சரியான சேனையைக் கண்டுபிடித்தல்
அது 1944-ம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் நடந்துக்கொண்டிருந்த சமயமாக இருந்தது. நேச நாடுகளால் கைதியாக வைக்கப்பட்டிருந்த ஜெர்மன் நாட்டவனான எனக்குத் தப்பித்துக்கொள்வதற்கான ஆசை வளர்ந்து ஒரு வெறியாகவே மாறியது. இதன் காரணமாகவே நானும் என்னோடிருந்த 13 கைதிகளும் ஸ்பனிய மோரக்கோ எல்லையின் அருகில் வேகமாக ஒடிக்கொண்டிருந்த இரயிலிலிருந்து குதித்தோம்.
பலத்த காயங்களோடுகூட நாங்கள் அனைவரும் உயிர்தப்பியது ஆச்சரியமாக இருந்தது. என்றபோதிலும் எங்கள் சுதந்திரம் ஒருசில நாட்கள் மட்டுமே நீடித்தது. நான்கு நாட்களுக்குப் பின்னர், ஒட்டகத்திலேறி வந்த அராபிய பாலைவன காவல்துறையினர் எங்களைப் பிடித்து விட்டார்கள். ஆனால் சுதந்திரத்துக்கான ஆவல் இன்னும் கொழுந்துவிட்டெறிந்து கொண்டிருந்தது. அதைத் தணிப்பதற்குப் பலத்த காயங்களோடு கூடிய உடலையும், மீண்டும் பிடிப்பட்டுவிட்டதால் ஏற்படக்கூடிய அவமானத்தையும், கடுமையான தண்டனையையும் காட்டிலும் அதிகம் தேவைப்பட்டது.
மாதங்கள் கடந்தன. இன்னும் நாங்கள் காஸபிளான்காவில் கைதிகளாகவே இருந்தோம். தப்பித்துக்கொள்ள மற்றொரு திட்டத்தைத் தீட்டினோம். இம்முறை நாங்கள் கடுமையாக முயற்சிசெய்து 65 அடி (20 மீட்டர்) நீளத்தில் ஒரு சுரங்க வழியை தோண்டினோம். முதுகு ஒடிய மூன்று மாதங்கள் பாடுபட்டோம். கடைசியாக தப்பி ஓட திட்டமிட்டிருந்த அந்த இரவும் வந்தது. மறுபடியுமாக அனைவரும் தப்பி ஓடினோம்.
மீண்டுமாக, கிடைப்பதுபோல இருந்து ஏமாறச் செய்த அற்ப கால சுதந்தரம் கிடைத்தது. ஒருசில நாட்களுக்குப் பின்னர் நாங்கள் பிடிபட்டோம். இந்த முறையோ எங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, தனிமையில் விசேஷித்த ஒரு சிறையில் ஒருமாத காலம் கடினமாக பாடுபட வேண்டும். பிற்பாடு நாங்கள் பொது சிறை முகாமுக்கு அனுப்பப்பட்டோம்.
எனக்கு வயதோ 19. இந்த அனுபவங்கள் நீங்காத முத்திரையை என்னில் விட்டுச்சென்றன. நான் சரியான சேனையில் இருப்பதைக் குறித்து நிச்சயமாயிருந்த சமயத்தில், எல்லா முயற்சிகளும் தகுதிவாய்ந்தவையே என்பதை உணர்ந்தேன்.
