மொழியின் அற்புதம்—அதை நாம் எப்படி பெற்றுக்கொள்கிறோம்
நீங்கள் எப்பொழுதாவது வார்த்தைக்குத் தடுமாறியதுண்டா? அப்படிப்பட்ட சமயங்கள் அதிகம் இருப்பதில்லை, ஏனென்றால் நம்முடைய கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் பரிமாறிக்கொள்வதில் நாம் பொதுவாக மகிழ்ச்சியடைகிறோம். மொழி அதைச் செய்ய நமக்கு இடம் கொடுக்கிறது. மொழி வல்லுனர் ஒருவர் உறுதியுடன் கூறினார்: “மொழியின்றி எண்ணம் இல்லை.”
உண்மைதான், விலங்கின உலகில் விலங்குகள் வார்த்தைகள் இல்லாமல் தகவல்களைத் தெரிவித்துக்கொள்கின்றன: பறவைகள் பாடுகின்றன, சிங்கங்கள் கெர்ச்சிக்கின்றன, திமிங்கல இனங்கள் சீழ்க்கை ஒலி எழுப்புகின்றன, தேனீக்கள் நடனமாடுகின்றன. மற்ற விலங்கினங்கள் தங்களுடைய உடலின் நிலைகள், சைகைகள், தொடுதல் மற்றும் குரல், மணம் ஆகியவற்றையும்கூட தொடர்பு கொள்ளும் வழிகளாகப் பயன்படுத்துகின்றன. ‘தூரத்தில் இரு!’ ‘கவனமாகப் பார்!’ ‘என்னிடம் வந்து சேர்ந்துகொள்!’ இவை மிகத் தெளிவாகத் தெரியும் விலங்கினச் செய்திகள்!
என்றபோதிலும், விலங்கினத் தகவல்தொடர்பு குறைந்தளவானதே. மறுபட்சத்தில், மொழி, மனிதரைத் தாங்கள் கவனிக்கும் அல்லது கற்பனைச்செய்யும் எதையும் பேசுவதற்கு இடம்கொடுக்கிறது. கல்விப் பேராசிரியர் டென்னிஸ் சைல்டு சொன்னதாவது: “மொழி மனிதரின் மிக அருமையான உடைமை.” ஆனால் இந்த அற்புதமான உடைமையை நாம் எப்படி பெற்றுக்கொள்கிறோம்? தங்களுடைய பிள்ளைகள் இதை விருத்திசெய்துகொள்வதற்குப் பெற்றோர் எப்படி உதவலாம்?
மொழியும் மூளையும்
நாம் எப்படி பேச கற்றுக்கொண்டோம் என்பது அறிஞர்களை நூற்றாண்டுகளாகத் திகைக்கவைத்திருக்கிறது. குறிப்பிடத்தக்கவிதத்தில், சுயமாய் நடக்கும், சாப்பிடும் பருவம் வராத சிறுபிள்ளைகள்கூட இலக்கண விதிகள் அறியாதவர்களும் விசேஷ பயிற்றுவிப்பு இல்லாதவர்களுமாயிருந்த போதிலும் பேச கற்றுக்கொள்கிறார்கள்! மொழி வல்லுனராகிய ரோனால்டு A. லாங்கேக்கர் எழுதுகிறார்: “[பிள்ளை] ஒரு மொழிசார்ந்த முறையில் தேர்ச்சிபெறுகிறது. இதை அவன் மறைமுகமான துணுக்கு ஆதாரங்களின் அடிப்படையில், தற்கரீதியாக பகுத்துணரும் சிந்தனா திறமை இல்லாத ஒரு வயதில் செய்கிறான்.”
இதனால் மொழி கற்கும் திறமை—குறிப்பாக எந்த மொழி என்பது அல்ல—பிறப்பில் உடன்வருவதாகும், ஒரு பிள்ளையின் ஆரம்ப வருடங்களில் மலரும் ஒரு திறமையாகும்.
