம்பித்தபோது என் பயனியர் பார்ட்னரான சிமான் ஆபாலினார்ஸ்கியும் நானும் தங்குவதற்கு வேறொரு இடம் தேட வேண்டியிருந்தது; ஆனால், பயனியர் ஊழியத்தை விடக்கூடாதென்ற தீர்மானத்தோடு இருந்தோம். ஒருவழியாக, பழைய குதிரை-லாயம் ஒன்றில் எங்களுக்கு இடம் கிடைத்தது; அங்கு வைக்கோல் படுக்கையில் படுத்துத் தூங்கினோம். நாளெல்லாம் ஊழியம் செய்தோம். குதிரை-லாயத்தின் சொந்தக்காரரிடம்கூட சாட்சி கொடுத்தோம்; அவர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். அந்த ஊரில் இன்னும் சிலரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். கொஞ்ச நாளில், உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியானது; “உஷார்! யெகோவாவின் சாட்சிகள் தீவிரப் பிரச்சாரம்!” என்று அந்த ஊர் மக்களை அது எச்சரித்தது. இத்தனைக்கும், அங்கு விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் சாட்சிகள் இருந்தார்கள்! ஆம், சிமானும் நானும் இன்னும் சில பிரஸ்தாபிகளும்தான் இருந்தோம். பிரச்சினைகள் வந்தபோது எங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றி... யெகோவா எங்களை எப்படிக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டார் என்பதைப் பற்றி... நினைத்துப் பார்த்தோம்; இது உற்சாகம் தந்தது. 1952-ல் எனக்குப் புதிய நியமிப்புக் கிடைத்தது; அப்போது டன்கர்க்கில் ஒழுங்கான பயனியர்கள் கிட்டத்தட்ட 30 பேர் இருந்தார்கள்.
புதிய பொறுப்புகளைக் கையாள பலம் பெற்றேன்
ஆம்யான் நகரில் கொஞ்சக் காலம் ஊழியம் செய்த பிறகு, பாரிஸிலுள்ள பூலோன் பியான்கூர் என்ற புறநகர்ப் பகுதியில் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டேன். அங்கு நிறையப் பேருக்கு நான் பைபிள் படிப்பு நடத்தினேன்; அவர்களில் சிலர் பிற்பாடு முழுநேர ஊழியர்களாகவும் மிஷனரிகளாகவும் ஆனார்கள். கி மாபிலா என்ற இளைஞர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு பிற்பாடு வட்டாரக் கண்காணியாகவும் அதன்பின் மாவட்டக் கண்காணியாகவும் சேவை செய்தார். பின்பு, பெத்தேலில் அச்சகத்தை நிறுவும் பணியை மேற்பார்வை செய்தார். (தற்போது, பாரிஸிலிருந்து சற்று தொலைவிலுள்ள லூவ்யே என்ற இடத்தில் பெத்தேல் அமைந்திருக்கிறது.) நான் ஊழியத்தில் அடிக்கடி பைபிள் வசனங்களைப் பயன்படுத்தியதால் அவை என் மனதில் ஆழமாகப் பதிந்தன; அதோடு, என் மனதைச் சந்தோஷத்தால் நிரப்பின. அதனால் என்னுடைய கற்பிக்கும் திறமையும் வளர்ந்தது.
1953-ல், நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது; ஆல்சேஸ் லரேன் என்ற பகுதியில் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். இந்தப் பகுதி 1871-க்கும் 1945-க்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு முறை ஜெர்மானியர்களால் கைப்பற்றப்பட்டது. ஆகவே, ஜெர்மன் மொழியை நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நான் வட்டார ஊழியத்தை ஆரம்பித்த காலத்தில், கார், டிவி, டைப்ரைட்டர் போன்றவை எங்காவதுதான் கண்ணில் படும்; ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவோ பர்சனல் கம்ப்யூட்டரோ கிடையவே கிடையாது. அதற்காக நான் சோகத்தோடும் சஞ்சலத்தோடும் வாழவில்லை. சொல்லப்போனால், அந்தச் சமயத்தில்தான் நான் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தேன். பைபிள் சொல்கிறபடி ‘கண்ணை தெளிவாக’ வைத்துக் கவனச்சிதறல் இல்லாமல் யெகோவாவைச் சேவிப்பது இக்காலத்தைவிட அக்காலத்தில் சுலபமாக இருந்தது.—மத். 6:19-22.
1955-ல் “வெற்றிசிறக்கும் அரசாங்கம்” என்ற மாநாடு பாரிஸில் நடந்தது; அது இன்னும் என் நினைவில் நிற்கிறது. அங்குதான் என் வருங்கால மனைவி இரென் கோலான்ஸ்கியைச் சந்தித்தேன்; எனக்கு ஒரு வருடத்திற்குமுன் அவள் முழுநேர ஊழியத்தை ஆரம்பித்திருந்தாள். அவளுடைய பெற்றோர் போலாந்தைச் சேர்ந்தவர்கள், நீண்ட காலமாகப் பக்திவைராக்கியத்துடன் ஊழியம் செய்துவந்த சாட்சிகள். பிரான்சில் அடால்ஃப் வேபெர் என்பவர் அவர்களைச் சந்தித்திருந்தார். அவர் சகோதரர் ரஸலின் தோட்டக்காரராக வேலை செய்திருந்தார்; நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக ஐரோப்பாவுக்கு வந்திருந்தார். நானும் இரெனும் 1956-ல் திருமணம் செய்து கொண்டோம்; வட்டார ஊழியத்தில் அவள் என்னோடு சேர்ந்துகொண்டாள். இத்தனை வருடங்களாக அவள் எனக்கு எவ்வளவு ஒத்தாசையாக இருந்திருக்கிறாள்!