ஆரம்பகால பயிற்றுவிப்பு
நான் வட ஜெர்மனியில், பிரிமென் அருகே செப்டம்பர் 1925-ல் பிறந்தேன். என்னுடைய அப்பா உதைப்பந்தாட்டம், நீச்சல் மற்றும் பனியில் சறுக்குதலில் வல்லுநராக இருந்தபடியால், விளையாட்டுகளில் தீவிரமான ஈடுபாடோடு நான் வளர்ந்தேன். ஆனால் வாசிப்பதையும்கூட மிகவும் விரும்பினேன். என்னுடைய பெற்றோர்கள் கிறிஸ்மஸ் சமயத்தில், சவ அடக்க சமயத்தில் அல்லது விசேஷமான நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே சர்ச்சுக்குப் போவர்கள். நான் சர்ச்சுக்குச் சென்றபோது, பாதிரியார் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது அநேகர் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
நான் வயதில் வளர்ந்து வந்தபோது, வீரச் செயல்களைப் பற்றிய புத்தகங்களை வாசித்தேன். மற்ற தேசங்களைப் பற்றி கற்றறிவதில் எனக்கு விருப்பம் அதிகமிருந்தது. ஒரு புத்தகத்தில் பாப்புவா நியு கின்னிக்கும் ஆஸ்திரேலியாவுக்குமிடையே உள்ள மிகவும் விசாலமான ஒரு சமுத்திரப் பரப்பைப் பற்றி வாசித்தேன். நெடுந்தொலைவிலிருந்த பூமியின் ஆவலைத் தூண்டும் இந்தப் பகுதி என்னை வெகுவாக கவர்ந்தது. என்றோ ஒரு நாள் ஒதுக்கமாயுள்ள இந்தப் பகுதியை நான் சென்று பார்க்கக்கூடும் என்று நினைத்தும் பார்க்கவில்லை.
எங்களிடம் ஒரு என்சைக்ளோப்பீடியா இருந்தது. இதில் உலகின் அநேக மதங்களையும் அவைகளின் வித்தியாசமான கடவுட்களையும் பற்றி நான் வாசித்தேன். இந்த எல்லா கடவுட்களின் மத்தியிலும் உண்மையில் மெய்யான ஒரு கடவுள் இருக்கிறாரா என்பதாக சில சமயங்களில் நான் யோசித்ததுண்டு. என் அப்பா டெர் ஸ்டர்மர் என்றழைக்கப்பட்ட ஒரு பத்திரிகையை தபாலில் ஒழுங்காக பெற்றுக்கொண்டிருந்தார். அதில் பைபிளிலிருந்து காண்பிக்கப்பட்ட மேற்கோள்களில் அடிக்கடி யெகோவா என்ற அரிதாக வழங்கப்படுகின்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது யூதர்களுடைய கடவுளின் பெயர் என்பதாக அப்பா விளக்கந்தந்தார். ஓடின், தொர் மற்றும் ஃபிரிஜ்ஜா போன்ற அநேக பூர்வகால கடவுட்களைப் பற்றியும், சிவா, பிரம்மா, விஷ்ணு போன்ற இந்து கடவுட்களைப் பற்றியும் நான் வாசித்திருக்கிறேன். ஆனால் இதற்கு முன் யெகோவா என்ற பெயரை எங்கும் வாசித்தது கிடையாது.
படை வாழ்க்கையில் முதல் அனுபவம்
நாசி ஆட்சியின் கீழ் வளர்ந்து வந்தபோது நான் ஹிட்லரின் வாலிபர் இயக்கத்தில் சேர்ந்துகொண்டேன். 1939-க்குள் இரண்டாம் உலகப் போர் துவங்கிவிட்டது. பதினான்கு வயது மட்டுமே இருந்தபோதிலும், போர் நடவடிக்கையில் நான் பயிற்றுவிக்கப்பட்டிருந்தேன். காலப்போக்கில் விமானதாக்குதல் வாழ்க்கை முறையாகிவிட்டது. ஒரு சமயம் ஒரு தீ குண்டு எங்கள் வீட்டின் கூரையின் மீது மோதி என்னுடைய படுக்கைக்கு அருகே வந்து விழுந்தபோது நான் திடீரென்று விழித்துக்கொண்டேன். மணலைக் கொட்டி அதை அணைத்தேன். என் வீடு காப்பாற்றப்பட்டது.
1943-ல் நான் வான்படை மிதவையில் ஏறிச்செல்லும் படையைச் சேர்ந்துகொண்டேன். அடிப்படை பயிற்றுவிப்புக்குப் பின்னர், இத்தாலியிலுள்ள நெட்டுனோ மற்றும் அன்ஸியோவில் படையின் முன்னணிக்கு அனுப்பப்பட்டேன். துப்பாக்கிக் குண்டு ஒன்று என் காலை துளைத்துவிட போலானாவில் ஆறு வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றேன். பின்னர் நான் என் பணிக்குத் திரும்பி, அதன் பின் விரைவிலேயே இத்தாலியில் சியன்னாவுக்கு அருகே கைதியாக கொண்டு செல்லப்பட்டேன்.
