1914 முதற்கொண்டு உலகம்
பாகம் 3: 1935-1940சர்வதேச சங்கம் அதன் அழிவை நோக்கி தள்ளாடிச் செல்கிறது
சர்வ தேச சங்கம், அதன் பிறப்பு முதற்கொண்டே நோயுற்ற ஒரு குழந்தையாகவே இருந்தது. 1920-ல் நடைபெற்ற அதனுடைய முதல் கூட்டத்தைப் பற்றி, “அது உலக நாடுகளின் நேசக் குழுவாக இருப்பதைவிட, அது தேசீய அக்கறைகளை நாடிக்கொண்டு, சர்வ தேச சங்கத்தை, தங்களின் சொந்த அரசியல் நோக்கங்களைச் சேவிக்கும்படியாகச் செய்வதில் முனைப்பாக இருந்த பெரிய ஐரோப்பிய வல்லரசுகளின் மாநாடாகவே இருந்தது” என்பதாக சரித்திராசிரியர் H. காட்ஸிக் சொல்கிறார். தேசீய சிந்தனை ஒழிக்கப்பட்டாலொழிய குழந்தையின் உயிர் எப்போதும் ஆபத்திலிருக்கும்.
1930-களின் துவக்கத்தில், சர்வதேச சங்கத்தின் பல உறுப்பினர்கள் வெளிப்படையாகவே அதிருப்தியை தெரிவித்தனர். உதாரணமாக, இத்தாலி, உலகின் கச்சா பொருட்களில் தனக்கு நியாயமான ஒரு பங்கு கிடைக்கவில்லையென்றும், உலக சந்தைக்குள் நுழைவதற்கும், முதலீடு செய்வதற்கும் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதென்றும் நினைத்தது. ஆகவே 1935-ல் தேசீய அக்கறைகளை முன்னிட்டு அது, எத்தியோப்பியாவின் மீது படையெடுத்தது. அதே போன்ற மனகுறைகளோடு ஜப்பான் 1937-ல் சீனாவுக்குள் முன்னேறிச் சென்றது. இரு நாடுகளின் விஷயத்திலும் சர்வதேச சங்கம் தலையிடுவதற்கு வலிமையற்றதாக இருந்தது.
இன்னும் 20 ஆண்டுகள் பூர்த்தியடையாத சர்வ தேச சங்கம், அதன் ஆதரவாளர்கள் விரும்பியதுபோல கட்டுறுதி வாய்ந்த ஆரோக்கியமுள்ள பருவ வயதினனாக இல்லை. 1936-லிலேயே அதனுடைய சாவுக்கேதுவான நோய் கவலைக்குரியதாக இருந்தது. சரித்திராசிரியர் ஹெர்மன் க்ராம்யவின் பிரகாரம், “ஜெனிவாவில் [சர்வ தேச சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில்] சூழ்நிலை ஒரு பிண ஊர்வலத்திலிருப்பது போல இருந்தது. சர்வ தேச சங்கம், இத்தாலி மற்றும் ஜப்பானின் துணிச்சலான நடத்தையை எதிர்பட்டதால் இதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. இது இப்படியிருக்க, ஆடால்ப் என்ற பெயர் கொண்ட மனிதனைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
“ஹிட்லருக்கு விருப்பமான விஷயம்”
ஆம், ஜெர்மனியும்கூட அதிருப்தியாக இருந்தது. ஐரோப்பிய தலைமை பதவி ஸ்தனத்தை மீண்டும் பெறுவதற்காக அது போரடிக்கொண்டிருந்தது. 1920-களில் ஜெர்மன் தேசத்து போர்படைத் தலைவர், ஹான்ஸ் வோன் சீக்ட், ‘புதிய ஒரு போரின்றி, ஜெர்மனி மீண்டும் உயர்வடைவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்று உறுதியாக நம்பியதாக’ ஒரு ஜெர்மன் தேச பாட புத்தகம் சொல்கிறது; அல்லது இராணுவ நடவடிக்கை அவசியமில்லை என்பதாக ஹிட்லரும்கூட கருதவில்லை. அதன் காரணமாகவே, ஜெர்மன் இராணுவ சரித்திர ஆராய்ச்சி அமைப்பு ஒன்றின்படி “[1933 மற்றும் 1939-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில்] ஆட்சியின் எல்லா முக்கிய நடவடிக்கைகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ படைக்கல பெருக்கத்தையே நோக்கமாக கொண்டிருந்தன.”
