வாழ்க்கை சரிதை
மனப்பூர்வ தியாக வாழ்க்கையில் திருப்தியும் மகிழ்ச்சியும்
மரியானும் ரோஸா ஷுமிகாவும் சொன்னபடி
“உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்” என்று சங்கீதம் 54:6 சொல்கிறது. பிரான்சை சேர்ந்த மரியான் ஷுமிகா மற்றும் ரோஸா ஷுமிகா தம்பதியினர் இந்த வசனத்தின் அடிப்படையிலேயே தங்கள் வாழ்க்கையை அமைத்திருக்கிறார்கள். யெகோவாவின் சேவையில் அவர்கள் நீண்ட காலமாக திருப்தியுடன் அனுபவித்த சில உற்சாகமூட்டும் விஷயங்களை சமீபத்தில் சொன்னார்கள். அவற்றை நாம் இப்போது கேட்கலாம்.
மரியான்: என்னுடைய பெற்றோர் ரோமன் கத்தோலிக்கர்கள், போலந்திலிருந்து குடிபெயர்ந்து வந்திருந்தார்கள். என்னுடைய அப்பா ரொம்ப எளிமையானவர். அவருக்கு பள்ளிக்கூடம் போக வாய்ப்பே கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் முதல் உலக யுத்தத்தின்போது, போர் வீரனாக பதுங்கு குழிகளில் இருந்த சமயத்தில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். அப்பா கடவுள் பயமுள்ளவர். ஆனால் சர்ச்சின் நடவடிக்கைகளோ அவருக்கு பெரும்பாலும் ஏமாற்றத்தையே அளித்தன.
ஒரு குறிப்பிட்ட சம்பவம் அவருடைய மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தது. போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஒரு நாள் அப்பா இருந்த இடத்திற்கு மதகுரு ஒருவர் வந்தார். அப்போது திடீரென ஒரு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது, பீதியடைந்த மதகுரு ஒரே ஓட்டமாக ஓடி தன் குதிரை மீது ஏறினார். ஏறியதும், இயேசுவின் உருவமுள்ள ஒரு சிலுவையை வைத்து குதிரையை ஓங்கி அடித்தார், அது வேகமாக ஓடுவதற்காக. கடவுளின் “பிரதிநிதியாக” இருப்பவர் “புனிதமான” ஒரு பொருளை வைத்து குதிரையை அடித்ததை பார்த்த அப்பாவுக்கு சொல்ல முடியாத அதிர்ச்சி. இப்படிப்பட்ட சம்பவங்களையும் போரின் கொடூரங்களையும் பார்த்த பிறகும்கூட அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை குறையவே இல்லை. போர் முடிந்து ஒவ்வொரு முறையும் தான் பத்திரமாக வீடு திரும்புவதற்கு கடவுளே காரணமென்று அடிக்கடி சொல்லுவார்.
“சின்ன போலந்து”
1911-ல் பக்கத்து கிராமத்திலிருந்த அன்னா ஸிஸாவ்ஸ்கீ என்ற ஒரு பெண்ணை அப்பா திருமணம் செய்து கொண்டார். போர் முடிந்த கொஞ்ச நாட்களில், அதாவது 1919-ல் அவர்கள் இருவரும் போலந்தை விட்டு பிரான்சில் குடியேறினார்கள். அங்கே அப்பாவிற்கு நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை கிடைத்தது. தென்-மேற்கு பிரான்சில் இருக்கும் கன்யாக்லிமின்னா என்ற நகரில் 1926-ல் மார்ச் மாதத்தில் நான் பிறந்தேன். அதன் பிறகு என் பெற்றோர் லூஸ் அங்கோயெல்லாவில் உள்ள போலந்து மக்கள் வாழும் இடத்தில் குடியேறினார்கள். இந்த இடம் வட பிரான்சிலுள்ள லாங்ஸுக்கு பக்கத்தில் இருக்கிறது. ரொட்டி சுடுபவர், கறி வெட்டுபவர், சர்ச் பாதிரி என அங்கிருந்த எல்லாருமே போலந்து நாட்டவராக இருந்தார்கள். எனவே அந்த இடத்திற்கு சின்ன போலந்து என்ற பெயர் வந்ததில் ஆச்சரியமேயில்லை. என்னுடைய பெற்றோர் சமூக நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார்கள். அப்பா எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டே இருப்பார். அந்த நிகழ்ச்சிகளில் நாடகம், இசை, பாட்டு ஆகியவை இடம்பெறும். இதுபோக, சர்ச் பாதிரியிடம் அப்பா நிறைய விஷயங்களைப் பற்றி அடிக்கடி கேட்பார். அப்படி கேட்கும் போதெல்லாம் “நம்மால் புரிந்துகொள்ள முடியாத நிறைய புதிர்கள் இருக்கின்றன” என்று பாதிரி சொல்லுவார். அந்தப் பதில் அப்பாவுக்கு திருப்தியாகவே இருக்காது.