என்றபோதிலும், ஒரு குழந்தையின் மூளை முதலில் பேச்சு திறமையை விருத்திசெய்துகொள்ளும் காரியத்தில் வெகுவாக முதிர்ச்சியற்றதாயிருக்கிறது. உண்மைதான், இது முயற்சி செய்வதிலிருந்து குழந்தையை நிறுத்திவிடுவதில்லை. ஆம், ஒரு குழந்தையின் மழலை, அதன் பேச்சுத் திறமை விருத்தியடைவதன் ஒரு பாகமாக இருக்கிறது, பின்னால் வார்த்தைகளைத் தெளிவாக உச்சரிப்பதற்கு அது ஓர் ஒத்திகையாக இருக்கிறது என்று விஞ்ஞானிகளில் சிலர் நம்புகின்றனர். வார்த்தைகளைத் தெளிவுபட உச்சரிப்பதற்குக் குழந்தை கடினமாக முயற்சி செய்யும் அதே சமயத்தில், அதன் மூளையுங்கூட பேசுவதற்காகத் தன்னை மும்முரமாக ஆயத்தப்படுத்துகிறது. ஒரு பிள்ளையின் உடல் வளர்ச்சி அதன் இளமைப் பருவத்துக்கு முன்னால் சற்று மெதுவாக இருந்த போதிலும், அதன் மூளை ஐந்து வயதை எட்டும்போது பெரியவர்களுடைய மூளையின் எடையில் 90 சதவிகிதத்தை எட்டிவிடுகிறது. (பெரியவர்களுடைய மூளையின் முழு எடையை ஏறக்குறைய 12 வயதில் எட்டுகிறது.) அப்படியென்றால், வாழ்க்கையின் முதல் ஐந்து வருடம், குறிப்பாக முதல் இரண்டு வருடம் கடினமாக கற்றுக்கொள்வதற்கான முக்கியமான பருவமாக இருக்கிறது.
அந்தக் காலப் பகுதியில், மூளையின் கார்டெக்ஸ் (cortex) பகுதியிலுள்ள நரம்பு செல்கள் வளர்ந்து கிளை பிரிந்து, பின்னி இணைந்திருக்கும் ஓர் இழைமப்பொதியாக உருவாகிறது. குழந்தையின் 15 முதல் 24 மாதங்களில், மூளை வளர்ச்சியில் ஒரு திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது. இப்பொழுது மூளை மொழியைக் கற்றுக்கொள்ளும் அம்சத்தைக் கையாள ஆயத்தமாயிருக்கிறது. இப்படியாக, இந்த ஆரம்ப ஆண்டுகளில் குழந்தையை மொழியின் சூழ்நிலைக்குள் உட்படுத்துவது மிகவும் இன்றியமையாததாயிருக்கிறது.
அக்கறைக்குரிய விதத்தில், “குழந்தைப் பருவமுதல்” கற்பிக்கப்பட்டான் என்று பைபிள் இளம் மனிதனாகிய தீமோத்தேயுவைப் பற்றி பேசுகிறது.—2 தீமோத்தேயு 3:15.
மொழி சம்பந்தமான திறமைகளை விருத்தி செய்ய பிள்ளைகளுக்கு உதவுதல்
ஒரு பிள்ளையின் பேச்சு விருத்தியில் தாய்மார்களுக்கு ஒரு முக்கியமான பாகம் இருக்கிறது. உணர்வுகளுக்கு விழிப்புடைய ஒரு தாய், தன்னுடைய குழந்தையின் சமிக்கைகளைப் புரிந்து, அதனோடு பேச ஆரம்பிக்கிறாள். தான் சொல்லுவதைக் குழந்தை புரிய ஆரம்பிப்பதற்கு முன்பே அப்படிச் செய்கிறாள். ஆம், பேச்சுக்கான அஸ்திபாரம் போடப்படுகிறது. விரைவில் குழந்தை தாயின் வார்த்தைகளுக்குத் தன்னுடைய சொந்த பாணியில் பிரதிபலிக்கிறது. ஆய்வாளராகிய M.I. லிஸினா கூறுகிறாள்: “பிள்ளைகளின் பேச்சு விசேஷமாக சூழ இருக்கும் ஆட்களுடன் ஏற்படும் தொடர்பால் உருவாகிறது.” எனவே தந்தையாரும், தாயாரும், தாத்தா பாட்டிமாரும், நண்பர்களும் குழந்தையுடன் சம்பாஷிப்பதன் மூலமும், கதை சொல்வதன் மூலமும், வாசிப்பதன் மூலமும் அதன் பேச்சு விருத்தியில் பங்குகொள்ளலாம்.