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இன்னொரு ஆச்சரியம் நடந்தது—மாவட்டக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். என்றாலும், தகுதிவாய்ந்த சகோதரர்கள் நிறையப் பேர் இல்லாததால் நான் வட்டாரக் கண்காணியாகவும் தொடர்ந்து சில சபைகளைச் சந்தித்தேன். அப்போதெல்லாம் மூச்சுவிடக்கூட நேரம் இருக்காது! மாதந்தோறும் 100 மணிநேரம் ஊழியம் செய்ததோடு, வாரந்தோறும் பேச்சுகள் கொடுக்க வேண்டியிருந்தது, மூன்று புத்தகப் படிப்புக் குழுக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது, சபை பதிவுகளைச் சரிபார்க்க வேண்டியிருந்தது, அறிக்கைகளைத் தயாரிக்க வேண்டியிருந்தது. இப்படி மலைபோல் வேலைகள் குவிந்திருக்க, கடவுளுடைய வார்த்தையை வாசிக்க எப்படிச் சமயம் கிடைத்தது, தெரியுமா? அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தேன்; ஒரு பழைய பைபிளிலிருந்து சில பக்கங்களைக் கிழித்து வைத்துக் கொண்டேன். யாராவது வரக் காத்திருக்கும் நேரங்களில் அவற்றைப் படித்தேன். இப்படிக் கொஞ்சக் கொஞ்ச நேரம் படித்ததால் புத்துணர்ச்சி கிடைத்தது; அது, என் நியமிப்பில் நிலைத்திருக்க வேண்டுமென்ற தீர்மானத்தைப் பலப்படுத்தியது.
பூலோன் பியான்கூரில் இருந்த பெத்தேலில் சேவை செய்ய 1967-ல் எனக்கும் இரெனுக்கும் அழைப்பு வந்தது. நான் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக ஊழிய இலாகாவில் சேவை செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். அந்த இலாகாவில், பைபிள் சம்பந்தமாகக் கேள்வி கேட்டு எழுதுவோருக்குப் பதிலளிப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்த வேலை. கடவுளுடைய வார்த்தையை ஆழமாக ஆராய்ச்சி செய்து, ‘நற்செய்திக்காக வழக்காடுவதில்’ எனக்கு அலாதி பிரியம்! (பிலி. 1:7) பெத்தேலில் காலை வழிபாட்டின்போது தினவசனத்தைக் கலந்தாலோசிப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். 1976-ல் பிரான்சு கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினராக நான் நியமிக்கப்பட்டேன்.
இதுவே சிறந்த வாழ்க்கை
இப்போது, வயதான காலத்தில் உடல்நலப் பிரச்சினைகளோடு நானும் என் மனைவியும் கஷ்டப்படுவதால் எங்களால் யெகோவாவுக்கு அதிகம் செய்ய முடிவதில்லை; நான் சந்தித்த சோதனைகளிலேயே இதுதான் பெரிய சோதனை. கடவுளுடைய வார்த்தையைச் சேர்ந்து படிப்பது எங்கள் நம்பிக்கையைக் கண்முன் வைத்திருக்க உதவுகிறது. எங்கள் சபை பிராந்தியத்திற்கு பஸ்ஸில் போய் இந்த நம்பிக்கையை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது மனதிற்கு இதமளிக்கிறது. இருவரும் சேர்ந்து 120 வருடங்களுக்கும் மேலாக முழுநேர ஊழியம் செய்திருக்கிறோம்; சந்தோஷமான வாழ்க்கை வாழ, பிரயோஜனமுள்ள வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு அனுபவப்பூர்வமாக நாங்கள் செய்யும் சிபாரிசு இதுதான்: முழுநேர ஊழியம் செய்யுங்கள்! சங்கீதம் 37:25-ஐ எழுதிய தாவீது ராஜாவைப் போலவே நானும் ‘இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதைக் காணவில்லை.’
யெகோவா தமது வார்த்தையால் என்னை வாழ்நாளெல்லாம் பலப்படுத்தியிருக்கிறார். பைபிளை “வாசிக்க ஆரம்பிச்சிட்டீன்னா அவ்வளவுதான், தெனமும் வாசிச்சிட்டே இருக்கணும்” என்று சுமார் 60 வருடங்களுக்கு முன்பாக என் சொந்தபந்தங்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னது சரிதான். அது உண்மையிலேயே என் வாழ்நாள் பழக்கமாகிவிட்டது; அதற்காக நான் ஒருநாளும் வருத்தப்பட்டதில்லை!
[அடிக்குறிப்புகள்]
a 1944-ல் பிரசுரிக்கப்பட்டது, இப்போது அச்சடிக்கப்படுவதில்லை.
b ஈவென்ஸ் எம்யாட் என்பவரைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள, ஜனவரி 1, 1999 காவற்கோபுர இதழில், பக்கங்கள் 22, 23-ஐப் பாருங்கள்.
[பக்கம் 5-ன் படம்]
சிமானும் நானும்
[பக்கம் 5-ன் படம்]
மாவட்டக் கண்காணியாகச் சேவை செய்தபோது
[பக்கம் 5-ன் படம்]
எனக்கு முதன்முதலில் கிடைத்ததைப் போன்ற பைபிள்
[பக்கம் 6-ன் படம்]
எங்கள் திருமண நாளில்
[பக்கம் 6-ன் படம்]
இரெனும் நானும் பைபிளைப் படிப்பதில் சந்தோஷம் காண்கிறோம்