ஹிட்லர் ஜெர்மானிய பொதுமக்களை, 850 இலட்சம் ஆட்களைக் கொண்ட “ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே இனத்தின் மையக் கருவாக” கருதினான். ஹிட்லரின் டார்வின் கொள்கைப்படியான அணுகுமுறை, இந்த ‘ஒரே இன மையக்கரு’ அதன் ஆட்சிப் பரப்பை கைப்பற்றுவதை தேவைப்படுத்தியது. டியுபின்ஜன் பல்கலைக்கழக நவீன சரித்திர பேராசிரியர் கெர்ஹார்ட் சூல்ஸ் விளக்கும் விதமாகவே: “புதிய ஆட்சி நிலப்பகுதிகளை வன்முறையினால் கைப்பற்றுவதே ஹிட்லருக்கு விருப்பமான விஷயமாக இருந்தது.”
உண்மையில் எங்கே துவங்குவது என்பதை தீர்மானிக்க சர்வ தேச சங்கமே உதவி செய்தது. பிரான்சுக்கும் ஜெர்மனிக்குமிடையே இருந்த நிலப் பகுதியான சார்லான்ட் பல ஆண்டுகளாக இவை இரண்டுக்குமிடையே இப்படியும் அப்படியுமாக இருந்து வந்தது. இது முதல் உலகப் போரின் முடிவில் சர்வ தேச சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. ஆனால் சார் குடிமக்கள் சர்வ தேச சங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருப்பதா அல்லது பிரான்ஸின் அல்லது ஜெர்மனியின் பாகமாகிவிடுவதா என்பதை வாக்களித்து பின்னால் தீர்மானிப்பதற்கு வகைச் செய்யும் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1935-ல் குடிமக்கள் அனைவரின் நேர்முக வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தச் சமயத்தில், ஹிட்லர் மிகவும் பிரபலமானவனாக இருந்தான். மாணவர்கள் சில சமயங்களில், உதாரணமாக பின்வருவது போன்றவற்றை எழுதும்படியாகச் சொல்லப்பட்டார்கள். “இயேசு மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் விடுவித்தது போலவே, ஹிட்லர் ஜெர்மன் தேசத்தை அழிவிலிருந்து காப்பாற்றினான். இயேசுவும் ஹிட்லரும் துன்புறுத்தப்பட்டனர். இயேசு கொல்லப்பட்டார், ஹிட்லரோ முதல்வர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். . . . இயேசு பரலோகத்துக்காக கட்டினார். ஹிட்லர் ஜெர்மன் பூமிக்காக கட்டினான்.”
கிறிஸ்தவ நடுநிலைமையைக் காண்பிப்பதற்குப் பதிலாக, மதத்தலைவர்கள், அரசியலில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார்கள். பெரும்பாலும் கத்தோலிக்கர்களாக இருந்த சாரின் குடிமக்கள் அவர்களுடைய மேற்றிராணியர்கள் அவர்களுக்குச் சொன்னவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். “ஜெர்மன் கத்தோலிக்கர்களாக, நம்முடைய பிறந்த நாட்டின் மேன்மையையும் செழுமையையும் சமாதானத்தையும் நாம் ஆதரிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.” கத்தோலிக்க வர்த்தகச் சங்கங்கள் பின்வருமாறு எச்சரித்தன: “பிறந்த நாட்டுக்கு உண்மையற்றவனாக இருக்கும் ஒருவனால் தன்னுடைய கடவுளுக்கு உண்மையுள்ளவனாக இருக்கமுடியாது.”
