பைபிளின் கருத்து
கருச்சிதைவு—மக்கள்தொகையைப் பெருக்கத்துக்கு விடையா?
தேசிய கொள்கையாக இருந்தாலுஞ்சரி, தனிப்பட்டவர்களின் தெரிவாக இருந்தாலுஞ்சரி, கருச்சிதைவு கடந்த காலத்திலும் தற்காலத்திலும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு வழிமுறையாகக் கையாளப்பட்டுவந்திருக்கிறது.
“சீனாவின் வேதனை 5.3 கோடி கருச்சிதைவுகள்,” என்ற தலைப்பின்கீழ் கானடா தேசத்து செய்தித்தாள் கொடுத்த விவரப்பதிவு சீனா அரசின் பொதுநலத் துறை 1979 முதல் 1984 முடிய அமைந்த காலப்பகுதிக்குரிய குறிப்பிடத்தக்க புள்ளிவிவரமாக அறிக்கை செய்துள்ளதை மேற்கோள் காண்பிக்கிறது. இந்த ஐந்து ஆண்டு கருச்சிதைவுகளின் மத எண்ணிக்கை கானடா தேசத்தின் மக்கள்தொகையைவிட இரண்டுமடங்கு அதிகம்!
ஜப்பான் தேசத்தில் ஆண்டுதோறும் 21 லட்சம் கருத்தரிப்புகள் இருக்க, அதில் 30 சதவிகிதம் கருச்சிதைவு செய்யப்படுகின்றன. பிறவாத இந்தப் பிள்ளைகளில் சிலர் தேசமெங்குமுள்ள புத்த ஆலயங்களில் வைக்கப்படும் ஒரு சிறிய கல், பிளாஸ்டிக் அல்லது களிக்கல் தூளால் செய்யப்பட்ட நினைவுச்சின்னங்கள் மூலம் நினைவுகூரப்படுகின்றன.
உலகத்தின் மறுபக்கத்தில், சுவீடனில், 1946 முதல் “மருத்துவம், சமூக-மருத்துவம், மனிதாபிமானம் மற்றும் மனித மேம்பாடு அல்லது முதிர்கருவுக்கு பாதிப்பு” ஆகிய காரணங்களின் அடிப்படையில் கருச்சிதைவைக் கோரும்போது கருச்சிதைவு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது, மற்ற தேசங்களில் இருப்பதைப் போன்று, அநேக சுவீடன் தேசத்துப் பெண்கள், தங்களுடைய குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு கருச்சிதைவை சமூக அங்கீகாரமுடையதும் பரவலாகக் கையாளப்படுவதுமான ஒரு வழியாகக் காண்கின்றனர்.
பரவலாகக் கையாளப்பட்ட பூர்வீகப் பழக்கம்
பூர்வீக ஏத்தன்ஸ் நகரில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த கருச்சிதைவு மேற்கொள்ளப்பட்டது. சரித்திராசிரியன் வில் டியுரான்ட் நாகரிகத்தின் கதை (The Story of Civilization) என்ற தன்னுடைய ஆய்வு நூலில் கூறியபடி, “குடும்பக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் மூலமாக, கருச்சிதைவு மூலமாக அல்லது குழந்தைப் பிறந்தவுடன் அதைக் கொன்றுவிடுவதன் மூலமாகக் குடும்பத்தின் அளவைத் தாங்களே கட்டுப்படுத்திக்கொள்ளுவதுதான் அந்த நாளின் பழக்கமாக இருந்தது.”
