“சுத்தமான பாஷை”—சரளமாகப் பேசுகிறீர்களா?
‘ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளும்படிக்கு . . . நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.’—செப். 3:9.
1. யெகோவா நமக்கு வழங்கியிருக்கிற அருமையான பரிசு என்ன?
மொழியெனும் பரிசை வழங்கியது மனிதன் அல்ல, மனிதனைப் படைத்த யெகோவா தேவனே. (யாத். 4:11, 12) அவர், முதல் மனிதனான ஆதாமுக்குப் பேசும் திறனை மட்டுமல்லாமல், புதுப்புது வார்த்தைகளை உருவாக்கிச் சொல்வளத்தைப் பெருக்குவதற்கான திறனையும் அளித்தார். (ஆதி. 2:19, 20, 23) இது எவ்வளவு அருமையான பரிசு! இந்தப் பரிசைப் பயன்படுத்தி, மனிதரால் தங்களுடைய பரலோகத் தகப்பனிடம் பேசவும் அவருடைய மகத்தான பெயரைப் புகழ்ந்து போற்றவும் முடிந்திருக்கிறது.
2. இன்று மனிதர் ஏன் ஒரே மொழியைப் பேசுவதில்லை?
2 மனித சரித்திரத்தின் முதல் 17 நூற்றாண்டுகளில் எல்லாரும் ‘ஒரே விதமான சொற்களையுடைய’ ஒரே மொழியையே பேசினார்கள். (ஆதி. 11:1, பொது மொழிபெயர்ப்பு) அதற்குப் பிறகு, நிம்ரோதின் காலத்தில் கீழ்ப்படியாத மக்கள் யெகோவா சொன்னதற்கு எதிர்மாறாக, ஒரே இடத்தில் குடியிருக்கத் தீர்மானித்தார்கள். அந்த இடம் பின்னர் பாபேல் என அழைக்கப்பட்டது. அங்கே அவர்கள் வானளாவ உயர்ந்து நிற்கும் ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள்; யெகோவாவுக்கு மகிமை சேர்ப்பதற்குப் பதிலாக, ‘தங்களுக்குப் பேர் உண்டாகவே’ அதைக் கட்டினார்கள். ஆகவே, யெகோவா அவர்களுடைய மொழியைத் தாறுமாறாக்கி, பல்வேறு மொழிகளைப் பேசும்படி செய்தார். இதனால், அவர்கள் பூமியெங்கும் சிதறிப்போனார்கள்.—ஆதியாகமம் 11:4–8-ஐ வாசியுங்கள்.
3. பாபேலில் மக்களின் மொழியை யெகோவா தாறுமாறாக்கியபோது என்ன நடந்தது?
3 இன்று உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன; 6,800-க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுவதாகச் சிலர் சொல்கிறார்கள். இந்த ஒவ்வொரு மொழியிலும் அதற்கே உரிய விதத்தில் சிந்திக்க வேண்டியுள்ளது. அப்படியானால், அந்த மக்கள் பேசிய மொழியை யெகோவா தேவன் தாறுமாறாக்கியபோது அம்மொழியைப் பற்றிய எல்லா நினைவையும் அவர்களுடைய மனதிலிருந்து முற்றிலுமாய் அழித்துவிட்டாரெனத் தெரிகிறது. அவர்களுடைய மனங்களில் புதிய சொற்களை உதிக்கச் செய்ததோடு அவர்களுடைய சிந்திக்கும் விதத்தையும் அவர் மாற்றினார். இதனால், ஒவ்வொரு மொழிக்கும் அதற்கே உரிய இலக்கணம் உருவானது. அதனால்தான், அந்தக் கோபுரம் இருந்த இடம் “பாபேல்” என அழைக்கப்பட்டது; அதன் அர்த்தம், தாறுமாறு என்பதாகும். (ஆதி. 11:9) இன்று பேசப்படுகிற பலதரப்பட்ட மொழிகள் எப்படித் தோன்றின என்பதற்குத் திருப்திகரமான இந்த விளக்கத்தை பைபிள் மட்டுமே தருவது ஆர்வத்திற்குரியது.
ஒரு புதிய, சுத்தமான மொழி
4. நம் நாளில் என்ன நடக்கும் என்று யெகோவா முன்னறிவித்தார்?