நிச்சயமாகவே அனைவரும் இதை ஒப்புக்கொள்ளவில்லை, அக்காலத்திலிருந்த புகழ்பெற்ற ஆசிரியர் ஒருவர் பின்வருமாறு எச்சரிப்பு செய்திருந்தார்: “நீங்கள் ஹிட்லருக்கு வாக்களித்தால், அவனுடைய வாழ்நாட் காலத்தை நீடிக்கச் செய்து, அவனுடைய தவறான செயல்களில் பங்கேற்றுக்கொள்வீர்கள் . . . தவிர்க்க முடியாததாக அவன் செய்யும் போரிலும்கூட நீங்கள் பங்கேற்றுக்கொள்வீர்கள்.” ஆனால் இப்படிப்பட்ட எச்சரிப்புக் குரல்கள் சிலவாகவே இருந்தன. இது “இங்கிலாந்தும், பிரான்சும், சர்வதேச சங்கமும், சர்வ தேசீய தொழிலாளர் சங்கங்களும் போப்பும்கூட சாரை கைவிட்டுவிட்டார்கள்” என்பதாக பத்திரிகை ஆசிரியர் டச்சால்ஸி-ஐ எழுதும்படி செய்தது.
இந்தச் சூழ்நிலைமைகளில், மக்களின் தீர்ப்பில் ஹிட்லரின் வெற்றி தவிர்க்க முடியாத முடிவாக இருந்தது. பெரும்பான்மையான 90.8 சதவிகிதத்தினர் இது புதிய ஜெர்மன் குடியரசின் பாகமாக வேண்டும் என்று வாக்களித்தனர்.
இந்த முதல் பெரிய அயல்நாட்டுக் கொள்கை வெற்றிக்குப் பின்னர், ஹிட்லர் தொடர்ந்து முன்னேறும்படியாக ஊக்குவிக்கப்பட்டான். வெர்சாலிஸ் ஒப்பந்த நிபந்தனைகளை மீறி 1936-ல் ஹிட்லர் ரினிலாண்டை மீண்டும் யுத்தத்துக்கு ஆயத்தம் செய்தபோது ஏற்கெனவே மரண படுக்கையிலிருந்த சர்வதேச சங்கம் தலையிடமுடியாதபடி மிகவும் பலவீனமாக இருந்தது. 1938-ல் ஆஸ்டிரியாவை கைப்பற்றிய போதா, அல்லது பின்னால் அதே வருடத்தில் ஜெர்மானியர்களே பெரும்பாலும் குடியிருந்த செக்கோஸ்லேவாக்கியாவின் ஒரு பாகமாக இருந்த சுடட்டன்லாண்ட் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தபோதோ, எவரும் இவனை தடை செய்யவில்லை. 1939-ல் அத்தேசத்தின் மீதமுள்ள பகுதிகளையும் கைப்பற்றினான். வெளிப்படையாகவே இதற்கு எதிர்ப்பு மட்டுமே தெரிவிக்கப்பட்டதே ஒழிய வேறொன்றும் நடக்கவில்லை.
ஆடையணிமணி ஒத்திகை—எதற்கு?
இதுவரையில் ஹிட்லரின் வலுசண்டைப் போர் இரத்தம் சிந்துதலின்றியே நடந்தது. மேல் சொல்லப்பட்ட இத்தாலியும் ஜப்பானும் உட்பட்டிருந்த மோதலில் அவ்விதமாக இருக்கவில்லை. “எத்தியோப்பியாவின் மீது பாஸிஸ இத்தாலியின் தாக்குதல் மிக நுட்பமான விவரங்கள் வரையாக தயார் செய்யப்பட்டு பெருமளவான பொருட் செலவிலும் மிகுதியான பிரச்சார சாதனத்தின் துணைக்கொண்டும் நடத்தப்பட்டது” என்பதாக லுமோ எல் டெம்போ என்ற இத்தாலிய குறிப்புரை ஏடு ஒன்று குறிப்பிடுகிறது. இந்தப் போர் 1935-ல் ஆரம்பமானது. 1936-ல் எத்தியோப்பியா முழுவதுமாக கைப்பற்றப்பட்டது. அணுகுண்டு தாக்குதலையும் விஷ வாயுவின் உபயோகத்தையும் கேள்வியுற்ற உலகம் அதிர்ச்சிக்குள்ளாகியது.