சுவீடன் தேசத்தைச் சேர்ந்த உளநூல் வல்லுனர் C.I. சான்டுஸ்ட்ராம் மேலுமாகக் கவனித்தது, மொழி சம்பந்தமாக நன்றாய்ச் செய்த பிள்ளைகள் “பெரியவர்களோடு நல்ல தொடர்புடையவர்கள். அந்தக் குடும்பங்கள் பொதுவாகக் காலையுணவை ஒன்றாக அருந்தினார்கள், சம்பாஷணையில் பங்குகொள்வதற்குப் பிள்ளைகள் அனுமதிக்கப்பட்டார்கள்.” முரணாக, மொழி அம்சத்தில் குறைந்து காணப்பட்ட இளைஞர்கள் “பொதுவாகத் தங்கள் காலையுணவைத் தனியே அருந்துவார்கள்,” மற்றும் “இரவு உணவின்போதும் சம்பாஷணையில் அதிகமாகக் கலந்துகொள்வதில்லை.” எனவே உணவு அருந்தும் வேளைகளில் குடும்பம் ஒன்றாக சேர்ந்திருப்பது மொழி அபிவிருத்திக்கு உதவுகிறது.
உங்கள் பிள்ளைகளை உங்களுடன் வெளியே கூட்டிச்செல்வதுங்கூட அவனுடைய பேச்சு அபிவிருத்தியடைவதற்கு ஓர் அருமையான வாய்ப்பாக இருக்கிறது. அப்பொழுது நீங்கள் காரியங்களை எளிய வார்த்தைகளில் விளக்குகிறீர்கள். ஒன்றாக சேர்ந்து ஒரு மலரின் வாயை, ஒரு பட்டுப்புழு இலையை அரித்து உண்பதை, ஒரு சிலந்தி பூச்சி கூடு கட்டுவதைப் பாருங்கள். காரியங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற பிள்ளையின் இயல்பான தன்மையை அதன் மொழி விருத்திக்காகப் பயன்படுத்துங்கள். விலங்ககங்களில் நீங்கள் பார்க்கும் விலங்குகளைக் குறித்தும், உங்கள் பாதை வழியே இருக்கும் சிப்பிகளையும் கூழாங்கற்களையும் குறித்தும், நீங்கள் இன்புறும் வித்தியாசமான உணவுவகைகளைக் குறித்தும் பேசுங்கள். உண்மைதான், இந்தக் காரியங்கள் எல்லாமே நேரத்தையும் பொறுமையையும் உட்படுத்துகிறது, ஆனால் அதன் பலன்கள் அத்தனை நன்மையானவை!
பிள்ளைகள் மிக இள வயதிலேயே பேசுவதற்குக் கற்றுக்கொடுப்பதற்கு மற்றொரு சிறந்த ஏது இருக்கிறது. என்னுடைய பைபிள் கதை புத்தகம் (My Book of Bible Stories) கதைகளின் கேசட்டுகளை ஒழுங்காகப் போட்டு பிள்ளைகள் அதைக் கேட்கும்படிச் செய்யலாம்.a
புதிய வார்த்தைகள், புதிய தொடர்கள், கூற்றுகள், புதிதாகப் புரிந்துகொள்ளும் காரியங்கள் ஆகியவை உங்கள் பிள்ளையின் பேச்சுக்கு வண்ணமூட்டுவதுமட்டுமின்றி, அவனுடைய புத்திக்கூர்மையையும் விருத்திசெய்கிறது. இயற்கையில் காணப்படும் ஆச்சரியங்கள் எப்படி சிருஷ்டிகருடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் காண்பிக்கும்போது அல்லது கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி சம்பாஷிக்கும்போது, சிருஷ்டிகரிடமாக ஒரு பிள்ளையின் அன்பும் போற்றுதலும் ஆழமடைகிறது.—உபாகமம் 6:6–9.
நல்லவேளையாக, மொழியறிவின் அளவையும் தரத்தையும் கூட்டுவதற்கான வாய்ப்புவளம் உங்கள் இளமைப்பருவத்துக்குக் கட்டுப்பட்டதாக இல்லை. ஒவ்வொரு நாளும் நாம் புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதன்மூலமும் நல்ல இலக்கணத்தோடு பேச பழகிக்கொள்வதன் மூலமும் நம்முடைய பேச்சுத்தொடர்பின் தரத்தைப் பூரணப்படுத்தலாம். இவ்வாறு, தொடரும் மொழியின் அற்புதத்தில் பங்குடையவர்களாயிருக்கிறோம், நாம் வார்த்தைகளுக்குத் தடுமாறுவதில்லை. (g87 11⁄22)
[அடிக்குறிப்புகள்]
a இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போரிடம் ஆங்கிலத்தில் கிடைக்கிறது.