4 பாபேலில், மக்களுடைய மொழியை கடவுள் தாறுமாறாக்கின சம்பவத்தை வாசிப்பது நமக்குச் சுவாரஸ்யமூட்டலாம். ஆனால், அதைவிட சுவாரஸ்யமூட்டும் முக்கிய சம்பவம் நம் நாளில் நடந்திருக்கிறது. “அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் [“யெகோவாவுடைய பெயரை,” NW] தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்” என்று செப்பனியா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா முன்னறிவித்தார். (செப். 3:9) அந்தச் “சுத்தமான பாஷை” எது, அதைச் சரளமாகப் பேச நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?
5. “சுத்தமான பாஷை” என்பது என்ன, இந்த பாஷையினால் என்ன நன்மை ஏற்பட்டிருக்கிறது?
5 யெகோவா தேவனையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி பைபிளில் சொல்லப்பட்டுள்ள சத்தியமே அந்தச் சுத்தமான பாஷையாகும். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும், அது அவருடைய பெயரை எப்படிப் பரிசுத்தப்படுத்தும், அவருடைய அரசதிகாரமே சரியானதென எப்படி நிரூபிக்கும், உத்தம மனிதருக்கு நித்திய ஆசீர்வாதங்களை எப்படி அளிக்கும் ஆகியவற்றைப் பற்றியும் திருத்தமாகப் புரிந்துகொள்வது அந்த “பாஷை”யில் அடங்கும். இந்தச் சுத்தமான மொழியினால் என்ன நன்மை ஏற்பட்டிருக்கிறது? மக்கள் ‘யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்வார்கள்’ என்றும் ‘ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்வார்கள்’ என்றும் நாம் ஏற்கெனவே வாசித்தோம். பாபேலில் உருவான பல்வேறு மொழிகள் மக்களைச் சிதறிப்போகச் செய்தது. இந்தச் சுத்தமான மொழியோ, மக்களை ஒன்றுபடுத்தியிருக்கிறது, யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்த்திருக்கிறது.
சுத்தமான பாஷையைக் கற்றுக்கொள்வது
6, 7. (அ) வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டியிருக்கிறது, சுத்தமான பாஷையைக் கற்றுக்கொள்ளும் விஷயத்தில் இது எவ்வாறு பொருந்துகிறது? (ஆ) இப்போது நாம் எதைச் சிந்திப்போம்?
6 ஒருவர் வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கும்? அவர் புதிய வார்த்தைகளை மனப்பாடம் செய்வது மட்டுமே போதாது. அவர் சிந்திக்கும் விதத்தையே மாற்ற வேண்டியிருக்கும். பகுத்தறியும் விதமும் நகைச்சுவையும் மொழிக்கு மொழி வேறுபடலாம். புதிய வார்த்தைகளை உச்சரிப்பதற்காக, நாக்கை வெவ்வேறு விதங்களில் அவர் பயன்படுத்த வேண்டியிருக்கும். சுத்தமான பாஷையாகிய பைபிள் சத்தியத்தை நாம் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போதும் அவ்வாறே செய்ய வேண்டியுள்ளது. அடிப்படை பைபிள் போதனைகள் சிலவற்றைக் கற்றுக்கொண்டால் மட்டுமே போதாது. இந்தச் சுத்தமான பாஷையை நன்கு கற்றுக்கொள்வதற்கு, நம் சிந்தனையைச் சரிப்படுத்த வேண்டும், நம் மனப்பான்மையையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.—ரோமர் 12:2-ஐயும் எபேசியர் 4:23-ஐயும் வாசியுங்கள்.
7 இந்தச் சுத்தமான பாஷையைப் புரிந்துகொள்வதோடு, அதைச் சரளமாகப் பேசுவதற்கு எது நமக்கு உதவும்? எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்வதற்கு அதற்கே உரிய சில வழிமுறைகள் உதவுவதைப் போல, பைபிள் சத்தியமென்னும் மொழியைச் சரளமாகப் பேசுவதற்கும் சில வழிமுறைகள் நமக்கு உதவும். வேறொரு மொழியைக் கற்றுக்கொள்பவர்கள் என்ன சில அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதையும், சுத்தமான பாஷையைக் கற்றுக்கொள்வதற்கு இவை எப்படி உதவும் என்பதையும் இப்போது சிந்திப்போம்.