ஆசியாவில், ஜப்பானிய இராணுவம் அத்தனை வலிமையுள்ளதாகிவிட்டதால், 1931-ல் தென் மன்ச்சூரியா ரயில் வண்டியை குண்டு வைத்து தகர்க்க முயற்சி செய்ததாக சீனா குற்றஞ்சாட்டப்பட்டபோது, இதை பயன்படுத்திக்கொண்டு மன்ச்சூரியாவினுள் ஜப்பானியபடை முன்னேறிச் செல்லக்கூடியதாக இருந்தது. 1937-ல் அவை முழு சீனாவுக்குள்ளும் முன்னேறிச் சென்று, ஷேன்ஹாய், பீக்கிங் நான்கிங், ஹான்கோவ் மற்றும் கான்டன் நகரங்கள் உட்பட பெரும் பகுதியான நிலத்தை கைப்பற்றினர்.
இதற்கிடையில், ஐரோப்பாவில் ஸ்பனிய உள்நாட்டுப் போர் 1936-ல் துவங்கியது. ஹிட்லரும் முசோலனியும் தங்களின் புதிய கருவிகளையும் புதிய போர் முறைகளையும் பரிசோதிக்க இதில் வாய்ப்பிருப்பதைக் கண்டார்கள். மன்ச்சூரியா, சீனா மற்றும் எத்தியோப்பிய போர்களைப் போலவே, இது எதிர்காலத்தில் வர இருந்த பிரமாண்டமான ஒன்றுக்கு ஆடையணிமணி ஒத்திகையாகவே இருந்தது. அதிகார குழு ஒன்றின்படி, ஸ்பனியப் போரில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். உலகின் கவனத்தை இது ஈர்த்ததைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆடையணிமணி ஒத்திகையே தலைப்புச் செய்திகளாக அமைந்துவிட்டதென்றால், இனி வர இருந்த மெய்யான சிறப்பு நிகழ்ச்சியைப் பற்றி என்ன?
ஐரோப்பாவை மின்னல் தாக்குகிறது
உலக அரங்கில் புதிய வளர்ச்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்த குடியாட்சிகள் கவலைக்குள்ளாயின. க்ரேட் பிரிட்டன், படைத்துறையில் கட்டாய ஆள் சேர்ப்பை அறிமுகப்படுத்தியது. பின்னர் ஆகஸ்ட் 1939-ல், ஜெர்மனியும் சோவியத் யூனியனும் ஓர் ஆக்கிரமிப்பின்மை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு உலகை ஆச்சரியத்துக்குள்ளாக்கின. உண்மையில் போலந்தை தங்களுக்கிடையே பிரித்துக்கொள்ளவே இது ஓர் இரகசிய ஒப்பந்தமாக இருந்தது. மறுபடியுமாக மேற்கத்திய குடியாட்சிகள் தலையிடமாட்டா என்ற நினைப்பில் ஹிட்லர் தன்னுடைய படையை 1939-ல் செப்டம்பர் 1-ம் தேதி காலை 4.45-க்கு துணிந்து போலந்திற்குள் அனுப்பினான்.
ஆனால் இந்த முறை அவனுடையது தப்புக்கணக்காயிற்று. இரண்டு நாட்களுக்கு பிற்பாடு பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனியின்மீது போர் தொடுத்தன. செப்டம்பர் 17-ம் தேதி, சோவியத் படை போலந்தை கிழக்கேயிருந்து தாக்கியது. மாத முடிவுக்குள், போலந்தின் சிக்கல் தீர்த்து வைக்கப்பட்டது. தாமதமில்லாத இராணுவ நடவடிக்கையின் மூலமாக இரண்டாம் உலகப்போர் துவங்கிவிட்டது. இது ஜெர்மானியர்களால் “மின்னல் போர்” என அழைக்கப்பட்டது. வெற்றி களிப்பில், ஹிட்லர் மேற்கத்திய வல்லரசுகளோடு சமாதானம் பண்ணிக்கொள்ள முன்வந்தான். “இதை அவன் உளமார்ந்து சொன்னானா இல்லையா என்பது எந்த உறுதிப்பாடுடனும் பதிலளிக்க முடியாத கேள்வியாகும் என்று ஜெர்மன் நாட்டு சரித்திராசிரியர் வால்தெர் ஹோஃபேர் எழுதுகிறார்.
