மரித்தவர்களுக்கு நம்பிக்கை, துக்கிப்பவர்களுக்கு ஆறுதல்
எமது ஆரம்பக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ரோமெரோ மறுமணம் செய்துகொண்டார். அகஸ்டின் மற்றும் வாலன்டீனாவை பொறுத்தவரையில், ஜோனத்தானின் மரணம் அவர்களுக்கு இன்னமும் வேதனையாக இருக்கிறது. ஆனால் ஒருவித அமைதி ஏற்பட்டிருக்கிறது. ஸ்பய்னைச் சேர்ந்த ரேமனும் மரியா செரானோவும் பக்குவிட்டோ மரித்து 24 வருடங்கள் கழிந்தும் கண்கலங்கி நிற்கின்றனர். ஆனால் இந்த எல்லா சம்பவங்களிலும் அவர்களைத் தொடர்ந்து தாக்குபிடிக்கச் செய்திருப்பது என்ன? “உயிர்த்தெழுதலின் நம்பிக்கை!” என்று அவர்கள் பதிலளிக்கிறார்கள்.
“உயிர்த்தெழுதல்” என்று சொல்வதில் நாம் உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகிறோம்? யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? எப்போது? அதைக் குறித்து நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
மரித்தவர்களுக்கான நம்பிக்கை—இயேசு கற்பித்தபடி
பூமியில் தம்முடைய ஊழியத்தின்போது, இயேசு அநேக ஆட்களை உயிர்த்தெழுப்பினார். (மாற்கு 5:35-42) கடவுளுடைய ஆட்சியின் கீழ் பூமி முழுவதுமாக நடைபெறவிருக்கும் மகத்தான உயிர்த்தெழுதலுக்கு இது ஒரு உதாரணமாக இருந்தது. அதைத்தானே கோடிக்கணக்கான ஆட்கள் ஜெபிக்கும்போது வேண்டிக்கொள்கின்றனர்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.”
உதாரணமாக, இயேசு தம்முடைய நண்பனாகிய லாசருவை உயிர்த்தெழுப்பினபோது இந்தக் காரியத்தில் கடவுளுடைய வல்லமை காண்பிக்கப்பட்டது. அதே சமயத்தில், மரித்தவர்களின் நிலைமையைக் குறித்தும் இந்த பதிவு தெளிவாக்குகிறது. இயேசு அவருடைய சீஷர்களிடம் சொன்னார். “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன்.” அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், சீஷர்கள் பின்வருமாறு கூறினார்: “ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைந்தான்.” அவன் மரித்திருக்கையில், லாசரு வெறுமென நித்திரையில் இருக்கிறான் என்று சீஷர்கள் கற்பனை செய்தனர். எனவே இயேசு சந்தேகத்திற்கு இடமளிக்காமல்: “லாசரு மரித்துப்போனான் என்றார்.”
சாவாமையுடைய ஓர் ஆத்துமா இன்னொரு நிலைமைக்குள் அல்லது மண்டலத்திற்குள் செல்வதைக் குறித்த எந்த ஒரு காரியத்தையும் இயேசு குறிப்பிடவில்லை என்பதை தயவுசெய்து கவனியுங்கள். சிரேக்க தத்துவம் அவர் மீது பாதிப்பைக் கொண்டில்லை, ஆனால் எபிரெய வேத எழுத்துக்களிலுள்ள தெளிவான பைபிள் போதகமே பாதித்தது. லாசரு மரணத்தின் நித்திரையிலிருந்தான், இயேசு வந்தபோது அவன் ஞாபகார்த்த கல்லறையில் நான்கு நாட்களாக வைக்கப்பட்டிருந்தான். எனவே, அவனுக்கு என்ன நம்பிக்கை இருந்தது?