1930-ல், ஒரு நாள் இரண்டு பெண்கள் எங்கள் வீட்டுக் கதவை தட்டினார்கள். பைபிள் மாணாக்கர்கள் என்று அப்போது அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளே அவர்கள். அப்பா அவர்களிடமிருந்து ஒரு பைபிளை பெற்றுக்கொண்டார், அவருக்கு அதைப் படிக்க வேண்டுமென்று ரொம்ப நாளாகவே ஆசையிருந்தது. அந்தப் பெண்கள் கொடுத்த பைபிள் பிரசுரங்களை அப்பாவோடு சேர்ந்து அம்மாவும் ஆர்வமாக படித்தார். இந்தப் பிரசுரங்களிலிருந்த விஷயங்கள் அம்மா அப்பா இருவரையுமே கவர்ந்தன. ரொம்ப பிஸியானவர்களாக இருந்த போதிலும், அம்மா அப்பா இருவரும் பைபிள் மாணாக்கருடைய கூட்டங்களுக்கு போக ஆரம்பித்தார்கள். நாட்கள் செல்லச் செல்ல அப்பாவுக்கும் பாதிரிக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் வாக்குவாதங்களாக மாறின. என்னுடைய பெற்றோர் அந்த பைபிள் மாணாக்கர்களோடு தொடர்ந்து படித்தால் என் அக்கா ஸ்டிஃபனியை வேதபாட வகுப்புகளிலிருந்து நீக்கி விடப்போவதாக அந்தப் பாதிரி ஒரு நாள் மிரட்டினார். அதற்கு அப்பா, “உங்களுக்கு ஏன் அந்தத் தொந்தரவு. இன்றிலிருந்து என் மகளையும் மற்ற பிள்ளைகளையும் பைபிள் மாணாக்கர்களுடைய கூட்டங்களுக்கே கூட்டிக்கொண்டு போய்விடுகிறோம்” என்று பதிலளித்தார். பிறகு சர்ச்சை விட்டு அப்பா வெளியேறினார். 1932-ன் முதல் சில மாதங்களுக்குள் அப்பாவும் அம்மாவும் முழுக்காட்டுதல் பெற்றார்கள். அந்தச் சமயத்தில் பிரான்சில் சுமார் 800 ராஜ்ய பிரஸ்தாபிகள் மட்டுமே இருந்தார்கள்.
ரோஸா: என்னுடைய பெற்றோர் ஹங்கேரியிலிருந்து வந்தவர்கள். மரியான் குடும்பத்தை போல அவர்களும் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்வதற்காக வட பிரான்சில் குடியேறினார்கள். 1925-ல் நான் பிறந்தேன். 1937-ல் ஒகெஸ்டே பூஷா என்ற ஒரு யெகோவாவின் சாட்சி அப்பா அம்மாவுக்கு ஹங்கேரி மொழியில் காவற்கோபுர பத்திரிகைகளைத் தர ஆரம்பித்தார். அவரை நாங்கள் பப்பா ஒகெஸ்டே என்றுதான் கூப்பிடுவோம். அவர் கொடுத்து வந்த பத்திரிகைகளை என் பெற்றோர் ஆர்வமாக படித்தார்களே தவிர யெகோவாவின் சாட்சியாக ஆகவில்லை.
நான் சிறுமியாக இருந்தபோதிலும், காவற்கோபுரத்தில் வாசித்த விஷயங்கள் என் மனதை ஆழமாக தொட்டன. பப்பா ஒகெஸ்டேயின் மருமகளாகிய ஸுஸானா பூஷா, என் மீது தனி அக்கறையைக் காண்பித்தாள். அவளுடன் கூட்டங்களுக்குப் போக அப்பா அம்மா அனுமதி கொடுத்தார்கள். பிறகு எனக்கு வேலை கிடைத்தபோது நான் ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுக்குப் போவது அப்பாவுக்கு பிடிக்கவில்லை. பொதுவாக அவர் நல்ல சுபாவம் உள்ளவர்தான், ஆனாலும் “வார நாட்கள்ல நீ வேலைக்குப் போயிடுற, ஞாயிற்றுக்கிழமையில கூட்டங்களுக்குப் போயிடுற, எப்போதான் வீட்டுல இருக்குற!” என்று முணுமுணுப்பார். அவர் அப்படி சொல்லியும் கூட்டங்களுக்குப் போவதை நான் நிறுத்தவேயில்லை. அதனால் அப்பா என்னைப் பார்த்து “உன் மூட்டை முடிச்செல்லாம் எடுத்துட்டு வெளியே போயிடு!” என்று ஒரு நாள் கத்தினார். வெளியே இருட்ட ஆரம்பித்திருந்தது. 17 வயதே ஆகியிருந்த எனக்கு எங்கு போவதென்றே தெரியவில்லை. அழுதுகொண்டு ஸுஸானாவின் வீட்டில் போய் நின்றேன். அங்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் தங்கினேன். அதற்குப் பிறகு அப்பா அக்காவிடம் தூது அனுப்பி என்னை திரும்ப வீட்டிற்கு வர சொன்னார். நான் ரொம்ப கூச்ச சுபாவமுள்ளவள். ஆனால், “பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்” என்ற 1 யோவான் 4:18-லுள்ள வார்த்தைகள்தான் உறுதியோடிருக்க எனக்கு உதவின. 1942-ல் நான் முழுக்காட்டுதல் பெற்றேன்.