பிரெஞ்சு மொரக்கோவுக்கு இரயிலில் ஏற்றிச் செல்லப்படும்போதுதானே நானும் என்னுடைய 13 தோழர்களும் தப்பித்துக்கொள்ள முதல் முயற்சியைச் செய்தோம். மீண்டும் பிடிக்கப்பட்டபோது நாங்கள் சகாரா பாலைவனத்துக்கு அருகே ஹை அட்லாஸ் மலைகளிலுள்ள போர் கைதிகளின் முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டோம். களிமண்ணையும் வைக்கோலையும் தண்ணீரில் கலந்து எவ்விதமாக செங்கல் செய்வது என்பதை அங்கே நான் கற்றுக்கொண்டேன். பின்னால் நாங்கள் காஸபிளான்கா சிறைக்கு மாற்றப்பட்டோம். இங்கே தானே சுரங்கப்பாதையை தோண்டி இரண்டாவது முறையாக தப்பித்துக்கொள்ள நாங்கள் முயற்சி செய்தோம்.
பிரெஞ்சு அயல்நாட்டு படையணி
1945-ல் போர் முடிவுக்கு வந்தபோதிலும் மொராக்கோவில் நாங்கள் கைதிகளாகவே வைக்கப்பட்டிருந்தோம். 1947-ல் நாங்கள் பிரான்சுக்கு கொண்டுசெல்லப்பட்டோம். இங்கே 1948 வரையாக நான் கைதியாக இருந்தேன். விடுதலையடைந்த பின்பு நான் செய்த முதல் வேலை பைரனீஸில் மரம் வெட்டுவதாகும். ஆனால் 1950-ல் நான் கம்யூனிஸத்துக்கு எதிராக போரட பிரெஞ்சு அயல்நாட்டு படையணியைச் சேர்ந்துகொண்டேன். முதலில் அல்ஜீரியாவிலுள்ள சிடிபெல் அபீஸுக்கும் பின்னர் பிரெஞ்சு படையின் வான்குடை மிதவைப் பிரிவில் பிலிப்பிக்கும் அனுப்பப்பட்டேன்.
அடுத்து, நான் இந்தோசீனாவில் போர்ச் செய்ய அனுப்பப்பட்டேன். அங்கே, பதுங்கி பாய்ந்துசெய்த ஒரு தாக்குதலில் நான் காயமடைந்தேன். இதில் எங்களைச் சேர்ந்த இரண்டு பேரே உயிர்த்தப்பினோம். இந்தமுறை நான் ஹன்னோயில் ஆறு வார காலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றேன். குணமடைந்து வந்த பின்பு மீண்டுமாக போர் செய்வதற்குக் காட்டுப்பகுதிக்கும் நெல் வயல்களுக்கும் அனுப்பப்பட்டேன். மொத்தமாக, வான்குடை மிதவையில் படைவீரனாக நான் 20 தடவைகள் தாக்குதல் செய்திருக்கிறேன்.
கடைசியாக, மஞ்சள் காமாலை நோயால் நான் கடுமையாக தாக்கப்பட்டபோது, இராணுவ மருத்துவர்கள் என்னில் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். நான் குணமடைந்தேன். ஆனால் சுறுசுறுப்பான பணிக்கு தகுதியற்றவனாக அறிவிக்கப்பட்டேன். என்றாலும் நான் கண்ணியமாக அங்கிருந்து புறப்பட்டு வர இயலவில்லை. அதிர்ஷ்டவசமாக எனக்கு தரப்பட வேண்டிய விடுப்புக்காலம் வந்ததால், நான் வட ஆப்பிரிக்காவுக்குச் செல்ல உத்தரவு வாங்கிக்கொண்டேன்.