லாசருவின் சகோதரியான மார்ததாளிடம் இயேசு பேசினபோது, அவர் கூறினார்: “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்.” அவள் எவ்வாறு பதிலளித்தாள்? அவனுடைய ஆத்துமா ஏற்கெனவே பரலோகத்தில் அல்லது வேறொரு இடத்தில் இருக்கிறதென்று அவள் கூறினாளா? அவள் பின்வருமாறு பதிலளித்தாள்: “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்.” பூமியில் ஜீவனுக்கென்று உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்ற பைபிள் போதகத்தை அவள் பற்றியிருந்தாள். விசுவாசம் வைப்பதற்கு மேலுமொரு சிறந்த காரணத்தையும் இயேசு அவளுக்கு கொடுத்தார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” பின்பு, இந்த குறிப்பை நிரூபிப்பதற்கு, அவர் லாசருவின் கல்லறைக்குச் சென்று, உரத்த சத்தமாய்: “லாசருவே, வெளியே வா!” என்று கூப்பிட்டார். என்ன நடந்தது?
சரித்திர பதிவு பின்வருமாறு கூறுகிறது: “மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: ‘இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.’”—யோவான் 11:1-44.
விழித்தெழு! பேட்டி கண்ட துக்கத்திலிருக்கும் அநேக ஆட்களுக்கு, இந்த நம்பிக்கை உதவி செய்திருக்கிறது. இந்தப் பூமி புதுப்பிக்கப்பட்ட பரதீஸாக ஆகும்போது இயேசுவின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் அவர்களுக்கு புத்துயிரளித்து, வெகு அருகாமையிலிருக்கும் எதிர்காலத்தை நோக்கி பார்க்கும்படி செய்கிறது: “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையுங்மபடி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.”—யோவான் 5:28, 29.
‘எனக்கு மிகவும் விருப்பமான வசனம் . . . ”
குடும்பத்தில் ஏற்படும் ஒரு பிள்ளையின் மரணத்தைக் குறித்து பெற்றோர்களையும் இளைஞர்களையும் விழித்தெழு! பேட்டி கண்டது.a தங்களுடைய துக்கத்தை எவ்வாறு மேற்கொண்டனர் என்பதை விவரிக்கும்போது அவர்கள் பலமுறை இப்படியாகச் சொல்லியிருக்கின்றனர்: “எனக்கு மிகவும் விருப்பமான வசனத்தை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” நீங்கள் துக்கத்தில் இருந்தால், ஒருவேளை இந்த வசனங்கள் உங்களுக்கும் உதவக்கூடும்.
1985-ல் கொரிய குடியரசின் சியோலில் பதினான்கு வயதான யுன்ஹீ லூக்கேமியா நோயால் இறந்துபோனாள். அவளுடைய தகப்பனான சுன்குவாங் கூக் யுன்ஹீக்கு அவளுடைய வாழ்க்கையின் கடைசி வாரங்களின்போது எவ்வாறு அவளுக்கு ஆறுதலளித்தார் என்று விழித்தெழு!-விடம் விவரித்தார்: “அவளிடம் லாசருவைப் பற்றி சொன்னேன். லாசரு நித்திரையிலிருந்தான் என்று இயேசு சொன்னார், அப்படியே, ‘யுன்ஹீ! எழுந்திரு!’ என்று இயேசு அழைக்கும்போது அவளும் நித்திரையிலிருந்து எழுந்து வருவாள்.”
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜானெட் ஹெர்காக் 1966-ல் புற்றுநோயின் காரணமாக 13 வயதில் மரித்தாள். தன்னுடைய பெற்றோரையும் டேவிட், தீமோத்தி என்ற இரண்டு சகோதரர்களையும் விட்டுச்சென்றாள். டேவிட் தனக்கு உதவியாக இருந்த வசனத்தை விழித்தெழு! நிருபரிடம் கூறினான்: “அது அப்போஸ்தலர் 17:31, அது இவ்வாறு வாசிக்கிறது: ‘மேலும் ஒரு நாளைக் [கடவுள்] குறித்திருக்கிறார், அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியயந்தீர்ப்பர்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்.’ சவ அடக்க பேச்சின்போது, இயேசுவின் உயிர்த்தெழுதல் தானே ஒரு எதிர்கால உயிர்த்தெழுதல் இருக்கிறது என்பதற்கு உறுதியளிக்கிறது என்பதைப் பேச்சாளர் அழுத்திக் காண்பித்தார். அது என்னை பலப்படுத்துவதற்கு ஒரு ஊற்றுமூலமாக இருக்கிறது.”