மதிப்புமிக்க ஆவிக்குரிய சொத்து
மரியான்: 1942-ல் நான் முழுக்காட்டுதல் பெற்றேன். என்னுடன் சேர்ந்து என் இரண்டு அக்காமார்கள், ஸ்டிஃபனி மற்றும் மிலானியும் என் அண்ணன் ஸ்டிஃபானும் முழுக்காட்டுதல் பெற்றார்கள். எங்கள் குடும்பத்தில் எல்லா காரியங்களையும் கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாக வைத்துதான் செய்தோம். நாங்கள் எல்லோரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்த பிறகு அப்பா போலிஷ் மொழியில் பைபிளை வாசிப்பார். பெரும்பாலும் மாலை வேளைகளில் அப்பா அம்மா தங்களுடைய ஊழிய அனுபவங்களை சொல்லச் சொல்ல, அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்போம். ஆன்மீக ரீதியில் உற்சாகமூட்டிய அப்படிப்பட்ட சமயங்கள் யெகோவாவை நேசிப்பதற்கும் அவரை இன்னுமதிகமாக நம்புவதற்கும் எங்களுக்கு கற்றுக்கொடுத்தன. மோசமான உடல்நிலை காரணமாக அப்பா வேலையை விட வேண்டி வந்தது. அப்போதும்கூட எங்களுடைய ஆன்மீக தேவைகளையும் சரீர தேவைகளையும் அவர் பூர்த்தி செய்தார்.
அப்போது அப்பாவுக்கு நிறைய நேரம் இருந்ததால் சபை இளைஞர்களுக்கு வாரம் ஒருமுறை போலிஷ் மொழியில் பைபிள் படிப்பை நடத்தினார். அச்சமயத்தில்தான் போலிஷ் மொழியை வாசிக்க நான் கற்றுக்கொண்டேன். மற்ற வழிகளிலும்கூட அப்பா இளைஞர்களை உற்சாகப்படுத்தினார். பிரான்சில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை கண்காணித்து வந்த கிஸ்டாவ் ஸொப்ஃபெர் என்ற சகோதரர் ஒருமுறை எங்களுடைய சபைக்கு விஜயம் செய்தபோது, பாடகர் குழு ஒன்றிற்கும் பெல்ஷாத்சார் ராஜாவின் விருந்து மற்றும் சுவரின் மீது தோன்றிய கையெழுத்து பற்றிய ஒரு பைபிள் நாடகத்திற்கும் அப்பா ஏற்பாடு செய்தார். (தானியேல் 5:1-31) தானியேலின் வேடத்தில் லூயி பிஷூத்தா என்ற சகோதரர் நடித்தார். அந்தச் சகோதரர் பிற்பாடு நாசிகளின் தாக்குதலின்போது உறுதியாக நின்றார்.a இப்படிப்பட்ட சூழலில்தான் பிள்ளைகளான நாங்கள் வளர்ந்தோம். எங்களுடைய பெற்றோர் எப்போதும் ஆவிக்குரிய காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டதை பார்த்தோம். எங்களுக்காக எங்கள் பெற்றோர் எப்பேர்ப்பட்ட மதிப்புமிக்க ஆஸ்தியை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை இன்றைக்கும் என்னால் உணர முடிகிறது.
1939-ல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தபோது பிரான்சில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை தடை செய்யப்பட்டது. ஒரு சமயம் எங்கள் கிராமம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஜெர்மன் படைவீரர்கள் எல்லாருடைய வீடுகளையும் சுற்றி வளைத்தார்கள். துணி அலமாரியின் கீழ் அப்பா ஏற்கெனவே ஒரு ‘ஸெட்டப்’ தரையை செய்து வைத்திருந்தார். அதற்கடியில் நாங்கள் பலதரப்பட்ட பைபிள் பிரசுரங்களை ஒளித்து வைத்திருந்தோம். அப்படியும் பாஸிஸம் அல்லது விடுதலை (ஆங்கிலம்) என்ற தலைப்பிடப்பட்ட நிறைய புக்லெட்டுகள் டைனிங் டேபிளிலுள்ள டிராயரில் இருந்தன. அப்பா சட்டென்று அந்தப் புத்தகங்களையெல்லாம் எடுத்து வெளியே கயிறில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கோட் பாக்கெட்டிற்குள் போட்டார். இரண்டு படைவீரர்களும் ஒரு பிரெஞ்சு காவல்துறை அதிகாரியும் எங்கள் வீட்டை சோதனையிட வந்தார்கள். எங்கள் மனம் திக் திக்கென்றது. அந்தப் படைவீரர்களில் ஒருவன் வெளியே கயிறிலிருந்த துணிகளில் தேட ஆரம்பித்தான். பிறகு நாங்கள் நின்று கொண்டிருந்த சமையலறைக்குள் அந்தப் புக்லெட்டுகளோடு வந்தான். எங்களை அப்படியே முறைத்தபடி அவற்றை டேபிள் மேல் வைத்துவிட்டு மறுபடியும் மற்ற இடங்களில் தேட ஆரம்பித்தான். டேபிள் மேல் வைத்துவிட்டுப் போன அந்தப் புக்லெட்டுகளை மடமடவென்று எடுத்து அவர்கள் ஏற்கெனவே தேடி முடித்திருந்த டிராயருக்குள் போட்டேன். அதற்குப் பிறகு அந்தப் படைவீரன் அவற்றைப் பற்றி கேட்கவேயில்லை—சுத்தமாக அதை மறந்து விட்டான் போலத் தோன்றியது!