சுத்தமான பாஷையைச் சரளமாகப் பேசுவது
8, 9. சுத்தமான மொழியைக் கற்றுக்கொள்ள நாம் விரும்பினால் என்ன செய்ய வேண்டும், இது ஏன் மிகவும் முக்கியம்?
8 கவனித்துக் கேளுங்கள். வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவருக்கு முதன்முதலில் ஒன்றுமே புரியாது. (ஏசா. 33:19) ஆனால், அதை அவர் கவனித்துக் கேட்கக் கேட்க, ஒவ்வொரு வார்த்தையையும் இனம் கண்டுகொள்வார். பேச்சில் அந்த வார்த்தை எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கவனிக்க ஆரம்பிப்பார். அவ்வாறே, “நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்” என நமக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. (எபி. 2:1) “கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று இயேசு திரும்பத் திரும்ப தம் சீஷர்களுக்கு அறிவுரை வழங்கினார். (மத். 11:15; 13:43; மாற். 4:23; லூக். 14:35) ஆம், சுத்தமான மொழியை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு நம் காதில் விழும் விஷயங்களை ‘கேட்டு உணர’ வேண்டும்.—மத். 15:10; மாற். 7:14.
9 ஒருவர் பேசும்போது காதுகொடுத்துக் கேட்பதற்கு நம் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். அதனால் பலன் கிடைப்பது நிச்சயம். (லூக். 8:18) கூட்டங்களில் பேச்சாளர் சொல்வதைக் கேட்கும்போது நம் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறோமா அல்லது சிதறவிடுகிறோமா? அங்குச் சொல்லப்படுவதைக் கவனம் சிதறாமல் கேட்பதற்கு நாம் கடினமாய் முயற்சி செய்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால், கேட்பதில் நாம் மந்தமாகிவிடுவோம்.—எபி. 5:11.
10, 11. (அ) கவனித்துக் கேட்பதோடு வேறு எதையும் நாம் செய்ய வேண்டும்? (ஆ) சுத்தமான பாஷையைப் பேசுவதற்கு வேறு எதையும் நாம் செய்ய வேண்டும்?
10 சரளமாகப் பேசுபவர்களைப் பின்பற்றுங்கள். வேறொரு மொழியைக் கற்றுக்கொள்பவர்கள் கவனித்துக் கேட்பது அவசியம்தான். அதோடு, அந்த மொழியைச் சரளமாகப் பேசுபவர்கள் வார்த்தைகளை உச்சரிக்கும் விதத்தையும், அவற்றைப் பேச்சில் பயன்படுத்தும் விதத்தையும் பின்பற்றி தாங்களும் அப்படியே பேசிப்பார்க்க வேண்டும். இப்படிச் செய்தால் தவறாக உச்சரிப்பதைத் தவிர்ப்பார்கள், பிற்பாடு அவர்கள் பேசுவதைக் கேட்கிற மற்றவர்களும் புரியாமல் விழிக்க மாட்டார்கள். அவ்வாறே, சுத்தமான மொழியை ‘கற்பிக்கும் கலையில்’ புலமை பெற்றவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். (2 தீ. 4:2, NW) அவர்களுடைய உதவியை நாடுங்கள். நீங்கள் தவறுசெய்கையில், திருத்தப்படும்போது அதை ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாய் இருங்கள்.—எபிரெயர் 12:5, 6, 11-ஐ வாசியுங்கள்.
11 சுத்தமான பாஷையைப் பேசுவதற்கு, சத்தியத்தை ஏற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்குப் போதித்தால் மட்டும் போதாது, கடவுளுடைய சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு இசைவாக நடக்கவும் வேண்டும். இவ்வாறு செய்வதற்கு, நாம் மற்றவர்களைப் பின்பற்ற வேண்டும். அவர்களுடைய விசுவாசத்தையும் பக்திவைராக்கியத்தையும் பின்பற்றுவதையும் இது குறிக்கிறது. இயேசுவின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதையும் இது உட்படுத்துகிறது. (1 கொ. 11:1; எபி. 12:1, 2; 13:7) இப்படிச் செய்துவந்தால், கடவுளுடைய மக்களோடு சேர்ந்து சுத்தமான பாஷையை நாம் ஒரே விதமாகப் பேசவும் முடியும், நம் மத்தியில் ஒற்றுமையும் நிலவும்.—1 கொ. 4:16, 17.
12. வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு மனப்பாடம் செய்வது எப்படி உதவும்?
12 மனப்பாடம் செய்யுங்கள். வேறொரு மொழியைக் கற்றுக்கொள்பவர்கள் புதுப்புது விஷயங்கள் பலவற்றை மனப்பாடம் செய்ய வேண்டும். இதற்கு, புது வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும். அவ்வாறே, சுத்தமான பாஷையில் கிறிஸ்தவர்கள் புலமை பெறுவதற்கு மனப்பாடம் செய்வது மிகவும் உதவியாயிருக்கும். பைபிள் புத்தகங்களின் பெயர்களை வரிசைப்படி மனப்பாடம் செய்வது நல்லது. சில பைபிள் வசனங்களையோ சில வசனங்கள் பைபிளில் காணப்படும் இடங்களையோ மனப்பாடம் செய்வதற்குச் சிலர் இலக்கு வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர், ராஜ்ய பாடல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்கள், 12 அப்போஸ்தலரின் பெயர்கள், ஆவியின் கனிகள் ஆகியவற்றை மனப்பாடம் செய்து பயனடைந்திருக்கிறார்கள். முற்காலத்தில், இஸ்ரவேலர் பலரும் சங்கீதங்களை மனப்பாடம் செய்தார்கள். நம் நாளிலும், ஒரு சிறுவன் ஆறு வயதிற்குள்ளாகவே 80-க்கும் அதிகமான பைபிள் வசனங்களை ஒரு வார்த்தை விடாமல் மனப்பாடம் செய்திருந்தான். இந்த அசாத்தியத் திறமையை நாமும்கூட நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம், அல்லவா?
13. திரும்பத் திரும்பச் சொல்வது ஏன் மிகவும் முக்கியம்?
13 திரும்பத் திரும்பச் சொல்வது ஞாபகத்தில் வைக்க உதவுகிறது. திரும்பத் திரும்பச் சொல்லி ஞாபகமூட்டுவது, சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு மிகவும் முக்கியம். “இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (2 பே. 1:12) நமக்கு நினைப்பூட்டுதல் ஏன் அவசியம்? சத்தியத்தை நன்கு புரிந்துகொள்வதற்கும் சிந்தனையை விரிவாக்குவதற்கும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற தீர்மானத்தை வலுப்படுத்துவதற்கும் அது அவசியம். (சங். 119:129, NW) கடவுளுடைய நெறிமுறைகளையும் நியதிகளையும் திரும்பத் திரும்பச் சிந்திப்பது நம்மை நாமே பரிசீலித்துப் பார்க்க உதவுகிறது; அதோடு, ‘கேட்கிறதை மறந்துவிடும்’ மனப்பான்மையை மேற்கொள்ளவும் உதவுகிறது. (யாக். 1:22–25) சத்தியத்தை நாம் நினைவுபடுத்திப் பார்க்கவில்லை என்றால், நம் இருதயத்தில் வேறு காரியங்கள் குடிகொள்ளும், அதனால், சுத்தமான பாஷையை நம்மால் சரளமாகப் பேச முடியாமல் போய்விடலாம்.
14. சுத்தமான பாஷையைப் படிக்கும்போது நமக்கு எது உதவும்?