முதல் சில யுத்த ஆண்டுகளில் மின்னல் வேக திடீர் தாக்குதல் அழிவுண்டாக்கும் விளைவுகளைக் கொண்டுவந்தன. ருசிய நாட்டுத் தலைமை இணை கூட்டவை விரைவில் எஸ்டோனியா, லாத்வியா, மற்றும் லித்வானியாவையும் சோவியத் படையைத் தங்கள் மண்ணில் நிறுத்தி வைக்க அனுமதிக்கும்படி கட்டாயப்படுத்தின. அவ்விதமே பின்லாந்திடமும் கேட்டுக் கொண்டபோது அது மறுத்துவிட்டதால் ருசிய நாட்டுத் தலைமை இணைகூட்டவை 1939 நவம்பர் 30-ம் தேதி அதன் மீது போர் தொடுத்தது. தொடர்ந்து வந்த மார்ச் மாதம் சோவியத்தினுடைய நிபந்தனைகளின் பேரில் சமாதானத்துக்காக வேண்டுகோள் விடுத்தது.
என்றபோதிலும் இதற்கிடையில், பிரிட்டனும் பிரான்சும் நடுநிலை வகித்த நார்வேயுடன் சென்று பின்லாந்துக்கு உதவ எண்ணியது. ஆனால் பின்லாந்தோ சமாதானத்தை நாடியபோது, இந்த நேசநாடுகள் அவ்விதமாகச் செய்ய மனதில்லாமல் தங்கள் திட்டங்களைத் தள்ளிப்போட்டன. பின்னால் கைப்பற்றிக்கொள்வதற்கு முதல் படியாக அவர்கள் 1940 ஏப்ரல் 8-ம் தேதி நார்வேயின் தண்ணீர்களைத் தோண்ட ஆரம்பித்தனர். அடுத்த நாள் நார்வே மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் மூழ்கியிருந்தபோது ஜெர்மானியப் படை, எதிர்பாரா விதத்தில், நார்வேயையும் டென்மார்க்கையும் கைப்பற்றியது. ஒரே வாரத்துக்குள்ளாகவே, பிரிட்டன் படை, நார்வேயை கைப்பற்றியது. ஆனால் பல வெற்றிகளுக்குப் பின்னர், தெற்கேயிருந்து வந்த அமைதிக் குலைவான அறிக்கைகளின் காரணமாக அவை பின்வாங்கிப் போக வேண்டிய நிலை ஏற்பட்டது.
பல மாதங்களாக, எப்பொழுது, எங்கே ஜெர்மனி பிரான்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்பதே கேள்வியாக இருந்தது. பெரும்பாலான இராணுவ நடவடிக்கை கடற்போர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக காலம் கடந்தது. நிலத்தில் எங்கும் அமைதியே காணப்பட்டது. பத்திரிகையாளர்களில் சிலர் “போலி யுத்தம்” பற்றி பேச ஆரம்பித்தார்கள். இது மின்னல் வேக போரக இருக்கவில்லை. “போர் களத்தில் இருந்துகொண்டு அவர்கள் போர் புரியாதிருந்தார்கள்.”
என்றபோதிலும், 1940 மே 10 ஜெர்மானியர்களின் திடீர் தாக்குதலில் போலித்தனம் எதுவுமிருக்கவில்லை. பிரான்சுக்கும் ஜெர்மனிக்குமிடையேயிருந்த எல்லைக் கோட்டை தாண்டுவதன் மூலம் கீழான பகுதிகளிலுள்ள தேசங்களைக் கைப்பற்றி பெல்ஜியம் வழியாகச் சென்று மே 12-ம் தேதி இவர்கள் பிரெஞ்சு எல்லையை எட்டினர். மே 14-ல் நெதர்லாந்து வீழ்ந்துவிட்டது. வட பிரான்சின் வழியாகச் சென்று ஜெர்மன் படை ஆயிரக்கணக்கான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டு போர்வீரர்களை வளைத்துக்கொண்டுவிட்டனர். இது முழு அளவு மின்னல் வேக போர் முறையாக இருந்தது!
மே, 26-ம் தேதி, பிரான்சிலுள்ள டன்கிர்க்கில் போர்களின் வரலாற்றிலேயே மிகவும் அசாதாரணமான ஒரு மீட்புப் பணி துவங்கியது. பத்து நாட்களாக, கடற்படை கப்பல்களும் நூற்றுக்கணக்கான பொதுத்துறை படகுகளும் சுமார் 3,40,000 பேரை இங்கிலாந்தின் கடற்கால்வாய் வழியாக பிரிட்டனுக்கு பத்திரமாகக் கொண்டு சேர்த்தது. ஆனால் அனைவரும் தப்பித்துவிடவில்லை. மூன்று வாரங்களுக்குள், ஜெர்மானியர்கள், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களைக் கைதிகளாக கொண்டு சென்றனர்.