முழுநேர சேவைக்குள் அடியெடுத்து வைத்தல்
1948-ல் யெகோவாவுக்கு முழுநேர பயனியர் ஊழியம் செய்வதற்காக என்னை அர்ப்பணிக்க தீர்மானித்தேன். சில நாட்களுக்குப் பிறகு பிரான்சிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் பெல்ஜியத்திலுள்ள ஸுதாங் சபையில் என்னை ஒரு பயனியராய் நியமித்திருப்பதாக எழுதியிருந்தார்கள். இந்த வழியில் யெகோவாவை சேவிக்கும் வாய்ப்பை நான் ஏற்றுக்கொண்டதைப் பார்த்த என் பெற்றோர் சந்தோஷப்பட்டார்கள். இருந்தபோதிலும் பயனியர் சேவை சுலபமானதல்ல, அதற்காக கடினமாய் உழைக்க வேண்டியிருக்கும் என்று அப்பா என்னிடம் குறிப்பிட்டார். ஆனால் நான் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாமென்றும், என்ன பிரச்சினை வந்தாலும் உதவிக்காக அவரிடம் கேட்கலாமென்றும் சொன்னார். அப்பா அம்மாவிடம் கையில் அவ்வளவாக காசு இல்லாத போதிலும் எனக்காக ஒரு புது சைக்கிளை வாங்கித் தந்தார்கள். இன்னும்கூட அந்த சைக்கிளின் ரசீதை வைத்திருக்கிறேன். அதைப் பார்க்கும் போதெல்லாம் கண் கலங்கும். அப்பாவும் அம்மாவும் 1961-ல் காலமானார்கள். ஆனால் அப்பாவுடைய ஞானமுள்ள வார்த்தைகள் இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. நான் ஊழியம் செய்துவந்த அத்தனை வருடங்களாக அவர்கள் எனக்கு எப்போதும் ஊக்கத்தையும் நம்பிக்கையையுமே அளித்து வந்திருந்தார்கள்.
எனக்கு உற்சாகமூட்டிய இன்னொரு நபர், ஸுதாங் சபையிலிருந்த 75 வயது எலிஸ் மட் என்ற சகோதரி. கோடை காலத்தில் நாங்கள் இருவரும் தொலைதூர கிராமங்களுக்குச் சென்று பிரசங்கிப்போம். நான் என்னுடைய சைக்கிளில் செல்வேன். எலிஸ் டிரெயினில் வந்து என்னுடன் சேர்ந்து கொள்வார்கள். இப்படியிருக்க, ஒருநாள் டிரெயின் என்ஜினியர்கள் எல்லாரும் ஸ்ட்ரைக் செய்தார்கள். அதனால் எலிஸ் சகோதரியால் வீடு திரும்ப முடியவில்லை. என்னுடைய சைக்கிளில் அவர்களை உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு போவதைத் தவிர எனக்கு வேறு வழியே தெரியவில்லை, அது அவர்களுக்கு அசௌகரியமான பிரயாணமாக இருந்தது என்பதை சொல்ல வேண்டுமா என்ன? அதனால் அடுத்த நாளிலிருந்து ஒரு குஷனை கையோடு எடுத்து சென்றேன், பிறகு அவருடைய வீட்டிற்கு போய் அவரை கூட்டிக்கொண்டு போனேன். எலிஸ் சகோதரியின் டிரெயின் காசு மிச்சமானதால் அந்தக் காசை வைத்து இருவரும் மதிய வேளையில் சூடாக ஏதாவது வாங்கி குடித்தோம். என்னுடைய சைக்கிள் பொது வாகனமாக பயன்படுமென்று நான் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை.