டிசம்பர் 1975-ல் 14 வயதான இளம் ஜார்ஜ் தன்னுடைய அப்பாவின் துப்பாக்கியை எடுத்து தன்னையே சுட்டுக்கொண்டான். ஜார்ஜின் தகப்பனாகிய ரசல் தன்னுடைய மகன் தற்கொலை செய்துகொண்டதனால் தனக்கு ஏற்பட்ட இழப்பை எவ்வாறு கருதினார்?b
“சில வசனங்கள் எனக்கு நங்கூரம் போன்று இருக்கின்றன. உதாரணமாக, நீதிமொழிகள் 3:5-லுள்ள வார்த்தைகள் பின்வருமாறு: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிரு.” சம்பவித்த காரியத்தைக் குறித்து என்னை நானே தேற்றிக்கொள்ள முற்படுவதன் மூலம் ஓரளவுக்கு என்னுடைய சுயபுத்தியின் மேல் சார்ந்துகொண்டிருந்தேன்.”
இங்கிலாந்தை சேர்ந்த மார்கன் குடும்பத்தார், ஸ்வீடனில் இருந்தபோது, திடீரென்று அவர்களுடைய மகன் டேரால் வியாதிப்பட்டான். ஸ்டக்ஹோமில் ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவன் மறுபடியும் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டான், அங்கே தன்னுடைய 24-வது பிறந்த நாளுக்கு சற்று முன்பாக இறந்துபோனான். அவனுடைய தாயாகிய நெல் கூறுகிறாள்: “என்னுடைய மனதில் நிற்கும் ஒரு வசனம் மத்தேயு 22:31, 32. அங்கே இயேசு கடவுளை பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார்: ‘நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன்.’ அவர் தொடர்ந்து சொன்னதாவது: ‘தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்.’ டேரால் கடவுளுடைய ஞாபகார்த்தத்தில் இருக்கிறான் என்பதாகவும், உயிர்த்தெழுதலில் மறுபடியும் திரும்புவான் என்பதாகவும் அவ்வார்த்தைகள் அர்த்தப்படுத்துகின்றன என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
மரித்தோருக்கு நம்பிக்—கூடிய சீக்கிதரத்தில் உண்மையாகப்போகிறது
கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு சமாதானத்தையும் நித்திய ஜீவனையும் மறுபடியும் நிலைநாட்டுவதில் கடவுள் நடவடிக்கை எடுக்கும் காலத்திற்கு நாம் வெகு அருகில் இருக்கிறோம் என்று பைபிள் தீர்க்கதரிசனம் சுட்டிக் காட்டுகிறது. கடவுள் பின்வருமாறு வாக்களிக்கிறார்: “நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.” “‘நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று யெகோவா சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் ‘தேசத்திலிருந்து [மரணத்திலிருந்து] திரும்பி வருவார்கள்.’”.—எரேமியா 31:13-17.
மனித சரித்திரம் முழுவதிலும் மரித்திருப்பவர்களை யெகோவா அந்தச் சமயத்தில் படிப்படியாக, உயிர்த்தெழுதலின் மூலம் ஜீவனுக்கு கொண்டுவருவார். அந்தச் சமயத்தில் ஜீவனைப் பெறுவதற்கு கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம், கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் பரலோக அரசாங்கத்தின் கீழ் நித்திய ஜீவனை தேர்த்தெடுப்பதற்கான வாய்ப்பை, அவர்கள் பெற்றிடுவார்கள். எனவே, பைபிளிடமாக திரும்புவோமானால், நாம் நம்பிக்கையும் உயிரோடிப்போருக்கு ஆறுதலும் இருக்கிறது என்பதைக் காண்போம்.—அப்போஸ்தலர் 24:15; வெளிப்படுத்துதல் 20;12-14; 21:1-4. g87 8⁄8
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! பத்திரிகையின் இன்னொரு வெளியீடு ஒரு சகோதரன் அல்லது சகோதரியின் இழப்புக்கு ஒரு பிள்ளையின் பிரதிபலிப்பைக் குறித்து சிந்திக்கும்.
b தற்கொலை மற்றும் பெற்றோரின் வருத்தம் குறித்து விழித்தெழு! பத்திரிகையின் இன்னொரு வெளியீடு சிந்திக்கும்.