14 சத்தமாக வாசியுங்கள். வேறொரு மொழியைக் கற்றுக்கொள்பவர்கள் சிலர் தங்களுக்குள் மௌனமாகப் படிக்க முயலுவார்கள். இதனால் சிறந்த பலன்கள் கிடைப்பதில்லை. சுத்தமான பாஷையைப் படிக்கும்போது, சில சமயங்களில் நம் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்காக ‘தாழ்ந்த குரலில்’ (NW) வாசிக்க வேண்டியிருக்கலாம். (சங்கீதம் 1:2-ஐ வாசியுங்கள்.) இவ்வாறு செய்யும்போது, நாம் வாசிக்கும் பகுதி நம் மனங்களில் நன்கு பதிகிறது. ‘தாழ்ந்த குரலில்’ வாசிப்பது என்பதற்கான எபிரெய வார்த்தை தியானிப்பதுடன் நெருங்கிய தொடர்புடையது. நாம் உண்ணும் உணவு ஜீரணமானால்தான் அதிலிருந்து முழு பயனைப் பெற முடியும். அவ்வாறே நாம் வாசிப்பவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு அவற்றைத் தியானிப்பது அவசியம். நாம் படிப்பவற்றைத் தியானிக்கப் போதிய நேரம் எடுத்துக்கொள்கிறோமா? பைபிளை வாசித்த பிறகு, நாம் வாசித்தவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
15. சுத்தமான பாஷையின் ‘இலக்கணத்தை’ நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
15 இலக்கணத்தை ஆராயுங்கள். ஒரு கட்டத்தில் நாம் கற்றுவரும் இலக்கணத்தை, அதாவது வார்த்தை அமைப்புகள், விதிகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வது பயனுள்ளது. இது அந்த மொழியின் வாக்கிய அமைப்பைப் புரிந்துகொண்டு, அதைச் சரளமாகப் பேசுவதற்கு உதவுகிறது. ஒரு மொழியில் வார்த்தைகளுக்கென்று ஒரு ‘மாதிரி’ இருப்பதுபோல, சத்தியம் எனும் சுத்தமான பாஷையிலும் ‘ஆரோக்கியமான வார்த்தைகளுக்கென ஒரு மாதிரி’ இருக்கிறது. (2 தீ. 1:13, திருத்திய மொழிபெயர்ப்பு) அந்த ‘மாதிரியை’ நாம் பின்பற்ற வேண்டும்.
16. நாம் என்ன செய்துவிடக் கூடாது, இதற்கு எது நமக்கு உதவும்?
16 முன்னேற்றம் செய்துகொண்டே இருங்கள். ஒருவர், வேறொரு மொழியைப் பேசக் கற்றுக்கொண்டதோடு நிறுத்திக்கொள்ளலாம். சுத்தமான பாஷையைக் கற்றுக்கொள்பவரும் அவ்வாறே செய்துவிடலாம். (எபிரெயர் 5:11–14-ஐ வாசியுங்கள்.) இவ்வாறு செய்துவிடாதபடி எது நமக்கு உதவும்? இந்த மொழியில் புலமை பெறுவதற்கு முயற்சி செய்துகொண்டே இருப்பது உதவும். “கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக” என்று பைபிள் சொல்கிறது.—எபி. 6:1, 2.
17. தவறாமல் படிக்கும் பழக்கம் ஏன் முக்கியமானது? விளக்குங்கள்.
17 படிப்பதற்கென்று குறிப்பிட்ட நேரத்தைத் திட்டமிடுங்கள். நிறைய விஷயங்களை எப்போதாவது ஒரு சமயம் படிப்பதைவிட, கொஞ்சமாகப் படித்தாலும் தவறாமல் படிப்பதே சிறந்தது. இடையூறு இல்லாமல் மனம் தெளிவாக இருக்கும் நேரங்களில் படியுங்கள். ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது காட்டைத் திருத்திப் பாதை அமைப்பதைப் போன்றது. அந்தப் பாதையில் நடக்க நடக்கப் பயணம் எளிதாகிறது. ஆனால், சிறிது காலத்திற்குக்கூட அந்தப் பாதையைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் அது மீண்டும் காடாகிவிடும். ஆகவே, இடைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்வது அவசியம். (தானி. 6:16, 20) சத்தியம் எனும் சுத்தமான பாஷையைப் பேசுவதற்கு ஜெபத்துடன், ‘எந்தச் சமயத்திலும் விடாமுயற்சியோடு விழித்திருங்கள்.’—எபே. 6:18, தி.மொ.
18. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நாம் ஏன் சுத்தமான பாஷையைப் பேச வேண்டும்?