கூடுதல் பொறுப்புகள்
1950-ல் வட பிரான்சு முழுவதற்கும் என்னை வட்டார கண்காணியாக நியமித்தார்கள். அப்போது எனக்கு வெறும் 23 வயதாயிருந்ததால் அதைக் கேட்டவுடன் குப்பென்று பயம் கவ்விக் கொண்டது. கிளை அலுவலகம் என்னை நியமிப்பதில் தவறு செய்துவிட்டார்களோ என்று நினைத்தேன்! பல கேள்விகள் என் மனதை உலுக்கியெடுத்தன: ‘இந்த வேலையை செய்வதற்கு ஆவிக்குரிய ரீதியிலும் உடல் ரீதியிலும் நான் தகுதி உள்ளவனா? ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான வீடுகளில் தங்க வேண்டிய சவாலை எப்படி சமாளிக்க போகிறேன்?’ இதெல்லாம் போக 6 வயதிலிருந்து டைவர்ஜன்ட் ஸ்ட்ரபிஸ்மஸ் என்ற மாறுகண் பிரச்சினையால் வேறு கஷ்டப்பட்டு வருகிறேன். இந்தக் கோளாறினால் என்னுடைய ஒரு கண் வெளிப் பக்கம் பார்த்தவாறு இருக்கும். மற்றவர்கள் என் கண்ணைப் பார்த்து என்ன நினைப்பார்களோ என்று எப்போதுமே கவலைப்படுவேன். அந்தச் சமயத்தில் கிலியட் பள்ளியின் பட்டதாரியான ஸ்டிஃபன் பியூனிக் என்பவர் எனக்கு ரொம்ப உதவி செய்தார். அவருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பிரசங்க வேலையில் ஈடுபட்டதால் அந்தச் சகோதரரை போலந்து நாட்டை விட்டே துரத்திவிட்டார்கள். அதனால் அவருக்கு பிரான்சில் ஊழியம் செய்ய நியமிப்பு கிடைத்தது. அவருடைய தைரியத்தைப் பார்த்து அசந்து போனேன். யெகோவாவின் மீதும் சத்தியத்தின் மீதும் அவருக்கு ஆழ்ந்த மரியாதை இருந்தது. அவர் என்னிடம் கண்டிப்புடன் நடந்துகொண்டதாக சிலர் நினைத்தார்கள். ஆனால் அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அவருடைய தைரியம் எனக்கு நம்பிக்கை ஊட்டியது.
வட்டார சந்திப்புகளின்போது சில சுவாரஸ்யமான வெளி ஊழிய அனுபவங்கள் எனக்கு கிடைத்தன. 1953-ல் பௌலி என்ற நபரை சந்திக்கும்படி என்னிடம் சொன்னார்கள். தென் பாரிஸில் வசித்து வந்த அவர் காவற்கோபுர பத்திரிகையின் சந்தாதாரராய் இருந்தார். அவர் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர் என்பதையும் காவற்கோபுர பத்திரிகைகளை விரும்பி படிக்கிறார் என்பதையும் அவரை சந்தித்தபோது தெரிந்து கொண்டேன். கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருவது பற்றி அந்தப் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையை படித்த பிறகு நினைவு ஆசரிப்பு தினத்தை அவராகவே ஆசரித்ததாகவும் அதன் பின் சங்கீதம் புத்தகத்தை வாசித்துக்கொண்டே அந்த மாலைப்பொழுதைக் கழித்ததாகவும் சொன்னார். ஏறக்குறைய மதியவேளை முடியும்வரை பேசிக்கொண்டே இருந்தோம். அங்கிருந்து கிளம்புவதற்கு முன் முழுக்காட்டுதல் பற்றியும்கூட பேசினோம். பிறகு 1954-ன் தொடக்கத்தில் நடைபெறவிருந்த வட்டார மாநாட்டிற்கு அவரை அழைத்தேன். அவரும் வந்தார். வந்தது மட்டுமல்ல, அங்கு முழுக்காட்டுதல் பெற்ற 26 பேரில், சகோதரர் பௌலியும் ஒருவராக இருந்தார். இதுபோன்ற அனுபவங்கள் இன்றுவரை என்னை சந்தோஷத்தில் மிதக்க வைக்கின்றன.
ரோஸா: 1948-வது வருஷம் அக்டோபர் மாதத்தில் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன். பெல்ஜியத்திற்கு பக்கத்திலுள்ள அனோரில் சேவை செய்த பிறகு பாரிஸுக்கு என்னை அனுப்பினார்கள். என்னுடன் இரென்ன கொலோஸ்கி என்ற இன்னொரு பயனியரும் வந்தார். (இப்போது அவருடைய பெயர் இரென்ன லொர்வா) நாங்கள் இருவரும் நகரின் மத்திப பகுதியில், அதாவது ச ஜெர்மா திப்ரே என்னும் இடத்தில் ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தோம். நான் கிராமவாசியாக இருந்ததால் இந்த பாரிஸ் நகர மக்களைப் பார்த்து திகைத்துப் போனேன். அவர்கள் எல்லாருமே நவ நாகரீக பண்பாடு உடையவர்களென்றும் அதிபுத்திசாலிகளென்றும் நினைத்தேன். ஆனால் அவர்களிடம் பிரசங்கித்த பிறகுதான் தெரிந்தது அவர்களும் மற்றவர்கள் போல சாதாரணமானவர்கள் என்று. பெரும்பாலான வீடுகளில் எங்களை வாட்ச்மேன்கள் துரத்திவிட்டதால் பைபிள் படிப்பை தொடங்குவதே கடினமாக இருந்தது. அப்படியும் சிலர் எங்களுடைய செய்தியை ஏற்றுக்கொண்டார்கள்.