ஜூன் 10-ம் தேதி இத்தாலி, க்ரேட் பிரிட்டன் மீதும் மற்றும் பிரான்சின் மீதும் போர் தொடுத்தது. நான்கு நாட்களுக்குப் பின்னர், பாரிஸ் ஜெர்மானியர்களால் கைப்பற்றப்பட்டது. மாதம் முடிவதற்குள், பிரான்சுக்கும் ஜெர்மனிக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. இப்பொழுது பிரிட்டன் தனியாக நின்றது. ஹோஃபர் விவரிக்கும் விதமாகவே: “மின்னல் வேகத்தில், ஹிட்லர்தானேகூட நினைத்திராத போதிலும் அவன் மேற்கத்திய ஐரோப்பாவுக்கு தலைவனானான்.
ஹிட்லர் எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாக, பிரிட்டன் சமாதானம் பண்ண முன்வரவில்லை. ஆகவே ஜூலை 16-ம் தேதி பிரிட்டிஷ் தீவுகள் மீது படையெடுக்க அவன் ஆணை பிறப்பித்தான். பிரிட்டன் மீண்டுமாக தாக்க இருந்த மின்னலுக்காக தன்னை பலப்படுத்திக் கொண்டது.
இப்பொழுது என்ன?
பல ஆண்டுகளாக யெகோவாவின் சாட்சிகள் பகிரங்கமாக சர்வ தேச சங்கத்தின் அழிவைக் குறித்து முன்னறிவித்து வந்தார்கள்.a இப்பொழுது மின்னல் போல துவங்கின இரண்டாம் உலகப் போர், அதன் உயிர் போரட்டத்தை முடித்து வைத்தது. எப்பொழுதோ செய்யப்பட்டிருக்க வேண்டிய ஈம சடங்குகள் இப்பொழுது செய்யப்படலாம். வெளிப்படுத்தின விசேஷம் 17:7-11 குறிப்பிடும் அபிஸிற்குள் சடலம் இப்பொழுது வைக்கப்படலாம். இந்த வசனங்களின் அடிப்படையில்தானே சாட்சிகள் அதன் தோல்வியை முன்னறிவித்திருந்தார்கள்.
ஆனால் மரணத்துக்குப் பின்பு, இப்பொழுது என்ன? இந்த போரனது ஒருவேளை பெரிய எதோ ஒன்றுக்கு, ஒருவேளை அர்மகெதோன் என்றழைக்கப்படும் “தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்துக்கு” வழிநடத்தக்கூடுமா? (வெளிப்படுத்தின விசேஷம் 6:4; 16:14-16 ஒப்பிடவும்) போர் இன்னும் எவ்விதமாக விரிவடையும் என்பதைக் காண ஆவலுள்ளவர்களாயிருந்த போதிலும், யெகோவாவின் சாட்சிகள் தனிப்பட்ட வகையில் எந்த ஈடுபாடும் கொள்ளாதிருக்க தீர்மானமாயிருந்தார்கள். அவர்கள் கிறிஸ்தவ நடுநிலைமையைக் காத்துக்கொள்வார்கள். இது சர்வாதிபத்திய ஆட்சியுள்ள தேசங்களிலும், மக்களாட்சியுள்ள தேசங்களிலும் அவர்களைத் தடையுத்தரவுகளுக்கு, சிறைவாசத்துக்கு, நீதிமன்ற நடவடிக்கைக்கு மற்றும் கலக கும்பல்களின் வன்முறைக்கு உட்படுத்தினாலும்கூட இவ்விதமாகச் செய்தார்கள். 1940-ன் அந்த யுத்த ஆண்டில் 1,00,000-க்கும் சற்று குறைவாகவே இருந்தபோதிலும், அவர்கள் கடவுளுடைய ஸ்தபிக்கப்பட்ட ராஜ்யத்தின் நற்செய்தியை, உண்மையான நம்பிக்கையின் செய்தியை பரப்புவதில் முன்னேறிச் சென்றார்கள்.