அங்கே இருக்கையில், நான் மற்றொரு முறை தப்பித்துக்கொள்ள, ஆனால் இம்முறை தனியாக அவ்விதமாகச் செய்ய திட்டமிட்டேன். தப்பி ஓடிய ஒவ்வொரு 100 பேரிலும் 99 பேர் மீண்டும் பிடிபட்டார்கள் என்பதை நான் உணர்ந்தேன். ஆகவே நான் மிகவும் கவனமாக திட்டமிட்டேன். எப்படியோ போர்ட் லையாட்டிக்கு தப்பிச்சென்று ஜெர்மன் பயணிகள் விமானத்தை பிடித்துவிட்டேன். மேலே பறந்துகொண்டு, ஜெர்மனியை நோக்கிச் செல்கையில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன்.
ஜெர்மனியில், பத்தாண்டுகள் பிரிந்திருந்த பின்பு, மீண்டும் மகிழ்ச்சியோடு என்னுடைய குடும்பத்தோடு இணைந்துவிட்டேன். என்னுடைய பால்ய நண்பன் ஒருவர், பிரிட்டிஷ் படையின் ஜெர்மன் பிரிவைச் சேர்ந்துகொள்ள எனக்கு ஏற்பாடு செய்தார். இது என்னுடைய மூன்றாவது படையாகும் நிறைய பணம் சம்பாதித்துக்கொண்டிருந்தேன். ஆனால் படைத்துறை வாழ்க்கை எனக்கு சலிப்பாகிக் கொண்டே வந்தது.
புதிய தேசத்தில் புதியதோர் வாழ்க்கை
கனடா அல்லது ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் ஆஸ்திரேலியாவை தெரிந்துகொண்டு 1955 ஜூன் மாதம் நியு செளத் வேல்ஸின் தலைநகரமாகிய சிட்னியில் வந்து தங்கினேன். சிட்னிக்குத் தென் மேற்கில் சுமார் 300 மைல்கள் (480 கி.மீ.) தொலைவில் பனிமூடிய மலைகளில் ஒரு பெரிய நீர் மின்னாற்றல் நீர்பாசன திட்டமொன்றில் வேலை காலியாய் இருப்பது எனக்கு தெரியவந்தது. இது கடுமையான உழைப்பை தேவைப்படுத்தும் ஒரு வேலையாக இருக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். ஆனால் சம்பளம் கூடுதலாக இருந்தது. அநேக ஜெர்மானியர்களும் நாடுவிட்டு நாடு வந்த ஐரோப்பியர்களும் இங்கு வேலை செய்வதாக நான் கேள்விப்பட்டேன்.
போர் முடிந்தது முதற்கொண்டு மதத்தைப்பற்றி நான் அதிகம் ஒன்றும் யோசிக்கவில்லை. நான் போரில் பார்த்த காரியங்கள் எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. நான் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லை, ஆனால் தன்னை ஒரு சாட்சி என்பதாக சொல்லிக்கொண்ட, என்னோடு வேலை பார்க்கும் ஒருவர் உலக நிலைமைகளுக்குப் பரிகாரத்தைப் பற்றி அடிக்கடி என்னிடம் பேசினார். அவர் சொன்னவை அர்த்தமுள்ளவையாக இருந்தன. ஆனால் அதன் பிறகு அவர் சிட்னிக்கு திரும்பிப்போய் விட்டார். எனக்கு அவரோடு தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்தச் சமயத்தில்தான் நான் கிறிஸ்டாவைச் சந்தித்து, அவளை விவாகம் செய்துகொண்டேன். சாட்சி என்னிடம் சொன்ன காரியங்களைப் பற்றி நான் என் மனைவிக்குச் சொன்னேன். அவளும்கூட இதில் அக்கறை காண்பித்தாள். ஆகவே சிட்னிக்கு ஒரு சமயம் நாங்கள் சென்றபோது, அவரை மறுபடியுமாக நான் சந்தித்தேன். அவரும்கூட ஜெர்மன் நாட்டை சேர்ந்தவராக இருந்தபோதிலும் அவரால் ஆங்கிலத்தை சரளமாக வாசிக்கவும் பேசவும் முடிந்தது. அவர் பரதீஸ் இழக்கப்பட்டது முதல் பரதீஸ் மீட்கப்பட்டது வரை என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் கொடுத்தார். கிறிஸ்டாவும் நானும் இன்னும் ஆங்கிலம் கற்றுக்கொண்டுதானே இருந்ததால் புத்தகத்தை முழுமையாக எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. படங்களிலிருந்து நாங்கள் அதிகம் கற்றுக்கொண்டோம்.