கருச்சிதைவு ரோம சாம்ராஜ்யத்திலும் பரவலாக இருந்துவந்த ஒரு பழக்கம். என்ன காரணங்களுக்காக டியுரான்ட் தொடர்ந்து கூறுகிறார்: “பெண்கள் தாய்மைக்குரிய அழகு மிகுந்தவர்களாயிருப்பதற்குப் பதிலாகப் பாலுறவுக் கவர்ச்சியுடையவர்களாயிருக்க விரும்புகிறார்கள்; பொதுவாக தனிப்பட்டவர்களுடைய சுதந்திரம் தேவைகளின் பந்தயத்தில் எதிர்த்து ஓடுவதாக இருந்தது . . . கருச்சிதைவு, குழந்தைக் கொலை, உடலுறவின்போது கருவுறாவண்ணம் ஆண் விலக்கம், மற்றும் குடும்பக்கட்டுப்பாட்டுச் சாதனங்கள் மூலம் விவாகமானவர்களில் பெரும்பான்மையினர் தங்களுடைய குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்தினதாகத் தெரிகிறது.” நம்முடைய நாட்களிலும் கருச்சிதைவு இதுபோன்ற காரணங்களுக்கல்லவா செய்துகொள்ளப்படுகிறது?
ஆரம்பகால கிறிஸ்தவ நோக்குநிலை
இதற்கு எதிர்மாறாக, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கருச்சிதைவுக்கு எதிராக உறுதியான நிலைநிற்கை எடுத்தார்கள். டியுரான்ட் மேலுமாகக் கூறுகிறார்: “கருச்சிதைவும் பிறந்த குழந்தையைக் கொல்லுதலும் புறமத சமுதாயத்தைப் பேரளவில் கொன்றழித்துக்கொண்டிருக்க, கிறிஸ்தவர்களுக்கோ இவை கொலைக்குச் சமானமாய்த் தடைசெய்யப்பட்டதாயிருந்தது.” குடும்பத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளுதல் கிரேக்கரின் மற்றும் ரோமரின் சகாப்தங்களில் முக்கிய சமுதாய முறைமையாக இருக்க, கிறிஸ்தவ சமுதாயம் உயிரின் பரிசுத்தத்தன்மையை மதிப்பதன் அவசியத்தை வளர்த்த ஒரு கட்டுப்பாடுடைய ஒழுக்க விதிமுறையில் உறுதியாக நின்றார்கள். பூர்வீக இஸ்ரவேலர் மத்தியில் இருந்தது போல, பிள்ளைகள் சிருஷ்டிகரின் ஆசீர்வாதத்தைக் குறிப்பதாயிருந்தது. சங்கீதக்காரன் கூறுகிறான்: “இதோ, பிள்ளைகள் யோகோவாவால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.”—சங்கீதம் 127:3.
பிறவாத குழந்தை உயிர்வாழ்வதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறது என்பதை “ஜீவ ஊற்றாகிய” யெகோவா மதித்துணருகிறார் என்பது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எப்படி? முதல் காரியம், பிறவாத சிசுவை வெறும் ஒரு திசுக்களின் உண்டையைவிட அதிகமாக மதிக்கிறார். தம்முடைய அதிசய படைப்பு ஏற்பாடுகளின் பேரில் கடவுளுக்கு இருக்கும் அக்கறையைச் சங்கீதக்காரன் இப்படியாக விவரிக்கிறான்: “என் தாயின் கர்ப்பத்தில் என்னை காப்பாற்றினீர் . . . என் கருவை உம்முடைய (யெகோவாவுடைய) கண்கள் கண்டது; என் அவயங்கள் எல்லாம் . . . உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”—சங்கீதம் 36:9; 139:13-16
மேலும், பிறவாத குழந்தையை உட்படுத்தும் இயல்பான வளர்ச்சிக் காரியங்களில் எதிர்பாராது குறுக்கிடும் ஒருவர் கடவுளுக்குக் கணக்குகொடுக்கவேண்டியதாயிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் மீது மோசேயின் நியாயப்பிரமாணம் கடுமையான உத்திரவாதத்தை வைத்தது என்பதைக் கவனியுங்கள். அது சொல்லுகிறது: “மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததனால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால், அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன் மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்க வேண்டும். வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்.”—யாத்திராகமம் 21:22, 23.