18 பேசுங்கள்! பேசுங்கள்! பேசுங்கள்! வேறொரு மொழியைக் கற்றுக்கொள்பவர்கள், கூச்சத்தாலோ தவறாகப் பேசிவிடுவோம் என்ற அச்சத்தாலோ பேசுவதற்குத் தயங்கலாம். இது அவர்களுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகிவிடும். ஒரு மொழியைக் கற்கும் விஷயத்தில், “சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற பழமொழியே உண்மையாகும். ஒரு மொழியில் பேசப் பேசத்தான் அது சகஜமாக வரும். அவ்வாறே, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சுத்தமான பாஷையை நாம் பேச வேண்டும். “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே [“யாவரறிய,” NW] அறிக்கைபண்ணப்படும்.” (ரோ. 10:10) நாம் முழுக்காட்டுதல் பெறும் சமயத்தில் மட்டுமல்ல, ஊழியத்தில் ஈடுபடுவது உட்பட சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் யெகோவாவைப் பற்றிப் பேசும்போது, ‘யாவரறிய அறிக்கைபண்ணுகிறோம்.’ (மத். 28:19, 20; எபி. 13:15) சுத்தமான பாஷையைத் தெளிவாகவும் அழகாகவும் பேசுவதற்குக் கூட்டங்கள் வாய்ப்பளிக்கின்றன.—எபிரெயர் 10:23–25-ஐ வாசியுங்கள்.
ஒன்றுபட்டுச் சுத்தமான பாஷையில் யெகோவாவைப் புகழுங்கள்
19, 20. (அ) நம் நாளில் யெகோவாவின் சாட்சிகளால் வியக்கவைக்கும் என்ன காரியம் செய்யப்படுகிறது? (ஆ) உங்கள் தீர்மானம் என்ன?
19 பொ.ச. 33-ஆம் ஆண்டு சீவான் மாதம் 6-ஆம் தேதி ஞாயிறு காலை எருசலேமில் கூடியிருந்தவர்களுக்கு அது எவ்வளவாய்ச் சிலிர்ப்பூட்டியிருக்கும்! அன்று காலை ஒன்பது மணிக்குச் சற்று முன்பு, மேலறையில் கூடியிருந்தவர்கள் அற்புதமாய் “வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.” (அப். 2:4) இன்று கடவுளுடைய ஊழியர்களுக்கு இதுபோல் அந்நிய பாஷையில் பேசும் வரம் கிடைப்பதில்லை. (1 கொ. 13:8) இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை 430-க்கும் மேற்பட்ட மொழிகளில் அறிவிக்கிறோம்.
20 நாம் எந்த மொழியைப் பேசினாலும், சத்தியமெனும் சுத்தமான பாஷையைப் பேசுவதில் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதற்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! ஒரு விதத்தில், இது பாபேலில் நடந்த சம்பவத்திற்கு எதிர்மாறாக உள்ளது. ஒரே மொழியில் பேசுவதுபோல், யெகோவாவின் மக்கள் அவருடைய பெயருக்குப் புகழ் சேர்க்கிறார்கள். (1 கொ. 1:10) அந்த ஒரே மொழியை இன்னும் சரளமாகப் பேசுவதற்குக் கற்றுவருகிற நாம் உலகெங்கும் உள்ள நம் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து “ஒருமனப்பட்டு” நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் வகையில் தொடர்ந்து சேவை செய்யத் தீர்மானமாய் இருப்போமாக.—சங்கீதம் 150:1–6-ஐ வாசியுங்கள்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• “சுத்தமான பாஷை” என்பது என்ன?
• சுத்தமான பாஷையைப் பேசுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
• சுத்தமான பாஷையைச் சரளமாகப் பேசுவதற்கு எது நமக்கு உதவும்?
[பக்கம் 23-ன் பெட்டி]
சுத்தமான பாஷையைச் சரளமாகப் பேசுவதில் முன்னேற வழிகள்
◆ கவனித்துக் கேட்பது.
◆ சரளமாகப் பேசுபவர்களைப் பின்பற்றுவது.
◆ மனப்பாடம் செய்வது, திரும்பத் திரும்பச் சொல்வது.
◆ சத்தமாக வாசிப்பது.
சங். 1:2, NW
◆ ‘இலக்கணத்தை’ ஆராய்வது.
2 தீ. 1:13, தி.மொ.
◆ முன்னேற்றம் செய்துகொண்டே இருப்பது.
◆ படிப்பதற்கென்று குறிப்பிட்ட நேரத்தைத் திட்டமிடுவது.
தானி. 6:16, 20; எபே. 6:18, தி.மொ.
◆ பேசுவது.
[பக்கம் 24-ன் படங்கள்]
யெகோவாவின் மக்கள் ஒன்றுபட்டு “சுத்தமான பாஷை” பேசுகிறார்கள்