1951-ல் நடந்த வட்டார மாநாட்டின்போது என்னையும் ஐரினையும் பேட்டி கண்டார்கள், அப்போது எங்களுடைய பயனியர் ஊழியத்தைப் பற்றி கேள்வி கேட்டார்கள். எங்களை பேட்டி எடுத்தது யார் தெரியுமா? மரியான் ஷுமிகா என்ற ஓர் இளம் வட்டார கண்காணி. இதற்கு முன்னால் ஒரேவொரு முறைதான் நாங்கள் இருவரும் சந்தித்திருந்தோம். ஆனால் மாநாட்டிற்குப் பிறகு ஒருவருக்கொருவர் கடிதம் எழுத ஆரம்பித்தோம். நானும் மாரியனும் நிறைய விஷயங்களில் ஒத்துப்போயிருந்தோம். நாங்கள் இருவரும் ஒரே வருடத்தில் முழுக்காட்டுதல் பெற்றிருந்தோம், ஒரே வருடத்தில் பயனியராகியிருந்தோம். இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, முழுநேர ஊழியத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்ற ஆசை எங்கள் இருவருக்குமே இருந்தது. அதனால் ஜெப சிந்தையோடு நாங்கள் இருவரும் ஜூலை 31, 1956-ல் திருமணம் செய்துகொண்டோம். மணமானதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான ஒரு வாழ்க்கை எனக்கு தொடங்கியது. மனைவியாக இருப்பதற்கு கற்றுக்கொள்வதோடு வட்டார ஊழியத்தில் மரியானுக்கு துணையாக இருக்கவும் என்னையே நான் தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அப்படி அவருடன் செல்லும்போது ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான வீடுகளில் தங்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் இது சவாலாக இருந்தாலும் மாபெரும் சந்தோஷங்கள் காத்திருந்தன.
ஆசீர்வாதமான வாழ்க்கை
மரியான்: இத்தனை வருடங்களில், மாநாட்டு ஏற்பாடுகளில் உதவி செய்யும் அரிய வாய்ப்பு எங்களுக்கு பல முறை கிடைத்தது. முக்கியமாக பார்தோவில் நடந்த மாநாட்டை பற்றிய இனிய நினைவுகள் இன்றும் என் மனத்திரைக்கு வருகின்றன. அந்தச் சமயத்தில் போர்ச்சுகலில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை தடை செய்யப்பட்டிருந்தது. எனவே பிரான்சுக்கு வந்த போர்ச்சுகல் மக்களுக்காக அந்த மாநாட்டில் பேச்சுகளெல்லாம் போர்ச்சுகீஸ் மொழியிலேயே கொடுக்கப்பட்டன. போர்ச்சுகலிலிருந்து நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் வந்திருந்தார்கள். ஆனால் அவர்களையெல்லாம் எங்கு தங்க வைப்பதென்று புரியாமல் இருந்தது. மாநாட்டிற்கு வந்தவர்களை தங்க வைக்க பார்தோவிலுள்ள சாட்சிகளுடைய வீடுகளில் போதுமான அறைகள் இல்லாததால் ஒரு காலி சினிமா தியேட்டரை வாடகைக்கு எடுத்தோம். அதை டார்மெட்ரியாக பயன்படுத்தினோம். அங்கிருந்த எல்லா சேர்களையும் நீக்கிவிட்டு, மேடையிலிருந்த கர்ட்டனை எடுத்து தியேட்டருக்கு நடுவில் மாட்டி, தியேட்டரை இரண்டாக பிரித்தோம். ஒரு பக்கத்தை சகோதரர்களுக்கும் இன்னொரு பக்கத்தை சகோதரிகளுக்கும் கொடுத்தோம். இதுபோக, குளிப்பதற்கு ஷவர்களையும் கை கழுவுவதற்கு வாஷ் பேஸின்களையும் அமைத்தோம். மேலும் தரையில் வைக்கோலைப் பரப்பி கான்வாஸ் துணியால் மூடினோம். எல்லோருக்குமே இந்த ஏற்பாடு ரொம்ப பிடித்திருந்தது.
மாநாடு முடிந்த பிறகு டார்மெட்ரியிலிருந்த சகோதர சகோதரிகளை சந்தித்தோம். அங்கு அருமையான சூழல் இருந்தது. பல வருட எதிர்ப்பின் மத்தியிலும் அவர்களுக்கு கிடைத்த சந்தோஷமான அனுபவங்களையெல்லாம் கேட்டபோது எவ்வளவு உற்சாகமாக இருந்தது! மாநாடு முடிந்து பிரிந்து சென்றபோது எங்கள் எல்லாருடைய கண்களும் குளமாயின.