“பயத்தினால் துரத்தப்படும் தேசங்களின் தத்தளிப்புக்கு” நம்பிக்கையே தேவைப்பட்டது. “1914 முதற்கொண்டு உலகம்” என்ற தொடரின் எமது அடுத்த கட்டுரையின் தலைப்பு இதுவாகவே இருக்கும்.
(g87 4/8)
[அடிக்குறிப்புகள்]
a உதாரணமாக 1922 காவற்கோபுரம் ஏப்ரல் 1, பக்கம் 108 பின்வருமாறு சொன்னது: “சாத்தான் . . . இப்பொழுது சர்வ தேச சங்கம் அல்லது தேசங்களின் சங்கம் என்ற ஒரு பெயரில் அனைத்துலக பேரரசு ஒன்றை நிறுவ முயற்சி செய்கிறான். . . . இந்த உறவு பரிசுத்தமற்றதாகும். இது விரைவிலேயே நொறுக்கப்படும்.”
[பக்கம் 16-ன் பெட்டி]
மற்ற செய்தி குறிப்புகள்
1935—யாங்ஸி நதியோரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சீனாவில் 2,00,000-ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள்
1936—சமுத்திர நீராவிக் கப்பல் ராணி மேரி அட்லான்டிக்கை 95 மணிகள் 57 நிமிடங்கள் என்ற குறுகிய நேரத்தில் கடந்தது
பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டுகளில் கருப்பு அமெரிக்க இனத்தைச் சேர்ந்த ஜெஸி ஓவன்ஸ், நான்கு தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றபோது ஹிட்லர் சீற்றமடைந்தான்
1937—நைலான் என்றழைக்கப்படும் ஒரு புதிய பொருளுக்கு டியுபான்ட் கம்பெனி காப்புரிமைப் பெறுகிறது
ஜெர்மனின் பறவைக் கப்பல், அட்லாண்டிக் மாகடலுக்கு அப்பால் மேற்கொண்ட பயணத்துக்குப் பிறகு திரும்பியபோது, அதை நங்கூரமிட்டு பிணைக்கும்போது அது தீப்பிடித்துக்கொள்ள, 36 பேர் உயிரிழந்தனர்
1938—வத்திக்கன் பிரான்கோவின் ஆட்சியை அதிகாரப்பூர்வமான ஸ்பானிய அரசாங்கமாக ஏற்றுக்கொள்கிறது
விண்மத்தைத் தகர்க்க நொதுமம் பயன்படுத்தப்படலாம் என்பதை விஞ்ஞானிகள் ஹான், மற்றும் ஸ்டாஸ்மேன் என்பவர்கள் கண்டு பிடிக்கிறார்கள்
க்ரிஸ்டல் நைட் என்றழைக்கப்படும் சமயத்தில்இரவு அன்று?, யூதர்களுக்குச் சொந்தமான கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன
1939—துருக்கி பூமியதிர்ச்சியில் நூறாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்
முதல் விமான ஜெட் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது, மற்றும் முதல் ஹெலிகாப்டர் செய்து முடிக்கப்பட்டது
1940—புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ரேடாரை விமானப் போரில் பிரிட்டன் நாட்டவர் பயன்படுத்தினார்கள்
[பக்கம் 15-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
1940 வரையாக ரோம்-பெர்லின்-டோக்கியோ வல்லரசுகளின் ஐரோப்பிய ஆட்சிப் பரப்பின் விரிவு
ரோம்-பெர்லின்-டோக்கியோ வல்லரசுகளும் அவை வென்ற நிலப்பகுதிகளும்
நார்வே
டென்மார்க்
நெதர்லாந்து
பெல்ஜியம்
லக்ஸம்பர்க்
சுடிட்டென்லாண்ட்
போலாந்து
ரெனிலாண்ட்
பிரான்சு
ஆஸ்டிரியா
செக்கோஸ்லேவாக்கியா
ஹங்கேரி
ரோமானியா
அல்பேனியா
[பக்கம் 13-ன் படங்கள்]
போர் சர்வ தேச சங்கத்தின் சாவு மணியை அடித்தது