[பக்கம் 14-ன் பெட்டி]
எமது இரண்டாவது கட்டுரையில், தன்னுடைய மகன் டேவிடின் மரணத்தை விவரித்த டயானே க்ரீஷ் அளவுகடந்த துக்கத்தில் ஆழ்ந்து மறுப்புக்குரிய பிரதிபலிப்புகளைக் கொண்டிருந்தாள். அவள் டேவிடுக்கு 13 ஆண்டுகளாக எழுதி வைத்த கடிதங்களிலிருந்து இது புலனாகிறது. தான் பராமரித்துவந்த தன்னுடைய சொந்த தகப்பன் மரித்த அந்த உண்மை நிலையை சந்தித்தபோது அக்கடிதங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டாள். (துக்கத்திலிருந்து தன்னை தனித்துக்கொள்வதற்கு கடிதம் எழுதுவதை ஒரு வழியாக விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை. என்றபோதிலும், உயிர்த்தெழுதல் நம்பிக்கை எப்படி அவளுக்கு ஒரு நங்கூரமாக அதுமுதல் அவளைத் தேற்றிவந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்கே முதல் கடிதத்தை இங்கு மேற்கோள் காட்டுகிறோம்.)
அன்புள்ள டேவிட்,
இப்பொழுது நீ 46 நாட்களாகத் தூங்கியிருக்கிறாய். நான் உன்னைத் தொட்டுப்பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டது போலிருக்கிறது. ஆனால் உன் நித்திரையின் நாட்கள் அதிகமில்லை. அதன் எண்ணிக்கை மட்டும் எனக்குத் தெரிந்தால், ஒவ்வொரு நாளையும் நான் குறியிட்டுக் கொண்டிருப்பேன். எங்களுக்கு அது நீண்ட, கடினமான, தனிமையாகக் காத்துக்கொண்டிருக்கும் நாட்கள். ஆனால் உனக்கோ, அது ஒருசில நிமிடங்கள் போலிருக்கும். அதற்காக நான் நன்றியுள்ளவளாயிருக்கிறேன். புதிய ஒழுங்குமுறையில் யெகோவா உன்னை எழுப்பும் அந்த நாளுக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். அன்று நீ என்றும் பார்த்திராத மிகப் பெரிய விருந்தைக் கொண்டிருப்போம். அது குறைந்தது மூன்று நாட்களுக்காவது நீடிக்கும். நமக்குத் தெரிந்த எல்லோருமே அதற்கு அழைக்கப்படுவார்கள். அது உனக்குரிய விருந்ததாக இருக்கும். அதற்காக நாங்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டியதாயிராது என்று நான் நம்புகிறேன். டேவிட், உன்னை என்னுடைய கரங்களில் அணைத்துக்கொள்ள என்னால் காத்திருக்க முடியவில்லை. உன்னை வெகுவாகப் பிரிந்திருக்கிறோம். நீ இல்லாமல் வீடு வெறுமையாக இருக்கிறது. நீ மீண்டும் வீடு திரும்பும்வரை எதுவுமே பழைய மாதிரி இருக்காது.
ஆக, என் அருமை மகனே, நீ திரும்பி வரும்வரை நாங்கள் பொறுமையாகவும், யெகோவாவில் காத்திருப்பவர்களாகவும் இருக்க முயன்று பார்ப்போம். அதற்கிடையில், நி தூங்கிக்கொண்டிருக்கும்போது என்ன சம்பவிக்கிறது என்பதை உனக்காக நாங்கள் சிறு குறிப்புகளை எழுதி வைக்கிறோம்.
இப்படிக்கு,
உன் அன்புள்ள அம்மா