அதற்கு இரண்டு வருடம் முன்பு, அதாவது 1964-ல் என்னை மாவட்ட கண்காணியாக நியமித்தார்கள். அது எனக்கு கிடைத்த மற்றொரு சிலாக்கியம். இந்த வேலையை என்னால் செய்ய முடியுமா என்று மறுபடியும் பயந்தேன். நியமனம் செய்கிற பொறுப்பிலுள்ள சகோதரர்கள் எனக்கு இந்தப் பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள் என்றால், என்னால் செய்ய முடியும் என்பதை தெரிந்துதான் அதை கொடுத்திருக்கிறார்கள் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். மற்ற பயணக் கண்காணிகளுடன் நெருங்கி சேவிப்பது ஓர் இனிய அனுபவம். அவர்களிடமிருந்து நிறையவே கற்றுக்கொண்டேன். யெகோவாவின் கண்களில் மதிப்புவாய்ந்த குணங்களான பொறுமைக்கும் விடாமுயற்சிக்கும் உயிருள்ள எடுத்துக்காட்டாக அவர்கள் இருந்தார்கள். பொறுமையாயிருக்க கற்றுக்கொண்டால் நாம் எங்கிருந்தாலும் யெகோவா நம்மை பயன்படுத்திக்கொள்வார் என்பதை புரிந்துகொண்டேன்.
பாரிஸின் புறநகர் பகுதியிலுள்ள புலொனிய பியன்கூர் என்ற இடத்தில் பாலிஷ் மொழி பேசும் ஒரு சிறிய தொகுதியை—12 பிரஸ்தாபிகள் அடங்கிய சிறிய தொகுதியை—கண்காணிக்கும் பொறுப்பை கிளை அலுவலகம் எங்களுக்கு 1982-ல் கொடுத்தது. அதைக் கேட்டவுடன் ஆச்சரியமாயிருந்தது. ஏனென்றால் போலிஷ் மொழியில் எனக்கு தேவராஜ்ய வார்த்தைகள் மட்டும்தான் தெரிந்திருந்தது, வாக்கியங்களை அமைத்து பேச திக்கித்திணற வேண்டியிருந்தது. அப்படியிருந்தும் அந்தச் சகோதரர்கள் காட்டின அன்பும் மனப்பூர்வ ஒத்துழைப்பும் எனக்கு ரொம்பவே உதவியாயிருந்தன. இன்றைக்கு அந்தச் சபையில் 170 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள், அதில் 60 பேர் பயனியர்கள். அதற்குப் பிறகு போலிஷ் தொகுதிகளுக்கும், ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய இடங்களிலுள்ள சபைகளுக்கும் ரோஸாவும் நானும் விஜயம் செய்தோம்.
சூழ்நிலைகளில் மாற்றங்கள்
வித்தியாச வித்தியாசமான சபைகளை போய் சந்திப்பதே எங்களுடைய வாழ்க்கையாக ஆகிவிட்டிருந்தது. ஆனால், எங்கள் உடல்நிலை காரணமாக 2001-ல் பயண ஊழியத்தை நிறுத்த வேண்டியிருந்தது. என் தங்கை ரூட் வசிக்கும் பிதிவியே நகரத்தில், ஓர் அப்பார்ட்மென்டில் குடிபுகுந்தோம். கிளை அலுவலகம் கருணையோடு எங்கள் நிலைமையை புரிந்துகொண்டு, முடிந்தளவு மட்டுமே ஊழியத்தில் நேரம் செலவிடும்படி சொல்லி எங்களை விசேஷித்த பயனியர்களாக நியமித்தது.
ரோஸா: வட்டார வேலையை நிறுத்திய அந்த முதல் வருஷம் மனதிற்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றத்தின் காரணமாக நான் லாயக்கற்றவள் போல் உணர்ந்தேன். அந்தச் சமயத்தில், ‘நீ இன்னும் உன்னுடைய நேரத்தையும் சக்தியையும் பயனியர் சேவையில் திறம்பட பயன்படுத்தலாமே’ என்று எனக்கு நானே ஞாபகப்படுத்திக் கொண்டேன். இன்று சபையிலுள்ள மற்ற பயனியர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக சேவை செய்து வருகிறேன்.
யெகோவாவின் அரவணைப்பு எப்போதுமே எங்களுக்கு இருந்திருக்கிறது
மரியான்: கடந்த 48 வருடங்களாக ரோஸா என்னுடைய வாழ்க்கை துணையாய் இருந்ததற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லுகிறேன். நான் பயணக் கண்காணியாக சேவை செய்த வருஷங்களின்போது அவள் எனக்கு உற்ற துணையாக இருந்தாள். அந்த வருடங்களில் ‘இப்படி ஊர் ஊராக போறதை நிறுத்திட்டு நமக்குன்னு ஒரு சொந்த வீட்டில் குடியிருக்கனும்னு ஆசைப்படறேன்’ என்று ஒரு முறைகூட அவள் என்னிடம் சொன்னதில்லை.