பிறவாத குழந்தையின் வாழ்க்கையில் எதிர்பாராத தலையிடுதலை யெகோவா அவ்வளவு வினைமையானதாகக் கருதுகின்றார் என்றால், கருச்சிதைவு போன்ற காரியத்திலிருப்பது போல் வேண்டுமென்றே இருக்கும் தலையிடுதலுக்கு எந்தளவுக்குக் கணக்குகொடுக்க வேண்டியதாயிருக்கும்! மேலும், யாத்திராகமம் 21-ம் அதிகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தம்முடைய சட்டத்தில் பிறவாத குழந்தையின் வயது சம்பந்தமாகக் கடவுள் எந்த வரம்பையும் கொடுக்கவில்லையாதலால், வயதைச் சார்ந்த விவாதங்களுக்கு இடமில்லை.
மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு விடை
என்றபோதிலும், உணவுபற்றாக்குறை, வீட்டுவசதியின்மை, சுத்தமான தண்ணீர் குறைபாடு ஆகிய பிரச்சினைகள் அதிகரிக்க, மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வழியாகத் தெரிந்துகொள்ளப்படும் கருச்சிதைவு எதிர்கால தலைமுறைகளில் அழுத்தத்தைக் குறைத்திடும் என்று சிலர் கருச்சிதைவுக்குக் கரணம் காட்டக்கூடும். என்றாலும், உலக மக்கள்தொகையை பூமியின் சுற்றுபுறச்சூழலுடன் சமநிலைப்படுத்துவதற்கு இது ஒன்றுதான் வழியா?
ஏறக்குறைய 6,000 ஆண்டுகளுக்கு முன்பு, பூகோளத்தின் மக்கள்தொகையின் பேரில் கடவுள் தம்முடைய நோக்கத்தை வெளிப்படுத்தினார். முதல் மானிட தம்பதியிடம் யெகோவா பின்வருமாறு கூறினார்: “பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி . . . ஆண்டுகொள்ளுங்கள்.” (ஆதியாகமம் 1:28) வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கடவுளுடைய நோக்கம் பூமியை நிரப்புவதுதான், அதை மக்களால் மட்டுக்கு மீறி பெருக்குவது அல்ல. மக்கள்தொகையில் உலகம் சமநிலையைக் காணும்படி சிருஷ்டிகர் பார்த்துக்கொள்வார்—நியாயமான மக்கள் அளவையும், இயற்கைச் சூழலில் சமநிலையையும், தேவையான உணவு உற்பத்தியையும் காத்துக்கொள்வார்.—ஏசாயா 65:17-25.
மனிதனுடைய பிறப்புக்குரிய ஆற்றலின் சிருஷ்டிகர் தாமே இந்தப் பூரண சமநிலையை எட்டுவதற்கு அதன் உபயோகத்தை நியாயமானவிதத்தில் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவார் என்ற நியாயமான முடிவுக்கு வரலாம். மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருச்சிதைவு அவசியமாயிராது. யெகோவா தேவன் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் ராஜ்யத்தின் மூலம் இந்தப் பூமி ஒரு பூகோளப் பரதீஸில் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தால் வசதியான அளவுக்கு நிரம்பியிருப்பதை நிச்சயப்படுத்திடுவார்.—ஏசாயா 55:8-11; வெளிப்படுத்துதல் 21:1-5. (g88 4/88)
[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]
“கருச்சிதைவும் பிறந்த குழந்தையைக் கொல்லுதலும் . . . கிறிஸ்தவர்களுக்குக் கொலைக்குச் சமானமாய்த் தடை செய்யப்பட்டிருந்தது.”—வில் டியுரான்ட், சரித்திராசிரியர்
[பக்கம் 26-ன் படம்]
“வளரும் ஒரு கரு ஆறு மாதத்தை எட்டுவதற்குள்ளாக அது பார்க்கவும், கேட்கவும், காரியங்களை அனுபவிக்கவும் சுவைக்கவும், கற்றுக்கொள்ளவும் கூடும்.”—டாக்டர் T. வெர்னி, “பிறவாத குழந்தையின் இரகசிய வாழ்க்கை” என்ற நூலின் ஆசிரியர்.