புத்தகம் ஜெர்மன் மொழியில் இருப்பதை சாட்சி எங்களிடம் சொன்னபோது, பெய்துகொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல், ஸ்ட்ராத்பீல்டிலிருந்த ஆஸ்திரேலியாவின் உவாட்ச் டவர் சொஸயிட்டியின் கிளைக்காரியாலயத்துக்கு விரைந்தோம். அங்கே ஜெர்மன் மொழியில் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு ஒரே இரவில் அதைப் படித்து முடித்தோம். ஸ்ட்ராத்பீல்டு ராஜ்ய மன்றத்தில் ஒரு கூட்டத்தில் ஆஜராயிருக்க அங்கு திரும்பச் சென்றோம். அங்கே அனைவரும் மிகவும் அன்பாக பழகினார்கள். இது மேற்பூச்சாக இல்லாமல் மெய்யான அன்பாக இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். கூட்டம் முடிந்து வீடு திரும்புகையில் ஜெர்மன் மொழியில் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளையும் மற்ற சில புத்தகங்களையும் நிறைய சுமந்துகொண்டு போனாம்.
நான் எச்சரிக்கையாக நடந்துகொள்கிறேன்
நாங்கள் கற்றுக்கொண்டிருந்த காரியங்கள் மகத்தானவைகளாக இருந்தபோதிலும், எந்த வகையிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்வதைக் குறித்து நான் எச்சரிக்கையாயிருந்தேன். ஸ்தபிக்கப்பட்ட சர்ச்சோடு என் அம்மா பெற்றிருந்த அனுபவமே ஓரளவு இதற்கு காரணமாயிருந்தது. 1936-ல் அவள் கேட்ட காரியங்களாலும் அங்கு அப்பியாசிக்கப்பட்ட காரியங்களாலும் ஏமாற்றமடைந்து லூதரன் சர்ச்சிலிருந்து ராஜினாமா செய்துவிட்டாள். என்றாலும் அவள் கடவுளில் விசுவாசத்தை இழந்துவிடவில்லை. இதை என்னிடம் அவள் சொல்லியிருக்கிறாள்.
பின்பு, 1943-ல் நான் படைத்துறையை சேர்ந்துகொண்டபோது, நாங்கள் அனைவரும் சர்ச்சுக்குச் சென்று பாதிரியார் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று எங்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. நாங்கள் போரில் உயிரிழந்தால், உடனடியாக பரலோகம் சென்று கடந்த கால வீரர்கள் அனைவரோடும் இணைவோம் என்பதாக அவர் எங்களுக்கு உறுதியளித்தார். பின்னால், அகழ்வெட்டுகளிலும், வேட்டு பாதுகாப்பு குழிகளிலும் அநேக போர் வீரர்கள் பாதுகாப்புக்காக சிலுவைகளை அணிந்திருப்பதை நான் கவனித்தேன். என்னுடன் இருந்த ஒரு வீரன் தாக்கப்பட்டு உயிரிழக்கும்போது அவன் சிலுவையை அணிந்திருந்தான். இந்தப் பயங்கரத்திலிருந்து மீண்டுவந்தபோது, என்னுடைய முதல் கேள்வி: ‘சிலுவை இவனுக்கு என்ன செய்தது?’ என்பதே.
ஆங்கில நாட்டு போர் கைதிகளும்கூட சிலுவைகளை அணிந்திருந்ததைப் பார்த்தபோது நான் ஆச்சரியமடைந்தேன். ‘இதுதான் கிறிஸ்தவன் என்றால் எனக்குக் கிறிஸ்தவ மதம் வேண்டாம்’ என்று நான் நினைத்துக்கொண்டேன். ஏன், இருபக்கங்களிலுமே, கிறிஸ்தவர்களென உரிமைப் பாராட்டிக் கொள்பவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்து கொண்டிருந்தார்கள்.