ரோஸா: “நீங்க வாழ்றது நார்மலான வாழ்க்கை கிடையாது. எப்போது பார்த்தாலும் மற்றவங்களோடுதான் வாழ்றீங்க” என்று சிலர் சில சமயம் சொல்வார்கள். அப்படியானால் “நார்மலான வாழ்க்கை” என்றால் என்ன? ஆவிக்குரிய காரியங்களுக்கு தடையாக உள்ள ஏராளமான காரியங்களை பெரும்பாலும் நாமே நம்மைச் சுற்றி இழுத்துப் போட்டுக்கொள்கிறோம். பார்க்கப்போனால், நமக்கு தேவையானதெல்லாம் சௌகரியமான ஒரு படுக்கை, டேபிள், அதோடு சில அடிப்படை சாமான்கள் அவ்வளவுதான். பயனியர்களாக எங்களிடம் இருந்த பொருள்வளம் மிகக் குறைவு என்றாலும் யெகோவாவின் சித்தத்தை செய்வதற்கு தேவையான எல்லாமே எங்களிடம் இருந்தது. “வயசான பிறகு உங்களுக்காக ஒரு சொந்த வீடு இல்லாமல் ஒரு பென்ஷனும் இல்லாமல் என்ன செய்வீர்கள்” என்று சில சமயங்களில் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அப்படி கேட்கும்போது, ‘யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது’ என்ற சங்கீதம் 34:10-லுள்ள வார்த்தைகளை மேற்கோள் காட்டுவேன். யெகோவாவின் அரவணைப்பு எப்போதுமே எங்களுக்கு இருந்திருக்கிறது.
மரியான்: ஆமாம், அது நூற்றுக்கு நூறு உண்மை. தேவைக்கு அதிகமாகவே யெகோவா எங்களுக்கு தந்திருக்கிறார். உதாரணத்திற்கு, 1958-ம் வருடம் நியு யார்க்கில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் எங்களுடைய வட்டாரத்தை பிரதிநிதித்துவம் செய்ய என்னை தேர்ந்தெடுத்தார்கள். ஆனாலும் ரோஸாவிற்கு டிக்கெட் வாங்குவதற்கு எங்களிடம் பணம் இருக்கவில்லை. ஒருநாள் மாலை சகோதரர் ஒருவர் எங்களிடம் ஒரு கவரை நீட்டினார். அதில் “நியு யார்க்” என்று எழுதப்பட்டிருந்தது. கவரிலிருந்த அன்பளிப்பு ரோஸா என்னுடன் வருவதற்கு உதவியது!
யெகோவாவின் சேவையில் செலவிட்ட நாட்களைக் குறித்து நானும் ரோஸாவும் துளிகூட வருத்தப்பட்டது கிடையாது. நாங்கள் எதையும் இழக்கவில்லை, ஆனால் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம், ஆம், முழு நேர ஊழியத்தில் சந்தோஷமும் திருப்தியும் நிறைந்த வாழ்க்கையை பெற்றிருக்கிறோம். யெகோவா எவ்வளவு அருமையான கடவுள்! யெகோவாவின் மீது முழு நம்பிக்கை வைப்பதற்கு கற்றுக் கொண்டிருக்கிறோம். அவர் மீதுள்ள எங்கள் அன்பும் அதிகரித்திருக்கிறது. நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களில் சிலர் தங்களுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் உயிரையே அர்ப்பணித்திருக்கிறார்கள். என்னைக் கேட்டால், ஒரு நபர் தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக யெகோவாவின் சேவையில் தன்னையே அர்ப்பணிக்க முடியும். அதைத்தான் இன்று வரையாக செய்ய ரோஸாவும் நானும் அரும் பாடுபட்டிருக்கிறோம். அப்படியே இனிமேலும் செய்ய உறுதியாக இருக்கிறோம்.
[அடிக்குறிப்பு]
a லூயி பிஷூத்தாவின் வாழ்க்கை சரிதை ஆகஸ்டு 15, 1980-ம் வருட காவற்கோபுர இதழில், “‘மரண அணிவகுப்பிலிருந்து’ தப்பினேன்” என்ற தலைப்பில் வெளியானது.
[பக்கம் 20-ன் படம்]
சுமார் 1930-ல், ஃபிராஸ்வா மற்றும் அன்னா ஷுமிகாவும் அவர்களுடைய பிள்ளைகளான ஸ்டிஃபனி, ஸ்டிஃபான், மிலானி, மற்றும் மரியான். ஸ்டூலில் நிற்பது மரியான்
[பக்கம் 22-ன் படம்]
மேலே: 1950-ல், வட பிரான்சில் அர்மாட்டியரிலுள்ள மார்கெட் ஒன்றில் பைபிள் பிரசுரங்களை அளிக்கும்போது
[பக்கம் 22-ன் படம்]
இடது: 1950-ல், மரியானுடன் ஸ்டிஃபன் பியூனிக்
[பக்கம் 23-ன் படம்]
1951-ல், ரோஸா (இடது கோடியில்) அவளுடைய பயனியர் பார்ட்னர் இரென்னாவுடன் (இடது பக்கத்திலிருந்து நாலாவது), ஒரு மாநாட்டை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தபோது
[பக்கம் 23-ன் படம்]
திருமணத்திற்கு முந்தின நாள் மரியானும் ரோஸாவும்
[பக்கம் 23-ன் படம்]
வட்டார ஊழியத்தின்போது சைக்கிளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தினோம்