அடுத்த முறை என்னுடைய பாதிரியாரை நான் சந்தித்தபோது, இதைக் குறித்து அவரிடம் கேட்டேன். போர் நடவடிக்கையில், உங்கள் தேசத்துக்காக நீங்கள் போரட வேண்டும். ஆனால் போர் முடிந்தபின்பு, அனைவரும் அவர்களுடைய சொந்த சர்ச்சுகளுக்கு திரும்பிப்போக வேண்டும் என்பதாக அவர் சொன்னார். இது எனக்கு போதுமானதாக இருந்தது. ‘பயங்கரமான தவறு ஏதோ இருக்க வேண்டும்’ என்று நான் யோசித்தேன். அம்மா ஏன் சர்ச்சிலிருந்து ராஜினாமா செய்துவிட்டாள் என்பதை இப்பொழுது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆகவே நான் நியாயமாகவே எச்சரிக்கையாயிருந்தேன். ஆனால் விரைவிலேயே பைபிள் சத்தியத்தின் செய்தி வித்தியாசமாக இருந்ததை நான் உறுதியாக நம்பினேன். ஸ்தபிக்கப்பட்ட மதத்தின் மாய்மாலம் பைபிள் கற்பிக்கும் காரியமல்ல. பூமியில் ஏன் இவ்வளவு குழப்பமும் கலவரமும் இருக்கிறது என்பதை இப்பொழுது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. கடைசியாக யெகோவா யார் என்பதை கற்றறிவதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். என் அப்பா என்னிடம் சொன்னது போல அவர் யூதர்களின் கடவுளாக மாத்திரமில்லாமல், எல்லோருடைய மெய்க் கடவுளாகவும் இருக்கிறார்.
மேலுமாக கிறிஸ்து இயேசு எங்கே பொருந்துகிறார் என்பதை நான் கற்றுக்கொண்டேன். அவர் யெகோவாவின் அருமையான குமாரனாக இருக்கிறார். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காண்பிக்கவும், நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு மீட்பை ஏற்பாடு செய்யவும் யெகோவா அவரை பூமிக்கு அனுப்பினார். கடவுளுடைய ராஜ்யம் பூமியை ஒரு பரதீஸாக மாற்றும் என்பதையும் மேலுமாக அது என்றுமாக நிலைத்திருக்கும் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.
சரியான சேனையில் கடைசியாக!
கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஒழுங்காகச் செல்வதற்கு, வாரத்தின் இறுதி நாட்களில் உல்லாசமாக வெளியே சென்று தங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை சீக்கிரமாகவே உணர்ந்தோம். அதிகமாக புகைப்பிடிப்பது எனக்கிருந்த மற்றொரு பிரச்னையாக இருந்தது. 16 வருடங்களாக, நான் நாளொன்றுக்கு 40-60 சிகரெட்டுகளையும் எப்போதாவது சுருட்டையும் புகைத்து வந்தேன். மனித சரீரத்தை இவ்விதமாக கறைபடுத்திக் கொள்வது கடவுளுக்குப் பிரியமில்லாத காரியம் என்பது எனக்கு உணர்த்தப்பட்டபோது, ஒரே நாளில் அந்த அசுத்தமான பழக்கத்தை விட்டுவிட்டேன்.
பிப்ரவரி 1963-ல் கிறிஸ்டாவும் நானும் யெகோவாவுக்கு எங்களுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்திக் காண்பித்தோம். விரைவிலேயே பயனியர்களாக எங்களுடைய முழு நேர ஊழியத்தை ஆரம்பித்தோம். 1965 ஜனவரியில் நாங்கள் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டோம். இப்பொழுது யெகோவாவின் கிறிஸ்தவ “சேனையில்” நான் ஒரு போர் வீரனாக இருக்கிறேன்.
1967-ல் நாங்கள் பாப்புவா நியு கின்னிக்குச் சென்று முதலில் போட் மாரஸ்பியிலும் பின்னால் பாப்பன்டெட்டாவிலும் ஊழியஞ் செய்தோம். ஒரு குறுகிய காலத்துக்கு நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினோம். பின்னர் 1970-ல் நாங்கள் பாப்புவா நியு கின்னிக்குத் திரும்பி, செப்டம்பர் 1981 வரையாக அங்கே சேவை செய்தோம், எங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஓர் இடத்தில் நாங்கள் இரண்டு ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு உதவியாக இருந்து அநேகர் பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்வதற்கு உதவியிருக்கிறோம். பெரும்பாலான இடங்களுக்கு நாங்கள் கப்பலுக்கு வெளியே பொறியிலுள்ள தோணியில் பிரயாணம் செய்தோம். மூன்றரை ஆண்டுகளில் 29 பேர் முழுக்காட்டுதல் பெற நாங்கள் உதவி செய்திருக்கிறோம்.
நாங்கள் இருவருமே மூளையை பாதிக்கும் குளிர்காய்ச்சலால் தாக்கப்பட்டோம். 48 மணிநேரங்கள் நான் சுயநினைவிழந்த நிலையிலிருந்தேன். பிழைப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. கடைசியாக 1981-ல் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பி வர நாங்கள் தீர்மானித்தோம். நாங்கள் முதலில் பிரிஸ்பேனிலும் பின்னால் வட குயின்ஸ்லாந்திலுள்ள கேர்ன்ஸிலும் தொடர்ந்து விசேஷித்த பயனியர்களாக சேவை செய்துவந்தோம். தற்போது நாங்கள் ஆஸ்திரேலியாவின் தலைநிலப்பரப்பின் வடபக்க முனைக்கு அப்பாலுள்ள டாரஸ் ஸ்ரட்டில், தர்ஸ்டே தீவில் ஊழியஞ்செய்து வருகிறோம், நான் சிறுவனாயிருந்தபோது, தொலைவிலுள்ள இந்த இடத்தைப்பற்றி வாசித்திருக்கிறேன். இங்கெ ஒரு நாள் வருவேன் என்று உண்மையில் நினைத்தும்கூட பார்க்கவில்லை.
பயனியர் சேவையில் நாங்கள் செலவிட்டிருக்கும் இந்த 23 ஆண்டுகளை பின்னோக்கிப் பார்க்கையில், இந்தச் “சேனை”யில் சேர்ந்து கொண்டிருப்பதைப் பற்றி எந்த வித மன வருத்தமும் இல்லை. 60 பேர் யெகோவா தேவனுக்கு தங்களுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க நாங்கள் உதவியிருப்பதை எண்ணிப் பார்க்கையில் எங்கள் இருதயங்கள் களிகூருகின்றன. எங்களுடைய முழு நேர பிரசங்க ஊழியத்தில் நாங்கள் அதிகமான மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். மற்றவர்களையும்கூட ஆசீர்வாதமான இந்த வேலையை எடுத்துக்கொள்ளுமாறு எப்போதும் உற்சாகப்படுத்துகிறோம்.
மூன்று தேசீய சேனைகளில் அதிகமான ஏமாற்றங்களுக்குப் பின், ஏறத்தாழ பல மரண அனுபவங்களுக்குப் பின், வெற்றி பெறுகின்ற அவருடைய சேனையில் கிறிஸ்து இயேசுவில் போர்ச் சேவகனாக என்னை இணைத்துக்கொள்ள முடிந்ததற்காக நான் எப்போதும் யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறேன். (2 தீமோத்தேயு 2:3) ஆம், கடைசியாக, சரியான சேனையை நான் கண்டுபிடித்தேன். என்றென்றுமாக உண்மையுள்ள யுத்த வீரனாக நான் தொடர்ந்து சேவிக்க வேண்டுமென்று நான் அவரிடமாக ஜெபிக்கிறேன்.—சிக்மார் சூஸ்ட்மேயர்
(g87 4/22)
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
பிரெஞ்சு அயல்நாட்டு படையணியில் நான் பணியாற்றியபோது
[பக்கம் 26-ன் சிறு குறிப்பு]
தீ குண்டு ஒன்று எங்கள் வீட்டு கூரையின்மீது மோதி என்னுடைய படுக்கைக்கு அருகே வந்துவிழுந்தபோது திடீரென்று நான் விழித்துக் கொண்டேன்
[பக்கம் 24-ன் படம்]
இருபக்கங்களிலும் கிறிஸ்தவர்களென உரிமைப் பாராட்டிக்கொள்பவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்